• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 21 செப்டம்பர், 2021

    பனைமடலால் ஒரு மிரட்டல



    அன்பு, காதல், பாசம், பரிவு, இரக்கம், விட்டுக்கொடுப்பு இவையெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விடயம். இரு மனங்கள் இணையாத உறவு பொய்யான உறவாகவே அமையும் என்பது உண்மை. அது காதலுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. அண்மையில் தமிழர்கள் மத்தியில் நடந்த இரு சம்பவங்கள் என் மனதை ஆட்டிப்படைக்கின்றன. இரு மனங்கள் இணையவில்லையென்றால், மறந்து போகின்ற மனதை வளர்த்து கொள்ளாத இளமை பித்துப்பிடித்தது போலாகிவிடுகின்றது. 


    காதலியை அடைய காதலர்கள் பல யுத்திகளை கையில் எடுப்பார்கள். எவ்வாறான ஈர்ப்பு அவளிடம் தன்னை இழுத்து எடுக்கின்றது என்பதை செயலாலும் சொற்களாலும் உணர்த்துவார்கள். இதைவிட கைகளைக் கிழித்து இரத்தத்தைக் காட்டி நீ இல்லையென்றால், என்னால் வாழமுடியாது என்று பயமுறுத்துதல், கிடைக்காத வேதனையை சிகரெட் புகையால் அனுப்பவதாக வெளிக்காட்டுதல் போன்ற மிரட்டல்கள் மூலமும் காதல் தோன்றுகின்றது. இவ்வகைக் காதல் ஒருவகை மன அழுத்தத்தை ஏற்படுத்தி தியாகத்தால் துளிர்த்து காதலாய் மலர்கின்றது. 


    உயிருக்குயிராகக் காதலித்த ஒரு பெண் சில கசப்பான காரணங்களால் வேண்டாம் என்று விட்டுப் பிரிந்தால் பிடிக்கவில்லை, போய்விட்டால் என்று மனதைத்  தேற்ற வேண்டிய பெறுமதி மிக்க இளமையானது, அவளை குத்திக் கொலை செய்து விட்டு சிறையில் வாசம் செய்கிறது. 


    இன்னுமொரு இளமையானது உயிருக்குயிராகக் காதலித்த பெண் கிடைக்கவில்லையே என்று தன்னுடைய நாடி நரம்பை வெட்டி இரத்த வெள்ளத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளுகிறது. இவை இரண்டும் இன்று நேற்று தமிழர்கள் மத்தியிலும் திரைப்படங்களிலும் கண்ட காட்சிகள் அல்ல. 


    இதேபோன்று சங்ககால இலக்கியங்களிலே மடல் ஏறுதல், வரை பாய்தல் என்னும் பெருந்திணை இலக்கியங்களிலே இவ்வாறான ஒரு அழுத்தத்தை பெண்வீட்டாருக்கு அல்லது பெண்ணுக்கு ஆண் வர்க்கம் கொடுத்த தன்மையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பெருந்திணை என்பது பொருந்தாக்காமம் எனப்படுகின்றது. அன்பினைந்திணைக்கு(புணர்தல்,பிரிதல்,இருந்தல், இரங்கல், ஊடல்) அப்பால் ஏற்படும் புற ஒழுக்கங்களாகிய கைக்கிளை, பெருந்திணை என்னும் இரண்டு பகுதியிலே பெருந்திணைக்குள் அடங்குகின்ற மடலேறுதல், வரை பாய்தல் என்பன விரும்பாத பெண்ணை வலுக்கட்டாயமாக அடைய எடுக்கும் செயல்களாகும். இது இராக்கதம் என்று அழைக்கப்படும். இதேபோல் உறக்கத்தில் இருக்கும் பெண்ணிடமும் மது மயக்கத்தில் இருக்கும் பெண்ணிடமும் உடலுறவு கொள்வது பேய்நிலை என்றும் அழைக்கப்படுகின்றது. 


    ஆண்மகனானவன் உடல் முழுவதிலும் சாம்பல் பூசி, எருக்கம்பூ, ஆவரம்பூ மாலை அணிந்து பனை மடலால் செய்யப்பட்ட குதிரையிலே ஏறி அம் மடல்மாவை நண்பர்கள் அல்லது சிறுவர்கள் இழுத்து வர மன்றத்திற்கு வருவார்கள். அப்போது அப்பெண்ணிடம் காதல் கொண்ட விடயத்தைக் கூறியபடி தம் இருவருடைய படங்களையும் கீறி கையில் எடுத்துக்கொண்டு வருவான். இக்காதலை ஊரார் அறிந்து கொண்டார்கள் என்று வெட்கப்பட்ட பெற்றோர்கள், அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டும் பெண்ணைப் பெற முடியாத நிலையில் வரைபாய்ந்து(மலையில் இருந்து பாய்தல்) தம்மை மாய்த்துக் கொள்வார்கள். இது ஒரு தற்கொலை முயற்சியாகவும் பெண்ணுக்கும் அவளின் பெற்றோருக்கும் ஒரு மிரட்டலைத் தருகின்ற நிகழ்வாகவும் நடைபெற்றது. 


    அகநானூறு 322 ஆவது பாடலிலே 

    ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப

    இறு வரை வீழ்நர் 

    என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


    குறுந்தொகை 182 ஆவது பாடலிலே மாதங்கீரனார் இவ்வாறு பாடுகின்றார்


    விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்

    மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி

    வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி

    ஒருநாள் மருங்கில் பெருநாண் நீங்கி

    தெருவின் இயலவும் தருவது கொல்லோ?

    கலிழ் கவின் அசை நடைப் பேதை

    மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே!


    அழகு ஒழுகும் அசைந்த நடையையுடைய தலைவி நெஞ்சம் நெகிழவில்லை. நான் அவளிடம் விடுவதற்கு அமைந்த தூது என்னவென்றால்,  சிறந்த உச்சியையுடைய பனையின் முதிர்ந்த பெரிய மடலால் செய்யப்பட்ட மணிகள் அணிந்த குதிரையின் மேலேறி பெரிய மாலை முறைப்படி அணிந்து வெள்ளை எலும்பையும் அணிந்து ஒருநாளிலே பிறர் இகழும்படியாக  நாணத்தை விட்டு தெருவிலே செல்வேன்;. அப்படிச் சென்றால், அவளை அடைய முடியும் என்பதாக இப்பாடல் அமைந்திருக்கின்றது. 


    இவ்வொழுக்கமானது எக்காலத்திலும் ஒரு பெண்ணை அடக்குமுறைக்குள் கொண்டு வருவதாகவே அமைகின்றது. இறுதியில் ஒத்துக் கொண்டால், ஆவதும் பெண்ணால், ஒத்துக் கொள்வில்லையானால் அழிவதும் பெண்ணால் என்னும் தீர்ப்பை வழங்கிவிடுவது இயல்பாகப்படுகின்றது.  


    சனி, 11 செப்டம்பர், 2021

    மகாகவி பாரதி 100 ஆவது நினைவு நாள் 2021

                                                



    கவி என்னும் வித்துக்குள் 
    உலகை கட்டிப் போட்ட கவிஞனே 💪

    காற்றும் கூடப் பேசும் உன்  மொழியைக் 
    காலம் கூட அழிக்க மாட்டா 😝 

    நீ போட்ட பாதைக்குள் நீள்கிறது 
    கவிஞர் குழாம் 

    பாதை எங்கும் தடயங்கள் 
    பூங்காக்களைப்  பொழிகின்றன 💝💝

    வாசம் நுகருக்கிறேன் 
    எனக்குள்  கரைந்து போகிறேன் 😀😀

    தேர் பிடித்து யாரும் இழுக்கவில்லை 
    மேடையிட்டு யாரும் போற்றவில்லை 
    மலர் எடுத்து யாரும் சூட்டவில்லை 
    பொன்னாடை யாரும் போர்த்தவில்லை 😮😮😮

    புகழோடு இன்றும் வாழ்கிறாயே 
    கவிஞனா நீ காலத்தில் தேவனா நீ 
    கவிதையின் கடவுளா நீ    🙏🙏🙏


    ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

    பாசம்




    தன் முயற்சி பலித்தால், வாழ்க்கை வைரங்கள் மின்னுமாப் போல் உணர்வு தோன்றும். விண்ணைப் பிடிப்பதானால், இன்னும் முயற்சி வேண்டுமென உள்ளமும் உடலும் இணைந்து கொள்ளும். தனியளாய்தான் தன் மகனின் வைத்தியப் படிப்புக்குத் துணையாய் நின்றாள், துணையிழந்தால், துவண்டு விடுவார் என்னும் வாக்குகளை உள்வாங்கி ஏப்பமிட்டாள். அவள்தான் சுதா. முதல் முறை சம்பளத்தைப் பெற்றுக் கொண்ட வேந்து, அம்மாவின் கையில் அழகான புடவையையும் 500 ஒயிரோ பணத்தையும் கொடுத்து

    அம்மா சம்பளம் போட்டிற்றாங்கள். உங்களுக்கு என்னவும் வேணுமென்றால், இதில வாங்குங்க. பேசாமல் இதையும் கொண்டு போய் எனக்கென்று சேர்த்து வையாதீங்க. விளங்கிச்சா….”

