• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்
    நூல் விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
    நூல் விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

    சனி, 3 மே, 2025

    ரசவாதி நூல் அனுபவம்



    நூல்: ரசவாதி

    ஆசிரியர் பாலோ கொயலோ
    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

    இந்த நூலின் ஆசிரியர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்.

    உங்கள் கனவுகளை பின்தொடர்ந்து செல்வதைப் பற்றிய ஒரு கற்பனை கதை.
    16 வயது வரை ஒரு கிறிஸ்தவ பாதிரியாராக ஆவதற்கு பயிற்சி அளித்த ஒரு பயிற்சி பள்ளிக்குச் சென்றிருந்த சான்டியாக்கோ இன்னும் இளைஞன்   செம்மறியாடு மேய்ப்பவனாக பல இடங்களுக்குச் சென்று உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஆசைப்பட்டு புறப்படுகின்றான். செல்லுகின்ற பாதையிலே தான் செம்மறியாடுகளை மேய விட்டுத் தான் வாசிக்கின்ற புத்தகத்தை தலையின் கீழே வைத்து அவன் தூங்குவான். தன்னுடைய புத்தகங்களில் தனக்கு மிகவும் பிடித்தமான சில பகுதிகளை அவன் செம்மறி ஆடுகளுக்கு படித்துக் காட்டுவான். புல்வெளிகளில் ஆடுமேய்க்கும் ஒரு இடையனின் தனிமையையும் மகிழ்ச்சியையும் பற்றி அவன் அவற்றிடம் கூறுவான். அவன் கண்ட ஒரு  கனவை நோக்கி பிரயாணம் செய்கின்றான். இடையிலே சலேம் நகரின் அரசனை, ஆங்கிலேயரை, ஒரு ரசவாதியை, ஒரு அரசனை, ஒரு முதியவரை, ஒரு படிகக்கல் விற்பனையாளர்,  இரண்டு பெண்களை, பாலைவனத்து மக்களைஎன்று சந்தித்து அவர்கள் பற்றியே விடயங்களை அறிகிறான் அவர்களைப் பற்றி எல்லாம் மிக அழகாக இந்த புத்தகத்தில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது. இறுதியில் அவன் தேடிச்சென்ற புதையலைக் கண்டுபிடிப்பதாகக் கதையை ஆசிரியர் முடித்திருக்கின்றார்.

    இந்த நூலில் பல விடயங்களை கேட்டுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஈயத்தை எப்படி தங்கமாக மாற்றுகிறார்கள் என்னும் ரசவாத வித்தையையும் பிரபஞ்சம் பற்றிய பல அற்புதமான தகவல்களையும் நெல் காலத்தில் மீது ஒருமித்த கவனம் செலுத்தினால் , அதை மேம்படுத்த முடியும்.  நிகழ்காலத்தை மேம்படுத்தினால் பின்னால் வருகின்ற விஷயங்களும் சிறப்பானவையாக இருக்கும்.

    உண்மையில் ஒன்றை ஆழமாக விரும்பினால், அதை அடைவதற்கு ஒட்டுமொத்த பிரபஞ்சமும் எப்போதும் சாதகமான காய்களை நகர்த்திக் கொண்டே இருக்கும்

    இந்த பூமியிலே இருக்கின்ற எல்லாமே தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஏனென்றால் இந்த பூமி ஜீவன் உள்ள ஒன்று அதற்கு ஒரு ஆன்மா இருக்கிறது நாம் அந்த ஆன்மாவின் ஒரு பகுதி எனவே அது நமக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை நாம் அரிதாகவே உணர்கிறோம்.

    மணல் துகள்களில் ஒரே ஒரு துவடை எடுத்து ஆய்வு செய்தால் போதும் படைப்பின் அதிசயங்கள். அனைத்தையும் அதிலே காணலாம்

    நீங்கள் சொல்வதை வாழ்க்கை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருக்க கூடும்
    இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் அவர் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் சரி இவ்வுலக வரலாற்றில் அவர் ஒரு மைய பாத்திரம் வகிக்கின்றார். வழக்கமாக அவர் அதை அறிந்திருப்பதில்லை
    தங்கள் கனவைப் பின் தொடர்ந்து செல்லுகிறவர்களுக்கு வாழ்க்கை தாராளமாக அள்ளி வழங்குகிறது.
    தினமும் ஒரே மாதிரியான விஷயங்களை தான் மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்று அர்த்தம் சாகச முயற்சிகளில் இறங்கும் போது தான் நீங்கள் உயிர்த்துடிப்போடு இருக்கிறீர்கள்

    பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே பரிணாம வளர்ச்சி அடைந்தது தான் அறிவார்ந்த மனிதர்களைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஒரு மிக அதிகமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள ஒரு உலோகம் மட்டுமே.

    ஒவ்வொரு புத்தகங்களும் மனதுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.  இந்த புத்தகம் உன் இதயம் சொல்வதை நீ கேள், உன் நோக்கத்தை உன் கனவை நினைத்து நீ பயணம் செய்தால் ஒருமித்த சிந்தனை அதிலேயே வைத்து உன் பயணத்தை தொடர்ந்து செல் என்னும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

    இதயம் என்பது மூளை. எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனக்கு இந்த நூல் மனத்துக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

    திங்கள், 28 ஏப்ரல், 2025

    யாத்வஷேம் நூல் விமர்சனம்

     


    ஒரு புத்தகம் படிக்கும் போது கலாசாரம், மொழி, வரலாறு, மனித உணர்வுகள் போன்றவற்றை வெகுவாக நாம் கற்றுக் கொள்ளலாம். அதற்கு உதாரணமாக திகழ்கின்ற புத்தகம் தான் யாத்வஷேம். இந்த நூலை நேமிசந்த்ரா என்னும் கன்னட எழுத்தாளர் எழுதியுள்ளார். இதனைத் தமிழில் கே. நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது இந்த நூலுக்கு கிடைத்திருக்கின்றது.

    இந்த நூலின் பெயர் யாத் வஷேம் என்பது மரணம் அடைந்த ஆறு மில்லியன் யூதர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற இடம் வாலன் பேர்க் என்பவர் தான் இதனை அமைத்திருந்த

    இது ஹிட்லருடைய யுத்த காலத்தில் ஜெர்மனி பெர்லினில் இருந்து தப்பித் தன்னுடைய தந்தையுடன் வந்த ஒரு பத்து வயது சிறுமி  ஹ்யானா கூறுகின்ற கதை.  வந்த ஒரு வருடத்தில் தந்தை இறந்து விடுகின்றார். தனித்து நின்ற பிள்ளையை கன்னட மொழி பேசுகின்ற ஒரு குடும்பம் எடுத்து வளர்க்கின்றது. அந்தக் குடும்பத்திலேயே இருக்கின்ற விவேக்கை ஹ்யானா திருமணம் செய்கின்றாள். திருமணமாகி குழந்தை பெற்றெடுக்கின்றாள். தமிழ் பெண்ணாகவே அனிதா என்ற பெயருடன் அவர்களுடன் வாழுகின்றாள். அவளுடைய எழுபதாவது வயதில் மகன் பல வருடங்களாக கனவு சுமந்த அனிதாவை அவருடைய அம்மாவையும் சகோதரர்களையும் தேடிச் செல்ல விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கின்றான். தனது மனைவியின் சுமையை இறக்கி வைப்பதற்காக விவேக் ஹ்யானாவை அழைத்துக் கொண்டு இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி, ஆம்ஸ்ரடாம், என்று தேடுகின்றான். தன்னுடைய தாய் சகோதரர்களை அவள் கண்டுபிடிக்கின்றாளா என்பது தான் இந்த கதையின் முடிவு. இதை அறிவதற்கு நிச்சயமாக நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு இடமாக அவள் செய்கின்ற போது அந்த இடத்தில் நடந்த சம்பவங்கள் காட்சிகள் மனதை உருக்குகின்ற சம்பவங்கள் அனைத்தையுமே வாசிக்கக் கூடியதாக இருக்கும். ஜெர்மனியில் யூதர்கள் பற்றிய எத்தனையோ திரைப்படங்களை தொலைக்காட்சியில் நான் பார்த்திருக்கின்றேன் ஆனால் இந்த புத்தகத்தை வாசிக்கின்ற போது நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒரு அழுத்தத்தை இந்த புத்தகம் ஏற்படுத்துகின்றது.

