• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 31 டிசம்பர், 2014

  புத்தாண்டு வாழ்த்துக்கள்


        
   முடிவென் றுலகில் ஏதும் இல்லை
  முடிந்ததாய் எதிலும் சரித்திரம் இல்லை
  விடிந்ததும் உலகம் இருள்வது நியதி
  இருண்டதும் உலகம் விடிவது உறுதி
  மாரியும் ஓர்நாள் கோடையாய் மாறும்
  கோடையும் ஓர்நாள் மாரியாய் திரும்பும்
  கடந்தது கடந்ததை  நினைப்பது வாழ்வு
  நடந்ததை நினைத்தே மாய்வது வீணே

  உலகின் பிறப்பில் பலவித மாற்றம்
  உணர்ந்தே வளர்தோம் உயர்வை அறிந்தோம்
  புதுமை காணவே உழைத்திடும் உலகில்
  பழைமை பேணியே புதுமை காண்போம்
  மறைந்த பதின் நான்கு பதின் ஐந்தை
  மகிழ்வுடன் தந்தே மகிழ்வுடன் பிரிந்தது
  கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகள்
  கற்றவை நினைத்தே திருந்தி வாழ்வோம்


  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  புதன், 24 டிசம்பர், 2014

  கிறிஸ்மஸ் வாழ்த்து

  வானத்து விளக்கு வாழ்வின் ஒளி
  மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம்
  மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க
  மண்ணிலே உதித்தார் மனங்களை வென்றார்
  மனங்களை வெல்லும் மனிதங்கள் நிலைக்கும்
  காலங்கள் வென்று காலமெல்லாம் வாழும்.

  பாலகன் ஜேசு பாரினில் உதித்த
  பக்குவம் புரியும் மனங்கள் பண்பினில் உயரும். - அவர் 
  பாரினில் பட்டதுயர் பண்புடன் அறிந்தால் 
  பாருலகு ஏந்தும் உள்ளத்தால் போற்றியே மகிழும் - அவர்  
  பிறப்பின் மேன்மை உணர்த்திடும் உண்மை 
  ஏழ்மையும் ஓர்நாள் பாரினில் சிறக்கும் – உலகம்
  ஏந்தியே மகிழும் இன்னல்கள் தீர்க்கும்

  பிறர்க்காய் வாழும் மனிதர் உலகில் இறப்பதில்லை
  தனக்காய்  வாழும் மனிதர் உலகில் நிலைப்பதில்லை
  உடல் பொருள் ஆவி உலகுக்காய் தந்தால்
  இறை தூதரென உள்ளங்கள் ஏந்தும்


  அனைத்து உறவுகளுக்கும் கிறிமஸ் வாழ்த்துக்கள்
  சனி, 20 டிசம்பர், 2014

  சிந்திக்கச் சிலவரிகள்

  ஒருவர் செய்த ஒரு நன்மையை நினைத்து, தீமைகள் அனைத்தையும்         மறக்கும் பண்பே மனிதனை பிறர் மனதில் நிறுத்தும் உயரிய மந்திரம். 

  கவலைகளை துடைத்தெறிந்து வாழ்நாளெல்லாம் சிரித்திருக்கும் கலையை கற்கும் மனிதன் உலக இன்பத்தை பெறும் பாக்கியசாலி ஆவான்.

  அடுத்தவர் பழிப்பார் என்று எண்ணி மனதுக்குள் தோன்றும் உண்மைகளை மறைக்கத் தெரிந்த மனிதன் சமூகத்தை பின்நோக்கிய பாதைக்கு விட்டுச் செல்கின்றான். 

  சொந்தங்கள், சுற்றத்தினர் என்று குறுகிய வட்டத்துக்குள் வாழும் மனிதன் சுயநலவாதப் புழுவாகின்றான். சாதனை படைக்கத் துடிக்கும் மனிதன் சரித்திர நாயகனாகின்றான். 

  ஒரு மனிதன் சேர்க்கும் உயரிய சொத்து உறவுகளின் பாசம். 

  மனிதனின்  அற்புத உறுப்பு மூளை. அதைச் சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாதவன் அவ்வுறுப்பைப் பெற்றிருக்கும் மூடன்.

  எல்லோரையும் திருப்திப்படுத்தி எல்லோருக்கும் நல்லவராய் வாழ்வது என்பது முடியாத காரியம்.

  தன்னம்பிக்கையும், ஆசையும்  சரியான முறையில் அமையாது விட்டால், தீயவழிக்கே மனிதனைக் கொண்டு செல்லும்.

  எதுவுமே எமக்குச் சொந்தமாவதில்லை. உயிருடன் இருக்கும் வரை அநுபவிப்போம். இல்லாது போனால், சொந்தமில்லை என நினைத்திருப்போம்.

  இன்பமும் துன்பமும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப அமைகின்றன. சந்தர்ப்பம் வந்து அமைவது சந்திக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் பொறுத்தது.

  • வாழும்போது யாருடைய நற்குணங்களையும் பிறர் புரிந்து கொள்வதில்லை. இறப்பின் பின்னே நினைத்துத் துன்புறுவர்.

  • சுடரின் வீழ்ச்சியும், பகலின் மறைவும், உறக்கத்தின் நிகழ்வும், இடையிடை துன்பமும் கவலையும் உலகின் நிலையாமையை உணர்த்தும்.

                                                               ---- கௌசி -------
  LGBTQ

  கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகள...