• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 20 ஜனவரி, 2021

    வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

     





    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து நிற்க முடியுமா? கண்ணுக்குத் தெரியாது எங்கோ ஒரு மூலையில் இருந்து எம்மை அறியாமலும் அறிந்தும் பலரின் பங்களிப்புக்கள் எம்முடைய உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றன. எண்ணம் எம்முடையதாக இருந்தாலும் எம்மைத் தூக்கி நிறுத்த ஒருவர் துணைவருவார் என்பது உண்மையே. தற்போது பல நிறுவனங்கள், வியாபார நிறுபனங்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் என அனைவரின் வளர்ச்சிக்குப் பின்னே பலரின் உழைப்பும் உதவியும் தியாகங்களும் அடங்கியிருக்கும்.

    தனவந்தன் பில்கேட்ஜ் உயர்வுக்கு அடிப்படையில் அவர் நண்பன் Paul allem இருந்திருக்கின்றார். விஞ்ஞானி ஸ்ரீபன் ஹார்க்கின் (Stephen Hawking) ஆராய்ச்சிக்கும் ஆற்றலுக்கும் பின்னே டிக்ரான் தஹ்ரா (Dikran Tahta ) என்னும் கணித ஆசிரியா் இருந்திருக்கின்றார். கற்பித்தலில் மட்டுமன்றி அவரை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு செல்வது வரை அவரின் பங்களிப்பு இருந்திருக்கின்றது. நோய்வாய்ப்பட்டு தற்கொலை முயற்சியில் இருந்த போதும் அவரைக் காப்பாற்றி  தன்னுடைய முயற்சியால் ஹார்க்கிங்கை முன்னுக்கு கொண்டுவர கூடவே இருந்து காதலையும் அன்பையும் பகிர்ந்து கொண்டு ஒரு காதலியாக மனைவியாக தாதியாக கூடவே பயணித்தவர் ஜேன் ஹார்க்கிங் (Jane Hawhing) ஆவார்.   இவர்களின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாது விட்டால் வெறும் முகத்தசைகளின் அசைவை மட்டும் வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி ஸ்ரீபன் ஹார்க்கிங் ஆராய்ச்சிகள் நிகழ்த்தியிருக்க முடியுமா? வாடிக்கையாளர்களை நம்பியே உற்பத்தியாளன். அவனை ஊக்குவிக்கும் வங்கிகள் என உயர்ச்சிக்குப் பின் பல கைகள் மறைந்திருக்கும் என்பது உண்மையே. நாம் காணும் உலகத்தை விட்டு இந்தஅண்டவெளியும்  இப்படித்தான் இயங்குகின்றது.

     

    இன்று நாம் போற்றும் இரண்டு இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் என்னும் இரண்டையும் எடுத்து நோக்கினால். இவை வெளிவருவதற்கும் காரணகர்த்தாக்கள் இல்லாமல் இல்லை. கம்பர் கம்பராமாயணத்தை எழுதிவிட்டு இதனை அரங்கேற்றுவதற்கு உதவி நாடி சடையப்ப வள்ளலிடம் செல்கின்றார். அவரோ சோழ மன்னனிடம் கம்பரை அனுப்புகின்றார். மன்னனோ தன்னுடைய அரசிலே உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி திருவரங்க ஆச்சார்யார்களுக்கு திருவோலை அனுப்புகின்றான். ஆனால் அவர்களோ தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்பிதல் பெற்றுவரும்படி அனுப்புகிறார்கள். அப்போது பாம்பு தீண்டி இறந்த ஒருவனை நாகபாசத்துப் பாடல்கள் பாடி கம்பர் உயிர்ப்பித்தாராம். அதன் பின்புதான் அவருடைய காவியம் சிறப்பு என்று தீட்சிதர்கள் ஒப்புதல் கொடுத்தார்களாம். இவ்வாறு அலைந்து திரிந்து இறுதியில் திருவரங்கம் சென்று அரங்கேற்றம் தொடங்கும் போது நஞ்சடகோபனைப் பாடினாயா? என்று ஒருவர் தடுத்தார். பின் சடகோபரந்தாதி பாடினார். அதன் பின் அரங்கேற்றம் தொடங்க பல எதிர்ப்புகள் வைணவர்களிடமிருந்தெல்லாம் தோன்றியது. இறுதியில் ஸ்ரீமன்நாத முனிகள் இரணியவதைப் படலம் ஒன்றே போதும் கம்பரின் காப்பியம் தெய்வீக காப்பியம் தான் என்பதற்கு ஐயம் இல்லை. இது காப்பியத்தில் இடம்பெறலாம் என்றாராம். ஒரு நூல் அரங்கேற எத்தனை சோதனைகளைத் தாண்ட வேண்டும் என்பது தற்காலத்திலிருப்போர்க்குப் புரியாது. ஆனால், ஒரு நூல் வெளிவர பலரின் உதவிகள் இருந்திருக்கின்றன என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது.

     

    இதேபோல் மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதாகவும் நிறுத்தாமல் வேகமாகப் பாடவேண்டும் என்று பிள்ளையார் நிபந்தனையிடப் பாடலைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று வியாசர் கட்டளையிட்டார். சம்மதித்த பிள்ளையார் வேதவியாசர் சொல்லச் சொல்ல எழுதிய வேகத்தில் பிள்ளையாரின் எழுத்தாணி உடைந்தது. உடனே தன்னுடைய தும்பிக்கையின் தந்தத்தை உடைத்து பிள்ளையார் எழுதினார் என புராணம் கூறுகின்றது. இவ்வாறு மாபாரதத்தின் தோற்றத்தில் பிள்ளையாரின் பங்கு இருந்திருக்கின்றது.

    கம்பனின் அம்பறாத்தூணி என்ற புத்தகத்தில் நாஞ்சில் நாடன் ஒரு தனிப்பாடல் கொடுத்துள்ளார். அதில் 


    வில் கிடந்தது மிதிலையின் நகரிலே

    கல் கிடந்தது கானகம் தன்னிலே 

    நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே 

    சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே

    உயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ


    சீதையைத் திருமணம் செய்வதற்கான சிவதனு என்ற அம்பு மிதிலையிலே இருந்திருக்கின்றது. இராமன் காலடி பெற்று உயிர் கொண்டெழுவதற்காக அகலிகை காட்டிலே கிடந்தாள், கம்பனுக்கு உதவுவதற்கான நெல் வெண்ணெய் நல்லூர் சடையப்பனின் வீட்டிலே கிடந்தது. இராமருடைய கதை எழுதும் அளவுக்கு சொல் கம்பரின் நெஞ்சிலே கிடக்கின்றது  என்று எடுத்துக் காட்டினார். அதாவது இலக்கியங்கள் தோன்ற வாணிக வர்க்கம் பின் நின்றிருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


    உள்ளதும் நல்லதும் என்னும் கட்டுரையிலே புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார். 

    “எவரோ ஒருவர் வருவார். என்னைத் தூக்கிவிடுவார்”  என்று புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை  சிந்தித்துக் கொண்டிருந்த  சமயத்திலே மட்டுவில் என்னும் இடத்தில் இருந்து வந்த புத்தகம் விற்பவர் ஒருவர் தன்னைக் கூட்டிக் கொண்டு போய் யாழ்ப்பாணத்தில் படிக்க விட்டபோது பல பண்டிதர்களின் தொடர்பு கிடைத்ததாகக் கூறியிருக்கின்றார். அவர் மட்டும் வராமல் விட்டிருந்தால் புலவர்மணி பெரியதம்பிப்pபள்ளையை அவாடகளை நாம்  பெற்றிருக்க முடியாது.


    சங்க இலக்கியங்களிலே அகத்திணைப் பாடல்களில் வெகுவாகப் பேசப்படுபவர் தோழி. காதலன் காதலியிடையே காதல் மலர்வதற்கும் இரவுக்குறி பகற்குறி என்று சந்திப்பு நிகழ்வதற்கும் தோழியின் தியாகங்களும்  யோசனைகளும் மிகுந்து இருந்திருக்கின்றன.

