• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 31 டிசம்பர், 2012

  தையவள் வந்தாள்

  ஆயிரம் ஆயிரம் ஆசைகள் மனதில் 
   ஆனந்தக்கூத்தாட 
  ஆடிக்கழித்திட்ட ஆசைகொண்டே 
   ஆசையுடன் தையவளை வரவேற்க
  ஆயிரமாயிரம் ஆருயிர் நோய்களை 
   அடியோடழிக்க
  அள்ளிக் கொண்டே உயிர் கொண்டோடும்
   அகிலத்தை எச்சரிக்க
  இயற்கையின் சீற்றத்தின் இன்னல்கள் நீங்கி – உலகு
   இன்புற்றுப் பிரபாலிக்க
  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
   உள்ளங்கள் ஒழிந்து போக 
  உறவொன்று உண்டென்றும் பகையில்லை உலகிலென்றும்
   உண்மையை உலகுணர
  காலத்தை வென்று மனிதன் காவியம் படைக்கும்
   காலம் விரைந்து வந்தடைய
  இருசுடர் ஒளியெலாம் மனிதன்
   இதமாய்க் கட்டுக்குள் அடக்க
  தையவளென நாமமிட்டன்பாய் அழைத்து
   தையவளைய்க் கேட்கிறேன்
  தையவளே!
  வழிசொல்வாயா? எமக்கு வழிசொல்வாயா?


  புதன், 19 டிசம்பர், 2012

  தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேசத் தயங்குவது ஏன்?  தன்னை மறந்தோன் தன் தாயை மறந்தோனாவான். தன் தாயை மறந்தோன் தன் தாய்மொழியை மறந்தோனாவான். தாய் ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ அதேபோலவே தாய்மொழி;யும் அவசியமாகின்றது. மேடைப்பேச்சுக்கும் பலர் பார்வைக்கும் மட்டுமே தாய்மொழியை நேசிப்பதாய்க் காட்டிவிட்டு வீட்டிலும் வாழ்விலும் வேற்றுமொழியில் நாட்டம் கொண்டிருப்பார்க்குத் தம் தாய்மொழியின் அழகும் தனித்தன்மையும்  இரத்தத்தில் ஊறிய இலகுத்தன்மையும் புரியாது.
              தாயின் கருவறையில் சுருண்டு கிடந்த போதே ஒரு குழந்தை தாய்மொழியைக் கற்கத் தொடங்குகின்றது. தாயின் கருவறையில் 11ம் நாளே மூளையைப் பிரித்தெடுக்கக் கூடியதாக இருக்கின்றது. குழந்தை பிறந்த போது உடலில் 11 வீதம் மூளை இருக்கும். வளர்ந்த பின் மனிதனின் உடலில் 2.5 வீதமே மூளை இருக்கும். எனவே கிரகித்தல் என்பது குழந்தையின் வளர்ச்சிப்படியில் முதல்நிலை பெறுகின்றது. கருவறையினுள்ளேயே தனது குழந்தை கேட்டற்புலனைப் பெற்றிருக்கின்றது என்பதை அறிந்த தாய் அக்கால கட்டத்திலேயே அப்புலனை அதிகரிக்கச் செய்ய முயல்தல் வேண்டும். குழந்தை பிறந்தவுடன் அமுதென்று பெயர் கொண்ட தமிழின் முதல் வார்த்தையை அம்மா என்று உச்சரிக்கும் குழந்தைக்கு மம்மி என்று உயிரற்ற உடலுக்குக் கொடுக்கும் பிரத்தியேகமான வார்த்தையை மூளையில் பதிக்கின்றாள். அப்போதிருந்தே தாய்மொழியின் அவசியம் குழந்தைக்கு அற்றுப் போகின்றது.
               
  தாய்மொழியில் அறிவுபெற்று அதில் சிந்திக்கும் குழந்தை தன் கல்வி மொழியிலும் சிறப்படையும் என்பது உளவியலாளர் கருத்தாகும். வாழ்க்கைக்குக் கல்வி மொழி அவசியமாய் இருந்தாலும் உணர்பூர்வமான சிந்தனைப் போக்கிற்கு தாய்மொழி அவசியமாகின்றது. 'தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை என்று வேலூர் மாவட்டம் பேராசிரியர் முத்துசிவன் அவர்கள் கூறியிருக்கின்றார். உலகத்து மொழியெல்லாம் கற்க ஆர்வமுள்ள ஒருவன் தன் தாய்மொழியைக் கற்க ஆர்வப்படவில்லையென்றால் தன் இனத்தைத் தன் கலாசாரத்தை தன் பண்பாட்டை எப்படிக் கட்டிக்காக்க முடியும். தமிழ் இனம் ஒன்று இருந்தது என்று சொல்ல வேண்டிய நிலையே எதிர்காலத்தில் தோன்றும். கல்வி மொழிகளில் எமது மொழிகளிலுள்ள சிறந்த பல இலக்கியங்கள் சிறுகதைகளை கவிதைகளை மொழிபெயர்க்கும்போது எமது மொழியின் சிறப்புக்களை நாம் வாழும் மண்ணின் மக்கள் புரிந்துகொள்ள முடியும். இதைவிட நாம் வாழும் கல்விமொழியின் படைப்புக்களை எமது தாய்மொழியில் மொழிபெயர்க்க முடியுமல்லவா! அத்தோடு எத்தனையோ ஆராய்ச்சிப் புதையல்கள் வெளிக் கொண்டுவரப்படும். இவற்றிற்கெல்லாம் தாய்மொழிப்பற்று மனதில் ஏற்படவேண்டும்.
    
  உலகிலுள்ள மொத்தமொழிகளின் எண்ணிக்கை 6809. இவற்றிலே 700 க்கு உட்பட்ட மொழிகளில் மட்டுமே எழுதவும் பேசவும் முடியும். 100 மொழிகள் மட்டுமே சொந்த வரிவடிவத்தில் எழுதப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் மூலமொழியாகத் திகழ்பவை 6 மொழிகளே. அவை எபிரேய மொழி கிரேக்கமொழி சமஸ்கிருதமொழி இலத்தீன்மொழி தமிழ்மொழி சீனமொழி. இவற்றிலே சீனமொழி தமிழ்மொழி தவிர்ந்தவை பேச்சுவழக்கில் இல்லாதவை. எனவே வரிவடிவிலும் பேச்சுவழக்கிலும் ஆட்சிசெய்து மூலமொழியாகத் திகழும் தமிழ் பேசுவதற்கு யாரும் வெட்கம் கொள்ளத் தேவையில்லை. தமது வாரிசுகளுக்குத் தமிழறிவையூட்ட வெட்கப்படத் தேவையில்லை. குறுமுனி தந்த தமிழ்ளூ குழந்தையாய் தவழ்ந்து கன்னியாய் என்றும் ஆட்சி செய்யும் தமிழ்ளூ தான் பிறந்த நாட்டிலே இன்று அல்லாடுகின்றது. தமிழ்ச் சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழ்நாட்டிலே உருவாகும் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்வுகளும் ஆங்கிலத்தைத் தத்தெடுத்து நன்றாக வளர்க்கின்றன. ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டுச் சென்றாலும் அவர்கள் மொழி எம்முடையோர் நாவிட்டு நகர மறுக்கின்றது. 

                        நான் கண்ட நிகழ்வொன்று தமிழர்கள் மாத்திரமே கூடியிருக்கும் சபையிலே ஆங்கிலத்தில் ஒருவர் உரையாற்றுகின்றார். வீதியில் நடக்கும் போது ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றார். கேலிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருப்பதென்னவென்றால் அங்குள்ளவர்கள் அனைவரும் தமிழ் தெரிந்தவர்கள். ஓரிருவர் அரைகுறை ஆங்கிலம் புரிந்தவர்கள். இவ்விடத்தில் ஆங்கிலம் ஏன்? என்பது புரியாத விடயமாக இருக்கின்றது. மொழி என்பது கருத்துப் பரிமாற்று ஊடகம். தாம் நினைப்பதை பிறருக்கு உணர்த்துவதற்காகப் பயன்படுத்துகின்ற ஒரு சொற்கோவை. இலக்கண இலக்கிய விதிகளுக்கமைய ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மொழி ஊடகமே தமிழ். இம்மொழி தெரிந்தவர்களிடம் இம்மொழியில் பேசுவதுதானே உண்மைத்தன்மை. ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்த தமக்கென ஒரு மொழியை உருவாக்குகின்றார்கள். ஐரோப்பியர்கள் தமது மொழியை நேசிப்பதாக பேசிக்கொண்டு திரிவதில்லை. ஆனால் தம்முடைய மொழி தவிர்ந்த எந்த மொழியையும் பேசுவதில்லை. பல மொழிகளைத் தேடித்தேடிக் கற்றிருந்தாலும் தேவைக்கேற்பவே அவற்றைப் பயன்படுத்தும் பண்புள்ளவர்கள். மேடைநிகழ்வுகளில் தமது மொழி தவிர்ந்த பிறமொழி பயன்படுத்துவதில்லை. பிறமொழி தெரிந்தவர்கள் மட்டுமே சபையில் கூடியிருக்கும் படசத்தில் பிறமொழியை பயன்படுத்துவார்கள். இது மொழிப்பற்று என்று நாம் சொல்லிக்கொள்ளும் விடயம் இல்லை. தேவையில்லை என்பதே அதற்கான காரணம். தேவை கருதியே பேசப்படுகின்றது. அதைப்புரிந்து கொண்டு இனியதமிழ் பேச நாக்கூசத் தேவையில்லை. அந்நியமொழியில் ஆசை கொள்ளலாம். அதற்காக அதற்கு அடிமையாக வேண்டியதில்லை. அனைத்துமொழிகளும் அறிந்திருத்தல் சிறப்பு. அதைத் தக்கசமயத்தில் பயன்படுத்துவது பெருமை. தகுதியற்ற இடங்களில் பயன்படுத்துவது சிறுமை.

               மேலைத்தேய நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி எமக்கு உழைப்புக்கல்வியல்ல என்பது உண்மையே. ஆனால், விஞ்ஞானமோ பொறியியலோ கற்று கல்லுடனும் மண்ணுடனும் சதையுடனும் உறவு வைத்திருக்கும் ஒருவரைவிட மொழிக்கல்வியும் இலக்கியக்கல்வியும் கற்ற ஒருவரால் வாழ்க்கையின் உன்னத மனிதப்பண்புகள்> மனித உணர்வுகள்> ஒழுக்கநெறிகளை சிறப்பாக அறிந்து கொள்ள முடியும்.

                
  அதைவிட எம் தேசம்விட்டுப் பரந்து வாழும் எம்மவர்கள் மத்தியில் உள்ள ஒரு கருத்து தமிழைக் கற்றுத் தமிழைப் பேசி இங்கு என்ன செய்ய முடியும்ளூ என்ன சாதிக்க முடியும் என்பதே. இங்குள்ளவர்கள் அனைவரும் தாம் வாழும் தேசத்து மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்களும்; இல்லை பேசித் தெளிந்தவர்களும் இல்லை.  ஆனால், எமது தாய்மொழியை அனைவரும் புரிந்தவர்களே. அத்துடன் தாய்நாட்டுத் தொடர்பை என்றும் கொண்டிருக்க வேண்டும். தமக்குப் பின் தமது வாரிசுகள் தமது உறவுகளை தாய்நாட்டிற்குக்  காவிச்செல்ல வேண்டும். எமக்கென சீர் பெற்ற சிறப்புப் பெற்றளூ காலங்கடந்த உன்னத இலக்கியச் செல்வங்கள் கொண்ட ஒரு மொழி இருக்கின்றது என்றும்  நினைப்பவர்கள் வீட்டிலும் வீட்டிற்கு வெளியிலும் தமது வாரிசுடன் தமது மொழியில் பேசுவது சாலச்சிறந்தது என்பது உண்மையே. இதன் மூலம் அழியாச் செல்வமாய் என்றும் எங்கும் தமிழ்மொழி அரசோச்சும் என்பது திண்ணம்.
   
   'பார் பிறந்த தேதியினை பகலறியும் - நீர்சுமக்கும்
   கார் பிறந்த தேதியினை கடலறியும் - நிலத்தடியில்
   வேர் பிறந்த தேதியினை விதையறியும் - நற்றமிழின்
   சீர் பிறந்த தேதியினை செகத்தினிலே யாரறிவார்||
                        

  வியாழன், 6 டிசம்பர், 2012

  கணனி அருகேயோர் அம்மா

  Image Host

         கள்ளி என் கடைக்குட்டி – ஏன்
         கன்னத்தில் நீர் வடித்தாய்
         பொல்லாப்பு யானொன்றும் புரியவில்லை
         பெண்ணாய் மகவிரண்டைப் பெற்றுவிட்டேன்
      

         செல்லப்பிள்ளை உன் செவ்விதழ்கள்
         சில்லறை கொட்டவில்லை – உன்
         சிந்தையில் உள்ளதைத் தாயறிதல்
         விந்தையொன்றும் இல்லை.

         பத்தரை மாற்றுத் தங்கமே
         பண்பில் நிறைகுடம் நீயன்றோ
         பத்துமாதம் உன் அக்காளும் உன்போல்
         பத்திரமாயென் வயிற்றில் குடியிருந்தாள்.
     


  மூவாறு வயதாகியும் தாயின் முகம்பார்த்தே தூங்கும் மகளைக் கட்டிலில் விட்டு வந்து கதிரையில் சட்டென்று சாய்ந்தாள், சாந்தி. கண்ணீர் கண்களின் ஓரமாய் வடிந்து இதழ்களில் உப்புக் கரித்தது. சின்னவயதில் அக்காள், தங்கை இருவரினதும் சில்லறைச் சண்டைகளைச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் பார்த்த இரசித்துள்ளாள். அக்காவைவிட ஒருபடி உயர வேண்டும் எனத் தங்கை எடுக்கும் முயற்சிகளைத் தட்டிக் கொடுத்துத் தாயாய் ஒத்துழைப்பும் தந்துள்ளாள். அக்கா பாட வாயெடுக்க அதை அற்புதமாய்ப் பாடி முடித்து அப்பா அம்மா பாராட்டைப் பெற்றுவிடுவாள், தங்கையும். போட்டி வளர்ச்சிக்கு உறுதுணையென்று தூபம் போட்டு வளர்த்தவள் அல்லவா, தாய். ஆனால், பத்துப் பிள்ளைப் பெற்றாலும் தாயன்பு பத்துப் பேருக்கும் மாற்றமில்லாது பகிர்ந்தளிக்கும் பரிசுத்த நீரல்லவா. பெற்றோர்களாகிய தாம், வயோதிப காலத்தின்பின் சகோதரிகள் இருவரும் தமக்குள் தாமே துணையாய் வாழ்வை இங்கிதமாய்க் கழிப்பார்களென்ற நம்பிக்கையில் வாழ்க்கையைச் செலுத்தும் பெற்றோர். சஞசலத்தில் இன்று தவித்தனர். குமணன் இளங்குமணன் வாழ்க்கைபோல் தமது குஞ்சுகள் இரண்டும் தம்மைத்தாமே கொத்தித் தின்றுவிடுமோ என்று பேதலித்தனர்.
                     

                      இருவருக்கும் கொள்வனவு செய்யும் பொருட்களில் சிறிது வேறுபாட்டைக் கண்டால், அல்லது அக்காவிற்கு ஏதோ ஒரு பொருள் பொருத்தமென்று கண்டு அதை வாங்கி வந்தால், போதும்,  ``உங்கள் செல்ல மகளுக்குத்தான் எல்லாம் வாங்குவீர்கள்´´என்று குறையைப் போட்டுவிடுவாள், இளையவள். ஆனால், மூத்தவளோ இதைப் பொருட்படுத்துவதாய் இல்லை. ஏட்டிக்குப் போட்டியாய் வார்த்தையை எடுத்தெறிந்து கொள்ளும்போக்குச் சிறிதும் இல்லை. ஆனால், கடைக்குட்டி என்று கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்த சின்னவள், பண்பிலே நிறைகுடம், பாசத்திற்கு உறைவிடம் அக்காவைப் பிரிந்திருக்கும் வேளைகளில் பிதற்றித் திரிவாள். ``எங்கே, எங்கே´´ என்று அலைந்து திரிவாள். ஆனால், பெற்றோர் பாசம் பகிர்ந்து கொள்ளும்போது மனதுள் வெம்புகிறாள். வார்த்தைகளால் தாயை வம்புக்கு இழுக்கிறாள். அன்றும் அவ்வாறே உயர்கல்விக்கு உயர்ந்ததான பெறுமதியில் உயர்வான பொருளொன்று கட்டாய தேவை கருதி மூத்தவளுக்காய் வாங்கப்பட்டது. அக்காட்சி பொறுக்காது கண்ணீர் வடித்தாள், கட்டிலில் படுத்திருந்த தங்கையென்ற உடன்பிறப்பு. அறிவுரை ஆயிரம் முறை ஆறுதலாய்க் கூறியும் அதை மனதில் நிறுத்த முடியாத மகளை எண்ணிக் கலங்குகிறாள், தாய். 
                       
  இங்கு காட்சி காட்டப்பட்டுள்ளது. முடிவறியாத் திரைப்படமாய் வாசகர்கள் சிந்தனை சிறகடிக்கப்பட்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும், அநுபவங்களும் பகிரப்படும்போது கணனி காட்டும் கருத்துகளில் தனக்குரிய சாதகங்களைச் சேகரிப்பாள், சாந்தி.

  ஞாயிறு, 2 டிசம்பர், 2012

  01.12.2012 அன்று செல்வன் தி.நிரோஜன் அரங்கேற்ற வாழ்த்துப்பா


   எனது குரலில் கேட்ட அம்புக்குறியை அழுத்துங்கள்


  திருநாவுக்கரசு மைந்தன் புகழாரம் பாட நாதுணிந்தபோது
  நாலாயிரம் வார்த்தைகள் நாவிலே  வந்து நின்று நடனம் புரிகின்றன
  சுந்தரத் தமிழாலே சொல்லாரம் சூட்ட நான் சொல்லெடுக்கும்போது
  சுவையான அவர் குரலினிமை பாடென சொல்லாட்சி ஆணையிடுகிறது.

  கலைமகளும் மகிழ்ந்தணையும் கலைமைந்தன் கவின் மைந்தன்
  நடம்புரியும் நடராஜன் நலம்சேர்ந்த அபிநய நர்த்தகன்
  தடம்பதிக்கும் சொல்லாலே குரலெடுக்கும் இசைவித்தகன்
  தனம்சேர குலம்சேர குணம்சேர உன்னத உறவிணைப்பாளன்

  இராகதாள பாவ முத்திரைகள் - இவர்
  உடலோடு உயிரோடு உணர்வோடு உறைந்தாள
  அதரங்கள் நகையாள அழகு அபிநயங்கள் முகங்காட்ட
  சிலம்பொலியும் சேர்ந்தாட சிருங்காரம் சில காட்ட
  அடவுகளின் துணையோடு அவதாரம் தசம்காட்ட
  அங்கங்களின் அசைவுகளில் அரங்கேற்றம் களைகட்ட
  அற்புதமாய் பரத அரங்கிங்கு வெற்றி நடைபோட்டது

  நற்றாய் பெற்ற நறுந்தவதா லுதித்த நன்மகவென
  உற்றாரும் மற்றாரும் நல்லறிவுற்றாரும் உரைத்திடவே
  ஞாலத்தின் மேன்மைக்காய் ஞானமாம் பரதத்தை
  வானுயரப் புகழ்பரப்பி வாழ்வாங்கு வாழவேண்டும்
  இன்னிசையும் பரதமும் திக்கெட்டும் நின்புகழ்பரவ
  இறையருளும் நின்உழைப்பும் இணைந்தேகூடவேண்டும்
  நடராஜன் அருளாலே நவரசன் நர்த்தகன் நிரோஜன்
  நன்மகனாய் நற்கலைஞனாய் நற்கல்விமானாய்
  உலகெங்கும் உலாவர மாதார வாழ்த்துகிறேன்  வெள்ளி, 23 நவம்பர், 2012

  திருமணம்  களவினில் குற்றம் கலந்தது
  கடிமணம் உலகினில் விதந்தது
  உறவினில் கலங்கங்கள் புகுந்தது
  உதவிட பிரிவுகள் எழுந்தது
  இருமனம் இணைவதே திருமணம் - இதை
  உணர்த்திட மார்பினில் மாங்கல்யம்
  உணர்த்திடும் அவசியம் புரிந்ததால்
  திருமணம் உலகினிலின் றவசியம்.

  மனிதர்கள் மாண்புகள் உணர்ந்துவிட்டால்
  மதமது சடங்கது தேவையில்லை
  கலாசார பண்பாடு களத்திலில்லை
  எழுதாத சட்டமது திருமணமும்
  எழுதப்பட்ட சட்டமாய் தேவையில்லை.

  குணமது தெரியணும் நெறியது புரியணும்
  வளமது பெருகிட வாழ்வது சிறக்கணும்
  பணமது நீக்கியே மனமது பார்க்கணும்
  விதவைகள் திருமணம் விரும்பியே ஏற்கணும்
  தெளிவிலா மனதுடன் திருமணம் வெறுக்கணும்
  நாளைய உலகினை நாடிய வாழ்வினை
  நாளுமே எண்ணியே வாழ்வினை நடத்தணும்
  அன்புடன் துணையினை ஆதரவாய் நடத்தணும்
  பிறரது வாழ்வது சிறந்திட திருமணவாழ்வும் சிறக்கணும்

  வெள்ளி, 16 நவம்பர், 2012

  கனிந்துவந்த கார்த்திகை

  ஒலிவடிவம் கேட்க முக்கோணவடிவத்தை அழுத்துங்கள்

               கனிந்துவந்த கார்த்திகை

  கனிந்துவந்த கார்த்திகையே! உன்னை
  கவிதைப் பெண்ணாள்
  கரங்குவித்து அழைக்கின்றாள்
  கன்னிகைக்கு உன்பெயரோ
  விண்மீனுக்கும் உன் பெயரோ
  வினோதப் பூவுக்கும் உன் பெயரோ
  விளக்கீட்டு மாதத்திற்கும் உன்பெயரோ
  விநாயகன் தம்பி சரவணனை
  விருப்புடன் வளர்த்தவர்கள் உன் பெயர்
  விளங்கி நிற்கும் பெண்களன்றோ

  விரைந்து வந்த கார்த்திகையே!
  விருட்சங்கள் காட்டிடும் வர்ணஜாலங்கள்
  எமக்கு உணர்த்திடும் பனிக்கால வாழ்வதனை
  விருப்புடன் அணிவோம் வெப்பஆடை
  விரைந்து ஏற்றுவோம் வெப்பமூட்டி - உன்
  வருகையின் அச்சமாய் வழிவிடுவோம்

  மரத்துக்கும் உனக்குமென்ன மனஸ்தாபமோ நங்காய் - உன்
  வரவுகண்டு தம் ஆடைகளைக் கழைந்துவிட்டுப்
  போர்வையற்றுக் குளிர் காய்கிறதே
  மார்கழிப் பெண்ணை எட்டிப்பிடிக்க
  மாதங்களுக்குத் தூதாய் வந்தவள் நீயோ
  தன்னைப் போர்க்க விலங்கின் போர்வையை
  உரித்துப் போர்த்தி உடலை மூடி மனிதன்
  உல்லாசமாய் வலம்வர வித்திடும் மாதம் நீயன்றோ
  உன்னில் தொட்டுப் பங்குனி வரையும் - குளிர்
  உத்தரதாண்டம் ஆடிநிற்க
  கனிந்து நீயும் வந்தாயோ
  கவிதைப் பெண்ணாள் வரவேற்க


  திங்கள், 12 நவம்பர், 2012

  அறுபடும் வேர்களும் அந்நியமாகும் உறவுகளும்  அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
  எனது குரலில் கேட்க அம்புக்குறியை அழுத்துங்கள்


  வெள்ளாமை விதைக்கையிலே
  வாய்க்கால் வரப்போரம் 
  வார்த்தைகளைப் பரிமாறி நாம் 
  வாழ்ந்திருந்த காலமெல்லாம்
  மலையேறிப் போச்சோ மச்சான்

  மட்டக்களப்பு வாவியிலே 
  வடிவான இறால் பிடிச்சு
  மீன்பாடும் பாட்டினிலே 
  மெய்மறந்து நாமிருந்து
  கடலோரம் கருவாடு 
  காயவைக்கும் பொண்டுகள
  கண்டு நாம் பதுங்கியதும் 
  போடியாரு புள்ள என்று
  பொண்டுகள் சேர்ந்திருந்து 
  புறுபுறுத்துப் பார்த்ததுவும் 
  குறுக்கால போன கடற்படையைக் 
  கண்டு நாம் பதறியதும் 
  கலங்கிவந்து மறுகா நாம் 
  படகுக்குள்ள பதுங்கியதும் 
  மறந்திடுச்சோ மச்சான்

