• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 28 மே, 2017

                                           
                 

                              முதுவேனிற்கால சிறப்பு

    காலநிலை சுற்றுச்சூழலுக்கேற்ப மனிதன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இயற்கை. அந்தவகையில் 'ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா' என பாப்பாப் பாட்டுப் பாடிய பாரதியை மெச்சும் மாதமாக ஜூன் மாதம் அமையப்பெற்றிருக்கின்றது. இருளின் கோரப்பிடியை விடுத்து ஒளியின் உச்சத்தை அநுபவிக்கும் ஆற்றல் மிக்க மாதம் முதுவேனிற்காலம் ஆகிய ஆனி மாதம். நித்திரையை வெறுத்து பகலெல்லாம் வெட்டவெளியில்  ஆட்டம் பாட்டுக் கொண்டாட்டம் என் சிறுவர்களின் குதூகலத்தை இக்காலத்தில் காணலாம். இரவு 11 வரை பகல் வெளிச்சம். 21 ம் திகதியே இவ்வருடத்தின் அதிகூடிய பகல் நேரமாகக் காணப்படும். இம்மாதம் படுக்கையை வெறுக்க வைக்கும். தோட்டம் செய்வோரும் பயிரிடுவோரும் பூமரங்களை பதியமிடுவோருமென பெரியோர்கள் பூரித்துப் போவர். பூட்டிய வீட்டுக்குள்ளே இருந்து வெப்பமூட்டியை கூட்டிவிட்டுக் குளிர்காய்ந்தவர்கள் எல்லாம் கிறிலன், பாபிகியூ என்று இறைச்சியை வாட்டி வாட்டி வீட்டுக்கு வெளியே இருந்து இரசித்து ருசித்து உண்பார்கள். ஆதிகால மனிதனின் நிலையை நாம் அண்மிக்கின்றோம் என்பதுபோல் வாட்டிய இறைச்சியை வாயில் வைத்துக் கடிக்கும்போது எம்மனதில் இவ்வெண்ணம் தோன்றாமல் இல்லை. நினைக்கவே நாவில் எச்சில் ஊறுகிறது.
                பச்சைப் பசேலெனும் பரப்பிலே படுத்துறங்கி பொழுதுபோக்கும் அழகும். வீட்டின் அறைகளையும், சாளரங்களையும் ஒரேயடியாகத் திறந்துவிட்டு ஊடுருவிச் செல்லும் காற்று தங்குதடையின்றி செல்வதும். பக்கத்து வீட்டில் குடியிருப்போரை அடையாளம் காண்பதும், பழமரங்களும், காய்கறிகளும் பறித்துண்ணப் பயிரிடுவதும் பறித்தெடுப்பதும் என மொத்தத்தில் வெளியுலகுடன் முற்றாகத் தொடர்பு கொள்ளும் தித்திப்பான காலமாக இம் மாதம் இனம் காணப்படுகின்றது.
        ரோமான் நாட்டவர்கள் தமது ஜுபிடர் கடவுளின் மனைவின் பெயராகிய ஜுனோ என்னும் பெயரிலிருந்தே ஜுன் மாதம் பிறந்ததாகவும், கிரேக்க இனத்தவர்கள் தமது இளமைத் தெய்வமான மெர்க்குரிக்கின் ஜுனியஸ் என்னும் பெயரிலிருந்தே ஜுன் மாதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். இம்மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் பிரவேசிப்பதால் மிதுனகாலம் என எம்மவர் அழைக்கின்றனர். மிதுனராசி அளவிலே பெரியது என்னும் காரணத்தால், இதனைக் கடப்பதற்கு நீண்ட நேரத்தை சூரியன் எடுத்துக் கொள்ளுகின்றது என எமது வானவியல் ஆராய்ச்சியாளர்களாகிய ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

