• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 29 செப்டம்பர், 2012

  உறவே உன்னை நான் வெறுக்கின்றேன்
  அந்திவேளை ஆதரவான தென்றலே!
  சிந்தனை சிதறடிக்கும் பொழுதுகளில்
  நாற்காலியை முற்றத்தில் போட்டு – உன்
  ஸ்பரிசத்தில் உறைந்தபடி சுவாரசியமாக
  நூல்களில் நுழைவேனே சுவைப்பேனே – என்னுடன்
  ஒட்டி உறவாடிய நீ
  எப்போது சூறாவளியாய் மாறினாயோ – பலர் 
  சோகங்களைச் சுமந்தாயோ அன்றுதொட்டு 
  காற்றே! உறவே! உன்னை நான் வெறுக்கிறேன்.


  சூரியன் இளைப்பாறும் சொர்க்க வாசலை
  கண்கள் சுவைக்க 
  தங்கமென மின்னும் அலைக்கரங்களை
  மனது இரசிக்க
  சங்கீதமாய் சலசலக்கும் ஓசையிலே
  என்னை நான் மறக்க – என்
  நெஞ்சம் உன்னோடு உறவாடி மகிழ்ந்ததே
  கவிதைப்புயல் கடகடவென்று பிரசவமாகியதே – ஆனால்
  எப்போது நீ பொங்கியெழுந்து 
  அப்பாவி உயிர்களை விழுங்கி ஏப்பமிட்டாயோ அன்றுதொட்டு
  கடலே! உறவே உன்னை நான் வெறுக்கிறேன்.

  கருத்தொட்டுக் கன்னியானேன் - நீங்கள்
  வாழும்வரை வார்த்தை தவறவில்லை
  பொங்கிப் பூரிக்கும் வயதினிலே
  அந்தரங்க ஆசைகள் அசை போடும் பொழுதுகளில்
  அன்பான தந்தை ஆதரவான தாயார்
  சமுதாயக் கண்ணாடியில் தளும்பாது நடக்கும்
  தரமான குடும்பம் தரமேதும் குறையாது வாழ
  மனதுக்கு வேலி போட்டேன்
  அன்புக்கு அடி பணிந்தேன் - உங்கள்
  ஆசைகள் தீர்க்கப் பட்டங்கள் சுமந்தேன்
  அத்தனையும் உங்களுக்காய் அர்ப்பணித்தேன் - என் 
  மடி தவழும் வாரிசு உங்கள் மடி தவழ வேண்டுமென்று
  திட்டம் போட்டேன் கட்டளையிட்டேன்
  கேட்டீரா! என் ஆசை தீர்த்தீரா! 
  கடமை முடிந்ததும் கடையேறி விட்டீரே!
  பெற்றோரே! உறவே உங்களை நான் வெறுக்கிறேன்  கூடிக்கும்மாளமிட்டோம் கூடிப்பிறந்தோரிடம் 
  கூறாத இரகசியங்கள் கூறிப்பரிமாறினோம்
  உள்ளொன்று வைக்கவில்லை 
  உடலிரண்டாய் உயிரொன்றாய் உலகில் வலம் வந்தோம்
  வாழ்வின் உயர்வுக்கு வாழ்க்கைப் பொழுதுகள் தாரைவார்த்தோம்
  இன்று நீ எங்கே?
  நட்பே! உறவே! உன்னை நான் வெறுக்கின்றேன்.