    போடா, போ….. இனி ஏன் உனக்குச் சேர்க்கப் போறன். வாற என்ர மருமகளுக்கு வகை வகையா நான் வாங்கிக்கொடுக்கத் தேவல்லையா?

    என்ன மருமகளுக்கா. உங்களுக்கென்ன பயித்தியமா? ஆகத்தான் வாறவள தலையில தூக்கி வச்சீங்க. பிறகு நீங்கதான் அவஸ்தப்பட வேண்டிவரும். இப்ப ஒண்டும் அவசியமில்ல. ஆறதலாப் பார்க்கலாம்”

    பொறு பொறு படிப்புப் படிப்பு என்டு தள்ளிப் போட்டிற்றா. இனி வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குப் போக வேணாமா? சும்மா எனக்குப் புத்தி சொல்லத் தேவல்ல. கிழட்டு வயசிலயா கல்யாணம் செய்யப் போறாய். எல்லாம் நல்லா நடக்கும். மகளின் அன்பு எப்படி என்று அறியாதவள் நான். வாற என்ர மருமகளை என்ர மகளப் போல பார்க்கப் போறன். நீ உன்ர வேலயில கவனமா இரு||

    மகனை அடக்கிவிட்டுத் தன் முயற்சியைத் தொடர்ந்தாள் சுதா. அயராத முயற்சி பலனலிக்காது விட்டதாக சரித்திரமே இல்லையே தாயாரின் வேண்டுதலின்படி பல்கலைக்கழக வளாகத்திலே விஞ்ஞானப் பட்டப்படிப்பைக் கற்கும் மாணவி நிரூபா முன்னே போய் நின்றான் வேந்து.

    எப்படி இருக்கிறீங்க. என்னத் தெரியும் என்று நினைக்கிறன்”

    ம்…”

    கென்டின் போயிருந்து பேசுவோமா?

    ஓகே..”

    கோப்பியின் சுவையுடன் அவள் பேச்சின் சுவையும் இணைந்து கொள்ள. புரிய வேண்டியப பல செய்திகள் புரிந்து கொள்ள மனதுக்குள் ஒரு இனம் புரியாத இன்ப உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான் வேந்து. மீண்டும் அவளைச் சந்திக்கவே மனம் துடித்தது. இருவர் பேச்சும் சுமுகமாக நிரூபா தான் தன் எதிர்காலம் என்பது வேந்து மனதில் நிரூபனமாகிவிட்டது. சிலகாலம் பேசிய பின் முடிவைப் பெறலாம் என்று எண்ணி வந்த எண்ணம் பஞ்சு போல் சொல்லிக் கொள்ளாமலே பறந்து போனது. நிரூபாவும் நிதானமாகவே முடிவெடுத்தாள்.

    நான் வெளிப்படையாகவே சொல்றன். பேசிப்பேசி நாட்களைத் தள்ளி, நாளொருநாள் எனக்குப் பிடிக்கவில்லை என்று விட்டுப் போக எனக்கு விருப்பமில்ல. ஒரு பார்வையில் புரிந்து கொள்ளும் இது எனக்கு செட் ஆகுமா என்று. ஆகும் போல் மனம் சொல்லுது. நீங்க…? தன் பேச்சைத் தரித்தாள். கண்களை விழித்தாள். தலையை ஒருபுறம் சரித்தாள். அவள் பார்வை விழிக்குள் பதுங்கிப் போனான் வேந்து. சிக்கிக் கொண்ட பார்வையையும் பாய்ந்து கொள்ளத் துடிக்கும் மனதையும் சிக்கெனப் பிடித்தான். வைத்தியசாலையில் வகைவகையான அழகு பிம்பங்கள் தன் முன் தோன்றினாலும் சலனப்படாத மனம் இன்று மட்டும் ஏன் தடுமாறுகின்றது. இதைத்தான் விதி என்பதா? இல்லை ஈர்ப்பு என்று சொல்வதா எதுவாக இருந்தாலும். தலையை ஆம் என்று பேச்சின்றி அசைத்தான்.

     “என்ன? சொல் வேண்டும். பேசத் தெரியும் தானே”

    எப்போ கல்யாணத்தை வச்சிக்கலாம். மீண்டும் எப்போ சந்திக்கலாம்?