    அந்தணர் பெரியோய்! அவலமின்றி இருமின்

    கோதாவரியின் குளிர்பூஞ்சாரலில்

    அச்சம் ஊட்டிய ஞமலியை இன்று

    கதமிகு சீயம் கடித்துக் கொன்றதே"

     

    இப்பாடலின் சந்தர்ப்பம் காதலர் சந்திப்புக்கு தோழியின் உதவியை அழகாக எடுத்துக் காட்டுகின்றது. கோதாவரிக் கரையிலே ஒரு பூஞ்சோலையில் காதலர் இருவரும் சந்திக்க எண்ணினர். ஆனால், அதற்கு முன்னமே அந்த இடத்தில்  ஒரு அந்தணர் உலாவிக் கொண்டிருக்கின்றார். அவரை எப்படி அந்த இடத்தில் இருந்து அனுப்பலாம் என்று எண்ணிய தோழியானவள் அந்த அந்தணர் நாய்க்கு அஞ்சுபவர் என அறிந்து வைத்திருக்கின்றாள். எனவே அவரிடம் சென்ற தோழி நீ அஞ்சாதே அந்த நாயை ஒரு சிங்கம் கொன்று விட்டது00 என்கின்றாள். நாய்க்கு அஞ்சுபவர் சிங்கம் என்றால் அந்த இடத்தில் நிற்பாரா? இவ்வாறு காதலுக்கு உதவிய தோழியர் தியாகங்கள்  பற்றி சங்கப் பாடல்கள் பல எடுத்துக்காட்டுகின்றன.

     

    இவ்வாறு ஒருவரின் மகிழ்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பலரின் தியாகங்களும் ஒத்துழைப்புக்களும் உதவிகளும் நிச்சயம் அமைந்திருக்கும் என்பது உண்மையே.

     

     

     

    புதன், 6 ஜனவரி, 2021

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்


    உதவி செய்வது என்பது இப்போது விளம்பரமாகப் போய்விட்டது. வலது கை கொடுத்தால், இடது கைக்குப் புலப்படாது என்று இருந்த காலம் மாறி, இப்போது உதவி செய்கின்றோம் என்று விளம்பரப் பலகை கட்டி உதவி செய்கின்ற வழக்கமும், அதைப் பலரும் பார்க்கும் இடங்களில் பதிவு செய்கின்ற நிலைமையும் ஏற்பட்டு விட்டது. அப்படிக் காட்டினாலேயே நாமும் கடையெழு வள்ளல்கள் போல் ஒருவராகக் கருதப்படுவோம் என்பது விருப்பமாகிவிட்டது. இப்போதெல்லாம் எப்போது மரத்திலிருந்து ஒருவர் விழுவார். எப்போது நாம் ஓடிச் சென்று உதவுவோம் என்று காத்திருப்பது போலாகிவிட்டது என்பவர்களும், நாமெல்லோரும் இங்கு பிச்சையா எடுத்து வாழுகின்றோம் என்று சினங்கொண்டு எழுந்து சில தாயக மக்கள் ஆத்திரக் கணைகளை வீசுவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால், உதவி செய்பவர்களோ, நாம் இப்படி வெளிப்படையாகக் காட்டினாலேயே வேறு பலரும் முன் வந்து உதவி செய்வார்கள் என்று காரணம் காட்டுகின்றாhகள். அதுவும் ஒருவகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது. ஏனென்றால், மனிதர்களுக்கு ஏட்டிக்குப் போட்டி இயல்பு அல்லவா!

