• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 27 ஜூன், 2015

  கனவு மெய்ப்பட வேண்டும்

           

  உலகம் என் முன்னே விரிந்து கிடக்கிறது. உலகைக் காணக் கண் தந்த என் தந்தை இன்றில்லை. விரல் பிடித்து நான் நடந்த போது என் விடியலைக் காட்டி, உயிர் மூச்சை உவந்தளித்து, உலகுக்கு  என்னை அடையாளம் காட்டிய என் அகக் கண்ணாடி இன்றில்லை. தவிப்பு என்பதை நாம் உணர்கின்ற வேளை எம் பெற்றோரை நாம் இழக்கும் வேளை என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆயிரம் தான் உறவுகள் வந்தாலும் என் தந்தைக்கு ஈடாமோ! கனவுகள் வருவதும், காட்சிகள் பதிவதும் நாம் அவர்களுடன் வாழும் அற்ப, சிலமணிநேர மகிழ்வுக்காய் என்பதை நினைக்கும் போது கனவு  மெய்ப்பட வேண்டும் என மனம் ஏங்குகிறது. 

                      மனிதப் படைப்பில் மகத்தான உணர்வு  ஞாபகங்களும் மறதியுமே. சிலவேளை மறந்து, சிலவேளை நினைத்திருக்கும் மனதே எமது வாழ்க்கையை நாம் கொண்டு செல்லத் தேவையான உணர்வாகின்றது. இல்லையென்றால், உயிர் கொண்டு நடமாடும் நடைப்பிணங்களாகி விடுவோம். 
                           ஒருவேளைச் சிந்தனையில் மறபிறப்பு என்பது இதுதானோ என்று எண்ணிப் பார்ப்பேன். தாயின் தந்தையின் செல்களின் மறுபிறப்புத் தானே நான். என் தந்தையிடம் இருந்து போட்டி போட்டு ஓடிவந்து தாயிடம் ஒட்டிக் கொண்ட உருவல்லவா நான். இவ்வுலகுக்கு ஒரு பெண்ணாய் வெளிவர முனைந்து நின்ற அந்த ஒரு துளியை இந்த வடிவமாய் ஆக்கித் தந்த பொறுப்பு தாய் தந்தையினுடையதே. அப்படியானால், அவர்களின் குணங்களின் பாதிப்பு எனக்கும் இருக்குமல்லவா? மனிதன் மறுபிறப்பு எடுக்கின்றான். அவர்களின் வாரிசுகளின் மூலம். சில பிள்ளைகள் தமது பெற்றோர்களின் இழப்பின் பின் பெற்றோர்களைப் போலவே நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. பெற்றோர்களின் வடிவ அமைப்பு பிள்ளைகளில் காணப்படுவது. இத்தனையும் மறுபிறப்புக்கள் தானே. எரித்துவிடும் புதைத்துவிடும் உருவங்கள், மீண்டும் நடமாடுவது அவரவர் பிள்ளைகளின் நடத்தைகளின் மூலமே. உடலால் மட்டுமன்றி உணர்வுகளாலும் ஒன்றி நிற்பதுவே பிள்ளைகளின் கடமைகளாகின்றது. இவர்களின் பிள்ளைகள் என்று நாம் சொல்லுமுன் உலகு எமது பெற்றோரைச் சொல்லவேண்டும். சாயலிலும் சாதனையிலும் பெற்றோருக்கு இணையாக மேலாக நாம் வாழ்ந்து காட்டினாலேயே நம் பிறப்பின் முழுமையைப் பெறுவோம். 
             
