இந்த நூல் முதன்முதலாக தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் வெளியீடு செய்யப்பட்டது. அடுத்ததாக எங்கள் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் அறிமுகம் செய்யப்படுகின்றது என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ளுகின்றேன்.
இந்த நூலை வாசிப்பதற்காக கையில் எடுத்த போது 245 பக்கங்களாக இருந்தது. இந்த 245 பக்கங்களில் இக்குதிரை வாகனத்தில் ஏறி 5 தலைமுறைகளுக்கூடாக சுமார் 60 வருடகால நிகழ்வுகளுக்கூடாகப் பயணப்பட்டேன். இதற்கு இந்த விமர்சனம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், 60 வருட காலம் நான் வாழவில்லை. ஆனாலும் இக்கதையின் மூலம் 60 வருட காலங்கள் வாழ்ந்திருக்கின் உண்மை.
இந்தப்பயணம் சாதாரணமான கார் அல்லது பஸ் பயணம் அல்ல குதிரை வாகனப்பயணம். குதிரை வாகனப்பயணம் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். துள்ளித் துள்ளி ஓடும் பயணம். ஒவ்வொரு அத்தியாயமாக டென்மார்க் அத்தியாயத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கித் துள்ளி ஓடுகின்றார். பின் யாழ்ப்பாணம் அத்தியாயத்திலிருந்து டென்மார்க் துள்ளி ஓடுகின்றார். வாசிக்கும் நாமும் துள்ளளோடு முடிவுவரை விடாப்பிடியாக குதிரை வடத்தைப் பிடிப்பதுபோல் இந்நூலைப் பிடித்து வாசித்து முடிப்போம். அதனால்தான் குதிரை வாகனம் என்று பெயர் வைத்திருக்கின்றார் என்று நான் சொன்னால், அது உண்மையல்ல. அது ஒரு சென்ரிமென்ற் கதை என்பதை நீங்கள் வாசிக்கும் போது தான் புரிந்து கொள்வீர்கள். தாங்;கிய நூலை கீழே வைக்கமுடியாத படி அத்தியாயம் அத்தியாயமாய் சண்முகத்தார் பேரன் என்னைக் கதை முழுவதும் அழைத்துக் கொண்டு போகின்றார். மரணப்படுக்கையில் இருக்கும் சண்முகத்தாரின் பேரனின் நினைவுகளே இந்தக் கதையின் சாரம்.
சந்ததி மாற்றங்கள், சடங்குகளின் நிகழ்வுகள், கோயில் விழாக்களின் மகிமை, உரிமை, அதனை விட்டுக் கொடுக்காத பண்பு, உறவுகளின் உன்னதம், நட்பின் மகத்துவம், நாட்டின் கலவரம், சாதிக்கட்டமைப்புக்கள், அதன் பிடியில் விடுபடாது வாழும் மனிதர்கள், குடும்பப் பிணக்குகள், கிராமிய வாழ்வில் பிணைந்து கிடக்கும் பண்புகள், புலம்பெயர்ந்த மண்ணின் வாழ்வு முறை, தொடர்ந்து வரும் சமூகப் பண்பில் பாதிக்கப்படும் தலைமுறை, புலம்பெயர்வின் வாழ்க்கை முறை இவ்வாறு அப்பப்பா அடுக்கிக் கொண்டே போகும் அற்புத சுரங்கமாகிய இந்தக்கதை உண்மை என்று உணரும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றது. நான் சொல்லுகின்றேன். எழுத்தாளர்கள் பிரம்மாக்கள். புத்தகங்களைக் கண்டு முகத்தைச் சுளிக்காதீர்கள். அவர்கள் நல்ல உள்ளங்களைப் படைக்கின்றார்கள்.
வாசக நெஞ்சங்களுக்கு சொல்லுகின்றேன். இந்தக்கதை ஒரு வரலாற்றுப் பதிவு. அது உண்மையோ சோடிக்கப்பட்ட கதையோ அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. உங்கள் பகுத்தறிவுக்குள் பதியப்பட வேண்டிய பொக்கிசங்கள் நிறைந்த சமூக நாவல்; ன்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சண்முகத்தாரின் பேரன் இறுதிவரைத் தன் பெயரைச் சொல்லாமலே தனது கதையை அழகாக நகர்த்திக் கொண்டு செல்கின்றார். பேரன் வார்த்தைகள் மூலமாக யாழ் மண்ணிலே வாழ்ந்து பெரிய வீட்டில் குடியிருந்து அப்பப்பாவின் மரபணுக்களை முழுவதுமாகப் பெற்று முருகன் கோயிலின் குதிரை வாகனத்திற்குச் சொந்தக்காரராகி, அதன் உரிமையை இறக்கும் வரை கொண்டு சென்றதையும், 58 கலவரங்களும், அதனால், அப்பாவின் இன பேதமற்ற வாழ்க்கையையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இனக்கலவரத்தால் தவறான வழியில் பிறந்த சிங்களப் பெண்ணை தன் சொந்தப் பெண்ணாக வளர்த்து அந்த சிங்கள இரத்தம் தமிழ் போராளிகள் குழுவில் இணைந்து மறைந்து போனமை, இஸ்லாமிய மக்களின் இடப்பெயர்வு, அதன் பின் இடையில் வருகின்ற வளமையான சகோதரர்கள் பேச்சுக்கள் குத்தல்கள், இவற்றையெல்லாம் தாண்டி டென்மார்க் நகரம் வந்து அங்கும் தொடர்ந்த அவரின் நட்பு, டென்மார்க்கில் வளரும் இளந்தலைமுறையினரின் போக்கு என்று கதை தொடர்கின்றது. தொடர்ந்து வரும் கதையில் பல உண்மைகளை ஜீவகுமாரன் அவர்கள் தன் தீர்ப்பின் மூலம் போட்டு உடைத்திருக்கின்றார்.