     

    ஜூதர்கள் பாதிக்கப்பட்டார்கள் யூதர்களால் பாலஸ்தீனர் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று இறுதி பகுதியில் அனிதா என்ற கதாபாத்திரம் சொல்லுகின்ற போருக்கு எதிரான நியாய தீர்ப்புகள் மிக சிறப்பாக அறிவுறுத்தலாக அமைந்திருக்கின்றன.

     

    இறுதிப் பகுதியில் அவசியம் இல்லாத யுத்தத்தையும் மனிதநேயமற்ற கொலையையும் கண்டிக்கும் வண்ணமாக இக்கதையின் நாயகி ஹ்யானா பேசுவதாக கதை முடிந்திருக்கின்றது.

     

     

    இப்போது இஸ்ரேல் வந்திருக்கின்றாள். இஸ்ரேல் என்றால் 3000 ஆண்டுகள். பழமையான வரலாறு இருக்கின்றது. வெற்றி கொண்ட அரசன் என்பதுதான் அதன் பொருள். ஹீப்ரோ மொழியில் பாலஸ்தீனம் என்றால் பாலஸ்தீனர்களின் பெருமை என்று பொருள்.

    யூத மதத்தவர்களுடைய மொழியையும் பழக்கவழக்கங்களையும் இந்த நூலிலே நாம் கற்றுக் கொள்ளலாம் அவர்களுடைய சபாத் என்னும் சனிக்கிழமை விரதம் பார்த் மிஸ்வாக் என்னும் பூப்புனித நீராட்டு விழா போன்ற பல விடயங்களை நாம் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய உடலை எப்படி புதைக்கின்றார்கள்? 60 லட்சம் யூதர்களும் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள்.

    பிராமணர்கள் பிராமணர்கள் அல்லாதவர்களில் உள்ள பிராமணர்கள் அதாவது குஞ்சுடிகர்கள், அவர்களுடைய பழக்கவழக்கங்கள் பிராமணர்களுடைய பழக்க வழக்கங்கள், பெங்களூர் கோரிப்பாளையத்தில் காணப்படும் யூதர்களுடைய சமாதிகள் புனித டோராவின் சொல்லப்பட்டிருப்பவை ஆபிரகாமின் பிள்ளைகள் பெற்ற விபரம், ஹீப்ரு மொழி சொற்கள்விஷவாயு, டி கம்ப்ரஷன் அறை, Dachau Staft in München. Holocaust Museum I Washington, அழுகைச் சுவர், ஜெருசலேம் பற்றிய விளக்கங்கள்

    சில புத்தகங்கள் இதுவரை நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கு ஒரு தீர்ப்பாக அமைவதை நீங்கள் அறியக்கூடியதாக இருக்கும் உங்களுக்கு தீர்ப்பை நீங்களே வழங்குவீர்கள். உன்னையே இந்த புத்தகத்தை வாசித்த போது என்னுடைய பல அறியாமைகள் நீங்கின. ஒரு நூலுக்காக இந்த எழுத்தாளர் சேகரித்த அனுபவங்களையும் அறிவையும் எம் போன்ற வாசகர்களுக்கு பயன்படுத்தியமைக்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்

    சனி, 4 ஜனவரி, 2025

    உள்ளத்தின் குரல் - பிரேம் ராவத்

     


    உள்ளத்தின் குரல்

    ஆசிரியர்:  பிரேம் ராவத்

    வெளியீடு: 2024

    12 அத்தியாயங்களில் 357 பக்கங்கள்  


    இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியை காண்பது எப்படி?

    என்பதை உள்ளத்தின் குரல் என்ற பெயருடன் பிரேம் ராவத் அவர்கள் எழுதியுள்ளார்.

     

    இவர் 1957-இல் இந்தியாவின் ஹரித்துவார் இல்  பிறந்துள்ளார். ஹரித்துவார் என்றால் கடவுளை அடைவதற்கான வாசல் என்று பொருள். அமைதி என்ற விஷயம் பற்றி உரையாற்றுகின்ற சிறந்த பேச்சாளரான ஸ்ரீ ஹன்ஸ்ஜி மகராஜன் மகனாகத்தான் இவர் பிறந்தார். இவருக்கு எட்டரை வயதாக இருக்கும் போது இவருடைய தந்தை இறக்கின்றார். அதன்பின் அவருடைய வாழ்வில் குறிக்கோள் அவருக்குத் தெளிவானது. அவர் எவ்வாறு மக்களிடம் அமைதியை ஏற்படுத்தச் செய்தாரோ அதனையே பிரேம் ராவத் அவர்கள் செய்யத் தொடங்கினார்.

     

    ஒரு விமானம் செலுத்தும் பணிபுரிந்த இவர் மனத்தின் அமைதியை மற்றவர்களுக்கு கொண்டு வருவதற்கு அவர்களைச் செலுத்துகின்ற ஒரு தூண்டியாக பயன்படுகின்றார். 13 வயதில் இருந்து மகிழ்ச்சி மற்றும் அமைதியின் நடைமுறைச் செய்தியை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கொண்டு வருவதற்கான ஒரு சர்வதேச முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

     

    சர்வதேச மட்டத்தில் மிக அதிக அளவில் விற்பனையான Peace of Possible என்ற புத்தகத்தின் ஆசிரியராகவும் இருக்கின்றார். இந்தப் புத்தகம்  Hear  yourself  என்ற இவருடைய புத்தகத்தின் தமிழ் வடிவமாக இருக்கின்றது.

    வாழ்க்கை பற்றிக் கூறுகின்ற போது நாம் 70 ஆண்டுகள் வாழ்ந்தோம் என்றால் 25.550 நாட்கள் வாழ்வோம். நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் 36.500 நாட்கள் மட்டுமே. ஒரு சுவரில் இருந்த ஒரு கதவு வலியாக உயிர் பெற்று வந்து இன்னொரு இன்னொரு சுவரின் கதவு வழியாக நாங்கள் வெளியேற வேண்டியது அவசியம். சிலர் இரண்டாவது சுவருக்கு அப்பால் என்ன இருக்கின்றது என்று நினைக்கின்றார்கள். ஆனால் இரண்டு சுவர்களுக்கும் இடையில் இருப்பது என்ன என்றுதான் அறிய ஆவலாக நான் இருக்கிறேன் என்று பிரேம் ராவத் அவர்கள் கூறுகின்றார்.

    உன்னையே நீ அறிவாய். உன் உள்ளத்தின் அமைதியே உலகத்தின் அமைதி. அதை அடைவது எப்படி என்பவற்றை இந்த நூலுக்குள் புதைந்து கிடக்கின்றது. தன்னை அறிவதே விவேகத்தின் ஆரம்பம் என்கிறார் அரிஸ்டாட்டில் தன்னை உணர்தலின் மூலம் கிடைக்கும் அமைதியிலிருந்து நமக்கு சந்தோஷம், தெளிவு, நிறைவு, அன்பு, வலிமை, போன்ற உணர்வுகளும்  நல்லனவையும் அமையப் பெறும்.

    எகிப்திய லக்சர் கோவிலின் உட்புறத்திலே ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த மனிதா உன்னையே நீ அறிந்து கொள் அப்போது தெய்வங்களை நீ அறிந்து கொள்வாய் என்ற வார்த்தைகளில் இருந்து தான் சாக்ரடீஷன் இந்த உன்னையே நீ அறிவாய் என்ற வரிகள் வந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார். உன் கலாச்சாரத்தை அறிந்து கொள் உன் சமூகத்தை அறிந்துகொள் ஏற்று குறிப்பிடவில்லை உன்னை நீ அறிவாய் என்றுதான் மிகத் தெளிவாக பொறிக்கப்பட்டிருக்கின்றது. தன்னை அறிவது தான் விவேகத்தின் ஆரம்பம்.  நம்முள்ளே விவேகம் நிறைந்த ஒரு உண்மை நிலை உள்ளது எனவும் சீன தத்துவஞானி ஆன லாவோ சூ சொல்கின்றார் உங்கள் நண்பர்களை அறிந்து கொள்வது புத்திசாலித்தனம் ஆனால் உங்களை நீங்கள் அறிந்து கொள்வது தான் உண்மையான விவேகம். இதற்குக் கவிஞர் ரோமி சொல்லிய கவிதையை எழுத்தாளர் கொண்டு வருகின்றார். நேற்று நான் புத்திசாலி அதனால் உலகை மாற்ற விரும்பினேன். இன்று நான் விவேகி அதனால் என்னையே நான் மாற்றிக் கொண்டேன் என்று இதனை 600 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பவர் “நமது உலகத்தில் எல்லோரும் மனித இனத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என சிந்திக்கிறார்களே தவிர தம்மைத் தாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒருவரும் சிந்திப்பதில்லை என்று சொல்லுகின்றார். இவ்வாறு விவேகத்துக்கான விளக்கம் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

     

    மனம் பற்றி இவர் சொல்லுகின்ற போது நமது மனம் ஒழுங்காக செயல்படுவதற்கு அதனுள் போடப்பட்ட அனைத்து விஷயங்களையும் சார்ந்திருக்கும் அதே வேளையில் இதயமானது மரபணுக்களைச் சார்ந்தே செயல்படுகிறது என்கின்றார்.

