• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 25 ஏப்ரல், 2015

  பாராட்டு விழாக்களும் பண்பான எண்ணங்களும்


                       
  02.05.2015 மண் சஞ்சிகை வெள்ளிவிழா

  சஞ்சிகை என்றால் படைப்பாளர்கள் படைப்புக்கள், செய்திகள் விளம்பரங்கள், தாங்கி வருவது என்று மட்டுமே தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். சிறுவர், பெரியோர் என்ற பேதமின்றி படைப்புக்கள் இதில் பதியப்படினும் அவற்றை மீறிய ஒரு மனித நேயப் பண்பும் இச்சஞ்சிகை அடங்கியிருக்கின்றது என்பதே மேலான உண்மை ஆகிறது.
             
                  இருபத்தைந்து வருடங்கள் மண் சஞ்சிகையின் ஆசிரியர் வ.சிவராசா அவர்கள் எவ்வித உறுப்பினர்களும் இன்றி தனி மனிதனாய் இச்சஞ்சிகையை வெளியிடுகின்றார். உறக்கம் தொலைத்து இவர் தேடிய, உதவிய உறவுகளோ அநேகம். ஐரோப்பிய மண்ணிலே வளம் படைத்தோரிடமிருந்து வளம் பெற்று, அதனை இலங்கை மண்ணில் ஆதரவிழந்தோர் வாழும் இல்லங்களுக்கு உபகாரம் பண்ணி, அவ்விபரங்கள் அத்தனையையும் எவ்வித ஒழிவு மறைவுமின்றி வெளிப்படையாக சஞ்சிகையில் வெளியிட்டு அளப்பெரிய சாதனை படைத்து வருகின்றார். இவ் இல்லங்களில் வாழும் அனாதைச் சிறார்கள் தம் கைப்பட எழுது படைப்புக்களை இச் சஞ்சிகையில் வெளிவரும் போது, அதைப் பார்க்கும் இன்பமோ வெகு ஆனந்தம். இவ்வுலகில் இப்படியும் ஒரு மனிதனா என்று எண்ணத்தோன்றும்.

                           இப்பணி தொடக்கி இருபத்தைந்து வருடங்கள் கடந்து விட்டன. தனி மனிதனாய் சலிப்பின்றி, வேலைப்பழுவுடன் ஒருவர் ஈடுபடுவது என்பது கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விடயமாகப் படும், ஆனால் அதை நேர் இருந்து பார்ப்பவர்களுக்கே அவர் நிலைமை புரியும். இது மட்டுமன்றி இவர் ஜெர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் இருந்து செயல்படுகின்றார். 

                   இவ்விழா வ.சிவராசா அவர்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி. இவ்விழா சிறப்புடன் நடைபெற மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 

  02.05.2015 ஓகுஸ் நற்பணி மன்றம் நடத்துகின்ற பாராட்டு விழா              கோவைக்கவி வேதா இலங்காத்திலகம் அவர்களுக்கு ஓகுஸ் நற் பணிமன்றம் பாராட்டுவிழா ஒன்றினை நடத்துகின்றது.
              
               வேதா இலங்காத்திலகம் அவர்கள் எழுத்துடன் ஒன்றிப்போனவர். அவர் எழுதாத நாள் இல்லை என்றே கூறிவிடலாம். இதை இணைய உலகம் அறியாமல் இல்லை. தனக்கென ஒரு இணையத்தளம் அமைத்து தம் எண்ணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். நூல்கள் பல வெளியிட்டதுடன், பல இணையத் தளங்களுக்கு தன் படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றார். இவர் காணும் பொருளெல்லாம் இவர் கவிதைக்குப் பொருளாகும்.

            வாழும்போதே வாழ்த்தும் பண்புள்ள ஓகுஸ் டென்மார்க் நற்பணிமன்றம், தமிழோடு வாழும் இவருக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்து இன்றைய நாள் விழா எடுக்கிறது. பண்பட்ட தமிழுடன் படைப்புக்களைப் படைக்கும் வேதா இலங்காத்திலகம் அவர்கள் மேலும் மேலும் பல படைப்புக்களைத் தந்து புகழ் உச்சத்தை அடைய வேண்டும் என அவரை மனதார வாழ்த்துகின்றேன்.