  நீயின்றி நானில்லை 
  என்னுயிர் உன்னுயிர் வேறல்ல
  என் நிழலில் என்றும் நீ தொடர்வாய்
  வாழ்வென்னும் வண்டிலைச் செலுத்தும் சக்கரங்களாவோமென
  வாழ்வின் சாட்சியாய் முத்தாய்க் குழந்தைகளைப் பெற்றெடுத்தோம்
  சக்கரத்தை உடைத்ததும் ஏன் சத்தியங்கள் மறந்ததுமேன்
  துணையே! கணவனே! உறவே! உங்களை நான் வெறுக்கின்றேன்


  பாசமெனும் நீரூற்றி பரிவு என்னும் ஒளி கொடுத்து
  பாதுகாப்பெனும் காற்று வீசி வாழ்க்கையெனும் வேரூன்ற
  வளமான வாழ்வை வாரிவழங்கி வளர்த்தெடுத்த சேய்
  கண்டதே காட்சி கொண்டதே கோலமென
  எம்மைக் கணக்கெடுக்கவில்லை
  அன்பை வன்பாக்கினான் பாசத்தை மோசமாக்கினான்
  அணைப்பை நெருப்பாக்கினான்
  அனைத்தையும் தூசாக அர்ப்பமாக நினைத்து
  காதலியருகிருக்க கடைக்கண்ணால் பார்வையிட்டு
  காரிலே பாதையைக் கடக்கின்றான்
  மகனே! உறவே! உன்னை நான் வெறுக்கின்றேன்

    உறவுகள் வரலாம் மறையலாம்
    வருவதும் மறைவதும் உறவுகள் இலக்கணம்
    உள்ளத்து உரம் உறைந்தால் - வாழ்வில்
    உயிருள்ள வரை சோர்வில்லை
    மறதியுள்ள வரை சோகமில்லை.

  திங்கள், 24 செப்டம்பர், 2012

  யார் குற்றவாளி?


               

  கனகர் கட்டிலை விட்டுத் துடித்து எழுந்தார். விடிந்தும் விடியாத பகல்பொழுது ஜேர்மனியில் வானுலகை இருட்டாகக் காட்டிய மாரிகாலம். அசதியாய்த் தூங்கியவருக்கு அலாரச்சத்தம் கூடக் காதில் கேட்காது ஓய்வுக்காய்த் தூங்கிய உடலானது அவர் அறிவுக்கு  நேரத்தை உணர்த்தாது தூங்கச் செய்திருந்தது.  பதறிய உடல்களுக்குள்ளே பார்க்கும் கண்கள் மணிக்கூட்டுக்கம்பியை  பதட்டத்துடன் பார்த்தன. நேரம்காட்டி மணி ஏழைக் கடமையுணர்வுடன் காட்டியது. ஓடிப் போய்க் குளியலறையினுள் நுழைந்தவர். கடகடவென்று குளித்து உடை மாற்றினார். மனைவி கொடுத்த தேநீரை அருந்தியவருக்குக் காலை உணவைப் பற்றிய சிந்தனையே இன்றி வேலைக்குப் போவதற்காக அவசரமாகக் கிளப்பிவிட்டார். அந்நியாட்டில் கால் வைத்ததிலிருந்து, ஓயாது உழைத்து, அண்டிய நாட்டைத் தெண்டாது தனக்கென்று ஒரு வீடும், தன் பெயர் சொல்ல ஒரு மகனையும் பெற்றெடுத்து அடுத்தவருக்குப் பாரமில்லாது தன் பலமுள்ளவரை தானும் தன் வேலையுமென்று கௌரவமாக வாழ்ந்தவர்தான் அவர். சட்டைப் பைக்குள் கையை வைத்தவர், ´´ராணி...``என்று பலமாகக் கத்தினார். என்ன என்று மனைவி ஓடி வந்தாள். என்னுடைய கார் திறப்பு எங்கே? தன் பதட்டம் புரியாத மனைவியிடம் திறப்பைச் சட்டைப்பையினுள் காணாதவிடயம் பற்றி அறியும் நோக்குடன் கத்தினார். மிக ஆறுதலாக ´´பிள்ளை எடுத்திட்டுப் போயிற்றான்`` என்று விடையளித்தாள் மனைவி ராணி. ´´உனக்கு அறிவிருக்கா? நான் வேலைக்குப் போக வேணும். ஏன் அவன்ட  கார் எங்கே?`` குதியாய்க் குதித்தார் கனகர். ´´ஏன் கத்துறீங்கோ. அவன்ட கார்ல ஏதோ பழுதாம். உடனே வந்திடுவேன் என்று சொல்லித்தான் எடுத்திட்டுப் போனான். வந்திடுவான்`` என்று வக்காளத்து வாங்கினாள் வழக்கமான அம்மாக்களின் பண்பில் சற்றும் விலகாதவளாய் அவர் மனைவி ராணி. ´´போதும் நிறுத்து. எல்லாம் நீ கொடுக்கிற தைரியம். எனக்கு வேலை முக்கியம். அவன் தான் ஊதாரியாய்த் திரிகின்றான் என்றால், என்ர வேலைக்கும் வேட்டு வைக்கப் பார்க்கிறான். வேலையும் போனால் வாழ்ந்த மாதிரித்தான்`` தலையிலே கை வைத்தபடி போய் சோபாவில் அமர்ந்து கொண்டார். 