    இருவரின் சிரிப்பும் திருமணத்தில் கொண்டு நிறுத்தியது. அமோக திருமண நிகழ்வில் தன் மகனை நிரூபாக்குக் கைப்பிடித்துக் கொடுத்தாள் சுதா. ஆடம்பரமாகத் தன் மகனை அழகு பார்த்தாள். எண்ணிய எண்ணியபடியே ஆற்றிய சுதாக்கு இப்போதெல்லாம் மருமகளுக்குப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்வதே பணியாகிப் போனது. அன்புக்குப் பஞ்சமின்றிய சுதாவுடனேயே நிரூபா தங்கிவிட்டாள். நிரூபாவின் பல்கலைக்கழகப் படிப்புக்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதில் சுதாவும், வேந்துவும் கவனமாக இருந்தனர். மாமியை அரவணைப்பதிலும் மகிழ்ந்து செல்லங் கொஞ்சுவதிலும் பல்கலைக்கழக இறுதி நேரம் செலவாகியது. வேந்துவின் பேச்சுக்கும் வாழ்வுக்கும் ஏற்ற பெண்ணாக நிரூபா திகழ்ந்தமை அவர்கள் வாழ்வில் வசந்தத்தை வழங்கியது.மகள் நாளைக்கு எத்தனை மணிக்கு யுனிவேர்சிட்டி. ஏனென்றால், காலையில் நேரத்துக்கு எழும்ப வேண்டுமே! என்றாள், சுதா

     

    அம்மா உடம்புக்குச் சுகமில்ல என்று நேற்று முழுவதும் சொன்னீங்க. நாளைக்கு சும்மா அயர்ந்து தூங்குங்க. அவ தனக்கும் எனக்கும் சாப்பாடு செய்து எடுத்துக் கொண்டு போவா. ஓய்வில்லாமல் வேலை செய்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும். நாங்க என்ன சின்னப் பிள்ளைகளா? என்றான் வேந்து

    பறவால்லப்பா…. வீட்ட வந்து கொஞ்சநேரந்தான் புள்ள எங்களோட கதைக்குது. மற்றநேரம் படிப்பு படிப்பு என்று பறக்குது. என்னால ஏண்ட உதவியச் செய்றன் இன்னும் இந்த உடம்பு இருந்து என்னத்தச் சாதிக்கப் போகுது. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தாத்தான் நானும் நிம்மதியா இருப்பன். நீ சொல்லு பிள்ள. அவன் கிடக்கிறான்''

    நாளைக்கு 8 மணிக்கு அங்க நிக்க வேணும் மாமி”

    6 மணிக்கு எழும்பினாக் காணும்”

    மறுநாள் காலை கண் விழித்தாள். உடல் அலுப்பு வாட்டி எடுத்தது. வயதாகிவிட்டால், எங்கிருந்துதான் இந்த வருத்தங்கள் எல்லாம் வந்து ஒட்டி கொள்கிறதோ! எத்தனை வருடங்கள் தான் இந்த உடல் எங்களுக்காக உழைப்பது. 110 தாண்டி யாராவது வாழ்ந்ததாக நாம் அறியவில்லையே. உடல் முடியவில்ல. தட்டுத்தடுமாறிப் பார்த்தாள். மணி 7.30. உடலை நிதானப்படுத்தினாள். சமையலறையில் பெரிய சத்தம். மகனும் மருமகளும் வாக்குவாதப்படுவதும் பாத்திரங்கள் உருட்டுவதும் காதில் விழுந்தது.

    முதலே சொல்லியிருந்தால் நான் அலார்ம் வைத்து எழும்பியிருப்பேன். எல்லாம் தான்தான் செய்ய வேணும். வயசு போனா போன மாதிரி இருக்க வேண்டியதுதானே. இப்ப எனக்குத்தான் தேவ இல்லாத  ரென்ஸன்.”

    ஒரு பாசம் என்றா என்னவென்று தெரியாத ஜென்மம். அவவே முடியாது என்று படுத்திருக்கிறா. ஏன் நீ நேற்றே சொல்லியிருக்கலாமே. வேணாம் மாமி நாளைக்கு கென்டினில சாப்பிடுறன் என்று. ஒரு நாளுக்கு கென்டினில் சாப்பிட்டால், உடம்பு ஒன்றும் கெட்டுவிடாது.  இன்றைக்கு பிந்திப் போறதால உன்ர படிப்பு ஒன்றும் குறையப் போறதில்ல. எனக்கு முக்கியம் அம்மா. அவ இல்லாட்டி உனக்கு நான் இல்ல. எனக்கு இந்த வாழ்க்க இல்ல. இதக் கொஞ்சம் இப்ப புரிஞ்சுக்க.