  03.05.2015 நீர்கொழும்பு விஜயரெட்ணம் பழைய மாணவர்கள் ஒன்று கூடல்                   
           கல்வி கற்ற இடம் கல்விக் கோயிலாகும். இக்கோயிலுக்கு ஆராதனை செய்யும் நோக்குடனும், கூடிக் குதூகலித்த நட்புகள் குடும்பம் கண்ட போது, குடும்பக் கடமைகளில் நாட்டம் கொண்டு நட்புகளை மறந்திருக்கும் வேளைகளில், இவ்வொன்றுகூடல் இன்பமும் பணியும் கலந்தே அமைய இன்றைய நாள் நடைபெற இருக்கின்றது. இப்பாடசாலை முன்னாள் ஆசிரியர் என்ற வகையிலும் இம்மாணவர்களுடன் என்றும் தொடர்பில் இருப்பவர் என்னும் மகிழ்விலும். இந்நிகழ்வின் சிறப்புக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்

              ஏற்றி விட்ட ஏணியை ஏற்றிப் பார்க்க நினைக்கும் இம்மாணவர்களை மனதார வாழ்த்தி, இந்நிகழ்ச்சி மேலும் உச்சம் தொடட்டும் என்றே என் ஆசிகளை வழங்குகின்றேன். 

  ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

  என்னையே நானறியேன் நூல் விமர்சனம்  என்னால் எழுதி வெளியிடப்பட்ட என்னையே நானறியேன் என்னும்  நூலுக்காக, எனக்குக் கிடைக்கப்பட்ட விமர்சனங்களில் சில விமர்சனங்கள் இப்பதிவில் இடம்பெறுகின்றன. இந்நூலை முழுவதுமாக வாசித்து தமது எண்ணப் போக்கை எழுத்து வடிவில் தந்தளித்த உள்ளங்களுக்கு என்றும் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.  http://kowsy2010.pressbooks.com/ என்னும் லிங்கை அழுத்தி நூலை நீங்கள் வாசிக்கலாம். Table of contents இல் அனைத்தும் உள்ளது.

  நன்றி 

  வழக்கறிஞர், சிறந்த பேச்சாளர், த. இராமலிங்கம் அவர்களின் விமர்சனம். மிக்க நன்றி சார் 


  அன்புச் சகோதரி திருமதி கெளசி அவர்களுக்கு

  வணக்கம். தங்களது நூலான 'என்னையே நானறியேன்' கதையினை நேற்றிரவுதான் படித்தேன். ஒரு தேர்ந்த எழுத்தாளர் நீங்கள் என்பதற்குச் சான்றாக இக்கதை அமைந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு உன்னதமானதாக, உண்மையாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதையும், அதுவே முரண்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்பதையும் இதைவிட அழகாக சொல்லிவிடமுடியாது. கரன் போன்று, போலித்தனமான கணவன் அமைந்துவிட்டால் மனைவி எவ்வளவு துயருறுவாள் என்பதற்கு உதாரணமாக வரதேவியின் படைப்பு அமைந்திருக்கிறது. திருந்திவிட்டதாகக் கணவன் சொன்னாலும், மனத்தில் வெறுப்பு நிறைந்துவிட்டால் அங்கு மீண்டும் உறவு பூப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதனை அழகாக நிறுவியுள்ளீர்கள். கரன், வரதேவி இருவரைவிட, குழந்தை வரன் மீதே நமக்குக் கூடுதலாக இரக்கம் பிறக்கிறது. எலியும் பூனையுமாக இருக்கும் பெற்றோர், உடல் நலம் கெட்ட நிலையிலும் இணையாமல் இருந்தால், இடையில் சிக்கித் தவிக்கும் குழந்தையின் மனநிலை எவ்வளவு கொடுமையானதாக இருக்கும்....? அழகான படைப்பு சகோதரி! இன்னும் பல நல்ல படைப்புக்களை நமது தமிழ்ச் சமுதாயத்துக்கு நீங்கள் தரவேண்டும் என்பது எனது விருப்பம். 

  அன்புடன்,
  த.இராமலிங்கம்
  சென்னை
  இந்தியா.


  ஆசியவியல் நிறுவன இயக்குனர், அறிஞர், முனைவர் ஜி.சாமுவேல் அவர்களுடைய விமர்சனம். நன்றி ஐயா 

  அன்புடையீர்,

  வணக்கம்.