     

    பிரான்ஸ் தேசத்து எழுத்தாளர் ஆந்துத சென் எக்ஸ்யுபெரி  பூரணத்துவம்   என்பது மேலும் சேர்த்துக் கொள்ள எதுவுமில்லை என்பது அல்ல.  ஆனால் மேலும் நீக்கிவிட எதுவுமில்லை என்பதுதான் என்கிறார்.

     

    எங்களுக்கு விருப்பமான ஒரு ஆடையை அணிந்து கொண்டு வேலை எல்லாம் செய்தால் அது அழுக்காகும் ஆனால் பின் அதை நாம் கழுவித்தான் தூய்மையாகுவோம் தூய்மையை அதில் கொண்டு சேர்க்க மாட்டோம். அதே போல் தான் எங்களுக்குள் இருக்கின்ற அமைதியைக் கண்டறிவது அமைதியை சேர்ப்பதில்லை தேவையற்றவற்றை அகற்றுகின்றீர்கள். தன்னை அறிவது என்பது உங்கள் உண்மையான இயல்பை பிரகாசிக்க அனுமதிப்பது.

    மைக்கல் அஞ்சலோவிடம் சிறந்த சிற்பத்தை எப்படி ஆக்கினார்கள் என்று கேட்டபோது அவர் சொன்ன டேவிட்டின் இல்லாத பகுதிகளை அகற்றி விட்டேன் என்று கூறினார். அப்படி அகற்றுகின்ற போது தத்துரூபமாக நாம் எம்மை  உணர்வோம்

     

    ஒருமுறை புத்தர் சீடன் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது நகரத்தில் இருந்த யாவரும் அவரை நீங்கள் நல்லவரல்ல.  நீங்கள் அதை செய்வதில்லை இதை செய்வதில்லை என விமர்சித்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்றார்கள். புத்தர் இவர்கள் எல்லாம் உங்களை விமர்சிப்பது உங்களுக்கு கவலையாக இல்லையா என புத்தரின் சீடன் அவரிடம் கேட்டான்.  புத்தர் தம் வீடு திரும்பும் வரை காத்திருந்து தன்னுடைய ஒரு  கிண்ணத்தை எடுத்து அந்த சீடனை நோக்கி நகர்த்தினார்.  இது யாருடைய கிண்ணம்? என சீடனிடம் அவர் கேட்டார் சீடன் இது உங்களுடையது என்றான்.  அந்த கிண்ணத்தை மேலும் சீடனுக்கு சிறிது அருகிலே நகரத்தினார். இது யாருடைய கிண்ணம் இப்பொழுது கூட இது உங்களுடைய கிண்ணம் என்று சொன்னார். இப்படியே தொடர்ந்து அவர் செய்து கொண்டிருந்தார். சீடரும் தொடர்ந்து இது உங்களுடைய கிண்ணம் என்று கூறிக்கொண்டிருந்தான். இறுதியில் அந்த கிண்ணத்தை எடுத்து சீடரின் மடியில் வைத்துவிட்டு இப்பொழுது இது யாருடைய கிண்ணம் என்று கேட்டார் இப்பொழுதும் இது உங்களுடையது தான் என்றான். சரியாகச் சொன்னாய் என்ற புத்தர் கூறினர் இந்தக் கிண்ணத்தை உன்னுடையது என்று நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இது உங்களுடையது அல்ல. மற்றவர்களின் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது என்னுடையது அல்ல என்று கூறினர்

     

    இவ்வாறு பல கதைகள், தத்துவஞானிகளின், கவிஞர்களின் கருத்துக்களை எடுத்துக்காட்டி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதைகள் மூலமாக விளக்கி இந்த நூலை ஆசிரியர்  தந்திருக்கின்றார்

     

    வாழ்க்கை பற்றி சொல்லுகின்ற போது வாழ்க்கை ஒரு வறண்ட பாலைவனம் போல தோன்றினாலும் அங்கு ஒரு அற்புதமான தோட்டத்தை உருவாக்க தேவையான விதைகள் அவை முளைப்பதற்கு சரியான சூழ்நிலைக்காக மண்ணுக்குள் காத்துக் கிடக்கின்றன. நாம் பிறந்த கணத்திலிருந்து அதை நம்முள்ளே இருக்கின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த விதைகள் செழித்து வளர தேவையான நீரை தொடர்ந்து ஊற்றுவதும் தெளிவு என்னும் ஒளி வர இடம் அளிப்பதும் தான் அதை நாங்கள் செய்கின்றபோது அந்த பாலைவனம் மலர்ந்து பலவிதமான வர்ண பூக்களால் பூத்துக் குலுங்கும். அமைதி தன்னைத்தானே வெளிப்படுத்த விரும்புவது நான் அங்கே இருப்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று அது விரும்புகிறது அமைதி மலர விரும்புகின்றது. நமது சூழ்நிலைக்கு எதுவாக இருந்தாலும் நமது சுற்றுச்சூழல் எப்படி இருந்தாலும் நாம் நமது உள்ளார்ந்த இயற்கை முழுமையாக வெளிப்படுத்த ஒரு வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்

     

    ஒருமுறை கலிபோர்னியாவில் சாந்தா குரூசில் ஒரு நிகழ்விலே இவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஒருவர் யோகாசனத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இவரும் யோகாசனம் ஒரு பூஜ்ஜியம் என்று கூறினார். கோபமடைந்த அவர் தனக்கு எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்று சென்றுவிட்டார். அதன்பின் அறையில் இருந்தவரிடம் பூஜ்ஜியத்தை ஒன்றுக்கு முன்னால் வைத்தால் ஒன்று ஒன்றாகவே இருக்கு பூஜ்ஜியம் பூஜ்ஜியமாகவே இருக்கும். பூஜ்ஜியத்தை ஒன்றுக்கு பின்னால் வைத்தால் கிடைப்பது பத்து இன்னொரு பூச்சியத்தைச் சேர்த்தால் நூறு. அதனால் அது தான் சிறப்பான பதில் என்று நான் நினைத்தேன் என்று கூறினார்.

     

    ஆழ்ந்த அமைதி என்பது நமக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு நதி போன்றது. சில சந்தர்ப்பங்களில் நாம் வளமும் இல்லாத, நிறமும் இல்லாத நிழலும் இல்லாத எதுவுமே வளராத வறண்ட நிலத்தில் இருப்பதாக உணரலாம். அங்கே அதன் பின்னர் கடினமான மண்ணில் இருந்து அமைதியின் துளிகள் பொங்கி எழுந்து ஒளியில் மின்னி விழுந்து பழைய ஆற்று படுக்கையை தேடி வறண்டு பிளவு பட்ட நிலத்தில் பாயத் தொடங்கும் நீர்க்குமிழிகள் மேல் எழுந்து பள்ளத்தாக்கில் நகர்ந்து செல்லுகின்ற போது பல விஷயங்கள் நடைபெறுகின்றன.