                இம்மாதம் பல விசேட தினங்களைக் கொண்டிருக்கின்றது. அவற்றில் முக்கிய தினங்களை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.          
              நாம் வாழ நல்லவையெல்லாம் காண எம்மைச் சூழவுள்ள சுற்றாடல் சிறப்பாகவும், சுகநலம் பேணுவதாகவும் இருக்க வேண்டும். அதனாலேயே புதுமனை வாங்கும் போது சூழல் பார்த்து வாங்குங்கள் என்று சொல்வார்கள். உலகத்தை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்பவர்கள் மனிதர்களே. நடக்கின்ற இயற்கை அழிவுகளுக்கும், நாட்டு அசம்பாவிதங்களுக்கும் காரணகர்த்தாக்கள் மனிதர்களே. இதனை அறிவுறுத்தும் பாங்கிலே ஆனிமாதம் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.         
                    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் அக்குழந்தைகளுக்கான சர்வதேச குழந்தைகள் தினத்தை இம்மாதம் முதலாம் திகதி கொண்டாடுகின்றார்கள். இதே குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்வதும், அவர்களை வேலைக்கு அமர்த்துவதும் பற்றி எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக ஐக்கியநாடுகளின் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பினால், 138, 182 உடன்படிக்கைகளின்படி 2002ம் ஆண்டிலிருந்து 12 ஆம் திகதி ஜுன் மாதம் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றது.
                   தனக்குள் பாசத்தைப் பூட்டி வைத்து வெளிப்படையாக கண்டிப்பை வெளிப்படுத்தி தமது பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக நாளும் உழைக்கும் தியாகி தந்தைக்கு மரியாதை செய்யும் முகமாக இம்மாதம் 3 ஆவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது.
                உலகமெங்கும் போர், புலம்பெயர்வு என மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில் அவர்களுக்கென்றே ஒரு தினத்தை பிரகடனப்படுத்தி ஜுன் மாதம் 20 ம் திகதியை சர்வதேச அகதிகள் தினமாக அறிவித்துள்ளனர்.
                 உடல்நலம் பேணி, உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க அதி உயர்ந்த கலை யோகா. சர்வதேச யோகா தினமும்  இம்மாதம் 21 ஆம் திகதியே கொண்டாடப்படுகின்றது.
               இவற்றையெல்லாம் விட ஜேர்மனியில் வாழும் சைவப்பெருமக்களுக்கும், இளந்தலைமுறையினருக்கும், வியாபார ஸ்தாபனங்களுக்கும், ஒரு பொன்னான மாதம் ஆனிமாதம் என்பதை மறுக்கமுடியாது. பட்டுச்சேலை வாங்க வேண்டுமா? பலசரக்குச் சாமான் வாங்கவேண்டுமா? பெட்டி மாம்பழம் வாங்க வேண்டுமா? பெரிதாயக் கொள்வனவு செய்ய வேண்டுமா? லைகா ரி.வி வாங்க வேண்டுமா? லைற்றாப் பெண்களை லைன் அடிக்க வேண்டுமா? பொண்ணு பார்க்க வேண்டுமா? அத்தனைக்கும் ஏற்ற மாதம் அதற்குரிய காமாட்சி அம்பாளுக்கு விழா எடுக்கும் மாதம்  இந்த ஆனி மாதம். ஆஸ்திகனும் நாஸ்திகனும் வேற்றுமையின்றி ஒன்று கூடும் இடமாகிய ஹம் காமாட்சியம்மன் ஆலயத்தின் மகா உற்சவம் இவ்வருட ஆனி மாதம் 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25ம் திகதி தேர்த்த்திருவிழா 26ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் முடிவுறுகின்றது. இக்காலப்பகுதி ஊருக்கே உற்சவம் தோன்றும் நாளாகும். நாட்டின் பலபகுதிகள் மட்டுமன்றி வேறுநாட்டின் பல பிரஜைகளும் தேடிவரும் இப்புண்ணிய திருத்தலத்தின் பெருமையினை அத்திருவிழாக் காட்சி புலப்படுத்தும்.