   என்னையே நானறிவேன் எனப்பெயரிய அருமையான நாவல் இலக்கிய நூல் நேற்றுத்தான் கிடைத்தது. ஒரே அமர்வில் நூல் முழுவதையும் படித்து மகிழ்ச்சியடைந்தேன். புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் சிக்கல்களை யதார்த்தமாகப் பேசும் நூல் என்ற முறையில் இந்நூல் தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்துள்ள அருமையான கலைப்பெட்டகம் என்பேன். உயரிய, ஆனால் இயல்பான, விழுமிய செஞ்சொற்கவி இன்பம் உங்கள் உணர்ச்சியோட்டம் மிக்க உரைநடையில் பொங்கித் ததும்பி வழிகின்றது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். மொழியைத் திறம்படக் கையாள்வதில் தான் ஒரு எழுத்தாளனின் முழு வெற்றியும் அடங்கிக் கிடக்கின்றது என்று நான் நம்புகிறேன். உங்கள் உயரிய,உணர்ச்சி ததும்பும், எளிய உரைநடையும், பொருத்தமான சொற்கள் பொருத்தமான இடத்தில் அமர்ந்து உரைநடை ஆற்றொழுக்காகப் பாய்வதும் என்னை மிகவும் கவர்ந்தன.

             சதையும், குருதியும், உயிரோட்டமும் பெற்ற கதைத் தலைவியின் பாத்திரப் படைப்பு மிகவும் அருமை. பிறந்த இடத்தின் அகப்புறச் சூழல்கள் பிற நாடுகளுக்கும் செல்லும்படி பிடரியைப் பிடித்துத் தள்ள, புகுந்த இடத்தின் புறச்சூழல்கள் பூலோக சுவர்க்கமாக அமைய, குடும்ப வாழ்க்கை வெடித்துச் சிந்திச் சிதறுவதும் மீண்டும் புதுவாழ்வை புனரமைக்க முயலும்போது பேரிழப்பு ஏற்படுவதும் மிகப்பெரிய மானுட அவலமாகவே பரந்து பரவுகின்றது.

             புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் குறித்த மேலும் பல இலக்கியங்களை நீங்கள் படைக்க வேண்டும் என்பது எனது அவா. மொரிசியசு நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்த அனைத்துலக மாநாடு வரும் ஜூலை 23, 24, 25 - 2014 ஆகிய நாட்களில் நடைபெறுவது பற்றி அறிந்திருப்பீர்கள். அம்மாநாட்டில் பங்கேற்று புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் குறித்த இலக்கியங்கள் என்ற தலைப்பில் தாங்கள் ஆய்வுரை வழங்கலாம். ஜெர்மன் நாட்டின் பிரதிநிதியாக இருந்து அங்கு வாழும் தமிழர்களையும் இணைத்து இம்மாநாட்டின் வெற்றிக்கு உதவலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒருங்கிணைப்புப் பணிக்கு தாங்களால் இயன்ற அனைத்துப் பணிகளையும் நல்கலாம்.

  மிக்க நன்றி,
  மிக்க அன்புடன்,

  முனைவர் ஜி. ஜான்சாமுவேல்
  இயக்குநர், ஆசியவியல் நிறுவனம்.

  பெறுநர்
  திருமதி. சந்திரகௌரி,
  ஜெர்மனி

                                            எழுத்தாளர், கவிஞர், சிறந்த விமர்சகர் , முகநூலில் தராசுமுனை என்னும் தலைப்பில் விமர்சனங்கள்  தந்து கொண்டிருக்கும் ஸ்ரீ ஸ்ரீறீஸ்கந்தராஜா அவர்களின் விரிவான விமர்சனம். மிக்க நன்றி .

  என்னையே நானறிவேன்....
  நாவலுக்கான விமர்சனம்
  ***********************************

  நாவல் என்றால்......
  இப்படியும் இருக்குமோ??
  ****************************************
  பல்வேறு அனுபவங்களோடு
  பல்வேறுபட்ட  செய்திகள் காணப்பட வேண்டும்.

  வாழ்வை முழுமையாகவோ அல்லது அதன்
  ஒரு பகுதி வாழ்க்கையையோ விளக்கமாத் தரவேண்டும்.

