• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

  வாயில்லா ஜீவராசிகள் மௌனம் கலைகின்றன


  ( உருவகக்கதை )  அந்த நகரத்தின் ஓரத்தில் பச்சைப்பசேலென்று பசுமை படர்ந்திருந்தது அவ் வனம். அவ்வனத்தின் அருகே விளையாட்டு மைதானமொன்று அங்கு கோடைகாலப் பாடசாலைச் சுற்றுலாவை மேற்கொண்ட குதூகலத்துடன் விளையாடி மகிழும் பிள்ளைச் செல்வங்கள். சூரியனின் கதிர்கள் கண்ட பேரின்பத்தின் துள்ளலில் கையில் உருளும் பந்துடன் உல்லாசமாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மனிதவாடை மூக்கைத்துளைக்க அந்தப் பிஞ்சுகளின் குரலில் கவரப்பட்ட விலங்குகள் மெல்லென மரங்களின் இடையே ஒட்டி நின்று தமது சலசலப்பிற்கு அஞ்சித் தலைமறைவாகி விடுவார்களேயென்று நினைத்து சத்தமின்றி சின்னவர்கள் விளை ஆடலில் (வளரச் செய்யும் ஆட்டம் ) மதிமயங்கி நின்றனர்.
                                                   
                                              திடீரென 'மாடு! என்ற ஒரு சத்தம் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த மாடு தன் நாமம் பிரயோகப்படுத்தப்பட்ட சூழ்நிலையை உற்றுநோக்கியது. இரு குழுக்களாகப் பிரிந்த சிறுவர்கள் ஒரு குழுவிடம் பந்தைப் பறிகொடுத்த சிறுமியை வைத வார்த்தையே தன் சிறப்புப் பெயரென அறிந்து மனம் வருந்தியது அந்த மாடு. அடுத்த ஒரு நிமிடத்தில்

  'ஏய் குரங்கு! எதுக்கு இந்தக் கண்ணாடிப்புடையனிடம் பந்தை எறிந்தாய்?

  திடுக்கிட்ட பாம்பு ஒற்றுமையாய் நாம் இங்கு இணைந்திருக்கின்றோம் இந்த. அழகான மனிதர்கள் அதுவும் சிறுவர்கள் எதற்காக எங்களை இப்படி அநாவசியமாகத் திட்டுகிறார்கள். என்று நினைத்த போது அருகில் நின்ற குரங்கும் கண்களிலிருந்த கண்ணீரை வாய் மூடி வடித்தது. மீண்டும்

  'இந்தப் பன்றியை விளையாட்டில் சேர்க்கக் கூடாது. நன்றாய் வந்து வாய்த்ததே எங்கள் குழுவில் நா...ய்


              கவலையில் மனம் வருந்திய விலங்குகள். நான்கு திசைக்கும் சுற்றி வளைத்து சிறுவர்களைக் குழுமிக் கொண்டன. நடுநடுங்கிய சிறுவர்கள், அச்சத்துடன் சிலையாய் நின்றனர். நடுவே குதித்த மாடு, அம்மா.. என்று அழைத்தவண்ணம்

  'உங்களைப் போலவே பெற்றவளைப் பாசத்துடன் அம்மா என்றழைக்கும் நான், நீங்கள் கைப்பந்து கால்ப்பந்து உருட்டி விளையாட தேவையான நிறை உணவுப் பாலை உங்களுக்குத் தருகின்றேன். நான் உங்களுக்குக் கேவலமாய்த் தோன்றும் ஒரு பிராணியா? சொல்லுங்கள் பிள்ளைகளே. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ வீர விளையாட்டு என்று சொல்லி, எங்களைத் துன்புறுத்துகின்றீர்கள். உங்களுக்கு உடனே இரும்புச்சத்து, புரதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எங்கள் வாழ்நாள் முடிவதற்குள்ளேயே அநியாயமாக எங்களைக் கொன்று உண்டு மகிழுகின்றீர்கள். ஏர் பூட்டி உழவு செய்கின்ற போது எங்களால், உங்கள் உணவுக்கு உதவி செய்ய முடிகிறதே என்று உழவுத் தொழிலுக்குத் துணையாக இருக்கின்றோம். என்றாவது ஒருநாள் உழவு செய்ய முடியாது என்று பகிஷ்கரித்திருக்கின்றோமா? உங்களுக்குத் தெரியுமா! நிலநடுக்கம் வரப் போகிறது, பெரும் வெள்ளம் வரப் போகிறது என்று முன்னமே அறிந்து நாம், எங்களைப் பாதுகாப்பது போல் உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். இத்தனையும் செய்கின்ற போது எம்மை வாழ்த்திச் சொல்லா விட்டாலும் வசைச் சொல்லுக்கு எங்கள் பெயரை உச்சரிக்காதீர்கள்‘‘
   
  என்று மாடு சொல்லிக் கொண்டிருக்கும் போதே பொறுக்க முடியாத நாயும் குறுக்கிட்டு

  'வீட்டிற்குக் காவல், மோப்பத்திற்குத் துணை, காவல் நிலையத்தின் வீரன். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருள். ஏன்! இருதய நோயாளிக்கும் துணை என உங்கள் இனத்திற்குத் தொண்டுபுரியும் நான் உங்களுக்குகு; கேவலமா? என்று நாயார் தன் திறமைகளை நயமாய் உரைக்க

  இஸ்... என்ற சத்தத்துடன் அழகான படமெடுத்து வளைந்து வளைந்து ஆடித் தன் திறமைகளை வெளிக்காட்டிய பாம்பும்

  'என் தோலைப் பயன்படுத்தும் மனிதக் குழந்தைகளே! என்னைத் தீண்டியவரைத் தற்காப்புக்காகத் தீண்டுவேனே தவிர வேறு யாரையும் நான் வேண்டுமென்றே தீண்டியதில்லை. இந்தப் பெருந்தன்மை படைத்த என்னையும் உங்கள் வசைச் சொற்களுக்குள் அடக்கி விட்டீர்களே. உங்கள்  காலுக்குள் கிடப்பவன் நான், என்ன செய்வது மனதில் என் வார்த்தைகளைப் பதித்துக் கொள்ளுங்கள்.

  பாம்பு பதுங்கிக் கொள்ளப் பாய்ந்தது குரங்கு. தன் இரு கைகளாலும் நெஞ்சில் அடித்த வண்ணம் துள்ளித் துள்ளிப் பல சாகசங்கள் காட்டி பற்களைக் காட்டிச்சிரித்த வண்ணம்

  ``என் தலைமுறையே! உங்கள் மூதாதையர் யாரென்று உணரீரோ! இராமனுக்குத் துணைப்போனதும் எம்மினமே. என்பதை அறிவீரோ? என்றைக்கு நாம் உங்களைத் துன்புறுத்தினோம்? எங்கள் இனத்தின் வளர்ச்சியில் பூரித்துப் போயிருக்கும் எங்களை உங்கள் கோபத்தின் துணைச் சொல்லாய்ப் பயன்படுத்தி விடுகின்றீர்களே! உணர்ந்து கொள்ளுங்கள். இன்று முதல் எங்களைக் கேவலமாய் எண்ணும் உங்கள் அற்பப் புத்தியை பூண்டோடு அழித்துவிடுங்கள். டீலந டீலந என்று கூறி அகன்றன.

                                       தமிழில் மட்டுமல்ல. விலங்குகளிலே பாசமுள்ள ஜேர்மனியர் Blinde Kuh(குருட்டு மாடு) Schweine(பன்றி) Brillen Schlange (கண்ணாடிப்புடையன்) போன்ற பதங்களைக் கோபம் மிகும் போது பயன்படுத்துகின்றார்கள். மிருகங்களும் படைப்பின் ஒரு வடிவங்களே. அவற்றையும் ஆதரிப்போம். அன்புள்ளவர்களாக வாழ எமது சிறார்களுக்கு அறிவுரை கூறுவோம்.  செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

  தியாகி

                     
  'இரவும் பகலும் கண்விழித்து, இமையிரண்டும் தூங்காது விழித்திருந்து, வளர்த்தவளே! என் சுகமிழந்து நோய்வாங்கி சுடராய் ஏற்றிய உன் வாழ்வு சிறப்படைய மெழுகுதிரியாய் நான் இருப்பேன்''' இந்த வரிகள் சுமந்த வார்த்தைக்குள் வந்தமர்ந்த மெழுகுதிரியின் விளக்கம் காண மகள், தன் மூளை நரம்பின் வேகம் கூட்டினாள். உலகுக்கு ஒளி தரும் சூரியன், மின்குமிழ், மெழுகுதிரி இம்மூன்றின் பக்கமும் தன் பார்வையைச் செலுத்தினாள்.     
           
