• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 27 டிசம்பர், 2011

  பக்குவப்படாத பகுத்தறிவு


  Add caption
      
     
      விசித்திரமான ஓர் கருவி
         என்னுள்ளே இருந்து
       வில்லங்கம் செய்கிறது
         எடுத்து எறிந்திடவோ
       இருக்குமிடம் புரியவில்லை

  அன்று இசைக்கருவிகளின் மத்தியில் சக்கரைப்பந்தல் நிகழ்ச்சியில் தேன்மாரி பொழிந்து நான் அரங்கிலிருந்து  அகன்ற வேளை என்னருகே வந்த அந்த கம்பீரம் என் வலது கரத்தை இழுத்துக் குழுக்கியபடி 'சசி! உன் பாட்டு அபாரம். உங்கள் அம்மா இப்படியொரு கவிதை எழுதியிருப்பதை இன்று தான் கண்டேன்||;. என்றான். 'இது அம்மா எழுதிய கவிதை இல்லை' என்று நான் கூறிய போது 'நான் சொன்னது பாட்டை இல்லை. உன்னை||. என்று கூறி அகன்று விட்டான். அவன்; துடிப்பான   பேச்சு அடிக்கடி என் மனதில் தொல்லையை ஏற்படுத்துகிறது. காரணம் புரியாது என் மனதைக் கட்டுப்படுத்துவேன். இப்போது அடிக்கடி என் கண்ணில் படும் இவன் யார்? என்னை அவன் தன் பக்கம் இழுக்கின்றானா? சுவாரசியமாக துடிப்பாக அவன் ஒவ்வொரு தடவையும் கூறும் வார்த்தைகளைத் தேடி மனம் அலைகிறதே. ஏன் தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து எதையும் அவரிடம் மறைக்காத எனக்கு இதை மட்டும் ஏன் சொல்ல மனம் மறுக்கிறதுஎன்   குடும்பத்தைச் சமுதாயக்கூண்டில் நிறுத்தும் காரியத்தை எப்போதும் நான் செய்ய மாட்டேன். ஒவ்வொரு நாள் காலையிலும் அவன் கண்ணில் படக்கூடாது. என் மனதில் இருக்கும் அவன் நினைவை எரித்துவிடு
  இறைவா! என ஆண்டவனை வேண்டியபடி வீதிக்கு வரும் நான் அவனைக் கண்டவுடன் பேதலிக்கின்றேன். அனைத்தையும் மறக்கின்றேன்.

            
                         இதுதான் அலைபாயும் மனமா? எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவன் சேர்ந்து வரவேண்டும் என மனம் ஏங்குகிறது. மனதைக் கட்டுப்படுத்தி படிப்பில் கண்நிலைக்கும் போது எதிரில் அவன் படம் நிழலாடுகின்றது. இல்லை. எனக்கு வேண்டியது எனது பெற்றோர். கல்வி இதைத் தவிர வேறில்லை. பிடிக்காது> பொருந்தாது எனத் தவிர்க்க நினைக்கும் நினைவுகளுக்கு மனம் தொடர்பை ஏற்படுத்துவதும் ஏன்? பக்குவப்படாத மனம் கொண்டு துடிக்கின்றேன். இங்கு நான் யார்? நான் வேறு என் அந்தரங்க  பொக்கிஷம் வேறு. நானாக நான் மாறுவது எப்போது?
              பேதலிக்கும் இம்மடந்தையின் வேதனையை உணர்ந்தவளாய் ஓராயிரம் ஆசைகள் சுமக்கும் மனம் ஓர் நொடியில் சலிப்படைவதும் உள்ளிருந்து ஓர் காரியம் உறுத்த வெளிவேஷம் போடுவதும் கண்டொன்று பேசிக் கடந்ததும் கடிந்து பேசுவதும் நாள் முழுவதும் கடிந்து பேசும் பிள்ளையை நடுநிசியில் அணைத்து முத்தம் கொடுப்பதும் கூடாத காரியம் எனத் தெரிந்தும் அதைச் செய்து முழிப்பதும் ஆத்திரத்தில் அடித்துத் துரத்தியவனை அடுத்த நிமிடம் நினைத்து ஏங்குவதும் இந்த மனமே. விநோதமான பலர் மனதின் விந்தையான போக்கை எண்ணி வியந்தபடி
                  

  வெள்ளி, 23 டிசம்பர், 2011

  நத்தார் தின நற்செய்தி
  நத்தார் தின நற்செய்தியாக நண்பர்கள் அனைவருக்கும் இப்படைப்பை மனமுவந்து வழங்குகின்றேன். நத்தார்தின வாழ்த்துகள். 