    நீ ஒன்றும் இப்படிக் கரிஞ்சு கொட்டி எனக்கு ஒன்றும் சாப்பாடு தேலையில்ல. நான் ஆஸ்பத்திரியில சாப்பிடுவன். வுளஉhß (போய் வருகின்றேன்)” பதிலுக்குக் காத்திராமல் தாயை ஒரு தடவை எட்டிப் பார்த்தான். புறப்பட்டான்

    உலகத்தில இல்லாத பெரிய அம்மா. அவவும் ஏதோ பெரிய அன்பு காட்டிற மாதிரி நடிப்பு” முணுமுணுத்துவிட்டு நிரூபாவும் கிளம்பிவிட்டாள்.

    ஒரு தாயுள்ளம் இடிந்து போனது. உண்மைக்கும் நடிப்புக்கும் வித்தியாசம் தெரியாத பெண்ணையா என் மகள் என்று கருதினேன். நெஞ்சு படபடத்தது. நோய்க்கு முதற் காரணமே மனம் என்னும் மாயப்பொருள்தானே. ஆயினும் என் மகள் பேசினால், நான் தாங்காமலா இருப்பேன். நானும் பிழை விட்டிருக்கிறேன். சின்னஞ்சிறுசுகள் பாவம் நிம்மதியாப் படுத்திருக்கலாம். இப்ப அநாவசிய சண்டை என்னால் வந்துவிட்டது என்ற படி இரவுணவை வகைவகையாய்த் தயார் படுத்தினாள். அசதியோ ஆட்டிப்படைத்தது. எனினும் பிள்ளைகளை நினைக்க, அவை இரண்டாம் பட்சம் என்று கருதினாள். உணவு தயாரானதும் மீண்டும் வந்து படுத்துவிட்டாள். இந்த உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் என்னைக் கேட்காமலே மூளை என்னை உறங்க வைத்திருக்கிறது. பிள்ளை யூனிவர்சிட்டி முடிக்கும் வரையாவது நான் தாக்குப்பிடிக்க வேணும். அதுக்குப்பிறகு என்ர கடமை முடிஞ்சுது என்று நான் போய்ச் சேர்ந்திருவன் என்று நினைத்தவளாய் இமை மூடினாள்.

             கண்விழிக்கும் போது இருவரும் ஒன்றாக வீடு வந்திருந்தது தெரிய வந்தது. மீண்டும் நிரூபாவே வாய் திறந்தாள்.

    இப்ப பாருங்க. இவக்கு முடியாதென்று கடையில வாங்கி வந்தா. இஞ்ச ஆக்கிப் படைச்சிருக்கு. இதுக்கு என்ன செய்யப் போறீங்க”

    ஆ.. அப்பிடியா! அப்ப சாப்பிடுவம். வாங்கினத பிரிஞ்சுக்குள் (குசனைபந) போடு. நாளைக்கு சாப்பிடுவம். அம்மா…. எப்பிடி உடம்பு இருக்கு. ஏனம்மா இப்ப சமைச்சனீங்க. சும்மா படுத்திருக்லாமே”

    காலயில என்ன அறியாமப் படுத்திட்டன் மகன். நீங்க கென்டீனில சாப்பிட்டிருப்பீங்க. வாய்க்கு ருசியாச் சாப்பிட்டாத் தானே. படிப்பு ஏறும். வேலையும் நல்லாச் செய்ய முடியும். நான் இருக்கும் வரையும் என்னால ஏன்டவரை செய்யிறன். பிறகு உன்ர மனிசி உன்னப் பார்த்துக் கொள்வாள்” என்றாள்

    என்ன செய்யுது மாமி? எதாவது பார்த்து மாமிக்கு மருந்தக் குடுங்களேன். உங்கள படிப்பிச்சதுக்கு மாமிக்கு ஒரு வருத்தமும் வராம பார்க்க வேண்டி யதுதானே உங்கட பொறுப்பு”

     

    நீ வேல செய்யாம இருக்கிறதுக்கென்டு சொல்லு என்று மனதுக்குள் நினைத்தவனாய். “வாங்க அம்மா. சேர்ந்து சாப்பிடுவம்” என்று சொல்லியபடி வேந்து எழுந்தான். மூவரும் ஒரே மேசையில் உணவருந்தினர். சிறிது நேரம் தொலைக்காட்சி. அன்றைய பொழுது அமைதியாகக் கழிந்தது.