              எனது தந்தையின் ஆர்வமும், பேச்சாற்றலும், சமூகசிந்தனையும், முற்போக்குச் சிந்தனையயும் சிறிதளவாவது என்னைப் பாதிக்கத்தானே வேண்டும். சேர்ந்தே வாழ்ந்த போது நினைத்துப் பார்க்காத விடயங்கள் இழந்து நிற்கும் போது சிந்தனையைக் கிளறுகின்றன. நான் ஒவ்வொரு மேடையிலும் நிற்கும்போது எனது தந்தையைத்தான் நினைத்துப் பார்ப்பேன். சிறுவயதில் அவரிடம் இருந்து வந்த பகுத்தறிவுச் சிந்தனை என்னைப் பக்குவப்படுத்தியது என்பதை மறந்துவிட முடியுமா? கோயிலுக்குத் தலைவராய் இருந்தபோதும் என்றும் தனக்காய் மன்றாடியதில்லை. அன்னதானங்கள் செய்வதிலும் ஆலயப்பணி செய்வதிலும் காலத்தைக் கடந்தியபோதும் கையெடுத்துக கடவுளை வணங்கியதில்லை. ஊருக்கொரு கோயில் வேண்டும். அதில் மக்கள் ஒன்றுகூடவேண்டும்  என்பதுவே அவர் சிந்தனையாக இருந்தது. பாடசாலைகள் கட்டுவதற்கு முழுமூச்சாக ஈடுபட்டபோது அறிவாளிகள் உள்ள சமுதாயமே உலகை சரியான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அயராது உழைப்பார் சாதிமத பேதம் பார்க்காது அனைவராலும் அன்பு செலுத்திய அற்புத மனிதர். அவர் விட்டுச் சென்ற பாதையைத் தொடர்வதுதான் அவர் எச்சங்களாகிய பிள்ளைகளின்  கடமைகளாக இருக்க வேண்டும். 

              ஆண்டுகள் பலவானாலும் ஆழமாய் மனதில் நிற்பது பெறோர்கள் நினைவுகளே. அவை கனவாக வந்து எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும். நான் கூட இருப்பேன் என்று சொல்லும். தொடர்ந்து வந்து போவேன் என்று சொல்லும். வாழ்வுக்கு வழி காட்டும். அப்போது அவர்கள் எம்முடனேயே இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போது கனவு கலைந்து எம்முடன் அவர்கள் என்றும் இல்லை என்னும் மெய்யைக் கூறும். எனவே, கனவ  மெய்ப்பட வேண்டும். இறந்தவர் தொடர்பு என்றும் வேண்டும். இதற்கு விஞ்ஞானம்  வழி சொல்லாதா?


  எனது பெற்றோர் இளமைக்கால புகைப்படம். 

  சனி, 13 ஜூன், 2015

  1958 என்னும் நூலின் விமர்சனம்

             

             


             காலம் என்னும் காற்று எமைப் புரட்டிப் போட்டாலும்
             வாழ்க்கை என்னும் சூழல் எமை வதைத்து நின்றாலும்
             தமிழென்னும் கைத்தடி கொண்டு தடுமாறா மனம் கொண்டு 
             எழுத்தால் என்றும் எழுந்து நிற்போம் 


  1958 என்னும் பெயருடன்  வழமையான அணிந்துரை, வாழ்த்துரை பதிப்புரை, போன்ற அம்சங்களின்றி சாதாரணமாக ஆசிரியர் முன்னுரையுடனே வெளிவந்துள்ள இந்நூலின் ஆசிரியர் இரவி அருணாசலம் அவர்கள் மிகப் பிரபல்யம் ஆனவரே. புதிசு, சரிநிகர், புலம், ஒரு பேப்பர் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருக்கின்றார். ஐபிசி தமிழ்வானொலி, டிடிஎன் தமிழ் தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இது இவருடைய 5 ஆவது நூல். 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் கதை சொல்லும்  அநுபவம் பெற்றோரிடம் இருந்து இவருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது  என்பது என்னால் அறியப்படுகின்றது.  இந்நூல் ஒரு நாவல். காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இந்த நூல் மூலம் நான் வாழாத ஒரு இடத்திற்கு, ஆண்டுக்கு ஆசிரியர் இரவி அவர்கள் என்னை அழைத்துச் சென்றிருக்கின்றார். 1958 ஆம் ஆண்டு நானும் வாழ்ந்ததில்லை ஆசிரியர் இரவி அவர்களும் வாழ்ந்ததில்லை.  இங்குதான் எழுத்தாளன் தலைநிமிர்ந்து நிற்கின்றான். வாழ்ந்த காலத்தையும் வாழாத காலத்தையும் கண்ட சம்பவத்தையும் காணாத சம்பவத்தையும் ஒரு நிலைக்கண்ணாடி போல் வாசகர் முன் நிறுத்தக் கூடிய வலிமை எழுத்தாளனுக்குத்தான் உண்டு என்று கூறுவதில் பெருமைப்படுகின்றேன். இதனால்தான் எழுத்தாளன் பிரம்மா எனப்படுகின்றான். 