  கவிதா தன் எண்ணங்களுக்கு வரிவடிவம் இதயத்துத் தேக்கங்கள் வார்த்தைகளால் வழிந்தோடும். தன்னைவிடத் தன் பேனாவையே அதிகம் நேசிப்பாள். ஏனெனில் அதன் மூலமே அவளால்த் தன்னை யாரென்று பிறருக்கு இனம் காட்ட முடிகின்றது. அவள் வார்த்தைகளுக்கும் வரிகளுக்கும் வேறுபாடு இருந்ததே கிடையாது. சொல்லும் செயலும் மாறுபடும் உலகில் முடிந்தவரை எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்து வரிவடிவில் தன் உளவடிவம் பிரதிபலிக்கச் செய்யும் தன்மை கொண்டவள். பேனாபிடிக்கும் விரல்களை கணனித் தட்டச்சு தட்டுகின்ற விரல்களை வினாடிக்கு வினாடி முத்தமிடும் நன்றியுணர்வுள்ள கவிதா வாழ்வில் விதியின் விளையாட்டு மனம் வருந்;தத்தக்கதாகவே விளையாடியது. விரலோடு இணைந்தே அவள் உயிரானது ஒரு விபத்தில் விடைபெறத் தகுதி பெற்றது. உயிரில்லாத உடலால் இவ்வுலகுக்கு ஆவதென்ன என்று அன்று கவிதா நினைத்திருப்பாளேயானால், இன்று இவ் அற்புதம் உருவாகியிருக்குமா? 
         
    தன் அங்கங்களில் எங்கெல்லாம் பயன்பாடு உள்ளதோ அனைத்தையும் தாரைவார்த்துத் தருவதாய் மருத்துவக் காப்புறுதி செய்திருந்தால், யு.ழு.மு என்று அழைக்கப்படும் மருத்துவக் காப்புறுதி நிறுவனம் வழங்கிய உறுப்புத்தான அட்டையை எப்போதும் தனது கைப்பையினுள் வைத்திருப்பாள். திடீரென ஏற்படும் விபத்தின்போது உடனடியாக உடலுறுப்புக்கள் தேவைப்படுவோருக்குப் பொருத்திவிட வேண்டும் அல்லவா. அதனால் திறந்த மனதுடன் அவள் உடலைத் தாங்கிய மருத்துவமனையானது அணுகுண்டு வெடிப்பில் கையிழந்த ஒரு பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது. என்ன ஆச்சரியம் செயலிழந்து உயிரிழந்த கைகளில் நரம்புகள் பொருத்தப்பட்டு இரத்த ஓட்டம் சீராகப் பயணம் செய்ய உயிருள்ள கையாய் கவிதா கை அப்பெண்ணின் உடலில் செயல்பட்டது. ஆச்சரியம் அப்பெண் ஒரு எழுத்தாளர். கவிதா விரல்கள் இன்று அந்தப் பெண்ணின் உடலில் பொருத்தப்பட்டு இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றது. சாகாவரம் பெற்ற கவிதா கைகள் அவள் ஆசையை வேறு ஒரு உடலோடு இணைந்து இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அற்புதம் நாம் வாழும்போதே விஞ்ஞானம் எமக்குத் தந்த வரப்பிரசாதம். 
                                             


          அழிகின்ற உடலை நாடிநிற்பார் நாட்டத்தைத் தீர்க்கத் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வாருங்கள். 
   