          காத்திருக்கும் மணிப்பொழுதுகள் அவர் மனதுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. கண்கள் மணிக்கூட்டுக்கம்பியை அடிக்கடி பரிசீலனை செய்தது. வேலைததத்தளத்தில் என்ன பொய்யை எப்படிச் சொல்வதென மனம் அங்கலாய்த்தது. கடமையை கண்ணாகக் கருதுகின்ற கனகருக்கு வீட்டில் சோம்பேறியாய்ச் சோர்ந்து கிடப்பது பெரும் சங்கடமன விடயம் அதனால், செய்யும் தொழிலை முழுமையாகக் காதலித்தார். அதற்கேதும் பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஆயிரம் பொய்களை அடுக்குடுக்காய்ச் சொல்லி அரசாங்கப்பணத்திலே சுகமாக படாடோபமாக வாழுகின்ற மக்களுக்கு நடுவே சொந்தக் காலில் நிற்கதற்காக படாதபாடுபடுபவர் அல்லவா இவர். நடந்து போகக்கூடிய தூரம் என்றால் நடந்தே பறந்திருப்பார். பஸ் வசதியுள்ள இடமானால் பஸ்ஸில் பிரயாணம் செய்திருப்பார். பஸ் தரிப்பிடம் செல்வதற்குமுன் மகன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருப்புத் தொடர்ந்தது.  

  அப்படியென்ன அவசரமோ? நீதான் உருப்படாமல் திரிகின்றாய் என்றால், என் வேலைக்கு ஏன் வேட்டுவைக்கப் பார்க்கின்றாய்´´ என்றபடி கார்த்திறப்புக்காய் கையை நீட்டினார். கெதியாய் தா! நான் போக வேண்டும். ´´அது கார் அடிபட்டுப் போச்சுது´´ பதட்டம் ஏதுமின்றி அலட்சியமாகவிடையளித்தான் மகன். கனகருக்கு உச்சியில்  ஓங்கி அடிப்பது போல் இருந்தது.  கோபம் தலைகால் தெரியாது தாண்டவமாடியது. மகனுக்கும் அப்பாவுக்குமிடையே வாக்குவாதம் தொடர அது முற்ற மகனின் கைகள் தனது தந்தை சட்டையை இறுக்கப்பிடித்தது. தன் பலமெல்லாம் சேர்த்து தந்தையை தள்ளி விழுத்தினான். உடைந்து போனார் கனகர். ஒன்றே ஒன்று என்று கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்து பிள்ளை, தோளில் போட்டு சீராட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து செல்லமாய் வளர்த்த பிள்ளை. இன்று..... அவரால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. 