ஒரு நூலை வாசிக்கின்ற போது அந்த எழுத்தாளனோடு நாம் பயணப்படுகின்றோம். அவர் எழுத்தோட்டத்தை இனம் காண்கின்றோம், அவரையும் நாங்கள் வாசிக்கின்றோம் என்பதே உண்மை. தன் வினை தன்னைச் சுடும் என்னும் தீர்ப்பைக் கூறியிருப்பதை ஜீவகுமாரன் அவர்களின் வார்த்தைகள் மூலம் அளந்து பார்த்தேன். தமிழர்களுக்கு ஒரு சாபம் தான் இந்தப்போர் என்பார்கள் என்று ஓரிடத்தில் கூறுகின்றார். ஏன் அப்படிக் கூறுகின்றார் என்பதை நீங்கள் படித்துப் பார்க்கும் போதுதான் உணர்ந்து கொள்வீர்கள். இவையெல்லாம் நீங்கள் படித்து அறிய வேண்டிய பாடங்கள்.
எம்முடைய இனம் எவ்வாறான அரக்கத்தனம் படைத்தவர்கள் என்பதை சில இடங்களில் கண்கள் சிவக்க வாசித்தேன். மொஸ்கோவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் ஏஜன்சிமார் போல் மனித ஜென்மங்களும் உண்டா என்று எண்ணத் தோன்றியது. இஸ்லாமிய இனத்தவன் கோயில் கிணற்றில் தண்ணீர் குடித்தது குற்றமா? சாதி குறைந்தவன் கடுக்கண் போட ஆசைப்படக் கூடாதா? சாதியைக் காரணமாகக் கொண்டு நட்பை இழக்கக்கூடாது என்பதற்காகவும் காதலை தடுப்பது நியாயமா? இவையெல்லாம் இக்கதையில் வரும் சம்பவங்கள் நீங்கள் படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.
இக்கதையிலுள்ள மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், பல அற்புத பொன்மொழிகளை ஜீவகுமரன் அவர்கள் எமக்குத் தந்திருக்கின்றார்.
"ஒருவன் தன்னைக் குற்றவாளியாக உணருந் தருணம் போல கொடிய நிகழ்வு எதுவும் இந்த உலகத்தில் இல்லை"
"குலை தள்ளிய வாழையை அழகாக இருக்கிறது என்று யாரும் விட்டுவைப்பதில்லை. குலையுடன் சேர்த்து வாழையையும் வெட்டிவிடுகின்றார்கள். ஏன் குட்டி வாழைகள் செழித்து வளர வேண்டும் என்பதற்காக"
"கெட்டுப் போயிருந்து நல்லா வரலாம். ஆனால், நல்லாய் இருந்த குடும்பம் கெட்டுப் போகக் கூடாது"
"மகிழ்ச்சியை எங்கிருந்து நாம் பெறுகின்றோம் என்பதுதான் முக்கியமே தவிர எத்தனை இலட்சங்களும் கோடிகளும் செலவழித்துப் பெறுகிறோம் என்பது முக்கியமல்ல"
"நல்லவர்கள் மனம் நொந்து சொல்லும் வார்த்தைகளுக்கு வலிமையுண்டு"
"எமது மனதும் வாழ்வும் தடுமாறும் பொழுது எமது வார்த்தைகளும் தள்ளாடிப் போகின்றன. குடை சரிந்த வண்டியில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு மாடுகள் தறிகெட்டு ஓடுவது போல"
தலைமுறை மாற்றத்தால் வருகின்ற வார்த்தைகளைப் பாருங்கள். "உங்கட தலைமுறைதான் வரவுக்கும் செலவுக்கும் லாப நட்டம் பார்த்து வாழுறது. எங்கட குடும்பம் அப்படி இல்லையடா. எங்கடை வீட்டிலை அன்று எத்தினை கொத்து அரிசி சமைக்க வேணும் எண்டு விடியற்காலையில் தெரியாது… ஆட்கள் வர வர சமையல் நடக்கிற வீடடா அது. கொடுத்துக் கொடுத்து அழிஞ்ச குடும்பம் இல்லையடா… கொடுத்துக் கொடுத்து நல்லா வாழ்ந்த பரம்பரையடா….. "என சண்முகத்தார் பேரன் மகனுடன் தன் பரம்பரைப் பெருமை பேசுகின்ற விடயமாக இருக்கிறது.