              இந்நூலின் பிரம்மா ஆகிய இரவி அவர்கள், 1958ம் ஆண்டின்  பல்வேறு அநுபவங்களுடன், பல்வேறு செய்திகள் காணப்பட பல்வேறு பாத்திரங்களின் பண்புகளையும் வாழ்க்கை முறைகளையும் அவற்றுக்கிடையே நடைபெறும் நிகழ்ச்சிகளையும் ஒழுங்குபடுத்தி இந்த 1958 என்னும் நூலிலே எமக்குக் கோர்த்து தந்திருக்கின்றார். நூலின் பெயரைக் கேட்டவுடன் எல்லோர் மனதிலும் தோன்றுகின்ற எண்ணமே இந்த நூலில் தெளிவுபடுத்தப்படுகின்றது. "1958  ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர் மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகின்ற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன் பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளை சித்திரிக்கிறது. மொழி நடையினாலும் கதை சொல்லும் உத்தியினாலும் சிறப்புப் பெற்றிருக்கின்றது" என நூலின் பின்புறம் சாராம்சத்தை உணர்த்துகின்றது. புத்தகம் என்பது புதிய அகம். அந்த வீட்டினுள் புகுந்து வெளிவருபவர்கள் ஒரு புதிய அநுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அநுபவங்களை இந்நூலின் மூலம் நான் பெற்றேன். வாசகர்களும் பெறப் போகின்றார்கள். 
              
         ஒரு நாவல் என்னும்போது பல்வேறுபட்ட அநுபவங்கள், செய்திகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். இவை அடங்கிய வாழ்க்கைமுறை முழுமையாகவோ அல்லது அதன் பகுதி வாழ்க்கையோ  விளக்கமாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.            கதாபாத்திரங்களின் பண்புகள்;, வாழ்க்கைமுறைகள், அவற்றுக்கிடையே நடைபெறும் நிகழ்ச்சிகள், இந்தப் பாத்திரங்கள் சமூகத்தோடு எவ்வாறு உறவு கொண்டுள்ளன போன்றவற்றை ஒழுங்குபடுத்திக் கதையாகத் தொகுத்துத் தரவேண்டும்.  கதாபாத்திரங்களை உருவாக்குவதிலும் அவற்றை வழிநடத்துவதிலும் தான் ஒரு நாவலின் வெற்றி தங்கியிருக்கின்றது. கதாபாத்திரங்கள் பிறரோடு உரையாடும் உரையாடல்கள் பாத்திரங்களின் வளர்ச்சிக்கு துணையாக அமைந்துவிடுகின்றன. வாசகர்கள் பாத்திரங்களின் செயல்கள் மூலம் கதையை உணர்ந்து கொள்ளுகின்றனர் அல்லது ஆசிரியர் பாத்திரங்களின் நடவடிக்கைகளை தனது கூற்றாகக் கூறுவார். இங்கு ஆசிரியர் இரவி அவர்கள் தனது கூற்றாகப் பாத்திரங்களைச் சம்பவங்களை வழிநடத்திச் செல்லுகின்றார். இது இந்நூலுக்கு சிறப்பம்சமாகப்படுகின்றது பாத்திரங்களின் உரையாடலின்போது வட்டாரச்சொற்கள் பிறமொழிச்சொற்கள் கலந்து வரலாம். ஆனால், ஆசிரியர் கூற்றின்போது எழுத்துவழக்கு நிச்சயமாக இருக்கவேண்டும். எனவே நாவல் என்னும் இலக்கிய அமைப்பில் ஆசிரியர் வெற்றி பெறுகின்றார். இந்தக் கதையிலே அவரும் அக்காலத்தில் வாழ்ந்து பாத்திரங்களையும் வாழவைத்திருக்கின்றார். 
          
