• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 21 ஜூலை, 2017

  எங்கிருந்தோ வந்தான்

                                    

  இவ்வருடம் 2017   ஆடி அமாவாசையில் ஒரு சிந்தனை 


  நிலைத்து நின்ற கண்கள், நிதானம் இழந்த உணர்வுகள், பேச்சிழந்த வாய், பித்துப் பிடித்ததுபோல் இருக்கையில் இருந்த எனது தந்தை, மெல்லக் கால்களை அசைத்தார். அமைதியாக பூப்பஞ்சணையிலே மலர்ந்த முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்த எனது தாய், ஓயாத அங்கங்களுக்கு ஓய்வு கொடுத்து மீளா உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள். கடமைகள் முடிந்தன. இனி வரும் காலங்கள் பெற்ற பிள்ளைகளானாலும் ஒட்டி உறவாட முடியுமா! எட்ட நின்றே இன்பங் கண்டு களித்திருக்க அநுபவங்கள் ஆணையிட, யாருக்கும்  சுமையாக காலம் தள்ளும் சுகம் வெறுத்து மீளா உறக்கம் கொண்டு அழகாகத் தூங்கினாள். அருகே வந்தவர் அவள் கரங்களைப் பற்றினார். ஓ…….. என்று வெடித்தது குரல், கண்களுக்குள் மறைந்திருந்த கண்ணீர் மேகம் உடைத்துக் கொண்டு கொட்டத் தொடங்கியது.

  ``உன்ன எங்கே நான் கூட்டிக் கொண்டு போகல்ல. எல்லா இடமும் ஒன்றாத்தானே போனோம். இப்ப மட்டும் தனியாப் போக எப்படி நினைச்சனீ. இந்தியாவிற்கு உன்னைக்கு கூட்டிக் கொண்டு போய்க் காட்ட வேண்டும் என்று தீராத ஆசை கொண்டிருந்தேனே. ஐயோ..உன்ன அனுப்பிட்டு நான் ஏன் இஞ்ச நிற்கிறன். நான் என்ன செய்வன்.. ´´ வார்த்தைகள் அடங்கவில்லை. அருகே இருந்தவர்கள் அணைத்துக் கொண்டு வெளியே கொண்டு வந்தார்கள். தனது தொழில் நிறுவனத்தில் கூட மாற்றங்கள் வரும் போதெல்லாம் மந்திரிகளின் துணையுடன் மனைவியை விட்டுப் பிரியாது பிரிவின்றி ஒன்றாக வாழ்ந்த தம்பதியினர். இறப்பு ஒன்றுதான் அவர்களைப் பிரிக்கும் என்பது நியதி. அதுவே நடந்தது.
    
        மனைவி தன் அரை உயிரைக் கொண்டு சென்ற உணர்வு அடுத்தடுத்த வாரங்களில் உடலுக்குள் ஒலித்தது. ஓடிக்கொண்டிருந்த இரத்தம் நிலைகுலைந்தது. செல்களுக்குள் ஒரு தவிப்பு பற்றிக் கொண்டது. அவள் இல்லையா! இனி வரமாட்டாளா! இனி எப்போதும் காணமாட்டோமா! தவியாய்த் தவித்தது மனம்.
     
  ``மனைவியோடு எவையும் போம்‘‘ என்பதை உடல் உணர்ந்தது. உள்ளத்தால் நொந்து போனார். மெல்ல மெல்ல உள்ளத்து உறுதியை மனைவி கொண்டு சென்று விட்டாள். நாடு விட்டு நானும் அனுப்பப்பட்டேன்.
    
   பறந்து செல்லும் சிகரெட் புகை என் தந்தையின் கருகிப் போன நுரையீரலுக்கு அடையாளமாகியது. இரத்தப் பரிசோதனை நுரையீரல் புற்றுநோயை அடையாளப்படுத்தியது. உறவுகள் துடித்தது. ஹீமோதெரபி செய்வதற்காக மருத்துவமனை சென்றவர் அன்றுதான் உணர்ந்தார். எமக்குள்ளே இருக்கும் இயந்திரங்களை நாம் தானே கெடுக்கின்றோம். உடலுக்குக் கேடு என்று அறிந்தும் இதை புகைத்துத் தள்ளினோமே என்று மனம் வேதனையடைந்தார்.

       அன்று ஒரு ஹீமோதெரபி நாள். உடலுக்குள்ளே உள்ள புற்றுநோய் செல்களை மின்சாரத்தால் சுட்டுப் பொசுக்குகின்றார்கள். இச்சமயம் நல்ல செல்களும் இறக்கின்றன. இதனால் உடலுக்குள்ளே உயிர் கொண்ட உறுப்புக்கள் வலியால் துடிக்கின்றன. தாங்கமுடியாத வேதனையால் வாய் புலம்புகின்றார் என் தந்தை.
                   