   உயிரே பொய்யென்னும் போது - இவ்
       உடலாற் பயனென்ன
      உதிரம் உறைந்து உடலும் அழுகி
      எரியில் பொசுங்கி எரிசாம்பலானால்
      உலகுக்காவதென்ன உமக்கும் ஆவதென்ன – அதைப்
      பிற உயிர்க்காய் உவந்தளித்தால்
      பயனாகும் இவ்வுலகில் 

  அனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் தின வாழ்த்துகள் 

                 
  செவ்வாய், 13 டிசம்பர், 2011

  தலைப்பாகை


                                                     
                            மோவாயில் முறுக்கு மீசையும், தலையிலே தலைப்பாகையும், தோளிலே சால்வையும் அணிந்து வரும் கம்பீரத் தமிழன் எமது கலாச்சார பாரம்பரியத்தை படம் பிடித்துக்காட்டுகின்றான். காலத்தின் மாறுதலால், கலாச்சாரக் கலப்பினால், அந்நிய மோகத்தினால் நாம் தேசிய ஆடைகளை மறந்து அல்லது மறுத்து காலத்திற்கேற்பக் கோலம் மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும் எமது கலாச்சார நிகழ்வுகளில் அதை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது பெருமைப்படத்தக்கதாக இருக்கின்றது. தற்பொழுது திருமணவீடுகளில், மணமகன், தோழன் போன்றவர்களும், திருமணத்தின் போது மாமன் தேங்காய் உடைக்கும் போது கட்டுகின்ற இந்தத் தலைப்பாகை என்ற சொல்லானது முண்டாசு, தலைப்பா, தலைக்கட்டு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.                    
                           
                  ஆரம்பகாலப்பகுதியில் தமிழர்கள் தலைப்பாகை அணிந்து கொண்டு நடமாடிய விபரங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் இது வழக்கு ஒழிந்து போனாலும் அதனை மறவாமல் இருப்பதற்காகத் தமிழர்கள் திருமணவீடுகளில் இதைக் கைக்கொள்ளுகின்றார்கள்.

                                      இத்தலைப்பாகையானது தலையில் வந்து அமர்ந்ததன் உண்மைக்காரணம் என்ன என்பதை என் தேடல் மூளை தேடித்தவித்த பின் அதற்கான விபரத்தையும் தெரிந்து புரிந்து பிறர் தெரியச் செய்ய விழைந்தது. மூளைக்குத் தேவையான கதிர்வீச்சுக்கள் வெளியேறாமல் இருப்பதற்காகவே இத் தலைப்பாகை அணியப்படுகின்றது. மூளை என்பது எமது உடலின் மூலஸ்தானம். அதாவது எமது உடலின் Head of the Department. இதில் ஏதாவது பிழை ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் கடினத்தை அநுபவிக்க வேண்டியதுதான். எமது உடலினுள் ஞானசக்தி, போகசக்தி என்பன உண்டு. ஞானசக்தி மூளையிலும் போகசக்தி அடிவயிற்றிலும் இருக்கின்றது. எனவே இச் சக்திகள் வெளியேறாமல் இருக்க தலைப்பாகை அணிவது வழக்கமாக இருந்தது. இது கோயில் கோபுரம் போன்ற நிலையில் கட்டப்பட வேண்டும். கூராகக் கட்டும் போது மனிதசக்தியும் பரசக்தியும் நேராக அமையும். அதாவது பூமியிலுள்ள சக்தி காலினூடாக உடலை வந்தடைந்து மனிதசக்தியாகின்றது. இது எமது உடலினுள் உள்ள சக்தியாகும். அத்துடன்; வெளியுலக சக்தியாகிய பரசக்தி நேராக  இணைகின்றது. இதுவே இந்த தலைப்பாகை அணியும் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டது. எதுவும் காரணம் இல்லாமல் செய்யப்படவில்லை. காரணம் புரியாமலே நாம் காலத்தைக் கழிக்கின்றோம். 
           