                இவ்வாறு இவ் ஆனிமாதத்திலே இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

    வெள்ளி, 26 மே, 2017


                       பசுபதிராஜா அவர்களின் வாழ்த்துக் கவிதை


                                  🔻

    காலக் கனிரசத்தின் கருவாய் உருவாகி
    அகத்தியன் அகத்திலே சிந்தித் தேன் ஊறி
    வள்ளுவன் உளியிலே வாய்மைப் பண்பாடி
    கம்பன் வீட்டுத்தோட்டத்தில் கவிதைப் போராடி
    என் முற்றம் வந்த முத்தமிழே வணங்குகிறேன் வாழி
    உனையன்றி எனைக்காக்க ஏது அம்மா இங்கு நாதி

    கிழக்கு மாகாணம் அப்பழுக்கற்ற கல்விக்கும் கலைக்கும் பிரதானம் - நீங்கள்
    அழகு தமிழின் ஆற்றல் சொல்ல ஊற்றாக வந்த இனிய தமிழ்ப் பிரவாகம்
    உலவும் தென்றல் வந்து தேன் தொட்டு உங்கள் தமிழ் மீது முத்தமிடும்
    பலவும் தெரிந்த பலமும் உள்ளமும் இன்று மன்றம் வந்து மாற்றம் காட்டும்

    பூமி மகள் பூந்தமிழ்க்கோர் இனிய புன்னகையால் இட்டபொட்டு
    தேவி இவர் சிந்தனைகளாய் சீர்பரப்பி நிற்கும் திசைகள் எட்டும்
    வாவி மகள் வாய் திறந்து வாழ்த்து மழை வரம்புயரக் கொட்டும்
    வியத் தமிழப்பெண் கௌரியக்காவின் ஆற்றல் கேட்டு எங்கள் கரங்கள் தட்டும்

    தாயகத்தில் தொடங்கிய தமிழ் ஆர்வம் என்னும் இனிய பேராறு
    தயக்கமும் தடையுமின்றி மேலை மண்ணிலும் நின்றாடும் பலவாறு
    உயர்வும் ஊக்கமும் மிக்க ஆசிரியப் பணி உங்கள் பெரும்பேறு
    பெயர்ந்த புலத்திலும் அயராது உழைத்தால் இங்கு வாழும் தமிழ் அடலேறு

    ஓடிவிளையாடு பாப்பா மூலம் பிள்ளைகளுக்குப் பாடஞ்சொன்ன பெண்பாரதி
    நாடிவந்த நட்புக்காக என்னையே நானறியேன் என்ற நாவல் அன்பின் ஆரத்தி
    தாடியற்ற பெரியாராய் என்னோடு தர்க்கிக்கும் அறிவின் பெருமைக் கைகோர்ப்பு
    படிக்கப் படிக்க வரும் பரம்பரையே விழிக்கும் முக்கோண முக்குளிப்பு

    இலக்கியம் என்பது காலத்தின் முகங்காட்டும் முக்கிய கண்ணாடி
    துலங்கியது உங்கள் படைப்புக்கள் யாவும் இணையற்று மக்கள் முன்னாடி
    எழவேண்டும் வீழ்ந்த தமிழ்மானம் உங்கள் எண்ணங்களே ஏணிப்படி
    ஆளவேண்டும் ஆற்றல்களால் அனைத்து நெஞ்சங்களில் அன்பே முதற்படி

    ஆண்கள் படைப்பது முகவரிக்கான சுயநல சுயவரம்பிற்காய்
    பெண்களே எல்லாப் பிரசவத்திற்கும் இயற்கை வழங்கிய மருந்தாய்
    ஆதிக்க மனப்பாங்கு பெண்ணை வாயுக்குள் நாவாய் அமைத்து முடித்தது
    சாதிக்கப் பிறந்த பெண்மை மோதித் தன் முழுமை காட்டிக் கனிந்தது

    கல்லும் சாந்தும் கொண்டு கட்டிவிட்டால் அவை கல்விக்கூடம் ஆகாது
    பக்கங்களும் பாகங்களும் புத்தகம் நல்ல புதையலாய் விளங்கிவிடாது
    நோக்கங்களும் நல் ஆக்கங்;;களும் அமைந்துவிட்டால் காலச்சரித்திரம் ஆகும
    பூக்கும் புரட்சிக்கு முக்கோண முக்குளிப்பு வீரவிதை நிலம் உருவாக்கும்
    பொய்மை புறங்காட்டி ஓடும் உங்கள் படைப்புக்கள் பல அறிந்தவன் நான்
    உண்மை ஒடுக்கப்பட்ட உலகின் மீட்சிக்கு குரல் கொடுத்தவர் நீங்கள் தான்