  திராய்க் கீரை சாமத்தில் புடிங்கிவந்து
  சுண்டலிலே மீன் போட்டுச் சுண்டியதும்
  புடிச்சுவந்த இறால் போட்டுப் 
  புளிஆணம் பண்ணியதும்
  விறாந்தையிலே நாமிருந்து 
  உண்டசுகம் அத்தனையும்
  உதவாமப் போனதுவோ மச்சான்

  ஒண்ணா, ஒண்ணா என்று நீ ஓடியதும்
  பொன்னான உன் ஊரு விட்டு போக பதறியதும் 
  கொள்ளிக்கட்டை அடி வாங்கி குதித்து நீ
  மதிலுக்குப் பிறகால கிறுகிப் பாய்ந்ததுவும்
  பின்னால வந்த அப்பூச்சி பிடித்துன்ன அனுப்பியதும்
  புரியாமப் போச்சோ மச்சான்

  தாய்நாட்டுச் சொந்தமெல்லாம் 
  தகுதி இழந்ததுவோ
  சேர்ந்துநின்ற எங்களுக்கு 
  செவ்வாய் பகைச்சிடுச்சோ 
  நாவூறு கண்ணூறு 
  நல்லாப் பட்டிடுச்சோ
  வெளிநாட்டுச் சோறெல்லாம் 
  மருந்துபோட்டுச் சமைச்சதுவோ
  உறவுகளைப் பிரிச்செடுக்க 
  உதவியா இருந்திடுச்சோ
  ஒரு மரமாய் வாழ்ந்திருந்தோம் 
  உறவுகளை வளர்த்திருந்தோம்
  ஆணிவேர் அறுந்ததுவோ 
  அந்நியமாய்ப்போனதுவோ
  வருகின்ற தீபாவளி 
  வருவாய் நீயென்று 
  வழிவழியாப் பாத்திருக்கன் 
  வருகின்ற சேதியொன்று
  வசந்தமாய் வாராதோ! 
  வந்தென்னைப் பாராயோ! 


  மறுகா - பிறகு
  குறுக்கால - இடையில்
  போடியார் – வயல் சொந்தக்காரர்
  விறாந்தை – திண்ணை
  வெள்ளாமை – வயல்
  சாமம்      - நடுஇரவு
  கண்ணூறு, நாவூறு,
  கொள்ளிக்கட்டை - விறகு
  ஆணம்         - ஒருவகை பால்க்கறி
  கிறுகி         -  திரும்பி
  ஒண்ணா        - முடியாது
  பொண்டுகள்   - பெண்கள்

  புதன், 7 நவம்பர், 2012

  திருமணம்                   

  உலகத்தோற்றங்களில் உன்னதமான தோற்றம் மனிதத் தோற்றம். இதன் மூலமே குடும்பம், குழந்தைகள், நாடு, அபிவிருத்தி, கண்டுபிடிப்புக்கள், உலகமாற்றங்கள் போன்ற அனைத்துப் பரிமாணங்களும் உருவாகின்றன. ஆணும் பெண்ணும் மனதாலும் உடலாலும் ஒன்றுபட்ட வாழ்க்கையை வாழ்வதன் மூலம் சிறப்பான குடும்பம் உருவாகின்றது. இக்குடும்பம் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட சமுதாயத்தின் மூலம் உருவாக வேண்டியதன் அவசியம் கருதியே திருமணநடைமுறை உலகில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

                   ஆதிகால மனிதனின் உறவுமுறையின் ஆரம்பமே இத்திருமணம்தான்.  மனிதர் கூட்டத்திலிருந்து மனிதக் குடும்பம் உருவாகவும் உடலுறவில் ஒழுங்குநிலை தோன்றவும் திருமணநடைமுறை தேவைப்பட்டது.  முதலில் ஆளும் வர்க்கத்தின் தலைமுறைச் சொத்தை அநுபவிக்க அரசர் திருமணத்தை உருவாக்கினர். 

                    மனிதஇனம் விலங்கினமாய் வாழ்ந்த காலத்தில் உறவு முறையற்ற  உடலுறவு மேற்கொண்டனர். சமூகம் என்னும் ஒரு அமைப்பு உருக்கொள்ளாத காலத்தில் யாரோடும் சேரலாம் என்றிருந்தது. சமூகமெனும் அமைப்பு உருப்பெற்ற காலத்தில் ஒரு சிலர் ஒரு சிலரோடு சேர்ந்து வாழும் போக்கு உருவாகிப் பின் விரும்பியவர் விரும்பியவரோடு சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை வாழ்க்கை ஓர் சமூகஅமைப்பாக உருவாகும் வரை திருமணம் என்ற நடைமுறை வழக்கில் இருந்ததில்லை.  விலங்குகளாய் மனிதன் எந்தவித உடைமைகளுமற்று உணவைத்தேடி அலைந்த காலத்தில் திருமணம் தேவைப்படவில்லை.  பின் ஆண்கள் கால்நடைகளை உடைமைகளாக்கப் பெண்கள் நிலங்களை உடைமைகளாக்கினர். நிலங்களில் பயிர் செய்வதற்கு ஆள்களின் துணை தேவைப்பட்டது. ஆள்களைப் பெருக்கவும் நிலங்களைப் பாதுகாக்கவும் பெண்களுக்கு ஆண்களின் துணை நிரந்தரத் தேவையாகப்பட்டது. இதனால் திருமணம் அவசியமாக்கபட்டது.  நிலங்கள், கால்நடைகள் உடைமைகள் ஆகியது போல் ஆள்களும் உடைமைகளாக ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை(குழந்தைச்செல்வம்) உடைமைகளாக்கினர்.  இதற்குத் திருமணம் அவசியமாகியது. 

                   விலங்குகளுடன் இணைந்து பகுத்தறிவில்லாது வாழ்ந்த மனிதன் ஆதிகாலத்தில் அவற்றைப் போலவே உறவு கொண்டான். சகோதரன் சகோதரி, தாயும் மகனும், தந்தையும் மகளும் உறவு கொண்டனர். கணவன் இறந்தபின் மூத்தமகனைத் திருமணம் செய்துகொண்டநிலையையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. (J.G.Frager, Totemism&Progancy-1970 Vol.  IVP .28).

                இவ்வாறு வரன்முறையற்ற காட்டுமிராண்டி நிலையிலிருந்து குழுமணமுறை உருவாகிற்று. ஒரு குழு ஆடவர் ஒரு குழு பெண்கூட்டத்தை மணந்து கொண்டு வாழ்ந்தனர். இக்குழுமணமுறையிலிருந்தே பல கணவன் முறை உருவாகியிருக்கலாம். பாண்டவர் ஐவரை மணந்து வாழ்ந்த திரௌபதி பற்றிய கதை ஒரு காலத்தில் இந்தியாவிலும் இப்பல கணவன்முறை இருந்திருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. 
               


   இக்குழுமணத்தின் பின்னேயே ஒருவன் ஒருத்திமுறை உருவானது. விரும்பிய ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழவும் குடும்பம் நடத்தவும் எந்தவித தடையும் பண்டைய காலத்தில் இருந்ததில்லை.  இதனையே களவுமணம் என்றனர். விரும்பிய ஒரு பெண் விரும்பிய ஒரு ஆடவனுடன் ஊரைவிட்டு வெளியேறிக் கூடிவாழ்ந்தமையையே உடன்போக்கு என்றனர். அக்காலத்தில் இத்தகைய மணமுறைகளில் எந்தவித தடையும் இருந்ததில்லை. இது பற்றிச் சங்ககால அகப்பாடல்களில் அறியக்கூடியதாக இருக்கின்றது. இதில் ஏற்பட்ட சிற்சில தவறுகளினால், திருமணச் சடங்குமுறை தோன்றியது. இதனையே தொல்காப்பியர் தன் கற்பியல் என்னும் பகுதியில் 
               'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 
                ஐயர் யாத்தனர் கரணம் என்ப'' 
                                                                      என்று கூறியிருக்கின்றார். அன்றைய திருமணங்களில் ஐயர் இல்லை, மந்திரங்கள் இல்லை, தீவலம் இல்லை. ஆரியர் தமிழ்நாட்டினுள் புகுந்தபின்பே இம்முறைகள் எல்லாம் கையாளப்பட்டது. அக்காலத் திருமணங்கள் பற்றி இரு அகநானுற்றுப் பாக்களில் எடுத்தாளப்பட்டிருக்கின்றது. அறவாணன் தன்னுடைய தமிழர்மேல் நடந்த பண்பாட்டுப் படையெடுப்பு என்னும் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

  திருமணத்திற்கு நல்ல நாள் தெரிவுசெய்யப்பட்டது.
  வளர்பிறை நாட்களில் திங்களும் ரோகினியும் ஒன்றாக சேர்ந்திருக்கும் நாள் நல்லநாளாகக் கருதப்பட்டது.
  திருமணங்கள் விடியற்காலையில் நடத்தப்பட்டது. 
  மணநாளுக்கு முந்தியநாள் முற்றத்தில் வெண்மணல் பரப்பப்பட்டது. பந்தல், தோரணங்கள் கட்டப்பட்டன.
  முரசுகள் முழங்கின, விளக்குகள் ஏற்றப்பட்டது.
  கடவுளைப் போற்றி வழிபட்டனர்
  மணமகளை அலங்கரித்து பந்தலுக்கு அழைத்து வந்தனர்.
  மங்களகரமான பிள்ளைகளைப் பெற்ற பெண்கள் பூவும், நெல்லும் நிறைந்த நீர்க்குடங்களைச் சுமந்து வந்தனர்.
  குழந்தைகளைப் பெற்ற வாழ்வரசிகள் இக்குடங்களிலுள்ள நீரை மணமகளின் மேல் ஊற்றுவர். அப்போது கணவனுக்கேற்ற மனைவியாக வாழ்வாயாக என பெற்றோரும் மற்றோரும் வாழ்த்துவர்.
  மணமகனிடம் மணமகளை ஒப்படைத்து வாழ்த்தொலி எழுப்புவர்.
  அன்றிரவே மணமகளும் மணமகனும் தனியறையில் கூடிமகிழ விடப்படுவர்.
  மணநாளன்று விருந்தினர்அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.
  இடையர்களின் திருமணத்தில் செம்மறியாட்டின் பாலை உறை ஊற்றி எடுத்த தயிர், வரகரிசிச்சோறு, பொரித்த ஈரல் ஆகியவை விருந்துணவாக வழங்கப்பட்டது. 

          பின் ஆரியர் வரவின் பின் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டிடத் தீவலம் வந்ததுடன் அருந்ததி காட்டல் என்ற வட இந்திய மரபும் சேர்ந்தது. பண்டைக்காலத்தில் தலிகட்டும் சடங்கு இருந்தில்லை. ஆண்பெண்ணுக்குத் தாலிகட்டும் முறை பிற்காலத்திலேயே பேசப்படுகின்றது. கந்தபுராணம் என்னும் நூலில் முருகன் தெய்வயானையின் கழுத்தில் தாலி கட்டியதாக கூறப்படுகின்றது. அதுவும் தெய்வயானை ஆரியப்பெண்ணாகக் காணப்பட்டார். இப்பழக்கத்தைத் தமிழர்கள் ஆரியச்சார்பு பெற்ற மலையாளநாயர்களிடமிருந்து பெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
            
          இவ்வாறு நாம் திருமணநடைமுறைகள் மாற்றம் பெற்று வந்திருந்தமையை  அறிந்து கொள்ளுகின்றோம். தற்காலத்தில் தமிழர் உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற சூழ்நிலையில் அவர்கள் பழக்கவழக்கங்கள்  திருமணவாழ்க்கை முறைகள் போன்றவை அவரவர் வாழுகின்ற நாடுகளின் சூழலுக்கேற்ப மாறுபாடுபடுவதை அறியக்கூடியதாக உள்ளது. 
                 
                     

  வெள்ளி, 2 நவம்பர், 2012

  தலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 5)  பொறுமை இழந்த ராமுக்கு எது செய்வதென்று அறியாத குழப்பத்தைக் காட்ட அவனது மூளையானது மேல்மாடியிலிருந்த தன் அறைக்கு விரைவாக அவனை இழுத்தெடுத்தது. பெற்றோர் இருவரையும் விலத்திவிட்டு விரைவாக மேல்மாடியிலிருக்கும் தன் அறைக்கு ஓடினான். எதுவுமே பேசாது மௌனமாய் அடங்கிய தாய் மெதுவாக வேலைக்குப் போவதற்காக கதவைத்திறந்தாள். தந்தையும் 'கோவம் மட்டும் துரைக்கு இப்போது மூக்கு நுனியிலே வந்திடும். மேலே போகிறாய் உன் அறை அலங்கோலமாக இருக்கிறது. அதை முதலில் அடுக்கி வை. எல்லாம் அம்மாதான் செய்ய வேண்டும் என்றில்லை|| என்று ஆத்திரத்துடன் கூறியவராய் மனைவியுடன் வெளியேறினார். 