     

    ஆற்றங்கரையில் புல் தளிர்கள் வளரத் தொடங்குகின்றன. வறண்ட பூமியிருந்த விதைகள் முளைவிட்டு மலர தொடங்குகின்றன. அந்த புள்ளையும் தழைகளையும் உண்பதற்காக வண்டுகள் வரத் தொடங்குகின்றனர் பெரிய வண்டுகள் சிறிய வண்டுகளை உண்ண விரும்புகின்றன அத்துடன் அவை உணவு தேடிய அலையும் பறவைகளையும் கவர்கின்றன. அந்தப் பறவைகள் பல்வேறு விதைகளை அங்கு கொண்டு வருகின்றன. இப்போது செழிப்பாக இருக்கின்ற நிலத்தில் விதைகள் விழுகின்றன. அங்கே மரங்கள் வளருகின்றன. பழங்களின் பாரத்தால் மரக்கிளைகள் வளைகின்றன. பூச்சிகளின் சத்தம், பறவைகளின் ஒலிகள், காற்றை இசையினால் நிரப்புகின்றன. இந்த காட்டில் இருந்து வருகின்ற நறுமணம் உயிரினங்களுக்கு அழைப்பு விடுவதாய் இருக்கும். ஒவ்வொரு தாவரத்தின் மற்றும் பிராணியின் பரிணாம வளர்ச்சி தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் அவை அனைத்திற்கும் செழித்து வளர்வதற்கு தண்ணீர் தேவை வாழ்வை நலச் செய்வதற்கான தண்ணீர் அமைதி அமைதி ஒன்றுதான்

     

    இவர் பேராசை பற்றி சொல்லுகின்ற போது பேராசை என்பது நாம் விரும்பும் ஒன்றை மேலும் அதிகமாக பெறும் வரை நாம் ஆனந்தம் அடைய முடியும் என்று ஒரு உணர்வுதான் ஏற்படும். ஆனால் நம்முடன் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றி உணர்வோடு இருக்கின்ற போது நிறைவான உணர்வை நாம் நெருங்குகின்றோம். அந்த நன்றி உணர்வுடன் நாம் நம்மை முழுமையாக இணைத்துக் கொண்டவுடன் பேராசைக்கு ஒரு முடிவு வந்துவிடும் என்கின்றார்.

     

    விருப்பங்கள் இருப்பதில் தவறில்லை அவை நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை சேர்க்கின்றன. அவற்றால் பணப்பரிமாற்றம் இடம்பெறுகின்றன. மக்கள் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் உங்களுக்கு இன்றைக்கு பிடித்தது நாளைக்கு பிடிக்காமல் போகலாம் அதுதான் விருப்பத்தினுடைய இயல்பு விருப்பங்கள் மாறாவிட்டால் அது அர்த்தமற்றது. விருப்பம் என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.  விருப்பம் ஒருபோதும் திருப்தி படுவதில்லை. நாம் நம்முடைய தேவைகளை மறந்து விருப்பங்கள் மீது அதிகமாக கவனம் செலுத்துகின்றோம் பழகப் பழக பாலும் புளிக்கும் என்ற பழமொழி படி இந்த மக்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறோமோ அவர்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விடுவோம். நம் வாழ்விலே அத்தியாவசியமான தேவைகளைப்  பொறுத்தவரையில் பெரும்பாலும் இப்படித்தான் நடக்கிறது நாம் எத்தனை பேர் இன்று காலை விழித்தவுடன் நன்றி கூறுகின்றோம்

     

    கவிஞர் கபீரின் ஒரு கவிதையை எடுத்து வருகின்றார். அதாவது,

     

    எள்ளுக்குள் எண்ணெய் இருப்பது போல

    சிக்கி முக்கி கல்லில் தீப்பொறி இருப்பது போல்

    தெய்வீகம் உனக்குள் இருக்கிறது

    உன்னால் முடிந்தால் அதைக் கண்டு கொள்.

     

    என்கிறார். இந்த உலகத்திலே மனிதர்களுடைய வாழ்க்கை முடிவடையும். பூமியின் வாழ்நாளும் முடிவடையும், நட்சத்திரங்களும் அழிந்து போகும் உருவமற்ற தெய்வீகமானது நிலைத்திருக்கும். நாம் உயிரோடு இருக்கும் காலம் முழுவதும் தெய்வீகம் நமக்குள்ளே செயல்படுகிறது. அதனால் நமக்குள்ளே ஒரு அற்புதமான ஆசீர்வாதமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த தெய்வீகம் நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்டது. நீங்கள் தெய்வீகத்தின் மதிப்பை உணர அதை அதனுடைய கண்களாலேயே பார்க்க வேண்டும். உங்களுக்குள் இருக்கின்ற தெய்வீகத்தை உங்கள் கண்களால் பார்க்க வேண்டும். அந்த தெய்வீகத்தை கொண்டிருக்கின்ற பாத்திரம் தான் நீங்கள்.

     

     

    பிளவர் மேன்டிஸ் என்னும் பூச்சி  தான் அமர்ந்திருக்கும் பூவின் வடிவத்தை எடுக்கக் கூடியது. அதைக் கடந்து செல்லும் வேறொரு பூச்சி அதை பூவொன்றே நம்புகிறது. அந்த ஆபத்தான பிளவர் மேன்டிஸ்  அசைந்து தன்னுடைய உண்மையான வடிவத்தை வெளிப்படுத்தும் தருணத்தில் அது பூச்சி அது பூ அல்ல என்பதை பறந்து சென்ற பூச்சி புரிந்து கொள்கிறது.  இதேபோல வாழ்க்கை என்றால் என்ன என்பதை உண்மையில் நாம் எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறோம். பூவை மட்டும் காணும் அந்த பூச்சியை போல ஒரு நொடிப் பொழுதிற்கு உண்மை தென்பட்டாலும் நாம் மாயையினுள் மீண்டும் திரும்பி விடுகின்றோம்.

     

    இவ்வாறு பல கதைகள் பல அறிஞர்களின் கருத்துக்கள் கவிஞர்களின் கவிதைகள் எல்லாவற்றையும் கையாண்டு இந்தப் புத்தகத்தின் மூலமாக மனித வாழ்க்கையில் அமைதியைக் கொண்டு வருவதற்கான பல வழிமுறைகளை ஆசிரியர் கையாண்டு இருக்கின்றார். 13 வயதில் ஆரம்பித்த இவருடைய இந்தப் பயணம் இன்னும் தொடர்கிறது.

     

    357 பக்கங்களுடன் நிறைவாக இருந்த இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது மனத்துக்குள் ஒரு தெய்வீக உணர்வு ஏற்படும்.  அமைதியை தேட வேண்டிய அவசியத்தை உள்ளுணர்வு உணர்த்தும். அவசியம் ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் இது.

     

    வியாழன், 10 ஆகஸ்ட், 2023

    அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்


    "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்  

    எவருமே வெறுக்காமல் எல்லோருமே விரும்பிய ஏவுகணைகளை விட மாணவர்களின் வினாக்களுக்கு விடை தருவதை பெருமையாக நினைத்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பற்றிய அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் என்ற புத்தகம் பற்றிய என்னுடைய பார்வை.

    இந்த நூலை குடந்தை பாலு அவர்கள் எழுதியிருக்கின்றார். இதை வாசித்த போது அப்துல்கலாம் அவர்கள் மேல் எனக்கு இருந்த மதிப்பு இன்னும் ஒரு படி மேல் உயர்ந்தது. இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கின்றார் என்று பெருமையாக அவரைப் பற்றி நினைத்தேன். 15.10. 1931 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் ஒரு சின்னஞ் சிறிய கிராமத்தில் வறுமைக் கோட்டில் பிறக்கின்றார். 27. 7. 2015 ல் I.A.M மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் இறக்கின்றார். 

    இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற சில சம்பவங்களை ஆசிரியர் குடந்தை  பாலு அவர்கள் தொகுத்திருக்கின்றார். அவருடைய இந்த நூல் உலகத்துக்கு இவர் ஆற்றிய சிறந்த பணி என்றே கருதுகின்றேன். அவர் எடுத்துக் காட்டியதில் சிலவற்றையே நான் கொண்டுவருகின்றேன்.

    டாக்டர் அப்துல் கலாமிடம் ஒரு நல்ல ஆசிரியருக்கு என்ன தகுதி வேண்டும் என்று ஒரு மாணவன்  கேட்டபோது அவர் ஆசிரியர் பணியை விருப்பத்துடன் செய்ய வேண்டும் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் அத்துடன் ஆசிரியர் புனிதமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாராம். 

    கல்புத்தூர் என்ற சிற்றூரில் இருந்த  சுடர்க்கொடி என்ற ஒரு மாணவி டாக்டர் அப்துல் கலாமிடம் விஞ்ஞானி தமிழன் மனிதன் இந்தியன் இவர்களை நீங்கள் வரிசைப்படுத்துங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அப்துல் கலாமும் மனிதனுக்குள் மற்ற மூவரும் அடங்கி இருக்கிறார்கள் என்று ஒரு நுட்பமான பதிலை கூறினாராம். 

    டாக்டர் அப்துல் கலாம் ஐந்தாம் வகுப்பு ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அந்த கால வழக்கத்தின்படி தலையிலே தொப்பி அணிந்திருந்தாராம். அவருக்குப் பக்கத்திலே பூணூலும் குடுமியுமாக அவருடைய நண்பன் ராமநாத சாஸ்திரி என்ற பிராமணர் சிறுவனும் அமர்ந்திருந்தானாம்.  இவர்களுடைய வகுப்பிற்கு வந்த ஆசிரியர் கலாமை பார்த்து கடைசி வரிசையில் போய் இருக்கச் சொன்னாராம். இதை தந்தையிடம் சென்று ராமநாத சாஸ்திரி அவர்கள் கவலையுடன் முறையிட்டாராம்.