                                            எப்போதோ பாக்யா என்னும் புத்தகத்தில் நான் வாசித்து ரசித்தவிடயத்தை இங்கு பகிர்ந்து கொள்ளுகின்றேன். குதிரையின் மீது போர்வீரன் அமர்ந்திருக்கும் சிலை உள்ளதல்லவா. அச்சிலையில் பலவேறு வடிவங்கள் இருக்கின்றன. குதிரை முன் இரு கால்களையும் தூக்கியவாறு சிலை அமைந்திருந்தால் அதன் மேல் அமர்ந்திருப்பவர் சண்டையின்போது இறந்து விட்டதாக  அர்த்தமாகின்றது. குதிரை ஒரு காலை மட்டும் தூக்கிக் கொண்டிருந்தால், போரில் காயம் பட்டு பின்னர் இறந்ததாக அர்த்தமாகின்றது. குதிரை எந்தக் காலையும் தூக்காமல் இருந்தால் அவர் இயற்கையாகவே மரணம் அடைந்தார் என்று அர்த்தமாகின்றது. எனவே காரணத்தோடுதான் பல விடயங்கள் நடைபெறுகின்றன. அவற்றை அறிந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மத்தியில் வளர வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கையில் எதற்கும் ஆமாப்போடும் கோழைத்தனம் விரட்டியடிக்கப்படும்.

  வெள்ளி, 9 டிசம்பர், 2011

  கட்டுப்பாடும் சுதந்திரமும்

  உந்தியில் தங்கியபோது
  உந்தியே வரம்பு
  உருண்டதும் உதைத்ததும்
  கருவறையுள் கட்டுப்பாடு
  உதித்ததும் பூமியில் சுதந்திரம்
  உருவாகும் உயர் வாழ்வுக்கு
  மனக் கட்டுப்பாடு
  சந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு
  சரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு
  சிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்
  மிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட
  வாழ்வின் கறை சுமக்க வழி விடாத
  பெற்றோர் கட்டுப்பாடு

  விலங்குகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை
  வீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு
  மீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை
  நீரைத் தாண்டினால் நிலைக்கா துலகில்

  சொற்சுதந்திரமென நாவடக்க மறந்தால்
  சொல்லுக்கேது சுதந்திரம்
  புலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்
  குலநடுக்கம் குலத்தையே அழிக்கும்
  கட்டவிழ்ந்த மந்தைகளாய் மேய்ப்பாரிழந்தால்
  கெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்
  வாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்
  வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்
  சீரழியாது வாழ்வைச் சிறப்பாக்க
  பேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு


  01.12.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது

  வியாழன், 1 டிசம்பர், 2011

  மனிதனும் மிருகமாவான்

            
                

  சித்திரத்தில் கறை படிந்தது போல் அந்தச் சின்னவன் வதனம் களை இழந்ததும் ஏன்? சிட்டுக்குருவி போல் வீட்டடைச் சுற்றிச்சுற்றி வந்த அவன் பாதங்கள், ஒரு அறையினுள் அடைபட்டுக் கிடந்ததும் ஏன்? வீடு முழுவதும் கலகலக்கும் அவன் ஓசை, இன்று நிசப்தமாகியதும் ஏன்? துருதுருவென்ற பார்வை ஒரு புள்ளியை விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததும் ஏன்? இத்தனையும் ஏன்? மூடப்பட்ட அறையினுள் தாயின் மேலங்கியை  அணைத்தபடி தனது அறைக்கட்டிலில் சுருண்டபடியும் கண்கள் மட்டும் எதையோ நினைத்தபடியும் நிலைக்குத்தி நின்றன. மெல்லக்கதவு திறந்து நுழைந்த மருத்துவரை ஓடிவந்து மல்யுத்தக்காரனைப்போல் இரு கைகளாலும் மாறிமாறித் தாக்கினான், ரகு.
               
                             அவன் தாய் சாந்தமாய் இருப்பதனாலோ சாந்தி என்று பெயர் பெற்றாள். அவன் உருவாகக் கரு என்னும் ஆய்வுகூடம் சுமந்தவள்.  உடலுக்குத் தோல்போல் ரகு வளரக் காத்துநிற்பவள். தாலி சுமக்கக் காரணகர்த்தா கடமைக்குத் துணையாய்க் காலமும் கழித்தாள். கணவன் வருவாய்க்கு அவள் கூட்டல் கணக்கு. அவன் இன்பத்திற்கும், உறவினர் நம்பிக்கைக்கும் அவள் பெருக்கல் கணக்கு. இவ்வாறே குடும்பத்தின் முதுகெலும்பு என்னும் படி கணவன் முழு நம்பிக்கையின் பெட்டகமானாள். நம்ப வைத்தாள். 
                         
                                வேலைக்குச் சென்றவள் திரும்பும் நாழி கடந்ததால், மூளைக்குள் பிரளயம் வந்தது போல் கலங்கினான், ரவி. அவன் மூளையின் இதயத்தின் முக்கால்ப் பகுதி சாந்தியல்லவா! அவன் இதயத்தில் மகுடம்;;; சூட்டியல்லவா அவளை வைத்திருக்கின்றான். திடீரென ஒரு எண்ணம் பளீச்சிட்டது. அவள் கைத்துணையான கைத்தொலைபேசியுடன் தான் சென்றாளா! என்று அறியும் அவாவில் அவள் பீரோவைத் திறந்தான். அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களிடையே மோப்பம் பிடிக்கும் நாயானது, அவன் விரல்கள். கைத்தொலைபேசியுடன் இணைந்தே இந்த ஆச்சரியமும் அவனுக்குக் காத்திருந்தது. மனைவி என்னும் அந்தஸ்துக்கு ரவியும், காதல் என்னும் போதைக்கு அந்தக் கடிதக் காதலனும் இருப்பதை, விரசமாய் அவளால் எழுதப்பட்ட அந்தக் கடித அத்தாட்சி காட்டி நின்றது. விறுவிறு என்று ரவியின் இரத்தக் கொதிப்பு மேலோங்கியது. மனிதன் இரு முகத்தில் மறைந்து நிற்கும் மறுமுகம் மட்டுமே இப்போது வெளிப்பட்டது. பதுங்கிய புலியானான். கதவுதிறக்கும் ஓசை கேட்டு ஓடிய மகனை உச்சி மோந்தாள், சாந்தி. காலதாமதத்தின் காரணம் அறியும் ஆவல் ரவியிடம் எள்ளளவும் இருக்கவில்லை. இன்று ரவியின் சமையலைச் சுவை பார்த்த சாந்தியிடம் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வாகனம் அண்டை வந்தடை என்று கட்டளையிட்டு வெளியே சென்றான். அவளின் முகத் திரையைக் கிழிக்கும்படி உத்தரவிட்டபடி அவன் இதயம் அளவுக்குமீறித் துடித்துக் கொண்டிருந்தது.                 
                
                                            மகனுடன் கீழே வந்த சாந்தி,  அவனைப் பின் இருக்கையில் இருத்திப் பாதுகாப்புப்பட்டி அணிவித்தாள். அவளுக்காய் முன் இருக்கைக் கதவு திறக்கப்படவில்லை. கதவினுள் இருந்தவண்ணம் தனது கையில் இருக்கும் கடிதத்தை வீட்டினுள் வைத்துவரும்படி கட்டளையிட்டான். கடிதத்தைப் பெறுவதற்காக தன் கழுத்துடன் இணைத்தே கரத்தையும் நீட்டினாள். திடீரெனச் சாளரம் மேலெழுந்தது. அதனுள் பட்டென அவளது கழுத்து சிக்கிக் கொண்டது. அலறத் தொண்டை இடம் தரவில்லை. ஆதரவு கேட்டு உயிர் நிற்கவில்லை. ஓவென்று அலறிய மகன் மயக்கமானான். 
            
             பொய்மைக்கு இங்கு மரணதண்டனை. நம்பிக்கைத் துரோகத்திற்குச் சாவுமணி. சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலைகளாலும் மனிதன் மிருகமாகின்றான். தன்னைத் தாக்கவருபவரைக் கண்டாலே மிருகம் துடித்தெழும். அழகாய் நடித்த அந்தப் பெண்ணை அழித்தே ஆகவேண்டும் என்று ஆத்திரம் கொண்ட அவன் செய்கை, இப்படியான பெண்களுக்கு எச்சரிக்கை. ஆனால் அநாதரவான அந்தக் குழந்தைக்கு ...........

  வாசகர்களே இக்கதை பற்றிய உங்கள் கருத்துக்களை இதில் பதிவிடுங்கள்.
                          

  LGBTQ

  கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகள...