• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 29 ஜூன், 2011

    ஆடி வந்த வேளை


                             
              
            வாசச் சந்தனமோ!
            வடிவழகுப் பெட்டகமோ!
            தேடிப் பெற்றெடுத்த 
            தெய்வீகக் குலக்கொழுந்தோ!
            பத்து மாதம் அடைகாத்து
            பக்குவமாய் பெற்றெடுத்த
            பரிமளப் பஞ்சுமேனியோ!
            மூன்று மாதம் முகம் பார்த்து முறுவலித்தாள்.
            தேன் நிலவுச் சுகம் கொடுத்தாள்.
            தெவிட்டாத கனியமுதச் சுவை கொடுத்தாள்.
            கவியாக கனியாகக் காவியமாய்
            கரம் வந்த கிள்ளை களிப்புடன் தூங்கத் - தாய்
            தொட்டிலிலே மெத்தை இட்டாள்.
            தாலாட்டுத் தேன் கொடுத்தாள்.
            தன் உதிரப் பால் கொடுத்தாள் - அன்று
            அளவுக்கதிகமாய் வெயிலும் கொடுத்தாள் .
            அந்தோ பரிதாபம்!
            ஆடி வந்த வெயிலில்
            ஆசைக் குழந்தையை வாகனத்தில்
            அழகாய்க் கொண்டு சென்றாள் - தொட்டிலில்
            தூங்க வைத்த பிள்ளை நிரந்தரமாய்த் தூங்கிடவோ
            நடுவெயிலில் வாகனத்தைத் தரித்தாள்.
            நாடி வந்த வேலை கூடி வந்த வேளையிலே
            ஓடி வந்து பார்த்தாள் ஐயகோ!
            கட்டித் தங்கமது பெட்டியாம் வாகனத்துள் 
            கருகிக் கடைத் தேறியதோ
            ஆடிவெயிலின் அகோரப்பிடியில்
            அழகுக் குழந்தை பலியானதுவோ
            அழுதால் துடித்தாள்
            ஆண்டவன் காதுகளுக்கு 
            இது ஓர் அமுத மழையோ
            ஆடி வந்த வேளையிலே – அந்தத் தாயை
            நாடி வந்தது இந்த நாரசமோ

     உண்மைச் சம்பவம். இங்கு கவிதையாய் விரிந்துள்ளது.
                                 
                                   

    ஞாயிறு, 26 ஜூன், 2011

    புகுந்த நாட்டைப் போற்றித் தொழுவோம்



                                          