    இந்நிலையில் வாழ்க்கை முழுவதும் உதவி செய்து விட்டு அடுத்த வீட்டுக்குத் தெரியப்படுத்தாத பலரைக் காண்கின்றோம். இம்மனிதர்களிடம் இருந்து சிலரின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது புன்னகை ஒன்று வெளிவருக்கின்றது. தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் நிலையில் பல நிறுவனங்கள் இருந்தாலும், தற்போது அவரவரே அடுத்தவருக்குத் தெரியாது தம்மிடம் இருப்பதைக் கொடுத்துவிட்டு இவ்வாறான இடங்களுக்கு நீங்கள் விரும்பினால், நேரடியாகக் கொடுங்கள் என்று ஆற்றுப்படுத்திவிட்டு அமைதியாக இருந்து விடுகின்றார்கள். உதவி செய்வது எமக்குத் தெரிந்தால் போதும் மற்றவருக்குத் தெரிய வேண்டும் என்று ஒரு கட்டாயம் இல்லை. பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த போது அரசவைக்குச் சென்று ஆலோசனை பெற்றுச் செய்யவில்லை. உடனே தேரிலிருந்து இறங்கி கொடி படர விட்டுச் சென்றான். பேகன் மயிலுக்குப் போர்வை கொடுக்கும் போது தனக்கு வேறு ஒரு போர்வை பெற்று மயிலுக்குப் போர்த்தவில்லை. அதியமான் எந்தவித ஆலோசனையும் இல்லாமல் நெல்லிக்கனியை ஒளவைக்கு வழங்கினான். இவ்வாறு இலக்கியத்தில் இடம்பெற்ற கடையேழு வள்ளல்கள் காலத்தால் அழியப்படாதவர்களாக காணப்பட்டனர். 

    தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்த மன்னர்களை இலக்கியத்தில் காணுகின்றோம். தேடிச் சென்று பரிசில்களை யாரும் வழங்கவில்லை. தேவையேற்படும் போது அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள் அம்மன்னர்கள் கூட தமது மக்களிடம் இருந்து பெற்ற வரி மானியத்திலிருந்தே வாரி வழங்கினார்கள். தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கே பரிசில்கள் வழங்கினார்கள். எனவே கொடையைத் தூண்டும் வண்ணம் புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடினார்கள். 


    “இன்று செலினும் தருமே. நாளை செலினும் தருமே

    சிறிது நின்று செலினும் தருமே”  


    என்று எப்போது போனாலும் பரிசில்கள் கிடைக்கும் என்று அதியமானைப் புகழ்ந்து பாடிய ஒளவையார் கூட பாடிப்பாடிப் பரிசில்கள் பெற்றார். ஒரு அரசனைப் புகழ்ந்து பாடி யானையைப் பரிசாகப் பெற்ற புலவன் வீட்டிற்கு வருகின்றான். வறுமையில் இருந்த மனைவி என்ன பெற்று வந்திருக்கின்றாய் என்று கேட்கின்றாள்.


    இம்பர் வான் எல்லை இராமனையே பாடி 

    என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி 

    வம்பதாங் களபமென்றேன் பூசுமென்றாள்.

    மாதங்கமென்றேன் யாம் வாழ்ந்தோமென்றாள்

    பம்புசீர் வேழமென்றேன் தின்னுமென்றாள்

    கம்பமா என்றேன் நற்களியா மென்றாள்

    கைமா என்றேன் சும்மா கலங்கினாளே. 


    களபம் என்று சொல்ல சந்தனம் என்று நினைத்து நீ பூசிக்கொள் என்கின்றாள். மாதங்கம் என்று சொல்ல தங்கம் என்று நினைத்து நாம் வாழலாம் என்கிறாள். வேழம் என்றார். உடனே அவளும் கரும்பு என்று நினைத்து சாப்பிடுங்கள் என்றாள். கம்பமா என்று சொல்ல கம்பு மா என்று நினைத்து களி செய்து சாப்பிடலாம் என்றாள். இறுதியில் புலவரும் கைமா என்கிறார். அப்போதுதான் யானை என்று நினைத்து எம் இருவருக்குமே சாப்பாட்டுக்கு வழியில்லை எப்படி யானைக்கு உணவு போடுவது என்று கலங்கினாள். என்று ஒரு பாடல் வருகின்றது. யானையைக் குறிக்க இத்தனை சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாடியதற்கு யானை பரிசாகக் கிடைக்கிறது.


    உதவி உதவி வரைத்தன்று உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து 

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்


    எனவே எதிலுமே புகழும் புகழ்ச்சியும் கை உயர்த்தி நிற்கின்றன. சறுக்கச் சறுக்க மேலேறுவது போல புகழின் மேல் ஏறிக்கொள்வதற்கே அக்கால மன்னர்கள் தொட்டு இக்கால மக்களும் முனைந்து நிற்கின்றார்கள் என்பது உண்மை. 



    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...