                        எங்கு கருத்தா இல்லாத கருவி எமது கண்களுக்குப் புலப்படுகிறது. தான்தோன்றீஸ்வரரானாலும் தோன்றியதற்கும் தோன்றுவித்ததற்கும் கருத்தா எங்கோ உள்ளார் என்று தானே தேடிக் கொண்டிருக்கின்றோம். கருத்தா இல்லாது எதுவும் காட்சிப்படுவதும் இல்லை, பயன்படுத்தப்படுவதுமில்லை. நம் தேவைக்கேற்பத் தேடிப்பெறுவோம். உலகுக்கெல்லாம் ஒளிதரும் சூரியன் பூமியில் பார்வை படும் பகுதியில் மாத்திரமே தன் ஒளியைத் தந்துதவுகின்றான். சூரியன் பார்வை படாத பகுதிகள் இருளாலே மூழ்கியிருக்கும். தானாய்த் தேடி ஒளி தரவுமில்லை, நாம் தேடிச் செல்லும் வேளையில் ஒளி தந்துதவுகின்றான். இங்கு வேண்டியவர்களுக்கே வேலைக்கதிர்கள் பயன்படும். இச்சூரியபகவானையும் மீறி நாளெல்லாம் தேவைப்படும் போதெல்லாம் ஒளி தந்து உதவிபுரிந்திடும் தோமஸ் அல்வாஎடிசன் கண்டுபிடிப்பு மின்குமிழும் ஒளி தேவைப்படும் போது மின்சாரம் ஏற்றப்படும் போதே ஒளி தந்துதவுகின்றது. அதை மீறி அழகழகாய்ப் பலவண்ணங்களில் வடிவங்களில் வார்க்கப்பட்டுத் தியாகி என்று பலரால் புகழ்ந்துரைக்கப்படும் மெழுகும், திரியும் இணைந்து மெழுகுதிரி உருகும் தன்மை பெற்றதனால் எழுத்தை ஆளுபவர்கள் வைத்த பெயர் தியாகி. அது தானாய் பிரகாசம் தரும் தன்மை பெற்றதல்ல. ஒட்சிசன் ஆட்சியும் நெருப்பின் உதவியும் ஒன்றாய் இணையும் போதே வேண்டியவர்களுக்கு விளக்காய் ஒளி தரும். அடுத்தவர் ஏற்றும் போதுதான் அழகாய் எரியும். ஒளி தந்து பெருமை சேர்க்கும். இல்லையேல், அழகாய் மட்டுமே இருக்கும். அதனால் அடுத்தவர் பயன் பெறச் சாத்தியமே இல்லை. 
       
                        சூழலில் இருப்பவர் சுகம் காணத் தன் சுகம் இழக்க ஒரு தியாகி கருதினாலும்  தன் சேவை என்ற தேவையைப் பிறர் ஏற்றுக் கொள்ளத் தேவையான பல காரணிகள் தேவை அல்லவா. உருவாக்கமே உருகலாய் இருக்கும் போது அவ்உருகலில் பல உருவாக்கங்கள் பெறுவதனால் அதை உருவாக்கியவரே சிறப்பாகின்றார். அவ்வுருகலுக்கும் துணை செய்பவரும் சிறப்பாகின்றார். அதில் உருகுபவர் உருகியே தான் ஆகவேண்டும். இது படைப்பின் தத்துவம். ஏந்தி நிற்கும் கரங்களுக்கே பிச்சை போடப்படும். அடுத்தவர்க்குத் தேவை ஏற்படும் போதுதான் தியாகமும் செய்ய முடியும். கொடுப்பவர் இருப்பாரானால் எடுப்பவரும் இங்கு முக்கியம் அல்லவா.
       