                 புகுந்து நாட்டைப் போற்றித் தொழுவோம் 
            
          
                                                                ''நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு. நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு இந்த வரிகளை உச்சரிக்காத எமது தலைமுறை உறவுகள் இருக்க முடியாது என்று நினைக்கின்றேன். பொருளுணர்ந்து பாடல் வழக்கம் பெறாத, வாழ்வு தானே நாம் வாழ்ந்து வந்தோம். உயிர்வாழ இடம் நாடி உறைந்த இடம் தானே, நாம் வாழும் நாடு. இன்று தரம் உயாந்து வளம் பெருக்கி, தரித்து நிலையூன்றி சுகதேகியாய்த் தடம்பதித்து உயர்ந்து நிற்கின்றோமேயானால், எம்முடைய ஊக்கம் மட்டும் காரணம் என்று யாரும் கூறினால் அது நன்றிமறந்த நலன்விரும்பிகளின் கூற்றே ஆகும். பிறந்தமண்ணில் வாழவழி தெரியாதவர்கள் வாழ வழிகண்ட இடம் நாம் வாழும் நாடு. கல்வி அறிவை முழுமையாகப் பெற முடியாதவர்கள் கூட முன்னேற்றம் காணும் நாடு, நாம் வாழும் நாடு. நோயுற்றுக் கலங்கி நிற்காது, நோயின் வலி தெரியாது வாழும் நாடு நாம் வாழும் நாடு. இதற்கு முதலில் நாம் வாழும் நாட்டிற்கு தலை வணங்குவோம். 
                                                         அனைத்து நலமும் ஒருபுறம் வைத்துவிட்டு, சுகநலத்தை மட்டும் விவேகத்துடன் நோக்கினால், இங்கு நோய் கண்டவுடன் மருத்துவம் அதன்பின் தான் பணம் பக்கம் பார்வை திரும்பும். நாம் பிறந்த மண்ணில் நோய்க்கான காரணம், அதற்கான விளக்கம் மருத்துவரிடம் வினவினால், ''நீங்கள் மருத்துவரா? நீங்களா வைத்தியம் பாhக்கப் போகின்றீர்கள்? என்னும் பாங்கில் மருத்துவரிடமிருந்து விளக்கம் பெறப்படும். ஆனால், இங்கோ நோயாளி, தான் பெற்றுக் கொண்ட நோய்க்கான பூரண விளக்கம் பெறுவதுடன் வந்த நோயைத் திருப்பி அனுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் சகல வைத்திய நடைமுறைகள் பற்றியும் பூரணவிளக்கம் பெற்றுவிடுவார். பணக்கார நோய் எம்மைப் பற்றிக் கொண்டால், பிறந்த மண்ணில் பணவசதியில்லாதவர்கள் சாகத்தான் வேண்டும். தாயாகும் பெண்ணைப் பெற்ற தாய் போல் பராமரிக்கும் தாதியரும், நோயாளியைப் பலவிதமான பரிசோதனைகள் செய்து குணப்படுத்த பரிசுத்தமான இதயத்துடன் வைத்தியர் மெற்கொள்ளும் நவீன ஆய்வுகூடப் பரிசோதனைகள் போன்றவற்றையும் மனிதநேய மருத்துவத் தன்மைகளையும் பண்பான இதயத்துடன் நாம் உற்று நோக்கினால், பண்பற்ற வார்த்தைகளால் இந்நாட்டைப் பழித்துப் பேச மனம் உட்படாது, என்னை இந்த நாடு எதற்காக இப்படிப் பராமரிக்க வேண்டும்? நான் இந்த நாட்டிற்கு என்ன நன்மை செய்து இங்கு வந்து குடியமர்ந்தேன்? குடியுரிமை பெற்றேன்? என்னும் வினாக்களை எமக்குள்ளே வினவிக்கொண்டால், எம்மை அறியாமலே, கையெடுத்து இந்நாட்டை வணங்க , எமது மனம் முற்படும்.
                                              எந்தத் தொழிலிலும் வந்த நாளிலிருந்து ஈடுபடாதவர்களாய் இருந்த போதும், பாரிய நோய் வாட்டிய போது எழுந்து நடக்க முடியாத வேதனையில் துடித்த போதும் கைகொடுத்து உதவி, நின்று நிமிர்ந்து ஓடி நடக்க வைக்கும் இந்த நாட்டு மருத்துவ உலகுக்கு நாம் தலை வணங்குவோம். வாழும் நாட்டிலிருந்து நாம் பெறும் வளங்களுக்காக அந்நாட்டை வழிபடுவோம்.
                                                           ஒரு எழுத்தாளன் வரிகளாவன, வாசகர், நேயர்கள் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் என் வரிகள் உங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால், மகிழ்ச்சி கொள்வேன். 



    புதன், 22 ஜூன், 2011

    வெளியில வெயில்!


                                

    வெளியில வெயிலு வேகுது உடலு

    வெய்யோன் சோதி விண்ணில் ஜொலிக்குது
    சோருது உணர்வு நாடுது நிழலு
    தாயக நினைவு மீட்டுது மனது
    வானக மைந்தன் குடைநிழல் தேடுறான்
    கானக மரங்கள் பூணுது உடைகள்
    மாடத்துப் பூங்கா பூக்குது நிறைத்து
    மாமரத்துப் பூக்களில் மகரந்தம் பறக்குது
    சிவக்குது கண்கள் விழிகள் வீங்குது
    அச்சும் அச்சும் தும்மல் வெடிக்குது
    அங்கில்லா மலரா இங்கென மனது அங்கலாய்க்குது
    இனச்சேர்க்கை புரிய துணைப்போகும் தேனீக்கள்
    மலர் விட்டு மலர் தாவுது
    ஓடித் தழுவும் ஆதவனை
    உதறித் தள்ளுது மனதுசெதுக்கிய சிற்பப் பாவை
    புளுக்கம் தவிர்த்த உடலை
    கறுப்புக் கண்ணாடி மனிதன்
    கள்ளமாய் உறுத்துப் பார்க்கிறான்
    வாட்டிய இறைச்சியை மக்களெல்லாம்
    வாடியில் வைத்து உண்ணுகிறார்
    அண்டங்கள் அனைத்தும் ஆதவன் ஆட்சியெனும்
    வாழ்வியல் வாக்கை வாழ்வினில் ஏற்று
    வெயிலின் தலைவன் வேதனை செயினும்
    வேண்டுதல் செய்தே போற்றிடுவோம்
    வருணன் நட்பை வெய்யோன் பெறவே
    வந்தனை செய்தே போற்றிடுவோம்! 

    15.06.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது.