    இதைக் கேட்ட அவனுடைய தந்தை லட்சுமணனை சாஸ்திரிக்கு அடக்க முடியாத கோபம் வந்து குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள் அவர்கள் மனம் பரிசுத்தமானவை அவற்றில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற நச்சு கருத்துக்களை புகுத்த கூடாது இறைவன் என்பவன் ஒருவனே சம்பிரதாயங்கள் தான் வேறு வேறு ஆனது என்று அறிவுரை கூறினாராம் இதுதான் கலாமுடைய வாழ்க்கையில் ஆழ்மனதில் பதிந்து எல்லா மதத்தினரையும் மதிக்க கூடிய பக்குவத்தைக் கொடுத்தது என்று அவர் கூறுகின்றார்.

    அப்துல் கலாமுடன் இணைந்து பேராசிரியர் அருண் திவாரி சில நூல்களை எழுதி இருக்கிறார். அவர் கலாமிடம் ஐயா உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாகச் சில வரிகள் கூறுங்கள் என்று கேட்ட போது

    அன்பைக் கொட்டி

    வளர்க்கப்பட்ட ஒரு குழந்தை

    வளர்ந்ததும் போராட்டம் மேலும் போராட்டம்

    துன்பத்தை வெளிப்படுத்தும் கண்ணீர்

    பின் ஆனந்தக் கண்ணீர்

    இறுதியில்

    எழில் நிலவின்

    உதயம் காண்பது போன்ற நிறைவு

    என்றாராம் .


    போலியோவால்  பாதிக்கப்பட்டு 3, 4 கிலோ எடையுள்ள செயற்கைக்கால் அணிந்த குழந்தைகள் நடப்பதற்குக் கடினப்படுவதைக் கண்டு ஏவுகணைக்குப் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு ஃப்ளோர் ரியாக்ஷன் ஆர்தொஸிஸ் என்ற எடை குறைவான 300 400 கிராம்கள் மட்டுமேயுள்ள செயற்கைக் கால்களைத்  தயாரித்தார். அதனை அணிந்த குழந்தைகள் மகிழ்ந்ததைக் கண்ட அவர்  அணு  சோதனையிட்டது ஏவுகணை செலுத்தியது என இவற்றை விட இந்த செயற்கை கால் கண்டுபிடிப்பைத் தான்  நான் பெருமையாக நினைக்கிறேன் என்று கூறி மகிழ்ந்தார் 

    திருச்சி பீமநகர் எஸ் டி ஏ மெட்ரிகுலேஷன் பள்ளி  முதலாம் வகுப்பு மாணவன் உங்களின் சிரிப்பு, புத்திசாலித்தனம்,  சுறுசுறுப்பு இவை எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் உங்களைப் போலவே நானும் அறிவு ஜீவியாக வேண்டும். அதுவே என் லட்சியம் என்று   ஒரு கடிதம் எழுதி அனுப்பினானாம். அதற்கு டாக்டர் அப்துல் கலாமும் 

     

    அன்புள்ள சமீர்!  கற்பது படைப்பு திறனைத் தரும் படைப்புத்திறன் சிந்தனைக்கு வழிகாட்டும். சிந்தனை அறிவைத்தரும். அறிவு உங்களை உயர்ந்த மனிதனாக்கும் என்று பதில் எழுதி அனுப்பினார்

     இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்காவுக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றச் செல்ல வேண்டி இருந்தது. உரையாற்றுவதற்கு முந்தைய தினம் இரண்டு மணிக்கு தன்னுடைய ஆலோசகர் பொன்ராஜ் என்பவரை எழுப்பி உடனடியாக நான் பிரதமர் மன்மோகன் சிங் இடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றாராம். பொன்ராஜும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்கிறார் கலாம் தொலைபேசியில் பேசுகின்றார் என்ற திட்டம் ஒன்றை தயாரிக்கிறேன் அதன் மூலமாக கல்வி சுகாதாரம் மின் ஆளுமை போன்ற துறைகளில் ஆப்பிரிக்காவில் வளர்வதற்கு அந்த நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வலுப்படுத்த வேண்டும் இந்த திட்டத்திற்கு இந்தியா ஒரு சகோதர நாடாக இருந்து உதவ வேண்டும் என்று கோரிக்கையை வைக்கிறார் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்க இந்த திட்டத்திற்கு இந்தியா 600 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று கலாம் சொன்னாராம்.  மறுநாள் ஆப்பிரிக்கா நாடாளுமன்றத்தில் கலாம் இதனை அறிவித்து ஆப்பிரிக்க மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அதன் பின் அவருடைய திட்டம் செயல்முறை படுத்தப்பட்டது.  இருண்ட கண்டம் என்று பெயர் பெற்ற ஆப்பிரிக்காவுக்குத் தான் அறிவியல் முயற்சியைக் கொண்டு ஒளி தர எடுத்துக் கொண்ட கலாமின் முயற்சி அந்த நாட்டின் பொன்னேடுகளில் மின்னிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு மற்றவர்களைப் பற்றிய சிந்தனை மட்டுமே தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்த கலாம் அவர்களுக்குத் தனக்கென்று சொந்தமாக வீடு கிடையாது, சொத்து, சுகம் ,வாங்கி சேமிப்பு என்று எதுவும் கிடையாது.  குடும்பம்,  குழந்தைகள் என்று யாரும் இல்லை ஆனால் அவருக்கு எல்லாமே இருந்தது. அவரை நேசிக்க பல கோடி இதயங்கள் இருந்தன இந்தியாவில் ஒவ்வொரு வீடும் அவரது வீடாக இருந்தது

     குடியரசுத்தலைவர் பதவியில் நிறைவான பணியாற்றி புது டில்லியில் இருந்து புறப்பட்ட போது அவர் கையில் இரண்டு சிறு பெட்டிகள் ஒரு பை முழுக்கத் தன்னுடைய சொந்தப் புத்தகங்கள் மட்டுமே கொண்டு வெளியேறுகின்றார். பலர் அவருக்கு பரிசுப்பொருள்கள் கொடுத்த போது என்னுடைய தந்தை ஒருபோதும் பரிசுப் பொருள்களை வாங்காதே என்று அறிவுரை கூறினார் என்று எதனையும் வாங்காது செல்கின்றார்

    இவ்வாறு இந்த நூல் முழுவதும் டாக்டர் அப்துல் கலாம் என்ற உயரிய மனிதன் பற்றிய சிறப்பான பல நிகழ்ச்சிகள் கொட்டி கிடக்கின்றன. ஆசிரியருக்கு நன்றி

     


    சனி, 18 ஏப்ரல், 2020

    ஜெர்மன் தமிழியல் என்னும் நூல் தந்த உணர்வுகள்





    தமிழ் மரபு மற்றும் வரலாற்று ஆய்வாளர் க.சுபாஷினி அவர்களால்  எழுதப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவந்த ஜெர்மன் தமிழியல் என்னும் நூல் 10 வருட அவர் உழைப்பின் பலனாகப் பல ஆய்வுகளுக்குப் பின் வெளிவந்து மனதுக்குப் பல தெளிவுகளை ஏற்ப்படுத்தியது.  இந்த நூல் இத்தனை வருட காலங்கள் என் மனதில் இருந்த பல எண்ணப் போக்குகளை மாற்றியமைத்தது

    இலங்கையில் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் கால் பதிக்காதமைக்கான காரணம், ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவ இறைநெறி பரப்புனர்கள் தமது மதம் பரப்பும் பணிக்காகவும் தமிழை தொழில்நுட்ப அடிப்படையில் நவீனப்படுத்தியாமை, கல்வியை எல்லோரும் பெற வழி அமைத்தமை, பழைய தமிழ் அறிஞர்களுக்கு மொழிப்பயிற்சி கிடைத்தமைக்கான காரணம், ஜெர்மனிய பாதிரிமார்களின் தரங்கம்பாடி வருகையும், மார்டீன் லூதருடைய லூதரேனியம் வருகையும் ,அவர்கள் தமிழ் மொழியை ஆழமாகக் கற்றமைக்கான காரணங்களும், குறிப்பாக சித்த மருத்துவ ஏடுகளை ஜெர்மனி கொண்டு சென்று பதிப்பீடு செய்தமை, கற்றமை, வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தமை, பெண்கள் கல்வி வளர்ச்சிக்கு காரணமாக இருந்தமை, அச்சுக் கூடங்கள் உருவாக்கியமை, ஒவ்வொரு பாதிரிமார்களின் விபரங்கள், கத்தோலிக்க பாதிரிமார்கள் பற்றிய விளக்கங்கள்,  