                  ``இந்த சனியனை நான் ஏன் குடிச்சன். மூச்சு எடுக்க முடியல்ல. சத்தி எடுத்தெடுத்து தொண்டை புண்ணாகிப் போயிற்று. அரக்கனா இந்த வருத்தம். ஊருக்கெல்லாம் நல்லது செய்தேனே! எத்தனை குடும்பங்கள் என்னால் வாழுகின்றன. கோயிலுக்கெல்லாம் தலைவன் தருமகர்த்தா என்று பெயர் எடுத்தேனே! இந்தப் பொல்லாத வருத்தம் என்னக் கொல்லாமல் கொல்லுதே! இந்த சாமி தம்பிரான் எல்லாம் எங்க போயிற்று. விடை தேட முடியாத கேள்விகளுக்கு விடை எங்கே பெறப் போகின்றார். பழைய நினைவுகள் இடையிடையே வந்து அவர் வலியை இன்னும் மிதப்படுத்தும்.

       மனைவி சொன்ன பல வார்த்தைகள் மனதுக்குள் புண்ணாய்த் தைத்தன. அன்று கூறினாள். அவள் இதயத்துள் எத்தனை பாரங்களைச் சுமந்திருப்பாள். இன்று என் மனப் பாரங்களை இறக்கி வைக்க முடியவில்லையே.

             நோயாய் வந்திருக்கும் எமன் தீரா வலியைத் தராது என்னைத் தாமதிக்காது தூக்கிச் சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்போதுதான் என் தந்தை செய்த புண்ணியம் தலை காத்தது. வருடக்கணக்கில் தலைமறைவாகிப் போன ஒரு திடகாத்திர மனிதனைத் தேடிக் கொண்டிருந்தார். அவன் உடல் வலிமை உணர்ந்தவர் என் தந்தை. அவன் இருந்தால், இன்று எனக்கு எத்தனை உதவியாக இருக்கும் என்று மனதால் நினைத்து வாய் விட்டுச் சொன்னார். அடுத்த நாள் அவர் கண்முன்னே வந்து நின்றான் அம் மனிதன். என்ன  ஆச்சரியம் இவர் நினைத்த எண்ண அலைகள் அவன் மனதுக்குள் புகுந்த ஆச்சரியம் தான் என்ன? அன்று தான் வந்தான் எந்தவித கேள்வியும் இன்றி தந்தையை மெல்லத் தாங்கலாய்த் தூக்கினான். யாருடைய அநுமதியுமின்றி பணிவிடை செய்யத் தொடங்கினான்.

           வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்ட தந்தையை அருகே இருந்து கவனித்தான். அவர் உடலுக்கும் உயிருக்கும் அவன் வருகை ஒரு ஆறுதலாக இருந்தது. நோயின் பலம் குறைந்தது போன்று உணர்ந்தார். ஒரு நாள் இரவு. அவன் கையை தன் நெஞ்சில் வைத்துத் தடவும் படிப் பணித்தார் என் தந்தை. அவனும் தடவிக் கொண்டிருந்தான். ஆழ்ந்து உறங்கிப் போன அவர் உடல் குளிர்ந்து போவதை அவதானித்தவன். அவரை உற்றுப் பார்த்தான் எந்தவித சலனமுமின்றி மீளா உறக்கத்தில் உயிரற்ற உடலுடன் உறங்கிக் கொண்டிருந்த என் தந்தையை அவதானித்தான். நான்கு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, ஊருக்காகப் பாடுபட்டு, உறவுகளை எல்லாம் அணைத்தெடுத்து வாழ்ந்த அந்த உயிர், அன்று நன்றிக்கடன் பட்டவன் மட்டுமே அருகிருக்க பிரிந்து போனது. எங்கிருந்தோ வந்தான். கடைசிக்காலத்தில் பணிபுரிந்தான். ஈமக்கிரிகைகள் முடிந்தவுடன் யாரிடமும் கூறாது, மறைந்து போனான். அவன் இன்று எங்கிருக்கின்றான் என்று யாருக்குமே தெரியாது. யார் அவன்? கடவுளா? இல்லை கடவுள் அனுப்பிய தூதுவனா?

     வாழும் போது நாம் செய்யும் நற்காரியங்கள் எங்கள் இயலாக் காலத்தில் வந்து கைகொடுக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.


  திங்கள், 10 ஜூலை, 2017

  அப்பா என்னவானார்!

                    இஞ்ச பாருங்கோ இது நான், நான் காசு கட்டி  வாங்கின வோஸ்மெஸின். இதில்  என்ர பிளளைகள்ட உடுப்பும், என்ர உடுப்பும்தான் கழுவலாம். உங்கட ஊத்தைகள  இதுக்குள்ள போட்டுக் கழுவாதீங்க‘‘

  அப்பிடியென்றா நானென்ன கையாலயா கழுவுறது‘‘

  என்னென்றாலும் செய்யுங்க. ஸ்ரட்டு(நகரம்) க்குள்ள இருக்கிற பொது மெஷினில கழுவுங்க. இல்லாட்டிக் கழுவாமப் போடுங்க. எங்களுக்கு ஒன்டும் பிரச்சினையில்ல‘‘
  கணவன் இரத்தினத்திடம் கட்டளையிட்டாள், நிவேதா.

  வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கிறாளே, வேலைக்குப் போனால், அவளுக்குப் பொழுதுபோகும் என்று ஏதாவது வேலைக்குப் போ என்று நிவேதாவை வேலைக்கு அனுப்பினான் ரத்னம். இது அவனுக்கு இப்படி அடிமைத்தனத்தைத் தரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அடக்கமாக வாழ்ந்தவனுக்கு அவளை அடித்துத் திருத்தத் தெரியவில்லை. குடிப்பழக்கமில்லாதவனுக்கு போதை என்ர பெயரில் அவளைக் போட்டுப்பிரட்டத் தெரியவில்லை.

  வங்கிக்கணக்கை தனக்கும் மனைவிக்கும் இணைந்த வைப்பில் வைத்ததனால், உழைப்பின் ஊதியத்தை பங்கு போட்டுவிடுவாள் நிவேதா.

  உங்கட பிள்ளைகளுக்கு நீங்கதான் காசு செலவழிக்க வேணும். என்னுடைய வருமானத்தை நம்பியா பிள்ள பெத்தனீங்கள்‘‘

  பிள்ளைகளுக்கு ஹின்டகெல்ட் (அரசாங்கத்திலிருந்து வரும் பணம்) ல நீங்க கை வைக்கக் கூடாது‘‘

  இது நான் வாங்கின ரி.வி நீங்க பார்க்க கூடாது. முடியுமா இருந்தா நீங்க வேற ரி.வி வாங்கிப் பாருங்க. பிள்ளைகள் பார்க்கிற நேரம் கரைச்சல் கொடுக்காதீங்க‘‘

  இத்தனை கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு அவ்வீட்டில் நரக வாழ்க்கை வாழ்ந்த இரத்தினம். தன் வீட்டுப் பிரச்சினைகளை வெளியில் சொன்னால், அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் மறைத்தான்.

  அன்று இரத்தினத்திற்கு நெஞ்சுவலி பொறுக்க முடியவில்லை. வீட்டிலோ யாருமில்லை. நண்பன் சுரேஷை அழைப்போம் என்று தொலைபேசியை அழுத்தினான். அவனும் வந்து ரத்தினத்தை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றான். இதயம் கொஞ்சம் பலவீனமாக இருப்பதாக கூறிய வைத்தியர் மருந்தும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்.

  வீட்டிற்கு வந்த நிவேதா, தொலைபேசியை பரீட்சித்துப் பார்த்தாள் ரத்தினம்  யாருடனோ கதைத்திருக்கின்றான் என்பதை அறிந்தாள்.

  இஞ்ச பாருங்கோ. எங்க போயிற்று வாறீங்க. யாருக்கு ரெலிபோன் எடுத்தனீங்கள். உங்களிட்டச் சொல்லியிருக்கிறன். இந்த ரெலிபோன் நீங்க பாவிக்கக் கூடாதென்று. உங்கட ஹென்டியால எடுக்கலாம்தானே. என்ர பெட்டில வந்து படுத்திருக்கிறீங்க. எல்லாம் குழம்பிப் போய் கிடக்கு‘‘
   தொடர்ந்து கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.

  நான் ஒன்றும் சும்மா. உம்மட வாசம் பிடிக்கப் படுக்கல்ல. சரியா நெஞ்சுக்குள்ள குத்திச்சு. என்ர ரூமுக்குள்ள போக முடியல்ல. அதுதான் டக்ககென்று உம்மட ரூமுக்குள்ள போய்ப் படுத்தனான்‘‘

  சும்மா நடிக்காதீங்க. கண்டவனோட கதைக்கிறதுக்கெல்லாம். நான் காசு கட்டத் தேவயில்ல. கூப்பிட்டு வச்சு என்ர புராணம் பாடத்தானே ரெலிபோன் எடுத்த னீங்க‘‘

  உனக்கு எத்தனை தரம் சொல்றது. ஆஸ்பத்திரிக்குப் போகத்தான் கூப்பிட்டனான். என்ர ரெலிபோனில சாச் இறங்கிப் போச்சு‘‘

  நம்பிட்டன் நடிக்காதீங்க|‘‘

  நீ என்ன மிருகமாடி. உனக்கு என்ன ஈவு இரக்கமில்லயா? எப்பிடி அடக்கமா மணவறையில வந்து இருந்தா. இப்பிடி பிசாசு மாதிரி இருக்கிறியே. உனக்கு நான் கொடுத்த இடம் தான் என்ன இந்தளவுக்குக் கொண்டுவந்து விட்டிருக்குது. மற்ற ஆம்பிள்ளைகள் மாதிரி நானும் உன்ன வீட்டுக்குள்ள அடைச்சு வச்சிருந்தா இப்படிக் பேச்சு வந்திருக்காது‘‘

  மனதுக்குள் இருந்ததெல்லாம் கொட்டித் தீர்த்தான்.