    காலம் கரையவும், தன் வாழ்நாளைத் தன் மகன் மருமகளுக்காய் அர்ப்பணிக்கவும் சுதா வாழ்வு தொடர்ந்தது. சின்னச் சின்னத் தவறுகள் வராமல் தன் பிள்ளைகளை குதூகலமாய் வைத்திருந்தாள். அடிமனதில் பெண்பிள்ளை இல்லையென்ற குறை இருந்ததுவே இவ்வாறு நிரூபாவில் அளவுகடந்த பாசத்தைக் காட்ட காரணமாகியது. சிறிது நேரம் பல்கலைக்கழகம் இருந்து திரும்பிவரப் பிந்திவிட்டால், சுதா மனம் படபடவென்று துடித்துப் பாடாய்ப்படுத்தும். அவள் சிரித்த முகம் பார்த்தே மனவமைதி கொள்வாள். அளவுக்கு மீறி பாசம் வைக்காதீங்க அம்மா என்று வேந்து அடிக்கடி சொல்வான். ஆனால், பாசம் என்பது வரிந்து கட்டிக் கொண்டு வருவதில்லையே. தரமான மனதுக்குத் தானாக வரும். அதை மறைத்து வைக்கவோ, விலத்திக்கொள்ளவோ முடியாது. அடித்துப் போட்டாலும் பாசம் வைத்தரைத் தேடியே ஓடும். இதே நிலைதான் சுதாவுக்கு.

    அன்றொருநாள் வேந்துக்கு இரவுவேலை. நேரமோ விரைவாய் கடக்கிறது. நிரூபா இன்னும் வரவில்லை. மகனுக்கு தொலைபேசியில் அழைத்தாள். அவனும் இன்று யூனிவேர்சிட்டி முடியத் தாமதமாகும் என்று சொன்னான். ஆயினும் சுதாவுக்கு மனம் இருப்புக்கொள்ளவில்லை. கடிகாரமோ நேரத்தை இரவு 9 மணியெனக் காட்டியது. இப்படித் தாமதமாக நிரூபா வருவதில்லையே! ஏங்கிக் கொண்டு சாளரமூடாகத் தன் பார்வையைப் பதித்திருந்தாள்.வீட்டின் முன்னே ஒரு வாகனம் வந்து தரித்தது. கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள். இருண்ட வீட்டில் சாளரவெளிச்சம் வெளிவர அவசியமில்லையே. வாகனத்தினுள் இருந்து இறங்கினாள் நிரூபா. யாரோ கையைப் பிடித்து இழுப்பதையும் அதை விலத்தி விட்டு வாகனத்தினுள் இருந்து வெளிவருவதையும் பின் கையை இழுப்பதனால் உள்ளே செல்வதையும் கண்டாள். மீண்டும் கண்களை அகட்டிப் பார்த்தாள் சுதா. அழகான ஒரு ஆண்மகன் வாகனத்திற்குள் இருப்பது தெரிந்தது. அவன் கன்னங்களில் நிரூபாவின் உதடுகளின் அழுத்தம். மீண்டும் அவன் இதழோடு நிரூபா இதழ்கள் இணைவது கண்டு சுதா ஆடிப்போனாள். சட்டென்று படுக்கையில் விழுந்தாள். நிசப்தம், என்ன செய்வதென்றே புரியாத நிலை. வழமையாக அவளுக்காக விழித்திருந்து உணவு பரிமாறிவிட்டே தூங்கச் செல்லும் சுதாவின் கைகால்கள் எல்லாம் நடுக்கம் கண்டன. விழிநீர் விழிவிட்டு விடைபெற்றது. கண்களைத் துடைத்துவிட்டு வெளியே வந்தாள்.

    பளிச்சென்ற புன்னகை முகத்துடன்  குளியலறையிலிருந்து வெளியே வந்த நிரூபா,

    மாமி ரெலிபோன் அடித்துச்சொல்ல மறந்திட்டன். நான் வெளியில பிரெண்ட்ஸ் ஓட சாப்பிட்டிற்றன். நீங்க சாப்பிட்டிற்றுப் படுங்க”

    யார் பிரன்ட்ஸ் பிள்ள”

    உங்களுக்குத் தெரியாது மாமி”