           மெல்லொளியில் புத்துணர்வின் தூண்டலே 
          தண்ணொளியில் கெடுமணம் துலைப்பவளே
          விண்ணவர் வேண்டுதலிற் குறுதுணையே 
          காரிருளின் கார்அகற்றும் காரிகையே 
          தேய்ந்தொ ளிதந்தத னால் 
          தியாகி யாய்த் திகழ்பவளே.
          தேடிடும் விடை காணத் 
          தேர்ந்தெ டுத்தேன் இவ்விடயமே  வியாழன், 18 ஆகஸ்ட், 2011

  குறுங்கவிதைகள்
     துப்பாக்கியும் இரவையும் குறிபார்ப்பதால் 
     சமுதாயக் கவிஞன் கைமுனைப் பேனா
     கறுப்பு மை துப்புகிறது.
           .....
     காலத்தைக் காண இலக்கியங்களைப் புரட்டாதீர் – அங்கு
     அங்கீகரிக்கப்படாத தலைவர்களும்
     தெய்வங்களாக்கப்பட்ட போலி மனிதர்களும்
     கோடீஸ்வரர்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கோயில்களும்
     காலத்தை அலங்கோலமாய்க் காட்டிக் கொண்டிருக்கும்.
            .......                                        
    
   இலக்கியங்களெல்லாம் கேள்விக்குறியாகின்றன
   பொய்மைகளுக்குப் புகலிடம் கொடுத்த காரணத்தினால்.

            .....                                    ..
     
  புகழும் பயமும் கூடுகட்டியதனால் 
  இலக்கியப் பறவை கூட்டுக்குள் குளிர் காய்கிறது.
           .....              
                                             
           
    வறுமை
    
    பஞ்சம் பட்டினி
    விளைநிலங்கள்
   புதைகுழிகள் 
                                            

    ஓசோன் படை

   பாதுகாவலர்கள் 
  பலமிழந்து போனார்கள்.
   பூமித்தாய்


   பழைமை
    
  மரங்களே ஆண்டுக்கொருமுறை ஆடைமாற்றுகின்றன
    மனிதன் மனஏட்டில் என்றோ கிறுக்கப்பட்ட வாசகங்கள்
    இன்றும் அழிக்கப்படாமல் இருக்கின்றன. 

                                               
     

  சனி, 6 ஆகஸ்ட், 2011

  தாரம் இழந்த தபுதாரன்


                                          

      Get this widget |     Track details  | eSnips Social DNA    

            

                                                              ஆட்டம் பாட்டுக் கொண்டாட்டம். வீட்டுச் சுவர்களில் பட்டுத் தெறித்த ஒலியின் துள்ளல் அலைஅலையாய் மிதந்து கொண்டிருந்தது. 'அப்பா! அங்கு என்னதான் செய்றீங்கள்? இஞ்ச வந்து கொஞ்சம் பாத்திரங்களைக் கழுவி வையுங்கோ''. அந்த அறையினுள் அவரால் என்னதான் செய்ய முடியும். எத்தனை வசதிகள் அந்த அறையினுள் இருந்தாலும் அவர் ஒருபுறம் ஒதுங்கிய வாழ்வுதானே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அன்று நண்பர்கள் புடைசூழ புட்டிகளின் பரிமாற்றத்தில் ஆளுக்கொரு பாடல் பாடி ஆனந்தத் திருவிழா எடுக்கும் போதெல்லாம் அடிக்கடி கேட்கும் வயளவந க்கு அடுப்படியில் நின்று அனலுக்கு அடிமையானவள், இன்று அனலுக்குள்ளேயே அஸ்தமனமாகிவிட்டாளே. அப்போதெல்லாம் கதிரேசுக்கு ஆத்திரமும் அகங்காரமும் அளவுக்கதிகமாகவே இருந்தது. ஏனென்றால், ஆட்டிப்படைக்கவும் அணைத்தெடுக்கவும், அளவுக்கு மீறி உரிமை கொண்டாடவும் பொறுமையின் பொக்கிஷம் அருகிலேயே இருந்தது. ஆனால், இன்று பொறுமையையும் அடக்கத்தையும் கண்ணுக்;குத் தெரியாமல் எங்கோ இருந்து அந்தப் பொக்கிஷம் அவருக்குப் போதித்துக் கொண்டிருக்கின்றது. இதுதான் சொல்வார்கள், கண்ணுக்குத் தெரியாததற்கு ஆற்றல் மிக அதிகம் என்று. மின்சாரம் கண்ணுக்குத் தெரியாதது. ஆற்றல் மிகுந்தது. காற்று கண்ணுக்குத் தெரியாதது. ஆற்றல் மிகுந்தது. சாய்மானைக் கதிரையில் சாய்ந்திருந்த கதிரேசுவை உலுப்பிவிட்டது, அவர் மகளின் அழைப்பு ஒலி. 
                 