            ஓடிப்போய்க் கதவைத் தாளிட்டார். ஓ..... என்று அழுதார். கதவைத் திறப்பதற்காகப் பதறினாள் மனைவி ராணி. எந்தத்தவறும் தான் புரிந்ததாக உணராது பதட்டமில்லாது அமர்ந்திருந்தான் மகன் கோபி. பாரிய முயற்சியின் பின் கதவு திறக்கப்பட்டது. அந்தரத்தில் தொங்கிய கால்களைக் கண்டு ஓ.... என்று தலையில் அடித்தபடி கதறினாள்  விதவையாய் பட்டம் ஏற்கப் போகின்ற  மனைவி ராணி. அவர் உயிரற்ற உடல் நோக்கி ஸ்தம்பிதமானான் மகன். இப்படியும் அப்பாவி அப்பாக்கள் ஐரோப்பிய நாடுகளிலே.......

  இக்கதாபாத்திரங்களில் யார் குற்றவாளி?

  ஆசிரியர் குறிப்பு:

  இந்த வயிற்றில் இப்படி உருவுடன் இப்படித்தான் பிறக்க வேண்டும் என்று தீர்மானித்தா நாம் பிறந்தோம். பிறப்பு எம்மால் தீர்மானிக்க முடியாமல் இருக்கும் போது இறப்பை மட்டும் எப்படி எம்மால் தீமானிக்க முடியும். பொறஐமு என்பதைப் புரியாத மனிதர்களாய் நாம் வாழலாமா? திடீரென எடுக்கும் முடிவுகளைச் சற்றுத் தாமதித்துச் சிந்தித்துப் பார்த்தால், அந்த முடிவு கேலியாக இருக்கும். இதற்காகவா இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்ற எண்ணத் தோன்றும். ஒருவேளை தந்தையாய்த் தனையனைப்பற்றிச் சிந்தித்திருக்கலம். இன்று கைவைத்தவன் நாளை கைவைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம். இதற்கு வழிவகுத்தவர் தந்தையும்தானே. தட்டிக்கேட்க வேண்டிய நேரத்தில்விட்டுக் கொடுத்துவிட்டு காலங்கடந்த பின் எடுக்கும் முயற்சிகள் தோல்வியே. எதிலுமே அக்கறை இல்லாத மகனுக்குத் தனிவாகனம் வாங்கிக் கொடுத்தது எதற்கு? எனவே தந்தையும் குற்றவாளியே. ஒரு முறையே வாழுகின்ற வாழ்க்கையை இடைநடுவே முடித்துக்கொண்ட முட்டாளே இந்தத்தந்தை. 

           அடுத்துத் தாய். குழந்தை வளர்ப்பில் கூடுதலான பொறுப்பு தாயிடமே சாரும். தந்தையில் மதிப்பும் மரியாதையும் கொண்டுவர வேண்டியது தாயயின் கடமை அல்லவா. சிறுவயதில் இருந்தே தந்தையைப் பற்றிய தவறான பதிவு மனதில் பதிந்துவிட்டால், வளர்ந்தபின் மாற்றத்தான் முடியுமா? பிள்ளையைப் பெண்கள் வயிற்றில் சுமப்பார்கள். அது படைப்பின் மகிமையும் கட்டாயமும் கூட. தந்தை மார்பில் அல்லவா சுமக்கின்றார். சுகதுக்கங்கள் எல்லாம் துறந்து குடும்பத்திற்காய் ஓடாய்த் தேய்கின்றார். இந்த உண்மையைப் பெற்ற பிள்ளைகளிடம் நாளும் மந்திரமாய் ஓத வேண்டியது தாயின் கடமை. அப்போது தந்தையை மதிக்க மைந்தன் தவறமாட்டான். எனவே தாயும் குற்றவாளியே.
      