              வேலைத்தளத்திலே எந்த விடயத்தில் கைவைத்தாலும் எதிலுமே மனம் நிலைநிறுத்த முடியாத சஞ்சலத்தை தேவி மனம் உணர்ந்தது. பிள்ளையின் போக்குக்கு  விட்டிருக்கலாமே. இளந்தலைமுறை தாம் விரும்பியதைத்தானே செய்யும். எமது காலந்தான் கடந்துவிட்டது. எல்லாம் அநுபவித்துத்தானே இங்கு வந்தோம். மற்றவர்களிடம் நான் சொன்ன வார்த்தைகளுக்காக பிள்ளையின் ஆசையை மறுப்பதா? என்ன தான் பெரிதாய் மறுத்துவிட்டான். நான் அடம்பிடிப்பதற்கு. சீச்சீ .... என்ன மனம் எனக்கு. நான்  பிள்ளைக்கு அடிவாங்கிக் கொடுத்துவிட்டேனே. பெற்ற மனம் பேதலித்தது. வேலையில் இருப்புக் கொள்ளவில்லை. மேற்பார்வையாளாரிடம் உடம்புக்கு முடியவில்லை டாக்டரிடம் போக வேண்டும் என்று சாட்டுச் சொல்லிவிட்டு வீடு நோக்கிச் சென்றாள் தேவி.

            இருந்தாலும் நாளை வேலைக்குப் போகும்போது வைத்தியரின் துண்டு கொண்டு போனால்த்தானே அதிகாரி மீண்டும் வேலைக்குத் தேவியை ஏற்றுக் கொள்வார். அதனால் டாக்டரிடம் சென்றாள். வழமைபோல் டாக்டர் வரவேற்பறை நாற்காலி அவளைத் தாங்கியது. சிலவேளை டாக்டரிடம் காட்டுவதற்கு அப்பொய்ன்ட்மெனட் இல்லையென்றால் அநுமதி கிடைக்காது. இன்று என்னவோ அவளுக்கு அநுமதி கிடைத்துவிட்டது. நேரம் செல்லச்செல்ல அவளுக்குச் சலிப்பேற்பட்டது.  இது அப்பொய்ன்ட்மென்ட் இல்லாது வருபவர்களுக்கு எப்போதும் வரும் சலிப்புத்தான். ஆனால்> ஒருபடியாக மருத்துவரிடம் வலிந்து தனக்கு வராத ஒரு நோயை வரவழைத்துப் பொய்யான நோய்க்கு மருந்துவரிடம் மருந்துச் சீட்டையும்  விடுமுறைக்கான சீட்டையும் பெற்றுக் கொண்டு வீடுதிரும்பினாள். வீட்டு வாசலில் சுதன் கார் நிறுத்தப்படுவதைக் கண்ட தேவி இவர் என்ன இன்று நேரத்துடன் வந்துவிட்டார் என்று நினைத்தபடி அவரருகே சென்றாள்.

             'என்ன ஆச்சரியமா இருக்கு. நேரத்தோடு வந்திட்டீங்க||. 

          'மனசு சரியில்லை தேவி மனம் நல்லா இருந்தால்த்தானே வேலை செய்ய முடியும். நான் ராமுக்குத் தேவையில்லாமல் கை நீட்டியிருக்கக் கூடாது. அவனும் தோளுக்கு மேலே வளர்ந்திட்டான்|| 

  என்றபடி கதவைத் திறந்தான். உடலென்னவோ இருவருக்கும் வாசலில் நின்றது மனமென்னவோ வீட்டினுள் இருந்தது. உடையும் கழட்டாது மகனைச் சமாதனப்படுத்துவதற்காக உடனடியாக ராம் அறையை நோக்கிச் செல்வதற்காக வரவேற்பறையினுள் இருந்த படிகளில் ஏறினான். குனிந்து படிகளில் பாதங்களை வைத்தவன் நிமிர்ந்து அடுத்த படிகளில் கால்வைப்பதற்காக மேல்நோக்கினான். அதிர்ந்துவிட்டான். படிகளில் தொங்கிய ராமுடைய பாதங்களைக் கண்டு துடித்துப் போனான். தேவி..... என்று அலறியபடி மேல் நோக்கிப் பார்த்தான்.  படிக்கட்டுகளில் தாயின் சீலையால் தூக்கிட்டுத் தொங்கிய ராமின் உயிர் பிரிந்த உடல் கண்டான். ஸ்தம்பிதமானான். தாங்கமுடியாது அவதிப்பட்டான். கயிற்றை அறுப்பதற்காகக் 'கத்தியை எடுத்துவா தேவி.....|| என்று பலமாகக் கத்தினான். விசயம் எதுவென்று அறியாது சமையல் அறையினுள் ஓடிச்சென்று கத்தியை எடுத்துக் கொண்டு வேகமாய் ஓடிவந்த தேவி மகனைப் பார்த்தாள். ஐயோ.... என்று அலறியவளாய் கையில் கத்தி இருப்பதையும் உணராதவளாய் கையால் தலையில் ஓங்கிஓங்கி அடுத்தபடி உலகமே அதிரும்படிக் கத்தினாள். அடிக்க அடிக்க கத்தி தலையைப் பதம்பார்த்தது. அப்படியே இரத்த ஓட்டத்தின் நடுவே தரையில் சாய்ந்தாள். மகனைப் பார்ப்பதா> மனைவியைப் பார்ப்பதா? சுதன் நடைப்பிணமானான். அழுது கொண்டு தரையில் சட்டென்று அமர்ந்தான். கைகள் இரண்டையும் கோர்த்துக் மேலுச்சியை அழுத்தியபடி அப்படியே படிக்கட்டுக்களில் அமர்ந்து கொண்டான். விரிந்த கண்களினுள் தொங்குகின்ற தன் மகனின் கால்களை நோக்கினான். யாரை அணைப்பது அழுவது எதுவுமே புரியாது. அம்புலனஸ்க்கு அழைப்பைக் கொடுத்தான். மருத்துவமனையில் உணர்வற்ற தேவி உடலும் உயிரற்ற ராம் உடலும் உணர்விருந்தும்  உயிரிருந்தும் சலனமற்ற மௌனமான சுதனும் ........

              அடுத்தவர் வாழ்வில் தலையீடு 
              கெடுத்திடும் வாழ்வை உணர்வீர்கள்
              மடியது சுமந்த மகவானாலும் - அவர்
              மனமது வேறு அறிவீர்கள்
              அவரவர் ஆசைகள் ஆயிரம் - அதில்
              பிறரது நுழைதல் பிழையாகும்
              கணமது கொள்ளும் ஆத்திரம் - வாழ்வை
              கடிதென முடித்திடும் நிச்சயம்.

                              

  புதன், 31 அக்டோபர், 2012

  வாழ்க்கையில் வெற்றி பெறும் வழி வகைகள்
                
                 'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது'' என்ற ஒளவையார் கூற்றுக்கிணங்க அரிய பிறப்பாகிய மானிடப் பிறப்பெடுத்த மனிதன், மற்றைய உயிர்களினின்றும் மேம்பட்டவன். மனம் என்ற மாபெரும் சக்தி படைத்தவன். மனதைக் கொண்டிருப்பதனாலேயே நாம் மனிதர்களாகின்றோம். வளமுடன் வாழ வழி காட்டுவது அந்த மனம்தானே. இந்த மனதின் சக்தியை சிதற விடாமல் ஒரு குறிக்கோளுக்குள் குவித்தோமேயானால், நாம் எண்ணுகின்ற எக் காரியங்களிலும் வெற்றியை அடைந்து விடலாம். 
                 
                  நமது எண்ணங்களை சிதறவிடாது நமது குறிக்கோளில் மனம் முழுவதையும் ஒருமுகப்படுத்துகின்றபோது எண்ணங்களுக்கு ஆற்றல் மிதமாகின்றது. அடுப்பில் ஒரு பாத்திரத்தினுள் நீர் கொதித்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பாத்திரத்தின் மூடி தள்ளியதைப் பார்த்த ஜேம்ஸ்வர்ட் தனது கவனம் முழுவதையும் அதில் செலுத்தி நீராவிக்குத் தள்ளும் சக்தி இருக்கின்றது, என்று அறிந்து ரயில் என்ஜினைக் கண்டுபிடித்தார். அப்பிள் மரத்தில் இருந்து விழும் பழம் கீழ் நோக்கி விழுவதை அவதானித்து ஏன் விழுகின்றது! மேலே செல்லவில்லை என்று சிந்தித்துத் தனது கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்திய சேர்.ஐசாக்.நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைக் கண்டறிந்தார். லூதர் பர்பாங் ஆண்டுக்கணக்கில் ஆராய்ச்சி செய்து செடி கொடிகளுக்கு உயிர் இருக்கின்றது என்று கண்டறிந்தார். கணனிக்குள் தன் மூளையை ஒருங்கிணைத்த காரணத்தினாலேயே வின்டோஸ் நிறுவனத்தின் உரிமையாளர், பில்கேட்ஜ் இன்று உலகத்திலேயே இரண்டாவது பணக்காரன் என்ற நிலையை அடைந்துள்ளார். ஒரேவிடயத்தில் தமது எண்ணங்களைச் செலுத்தியவர்களே தலைசிறந்த விஞ்ஞானிகளாகியிருக்கின்றார்கள். எனவே, எண்ணங்கள் ஒருமுகப்படுத்தப்படல் வேண்டும். சூரியனுடைய கதிர்களை ஒரு கண்ணாடி லென்ஸ் மூலம் குவிக்கும் போது ஒளிக்கதிர்கள் ஒன்றாக திரண்டு லென்ஸை ஊடுருவிச் சென்று எரிக்கின்ற நெருப்பாக மாறுகிறது. லென்ஸின் கீழே வைக்கப்பட்டிருக்கும் பஞ்சை எரித்துவிடுகின்றது. திரண்டு ஒரு நிலைப்படும் எண்ணம் உச்சத்தை அடையும். ஒரு செயல் வெற்றியடைய வேண்டுமானால் முழுமனத்தையும் செலுத்துவது, முழு ஆற்றலையும் ஒன்று குவிப்பது, முழு அறிவையும் புகுத்துவது போன்ற 3 திறன்களும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் வெற்றி கிட்டும்.

                    முதலில் ஒரு குறிக்கோளைத் தெரிவுசெய்ய வேண்டும். தன்னம்பிக்கையுடன் அக்குறிக்கோளைப் பிரார்த்தனை மூலம் ஒவ்வொரு நாளும் மனம் ஒன்றி;க் கேட்கும் போது மனதில் ஆழமான உறுதி ஏற்படும். பிரார்த்தனை என்ற பெயரில் எமது மனதிற்கு நாமே கட்டளையிடுகின்றோம் அல்லவா. இதன் மூலம் ஆழமாகக் குறிக்கோள் மனதில் பதியும். அப்போது முயற்சியில் மனம் ஒன்றி விடும். வாகனம் ஓட்டும் போது எப்படி மனம் ஒன்றி வாகனத்தைச் செலுத்துகின்றோம் அப்படியேதான். இந்த மனித உடலால் எதுவுமே செய்ய முடியாது. மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். அதனை வெற்றி கொள்ளுங்கள். வெற்றி என்பது நாம் விரும்பியதெல்லாம் வெற்றி கண்டு விடுவதல்ல. எம்முடைய தீமைகளைத் தீய எண்ணங்களைத் தீய ஆசைகளை தீய செயல்களை வெற்றி கொள்ள வேண்டும். வள்ளுவர் வழியில் தவம் என்னும் நூலிலும் தீய எண்ணங்களில் நின்று வெற்றி கொள்தல் மாபெரும் வெற்றி என்கிறார். இவையெல்லாவற்றையும் வென்றுவிட்டால், பிறரால் நாம் குறை கூறப்பட மாட்டோம். குறையில்லாமல் வாழுகின்ற வாழ்க்கையே மேன்மையான வாழ்க்கை. இவ்வாழ்க்கையுடன்,  நாம் கொண்ட ஒரு குறிக்கோளை நோக்கி மனம் ஒருமைப்பாட்டுடன் செல்லும் போது நாம் கொண்ட குறிக்கோளில் வெற்றி காணலாம்.  