    திங்கள், 20 ஜூன், 2011

    அன்னைக்குப் பெருமை



                       

                                        சொந்தமென பந்தமென நானிருந்தேன்
                                        சொல்லாமல் பிரிந்து சென்ற மாயமென்ன
                                        கள்ளமென காதலது கலந்துவிட்டதால்
                                        கன்னியென போட்டுவைத்த கட்டுக்காவல்
                                        கடந்து சென்று கலங்கவைத்தாள் கன்னியவள்

    என் மனதிற்குள் பூட்டிவைத்த அழகுக் கல் ஒன்று, அன்பு என்னும் உப்புநீர் பட்டு கரையும், தாயன்பைப் புரிந்து கொண்டு பந்தத்தைத் தங்க வைக்கும் என்றெல்லாம் மனக்கணக்குப் போட்டுவைத்திருந்தேன். ஆனால், தன் மனக்கோட்டையினுள் சிற்பமாய்ச் செதுக்கி வைக்கவென மருமகன் என்று நான், அழைக்க வேண்டிய மன்மதன் கவர்ந்து சென்றுவிட்டான். எங்கே சென்றார்? என்ற எண்ணம் மட்டுமன்றி, எப்படி வாழ்கின்றார்? என்ற எண்ணமும் மேலோங்க ஆராயத் தொடங்கினேன். அடிக்கடி வந்து போகும் என் மகள் செல்லச் சிரிப்பும் செல்வாக்கு வாழ்வும் நிலைகுலைந்து தடுமாறி விடுமோ என்று தாயன்பு தவித்தது. என தோழி;யை வேவு பார்க்க அனுப்பினேன். சென்றவள் திரும்பி வரும் நாளை, எந்தன் மனமும் கண்களும் தேடி ஏங்கித் தவித்திருந்தன. 
                                     தோழியும் வந்தாள், என் காதில் தேனள்ளிச் சொரிந்தாள். படகுக் காரில் பறந்து வந்த என்மகள், பளிங்கு வீட்டினுள் நுழைந்தாளாம். விலையுயர்ந்த ஆடையை வீட்டாடையாய் உடுத்தினாளாம். அதிநவீன சமையலறையினுள் புழுவடிவாய் நழுவிவிழும் நூடில்ஸ்ஸை ஆயிரம் தடவை உருசி பார்த்து சமைத்தாளாம். உள்நுழைந்த கணவனை அன்பாய் அழைத்து அக்கறையாய்ப் பரிமாறினாளாம். அவனும் ஆஹா.... அபாரச்சுவை என்று கூறித் தித்திப்பாய் ஒரு முத்தமும் தந்தானாம் என மறைவினின்று பார்த்த என் தோழி மகிழ்வாய் என் காதில் தீஞ்சுவை தந்தளித்தாள். 
              
     விலையுயர்ந்த ஆடை, அதிநவீன சமையலறை, படகுக்கார், பளிங்குவீடு அத்தனையும் அவள் சீர் சிறப்புமிக்க வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியது. தன் கையாலே உணவைச் சமைத்து பரிமாறும் பக்குவத்தில் அவள் பொறுப்புணர்ச்சியும், அன்பும் ஆழமாய்த் தெரிந்தது. உணவின் சுவையை இரசித்த என் மருமகன் வெளிப்பாட்டின் தன்மையில் மனங்கோணாது என் மகளை என் மருமகன், தன் மனச்சிறையில் வைத்திருக்கும் மாண்பை எண்ணி மனமகிழ்ந்தேன். இதைவிட சீர்பெற்ற வாழ்வை எங்கே யான் என் மகளுக்குப் பெற்றுக் கொடுக்கப் போகின்றேன் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு மனதார அவள் வாழ வாழ்த்துகளை வழங்கினேன்.
        இக்காட்சி ‚
                ''முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
                  கழுவுறு கலிங்கம், கழாது, உடீஇ,
                  குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் 
                  தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
                  'இனிது' என் கணவன் உண்டலின்
                  நுண்ணுதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே''

    எனச் செவிலித்தாய் நற்றாய்க்குப் பகர்ந்ததாயான குறுந்தொகைப் பாடலை என் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.
               
     காதல் என்பதும், காதலனுடன் களவொழுக்கம் மேற்கொள்ளலும், உடன்போக்கும் எக்காலத்தும் நடைபெறும் நிகழ்வே. தக்க காதலனுடன் தன் மகள் மணாளனின் மணமென்னும் அரியணையில் சிறப்பாய் வீற்றிருந்தாள், சிந்தையில் சஞ்சலம் கொள்ளாது வாழ்த்துதலே அன்னைக்குப் பெருமை.