    அந்தக் காலத்திலே இருந்த மக்கள் பலவகையான மொழியறிவை எவ்வாறு பெற்றுக் கொண்டார்கள் என்று பார்க்கின்றபோது வெளிநாடுகளில் இருந்து மதத்தைப் பரப்புவதற்காக வந்த பாதிரிமார்கள் பாடசாலைகளை அமைத்து மொழியைக் கற்பித்தார்கள். அப்படி கட்டுகின்ற போது ஒரு கட்டுப்பாடான முறையில் மொழி கற்பிக்கப்பட்டது லூதரனிய பாதிரிமார்கள் குறிப்பாக சீகன்பால்கு போன்றோர் ஐந்து வகையான பாடசாலைகளை அமைத்து இருந்தார்கள் அதில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றன. பாடசாலைகளாக மூன்று பாடசாலைகளும் போர்த்துக்கீச மொழி ஸ்பானிய மொழி கிடைக்கின்ற இருவகையான பாடசாலைகளும் கட்டியிருந்தார்கள் இதில் காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை ஏழு முப்பது வரை பாடசாலை நடைபெறும் கட்டுப்பாடான இந்த கல்வி முறை அறிவை வளர்ப்பதற்கு அவர்களுடைய மத போதனைகளை கற்ப்பிக்க செய்வதற்கும் அவசியமாகப்பட்டது கட்டுப்பாடுகள் தான் ஒரு மனிதனை உயர்வுக்கு கொண்டு வரும் அது உண்மைதான் ஆனால் கட்டுப்பாடுகள் கூடாது என்று நாம் நினைத்திருந்தோம் ஆனால் அது அப்படி அல்ல என்பதை அறிஞர்களை பார்க்கின்றபோது அறிந்து கொள்கின்றோம். 

    பொதுவாகவே வீரமாமுனிவர் என்று தமிழில் அழைக்கப்படுகின்ற பெஸ்கி பாதிரியார் தமிழுக்கு செய்த சேவைகள் பற்றியே அதிகமாக நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் இந்த நூல் ஜெர்மனியில் இருந்து டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அழைத்துவந்த லூதரனியம் பாதிரிமார்கள் தமிழுக்காக செய்திருக்கின்ற சேவைகள், எத்தனையோ எத்தனையோ நூல்கள் அவர்கள் எமது தமிழ் மொழியை இலக்கண இலக்கியங்களை ஆழமாக கற்று எழுதிய நூல்கள் பற்றியெல்லாம் மிக சிறப்பாக இந்த நூல் எடுத்துக்காட்டியுள்ளது. 

    பாதிரிமார்கள் ஒவ்வொருவரினதும்  வரலாற்றுக் குறிப்புக்கள் சிறப்பாக இருக்கின்றது. சீகன்பால்க் கட்டிய பாடசாலையில் ஒரு மருத்துவரை ஆசிரியராக நியமித்து மாணவர்களுக்கு அவற்றை நாள்தோறும் கற்பித்த தன்மை இக்கால அலட்சியப்போக்கிற்கு பாடம் நடத்துகின்றது. வைத்திய கேள்வி கேட்பவர்கள் மாத்திரம்தான் மருத்துவத்தை பற்றி அறிய வேண்டும் என்ற போக்கு அக்காலத்தில் இருக்கவில்லை. பெண்கள் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் சீகன்பால்க் அவர்கள் தன்னுடைய பாடசாலையில் பெண்களையும் கற்பிக்க செய்தமை சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகின்றது. 

    சித்த மருத்துவ நூல்களை இந்தியாவில் இருந்து எடுத்து வந்து பலர் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுகள் நம்மத்தியில் இருக்கின்றன. ஆனால் அது எப்போது நடந்தது என்பதற்கான தெளிவான விளக்கத்தை இந்த நூல் மூலம் பெற்றுக் கொண்டேன். லூதரனியம் பாதிரிமார்கள் 50 பேர் தமது பணிகளைச் செய்வதற்காக தரங்கம்பாடிக்கு வந்தபோது காலநிலை மாற்றத்தினால் இளவயதிலேயே குறுகிய காலப்பகுதியிலேயே இந்தியாவில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள். அந்த நேரத்தில் சித்த வைத்திய முறைகளை ஏடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட பாதிரிமார்கள் அவற்றில் உள்ள மருத்துவ மகத்துவத்தை அறிந்து கொண்டு அவற்றை அப்படியே ஜெர்மனியில் உள்ள ஹாலே கல்வி நிறுவனத்திற்கு  அனுப்பி வைத்து அவற்றைத் தொகுத்து நூல்களாகிய அந்த மருத்துவத்தின் மகிமையை உலகத்துக்கு அறியச்  செய்திருக்கின்றார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த ஏடுகளை, அதைவிட எரிக்கப்பட்டு புதைக்கப்பட்டு சிதிலமடைந்து கிடந்த ஏடுகளை ஒன்றாகத் தொகுத்து அவற்றுக்கு என்று மருத்துவர்களை அமைத்து அவர்கள் செய்த சேவையை நினைக்கின்ற போது களவாடிச் சென்ற ஏடுகள் என்பதை தாண்டி அவர்கள் செய்த சேவையின் புனிதத்துவம் புரிகின்றது. 

    லூதரனியம் பாதிரிமாருக்கும் கத்தோலிக்க பாதிரிமாருக்கும் இடையே ஏற்பட்ட வேத விளக்க போட்டிகளின் காரணமாக தோன்றிய தமிழ் நூல்கள் பல எடுத்துக்காட்டுகின்றன. லூதரேனிய தத்துவ விளக்கத்திற்கு எதிர்வினையாக வேதவிளக்கம் என்னும் ஒரு நூல் வர அதற்கு எதிராக லூதரேனியம் திருச்சபை போதகம் வந்தது. அதற்கு எதிராக பெஸ்கி பாதிரியாரின் பேதக மறுப்பு என்னும் நூல் வெளிவந்தது . இவை போன்ற நூல்கள் தமிழுக்குக் கிடைத்தன. குறிப்பாக அனைத்தையும் என்னால் கூற முடியாது அந்த நூலை வாசித்து பார்க்கின்ற போது புரிந்து கொள்வீர்கள்


    இந்திய அரசினால் விருது பெற்ற இந்த நூல் நிச்சயம் இந்திய அரசினால் விருது பெறவேண்டியது என்பதை பக்கம் பக்கமாக இந்த நூலைப் படிக்கின்ற போது அறிந்து கொண்டேன்.

    ஞாயிறு, 22 மார்ச், 2020

    “நான் பேசும் இலக்கியம்” ஆய்வுரை திருமதி. ஹரிணி கண்ணன்



    “நான் பேசும் இலக்கியம்” 26 ஆவது வெற்றிமணி வெளியீடு. 



    ஆசிரியர் சந்திரகௌரி சிவபாலன்(கௌசி). பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். ஆற்றல் மிக்க துணிவும் அன்பும் மிக்க தாயைப் போன்றவர். இவருடைய நாலாவது வெளியீடு இந்தப் புத்தகம். இது 25 ஆக்கங்களைக் கொண்டுள்ளது. வெற்றிமணிக்காக எழுதப்பட்ட கட்டுரைகளும் அதனுடன் சேர்ந்த வேறு 3 அழகான சிறப்பான கட்டுரைகளும் உள்ளடங்கியதாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது. 128 பக்கங்களைக் கொண்ட ஒரு அழகான பொக்கிஷம் என்று இதனைக் கொள்ளலாம்.

    இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை பார்க்கும் போது அங்கேயே இலக்கியம் சொட்டுகிறது. “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்ற பாடலே நினைவுக்கு வருகின்றது. இந்த அட்டைப்படத்தை வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் வடிவமைத்திருக்கின்றார். 



    இந்த அட்டைப்படத்தைப் பார்த்தீர்களானால், அங்கு அழகான பின்னணி வர்ணத்தோடு இரண்டு உதடுகள் இருக்கின்றன. ஒரு உதடு வரைய 3 கோடுகள் வேண்டும். இரண்டு உதடுகள் இருக்கின்றன. மேலே உள்ளது ஆணுடையது. கீழேயுள்ளது பெண்ணுடையது. பெண்ணுடைய உதட்டில் மேல் வரியை எடுத்து ஆணுடைய உதட்டிற்கு மேலே மீசையாகப் போட்டிருக்கின்றார். அதாவது ஆணினுடைய கௌரவம் பெருமை என்பன அவனோடு வாழும் பெண்ணைக் குறித்தே இருக்கின்றன. பெண்ணே அவனுடைய தகுதியை உயர்வுக்குக் கொண்டு வந்து வைத்திருக்;கின்றாள். அரசனுக்கு மந்திரிபோல் மிகுந்த நுட்பமான அறிவுடன் தொழிற்பட்டு குடும்பத்தின் பெருமைக்கு காரணமாகின்றாள். அதனை எடுத்துக்காட்டுவதற்காக அந்த கௌரவமான மீசையை பெண்ணின் மேல் உதட்டில் இருந்து எடுத்திருக்கின்றார். அதேபோன்று ஆணினுடைய உதட்டு நடு வரியை எடுத்து பெண்ணினுடைய உதட்டிலே போட்டிருக்கின்றார். அதாவது நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பது போல. அதாவது பெண்ணுக்குரிய பேச்சின் சுதந்திரத்தை ஆண் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் போதுதான் அவனுக்கு அந்த மீசையே உருவாகும் என்று சொல்லலாம். இவ்வாறுதான் அட்டைப்படத் தோற்றம் அமைந்திருக்கின்றது. இன்னும்பல கோணங்களில் அட்டைப்படத்தை நாம் நோக்க முடியும். பின்னணியில் மயிலிறகு இருக்கின்றது. அவளுடைய கண் வருகின்ற இடத்திலே உதடு இருக்கின்றது. ஒரு கோடு இருக்கின்றது. அக்கோடு மேல் நோக்கிச் செல்கின்றது. பின்னணி ஒரு செம்மையான கலர். வாசகர்களுடைய எண்ணப்போக்கிற்கேற்ப இவ் அட்டைப்படம் தோற்றம் பெறும். இது ஒரு அப்பழுக்கற்ற ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டது. 

    படிப்பதற்குத் தெளிவான எழுத்தின் வடிவத்தைக் கொண்டுள்ளது. முன்னாள் மொழித்துறை கலாசாரப் பேராசிரியர், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கின்றார். 



    புத்தக ஆசிரியர், படைப்புக்களின் சிறப்புக்களைக் கூறிய இவர் புலம்பெயர் பெண் இலக்கியப் படைப்பாளிகளில் பெரிதும் பேசப்படுகின்ற நிரூபா, தமிழ்நதி போன்றோர் வரிசையில் இவரையும் முன்னிறுத்தி இருக்கின்றார். இதனை வெளியீடு செய்துள்ள வெற்றிமணி ஆசிரியர் எழுத்தாளரை முழுமையாகப் புரிந்து கொண்ட வகையில் தன் பதிப்புரையை வழங்கியிருக்கின்றார். எதனைக் கேட்டாலும் நிறைவுத் தன்மையோடு அள்ளிக் கொடுக்கும் தன்மை சிறந்த எழுத்தாளரில் இருக்க வேண்டும். அது திருமதி. சந்திரகௌரி சிவபாலனிடம் அதிகமாகவே உள்ளது எனவும் மற்றும் அவருடைய சிறப்பியல்புகளையும் கூறியுள்ளார். பொதுவாகவே வெற்றிமணிக்கு எழுதும் ஆக்கங்களை அவரே முதலில் படித்து சுவைத்து விட்டு பிரசுரிப்பார். அதனால், அவரே முதல் வாசகனுமாவார். அதனால், ஒவ்வொரு எழுத்தாளர் பற்றிய முழுமையான புரிந்துணர்வு அவரிடம் இருக்கின்றது. சிந்தனை சிவவிநோபன் சிங்கப் பெண் என்று இவ் ஆசிரியரை மிகப் பொருத்தமானதாகவே விளித்து வாழ்த்துரை வழங்கியிருக்கின்றார். 



    இந்தப் பேசும் இலக்கியம் பன்முகத் தன்மையைக் கொண்டது. பல அறியாத விடயங்கள் சுவையாகப் படைக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்தேசங்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை என்று நீண்டு செல்லும் இந்த வரிசையிலே இலக்கியம் சார்ந்த படைப்பு சிறப்பாக சீர்தூக்கிப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. புதிய தலைமுறையினருக்கும் இலகுவாகப் படிக்கக் கூடிய வகையில் பழந்தமிழ் பாடல்களுக்குக் கூட இலகுதமிழில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விரிகின்ற பக்கங்களில் என் இதயத்தெளிவு பதிந்திருக்கும். வார்த்தைகளின் படையலுக்குள் மூளைச் சலவை பொதிந்திருக்கும் என இந்தப் புத்தகத்தைப் பற்றி ஆசிரியர் சூக்குமமாகக் கூறியுள்ளார். இதன் பொருளை புத்தகத்தை வாங்கிப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடியும் என நினைக்கின்றேன். 

    வாசகர்களின் வாசிப்புத் தன்மைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் அதிக நேரம் எடுக்கக் கூடாது என்பதற்காகவும் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன். குறிப்பாகப் பழந்தமிழ் இலக்கியங்களுக்கு நான் அடிமை. பழைய நாகரிகங்கள், அதன் சிறப்புக்கள், வரலாறுகள், இலக்கியங்கள், அவர்கள் வாழ்ந்த அழகான வாழ்க்கை முறை, அவர்களுடைய மென்மையான மனம், வீரம், காதல், மிக சுவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இவ்வாறான விடயங்களைப் படிக்கும் போது அதனோடு சேர்ந்து நாங்கள் பயணித்துக் கொண்டு செல்வோம். எப்போது பெண்கள் சுதந்திரம் பெற்றார்களோ அன்றிலிருந்து மகளிர் தினம் கொண்;டாடப்பட்டது என்று பொதுவாக சொல்வார்கள். இடையில் ஏதாவது அடக்குமுறைகள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கக் கூடும். ஆனால், ஆதிகாலத்தில் பெண்கள் மிகவும் சுதந்திரமாக இருந்திருக்கின்றார்கள். அதற்கு இலக்கியமே சான்று. பொன்னியின் செல்வனில் பூங்குழலி இலங்கைவரைப் படகோட்டி வந்தாள். அந்தளவிற்கு வீரமாகவும் சுதந்திரமாகவும் இருந்திருக்கின்றார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் மிக்க துணிச்சலுடன் எதிர் கொண்டிருக்கின்றார்கள். வீட்டில் புத்தகங்களின் ஒவ்வொரு பாகங்களும் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றை வாசிப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு வாசிப்போம். இவ்வாறு சுவையையும், ஆர்வத்தையும் தூண்டக் கூடிய இலக்கியங்களை இன்றைய தலைமுறையினர் தவற விடுகின்றார்கள். இத்தன்மையை இவ்வாறான புத்தகங்கள் மீண்டும் கொண்டு வந்து அவர்களின் ஆவலைத் தூண்டக் கூடியது. 

    அந்தக் காலத்தில் பொதுவாக புலமைக்குள் போட்டி இருந்தது. ஆனால், அந்தப் போட்டியையும், பொறாமையையும் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் காட்டிக் கொள்ளாமல் புலமையிலேயே காட்டிக் கொள்வார்கள். இதற்கு ஒளவையும், கம்பரும் விதிவிலக்கல்ல. இதில் ஒரு அழகான சம்பவம் கூறப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழன் அவையிலே ஆஸ்தான கவியான கம்பர் வீற்றிருக்கின்றார். கம்பருக்கு அவர் புலமையிலே சிறிது செருக்கு இருக்கின்றது. அங்கு ஒளவை வருகின்றார் அவருக்கு குலோத்துங்க சோழன் அவையிலே வரவேற்பு நடக்கின்றது. இதனைப் பொறுக்காத கம்பர், நான் சொல்லுகின்ற ஒரு அடியிலே உள்ள பொருள் என்னவென்று கண்டுபிடித்து ஒரு பாடல் பாட வேண்டும் என்று சொல்லுகின்றார். அதற்கு ஒளவையும் சம்மதிக்கின்றார். ஒளவையை குறைத்து மதிப்பிடும் கம்பர்

    “ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ” என்று வரி கொடுக்கின்றார். அதாவது ஒரு தண்டிலே நான்கு இலைகளைக் கொண்டுள்ள ஆரைக்கீரையை பொருளாகக் கோண்டு வரி கொடுக்கின்றார். அடீ என்பது நாகரீகமற்ற முறையில் விளிப்பதாக அமைகின்றது. உடனே ஆத்திரம் கொண்ட ஒளவையும் அடிக்கு அடாதானே பதில். 