  பல்வேறு பாத்திரங்களின் பண்புகளையும்
  வாழ்க்கை முறைகளையும் அவற்றிற்கிடையே நடைபெறும்
  நிகழ்ச்சிகளையும் ஒழுங்குபடுத்திக் கதையாகத் தொகுத்துத்
  தரவேண்டும்.

  நீண்டதொரு கதையாக ஐம்பதாயிரம் சொற்களுக்கு
  மேலாகவும் இருக்கலாம்.

  நாவல் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்
  கண்ணாடி எனலாம்.

  நாவல் எழுப்பும் கலையார்வம் நீண்ட நேரம் நீடித்து நிற்க வேண்டும்.
  பாத்திரங்களை உருவாக்குவதிலும், அவற்றை வழிநடத்திச் செல்வதிலும்தான் ஒரு நாவலின் வெற்றியும் தங்கி இருக்கிறது.
  உயிருள்ள பாத்திரங்களை உருவாக்கி அவற்றை உலாவ விடுவதன் மூலம் ஆசிரியரின் திறமை வெளிப்படும்.

  கதையின் நிகழ்வுகளையும் கால அளவுகளையும் பொறுத்து பாத்திரங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

  பாத்திரங்களின் பண்புகளை அவற்றிக்கு இடப்படும் பெயர்களைக் கொண்டும் ஊகிக்க முடியும்.

  பாத்திரங்களை ஆசிரியரோ அல்லது இன்னொரு பாத்திரத்தின் மூலமாகவோ அறிமுகம் செய்து வைக்கலாம.

  பாத்திரங்களின்  வளர்ச்சியில்தான் நாவலும் வளர்கின்றது.

  அவற்றின்  செயல்பாடுகள், சமூகத்தோடு பாத்திரம் கொண்டுள்ள உறவு, பிறரோடு உரையாடும் உரையாடல்கள் போன்றவை பாத்திரத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன.

  ஆசிரியரின் முழு ஆளுமையும் இங்கேதான் தீர்மானிக்கப்படும்.

  உச்சக் கட்டமும் கதை முடிப்பும்
  எந்த ஒரு இலக்கியப் படைப்பும் ஒரு உச்சக் கட்டத்தை
  நோக்கியே நகரும். நகர வேண்டும்.

  இதற்கு நாவல் இலக்கியமும் விதி விலக்கானதல்ல.

  பாத்திரப் படைப்பாக்க உத்தியில் பாத்திர முடிப்பும் ஓர் இன்றியமையாததாகும்.

  பாத்திரங்களுக்கு ஏற்படும் முடிவைக் கொண்டுதான்
  பாத்திரங்கள் வாசகர்களின் மனத்தில் இடம் பெறுவர்.

  திருமணம் அல்லது ஒரு குறிக்கோள் நிறைவேறுதல் போன்ற இன்ப முடிவாக இருக்கலாம்.

  இல்லையேல் மரணம் அல்லது ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதில் ஏற்படும்  தோல்வி போன்ற
  துன்பமுடிவாகவும் இருக்கலாம்.

  எந்த முடிவாக இருந்தாலும் அம்முடிவு பாத்திரத்திற்கு, இயற்கையாக ஏற்பட்ட முடிவாக இருத்தல் வேண்டும்.

  நடையும் கதை சொல்லும் பாங்கும்
  கதையை நெறிப்படுத்திச் செல்லும்போது பாத்திரங்களின் பண்புகளை ஆசிரியர் தம் கூற்றாகவே கூறிச்செல்வது
  ஒருமுறை யாகும்.
  அல்லது பாத்திரங்களின் செயல்கள் மூலம் வாசகனே உணர்ந்து கொள்ளுமாறு அமைப்பது இன்னொரு முறையாகும்.
  சொல்லாட்சியில் மிகவும் கவனம் செலுத்தப் படவேண்டும்.
  பாத்திரங்களின் உரையாடல்களின் போது வட்டாரச் சொற்கள், அல்லது பிறமொழிச்சொற்கள் கலந்து வரலாம்.
  ஆனால் ஆசிரியர் கூற்றுக்களின் போது எழுத்து வழக்கு இருக்கவேண்டும்.
  எல்லாவற்றிலும் மேலாக இந்த நாவலின் மூலம் ஆசிரியர் வாசகனுக்கு என்ன செய்தியைத் தந்து செல்லுகிறார் என்பதும் கவனிக்கப்படும்.
  இவற்றை அளவு கோல்களாகக் கொண்டு இந்த நாவலை உரசிப்பார்ப்போம்!
  குறை காணவேண்டும் என்பதுவோ
  அல்லது முகத்துதி செய்யவேண்டும் என்பதுவோ
  எமது நோக்கமல்ல.