               இந்த நூலிலே கல்லுலுவ, மினுவாங்கொட. குணுப்பிட்டி, வவுனியா, யாழ்ப்பாணம், கீரிமலை அளவெட்டி இவ்வாறு நகரங்கள் வாழ்ந்திருக்கின்றன. சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர்கள் ஆகிய மூன்று இனங்களும் ஒற்றுமையாக  வாழ்ந்திருக்கின்றன. ஒவ்வொரு இனத்தவர்களின் அடையாளங்கள், வாழ்க்கைமுறைகள் அழகாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. பெனியன் தெரியத்தக்கதாக ரெர்லின் சேர்ட்டை உள்ளேவிட்டு, சாரக்கட்டின்மேல், பேர்ஸ் வைத்த அகலப்பாம்புத்தோல் பெல்ற்றை கட்டியிருத்தல் பெரேரா அடையாளம். இவ்வாறு ஒவ்வொரு இனத்தவர்களின் அடையாளங்கள் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.  இஸ்லாமிய பெண்கள் தமது தலைமயிரை வெளியே தெரியவிடாது முக்காடிற்றுக் கொள்வார்கள். தலைமயிர் ஒரு மனிதனுக்கு அழகைக் கொடுக்கும். அது ஆண்களுக்கு தெரிதல் அவர்கள் மனதைக் கெடுக்கும் என்பதனால்தான் தலைமயிர் தெரியாது முக்காடிடப்புடுகின்றது என்று நான் அறிந்தேன். ஆனால், வான் வெளியில் தலைமயிர் தெரிந்தால் இபிலீசு என்னும் சாத்தான் இறங்கிவிடுவான். இபிலீசு என்னும் சாத்தான் குடியிருக்க ஆசைப்படும் இடம் தலைமுடி மயிர்க்கற்றைகள். அதனாலேதான் மயிரை மூடிமறைக்கின்றார்கள், இன்னும் ஓர் இடத்தில்  என்று மதத்தைக் கற்று எமக்குத் தந்திருக்கின்றார்.;  மூவினங்களும் ஒற்றுமையாய் வாழ்ந்த ஒரு சூழலிலேதான் எனது இளமைப்பருவங்கள் இன்பமாக அமைந்திருந்தன. அதனால், இந்நூலை வாசித்தபோது என் பல நினைவுகள் மீட்டிப்பார்க்கப்பட்டன.  
                             
                  ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு கதை இருக்கும். நாமெல்லாம் கடந்து வந்த உலகத்திலே கண்ணீர் உண்டு, கவலைகள் உண்டு, ஓட்டம் உண்டு, அநுபவங்கள் உண்டு, விரக்தியுண்டு, வேதனை உண்டு என்று அடுக்கிக் கொண்டு போகலாம். இந்நூலிலே வேதனைகளும் உண்டு, அந்தக்கால வாழ்க்கைமுறைகளும் உண்டு. நம்பிக்கைகள் உண்டு, பக்தியுண்டு, பண்பாடு உண்டு, காதல் உண்டு, வீரம் உண்டு. இந்நூலை வாசித்தபோது ஒரு திரைப்படம் பார்க்கும் போது ஏற்படுகின்ற உணர்வுகள் என் முன்னே நிழலாடியது. பல பல விடயங்கள் இந்நூலிலே நான் கற்றுக் கொண்டேன். 

                 வெடி பற்றி. அதன் வகைகள் புரிந்திருக்கிறதா உங்களுக்கு மூலவெடி, ஹனுமான் வெடி, சாண்டோ வெடி, புஸ்வானம் என விரிகின்றது. ஏன் ஓலைப்பெட்டி வகைகள் பெட்டி, கடகம், பட்டை, நீத்துப்பெட்டி, மடிப்பெட்டி, கொட்டைப்பெட்டி, நீத்துப்பெட்டி, அடுக்குப்பெட்டி என பெட்டி வகைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கள்ளின்பருவங்கள் சித்திரைக்குச் சிதறுகள்ளு, பங்குனிக்குப் பரவுகள்ளு, ஆனிக்கு அரிபனைக்கள்ளு, ஆடிக்கு அருந்தள் கள்ளு, ஆவணிக்குக் காய்வெட்டிக்கள்ளு என்றிருக்கின்றன. 


                 இதில் பல நம்பிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றார். ஹஜ்ரத்துல்முன்தஹா என்பது சொர்க்கத்திலிருக்கிற ஒரு மரம். இந்தமரத்தில் கோடிக்கணக்கான இலைகள் இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற அத்தனை உயிர்களின் பெயர்களும் அதில் எழுதப்பட்டிருக்கும். காற்றடிக்கும் போது சில இலைகள் உதிரும். அப்போது இலையில் பெயரிடப்பட்டவர்கள் மண்ணில் மரித்தவர்கள் ஆகின்றார்கள். இந்த ஹஜ்ரத்துல்முன்தஹா என்பது ஒரு நம்பிக்கை. இதேபோல், இன்னுமொரு நம்பிக்கை. இதனையும் நம்புவதா என்பது போல் இருக்கும் பலி கொடுத்தல். குட்டிக்கிடாயை மாடாக்குவதற்கு மரையாக்குவதற்கும் செய்யும் பிரயத்தனங்களும் அதனை பின் வேள்வியில் பலி கொடுப்பதும் மனதுக்கு கசப்பான உணர்வைத் தந்தது. இவையெல்லாம் நம்பிக்கைகள். இரவி அவர்கள் என்ன செய்யமுடியும். இது மனிதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைதானே. கடலைத்துவையல் கொடுத்து, தவிடு புண்ணாக்குக் கொடுத்து, அவை உண்டது செமித்துக் கொடுக்க சாராயம் சிறிதளவு கலந்து கொடுத்து பலாவிலை, ஆலமிலை எடுத்து அதற்குள் கடலைத்துவையல், தவிடு பிண்ணாக்குக் குழையல் வைத்து நாலாக மடித்து கிடாயின்தாடையை நெருக்கிப்பிடித்து வாயைத் திறக்க வைத்து நாலாக மடித்ததை உள்ளே அதக்குவார்கள். பத்துத் தடைவை அப்படிப்போன பின் கிடாய் மற்றவற்றை உண்ண பஞ்சிப்படும். அப்போது ஒரு பொல்லெடுத்து அதன் உணவை உள்ளே தள்ளுவார்கள். அது தொண்டைவரை போய்விடும். இந்தக்கிடா நடக்கக்கூடாது, என்ன கொடுமை! இக்கிடாயை வேள்வியில் பலி கொடுப்பார்கள். மூட நம்பிக்கையில் உயிர்கள் பலிக்கடாவாகுவதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை. ஆசையாக பயன்படுத்தும் வாகனம் பழுதுபட்டால் விற்பதற்கே மனம் கலங்கும் மக்கள் மத்தியில், இவ்வாறான உயிர்க் கொலைகள் மதம் என்ற பெயரில் மதம் பிடித்திருப்பது அருவருப்பைத் தந்தது.
                  
                    இதைவிட பேய்களின் நம்பிக்கை. உதாரணத்திற்கு ஒரு பேய் வாய்க்காலுக்கு தண்ணீர் இறைக்கின்றது.  பேய் வருகின்றது கையைப் பிடிக்கும் போது குளிர்கின்றது. இதுவெல்லாம் 1958 ஆம் ஆண்டு. இந்தப்பேயெல்லாம் இப்போது எங்கே போனவையோ தெரியாது. இதுபோல் சாத்திரம் பற்றி ஓரிடத்தில் கூறுகிறார். கோள்களினதும் கிரகங்களினதும் சொற்படிதான் உலகம் இயங்குகின்றது. அதனுள் மனிதர்களும் அடங்குகின்றனர். அவற்றின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. பூரணைக்கு ஏன் கடல் பொங்குகின்றது. அமாவாசைக்கு ஏன் அடங்கிக் கிடக்கின்றது. சிலர் பூரணைநாட்களில் தன்பாட்டில் சிரிக்கின்றனர். அமாவாசை நாட்களில் வலிவந்தாற்போல் துடிக்கின்றனர். இவையெல்லாம் கோள்களின் பலன்களே என்பது பற்றிக் கூறுகின்றார். உண்மைதான் இதில் நீங்களும் அநுபவப்பட்டிருப்பீர்கள். அறிந்திருப்பீர்கள். 