இக்கதை வாசிக்கும் போது என் பழைய நினைவுகள் என்னைத் தொட்டுச் சென்றன. இதில் ஒவ்வொருவரும் இவ்வாறான பல நினைவுகளில் வாழ்ந்திருப்பீர்கள். நன்றி ஜீவகுமாரன் அவர்களே. சொன்னால் நம்ப மாட்டீர்கள் சில இடங்களில் குதிரை வாகனத்தை அப்படித் தரித்து நிறுத்திவிட்டு, என் நினைவுகளை மீட்டிப் பார்த்துப் பின் மீண்டும் குதிரை வாகனத்தைச் செலுத்தினேன். ஏன் நாமென்ன சாதாரணமானவர்களா? உங்கள் ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் அநுபவப் புதையல்கள் நிறைந்து கிடக்கின்றன. என்ன சிலர் வெளியிடத் தெரியாதிருப்பார்கள். எழுத்தாளர்கள் அதை எழுத்தால் படம் போட்டுக் காட்டிவிடுவார்கள். அதனால், நீங்களும் உங்கள் நினைவுகளைத் தட்டிப் பார்க்க இவ்வாகனம் துணைபுரியும் என்பதை இதனை வாங்கி வாசிக்கும் போதே உணர்ந்து கொள்வீர்கள்.
இக்கதையின் நாயகனும் நண்பன் பாலனும் இறக்கும் வரை தொடர் நட்புடன் இருந்து நட்புக்கு இலக்கணமாக இருந்தமையை பல இடங்களில் கதைமூலம் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பாக இருந்தது.
ஒரு சமூகத்திற்குத் தேவையான அன்பு, பாசம், விட்டுக்கொடுப்புக்கள் நட்பின் மகத்துவம் இவற்றையெல்லாம் கதைக்குள்ளே கொண்டுவந்து சேர்ப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம் என்பது ஒரு எழுத்தாளராக இருக்கின்ற எமக்குத் தெரியாமல் இல்லை. இதனை வெறுமனே விமர்சனம் என்ற பெயரில் நான் சொல்லிக் கொண்டு போக இதுதானே கதை என்று யாரும் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது மனதுக்குச் சங்கடமாகவே படுகிறது. ஒரு கதை என்றால் அக்கதையின் கருவை மட்டும் அறியும் அவா எனக்கு இல்லை. ஒரு கதை வாசிக்கின்றோம் என்றால், அக்கதையினூடாக கதாசிரியர் சொல்லவருகின்ற பண்புகள், விடயங்கள், கலாச்சாரசூழல், மனிதமனங்களின் ஆக்கபூர்வமான சத்துக்கள், சமூகத்திற்கு எதைக் கற்பிக்க விரும்புகின்றார் போன்றவற்றிலேயே பொதுவான நாட்டம் எனக்கு இருக்கின்றது. அதுவே வாசகர்களுக்கும் இருக்க வேண்டும். அந்த வகையிலேயே இந்நூல் ஒவ்வொருவர் கைகளிலும் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இதன் மூலம் நாம் கற்கின்ற விடயங்கள் அதிகமாக இருக்கும்.
ஒரு பாரதிராஜாவின் திரைப்படத்தையும், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும் மனதில் கொண்டுவந்து நிறுத்திய இக்கதையின் விமர்சனத்தை கோயிலிலே பூஜையை முடிக்கும் போது குருக்கள் சொல்லுகின்ற மந்திரமென ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய மந்திரமாகிய
சர்வே ஜனகா சுகினோ பவந்து
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
என்னும் மந்திரத்தை உச்சரித்து. அற்புதமான இவ்வரலாற்றுப் படிவினைப் படிப்பதற்கும் சுவைப்பதற்கும் விமர்சிப்பதற்கும் சந்தர்ப்பம் தந்த இந்நூலின் ஆட்சியாளர் ஜீவகுமாரன் அவர்களுக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்தப் புத்தகத்தை என்னிடம் யாரும் இரவல் கேட்காதீர்கள் இதன் அற்புதத்தைச் சொந்தமாய் வாங்கி அடிக்கடி சுவைத்து இன்புறுங்கள் என்று கூறி முடிக்கிறேன்.