• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 19 நவம்பர், 2016

    வாழ்வின் பூதாகாரம்




    ‘‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
    அதனிலும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறத்தல்‘‘

    இவ்வுண்மை தெரியாதார் யாருண்டு உலகில். உயிரொன்று உடலெடுத்து உலகினிலே நடமாட உதவும் கரங்கள் எத்தனை, உருப்பெற்று பொறுப்பெடுத்து உருவாக்குவோர் எத்தனை. கலை பயின்று, கல்வி பயின்று, கடவுள் பயின்று, நடமாடும் மனிதர்கள் பயின்று, மாக்களினம் பலவும் பயின்று, வாழ்வு பெற்ற கணங்கள் தான் எத்தனை, எத்தனை. கண்ணில் படாது கருத்தில் மட்டும் கலந்திருக்கும் மனதின் விந்தை விளக்கிடவும், விளங்கிடவும் புரியாத மானிடரே உலகில் இறுதி வரை புரியாத புதிராக மாண்டு போகின்றார்கள்.

    உள் மனதின் போக்கினை உணராதார் பலருண்டு. ‘‘சொல்ல முடியாத அதீத சக்தி என் வாழ்வைத் தொடுகிறது. அதை நான் பார்த்ததில்லை. ஆனால் உணர்கின்றேன்‘‘ என்றார்  மகாத்மாகாந்தி. மனதுள் நோக்கிய பார்வை பெற்றதனால், மனவுறுதி அவரால் முடிந்தது. நாளும் விற்பனை நிலையத்தின் கணக்கு வழக்கினை நாளிறுதியில் பார்க்கின்றோம் அல்லவா! நம் வாழ்க்கையின் நாள் செயல்களை, நாம் நாளும் மீட்டிப் பார்க்கின்றோமா? போனால் போகிறது என்று விட்டு விட மனமொன்றும் 1000 ஒயிரோக்கு வாங்கிய  பொருளல்ல. உடலுள் ஆழப்பதிந்த வேர். அது கிளைவிட்டு விருட்சமாய் பதிந்திருந்து ஆழ்மனச் சிந்தனையை அடக்கவும், திருத்தவும், தெளிவான சிந்தனையில் வழிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், அது எமக்குச் சொந்தமானது. நாளும் பலவிடயங்கள் கற்று, நாம் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டியது. உள்மனத் தேடல் பிழைத்துவிட்டால் வாழ்க்கை உதவாத நரகமாய் விடுவது நிச்சயம்.

               ஒன்றாக வளர்ந்து, ஒட்டி உறவாடி, உயிராய் நேசத்தை உவந்தளித்த சகோதரர்கள் திருமணம் என்னும் பந்தத்தினுள் நுழைந்த பின் மனமும் செயலும் வேறுபட்டு நிற்கின்றனரே! உயிர் கொடுத்து உடல் கொடுத்து உருவாக நல் எண்ணங்களைப் பதித்து, மனிதனாயும், மாமனிதனாயும் வாழ வழிகாட்டி நின்ற தாய் உறவை வெட்டி விட்டுப் போவதும் ஏன்? துணை ஒன்று கிடைத்துவிட்டால் துயர் துடைக்கத் தாயின் துணை நாடாது பிள்ளைகளும் பிரிந்து செல்வதும் தான் ஏன்? அனைத்திற்கும் நிலையில்லா மாறுபடும் மனம் தானே காரணம். ஒரே எண்ணம் திரும்பத் திரும்பக் கூறப்படும் போது ஆழமாய் மனதில் பதிந்து விடுகின்றது நிஜமல்லவா? கோயிலிலே முணுமுணுக்கும் வேண்டுதல்கள் பலிப்பதற்கு காரணமும் இதுவல்லவா? அனைத்துக்கும் மனமே காரணமாக அதனால் ஏற்படும் விபரீதங்களை மனதில் கொண்டால் வருகின்ற வில்லங்கங்களை நாம் விலக்கிவிடலாம். மனதின் சாட்சியை மதித்து வாழ்வது மட்டுமல்ல. மனதுக்கு சிறந்த சாட்சி சொல்ல நாம் பயிற்சியளிக்க வேண்டியது அவசியமாகின்றது.

                 மனச்சாட்சி பற்றி சுவாமி விவேகானந்தர் சொல்லும் போது, நன்மை, தீமைகளை வேறுபாடு தோன்றப் பகுத்துக் கூறும் உள்ளுணர்ச்சியே மனச்சாட்சி என்கிறார். ஆகவே நன்மை, தீமை வேறுபாட்டை பகுத்துக் காண பயிற்சியளிக்க வேண்டியது நமது கடமை அல்லவா? கடந்த காலத்திலே மகிழ்ச்சியும், சமூகத்திலே நல்ல மதிப்பும்  ஆரோக்கியமான வாழ்வும் பெற்றவர்கள் தன்னம்பிக்கை மேம்பட்டு  மனதை ஆழத் தலைப்படுவார்கள். இளமையின் வனப்பை இறுதிவரை பெறுவார்கள். ஆனால், அவரே நோயில் துவண்டுவிடில், நினைக்காது தேடிவரும் தனிமை சூழ்ந்துவிடில், மனதால் துவண்டுவிடுகின்றார்.

                    எதிர்பாராது சொந்தம் கொண்டாடும் நோய், முதுமையில்  உடல் உறுப்புக்களில் ஏற்படும் மாற்றம், உள் உணர்வுகளில் ஏற்படும் சிதைவு வாழ்க்கையின் தன்னம்பிக்கைக்கு சவாலாக அமைந்துவிடுகின்றது.  மனதால் நொந்து போனவர்கள் பிடிவாதம் மேலிட்டு சமூகத்தில் உறவுகளில் தமது மதிப்பை எடைபோட்டுப் பார்க்கின்றார்கள். தாம் வாழத் தகுதியற்றவர்கள் என்று தாமாகவே தமக்குத் தீர்ப்பளிக்கின்றார்கள். சட்டெனத் தோன்றும் முடிவு தப்பாகவே இருக்கும் என்பது காலம் காட்டுகின்ற கல்வி. இதைத் தவிர்ப்பதற்குத் தனிமையைத் துரத்தும் தன்மையை மனதுக்குக் கற்பிக்க வேண்டியது ஒவ்வெருவர் கடமையுமாகும்.

                    பெற்றவர்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாழ நினைப்பதும், பிள்ளைகள் பெற்றவர்களை தனித்து வாழ அநுமதிப்பதும் சட்டப்படிக் குற்றம் எனச் சமுதாயத்தில் சட்டமாக இயற்றப்படல் அவசியமாகும். இதுவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை மீண்டும் சமுதாயத்தில் வலியுறுத்தத் துணையாகும். பிள்ளைகள் வளரும் வரை பொறுத்துப் போகும் பெற்றோர். வளர்ந்தபின் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளல் ஏன் சாத்தியமில்லை? தாம் வளரும் வரை தாங்கி நின்ற பெற்றோர் ஆலோசனைகள் வளர்ந்த பின் தமக்கு கசப்பதாக பிள்ளைகள் கருதாதது ஏன் சாத்தியமில்லை? அனைத்தும் சாத்தியமாகும் வேளை உயிர்களுக்கு மதிப்பும் அதிகரிக்கும். மனக்கிலேசங்களும் மறைந்துவிடலாம். 
         

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...