               அருணாசலம், ஹாஜியார், சித்திலெப்பை, ஆரிபு, தேர, பெரேரா, நோனா, பத்மாவதி, மிருணா, சுவாம்பிள்ளை, இப்படிக் கதாபாத்திரங்கள் இக்கதையிலே நடமாடுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரங்களினூடாகப் பல சமூகசீர்திருத்தப்பண்புகள், நெற்றியில் அடித்தாற்போல் சிற்சில வார்த்தைகள், படிப்பினைகளை விதைத்துச் செல்கின்றார். நாம் யதார்த்தைச் சிந்திக்க வேண்டும். மனிதனுக்குத் தேவையானது அன்பு, துவக்கினால் ஆகக் கூடியது என்ன செய்துவிட முடியும். உயிர்களைப் பலி எடுக்கலாம். அன்பை அதனால் விதைத்துவிட முடியுமா? நாம் கற்பதற்கு நிறைய உண்டு, மனதில் கள்ளம் இல்லாமல் பக்கம் சாராமல், தேடவேண்டும். தேடல்தான் திறனை வளர்க்கும்., திணிப்பு வேறு, விருப்பம் வேறு. எதனையும் யாருக்கும் திணிக்கமுடியாது. அவர்கள் விரும்பி ஏற்கவேண்டும். இப்படிப் பல என் நெஞ்சைத் தொட்ட வார்த்தைகள் இதனுள்ளே அடங்கிக் கிடந்தன. ஒரு பிக்குவின் வார்த்தைகளாக யாரும் காந்தி அல்ல மகன். காந்தி துன்பப்பட்ட மக்களின் விளிம்புநிலையில் நின்றார். யாவரினது துயரத்தையும் தன் துயர் ஆக்கினார். மக்களிடையே ஒருவரான பயணம் அவருடையது. தாழ்த்தப்பட்ட மக்களை மேல்சாதி ஒடுக்கும்போது, மேல் சாதிமீது அவர் கோபப்பட்டார் அல்லர். அதன்பின் நிமித்தம் அவர்களை வென்றெடுக்கலாம் என்று நம்;பினார். மேற்சாதி தாழ்த்தப்பட்மோரைக் கோயிலுக்குள் விடவில்லை என்றவுடன் தாழ்த்தப்பட்டோர் தமக்குக் கோயிலைக்கட்டி அதில் அவர்கள் வழிபாடியற்றட்டும் என்றுதான் காந்தியால்  வழிகாட்டமுடிந்தது. அதுதான் சரி. யாரும் யாருக்கும் நோகாத வாழ்க்கை வாழ வேண்டும். வார்த்தைகளை வாசிக்கின்ற போது ஒரு மனிதன் உடனடியாகத் திருந்தாது விட்டாலும் மூளைப்பதிவிலே உறைந்து சிற்சில சமயங்கள் அவனுக்கு உறுத்தலைத் தரும் அல்லவா. இவ்வாறான வார்த்தை உறுத்தல்கள் தான் மனிதனைச் சீர்ப்படுத்தும் அதனால், இவ்வாறான நூல்களை நீங்கள் வாசிக்கின்ற போதுதான் மனமென்கின்ற மாயையை உங்களுக்குக் கட்டிப்போட முடியும்.

             104ம் பக்கத்திலிருந்து 115 ஆம் பக்கம் வரை வாசிக்கும் போது நான் இங்கில்லை என் நினைவுகளை மீட்டவைத்து கண்களைக் குளமாக்கின. நான் பட்ட துயர், அதற்கான காரணங்கள் எல்லாம் வந்து ஒரு வெறுப்பைத் தந்தன. படித்துப் பாருங்கள் உங்களுக்கும் இவ்வாறு பல இடங்கள் மனதிலே படும்.