                    குறிக்கோளை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், முயற்சி என்பது முழுமனதிலும் நிறைந்திருக்க வேண்டும்.முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்""முயற்சி திரிவினையாக்கும்" எனப்படுகின்ற பழமொழிகளை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால், சந்தர்ப்பம் சூழ்நிலை சரியான முறையில் அமையாதுவிட்டால், எப்படி முயன்றாலும் "சாண் ஏற முழம் சறுக்குவது" போலவேதான் அமையும். எனவே சந்தர்ப்பம் சூழ்நிலையைச் சரியான முறையில் அமைத்துக் கொள்வது அவரவர் கடமையாகும். சூழ்நிலையை மாற்றியமைப்பதுவும் முயற்சியின் ஒரு வடிவமாகவே கருதப்படுகின்றது. சூழ்நிலையைச் சாதகமாக்கி சாதிக்க நினைக்கும் காரியத்தில் முழு ஈடுபாட்டுடன் முன்னேற வேண்டும். மனிதப் பரிணாமக்கோட்பாட்டின் தந்தை சார்ள்ஸ் டாவின் அவர்கள் தான் வாழ்ந்த சூழலைத் தன் ஆராய்ச்சிக்கு ஏற்ப மாற்றியமைத்தார். புழுவோடும் பூச்சிகளோடும் தன் வாழ்நாளைக் கழித்தார். பரிணாமக் கோட்பாட்டின் தந்தையானார்.

                     சூழ்நிலையில் பங்கம் வருகின்றபோது விதியை நோகின்றார்கள்.  அறிவாளிக்கு மதி பெரிது. முட்டாளுக்கு விதி பெரிது. விதி என்று எண்ணுகின்ற முட்டாள் கூடப் பிரார்த்தனை மூலம் "விதியை மதியால் வெல்லலாம்" என்று எண்ணுகின்ற போது பிரார்த்தனை முயற்சிக்குத் துணை செய்கின்றது. தினமும் ஒரு குறிக்கோளை மனதில் வைத்து பிரார்த்தனை செய்கின்ற போது மூளையானது அதனை நிமிடந்தோறும் ஏற்று குறிக்கோளை அடைவதற்கான வழிவகைகளை அடைவதற்கு ஆயத்தங்களைச் செய்யும். எனவே பிரார்த்தனை வெற்றிக்கான வழிகளைக் காட்டிவிடும்.

                   இத்தனையும் சாதகமாக அமைகின்ற போது உடல்நிலையை ஓரங்கட்டிவிட்டால், உடல் ஆரோக்கியம் குன்றி உடலும் உள்ளமும் செயலிழந்து போகும். நமது பழக்கவழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன.  கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகின்றபோது ஆரோக்கியமும் குன்றுகின்றது. எடுக்கின்ற முயற்சியில் முழுக்கவனமும் செலுத்த முடியாமல் போகின்றது. எண்ணங்கள் சிதறடிக்கப்படுகின்றன. வெற்றி மூழ்கடிக்கப்படுகின்றது. எனவே நல்ல பழக்கவழக்கங்களை கைக்கொள்ளும்போது எடுத்த இலட்சியத்தில் வெற்றி காணலாம். இதைவிட எம்மை அறியாமலே எமக்கு ஏற்படுகின்ற நோய்கள் கூட வெற்றிப்பாதையில் தடைக்கல்லாக அமைகின்றன. அதற்கு மனம் என்ற அங்குசத்தை ஆளுகின்ற சக்தியை யாம் பெற்றுக் கொள்ள வேண்டும். கணனி உலகில் அப்பிள் நிறுவனத்தை உருவாக்கி குறுகிய காலப்பகுதியில் உலகப்பிரசித்தி பெற்ற ஸ்ரீவ் ஜாப்ஸ் (Steve jobs) தன் உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாத காரணத்தினால், வெற்றிப்பாதையின் இடையிலேயே வாழ்க்கையை இழந்தார். உலகம் ஒப்பற்ற விஞ்ஞானியை  இழந்தது. எனவே கண்ணுங்கருத்தும் வெற்றியை நோக்கியிருக்கும்போது சுகதேகியாக வாழவேண்டும் என்ற எண்ணமும் மனதில் மேலோங்கி நிற்க வேண்டும்.

               எனவே இலக்கைத் தெரிவுசெய்யவேண்டும். அதன் முக்கியத்துவத்தை அறியவேண்டும். அந்த இலக்கை அடைய உறுதியாக இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான வரைபடத்தை மூளையில் வரைந்து வைத்திருக்க வேண்டும். அதில் நம்பிக்கை வைத்தல் வேண்டும். நம்பிக்கையில் சூழ்நிலை, பிரார்த்தனை, உடல்நிலை, முயற்சி போன்றவற்றை  தெளிவான ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவந்து  முழுமனதையும் நமது இலக்கினுள் ஒருமுகப்படுத்தும்போது வாழ்க்கையில் 100 வீதம் வெற்றியை அடையலாம்.
         
          

       


  சனி, 27 அக்டோபர், 2012

  பூக்களின் படைப்பு (அநுபவம்)


  Image Hosting  எங்கள் இல்லம் மலர்கள் நிறைந்த பூங்காக்கு நடுவே அமைந்திருந்தது. எனது தாயாருக்குப் பூக்கள் என்றால், அலாதிப் பிரியம்.  வகைவகையான மலர்ச்செடிகளை தேடிப் பெற்று வீட்டைச்சுற்றி நட்டிருந்தார். காலையில் வீட்டுவாசலைத் திறந்தால், முட்டி மோதிக்கொண்டு பவளமல்லிகை வாசனை வீட்டினுள்ளே நுழைந்துவிடும். அந்த அநுபவத்தை இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். அலாதியாய் அமர்ந்து கொள்ளும் இந்த வாசனைக்கு ஈடு செய்ய ரோஜா மலர்களின் வாசனை தூக்கி நிறுத்தும் எமது கெட்ட எண்ணங்களை. அநுபவித்துப் பாருங்கள். 

                 பாடசாலையில் நான் பணிபுரிகின்ற காலங்களில்  தினமும் காலையில் பணிக்காய் நான் புறப்படத் தயாராகியதும் எனது தாய், வாசலில் வந்து நின்று எனக்கு ஒரு முத்தம் தந்து வாசல் கதவருகே நட்டப்பட்டிருந்த ரோஜா மலர் ஒன்றைப்பறித்து எனது பின்னலில் வைத்து விடுவார். இது தினமும் நடைபெறுவது. முத்தமும் மலரும் எனது காலை அன்பளிப்புகள். அன்று ஒருநாள் எதையுமே சிந்தித்து சரி பிழை பார்க்கும் நான், யதார்த்தமாக அன்று காலை எனது தாயிடம் இந்த ரோஜாமலர் எவ்வளவு அழகாக இருக்கின்றது. ஆசையாக மலருகின்ற மலரை சிலகாலம் வாழவிடாமல் பறித்து நாம் கூந்தலில் வைப்பது தவறில்லையா அம்மா! என்று கேட்டேன். அவற்றிற்கும் வாழ ஆசை இருக்கும் அல்லவா அம்மா! என்றேன். பொதுவாகவே மலர்கள் என்றால், மனதைப் பறிகொடுக்கும் எனது அம்மாவும், பார்த்தாயா இது பற்றி எதுவுமே நான் நினைத்துப் பார்க்கவில்லையே. இன்றிலிருந்து நான் பறிக்கவில்லை என்று கூறினார். அன்றைய நாள் திடீரொன இரத்தக்கொதிப்பு அதிகமாகி எனது தாயாரும் என்னைவிட்டு ஒரேநாளில் நினைத்துப் பார்க்க முடியாதவாறு உயரப் போய்விட்டார். அவர் சொன்னதைச் செய்துவிட்டார். வார்த்தைகளின் வலிமையை நினைத்துப் பார்க்கின்றேன். எண்ண எண்ண கொந்தளிக்கும் நினைவுகள். எனது சிந்தனை எந்தவிதத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்க வேதனையாக இருந்தது.

           அம்மாவின் உடலைக் கொண்டு வந்து வீட்டின் நடுவே வைத்தார்கள். அவரைச் சுற்றி மலர்களால் அலங்கரித்தார்கள். எனது தந்தை ஊரின் பெரிய மனிதராகக் கருதப்பட்டவர் என்ற காரணத்தினால், பல நிறுவனங்களிலிலெல்லாம் இருந்து மலர்வளையங்கள் கொண்டுவந்து அம்மாவின் காலடியில் வைத்தார்கள். சுற்றவர மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி அம்மா ஆழ்ந்த மீளா உறக்கத்தில் படுத்திருந்தார். நானும் அவரருகே அழுதபடி அமர்ந்திருந்தேன். அங்கே மலர்கள் எனக்குக் கற்பித்த பாடம். இன்றும் என் அநுபவப் பாடமாகக் கருதுகின்றேன். 

           உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே படைக்கப்படுகின்றன. மனிதன் பிறந்தால், அவனால் உலகு உய்யவேண்டும்.  நான்கு பேராவது வாழ வேண்டும். படைக்கப்பட்ட உருவாக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே என்ற உண்மைத் தத்துவத்தை யாம் புரிந்து கொள்ளவேண்டும். மலர்கள் மலர்ந்து மண்ணில் சருகாகி மாய்கின்ற போது அந்தப் படைப்பின் பலன் நிறைவேற்றப்படுவதில்லை. அதனைப் பறித்து ஆண்டவன் காலடியில் சேர்க்கின்ற போது அம்மலர் இன்புறுவது நிஜமே. அதனைக் கூந்தலில் வைத்து ஒரு பெண் பெருமை கொள்ளும் போது அக் கூந்தலில் அமர்ந்திருக்கின்ற மலரும் பெருமை கொள்ளுகின்றது. அதன் வாசனை அவள் செல்கின்ற இடமெல்லாம் கூடவே செல்கின்றது. திருமணவீடுகள், ஆலயங்கள், முதல்ராத்திரி என்று அனைத்து இடங்களிலும் அழகாய்க் காட்சியளிக்கும் மலர்கள், ஒருநாள் வாழ்ந்தாலும் பிறர் மனதைச் சந்தோசப்படுத்தி நான் இறக்கின்றேன் என்ற பெருமிதத்தில் இறக்கின்றன. பிறரை அழகுபடுத்தி பிறர் மனதை கொள்ளை கொள்ளவைத்து தன்னை இழக்கின்ற மலர் தந்த பாடம் எனது அம்மாவின் இறுதி அஞ்சலியாக அமைந்திருந்தது. அம்மாவைச் சூழவர படுத்திருந்து எனக்குப் பாடம் நடத்திய மலர்களைப் பார்த்து ஒரு ரோஜாமலரைப் பறித்து எனது அம்மாவின் கூந்தலில் வைத்தேன். வெடித்தது அழுகை. படித்தேன் பாடம்

  தமிழ்த்தோட்டத்தில் பூ என்ற தலைப்பில் அநுபவத்திற்காக பரிசு பெற்ற படைப்பு
  Free Pictures


  புதன், 24 அக்டோபர், 2012

  கவிதை பாடலாம்
       சோகம் மனதுள் புகுந்தாலும் சொல்லொணாத்துயர் சூழ்ந்தாலும் அணைப்பொன்றை மனம்நாடும். அதனாலேயே ஓடிவந்து தலையணையில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுதாள் காவியா. காவியா மனவேதனையின்  காரணம்   அறிய மகளை அணைத்தெடுத்தாள் தாய். உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் தாயன்றி வேறு எத்துணையும் தாயின் பரிவைப் பெறமுடியாது. தலையணை தவிர்த்து தாயின் தோளணை தேடி எழுந்து கட்டியணைத்து புலம்பினாள்.
   

  "யாப்பெருங்கலக்காரிகை கற்றேன்ளூ பரணி கற்றேன்ளூ கவிதை நூல்களெல்லாம் கரைத்துக் குடித்தேன். ஆனால் கவிதைப் போட்டியில் வென்றவளோ, கல்வி அறிவு சிறிதும் இல்லாதவள். ஆங்கிலத்தை இணைத்தெல்லாம் கவிதை பாடினாள். இது தான் கவிதை தருமமா? இதை நான் ஏற்க வேண்டுமா?

  என்று கலங்கினாள். ஒன்றிலே ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதில் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தாலும் அதனை இழக்கும்போது மனம் சோர்ந்துவிடும். இதயமே வெடித்துவிடுவது போன்று மனம் வருத்தமடையும். இதயம் வடித்த கண்ணீர் கண்கள் வழியாக தன் வேதனையை வெளிக்காட்டி தாரைதாரையாக அத்தாட்சி பணியை மேற்கொண்டது.