    ஞாயிறு, 14 மே, 2017

                                தாய் மடியின் சுகம்




    வாழ்வின் ஒளிவிக்கே எனை வாழவைத்த விழிச்சுடரே
    வார்த்தைகளின் சத்தியமே நான் வாழுகின்ற மனச்சுடரே
    கூர்மையான சொற்சுடரே நற்குணந் தந்த சுடர்விளக்கே
    சீர் பெற்ற சிந்தனையே என் சிறப்புக்குள் மிளிர்பவளே

    உறவெல்லாம் இணைத் தெடுத்து பிரிவற்ற வாழ்வளிப்பாய்
    உண்ணுகின்ற வேளையெலாம் உனை மறவா நினைவளிப்பாய்
    தாயென்ற பெயர் கொண்டு தன்னிகரிலாப் பாசமளிப்பாய்
    தாயே உனைப்போலொரு தெய்வம் நானுந்தான் தேடுகிறேன்.

    சொற்களிலே தேனிருக்கும் அதில் சொல்லிவைத்த பொறுப்பிருக்கும்
    வற்றிவிடாக் கடமையிலே எம் வாழ்க்கையின் ஒளியிருக்கும்
    கற்றுத்தந்த பாடத்திலே எம் கண்ணிய வாழ்விருக்கும்
    பெற்றுக்கொண்ட போதனையில் எம் புண்ணிய செயலிருக்கும்

    கட்டுக்கட்டாய்ப் பணமிருந்தும் எம் தாயன்பு போலாமோ
    சொத்துச் சொத்தாய்ச் சொந்தமிருந்தும் தாய்ச்சொந்தம் போலாமோ
    கட்டுக்கடங்கா சுகமிருந்தும் தாய்மடியின் சுகம் போலாமோ
    விட்டுவிட்டே சென்றாலும் எம்மனம் விட்டுச் செல்லுமோ

    தொட்டிலிலே போட்டஅன்பை பெட்டியிலே அனுப்பி வைத்தோம்
    தோளினிலே போட்ட பாசமதை காட்டினிலே கொண்டெரித்தோம்
    கட்டியணைத்த  நேசமதை காட்சிப் படமாய் ஆக்கிவிட்டோம்
    காலமெல்லாம் கண்ணீர் தேங்கி கண்ணுக்குள்ளே கட்டிவிட்டோம்


    அன்பென்றால் அது அம்மா. அந்த அம்மாக்கு மகுடம் சூட்டும் இவ் இந்நாளில் அனைத்து அன்னையர்க்கும் அன்னையர்தின  வாழ்த்துக்கள்

    வெள்ளி, 5 மே, 2017

                     வையகத்தில் வைகாசி
                                     
    காலத்தின் ஓட்டத்தில், உருண்டு செல்லும் வருடக்கணக்கில், மீண்டும் ஒரு வைகாசி வாழ்க்கையின் பக்கத்தில் வந்து நிற்கின்றது. சென்ற காலங்களை மீட்டிப் பார்க்கும் வேளையிலே அதி அற்புதமான மாதமாய்த் தன்னைக் காட்டி கண் விழிக்க வைக்கின்றது. வைஸ்ணவர்களால் மாதவ மாதம் என்று கருதப்பட்டு சிறப்புப் பெறுகின்றது.