                இப்போது கதைக்கு வருகின்றேன். ஒரு ஆசிரியர் தோட்டத்தொழிலாளியாக மாறியகதை. கதாசிரியர் இரவி அருணாச்சலம் அவர்களின் உண்மைக்கதைபோல் தெரிகின்றது. இதுபற்றி கதாசிரியர்தான் சொல்லவேண்டும். கல்லுலுவ என்னும் சிங்களக் கிராமத்தில் வாழுகின்ற ஒரு தமிழ்க்குடும்பம் அதாவது ஒரு ஆசிரியர், மனைவி, ஒரு பெண்கைக்குழந்தை மூவரும் அங்குவாழ்ந்த இஸ்லாமிய, தமிழ், சிங்களக் குடும்பங்களுடன் அன்பாகவும் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாகவும் வாழ்ந்து 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்ததால் சிங்கள, இஸ்லாம் என்ற இரண்டு இனங்களின் ஒத்துழைப்புடன் காப்பாற்றப்பட்டு சொந்த ஊர் கீரிமலை நாடி வந்து தோட்டத்தொழிலில் ஈடுபட நாட்டங்கொள்வதுவே கதை. இக்கருவைக் கொண்டு கதையோட்டம் செல்கின்றது. கதை தொடர்ந்து செல்லப் பின்னணி நினைத்துப் பார்க்கப்படுகின்றது. நினைக்கும் சமயத்தில் கதைஓட்டம் மாறுபடுகின்றது. வாசிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டு அச்சம்பவத்திற்கான எடுகோள்கள் வேறு சம்பவத்தை விளக்கிச் செல்கின்றது. இது சிலருக்கு மயக்கத்தைத் தரலாம். ஆனால், அவ்வவ் சந்தர்ப்பங்களிலேயே இவற்றை விளக்கவேண்டிய அவசியம் கருதியே இக்கதையை ஆசிரியர் கொண்டு செல்கின்றார். ஏனென்றால், எதை எவ்விடத்தில், எப்படிச் சொல்லவேண்டுமோ அதை அவ்விடத்தில் அப்படியே சொல்வதுதான் சிறப்பு. அதைத்தான் கதாசிரியர் கூறியிருக்கின்றார். ஏனென்றால், இரவி அவர்களுக்கு 10 வருடங்கள் இலங்கையில் கற்பித்த அநுபவம் இருக்கின்றது. 

          "ஆடு அழுகிறதே என்று அள்ளிக்குழை போட்டோம், வாழை வாடுகிறதே என்று வாய்க்கால் வெட்டி நீர் வார்த்தோம், நாய்க்குக் கல்லெறிந்து கதறியழப் பார்த்ததில்லை" போன்ற அடிக்கடி வந்துபோகும் அழகான வரிகளுடன் இந்நூலை அலசியதில் நான் கற்றுக் கொண்டது அன்பு என்பது எல்லோருடைய இதயங்களிலும் இருக்கின்றது. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் விதைக்கின்ற சம்பவங்கள் அன்பை மீறி மனித மனங்களை மாற்றிவிடுகின்றன. என்பதுதான் உண்மை.  எல்லா வகையான இனங்களிலும் மனிதனும் உண்டு, மிருகமும் உண்டு. உலகில் அனைவரும் புத்தனும் இல்லை காந்தியும் இல்லை. பழகிய உறவுகளும் வாழ்ந்த இடமும் மனிதன் உயிருள்ளவரை மனம் விட்டு அகலாது. இந்த உண்மைகளே எனக்குள் சப்பாணியிட்டு அமர்ந்து கொண்டன. 
                              215 பக்கங்களுடன் வெளியாகியுள்ள இந்நூலைப் படிப்பவர்கள் நிச்சயம் பயன்பெறுவர் என்பது திண்ணம். 
                 

             
     அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்

  "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்   எவரும...