  மகளின் கண்ணீரின் காரணம் கண்டறிந்த தாய்,

                "தலையிடி காய்ச்சல் வந்தால்
                தயவுடன் மருந்தைக் கேளாய்
               மலையிலுள்ள கல்லைத் தூக்கித்
                தலையில் போட்டால்
               தலையிடி நின்று விடும்''
        
               "பைசாவைக் கொடுத்து
                 நைசாக வாங்கிப்
               பையன்கள் ஊதும் பலூன்
                 படார் படார்''
           
               "உச்சியில் நாலு மயிர்  ஓரமெல்லாம் தான் வழுக்கை
               குருத்தெடுத்த வாழை போல் கூனிக் குறுகி நின்றார்''

  இவையெல்லாம் கவிதை போல் உனக்குத் தெரிகிறதல்லவா? இங்கு உவமையில்லையா? எதுகையில்லையா? ஆனால் இதைப் பாடியவர் யாரென்று தெரியுமா? பாடசாலைப் படியை மிதிக்காத ஒரு பாமரன்''

  விக்கித்து நின்றாள், மகள்.
                  
  "இதிலிருந்து என்ன தெரிகின்றது. ஆராரோ ஆரிவரோ தாலாட்டுப் பாடல் தொட்டு ஒப்பாரி அமங்கலப் பாட்டு வரை பாடல் மனித வாழ்வில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. பாட்டுப் பாடும் புலவனும் தேடிப்பெறும் கரு வாழ்வில் கலந்து நின்று மிளிர்ந்து நிற்கும் நிகழ்வுக் கோலங்கள். விறகை வெட்டும் விறகு வெட்டியும், வெத்திலை உரலில் போட்டு வாய்சிவக்கக் கவிபாடும் எம்மூர் பாட்டியும் இன்னும் எமது மனக் கண்ணில் நின்று நிலைக்கும் கவிஞர்கள்.
                   

  கவிபாடக் காவியம் கற்றிருக்க வேண்டும், இலக்கணம் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். என்ற அவசியமில்லை. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும். கேள்வி ஞானமும், உணர்ச்சிப் பெருக்கும் கற்பனை வளமும் நிறைந்து விட்டால், மூளை கொட்டிக் கொண்டே இருக்கும், கவிதை பெருகிக் கொண்டே இருக்கும். இப்படித் தான் பாடவேண்டும் என்ற வரன்முறை கொண்டு பாடியிருந்தால், புதுக்கவி புனைந்து பாரதி இன்றுவரை எல்லோர் இதயங்களிலும் இடம் பிடித்திருப்பாரா?
                   

  அந்நிய மொழியைத் தமிழ் மொழியில் கலந்து கவிதையின் சிறப்பைச் சீர்குலைப்பதாகப் பலர் கலங்குகின்றார்கள். மொழி எமது எதிhகாலத் தலைமுறையினரைச் சென்ற சேர வேண்டும் என்று அல்லும் பகலும் கண்முழித்துக் கட்டுரைக்கும் எமது முயற்சி என்னாவது. எமது தமிழை எமது தலைமுறையினர் நாடி வரவேண்டுமென்றால், இலகுபடுத்தல், விளங்கச் சொல்லல் அவசியம். அந்த விளக்கம் எங்கே கிடைக்கும்? அவர்கள் பரீச்சயமான மொழியின் மூலம் தானே கிடைக்கும். அதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளல் தவறா? சூழ்ச்சியில் புகழ்ச்சி காணல் எமது புராணக்கலை அல்லவா? அருணகிரிநாதர் தமிழில் வடமொழி கலந்த போது  நாம் ஏற்கவில்லையா? மணிப்பிரவாளநடை என்று நாம் இரசிக்கவில்லையா?
          

              "வால வ்ருத்த குமார னெனச்சில
                வடிவு கொண்டுநின் றாயென்று வம்பிலே
              ஞாலநின்னை வியக்கு நயக்குமென்
                நடனங் கண்டும் வியவாமை யென்சொல்கேன்
              பால லோசன பாநுவி லோசன
                பற்ப லோசன பக்த சகாயமா
              கால காலத்ரி சூல கபாலவே
                கம்ப சாம்ப கடம்ப வனேசனே''

  இது எப்படியிருக்கிறது. மணிப்பிரவாளநடை.
             
              அடுத்து காவியா! சொற்களைக் கவிச்சுசைக்கேற்ப பிரித்துச் சொல்லல், நீட்டிச் சொல்லல், போன்று சந்தத்திற்கேற்ப தன் சுதந்திரத்தைக் கையாள்வான் கவிஞன். இதற்காகவே அளபெடை இலக்கணத்தில் இடம்பெற்றது. இலங்கு என்பது பிரகாசம் எனப் பொருள் பெறும். ஆனால் பாட்டில் ஓசை குறையுமிடத்து அந்த ஓசையை நிறைத்தற் பொருட்டு இலங்ங்கு என்று ஒற்றளபெடை பயன்படுத்தல் மரபல்லவா? இதே போலவே ஐயா என்னும் சொல் அய்யா எனவும் ஒளவை என்னும் சொல் அவ்வை எனவும் வழங்கப் படுகின்றது. இந்த ஐ, ஒள என்னம் இரு சொற்களும் இலக்கணத்தில் போலி என்று அழைக்கப்படுகிறது. எனவே, அதுவும் கவிஞன் சுதந்திரம்.
               

  இதைவிட இன்னுமொரு சர்ச்சை எம்மவரிடையே நடமாடுகின்றது. ஓரவர் பயன்படுத்திய சொல்லை, பொருளை வேறு ஒருவர் கையாளுகின்றார். என்பதே அது. இதுவே பலவித ஆராய்ச்சியின் பலனாக நான் கண்ட உண்மை என்னவென்றால்,
       
         "கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
          என்ன பயனும் இல''

  என்னும் திருக்குறளை மனதில் பதித்த கம்பர், மாடத்திலே மலர்ப்பந்தாடிய சீதையையும் வீதியில் மாமுனியுடன் வந்து கொண்டிருந்த இராகவனையும் நோக்க வைக்கின்றார். ஷஷகண்ணொடு கண்ணினைக் கவ்வி..''


   என்று வரிகளைத் தொடுக்கின்றார். இதேபோல் கம்பரைக் கையாண்ட எமது கண்ணதாசனை நோக்கினால், கம்பர் ஓரிடத்தில் பயன்படுத்திய

                 "தோள் கண்டார் தோளே கண்டார்
                   தொடுகழல் கமலமன்ன
                   தாள் கண்டார் தாளேகண்டார்
                   தடக்கை கண்டாருமஃதே.......''

  என்னும் வரிகளை

                                   " தோள் கண்டேன் தோளே கண்டேன்
                                     தோளில் இரு விழிகள் கண்டேன்''


  என்று பாடல் யாத்துள்ளார்.

  இதேபோன்று ஆலயமணி என்னும் படத்திற்கு கண்ணதாசனிடம் ஒரு பாடல் கேட்கப்பட்டது. அவரும்.
                
               " தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
                அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே –அந்த
                தூக்கமு;ம் அமைதியும் நானானால் ...''

  என்னும் பாடலை அனுப்பியிருந்தார். ஆனால், முதல் கிழமை வாலி எழுதி அனுப்பியிருந்த பாடல் போல் இப்பாடல் காணப்பட்டிருந்தது. அது

               "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்
                சாந்தம் உன் மனதில் நிலவட்டும் - அந்த
                தூக்கமும் சாந்தமும் நானாவேன்''

  இங்கு அமைதி சாந்தமானது நெஞ்சு மனதானது. இருவரின் எண்ணப் போக்கும் ஒன்றாயிருக்கிறதே எனக் கண்ணதாசனிடம் வினவியபோது, அவர் கூறிய பதில்  ஆ.மு.தியாகராஜ பகவதர் அம்பிகாபதியாக நடித்த படத்தில் வந்த  


                   "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும். 
                    சாந்தம் உன் மனதில் நிலவட்டும்! – ஆகா. 
                   அந்தத் தூக்கமும் சாந்தமும் நானானால்"

   என்னும் வசனமே இருவர் மனதிலும் நின்று நிலவியது என்பது தெரிய வந்தது.


  அதேபோல் அண்ணாத்துரை வரிகள் கூடு கண்ணதாசன் பாடல்களில் பிரதிபலித்திருப்தை அறியலாம். வேலைக்காரி என்னும் படத்தில் கோபத்தில் இருக்கும் கதாநாயகனுக்கு நண்பன் 


  "கத்தியைத் தீட்டாதே. உன் புத்தியைத் தீட்டு"

   என்று கூறுவதாக வசனம் எழுதியிருந்தார். இதனையே கண்ணதாசன் விளக்கேற்றியவள் என்னும் படத்திற்கு பாடல் எழுதும்போது

                   "கத்தியைத் தீட்டாதே

                   உந்தன் புத்தியைத் தீட்டு

                   கண்ணியம் தவறாதே

                   அதிலே திறமையைக் காட்டு"


   என்று பாடல் எழுதினார்.

   இன்னுமோர் இடத்தில் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சிக்கு மாறியபோது ஆதரவாளர்கள் அனைவரும் சிவாஜி கணேசனை தரக்குறைவாகத் திட்டியபோது அண்ணாத்துரை அவர்கள்     


                        "எங்கிருந்தாலும் வாழ்க"

   என்று வாழ்த்தினாராம். இதுவே பிற்காலத்தில் நெஞ்சில் ஒரு ஆலயம் என்னும் படத்தில்

                       "எங்கிருந்தாலும் வாழ்க

                        உன் இதயம் அமைதியில் வாழ்க"
   

   எனக் கண்ணதாசன் அவர்கள் வரிகள் அமைக்கக் காரணமாயிற்று.  

          
                               எனவே, கற்றது கருத்தில் நிறைந்தால் அது எப்போதோ கவிவரியாக வெளிவரும் அது தன்னையறியாமல் உணர்ச்சி வேகத்தில் கொட்டும் போது மூளையென்னும் பண்டகசாலையிலிருந்து பெருக்கெடுக்கும்.
                               
                               அதனால், கவிதைக்கு யாரும் உரிமை பாராட்ட முடியாது. அது இப்படித்தான் இருக்க வேண்டும். இலக்கண வரம்பு முறைக்குள் அமைய வேண்டும். என்பதெல்லாம் அவசியமில்லை. இலக்கணத்தில் முழுக்கவனமும் நீ கொண்டதனால், கவிச்சுவையைத் தொலைத்திருக்கின்றாய்  என்று நினைக்கின்றேன். அனைவரும் கவரும் உத்தியைக் கையாண்டு அவள் வெற்றி பெற்றிருக்கின்றாள். இது மரபுக் கவிதை பாடும் போட்டி என்று வந்திருந்தால், உன்னுடைய கவிதை வெற்றி பெற்றிருக்கலாம். அதனால், மகளே ஒருவன் முன்னிலைக்கு வரவேண்டுமானால், சந்தர்ப்பம் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப தொழிற்படவேண்டும் இந்த உண்மையை உணர்ந்துகொள் காவியா. இப்போது புரிகிறதா? யாரும் கவிபாடலாம் என்னும் கவிதை தருமம்'' என்று கூறித் தாய் மெல்லச் சிரித்தாள்.

                தாயின் நீண்ட விளக்கத்தில் தெளிவுபெற்ற மகளும் காலத்துக் கேற்பக் கவிபாடும் உத்தியில் தன்னை ஈடுபடுத்தும் முனைப்புடன் அகக் கண்ணைத் திறந்தாள். அவள் கற்ற இலக்கணமும் தாயின் கருத்தும் ஒருங்கிணைய கற்பனைக்கு மோட்டர் பூட்டினாள். அவள் சிந்தனையின் தலைமையகம் தொழிற்படத் தொடங்கியது.

  சனி, 20 அக்டோபர், 2012

  தலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 4)


           
  என் குரலில் கேட்க அம்புக்குறியில்  அழுத்துங்கள்
  ஜேர்மனியில் ராம் பாதங்கள் பட்டன. தனக்குள் ஏற்பட்ட மாற்றம் தன் வாழ்க்கையை மேம்படுத்தப் போவதாய் மனங்குளிர்ந்தான். 

                  ராம் ஆற்றலொன்றும் பெற்றோர்க்குப் புதுமையில்லை. அவன் ஆர்வமொன்றும் பெற்றோர்க்குப் புதிதில்லை. அவன் மனதின் ரகசியங்கள், அவன் தம்மை மதிக்காத போக்கு, தம்மை எதிர்த்து நிற்கும் பண்பு இவையே தேவி சுதன் மனதுக்குள் பாறாங்கல்லாய் வந்தமர்ந்திருந்தன. 