  போதும். நிறுத்துங்க. நான் சொல்றதத்தான் கேட்கவேணும். இருக்கிறதென்றால், இருங்க முடியாட்டி எங்கேயாவது தொலஞ்சு போங்க‘‘

  ஆவேசமாகக் கத்திய நிவேதாவுடைய வார்த்தைகளுக்குள் இருந்த தனியே வாழும் ஆசை. இரத்தினத்திற்கு ஆத்திரத்தைக் கொண்டுவந்தது. ஆவேசம் கொண்டு அடிப்பதற்குக் கை நீட்டினான். ஓடி வந்த மகன், இரத்தினத்தைப் பிடித்துத் தள்ளி விழுத்தினான். பிள்ளைகளும் தாயுமாகச் சேர்ந்து இரத்தினத்தை வீட்டிற்கு வெளியே தள்ளினர்.

  போடா. போ எங்கேயாவது போய்த் தொலை..‘‘

  தாயும் பிள்ளைகளும் கத்தித் தள்ளிய இரத்தினம் வாசலுக்கு வெளியே கிடந்தான். வீட்டின் யன்னல் திறக்கப்பட்டது. அவனுடைய துணிமணிகள் வெளியே வீசப்பட்டன. அழுது அழுது ஓய்ந்த இரத்தினம் எல்லாவற்றையும் தூக்கிக் கட்டியவனாக நண்பன் சுரேஷ் வீட்டிற்குச் சென்றான்.

  எனக்கு இது தேவையாடா? சும்மா இருந்த என்னக் கல்யாணம் செய் கல்யாணம் செய் என்று எல்லாரும் கரைச்சல் படுத்தி, ஒரு பேய என்ர தலையில் கட்டிப் போட்டுதுகள். இப்பப் பார் என்ன உழைச்சும் இப்பிடி நடுத்தெருவில நிக்கிறனே‘‘

  ஏன்டா இப்பிச் சொல்ற உனக்கு நான் இல்லயா? என்ன வந்தாலும் பார்ப்போம். இப்பப் போய்ப் படு‘‘

  ``என்னன்டுடா நித்திர வரும். வருத்தமென்டு சொன்னால் நடிப்பு என்றாள். இப்படியும் ஒரு பொம்பிள இருக்குமாடா? பிள்ளைகளுமல்ல அவளோட சேர்ந்து என்ன அடிக்க வருதுகள். இப்பிடி ஒரு நரக வாழ்க்கை வாழ்றத விட்டிற்று என்னத்தையும் குடிச்சிட்டு செத்துப்போகலாம்‘‘

  உனக்கென்ன விசரா. உனக்கு என்ன குறை. நல்லா உழைக்கிறா நீ உனக்கு நாங்கள் இருக்கிறகம். விட்டுப்போட்டு ஒரு வீடு எடுத்திட்டு ராசா மாதிரி வாழு. ஆனா, உன்ர பிள்ளைகளுக்கு காசு கட்ட வேண்டியது உன்ர பொறுப்பு. அதக் குடுத்திட்டு. சந்தோசமா வாழு‘‘

  இல்லடா அவள எப்பிடியெல்லாம் வச்சிருந்தனான். ஏன் தான் கடவுள் என்னப் போட்டு இப்பிடிச் சோதிக்கிறாரோ தெரியாது‘‘

  விடுடா அந்தக் கதைய. இனி நடக்க வேண்டியதப் பார்‘‘

  ரத்தினம் தனியே வீடெடுத்தான். நிவேதாவும் ஜேர்மனி படிப்புச் சரியில்லை என்று பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு இலண்டனில் குடியிருக்கச் சென்று விட்டாள். அவளுக்குத் தெரியாமல் பிள்ளைகள் தந்தை இரத்தினத்துடன் கதைப்பார்கள். தாயாரின் கெடுபிடிகள், பழக்கங்களை வளரும்போதும், நாலு பேருடன் பழகும் போதும் பிள்ளைகள் அறிந்து கொள்வார்கள் அல்லவா!

  காலங்கள் கடந்தன. ரத்தினத்திற்கு வயது 40. தனிமை நோயைத் துணையாகக் கொண்டது. ஆயினும் உடலுழைப்பில் சளைக்காது பாடுபட்டான்.


  பலமுறை தந்தையுடன் தொடர்பு கொள்ள முடியாத பிள்ளைகள் அப்பா என்னவானார் என்று தெரியாமல் ஜேர்மனி பொலிஸாருக்கு அறிவித்தனர். வீட்டு இலக்கத்தைத் தேடிச் சென்ற பொலிஸார் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியும் திறக்கப்படாத கதவினை திறந்தனர். அங்கே பிணமாகக் கிடந்த இரத்தினத்தைக் கண்டனர். இரத்தினத்தின் உடலைப் பரிசீலனை செய்த வைத்தியர் இரத்தினத்தின் உடலை விட்டு உயிர் பிரிந்து 3 நாட்களாகி விட்டன என்று உரைத்தார்.