    பொருள் விளக்கம் அறிய விரும்பிய வாசகருக்காக:

    இப்பாடல் கூடலூர்கிழாரினால், குறுந்தொகையில் பாடப்பட்ட 167 ஆவது பாடல்


    விலைமதிப்பற்ற பட்டாடையை அணிந்த தலைவி, காந்தல் போன்ற மெல்லிய விரல்களால், தயிரைப் பிசைகின்றாள். புளிக்குழம்பு அடுப்பிலே வைக்கப்பட்டிருக்கின்றது. தன்னுடைய கைகளைக் கழுவாது தான் அணிந்திருக்கும் பட்டாடையில் கைகளைத் துடைத்தபடி தாளிதம் செய்கின்றாள். அடுப்பிலே வைக்கப்பட்ட குழம்பிலிருந்து வரும் புகை கண்களில் கண்ணீரை வரச் செய்கின்றது. இவ்வாறு செய்து பரிமாறப்பட்ட உணவை உண்ட கணவன் இனிது என்று தலைவியைப் பாராட்டுகின்றான். இதுவே பாடலின் பொருள். தனித்தனிச் சொல்லாக பொருள் கூறமுடியாது. ஏனெனில், அதற்குரிய நூல் என் கைவசம் இல்லை. நாம் கூட பொருள் அற்ற பாடப்புத்தகத்திலேயே விரிவுரையாளரின் கருத்தைக் கேட்டுப் படித்தோம். நான் கற்றதை நினைவுறுத்தி பொருள் விளங்காத சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இணைத்திருக்கின்றேன்.


    ஞாயிறு, 19 ஜூன், 2011


                                           


                                                                         

    வியாழன், 16 ஜூன், 2011

    கல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா?


    கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் அகலிகை படலம் 25 பாடல்களில் கம்பரால் பாடப்பட்டது. அகலிகைமேல் ஆசை கொண்டு அவளை அநுபவிக்க விரும்பிய இந்திரன், அகலிகை கணவன் கௌதம முனிவர் காலைக்கடன் முடிக்க வெளியில் சென்ற நேரம் பார்த்து கௌதம முனிவர் போல் உருமாறி அகலிகை வீட்டினுள் நுழைந்தவிடுகின்றான். தன் இச்சையைத் தீர்க்க அகலிகையை அணைக்கின்றான். வந்தது கணவன் என்று நம்பிய அகலிகை அவனுக்கு இடம் தருகின்றாள். ஞான திருஷ்டியினால், நிலை உணர்ந்த கௌதமர் வீடு நோக்கி வரப் பூனையாக மாறிய இந்திரன் ஓடிமறைகின்றான். கௌதமரும் இந்திரனைச் சபித்து அகலிகை கல்லாக மாறச் சாபமிடுகின்றார். பிழை பொறுத்தல் பெரியோர் கடனே என வேண்டிக்கேட்ட அகலிகைக்கு ''இராமன் காற்துகள் பட்டு நீ மீண்டும் பெண்ணாகக் கடவது'' என சாபவிமோசனம் கொடுக்கின்றார். இதில் கம்பர் தன் வரிகளால் உணர்த்திய வரிகள் மேற்கொள் குறியிடப்பட்டு இக்கவிதையில் துணையாய் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு கௌதமர் செய்தது சரியோ தவறோ என ஆராயப் புகுந்தமை இக்கவிதையாய் விருந்தாகிறது.


    நேரே காணல் காட்சிப் பிரமாணம்
    தெரிந்தவை கொண்டு தெரியாதவை 
    தெளிந்தே கூறுதல் அநுமானப்பிரமாணம்
    உயர்ந்தோர் கருத்தை ஏற்று
    ஒத்துக்கொள்ளல் ஆகமப்பிரமாணம்

    அநுமானப்பிரமாணம் அணைத்தே
    அழகின் தேவதைஅக லிகைவாழ்வில்
    அடைந்த நிலைமை ஆராயப்புகுந்தேன்.

    இராமாயணத்தில் இருபத்தெட்டுப் பாடலில்
    இணைந்துவந்த அகலிகைப் படலம்
    இதயத்தி லுறுத்திய இன்னலை
    இயம்ப விழையுமிக் கவிதை

    இந்திரன் ஓர் தேவன்
    இதயம்நிறை காமக் கள்வன்
    தந்திரமாய் அகலிகை வாழ்வை
    கல்லாகச் செய்தகயவ னென்பாருண்டு
    கயவன் இந்திரனோ கௌதமனோ!
    கலங்கு கிறதென்கவி யுள்ளம்

    கவின்மிகு அழகி அகலிகை
    காதல் கணவன் கௌதமன்
    கண்மூடி யிட்ட சாபத்தால்
    கடத்தினாள் கல்லாய்க் காலத்தை
    விதியென்று விட்டிட முடியுமா?
    சதியென்று சாடிவிட்டால் போதுமா?
    மதியிழந்த முனிவன் முனிவு
    கதியிழக்கக் காரணம் ஆகியது

    ஞானப் பார்வை கொண்டவராம்
    காலைக்கடன் முடிக்கச் சென்றாராம் - இந்திரன்
    வேளையுணர்ந்து நுழைந்த நிலை
    வேவு காணமுடியா ஞானமென்ன பெற்றார்?

    இந்திரன் இந்திரனாய் வந்திருந்தால்
    வந்திருப்பான் யாரென் றுணர்ந்து
    வஞ்சிக்கப் பட்டிடாள் வஞ்சியவள்.
    வந்தது இந்திரனாயன்று கணவனாயல்லவா!

    இம்மியளவு மிதையுணரா கௌதமன்
    இட்ட சாபமது பலிக்கலாமோ!
    முனிவையடக்க முடியா முனிவர்
    பெண்ணை அடக்கி யாண்டாரோ!

    ''எல்லையில் நாணமெய்தி யாவர்க்கும் நகைவந்தெய்த
    புல்லிய பழியினோடும் புரந்தரன் போய்பின்றை
    மெல்லியலாளை நோக்கி ' விலைமகள் அனையநீயும்
    கல்லியல் ஆதி' என்றான் கருங்கலாய் மருங்கு வீழ்வாள்''

    விலைமகளென வாய் கூசாது விதந்துரைத்தல்
    பொறுத்திருக்க மாட்டார் உடலால் பிழைத்தார்.


    உடலால் கற்பிழந்தாள்
    உணர்வாள் கற்பிழந்தாளன்று
    பஞ்சகன்னியர் வரிசையில்
    நின்று நிலைப்பவள் அகலிகை
    நெஞ்சம் உணராது சாபமிட்ட
    வஞ்சகன் கௌதமன் குற்றமே!


    ''புக்கு, அவளோடும், காமப்புதுமணமதுவின் தேறல்
    ஓக்க உண்டிருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்தபின்னும்,
    தக்கது அன்று' என்னஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
    முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.''

    அணைந்தபின் உணர்ந்தனள் 
    உணர்ந்தபின் ஓராளென
    குற்றமுணர்த்திய அகலிகையுள்ளம் 
    உணராநிலை யென்னென்பேன்
    உணர்வன்றி உறுதியில்லை
    உறுதியாய் உணர்ந்திருந்தாள் 
    உதறித் தள்ளியிருப்பாள்.
    உண்மைக் கணவனேயாகில்
    விபரீதமாகிடும் எனத்
    தாழ்ந்ததன் தவறென்ன
    மனதால் தயங்கி
    முனிவர் வருகைக்காய்
    தாமதித்த அகலிகை குற்றவாளியா?

    முனிவ ரென்றால், ஒறுத்தல் குற்றம்
    முனிவரன்றன்றி முனிவர் காப்பரென
    முடிவுகொண்ட அகலிகை பாவியானாள்
    பழி சுமந்தாள் கல்லாய் சமைந்தாள்


    பாதிப்பும் பெண்ணுக்கே 
    பழியும் பெண்ணுக்கே
    பக்கத்துணையே நம்பா
    துணையும் ஒரு துணையா?
    பாவி அகலிகையா?
    பழி தந்து தப்பிய இந்திரனா?
    சாபம் தந்த கௌதமனா?


                           

               

    செவ்வாய், 14 ஜூன், 2011

    படைப்பாளிகள் வரவேண்டும்!


                                                     

    மூளைச் செல்கள் முடக்கி விடப்பட்டன
    மின்னும் பாய்ந்தது மின்னல் வெடித்தது.
    பேனாவின் ஒழுக்கில் வண்ணமாய்
    எண்ணங்கள் வடிவெடுத்தது.
    தேனாய்ப் பாய்ந்தொழுகும் சிந்தனை சிதறல்கள்
    வீணாகப் போகாது விரல்கள் வடித்தன.
    மானாக மாற்றான் மனங்களில் பாய்ந்து
    தானாக உருவெடுத்து தன்வரிகளில் வரைபடமாயின.
    ஊராக உறவாக உன்னத உரிமையாக
    நாடாத பொருளில்லை, நவிலாத நயமில்லை,
    தேடாத கருவில்லை, தெளியாத நிலையில்லை.
    வாடாத பூக்களாய் படைப்பாளி வரிகள்
    சிதையாத எண்ணங்களாய் நிறைவான திண்ணங்களாய்
    வரையாது வாசகர் மனதில் வசந்தமாய் வீசவேண்டும்.
    கறையாக கருத்துக்கள் களமேற வேண்டாம்.
    முறையாக முத்திரைகள் பதிக்க வேண்டும்.
    சிறையாக சிந்தனைகள் சிக்குண்டு போகவேண்டாம்.
    கதியாகக் கனவுகள் கடையேற வேண்டும்.
    திரையாக அச்சம் திறமானஅறிவைச் சிறைப்பிடிக்க வேண்டாம்.
    கரைகாணா கவியார்வம் அலைமோத வேண்டும்.
    விலைமாதர் மடிமீது சுகம் காணும் வீணராய்,
    நிலையில்லாப் புகழை நினைத்திருக்க வேண்டாம்.
    நிறைவாக நிஜமான நிதர்சனங்கள் நிழலாகத்
    தரமான படையல்கள் மனங்களில் படிந்திருக்க
    படைப்பாளிகள் பலப்பல பரவிவர வேண்டும்.


    முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது

    திங்கள், 6 ஜூன், 2011

    எழுத்தாளனை ஏளனம் செய்யும் சமுதாயம்

                 
    கோல் எடுக்கும் மன்னன் மக்களுக்காய் மக்களை ஆட்சி செய்தான். எழுதுகோல் எடுக்கும் எழுத்தாளன் மக்களுக்காய்த் தன் அறிவை விதைக்கின்றான். இதைப் புரியாத பலரும் எழுத்தாளரை மனநோயாளர் என்று ஏளனம் செய்யும் வார்த்தைகள் கெட்டு மனம் நொந்து வரி வடிக்கின்றேன். 
                       
    சொல்லும் பொருளும் சுகமானால், வெல்லும் இவ்வுலகம். அச்சொல் மற்றவர் உள்ளத்தை நல்லதாக்க வேண்டுமென சொல்வடித்தல் குற்றமா? சூழ இருந்து சுற்றத்தாருடன் திரைப்படம் பார்த்துச் சிரித்து, இரசித்து, திரைக்கதை விமர்சித்து ஆஹா ஓஹோ என்று அலசி, கதாநாயகி சிரிக்கும் போது சிரித்து, அழும்போது அழுது தம்மை மறந்திருப்பார், அத்திரைப்படத்தின் மூலக்கதை ஒரு எழுத்தாளனால் உருவானது எனச் சிந்திக்கத் தயங்கிவிடுகின்றார்கள். வைரமுத்துப்பாடல்கள், கண்ணதாசன் போன்ற திரைப்படப் பாடலாசிரியர்கள் பாடல்கள் காதுக்குள்ளே ஒலிக்க Head Phone மாட்டித் திரிவதும், அப்பாடல்களுக்கு ஆட்டம் போடுவதும் ஒரு எழுத்தாளன் எழுத்திலேயே அப்பாடல் உருவானது என்று உணர்ந்து கொள்ளாமலே நடைபெறுகின்ற நடவடிக்கைகளேயாகும். கண்ணதாசன், வைரமுத்து கவிஞராக அந்தஸ்த்துப் பெற்றது, அவர்கள் எழுதிய முதல் வரிகளில் அல்ல. எழுதிஎழுதிக் குவித்ததனாலேயே, அவர்கள் கவிஞர்களாக அந்தஸ்த்துப் பெற்றார்கள். பணமும் புகழும் அவர்களை நாடி வந்தது. ஒரு திரைப்படமோ, பாடலோ ஒரு எழுத்தாளன் இல்லாது உருவாக முடியாது. அடிப்படையை விட்டுவிட்டு வெளிப்படையை இரசிப்பவர்கள் மனப்பக்குவத்தை என்னென்பது?   பணத்துக்காகவும் புகழுக்காகவும் மாத்திரம் எல்லோரும் எழுதுவதில்லை. ஆத்ம திருப்திக்காகவும் எழுத்தைப் பயன்படுத்துகின்றார்கள். தமது எழுத்துக்களால், சமுதாயத்தில் யாரோ ஒருவர் விழிப்புணர்வு பெறவேண்டும் என்று எழுதுகின்றார்கள் எனப் புரியாத மனிதர்கள், பணம் தேடும் முயற்சியே முயற்சி ஆகும், ஆத்ம திருப்தி என்பது மனித மனவுணர்வன்று என்ற முட்டாள்த்தனமான எண்ணப்போக்கைக் கொண்டிருக்கின்றார்கள். பணத்தை நோக்கமாகக் கொள்பவர்கள், கலையுணர்வை ஏளனம் செய்வதில் ஆச்சரியம் இல்லை. கடல் மண்ணிலே பேருருவம் செய்யும் படைப்பாளி, தன்னை மறந்து தன்னை மறந்து, நேரத்தை இழந்து படைக்கும் படைப்பு ஒரு மழை வரக் காற்றடிக்க அழிந்து போகும் என்று தெரிந்தும் இரசித்து இரசித்துத் தன் கலைப்படைப்பை வெளிக் கொண்டுவருகின்றான். அதில் அப்படைப்பாளி காணும் சுகத்தை கலையுணர்வற்றோர் அறியார்.  
               