  ´´என்னங்க சுதந்திரத்தை அளவுக்கதிகமாய்க் கொடுத்துவிட்டோமோ. பிள்ளை இப்படி மாறிப்போய்ட்டானேங்க. அவனை அமெரிக்கா அனுப்பியிருக்கக் கூடாது´´

  ´´தேவி நடக்கிறதுதான் நடக்கும். நாம் எவ்வளவு காலம் ராமோடு இருக்கமுடியும். தனியாக வாழும், தனியாக முடிவெடுக்கும் பக்குவம் பெற்றால்த்தானே அவனால் தனித்து வாழமுடியும். அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு காலம் அவனால் வாழமுடியும். எம்முடைய கடமை முடிந்துவிட்டது. இன்னும் என்ன ஒரு நல்ல இடமாகப் பார்த்து அவனைக்கட்டிக் கொடுத்துவிட்டால் நிம்மதியாக இருக்கும். கவலைப்படாதே எல்லாம் நல்லபடியாக நடக்கும்´´ சுதன் தேவிக்கு ஆறுதல் கூறினான்.

         ஒருநாள் ஒரு திருமணவிழாவிற்கு  ராம் இசைக்குழுவை அழைத்திருந்தனர். ராம் அவ்விசைக்குழுவில் பாடுவதற்கான பாடல்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான். அமெரிக்காவிலிருந்து திரும்பியபின் நடைபெறப் போகும் முதல் இசைநிகழ்வு. தன் புது உத்திகள் எல்லாம் கையாண்டு அந்நிகழ்வை நடத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தான். 

  ´´ராம் பாலும் பழத்திலும் வரும் ஒரு பாட்டை எடுத்துப் பாடேன். நல்லா இருக்கும். எங்கட சனங்களும் ரசிக்கும்´´ என்றாள் தேவி.

  ´´சும்மா இருங்கம்மா உங்கட பாட்டும் நீங்களும். இந்தப் பழைய பாட்டுகள் எல்லாம் இல்லை. எல்லாம் புதிசு. அதுவும் வேறமாதிரி இருக்கும். பாருங்களேன்´´

  ´´பழசுக்கு இருக்கிற மதிப்பு புதிசுக்கு இல்லை ராம். எங்கட சனம் அதத்தான் ரசிக்கும்``

  ´´இந்தக் கதைய விடுங்க. உங்கட சனத்த மாறச் சொல்லுங்க. அவங்க மாற வேண்டும். எப்பவும் பழைய பல்லவிதான். கேட்டுக் கேட்டுப் புளிச்சதைத்தான் கேட்க வேண்டுமா? இந்த லோலாப் பாட்டெல்லாம் யார் கேட்பார்கள்?

  ´´பழசு இல்லாம புதிசு எங்க இருந்து வந்தது``

  ´´அதுக்கு பழசக்கட்டிக் கொண்டுதான் வாழுகின்றீர்களா? உங்கட கதையெல்லாம் கேட்டால் வாழ்ந்த மாதிரித்தான். பழைய பஞ்சாங்மாத்தான் வாழவேண்டும்´´

  ´´பழைய பாட்டு இல்லையென்றால், இந்த Music Group இல்லையென்று அறிவிச்சுப் போடுவன்``

  ´´செய்யுங்கள் பார்ப்பம். இது நான் நடத்துவது. என்னிடமே அவர்கள் கேட்க வேணும். நான் Music Group கொண்டு போகத்தான் போறன். எனது இஸ்டத்துக்குப் பாடத்தான் போகிறேன்´´

  வார்த்தைக்கு வார்த்தை போட்டாபோட்டி. கருத்து மோதல்கள். கலாசார தூற்றல்கள். இனத்தின் இழிவுகள் போன்றன வார்த்தைகளால் ராமால் வீசப்பட்டன. தேவி தன் நண்பர்களிடம் மகன் இப்பாடல்கள் பாடுவான் என்று தம்பட்டம் அடித்துவிட்டால். தன் மகன் தன்னை பலவாறாக எதிர்த்துப் பேசுகின்றான் என்னும் கவலை அனைத்தும் சேர கண்களில் இருந்து கண்ணீர் அவளையும் மீறி பெருக்கெடுத்தது. அவள் கண்ணீரைப் பார்த்த மகன்

  ´´ சும்மா நடிக்காதீங்கம்மா`` என்று கூறிய வார்த்தைகள் கேட்டு ரணமாகியது மனம். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சுதன் தன் கோபத்தை வெளிக்காட்டினான். பட்டென்று எதிர்பாராதவிதமாக கன்னத்தில் விழுந்த தந்தையின் ஆத்திரத்தின் பிரதிபலிப்பு ராம் பொறுமைக்கு விடைகொடுத்தது. பிறந்து 20 வருடங்கள் கடந்துவிட்டான். எத்தனையோ முறை பெற்றோர் அவனைத் தண்டித்திருக்கின்றார்கள். எள்ளளவும் அவர்கள் தண்டிப்பு அவன் வளர்ச்சிக்கும் அன்புக்கும் தடையாக இருந்ததில்லை.

  புதன், 17 அக்டோபர், 2012

  தலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 3)
  ராம் பெற்றோர் ஆசைகளை  வேஷமின்றி நிறைவேற்றினான். ´´பெற்றாலும் சுதன் தேவி பிள்ளை பெறவேண்டும்´´ என்னும் புகழ்மாலையை பிறர் சொற்கோர்வையாய் பெற்றோர்க்குச் சூட்டினான்.  ஐரோப்பியமண்ணிலே அந்நியர் வாழ்வில் மோகம் கொண்ட தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரு விநோதமான இளைஞனாகக் காட்சியளித்தான்.´´என்னதான் தோல் வெள்ளையானாலும் நாகரீகத்தில் மேம்பட்டு இருந்தாலும் பண்பாட்டில் பண்பட்ட வாழ்க்கை மேற்கொண்டாலும் தமிழர் வாழ்க்கை முறைக்கு ஈடாக எதுவுமே இல்லை அம்மா´´ என்று தமிழர் கலாசாரம் பற்றி ராம் பெருமையாகப் பேசுவான். தமிழ் பாடசாலை செல்வதானால் தமிழர் கலாசார ஆடையில் பளிச் என்று பலர் பொறாமைக்கு ஆளாவான். ராம் கல்வி, கலைகளில் நாட்டமும் பண்பாட்டில் கட்டுப்பாடும் கொண்ட அன்பான இளைஞன். 

             ஆனால், ராம் ஒரு ஆசையில் நாட்டம் கொணடான். அதில் இருக்கும் உயர்வு கருதி அமெரிக்கா செல்ல பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இசையை ஒரு வருடம் அமெரிக்க மண்ணில் துறைபோக கற்க வேணடும். இசைத்துறையில் இணையற்ற புகழ் சேர்க்க வேண்டும் என்று இரத்தத்தில் ஊறிய பண்பு தனக்குள் தூண்டவே அமெரிக்கா செல்ல ஆயத்தமானான். 12 ம் (யுடிவைரச) வகுப்பு சித்தியெய்தியவுடள் பல்கலைக்கழக நுழைவின் முன் சில மாணவர்கள் தமது விருப்பத்திற்கேற்ப  அயல்நாடுகள் சுற்றிவருவது வழக்கம். விரும்பிய நாட்டில் அந்நாட்டு பிரஜைகளின் வதிவிடத்தில் விருந்தாளியாக வாழ்ந்து வருவதும் வழக்கம். 

              புதியகல்வியை மூளை ஏற்கும் முன் மனதை இலகுவாக்கவும்,  தாம் பெற்ற அநுபவங்களை இதமாய்ச் சுமந்து எதிர்கொள்ளும் உயர் கல்விக் காலங்கள் சுவையாய் கழிப்பதற்காக இச்சுற்றுலாவை இளையவர்கள் விரும்புவர். பெற்றோர் செல்வச்செழிப்பிற்கேற்ப பிள்ளைகள் ஊர்உலா, உலகஉலா செல்வர். 

         ராம் 12ம் வகுப்பை அபாரப்புள்ளிகளால் அசத்தியிருந்தான். தன் திறமையின் பிரகாசத்தை நாட்டுமக்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்க இசைக்குழு ஒன்றைக் கல்விக்காலத்திலிருந்தே கண்காணித்து வந்திருந்தான். எத்தனை திறமைகள் இப்பிள்ளையிடம் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என வழமைபோல் அயலவர் பொறாமைக் கண்களிலிருந்து பர்வை வீச்சானது ராமில் கதிர் வீச்சாய் பாய்ச்சப்பட்டிருந்தது. 

            வெளியுலகு கற்றுத்தரும் அநுபவபாடமும் விருட்சமாய் மனதுடன் விரிந்து கிடக்கும் இசையின் தாகமும் ஒன்றிணைய ராம் அமெரிக்கா நோக்கிப் பறந்தான். அமெரிக்க மண் இசை ஆர்வமுடையார்க்கு ஏற்ற இடம். இதனால், ராம் இசையின் திறமை நாளுக்குநாள் வளர்ந்தது. 

           ஒரு வருடம் தனியனாய்த் தன் எண்ணங்களை யார் தடையுமின்றி நிறைவேற்றும் திறமைசாலியாய் பக்குவம் பெற்றான். ராம் விருப்புக்கள் சுயாதீனமாய் சுதந்திரம் பெற்றன. தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் வல்லமை வலுத்தது. எதற்குமே அம்மா, அப்பா இருவர் அநுமதிக்காகவும் காத்திருக்கும் காத்திருப்புக்கள் நேரத்தை வீணடிப்பதாக உணர்ந்தான். ஒரு வருட காலம் அமெரிக்காவில் விரைவாகக் கடந்ததுபோல் ராம் வாழ்க்கை முறையும் விரைவாகவே மாற்றம் பெற்றது.  

  தொடரும்.........

  சனி, 13 அக்டோபர், 2012

  தலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 2)

  becoming father Scraps

  பாடசாலைக் காலங்களில் ஒருவரை ஒருவர் தனிமையில் சந்தித்து பலவாறான கதைகள் பேசி, பக்குவமான வாழ்வை ஒருவருக்கொருவர் பகிர்ந்தளித்து வாழத் தீர்மானித்து, பெற்றோர் வெறுப்பைச் சம்பாதித்து, தனியாக வாழ்ந்து பின் பெற்றோர் உறவைத் திரும்பப் பெற்று வெற்றிக் கழிப்புடன் வாழ்ந்தவர்களே  சுதன், தேவி தம்பதியினர். 
             
           சுதன் சிந்திக்கும் முன்னே அவன் சிந்தனைகள் தேவியால் செயற்படுத்தப்பட்டுவிடும். ஓட்டம் ஓட்டம் வாழ்க்கை முழுவதும் ஓட்டம். எல்லோரும் வாழ்வதற்காய் உழைப்பார்கள். ஆனால் சுதன் தம்பதியினர் உழைப்பதற்காக வாழ்ந்தார்கள். உறவுகள் சேர்ந்தன. உள்ளங்கள் மகிழ்ந்தன. வாழ்க்கை இனித்தது. இம்மனைவியைப் பெற என் தவம் யான் செய்தேன் என்னுமாப்போல் சுதன் கழித்திருந்தான். கற்பனை மனைவி கைவந்தபின் என்ன கவலை சுதன் பெறப் போகின்றான்!

            ஆனால், பிறர் பார்வைக்கு நாம் எப்படி இருக்க வேண்டும் என்னும் எண்ணமே பலர் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. அடுத்தவரைப் பார்த்து  அதுபோல் நாமும் வாழவேண்டும் என்னும் பேராசையே மனிதனை ஒரு இடத்தில் தங்கவிடாது ஓடஓட அலையவிடுகின்றது. அதன் மூலம் மனிதன் மனஅழுத்தம் என்னும் நோயைச் சம்பாதிக்கின்றான். 

               தாய்நாடு இலங்கை விட்டு புலம்பெயர்ந்து ஜேர்மனியில் புகுந்துவிட்டாலும் அயலவர் பார்வைக்கு தன் வாழ்வு உயர்வாய்த் தோன்ற வேண்டும் என்ற உள்ஊக்கம் சுதன் ஓய்வுக்குத் தடை போட்டது. அளவுக்கு மீறி சிக்கனமின்றி பணத்தைச் சேகரித்தாலும் அளவோடு சிக்கனமாய் ஒரு பிள்ளையைப் பெற்றான். தாய் தந்தை இருவர் உழைப்பிலும் மகன் செழிப்படைந்தான்.  