    உணவை வெறுத்து உடலைக் கட்டிலில் சரித்தாள். மனமோ சிந்தனையில் ஆழ்ந்தது. இதை எப்படிக் கையாள்வது. நான் கண்டதாகச் சொன்னால், வயசு போன காலத்தில கண் தெரியவில்லை என்பாள். புத்தி சொன்னால், எனக்கு எல்லாம் தெரியும் என்பாள். ஏனென்றால், நிரூபாவைச் சுதா நன்றாகவே படித்து வைத்திருக்கின்றாள். அளவுக்கதிகமாக இடத்தைக் கொடுத்துவிட்டேனோ! என்னிலோ, அல்லது எனது மகனிலோ ஏதோ பிழையிருந்திருக்குமோ! இல்லையென்றால், இவள் வேறு துணை நாடியிருக்க மாட்டாளே. மனம் தடுமாறும் வயதில் தவறுவிடுவது சாத்தியமே. ஆனாலும் தடுமாற என் மகனில் என்ன குறையைக் கண்டிருப்பாள்? இதைவிட எப்படிப் பாசத்தை இவளில் என்னால் காட்டமுடியும். சொந்த இரத்தம் போலல்லவா கவனித்தேன். எனது மகளென்றால், நான் என்ன துரத்தியா விடப்போகிறேன். புத்தி சொல்லிப் பார்ப்போம். புரிந்து நடந்து கொள்வாள். சந்தர்ப்பம் சூழ்நிலையை திருந்தப் பார்க்கலாம். இப்போது இக்கதையை வேந்துவிடம் அறிவிக்கத் தேவையில்லை. நாளை பேசிப் பார்ப்போம் என்று அன்றைய இரவைத் தூக்கமில்லா இரவாய் அனுப்பி வைத்தாள்.

     நாளும் காத்திருக்காமல் இறக்கை கட்டுகிறது. மனக்குளப்பமோ நாளுக்கு நாள் மன உழைச்சலை அளவின்றி அதிகரிக்கச் செய்கிறது. வேந்துவை நிரூபா கட்டி அணைக்கும் போதும், மாமி மாமி என்று தன்னிடம் குழையும் போதும்; சுதா மனதில் தேளொன்று இறுகக் குத்துவது போல் வேதனை வாட்டி எடுத்தது. அன்று தொலைக்காட்சியின் முன்னே மாமியும் மருமகளும் நாடகம் ஒன்றை இரசித்தபடி இருந்தனர். இதுவே சந்தர்ப்பம் என்ற படி

    பிள்ள உன்னிடம் கன காலம் ஒரு சங்கதி கேட்கவென்று இருக்கிறன். நீ எப்படி எடுப்பியோ தெரியாது. ஆனாலும், இன்டைக்குக் கேட்கவே வேணும் என்று முடிவடுத்துவிட்டேன். உன்னோட படிக்கிற பெடியன்கள் யாராவது உன்ன விரும்பிறதென்று கேட்டவனுகளோ?

    கண்களைச் சுருக்கினாள், இருட்டு வெளிச்சமானால், அடையாளங்கள் வெளிப்படை அல்லவா? போதிய அளவு ஒளித்தாலும், மறைவு எப்படியோ காட்சிப்படுத்தப்படும் அல்லவா

    என்ன இது புதுக்கதையா இருக்கு. எல்லாருக்கும்தான் என்னப் பிடிக்கும்”

    எல்லாருக்கும் பிடிக்கிறதுக்கும் ஒருவனுக்குப் பிடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கிறது நிரூபா. இது ஒன்றும் பெரிய விடயமல்ல. இந்த வயசில அறியாமப் பிழை விடுறது வழமைதான். ஆனால், இதக் கொஞ்சம் நீ யோசிச்சுப் பார்த்தா சரியாயிடும்”

    என்ன சரியாயிடும்? நீங்க என்ன சொல்றீங்க? முழுப்பூசணிக்காயை முழுவதுமாக மறைத்தாள்.

    பிள்ள உன்ர நன்மைக்குத்தான் சொல்றன். வேந்து அறியிறதுக்கு முதல் அந்தப் பிள்ளயிட்;டச் சொல்லி ஒதுங்கச்த சொல்லிரு மகள். அதுதான் எல்லாத்துக்கும் எல்லாருக்கும் நல்லது”

    எந்த வார்த்தைகளும் காதில் செலுத்தாது. இருந்த இடத்தைவிட்டு விட்டென்று எழுந்தாள். தன் அறையினுள் சென்று அமர்ந்து கொண்டாள். எப்படி இந்த மனிசிக்கு இது தெரிந்தது. இதுக்கு ஒரு முடிவு கட்ட வேணும் என்று நினைத்தாள்

    நிரூபா நடவடிக்கைகள் சுதாவின் அச்சத்துக்கு நெய்யூற்றியது. எத்தனை காலங்கள் வேந்துவிடம் மறைப்பேன். நடிப்புலக மேதையாய் நிரூபா நடமாடும் காட்சி மனதைச் செல்லரிக்க வைத்தது. மீண்டும் மீண்டும் பேசும் பேச்சுக்கள் விழலுக்கிறைத்த நீரானது. எப்படியும் நிரூபாவை வழிக்குக் கொண்டுவந்து விடலாம் என்று போட்ட கணக்கு பொய்க்கணக்கானது.