  வியாழன், 6 ஜூலை, 2017

  கத்தியின்றி இரத்தமின்றி கொலை

             ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்ற ஆண்களின் தற்கொலை, இயற்கை இறப்புக்களுக்கு அவர்களின் மனைவி, பிள்ளைகளே காரணம் எனக் குற்றச்சாட்டுக்கள் வலுவாக அதிகரித்து வருகின்றது. கத்தியின்றி, இரத்தமின்றி கொலை நடைபெறுகின்றது என பெண்களில் பழி போடப்படுகின்றது. இக்கட்டுரை இது பற்றிய ஆய்வுக்குட்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பிறந்து வளருகின்ற ஆண்பிள்ளைகள்; பற்றிய கணிப்பீடு இக்கட்டுரையில் இடம்பெறவில்லை.

                 ஆண்களின் இறப்பு வீதம் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துக்கொண்டு போவது தற்பொழுது கவலைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது. இலங்கையிலிருந்து 90 சதவீத பெண்கள் திருமணம் செய்து, அல்லது திருமணம் செய்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்குக் குடி புகுந்த பெண்களாகவே காணப்படுகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

              வீட்டுச் சூழலில் அடங்கி ஒடுங்கி வாழ்ந்தவர்களுக்கு திடீரெனக் கிடைக்கின்ற சுதந்திரம் அவர்களுக்கு கட்டுக்கடங்காத சுதந்திரத்தை அளிக்கின்றது. இதைவிட முற்றுமுழுதாக பெண்களிடமே பழி போட்டுவிட முடியாது. தனிமையில் இந்நாடுகளில் வாழ்ந்த ஆண்கள் பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் குடிக்க ஆரம்பித்துப் பின் குடிக்கு அடிமையாகிவிடுகின்றனர். தமது இப்பழக்கத்தை மறைத்து தாயகத்திலிருந்து பெண்களைத் திருமணம் செய்து அழைத்து வருகின்றனர். கணவனிடம் காணப்படும் இப்பழக்கம் பற்றி அறியாமலோ வாழ்க்கையிலேயே குடியை வெறுக்கும் ஒரு பெண்ணாகவோ இருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தபின் இதனை அறியும் போது தனது வெறுப்பை கணவனில் காட்டத் தொடங்குகின்றாள். இது காலப்போக்கில் பெரிய பூதாகரமாகின்றது. போதைக்கு அடிமையாகும் ஆண்கள் அளவுக்கதிகமாகக் காட்டுகின்ற அதிகாரம், ஆண்களிடம் பெண்களுக்கு ஒரு வெறுப்பு நிலையை ஏற்படுத்துகின்றது. மூர்க்கமாகத் தமது கோபத்தைக் காட்டுவதும், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிப்பதும், என வன்முறையில் ஈடுபடும்போது வாழ்க்கை என்பது ஒருமுறையே அதை ஏன் இப்படி நரகவாழ்க்கையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கணவன்மாரை விட்டு தனியே வாழ முற்படுகின்றார்கள்.

       அதேவேளை திருமணமாகிய பின்னர் குடியை ஆரம்பித்து அளவுக்கதிகமாகக் குடிக்கும் ஆண்கள் தாம் குடிப்பதற்கு பெண்கள்தான் காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

             இங்கு வருகின்ற போது அப்பாவிகளாக கணவனுக்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ்க்கையை புலம்பெயர்வில் பெண்கள் ஆரம்பிக்கின்றனர். காலப்போக்கில் மனைவிமாரின் புத்திசாலித்தனத்தை அறிந்த ஆண்கள் அவர்களை முன்னிலைக்குக் கொண்டு வருவதற்காக முதலில் மொழியை ஒரளவாவது கற்பதற்கு பாடசாலைக்கு அனுப்புகின்றார்கள். இதில் திறமைசாலிகள் வென்று விடுகின்றார்கள். முடியாதவர்கள் படிப்பென்ற பேச்சுக்கே இடமின்றி வீட்டுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றார்கள். பிள்ளை பெறும் இயந்திரங்களாக மாறி பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவர்களைப் பாடசாலைக்குக் கொண்டு செல்வதற்காகவும் மற்றைய கடமைகளைச் செய்வதற்காகவும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றனர். இக்காலகட்டத்திலே உலகத்தையும் பிள்ளைகளை வளர்ப்பதையும் கற்றுக் கொள்ளுகின்றார்கள்.