            அடிக்கடி தேவி சுதனைக் கேட்பாள். ``சுதன் எமக்கு எல்லாச் செல்வங்களையும் கொடுத்த கடவுள். பிள்ளைச் செல்வத்தில் மட்டும் சிக்கனத்தைக் கையாண்டுவிட்டாரே. ஒரு பெண் பிள்ளை இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்´´

                 ``நிறைவான வாழ்க்கையை யார் பெற்றிருக்கின்றார்கள். ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒரு ஏக்கம் சொல்லமுடியாது ஒளிந்துதான் இருக்கும். ஆணுக்கு ஆணாக பெண்ணுக்குப் பெண்ணாக ராம் எங்களை சந்தோசப்படுத்தட்டும். அதில் திருப்தியை நாம் பெறுவோமே´´ என்று சுதன் தேவியை திருப்திப்படுத்துவான். 

                 உழைப்பை மட்டுமன்றி அன்பையும்  அடுத்தவர்களுக்கு கொடுப்பதில் அளவுகணக்குப் பார்க்காத தேவி தன் மகனுக்கு அன்பை எப்படிக் கெடுத்திருப்பாள் என்று சொல்லவே தேவையில்லை. தாய்ப்பாசம் என்பது ஒருவகை மனஊற்று. உயிரினங்கள் அனைத்திற்கும் உரிய பற்று. அநுபவித்துப் பார்க்கும்போது ஓர் ஆச்சரியம். மனதைத் தாண்டி ஆழ்மனதில் பச்சை குத்தப்பட்டிருக்கும் பாசம். எதனையுமே மேலதிகமாகச் செய்யும் தேவி பாசத்தையும் மேலதிகமாகவே தெவிட்டாவண்ணம் மகனுக்குக் கொடுத்தாள். 

           
                  ஐரோப்பாவில் புதிதாய் எது நவீனமாய்த் தோன்றுகின்றதோ அது ஐரோப்பியநாடுகளில் நடைபயலும் முன்பே ராம் பயன்பாட்டில் பழையதாய்விடும். பியானோ, சங்கீதம், தாய்மொழி, ஐரோப்பியநடனம் அத்தனையும் அவனுக்குக் கற்றுத் தரப்பட்டது. ராம் ரசனையில் சொர்க்கமாய் சொந்தமாய் ஒரு வீடு. வேகமாய்ப் பறக்கும் ஒரு ஆடம்பரவாகனம். பெற்றோர் யந்திரமாய் உழைத்ததனால் மகன் இந்திரனாய் வாழ்ந்தான். 

  பொதுவாக செல்லம் அதிகமாகக் கொடுத்து வளர்க்கும் பிள்ளை தறுதலையாவான் என்று சொல்வார்கள். ஆனால், இந்த முதுமொழி ராம் விடயத்தில் பொய்மொழி. 

  தொடரும்........

  வியாழன், 11 அக்டோபர், 2012

  தலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 1)


         

  கண்ணைத் திறந்தாள் தேவி, மண்டை கனமாக வலித்தது. 1000 வார்ட்டுக்கள் மின் மண்டையைத் தாக்குவது போன்ற வலி. படுத்திருந்த அறையினுள் யாரையுமே காணவில்லை. அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த மயக்கமருந்து அவள் பார்வையை  மழுங்கடித்திருந்தது. செயற்கை உலகம் அவளை இயற்கை உலகத்திற்கு அழைத்து வந்திருந்தது. ஆனாலும், அவளால் கட்டிலில் அப்படியே கிடக்க முடியவில்லை. ´´ஐயோ....ஐயோ´´ என்று அலறியபடி ´´எங்கே என்னைக் கொண்டு வந்து போட்டிருக்கின்றீர்கள்´´ என்று பலமாகக் கத்திக் கொண்டு எழுந்திருக்க முயற்சித்தாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அலறல் கேட்டு அறையினுள் ஓடிவந்தான் சுதன். அவள் எழுந்திருக்க முயற்சிப்பதைத் தடுத்தான். வலியிலும் வக்கிரமான அவள் மனவேகம் அவள் படுத்திருக்க முடியாது உதறி எழ முயற்சித்தது. ´´என்ர பிள்ளை..... என்ர பிள்ளை. நான் அவனைப் பார்க்க வேண்டும் என்னை விடுங்கோ....என்னை விடுங்கோ´´ என உதறி எழுந்தாள். அவளைச் சுற்றி நெளியும் வைத்தியசாலைக் குழாய்கள் அவளை இழுத்துப் பிடித்தன. இரத்தம் ஒன்றினுள்ளும் ஒட்சிசன் ஒன்றினுள்ளும் அவள் உடலுக்குள் பிரயாணம் செய்து கொண்டிருந்தன. அறையினுள் கேட்ட ஓசை மருத்துவசாலை முழுவதும் எதிரொலித்தது. தன் காது நுழைந்த ஓசை கேட்டு தடதடவென்று அறையினுள் ஓடி வந்தாள் 
    
                மருத்துவசாலைத் தாதி. அவளைக் கட்டுப்படுத்த முடியாது தடுமாறினாள். உள்ளத்தினுள் உத்வேகம் புகுந்துவிட்டால் மனிதனின் அபாரசக்தி மேலும்  அதிகரிக்கும்.  இரண்டு தாதிகள் அவள் மூலம் வரவழைக்கப்பட்டனர். மூவரும் இணைந்து ஒருவாறாக கட்டுப்படுத்தி மயக்கமருந்தை அவள் உடலினுள் பாய்ச்சினர். மெல்ல மெல்ல கண்கள் மூடின. கைகள் சோர்வடைந்தன. அறையினுள் அமைதி நிலவியது. நரம்பு மண்டலத்தில் பாய்ச்சப்படும் மருந்து உணர்வுகளை செயலிழக்கச் செய்கின்றது. அமைதியான உறக்கத்தைக் கொண்டுவருகின்றது. ´´சுதன் உங்கள் மனைவிக்குச் செய்யப்பட்டிருப்பது சாதாரண ஆபரேசன் இல்லை. மண்டைக்குள் பலத்த காயம் ஏற்பட்டிருக்கின்றது. மேலும் மேலும் மயக்க மருந்தை நாங்கள் கொடுக்கின்ற போது அவவுக்கு கோமா நிலையைக் கொண்டுவந்துவிடும். நீங்கள்தான் அவவைச் சமாதானப்படுத்தவேண்டும்`` கண்கள் கலங்கிய நிலையில் தலையை அசைத்த சுதன் இந்த மயக்கமருந்தைக் கண்டுபிடித்த புண்ணியவானுக்கு மனதார நன்றி தெரிவித்து விட்டு கதிரையில் அமர்ந்தான். 

               வாழ்க்கையே சுமையாகிவிட்டது போன்ற உணர்வு. உலகமே இருண்டுவிட்டது போன்ற உள் மனப்பார்வை. எது எப்போது நடக்கும் என்று புரியாத வாழ்க்கை. அதை நூல் ஏணியில் நடப்பது போன்று ஒவ்வொருவருடனும் பழகவேண்டிய அவசியம் மனிதனுக்கு உண்டு. வாழ்க்கையில் எதுவுமே எமக்கு சொந்தமில்லை எதனையுமே நாம் உரிமை கொண்டாட முடியாது. இனம் புரியாத ஒரு மனஏக்கத்தைச் சுதன் உணர்ந்தான். 

  தொடரும்...............

  சனி, 29 செப்டம்பர், 2012

  உறவே உன்னை நான் வெறுக்கின்றேன்
  அந்திவேளை ஆதரவான தென்றலே!
  சிந்தனை சிதறடிக்கும் பொழுதுகளில்
  நாற்காலியை முற்றத்தில் போட்டு – உன்
  ஸ்பரிசத்தில் உறைந்தபடி சுவாரசியமாக
  நூல்களில் நுழைவேனே சுவைப்பேனே – என்னுடன்
  ஒட்டி உறவாடிய நீ
  எப்போது சூறாவளியாய் மாறினாயோ – பலர் 
  சோகங்களைச் சுமந்தாயோ அன்றுதொட்டு 
  காற்றே! உறவே! உன்னை நான் வெறுக்கிறேன்.


  சூரியன் இளைப்பாறும் சொர்க்க வாசலை
  கண்கள் சுவைக்க 
  தங்கமென மின்னும் அலைக்கரங்களை
  மனது இரசிக்க
  சங்கீதமாய் சலசலக்கும் ஓசையிலே
  என்னை நான் மறக்க – என்
  நெஞ்சம் உன்னோடு உறவாடி மகிழ்ந்ததே
  கவிதைப்புயல் கடகடவென்று பிரசவமாகியதே – ஆனால்
  எப்போது நீ பொங்கியெழுந்து 
  அப்பாவி உயிர்களை விழுங்கி ஏப்பமிட்டாயோ அன்றுதொட்டு
  கடலே! உறவே உன்னை நான் வெறுக்கிறேன்.

  கருத்தொட்டுக் கன்னியானேன் - நீங்கள்
  வாழும்வரை வார்த்தை தவறவில்லை
  பொங்கிப் பூரிக்கும் வயதினிலே
  அந்தரங்க ஆசைகள் அசை போடும் பொழுதுகளில்
  அன்பான தந்தை ஆதரவான தாயார்
  சமுதாயக் கண்ணாடியில் தளும்பாது நடக்கும்
  தரமான குடும்பம் தரமேதும் குறையாது வாழ
  மனதுக்கு வேலி போட்டேன்
  அன்புக்கு அடி பணிந்தேன் - உங்கள்
  ஆசைகள் தீர்க்கப் பட்டங்கள் சுமந்தேன்
  அத்தனையும் உங்களுக்காய் அர்ப்பணித்தேன் - என் 
  மடி தவழும் வாரிசு உங்கள் மடி தவழ வேண்டுமென்று
  திட்டம் போட்டேன் கட்டளையிட்டேன்
  கேட்டீரா! என் ஆசை தீர்த்தீரா! 
  கடமை முடிந்ததும் கடையேறி விட்டீரே!
  பெற்றோரே! உறவே உங்களை நான் வெறுக்கிறேன்  கூடிக்கும்மாளமிட்டோம் கூடிப்பிறந்தோரிடம் 
  கூறாத இரகசியங்கள் கூறிப்பரிமாறினோம்
  உள்ளொன்று வைக்கவில்லை 
  உடலிரண்டாய் உயிரொன்றாய் உலகில் வலம் வந்தோம்
  வாழ்வின் உயர்வுக்கு வாழ்க்கைப் பொழுதுகள் தாரைவார்த்தோம்
  இன்று நீ எங்கே?
  நட்பே! உறவே! உன்னை நான் வெறுக்கின்றேன்.

  நீயின்றி நானில்லை 
  என்னுயிர் உன்னுயிர் வேறல்ல
  என் நிழலில் என்றும் நீ தொடர்வாய்
  வாழ்வென்னும் வண்டிலைச் செலுத்தும் சக்கரங்களாவோமென
  வாழ்வின் சாட்சியாய் முத்தாய்க் குழந்தைகளைப் பெற்றெடுத்தோம்
  சக்கரத்தை உடைத்ததும் ஏன் சத்தியங்கள் மறந்ததுமேன்
  துணையே! கணவனே! உறவே! உங்களை நான் வெறுக்கின்றேன்


  பாசமெனும் நீரூற்றி பரிவு என்னும் ஒளி கொடுத்து
  பாதுகாப்பெனும் காற்று வீசி வாழ்க்கையெனும் வேரூன்ற
  வளமான வாழ்வை வாரிவழங்கி வளர்த்தெடுத்த சேய்
  கண்டதே காட்சி கொண்டதே கோலமென
  எம்மைக் கணக்கெடுக்கவில்லை
  அன்பை வன்பாக்கினான் பாசத்தை மோசமாக்கினான்
  அணைப்பை நெருப்பாக்கினான்
  அனைத்தையும் தூசாக அர்ப்பமாக நினைத்து
  காதலியருகிருக்க கடைக்கண்ணால் பார்வையிட்டு
  காரிலே பாதையைக் கடக்கின்றான்
  மகனே! உறவே! உன்னை நான் வெறுக்கின்றேன்

    உறவுகள் வரலாம் மறையலாம்
    வருவதும் மறைவதும் உறவுகள் இலக்கணம்
    உள்ளத்து உரம் உறைந்தால் - வாழ்வில்
    உயிருள்ள வரை சோர்வில்லை
    மறதியுள்ள வரை சோகமில்லை.

  அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...