  தராசுமுனையின் தாக்குதலுக்கு
  இவர் தாக்குப் பிடிக்கின்றாரா என்று பார்ப்போம்!

  XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

  இந்த பூமிப்பந்தின் ஒரு புலர் காலைப் பொழுதோடு
  புலத்தைக் களமாகக் கொண்டு கதை விரிகின்றது!
  அற்புதம்!!

  மனித நேயத்தையும்... மண்வாசனையையும்...
  பாத்திரங்கள் வாயிலாக பதிவு செய்து செல்லுகிறார்.

  ஒரு பெண்ணுக்கு வேலி தாலி என்னும் மரபோடு
  இவர் பாதம் பதிப்பதிலிருந்தே இவர் பெண்ணினத்தின்பால்
  பக்கச் சார்பானவர் என்பதை முன்கூட்டியே
  அறியத் தருகின்றார்.

  இவர் இங்கே அள்ளித் தெளிக்கும் அனுபவங்கள்...
  முதுமொழிகள் மூலம் இவரை ஒரு சாதாரண படைப்பாளியல்ல
  இவரை ஆழமாக வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

  இருநூறு பக்கங்களுக்கு மேலுள்ள ஒரு நாவலை
  ஒரு வாசகனை ஓரிடத்தில் இழுத்து வைத்து.....
  இருத்திவைத்து வாசிக்க வைக்க முடியும்
  என்பது அவ்வளவு சுலபமானதல்ல.

  வாசகன் மிகவும் புத்திசாலி!
  பக்கங்களைத் தட்டிவிட்டுக் கொண்டே
  பத்து நிமிடங்களில் வாசித்து முடித்துவிட்டேன் என்று
  எழுந்தோடிவிடுவான்.

  ஆச்சரியம் என்னவென்றால்.....
  இந்த நாவலின் முதல் பக்கத்தைப் பிரிக்கும் எவரும்
  இதன் இறுதிப்பக்கம் வரும்வரைக்கு கீழே வைக்க விடாமல் ஆசிரியர் இழுத்துச் செல்லுகிறார்.....

  அத்தகைய ஒரு உத்தியை இந்த நாவலாசிரியர்
  கையாண்டிருப்பது வியக்கத் தக்கது!
  எம்மை விழியுயயர்த்த வைக்கின்றது!

  உயிருள்ள ஒரு சில பாத்திரங்களை
  எம் கண்முன்னே உலாவ விடுகின்றார்.

  சாதாரண மனித உறவுச் சிக்கல்கள்...
  உணர்வுச்சிக்கல்களில் இந்தப் பாத்திரங்களைச் சிக்கவைத்து
  கதையை நடத்திச் செல்லும் பாங்கு அற்புதமானது!!

  ஆசிரியரின் தற்கூற்றாகவும் பாத்திரங்கள் வாயிலாகவும்
  கதை வளர்ந்து செல்கிறது.

  எளிமையான சொல்லாட்சி கொண்டு
  பல இனிமையான கருத்துக்களை
  பொன்மொழிகளை நாவல் முழுவதும்
  தூவிச் செல்லுகிறார்.

  இவர் தானொரு கைத்தேர்ந்த எழுத்தாளர்தான்
  என்பதனை நிறுவிக் காட்டுகிறார்!

  தவிர தானொரு கவிதாயினி என்பதனையும்
  வெளிப்படுத்தும் நோக்கில் பலவிடங்களில்
  சான்றுகள் தருகின்றார்!


  தானொரு பெண் எழுத்தாளர் என்பதனை
  இவர் அடிக்கடி மறந்து போகின்றார்.

  இவர் தெளித்துச் செல்லும் தத்துவப் பொன்மொழிகள்....
  இவரை ஒரு தத்துவஞானி என்ற நிலைக்கும்
  உயர்த்திச் செல்கிறது.

  இது ஒரு கற்பனைக்கதையே....
  என்று இவரே தன் வாயால் சொல்லாமல் சொன்னாலும்
  வாசகன் ஏற்கமாட்டான்... அடம் பிடிப்பான்!