      பாரதி இறந்த போது அவரருகே கூட்டம் கூடவில்லை. ஆனால், இன்று பட்டிதொட்டி எங்கும் பாதி பாடல்கள் அனைத்தும் இசையோடு இணைந்து நடனம் பரிகின்றன. பாரதி வாழ்ந்த அதே காலத்தைப் போன்றே இக்காலத்திலும் எமது தமிழ்ச் சமுதாயம் வாழுவதை நினைக்க வேதனையாக இருக்கின்றது. வாழும்போது எழுத்தாளரைப் புகழாது, வாழ்ந்து மடிந்தபின் விழா எடுப்பதன் நோக்கம் யாதென்று புரியேன். வள்ளுவர் அன்று எடுத்த எழுத்தாணியால், இன்று உலகமெங்கும் அவர் புகழ் பேசப்படுகின்றது. அவர் வேலையற்று எழுதிக் குவிக்கின்றார் என்று அன்று எத்தனை பேர் எள்ளிநகையாடினார்களோ? 
                           

    சனி, 4 ஜூன், 2011

    என்னையே நானறியேன் (அங்கம் 6 )

    எதிர்கொள்காதை            


    வரம் பெற்ற வாழ்வு
    திறம் கெட்டுப் போனாலும்
    உரம் கொண்ட வரமது
    உருக்குலைக்கும் உருக்கினார் வாழ்வை

    வாழ்நாட்களில் வந்து போகும் சோகநினைவுகள் வரதேவி மூளைப் புதையலில் அழியாத அறிவுப்பலகையாய் அச்சடிக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது தலைகாட்டும் நினைவுகளை விரட்டியடிக்க வரதேவி விரும்பிய பணி மீண்டும் வீடு தேடி வந்தது. திறமையும் அறிவும் மறைக்கப்பட்டாலும் மறுக்கப்பட்டாலும் மடைதிறந்த வெள்ளம் போல் ஓர்நாள் பெருக்கெடுத்தே தீரும். இதனாலேயே அறிவுச்செல்வம் அழிக்கமுடியாத செல்வமாய்க் கருதப்படுகிறது. அறியாதமொழி, புரியாத மனிதர்கள், தெரிந்திராத வாழ்வு எதுவாய் இருந்தாலும் அறிவுச் செல்வம் கிடைக்கப்பெற்றார் அந்தஸ்து வாழ்வை அகிலம் எங்கு சென்றாலும் அடையப் பெறுவார். வரதேவி இவ்வாறே எதிர்காலத் தலைமுறைகள் தமிழால் தலைநிமிர்ந்து நிற்கத் தேடித் தன் மனைபுகுந்தார் தம் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்தாள். மீண்டும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் மனதில் பிரகாசித்தது. மீண்டு;ம் ஆர்வ வெள்ளம் மனமெங்கும் பாயத் தொடங்கியது. தொழிலாய்க் கொள்ளாது, பணியாய்க் கொண்டு பயின்ற பல கல்விக்களஞ்சியங்களைப் பாலர் தொட்டுப் பருவ வயதினர்வரைத் தாரைவார்க்கத் தீர்மானித்தாள். தமிழ்ப்பாடசாலை சென்றாள். பயின்றாள், பயிற்றுவித்தாள், மனநிறைவு பெற்றாள். ஆசிரியத்தொழில் நாளுங்கற்று நாளுங்கற்பிக்கும் தொழிலல்லவா! மாணவர்கள் கற்க ஆசிரியர்கள் கற்க வேண்டியதும் கற்பிக்க வேண்டியதும் கடமை அல்லவா. இனியொரு தடவை இவ்வரதேவி கற்பித்தலில் தடை காணமாட்டாள். தடைசெய்வார் துணிவுதளர்ந்த நிற்கும் நேரமிதுவென முற்றாக நம்பியதனால், முடிவாய் இப்பணிக்கு முகங்கொடுக்கத் துணிந்தாள். வாரம் இருதடவைகள் காணும் தமிழ்ச்சிறுவர்கள் முகங்கள், அவள் மனதிற்கு மருந்தாகியது. நோயை விரட்டியடிக்கும் பயிற்சியாகியது. 
         