                               தன்னுடைய மூன்றாவது காலைத் தொட்டு எடுத்தார், கதிரேசு. தன் மனைவியின் கரம் இணைந்த துணிவுடன். மெல்லமெல்லத் தத்தித்தத்திச் சென்றார். பாவித்துத் தள்ளிய பாத்திரங்கள் எல்லாம் கதிரேசு கரங்கள் பட்டுப் பளிச்சிட்டது. இவர் ஒரு பிரபலம்.   மனைவி மறைவில் இழந்தது மனபலம்;. தன் கற்பனைக் கண் இப்போது அரைக்குருடாகி விட்டது. காட்சிகள் தெளிவுபடத் தடங்கள் வீட்டினுள் வந்துவந்து போகின்றன. பாத்திரங்கள் கழுவித் துடைத்தவர் கண்களுக்கு உயிரற்ற கோழியொன்று இவர் உடை கழட்ட உத்தரவு தந்து உறைந்து ஒடுங்கிக் கிடந்தது. இப்போது இவர் கோழிக்கு உடை கழட்ட வேண்டும். உயிருள்ளவர்களுக்கு உயிரற்ற அவ்வுடல் அஸ்தனமாக வேண்டும். அவ்வுடலின் தென்பில் அவர்கள் புரதம் பெற வேண்டும். அதற்காக அக்கோழி இறுதிக்கிரியையாக கதிரேசு கரம்பட்டு பொரித்துப் பரிமாறப்படும். கண்பார்வை அரைவாசியாக படியிறங்கி இருந்தாலும் அவர் அகக்கண் 100 வீதம் இப்போது தெளிவாகத் தெரிகின்றது. புரிந்தோ புரியாமலோ வயதான தந்தையிடம் அன்பாய் வேலைவாங்கும் பிள்ளைகள் ஒரு நிமிடம் அவர் நிலையில் நின்று சிந்தித்தால் உடல்பலம், மனபலம் இழந்திருக்கும் உருவத்தின் வருத்தம் புரிந்துவிடும். 
         
                                                   தாரத்தின் மகிமையைத் தாரம் இழந்த நிலையிலேயே மனிதன் முழுமையாக உணர்கின்றான்.      வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு பெண் தேவை என்பார்கள். கைவிரல்களற்ற ஒருவர் வீட்டில்   இல்லாமல் இருப்பாரா? ஒரு மனையில் புகுந்த மனையாள், அம்மனையில் வாழ்வோர் அனைவரின் அனைத்திற்கும் ஒளியேற்றுவாள். அகஇருள் நீக்கி இன்ப ஒளி ஏற்றுவாள். தோழியாய், மனைவியாய், தாயாய், குருவாய், ஆலோசகராய் அனைத்துமாய் அவதாரம் எடுப்பவள் தான் தாரம். அத் தாரத்தை இழந்த தபுதாரன் தன் சக்தியில் தன் வெற்றியில் தன் இன்பத்தில் அரைப்பகுதியைத் தொலைத்தவன். அவன் ஏறுபோல் பீடுநடை போனதெங்கே. தாரத்தோடு அனைத்தும் போம் என்று புரியாமலா எழுதி வைத்தார்கள். 

            இச்சிறிய சம்பவம் தாரம் இழந்தோர் பற்றிச் சிந்திக்கச் செய்தது. சிந்தனையில் விழுந்தது. உங்கள் செவிகளில் நுழைந்தது. உங்கள் எண்ணங்கள் பரிமாற இடம்தந்தது. நன்றி.

  அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...