              அடுத்து மகன். துடிக்கும் இரத்தம் எது பற்றியும் சிந்திக்காது. வளரும் போதே எதிர்கால சிந்தனை பற்றிய நன் நூல்களைக் கற்கும் பக்குவத்தை வளர்த்தெடுக்க வேண்டும். எதையும் சிந்தித்து செயலாற்றும் தன்மையை வளர்க்க வேண்டும். பொறுப்புணர்ச்சி சிறுவயதிலிருந்தே பயிற்றுவிக்கப்படல் வேண்டும். அப்பாவில் அன்பு இருக்கும் அளவில் மரியாதையும் இருத்தல் வேண்டும். தந்தையின் முன் கால்நீட்டி இருத்தலே தவறு என்ற கலாசாரத்தில் வந்தவர்கள் நாம். கழுத்துவரை கை செல்ல முற்படுதல் முறையற்ற செயல் அல்லவா! முறையற்ற செயலால் கண் இழந்ததேயான வாழ்க்கைக்கு அடி எடுத்த மகனும் குற்றவாளியே. 

             எனவே ´´ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்´´ என்னும் பழமொழியில் மனம் பதித்து தம் வாரிசுகளை சரியான முறையில் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து கடினமான இனிமையான வாழ்வை சுவையோடு வாழ அவதானமாக இருப்போம்.  புதன், 12 செப்டம்பர், 2012

  பாதணியை மதிப்பதா? மிதிப்பதா?


          
         பாதணி என்ன கேவலமா? – அதை
         வெளியே ஒதுக்குவதென்ன தர்மமா?
         காலணி திருத்தும் மனிதனையும்
         கேவலமாய் எண்ணல் வேதமா?
         அர்த்தம் புரிந்தும் புரியாதுலகில் வாழ்கின்றோம்
         அதன் பயனை மட்டும் பெறுகின்றோம்
         வேடிக்கை உலகதனில் மனிதன் 
         விவஸ்தையற்று வாழுகின்றான்
         விளக்கம் இன்றிய பண்பாடு பேணுகிறான்
         சிந்தனை புரியும் மனிதனையும்
         நிந்தனை செய்துகேலி பண்ணுகிறான்.

  காலணி என்றும் செருப்பு என்றும் சப்பாத்து என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் பாதணி பற்றிப் பேசப்படுவதே இவ் ஆக்கம். எமது பாதங்கள் எமது உடலைத் தாங்கி நின்று நிமிர்ந்து நிற்க உதவுகின்றன. அத்தனை தசை நார்களும் பாதங்களில் படிந்திருக்கின்றன. மனிதனின் ஆதாரசக்தி பாதங்களில் அமைந்திருக்கின்றது. மனிதனின் இரண்டு பாதங்களும் இரண்டு வைத்தியர்கள் போல் அமைந்திருக்கின்றன. பாதங்கள் இன்றி மனிதன் நிற்க முடியாது நடக்க முடியாது போகின்றான். இந்தப் பாதங்கள் நோய் நொடியின்றி வாழவும், குளிர்  சூட்டிலிருந்து எமது பாதங்களைக் காக்கவும், அசுத்தங்கள் அதை எட்டாமல் பேணவும் பாதுகாப்புக்காக அணிவதே பா....தணி என்பதை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். எம்மைப் பாதுகாக்கின்ற பாதணியை மதிப்பதா? மிதிப்பதா? 
               