           இந்நிலையில் கரண் வாழ்வில் காலம் என்ன மாற்றத்தைக் காட்டியது? காத்திருக்கும் வாழ்வில் காலம் தந்த பரிசை யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள் வேண்டியது கட்டாயமாகிறது. கரண் கால் விரலில் கறுப்பாய் ஒரு புள்ளி அதிசயமாய்த் தோன்றியது. மெல்ல மெல்லக் கால்விரல் நிறம் மாறத் தொடங்கியது. உருக்குலையும் நிலை கண்ட வைத்தியர்கள், இவ்விரலைப் பாதத்திலிருந்து அகற்றிவிட்டனர். ஓர்விரல், ஈர்விரல் என அவ்விரல்கள் அனைத்தும் பாதத்திலிருந்து விடைபெற, இதன் தாக்கத்தால் முழங்காலில் கீழ்ப்பகுதி பழுதடையும் நிலை கண்ட வைத்தியர்கள் முழங்காலின் கீழுள்ள பகுதியை அகற்றிவிட்டார்கள். ஒற்றைக்காலில் வாழ்வைக் கழிக்க வேண்டிய தண்டனை கிடைக்கப் பெற்றுத் தடுமாறிவிட்டான் கரண். இதை விதி என்பதா? இல்லை வினை விதைத்தான் வினை அறுப்பான் என்பதா? ஒரு மனிதன் செய்யும் தவறுகள் தண்டிக்கப்படும் வேளையில் அவன் அகற்றிய புண்ணியங்கள் புதுப்பொலிவு பெற்றுத் துணை தரத் துடித்துக் கொண்டு ஓடிவரும் இந்த வகையில் ஒற்றைக் கால் இழந்த கரணுக்கு ஒரு தடியாய் யார் இருப்பார்? தாலியின் மகத்துவம் இங்கு தலைநிமிர்ந்து நிற்கின்றது. தமிழர் கலாசாரம் என்றும் அழிந்துவிட மாட்டாது என வரதேவியின் பணிவிடை ஆணித்தரமாகக் காட்டியது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடக்கப் போவது நல்லதாகட்டும் எனத் தன் அணைப்பில் மட்டுமே எதிர்காலத்தைக் கழிக்கவிருக்கும் கணவனைப் பராமரிக்கும் பாரிய பொறுப்பைத் தலைமேல் கொண்டாள். உலகம் உருண்டையானது. எங்கு சுற்றியும் திரும்பவும் அந்த இடத்திற்கே வந்தேயாக வேண்டும். மருத்துவமனை கரணுக்கு நல்ல பல பாடங்களைக் கற்றுத் தந்தது. சிந்தித்துச் சிந்தித்துத் தனக்குத் தானே பட்டை தீட்டித் தன் வாழ்வைப் பொலிவாக்கினான். தன் எதிர்கால வாழ்வைத் தன் மனையாள் கையிலே தங்கியிருக்கும் பேருண்மை புரிந்து கொண்டான். பெட்டிப்பாம்பாய் வீட்டினுள் அடங்கிக் கிடக்கும் கணவனின் தேவைகளைத்  தெரிந்து புரிந்து தீர்த்து வைத்த வரதேவி, வாழ்வை மாற்றியமைக்கும் காலத்தை எண்ணிப் பார்த்தாள். தனக்குள்ளே ஒரு சிரிப்பு. இது அலட்சியச் சிரிப்பா! இல்லை வாழ்ந்து பார்த்த வாழ்வுஞானச் சிரிப்பா! குடியிருக்கும் வீடானது அடிக்கடிப் பழைய நினைவுகளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. வேறு மனை புகுந்தால் வேற்று எண்ணங்கள் மனதில் பதியத் தொடங்கும். புதியவீடு, புதிய சூழ்நிலை புதிய வீட்டின் மாற்று அலங்காரம், அனைத்திலும் ஏற்படும் மாற்றமானது மனதில் மாறுதலை ஏற்படுத்தலாம் என்ற தீர்மானம் மனதில் வலுப் பெற்றது. இப்போது ஒரு புதிய முயற்சி முனைப்புப் பெற்றது. பத்திரிகைப் பக்கங்கள் திருப்பப்படுகின்றன. வீடு வாடகைக்கு விடப்படும்...... இது எமது தராதரத்திற்கு ஒத்துவருமா? வீடு இருக்கும் சூழ்நிலை பொருத்தமாக இருக்குமா? தேடத் தொடங்கினாள். அடுத்துவரப் போகின்ற தூரத்து வெளிச்சத்தை எதிர்பார்த்து வரதேவி காத்திருக்கின்றாள்.


    கதையின் கதாநாயாகி கண்ணீர்வரிகள் என் கைப்பட்டு இலக்கிய வரிகளாயின. இது ஒரு பக்கப் பார்வையின் அலசலே. வரதேவி கணவன், மகன், சூழலிலுள்ளோர் பார்வையில் வேறுவிதமாய் இக்கதை அலசப்படலாம். அனைத்துப் பக்கப் பார்வையிலும் உருமாறி இலக்கியம்  விரிவுபடலாம். ஆயினும் 6 பாகங்களும் காத்திருந்து பொறுமையுடன் வாசித்து மனம் பதித்த உங்களுக்கு நன்றியைத் தெரிவித்து உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். 

             
                     

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...