         இக்காலகட்டத்திலேயே பெண்களுக்கான ஆசைகள் அளவுக்கதிகமாக உயர்கின்றது. மற்றையவர்கள் போலத் தாங்களும், மற்றைய பிள்ளைகளைப் போலத் தமது பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்ற அபரிவிதமான ஆசை மேலோங்குகின்றது. தமது தகுதி பற்றி நினைத்துப் பார்க்காது பிள்ளைகள் விரும்புகின்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுக்கும்படியும் மற்றைய பிள்ளைகள் செல்கின்ற விளையாட்டுக்கள், கலை வகுப்புக்கள் என்று எல்லாவற்றையும் தமது பிள்ளைகளும் கற்க வேண்டும் என்ற நச்சரிப்புகளை கொடுக்கின்றனர். இவ்வாறான சூழலில் கணவன் 2 அல்லது 3 வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இங்கு மனைவியே குற்றவாளி ஆகின்றாள். கஷ்டப்பட்டு உழைத்து மனைவி, பிள்ளைகளைக் கவனிக்கும் ஆண்கள் தமது குடும்பம் உயர்வான இடத்திற்கு வரப் போகின்றது எனக் கற்பனை செய்கின்றான். மாடு போல் உழைப்பவனுக்கு வீட்டுக்கு வந்ததும் புல்லுப் போடுபவர் கண் விழித்து இருப்பது அருமை. பிள்ளைகளை அடுத்தநாள் பாடசாலை அழைத்துச் செல்லவேண்டும் என்ற காரணத்தைக் காட்டி சோறை ஆக்கிப் போட்டு சுருண்டு படுத்துவிடுவாள். களைத்து வீடு வரும் கணவன் களைப்பு நீங்க ஒரு கிளாஸ் மதுவுடன் தனது உணவை அடைந்துவிட்டு  அப்படியே உறங்கிவிடுகின்றான். ஒரு கிளாஸ் 2, 3, என்று போத்தல் கணக்கிற்கு உயர்கின்றது. இதுவே திருமணத்தின் பின் மதுவுக்கு அடிமையாகும் அநேகமான ஆண்கள் நிலை.

        காலப்போக்கில் பிள்ளைகள் வளருகின்ற போது அப்பா குடிச்சுக் குடிச்சுக் கெட்டுப் போகிறார். இந்த மாட்டைத் திருத்த முடியாது. இது இப்படியே கிடந்து செத்துப் போகட்டும் என்று பலவாறாகப் பிள்ளைகளுக்கு அருகிலே வைத்து தந்தைமாரைப் பற்றிய தவறான எண்ணங்களைப் பிள்ளைகள் மனதில் பதியவைப்பது தாயாகத்தான் இருக்க முடியும். இதனால் பிள்ளைகள் தந்தையை விட்டு விலகி இருக்கின்றனர். தந்தை இல்லாத சமயத்திலே, தந்தையில் பாசத்தையும் மரியாதையையும் சொல்லிக் கொடுத்து, தந்தையின் அர்ப்பணிப்புக்கள் பற்றித் தெரியப்படுத்தி வளர்க்க வேண்டிய பாரிய கடமையை மனைவி என்பவள் மறந்துவிடுகின்றாள். தந்தையை ஒரு பிள்ளை எதிர்த்துப் பேசுகின்றது என்றால், தாய் பேசிய தாக்கமே பிள்ளை மனதில் நின்று வெளிப்படுத்துகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

          தந்தை பற்றிய தவறான எண்ணப் போக்கு மனதில் பதிந்த பிள்ளைகள் தாயுடனேயே தாய் சொல்வதே உண்மை என்று கேட்டு தந்தையை வெறுக்கத் தொடங்கும். மனைவி, பிள்ளைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஆண், கடைசியில் குடியை மணந்து அதற்குத் தன்னை அடிமைப்படுத்துகின்றான். இதனால், நோய்வாய்ப்படுகின்றான். நோயில் துன்;பப்படுகின்ற கணவனின் அருகில் இருக்க வேண்டிய வாழ்க்கைத்துணையானவள் இவ்வாறான குடித்துக் குட்டிச் சுவரான கணவனுடன் வாழமுடியாது என்று சொல்லி அவனை ஒதுக்கிவிடுகின்றாள். தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தனியே வாழுகின்றாள். இவ்வாறான பல குடும்பங்களைக் காண்கின்றோம்.

        விவாகரத்து எடுத்துவிட்டால் அரசாங்கம் தனக்குப் பணம் தந்து உதவும் என்ற துணிச்சலுடன் தனியே வாழும் பெண், அவனுக்கு வேண்டிய மருத்துவ வசதிகளைக் கூடச் சரியான நேரத்தில் கொடுக்காது விடுவதும், தேவையான உணவுவகைகள் உண்ணக் கொடுக்காது விடுவதும் ஒரு கொலை முயற்சி என்றே சொல்ல வேண்டும். புலம்பெயர்வில் அதிகமான பிள்ளைகள்; தாயார்மாருடன் சேர்ந்து கொண்டு தந்தைமாரை வெறுப்பவர்களாகவே இருக்கின்றனர். பிள்ளைகளுக்காக குடும்பப் பொறுப்பை மனைவியிடம் விட்டுவிட்டு உழைப்பதில் கவனம் செலுத்திய கணவன் இறுதியில் குடும்பமே இல்லாமல் இருப்பதுதான் இங்குள்ள சூழ்நிலை. சாதாரண சேட்டைத் தான் அணிந்து, இரவுபகல் வேலை பார்த்து மனைவிக்கு 10 பவுணில் நகையும், பட்டு ஆடையும், பிள்ளைகளுக்கு அப்பிள் கைத்தொலைபேசியும் அவுடிக் காரும் வாங்கிக் கொடுத்து அப்பாவிகளாக வாழுகின்ற ஆண்கள் நிலை பரிதாபத்துக்குரியது.