          கொதிக்கும் வெயிலில் நாம் நடக்க வெப்பத்தைத் தானேற்று சூட்டிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. பூச்சி புழுக்கள் எமைத் தீண்டாது தடுக்கின்றது. சேற்றிலே நாம் நடக்க சேற்றைத் தான் பூசி எமது பாதங்களைத் துப்பரவாக வைத்திருக்கின்றது. நோய்க்கிருமிகள் எம்மை வந்தடையாதிருக்க பாதங்களைப் பாதுகாத்து உடலைப் பேணுகின்றது. இவ்வாறு வெளி அழுக்குகளைத் தானேற்று எமது பாதங்களைச் சுத்தமாகவே வைத்திருக்கும் பாதணியை  எமது உடலும் வீட்டின் உள்புறமும் சுத்தமாய் இருக்க  வெளியே கழட்டி வத்துவிட்டு வீட்டினுள் நுழைகின்றோம். இவ்வாறு எமக்காகச் சேவை புரிகின்ற பாதணியைக் கேவலமாகக் கருதும் பழக்கம் மனித இனத்திடம் இருக்கின்றது. தமக்குதவுவாரை ஏறெடுத்தும் நோக்காத மனிதர் எம்மோடே பவனி வரும் பாதணியை மாத்திரம் எங்கே கண்டு கொள்ளப் போகின்றார். 
  பாதணி பாதுகாப்புக் கவசமே தவிர மரியாதையற்ற பொருள் அல்ல என்பது யாவரும் அறிந்த விடயமே. இருந்தும் கோயிலின் வெளியே கழட்டி வைப்பது சுத்தம் கருதியே என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. ஆலயத்தினுள் பக்தர்கள் நிலத்தில் அமர்ந்திருப்பார்கள். தியானம் செய்வார்கள். அங்கப்பிரதட்சணை செய்வார்கள். இவ்வாறான நடைமுறைகள் நடைபெறும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே பாதணி கோயிலினுள் அணிவதில்லை. கடவுளுக்கு மரியாதை கொடுப்பதற்காக கழட்டுவதாகத் தவறான எண்ணமும் நம் மத்தியில் இருக்கின்றது. 
         
                              இதைவிட பூப்புனிதநீராட்டுவிழா என்பது ஒரு மதச்சடங்கல்ல. பூப்படைந்த பெண்ணில் பிடித்திருப்பதாகக் கருதும் துடக்கு நீங்க வேண்டும் என்ற கருத்தில் இவ்விழா நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பெண் உண்ட பொருள்கள் எல்லாவற்றையும் ஆலத்தி மூலம் கழித்துவிடுவதான சம்பிரதாயம் எம்மத்தியில் இருக்கின்றது. எந்தவிதமான மத சம்பந்தமான சடங்குகளும் இங்கு இல்லை. புதிய புதிய முறைகள் அவரவர் பண வசதிக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எமது பெண் வயதுக்கு வந்துவிட்டாள். ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களே உங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். என்பதை நாள் குறித்து உறவினர் நண்பர்களை அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுவதே உண்மையான அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. ஆனால், இங்கு என்ன பாதணி சமாச்சாரம் வருகின்றது என்று எண்ணுகின்றீர்களா? 
          அழகழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம். அதனுள் அழகழகான பாதணிகள் அணிந்து மண்டபத்தில் பெண்கள் வலம் வருவார்கள். ஆடைகளுக்குக் கொடுக்கும் அவதானத்தை பாதணிகளுக்கும் கொடுப்பார்கள். இம்மண்டபத்தில் விளக்குகள், ஆலத்தித்தட்டு பூத்தட்டு ஏந்திவரும் பெண்கள் உட்படஅழகுக்காலணியில் வரிசையாக வருவார்கள். விளக்குகளுடன் கூடவே வரும் காலணியை  மேடை வந்தவுடன் கழட்டிவிட்டுப் போகும்படி பணிக்கப்படும். ஆனால் பருவமடைந்த பெண்ணோ பாதணியுடனே ஏறிக் காட்சியளிப்பார். ஆலத்தி எடுக்கும் பெண்கள் காலணியைக் கழட்டிவிட்டே ஆலத்தி எடுக்க வேண்டும். மேடையிலோ எந்தவித கும்பங்களோ வைக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால், வாசலில் வைக்கப்பட்டிருக்கும் கும்பங்களை பாதணியுடனேயே தரிசித்து திருநீறு குங்குமம் இட்டு வருவார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கிவரும் பெண்பிள்ளைகள் அணிந்திருப்பார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கி வரும் பெண்பிள்ளைகள் பாதணி அணிந்திருத்தல் என்ன நியாயம். தலையைப்பிய்க்க வேண்டியிருக்கின்றதே. புரியவில்லை, புரியவில்லை. புரியாமல்த்தானோ எல்லாம் நடைபெறுகின்றது. 
               