    பார்த்துப் பார்த்துச் செய்த பணிவிடைகள் பலனளிக்காமல் போனது. சேர்த்து வைத்த பாசமெல்லாம் வேசமாகிப் போனது. தாய்க்குத் தாயென போட்ட கணக்கு தப்பானது. நேசம் வைத்த மனசு பேதலித்துப் போனது. இளமைக் கனவுகளும் எடுத்தெறியும் உறவுகளும் இலகுவானதனால், அன்புக்கும் காமத்துக்கும் வேறுபாடு புரியாது போனது. நிரூபா என்னும் கல்லுக்குப் பாசமென்னும் பாலூற்றிய சுதா பரிதவித்துப் போனாள். அழகுப் பெண்ணானவள் மெலிந்து துரும்பானாள். உடனிருந்தே கொல்லும் மனநோயானது பாசத்தை யாரென்று ஆராயாது பற்று வைக்கும் உனக்கு பாசமே கல்லறையாகும் என்று சுதா மனதுக்கு சபதம் போட்டது

    வேந்துக்கு உண்மை விளங்கியது. இறங்க வேண்டிய அளவுக்கு இறங்கினான். மாமி, மாமா மௌனமானார்கள். பெற்றெடுக்கவும் பார்த்துப் பார்த்து வளர்த்தெடுக்கவும் கற்பிக்கவுமே உரிமை கொண்ட புலம்பெயர் பெற்றோர்களிடையேயுள்ள ஒரு பெற்றோரே இந்த நிரூபாவின் பெற்றோரும். அளவுக்கதிகமான சுதந்திர உரிமை சூழலையும் சுற்றத்தையும் எண்ணிப் பெரிதாய்க் கவலைப்படுவதில்லை.

    அன்றொருநாள் தன் பெட்டியை எடுத்தாள் இழுத்தாள். அதுகூட அவள் மனம் போன போக்குக்கு இழுபட்டது. வீட்டு வாசலிலே நின்ற சுதா அவளைத் தடுத்தாள்.

     “நில்லு மகள் நில்லு மகள்…...” அவளின் காலில் விழுந்தாள். “

    எங்களை விட்டிற்றிற்றுப் போகாத பிள்ள.  கொஞ்சம் பொறுமையாக இரு. எல்லாம் சரியாயிடும். வேந்து தனிச்சுப் போவான். அந்தப் பெடியனிட்ட நான் கதைக்கிறன்”

    நீங்கள் ஒன்டும் கதைக்க வேண்டாம். எனக்கு இங்க இருக்கப் பிடிக்கல்ல. விடுங்க….”

    காலால் எற்றிவிட்டாள். அவளைக் கடந்து போனாள். உடல் நிலத்தில் சரிந்தது. பாசம் வைத்த மனசு மயக்கமானது. வேலை முடிந்து வீடு வந்த வேந்து வாசல்படியில் மயங்கிக் கிடக்கும் தாயைக் கண்டான்.

    அம்மா! எழும்புங்க எழும்புங்க….”

    அவளால் எழும்ப முடியுமானால், இப்போது மகனுக்கு ஓடிப்போய் குடிக்கவோ உண்ணவோ ஏதாவது கொடுத்திருப்பாளே.

    ஆஸ்பத்திரிக் கட்டிலில் கிடந்த தாயைக் காண அறையினுள் நுழைந்தான் வேந்து. ஆனால், தாயோ அவனைப் பெரிதாக அலட்சியம் செய்யவில்லை.

    போட்டது போட்டபடி கிடக்கு. இங்கே ஏன் தான் என்னக் கொண்டுவந்து வச்சிருக்கிறியோ தெரியாது. களைச்சுவரும் புள்ள. டெவில் செய்து தரக் கேட்டவள். வேந்து…. என்ன டா இது. ஏன் என்ன இஞ்ச கொண்டு வந்தனீ?

     

     -  05.09.2021 தினகரன் பத்திரிகையில் வெளியானது - 

     

     

     

     

     

     

     


     

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...