             காலங்களை இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக் காலம் என எம் முன்னோர்கள் பிரித்துப் பார்த்த போது, வைகாசி மாதம் என்பது இளவேனிற்காலமாய்க் காலப்பரப்பில் வசந்தகாலமாய் வளம் காட்டி நிற்கின்றது. பட்டமரங்கள் துளிர்க்கக் காண்கின்றோம். மெல்லிய தளிர்களில் பச்சைப்பசேலென அரும்பி நிற்கும் இலைகளையும், வண்ணக் கோலங்காட்டி புன்னகை வீசும் மலர்க் கொத்துக்களும், வகைவகையாய் அழகு காட்டும் ரூலிப் மலர்களின் வசந்த வருகையும் இக்காலத்தின் சொர்க்கங்கள் அல்லவா! அதிகூடிய குளிருமில்லை. அதிகூடிய வெப்பமுமில்லை. சில்லென்ற குளிரும் தேவையான வெப்பமும் வளரும் பயிர்களைச் சுறுசுறுப்பாக்கும் காலநிலை. தடிப்பான மேலங்கிகள் பெட்டிகளுள் அடங்க மெல்லிய மேலங்கிகளுக்கு வேலை கொடுக்கத் தொடங்கும் காலம் அல்லவா!

              காலங்கள் புத்துளிர் புனைவது போலவே வாழ்க்கையின் வசந்த பொழுதுகளும் இப்பருவகாலத்திலேயே முகிழ்கின்றது. இருமனங்கள் இணைந்து சட்டரீதியாக திருமண பந்தத்தில் இணைகின்ற காலங்கள் இவ்வசந்த காலங்களே.வைகாசி மாதத்தில பந்தல் ஒன்று கட்டி ரெண்டு வாழைமரம் வைக்கப்போறேண்டிஎன்ற பாடல் கேட்டிருப்பீர்கள். பொதுவாகவே தமிழர்கள் திருமணநாளை அநேகமாக வைகாசி மாதத்திலே வைப்பது வழக்கமாகப்படுகின்றது. தமிழர்கள் மட்டுமா?   ஜேர்மனியர்கள் கூட தமது திருமணநாளை இந்த இளவேனிற்காலத்திலேயே தெரிவுசெய்கின்றனர்.

              வாழ்க்கையின் ஆன்மீகப் பற்றுள்ளவர்களுக்குக் கூட இக்காலம் பொற்காலமே. சரவணப் பொய்கையிலே சிவபெருமானுடைய நெற்றியில் இருந்து வந்த தீப்பொறிகளால் தோன்றிய 6 குழந்தைகளை உமையாள் ஒன்றாய்ச் சேர்த்து ஆறுமுகக்கடவுளாய் உருவாக்கிய தினமும் வைகாசி விசாக தினமே ஆகும்.

                அன்புதான் இன்ப ஊன்று என்று உலகத்திற்கே அன்பைப் போதித்து புலாலுண்ணாமையை வலியுறுத்தி, செல்வச்செழிப்பை துச்சமெனக் கருதி வெறுத்து, உலகப்பற்றைத் துறந்து போதிமரத்தடியில் ஞானம் பெற்ற கௌதம புத்தர் நேபாள லும்பினி என்னும் இடத்தில் பிறந்தது இவ்வைகாசி மாதத்து பௌர்ணமி விசாகதினத்திலேயே ஆகும். வைகாசி மாத விசாக தினத்திலேயே. அவர், பிறந்தது, ஞானம் பெற்றது, இறந்தது அனைத்தும் நடைபெற்றுள்ளது.

                 பொதுவாகவே மேமாதம் என்றவுடன் எம் எண்ணத்தில் முதலில் தோன்றுவது விடுமுறை, தொழிலாளர் தினம். அதுவே எமக்கு மிக அவசியமானது என்பாரும் உண்டு. 18 ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19ம் நூற்றாண்டு ஆரம்பப்பகுதியிலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலிலுள்ள தொழிலாளர்கள் 8 மணிநேரம் வேலை கேட்டு நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் விழைவே இன்றைய உலகலாவிய ரீதியில் நடக்கும் மேதினக் கொண்டாட்டமும் அதன் மூலம் எமக்குக் கிடைக்கும் விடுமுறைதினமும் ஆகும். ஆனால், கனடா, அமெரிக்கா செப்டெம்பர் மாத முதல் திங்கட்கிழமையில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன.

                 எனவே காலங்களில் அவள் வசந்தம் என கண்ணதாசன் பெண்ணை வர்ணித்துப் பாடிய பெருமை இப்போது புலப்படுகின்றது அல்லவா!

           


    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...