                                   மேடையை அலங்கரிப்பவர்கள் பாதணி அணிந்த பாதங்களுடனேயே மேடை அலங்காரங்கள் செய்வார்கள், ஆலத்தி எடுப்பவர்கள் பாதணிகளைக்; கழட்டி வருகின்ற போது அலங்காரஞ் செய்தவர்கள்  விட்டுச் செல்லும் அசுத்தங்களை பாதங்களில் ஏற்றுக்கொள்ளவேண்டும். பாதணிகள் பாதுகாத்து வந்த பாதங்கள் பழுதடைய இங்கு இடம் அளிக்கப்படுகின்றது. ஏனென்று கேட்டால் அது அப்படித்தான் என்னும் பதிலே விளக்கமாகப்படுகின்றது. காலம் காலமாக வரும் நடைமுறை என்னும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது போகின்றது. இது வடிவேல் பாசையில் சின்னப்பிள்ளைத்தனமாகவேபடுகின்றது. காலம் காலமாக வந்த நடைமுறைகளா இப்போது பூப்புனிதநீராட்டுவிழாக்களில் நடைபெறுகின்றன.
                 
                                    காரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும். காரணம் புரியாது காரியத்தில் ஈடுபடல் மடைமைத்தனமாய்க் கருதப்படுகின்றது. ஆடைஅலங்காரங்கள் அழகல்ல. மனஅறியாமை நீக்கும் அழகே அழகு. தெளிவுமட்ட மனதில் சிந்தனை விரிவுபடும். நான்கு பக்கப் பார்வையில் உலகை அளக்கும் ஆற்றல் புலப்படும். அது அப்படித்தான் எனில் அது எப்படி? என்று அறியும் பக்குவம் பெற்று மனிதன் என்ற அந்தஸ்திற்கு உயிர் பெற்ற உடல் மாக்கள் என்ற இடத்தில் இருந்து மக்கள் என்ற ஸ்தானத்திற்கு உயரும். காரணம் கேட்பவன் மடையன் என்றால், இவ்வுலகு கல் மண்ணில் இருந்து நாடுகள் என்ற அந்தஸ்திற்கு மாற்றம் பெற்றிருக்க மாட்டாது.     ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

  உண்டு உண்டு எல்லாம் உண்டு

  </p
                        
         பாருண்டு பக்தருண்டு படைத்தவனுண்டு
         நீருண்டு நிலமுண்டு நிர்மூலமுண்டு
         காருண்டு காவுண்டு காயுண்டு
         சூடுண்டு சூரியனுண்டு சூரியகாந்தியுண்டு
         காசுண்டு காணியுண்டு காரியமுண்டு
         சீருண்டு சிறப்புண்டு சிந்தனையுண்டு
         தாருண்டு தாரமுண்டு தாயாருண்டு
         நாருண்டு நாமமுண்டு நாதனுண்டு
         வாருண்டு வாரிசுண்டு வாழ்தலுண்டு
         ஊருண்டு உறவுண்டு ஊறுமுண்டு
         ஆருண்டு ஆர்வமுண்டு ஆரோக்கியமுண்டு
         ஏருண்டு ஏற்றமுண்டு  ஏவலுண்டு
         ஏடுண்டு ஏணுண்டு ஏமாளியுண்டு
         ஆடுண்டு ஆற்றலுண்டு ஆற்றாமையுண்டு
         ஈடுண்டு ஈட்டமுண்டு ஈடேற்றமுண்டு
         ஈருண்டு ஈரமுண்டு ஈனலுண்டு
         உண்டு உண்டு அனைத்துமுண்டு – ஆனாலிங்கு
         இல்லை இல்லை நிம்மதியில்லை.
    

  நார் – அன்பு           ஆர் – அழகு        ஈடு - வலிமை
  நாமம் - புகழ்           ஏண் - வலிமை
  வார் - நேர்மை          ஆடு – வெற்றி

                         

  அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...