      இதேவேளை மனைவியை அடக்கி ஆள நினைக்கும் ஆண்வர்க்கத்தின் பக்கத்தில் உலகைப் படித்த பெண்கள் அடங்கி வாழ மறுப்பது யதார்த்தம். ஆண்கள் போலே தமது கவலையை மறைக்கத் தாமும் குடிக்கு அடிமையானால், இக்கதை மாற்றிப் பேசப்படுமோ? என்ற வினாவினை எழுப்புகின்றாள் பெண்;. குடித்துத்தான் கவலை மறப்போம் என்பது போலியான வார்த்தை. தனியே வேறு பொழுதுபோக்குகளை பழகிக்கொள்ளலாமே என்றால், பாவமும் பழியும் ஆண்களிலேயே அதிக வந்து விழுவதாலும் பெண்ணைப்பற்றிய அனுதாபம் சமுதாயத்தில் அதிகமாக இருப்பதாலும் பிரச்சினைகளை மறைத்து இணைந்து வாழ்வதாக வெளி உலகத்திற்குக் காட்டி மனதால் பிரிந்து வாழ்கின்ற குடும்பங்கள் புலம்பெயர்வில் அதிகமாகக் காணப்படுகின்றன.

             புரிந்துணர்வுடன் வாழுகின்ற குடும்பங்களே வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்துகின்றன. ஆண்கள் உண்மையை மறைத்து திருமணம் செய்வதும், ஆண் என்ற மமதையை காட்டுவதும், பெண்கள் தமது விரலுக்கேற்ற வீக்கம் போல் போதும் என்ற மனமே சிறப்பு தரும் என்று எண்ணி இவற்றில் அக்கறை கொள்ளவேண்டும். ஆசைகளை அளவுக்கதிகமாக வைத்தால் வாழ்க்கையை இழக்கவேண்டியே வரும். மனைவி கணவனில் வைக்கின்ற உண்மையான அன்பு அவன் கவலைகளை மாற்றச் செய்யும் என்று நான் கருதுகின்றேன். அந்த உண்மையான அன்பை மனைவி தருவதற்கேற்றவாறு வாழ வேண்டியது கணவனின் கடமையாகின்றது. துன்பப்படுபவரைக் கண்டால் இரக்கப்படும் நாம், நமது கணவன் நோயால் வாடுகின்றபோது கண்டு கொள்ளாமல் விடுவது எவ்வளவு அரக்கத்தனம். அவனில் ஆயிரம் பிழைகள் இருந்தாலும், அவன் ஒரு உயிர். ஒன்றாக வாழ்ந்து பிள்ளைகளை அவன் மூலம் பெற்று வளர்த்தோம் தானே. இறுதிக்காலத்திலாவது மன்னிப்பு என்ற அளப்பெரிய ஆயுதத்தை ஏந்தி கடைசி காலத்தில் பக்கபலமாக இருக்கலாமே. பெண்கள் என்றால் பொறுமை என்னும் இலக்கணத்தை ஏற்று மனிதப்பண்பில் வழுவாது வாழ்ந்து பாசத்துடன் வாழலாம் அல்லவா? உயிர் என்பது விலைமதிக்கமுடியாதது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

  இந்த காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து subscribe பண்ணுங்கள். நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி 

  ஞாயிறு, 2 ஜூலை, 2017

  எனக்காய் ஒரு தாய் ஏங்க என் இதயம் சிரித்திருக்கும்

  இரண்டு வயதிலே நீ இயல்பாய்த் தமிழ் பேசியபோதும், உன் குதலை மொழியால் குழைந்து குழைந்து காரணங்கள் கேட்டபோதும், இதயத்தை நிமிர்த்தி இமயம் போல் ஒரு நம்பிக்கை கொண்டிந்தேன். வருங்கால நீதிபதி ஒன்று நியாயங்கேட்க நிமிர்ந்து வளர்கின்றதென்று. என் கன்னத்தில் அழுத்தி நீ முத்தமழை பொழியும்போது என் இதயம் கசிந்து அன்பு ஊற்றுக்களாய் பெருகிக் கொண்டேயிருந்தது. உன் இதயமொழி எங்கள் வாழ்க்கை மேடையிலே சங்கீத சாம்ராஜ்யம் நடத்தியிருந்தது. 
             பூமி சுழன்றதனால் வயதும் சுருண்டு கிடக்கவில்லை. சுயமாக 6 ஆக உயர்ந்து விட்டது. முதல் வகுப்பில் நீ ஸுல்ரியூற்ற தூக்கியபோது நீ பல்கலைக்கழக அநுமதிப்பத்திரம் பெற்றுவந்த பெருமிதம் கொண்டோம். கள்ளி நீ எனக்கு எக்கஷ்டமும் தந்ததில்லை. உன் கணக்குப் பாடத்திற்கு உன் அப்பா உதவிக்கு வர நீ சந்தர்ப்பமும் தந்ததில்லை. நீ பருவ வயது கண்டால் சடங்கு செய்யத் தன் வங்கியிலே பணக்கணக்கை மட்டுமே கூட்டும் வேலையைத் தந்தைக்குக் கொடுத்திருந்தாய். ஆசிரியர்கள் எமை அழைத்து உனக்குப் புகழாரம் எங்களிடம் சூட்டும்போது, எங்கள் குடும்ப மரபணுக்கள், உங்கள் குடும்ப மரபணுக்கள் தொழிற்படுவதாய் நானும் உன் தந்தையும் போட்டா போட்டி போட்டோம். 
               வில்லங்கம் வந்துவிட்டது. விடியாத பொழுதுகள் என்  கண்களுக்குள் வந்துவிட்டன. விட்ட சனி ஒட்டிக் கொண்டது. வெட்ட வெளியிலே உச்சிச் சூரியனுக்கு அண்மையில் மல்லாந்து கிடப்பதுபோல் உடலெல்லாம் சுட்டெரிக்கிறது. நெருப்புத் தணலில் நிற்பது போல் தவிக்கிறேன். மகளே உன் வாய்ப்பேச்சு எங்கே மாயமாய்ப் போனது. சித்திரம் கட்டிலில் கிடப்பதுபோல் சிரித்தபடி படுக்கின்றாயே! உன் கலகலத்த சிரிப்பை தன் மருந்தால் சிக்கவைத்த வைத்தியரை நான் சிறை வைக்க முடியாது தவிக்கின்றேனே! முழிக்கும் உன் கண்களுக்காய் மூடாத எம் இமைகள் விரிந்த சாளரமாய் நிலைபெற்றுவிட்டன. 
                அறிவுவாங்கப் பாடசாலை செல்கின்றாய் என்றுதான் நினைத்தோம். நீ காய்ச்சல் அல்லவா வாங்கி வந்திருக்கின்றாய். ஆண்டவனாம் வைத்தியர் ஆண்டவனுக்கு அடுத்தபடி யாரிடம் நாம் போய் நிற்போம். வைத்தியரிடம் தானே உயிர்ப்பிச்சைப் பாத்திரம் ஏந்துவோம். 
              பச்சைக் குழந்தை உனக்கு அன்ரிபயோரிக் தரும்போது அவரைவிட நாமென்ன கற்றுவிட்டோம் என்றும் வைத்தியர் சொல்மிக்க மந்திரமில்லை என்றுமல்லவா நினைத்துவிட்டோம். பாவி கையால் தந்த அன்ரிபயோரிக் உனக்கு நஞ்சாகும் என்று அம்மா நான் நினைக்கவில்லையே! என் கையே உனக்கு நஞ்சு தந்துவிட்டதா! மகளே! இக்கையை நானே சுட்டெரிக்கப் போனேனே! உன் தந்தை அதற்கும் தடை போட்டுவிட்டாரே. என் கையைப் பார்க்க எனக்கே அருவருப்பாய் இருக்கிறது. ஒரு பிஞ்சை கட்டிலில் படுக்க வைத்துவிட்ட வைத்தியர், எப்படித்தான் தன் கட்டிலில் தூங்குகின்றாரோ புரியவில்லை. ஒரு வேளை இது இவர்களுக்குப் பழக்கமாய்ப் போய்விட்டதோ. அவதானம் தவறும் வைத்தியரும் கொலைகாரனும் ஒருவர் அல்லவா?
                                        இரவுபகலாய் இதயமில்லாத உன் உடல் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதயம் இருந்தும் என்னால் தொழிற்பட முடியவில்லை. உன்னைப் பார்க்கையிலே உள்ளமெல்லாம் வேகுதடி. ஓர் கத்தி நான் எடுத்து என் இதயத்தை வெட்டி உன் உடலினுள் புதைத்துவிட என் இதயமது  ஆவேசம் கொள்ளுதடி. ஆனால், சட்டம் என்ன கண்மூடிக் கொண்டா இருக்கிறது. உலகப் பந்தை நீ பார்க்க என் உடல் வருத்தம் பொறுத்தேனடி. என் இடுப்புவலி தாங்கி உன் உடலது கண்டு களித்தேனடி. இன்று உன் அருகே ஓர் இயந்திரம் உனக்காகத் துடிக்கும் போது, அதனைக் கையால்; தொட்டு நாளும் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன். ஆண்டவனே நேரில் வந்து உன் அருகே படுத்திருப்பதாய் உணர்கின்றேன். 
               எத்தனை காலம் அவர் அருகே அமர்ந்திருக்க முடியும். உன் போல் ஓர் இதயம் எங்கோ உனக்காய்த் துடித்துக் கொண்டிருக்கின்றது. அது எப்போ உன் உடலுள் அமரப் போகின்றது. அவசரமாய் அதைக் கேட்க ஆசையாய் இருக்கிறது. ஆனால், அங்கும் ஓர் தாய் என் போல் பின் ஏங்கித் தான் என் ஏக்கம் தீர்க்கவேண்டும். அப்போது கூட அவளுக்காய் நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பேன். இதயம் தேடி இரவுபகலாய் விழித்திருக்கிறாள் இத்தாய். 
    
  Neuralink Ni

  Brain computer interface research or brain machine interfaces   மனிதனின் இதயத்தில் கை வைத்தாகள். இதய மாற்று சத்திரசிகிச்சை, கல்லீரல், சிறு...