  அவ்வளவு ஆழமாக... அவ்வளவு நுட்பமாக..
  மிகவும் கைதேர்ந்த எழுத்துச் சிற்பியால்
  இந்த சிற்பம்  செதுக்கப்பட்டிருக்கின்றது!!

  இவர் தன்வாக்கு மூலத்தினை இவ்வாறு பதிவு செய்கின்றார்...

  வரிகளால் பாலம் போட்டு நான், உங்கள் நெஞ்சங்களை இந்நூலின் மூலம் வந்தடைகின்றேன். மூளைவீங்கி வெளியான என் எண்ணங்கள் கோர்க்கப்பட்ட முதல்நூல் என்னையே நானறியேன். இப்புதிய அகம் என்னை யார் என்று உலகுக்கு உணர்த்தும் என்று நம்புகின்றேன். இதனுள் புகுந்து வரும் வாசகர்கள் பெற்றுவரும் அநுபவங்கள் அவர்களுக்குப் பாடமாக அமையும் என்றும் கருதுகின்றேன். என் அநுபவங்கள் சொல் ஆடை கட்டிச் சுதந்திரமாய் இந்நூலில் நடைபயின்றிருக்கின்றன

  இலக்கியம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
  இந்தக் கவிதாயினி... (மன்னிக்கவும்) கதாசிரியர் இலக்கணம் எழுதுகிறார்...

  பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல தந்து, ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் குடிமகளின் வாழ்வும் ஒரு இலக்கியமாய் இடம் பிடிப்பது திறம் அல்லவா?

  ஒரு பாத்திரத்தின் ஒரு நிமிட உணர்வுகளை இந்த ஆசிரியர் தன்கூற்றாகக் கூறும் சொல்லாட்சியைப் பாருங்கள்....

  குளியலறைவிட்டு வெளியே வந்தாள். வீடு, வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் தன்னைத் துரத்துவது போல் அவள் கண்களுக்குத் தெரிந்தன. கைகளால் விரட்டினாள். மனதுக்குள் குரூரமொன்று தாண்டவமாடியது. பறிபோன பாடசாலை மூளைக்குள் மாறாட்டத்தை ஏற்படுத்தியது. விட்டுப்போன கணவன் சில்லறையாய் செய்துபோன செயல்கள் ஒவ்வொன்றும் ஆடை களைந்து நிற்பதுபோல் அவமானத்தைத் தந்தது. தனிமை அரக்கன் பக்கத்திலே நின்று பயமுறுத்துவதுபோல் இருந்தது. அமைதியான சூழல் மயானஅமைதியைத் தந்தது. சுற்றும் முற்றுமும் தலையை அசைத்து அசைத்துப் பார்த்தாள். அவள் கண்கள் இரண்டும் அளவுக்கதிகமாக விரிந்தன. சுவரின் ஒரு புள்ளியை வெறித்துப் பார்த்தாள். அவள்  உள்ளே இருந்து ஒரு பெண் எழுந்து வந்தாள்.

  ஒரு வானொலியில் ஒரு உணர்வு பூர்வமான கவிதையொன்று ஒலிபரப்பாகிறது.

  அந்தக் கவிதையையும் அதன் தாக்கத்தையும் பதிவு செய்யும்
  இந்த கந்தகக் கவிதாயினியைப் பாருங்கள்...


  கவிதை என்னும் வரிகளால் காந்தமாய் வரதேவி இதயத்தை இழுத்தெடுத்தது. ஆன்மாவின் உன்னத ராகங்களைத் தட்டி எழுப்பியது. அக்கணமே அடங்கிக் கிடந்த அவள் அறிவு விழித்துக் கொண்டது. சிந்தனை தூண்டப்பட்டது. சோர்வுகள் அகற்றப்பட்டன. சுதந்திர உணர்வு பெருக்கெடுத்தது

  எழுந்திடு பெண்ணே! எழுந்திடு!
         உன் இமைக் கதவுகளை இழுத்து மூடாதே
         உன் இதயமது இருண்டுவிடும்
         உன் பஞ்சுமெத்தையிலே முட்கள் பரந்து கிடக்கட்டும்
         உன் இருக்கையிலே இரும்பு ஆணிகள் நிமிர்ந்து நிற்கட்டும்
         தூங்கிவிடாதே தூரிகை கொண்டு உன் வாழ்வோவியம் தீட்டு
         பாதையிலே ரோஜாக்கள் மட்டும் விரிந்து கிடப்பதில்லை
         கல்லும் மண்ணும் விதந்து கிடக்கும் பூமியிலே
         வீரத்துடன் எழுந்து நடந்து செல்
         உன் இரத்தச்சுவடுகள் இரத்த சரித்திரம் பேசட்டும்
         பூமியைச் சுருட்டி எடுத்து உருட்டி விளையாடு
         நச்சுப்பாம்புகள் அதில் நசுக்கப்படட்டும்
         மறைந்த உண்மைகள் விஸ்வரூபம் எடுக்கட்டும்
         பெண்ணே! உன் மனிடப்பிறப்பு மாய்ந்துவிடுவதற்காகவல்ல
         காலத்தை வென்று காவியம் படைக்க
         காலத்தை வென்று காவியம் படைக்க!

  நாவல் அதன் உச்சக் கட்டம் எல்லாம் தாண்டி
  முடிவுக்கு வருகிறது...

  துன்பமோ... இன்பமோ... அதனை நான் இங்கு கூறிவிடப் போவதில்லை...  அது இலக்கிய தர்மமும் அன்று!!

  ஆசிரியரின் கைத்திறனை மட்டும் பாருங்கள்..
  தொலைபேசி அழைப்புமணி ஒலித்தது. ஓடிச்சென்று வரன் தொலைபேசியை எடுத்தான். காதினுள் நுழைந்த செய்தி கேட்டு அப்படியே தரையில் அமர்ந்தான். தொண்டை அடைத்தது. தலையைப் பின்புறம் நோக்கிச் சரித்தான்.
   “……” என்று கத்தினான். அவன் அழுகைச்சத்தம் கேட்டு ஓடி வந்தாள் வரதேவி.....
  பெரும்பாலும்
  கவிதை நூல்களுக்கே கம்பளம்
  விரிக்கும் சுபாவம் கொண்டவன் நான்...

  இங்கே ஒரு நாவலுக்கே
  நட்சத்திரப் பந்தல் போடுகின்றேன்!
  தீபங்கள் ஏற்றி...
  தோரணங்கள் தொங்க விடுகின்றேன்!

  காரணம்....
  இங்கே முத்துக்களும்... பவளங்களும்
  எங்கும் விரவிக் கிடக்கின்றன.
  பொன்மொழிகளும்... தத்துவமணிகளும்...
  நிறைந்து பொதிந்து கிடக்கின்றன!

  இதனை நான் வாசித்து முடித்தபோது...
  எழுந்து நடக்க அதிக நேரமாயிற்று!

  அற்புதமான அழகுத் தமிழை
  அள்ளியிறைத்த இந்த ஆசிரியைக்கு 
  நான் மனதார மலர்கள் தூவுகிறேன்!

  வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!
  வாழ்க நின் திருப்பணி!!
  வளரட்டும் உன் தமிழ்த்தொண்டு!  **************************************
  சிறீ சிறீஸ்கந்தராஜா
  15/11/2014

                           அழகு தமிழில் அற்புதமான் கவிதைகளை முகநூலில் சொரிந்து கொண்டிருக்கும், தற்போது திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதத் தொடங்கியிருக்கும் கவிஞர் ராஜகவி ராஹில் அவர்களின் குறுகிய விமர்சனம். மிக்க நன்றி.      
  சிவக்கும் சிலிர்க்கும் கவிதைள் நானும் சிவந்தேன் ...சிலிர்த்தேன் .தமிழ் இன்னும் அழகு உங்கள் நடையில் .....வண்ண வண்ண விண் மீன்களாய் சொற்கள் ....அவை கற் கண்டாய் .....முள் முகமாய் ....ஒரு ஓவியம்போல விரியும் வர்ண ஜாலங்களில் நிஜம் நிமிர்ந்து ஒளிர்கிறது
  பெண்களின் கண்ணீரை ...அவர்கள் விடுதலையை உங்கள் நடையில் தனித்துவமாக சொல்லியது அருமை ......கருவும் களமும் பழசு என்றாலும் நீங்கள் சொல்லும் விதம் அழகு புதுசு


  அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்

  "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்   எவரும...