    ‘எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
    மட்டிற் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
    கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
    ஆரையடா சொன்னா யடா’

    எட்டே கால் லட்சணமே என்றால், அவலட்சணமே. எமனேறும் பரியே எருமை. பெரியம்மை என்றால், மூதேவி. அவர் வாகனம் அண்டங்காக்கா. கூரையில்லாத வீடு குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் குரங்கு. ஆரையடா சொன்னாய் அடா என்றால், ஆரைக்கீரையை என்றும் யாரையடா என்று விளிப்பதாகவும் சிலேடையாக ஒளவை பாடல் அமைகின்றது. இதன்பின் ஒளவையின் சிறப்பை கம்பர் தெரிந்து கொண்டதாக அச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. இச்சம்பவம் இப்புத்தகத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதனைப் படிக்கும் போது எனது தாத்தா எனக்குக் கூறிய 

    “மந்திக்கு வால் நான்கு மதகரிக்கு கோடெட்டு 
    மங்கைக்குத் தனமில்லை முயலுக்கு கொம்பு”  

    என்ற பாடலைச் சொல்லி, இது எப்படி அதாவது எப்படி மந்திக்கு வால் நான்கு என்று வரும் . இப்பாடடுக்குப் பொருள் சொல் என்று தாத்தா கேட்பார். நாம் புரியாதிருக்க அதன் விளக்கத்தை அவர் கூறினார். அப்போது எமக்குப் புரியவில்லை. இலக்கியம் படித்த பின்பே எமக்குச் சரியாகப் புரிந்தது. மந்திக்கு வால், நான்கு மதகரிக்கு கோடு 8, மங்கைக்குத் தனம், இல்லை முயலுக்கு கொம்பு. இப்படியாகபப் பாடல்களைப் பிரிக்க வேண்டும். இவ்வாறான புதிர்கள் அக்காலங்களில் பேசப்பட்டன. இவற்றை இந்நூல் ஞாபகப்படுத்துகின்றது. 

    இந்நூலில் சேர, சோழ, பாண்டியர், பல்லவர் காலத்துக் குறிப்பேடுகளையும், அந்நிய படையெடுப்புக்கள் அதன் தடயங்கள், தமிழிலே ஏற்பட்ட பிறமொழிக் கலப்புகளையும் எடுத்துக் காட்டியுள்ளார். கவிஞர் கண்ணதாசனுடைய மதிப்புமிக்க வரிகள் காணப்படுகின்றன. பழந்தமிழ் செய்யுள்கள் தற்காலத்து திரைப்படப்பாடல்களாகக் காணப்படுகின்றன “யாயும் ஞாயும் யாராகியரோ, நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் போன்ற பாடல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன். என்னும் பாடலிலே நீ வருகின்ற வழி தன்னில் யாருன்னைக் கண்டார். உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார். உன் மலர் கூங்தல் அலைபாய அவர் என்ன சொன்னாh. உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்;” என்னும் வரிகளிலே பெண்ணில் சந்தேகக் கேள்விகளைக் கேட்பதாகப் பாடல் அமைந்திருக்கும். அதற்குக் காதலி அதற்கான காரணத்தை அழகாகக் கூறுகின்றாள். இவ்விடயம் இலக்கியப் பாடலில் இருந்தே கண்ணதாசனால் எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை இங்கு கொண்டு வந்திருக்கின்றார். 

    இன்றைய சில திரையிசைப்பாடல்களைக் கேட்கும் போது எங்கே சுவை போனது, எங்கே நயம் போனது, எங்கே உலகம் போய்க் கொண்டிருக்கின்றது என்னும் கவலை எம்மத்தியில் இருக்கின்றது. எவண்டி உன்னைப் பெத்தான் பெத்தான். கையிலே கிடைத்தால், செத்தான், செத்தான். அதாவது மாமனாரைப் போட்டுத் தள்ளிப்போட்டு நானும் நீயும் நன்றாக இருப்போம். இதற்கு மகள் எப்படி ஒத்துக் கொள்வார். இவ்வாறு இன்றைய பாடல்கள் காண்படுகின்றன. இது பழைய புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மிகக் கவலைப்படக்கூடிய விடயமாக இருக்கின்றது. 

    இலக்கியமும் அதனோடு சேர்ந்த விழிப்புணர்வும், அதனோடு சேர்ந்த இயற்கை என தனது படைப்புக்களை சிறகடித்து இப்படைப்பாளர் பறந்திருக்கின்றார். மட்டக்களப்பின் மகத்தான பாடல்களைப் பட்டியலிட்டிருக்கின்றார். தமிழுக்கு மகத்தான சேவை புரிந்தது மட்டக்களப்பு என்று சொல்லலாம். நாட்டுப்புறப்பாடல்களில் பேச்சுத் தமிழ் கொட்டும். ஆராரோ ஆரிவரோ என்னும் தாலாட்டுப் பாடலிலே மண்ணின் வாசம் வீசுவதைக் காணலாம். கிழக்கின் ஜோதி விபுலானந்த அடிகளார் பற்றிப் பேசப்பட்டுள்ளது. அக்காலத்துக் காதல் உணர்வுகள் அழகுணர்ச்சியோடு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. தலைவி தோழிக்குத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய காதலன் தன்னை மறந்து போவதை தீம்பால் உண்பவன் கொள்கலன் வரைதல் என்று சொல்லப்படும். ஒரு பாத்திரத்தில் இருக்கும் பாலை நுகர்ந்து குடித்துவிட்டு அப்பாத்திரத்தைக் கவிட்டு வைத்துவிட்டுப் போவது போன்ற செயலை தலைவி தன் தோழிக்குக் கூறுவது போன்ற பாடல்கள் இந்நூலிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” என்னும் பாடலின் சந்தர்ப்பம் போன்றவை இந்நூலில் அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 

    சிறுவர்களுக்கான இலக்கியம் படைக்கச் சிறுவர்களையே படைப்பாளியாக்கிய வெற்றிமணிப் பத்திரிகையின் ஸ்தாபகர் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. 

    ஹைக்கூ பற்றிய புதிய கண்ணோட்டம் வைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் பற்றிப் பேசிய ஆசிரியர் வாழ்வு, இயற்கை, புதியன புகுதல் பழையன கழிதல், ஆரோக்கியமற்ற வாழ்வு, திருவள்ளுவர் வாசுகி பற்றிய விடயங்கள், பெண்கள் தினத்தில் வெளியிடப்பட்ட இந்நூலில் பெண்கள் பற்றிய விடயங்கள், தாய்மையைப் போற்றிப் பெண்களை அதிசயப் பிறவியாகவும் விளித்துள்ளார். உண்மையில் அதிசயப் பெண், ஆற்றல் வாய்ந்த சிங்கப்பெண், தன்னுடைய உள்ளக்கிடக்கை, ஆற்றல், இவற்றையெல்லாம் வெளியில் எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்னும் தமிழ் மீதுள்ள அவா, பற்று, போன்றவற்றை இச்சிறிய புத்தகமே தெளிவாகக் காட்டிவிடுகிறது. கொட்டுவதற்கு அதிகமான விடயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சிறிது சிறிதாக இப்புத்தகத்தில் கொட்டியிருக்கின்றார். நிச்சயமாக திருப்தியையும், இலக்கியம் சார்ந்த ஆவலையும் தூண்டக்கூடிய அழகான ஒரு படைப்பு. இவ்வாறான படைப்புக்கள் மென்மேலும் வெளியிட வேண்டும். ஏனென்றால் மிகுந்த சுவைமிகுந்த விடயங்கள் அவருடைய உள்ளக்கிடக்கையில் நிறைந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. இப்புத்தகத்திற்கு மென்மேலும் வரவேற்பை வழங்கி நான் குறிப்பிடாத பல விடயங்களை நீங்கள் சுவைக்க வேண்டும் முழுவதையும் சொல்லிவிட்டால், வாசிப்பவர்கள் ஆர்வத்திற்கு ஒரு இடையூறாக இருக்கும் என்பதற்காகவே சிலவற்றை மட்டும் கூறியிருக்கின்றேன். எனவே இப்புத்தகத்தை வாங்கி அவருக்கும் ஊக்குவிப்பை வழங்கி மென்மேலும் அவருடைய பல படைப்புக்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.



    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...