பணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம்
மனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம்
விதை போட்டது யாரென்று புரியாத போதும்
புலம்பெயர்ந்தும் திருந்தாத மந்தையர் கூட்டம்
பெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலுமா!
பலரின் புலம்பல் என் பார்வையிலும் என் கருத்திலும் இங்கு பதிவாகின்றது.
சீதனம் பெறும் போதே தனம் என்னும் செல்வம் சீ என்னும் வெறுப்புக்கு உள்ளாகின்றது . பெற்றோர் பெண்ணைப் பெற்று கல்வி, செல்வம், குடும்பப் பொறுப்பு, பொறுமை, அத்தனையும் சேர்த்துக் கொடுக்கத் திருமணம் என்னும் பெயரில் தாலியைக் கழுத்தில் கட்டிவிட்டு சொந்தம் கொண்டாடும் ஆண்மக்களே!
பெண் என்பவள் இச் சமுதாயத்தை ஒரு குடும்பத்தை சுமக்கின்ற அச்சாணி. இப்பெருமை எல்லாம் சேர்த்தே பூமிக்கு, பூமாதேவி என்னும் பெண்பால் பெயரிட்டார்கள். செல்வத்தைக் கொடுப்பதாகக் கருதும் கடவுளையே பெண்ணாகக் கருதி இலக்குமி என்று பெயரிட்டார்கள். வாழ வந்த வீட்டிற்கு வளம் சேர்க்கும் பெண்களை பணம் சேர்த்துக் கொண்டு வாருங்கள் என்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் வறிய கையாலாகாத ஆண்சமுதாயமே!
திருமணம் என்பது இருவர் இணைந்து வாழுகின்ற ஒரு கோட்டை; வளருகின்ற விருட்சம். இது தகர்த்து எறியப்படவோ? இடையில் வெட்டி விழுத்தப்படவோ கூடாதது. இக்கோட்டைக்கு உற்றார் உறவினர்கள் அரணாக இருக்க வேண்டும். ஆரம்பமே, அடித்தளமே ஆட்டம் கண்டால் வாழ்க்கையை நிறுத்த முடியுமா? வாழ்வு நிலையாகுமா?
பணமில்லாது வாழ்வில்லை. பணமே வாழ்வுமில்லை. இது புரிந்தே உலகில் யாவரும் வாழுகின்றனர். ஆனால், பிறரின் உழைப்பில் பணம் சேர்க்க நான் நினைப்பதில் நியாயம் இருக்கின்றதா? பெண்ணையும் ஆணையும் சேர்த்து வைக்கலாம். இதனால் வம்சம் விருத்தியாகும், வாழ்க்கை சிறக்கும். பெண்ணோடு சேர்த்து பணத்தையும் தாருங்கள். அப்போதுதான் ஓரளவாவது வாழ்க்கையை என்னால் கொண்டு இழுக்க முடியும் என்று கேட்பது ஆணுக்குக் கேவலம் இல்லையா?
யாழ்ப்பாணத்து அரசர் காலத்து நடைமுறைகளின் தொகுப்பாகிய சீதனம் என்பது யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்டகாலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட தேசவழமைச் சட்டமாகும். கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படும் மருமக்கட்தாயச் சட்டத்தின் கூறுகள் யாழ்ப்பாண சமுதாய நிலைமைக்கு ஏற்ப மாற்றமடைந்து யாழ்ப்பாண சீதன முறை கொண்டுவரப்பட்டது. ஆண் கொண்டுவரும் சொத்து முதுசம். பெண் கொண்டுவரும் சொத்து சீதனம். ஆணும் பெண்ணும் சேர்ந்து தேடிக்கொள்ளும் சொத்து தேடிய தேட்டம். இவ்வாறு விக்கிபீடியா சீதனத்துக்கான விளக்கம் கொடுக்கின்றது. இப்போது முதுசம் எங்கோ மறைந்தது? சீதனம் இங்கே நிலைத்தது. தேடிய தேட்டமே நடக்க வேண்டியது.
பெண்கள் தொழிலின்றி வீட்டில் கணவன் உழைப்பை எதிர் பார்த்துக் காத்திருந்த காலப் பகுதியில் பணம் படைத்த பெற்றோர் நன்கொடையாக அதாவது அன்பளிப்பாக மகளின் திருமண மகிழ்வில் கொடுத்த நிகழ்வு நடந்து முடிந்து விட்ட நடைமுறை ஆகும். இன்று பெண்ணும் ஆணும் சரி சமமாக உழைக்கும், அல்லது ஆணை விட பெண் கூடுதலாக உழைக்கும் காலம். இக்காலத்திலும் சீதனம் என்ற பெயரில் பிச்சை எடுக்க நினைப்பது சமுதாய சீர் குலைவு என்பதே உண்மை.
‘சீதனம் எவன் கேட்டால் செருப்பெடுத்தடி
கோவணம் கட்டிய கும்பகனை மணம் பிடி’’
ஏனென்றால் பெண் தன் குடும்பத்தை நடத்தக் கூடிய வலிமை மிக்கவள் இல்லையா? ஆண் எப்படித்தான் இருந்தால் என்ன? அவனை மனிதனாக்கும் வலிமை பெண்ணுக்கு உண்டு.
‘’ தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’’
கற்பு நெறியில் தன்னையும் காத்து, தன் கணவனையும் காத்து, தகுதி வாய்ந்த புகழையும் காத்து உறுதி தளராது வாழ்பவளே பெண் என்று வள்ளுவரே கூறியிருக்கின்றார்.
சீதனம் கேட்பதும், கொடுப்பதும் குற்றம் என்றே கருதுகின்றேன். கடந்த காலத்தை மறந்து சீதனம் கேட்பது பெண்களே என்பது உண்மையே. அவர்கள் கருத்தில் ஆணுக்குப் பின் பெண்ணைப் பெற்ற தாய்மார் ஆணைக் கொடுத்துக் கறக்கும் பணத்தைப் பெற்று அடுத்துத் திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்கத் திட்டம் இடுகின்றனர். மகனை வளர்க்க செலவு செய்ததை வரும் மருமகள் குடும்பத்திடம் இருந்து கறக்க நினைக்கிறாள். அடிப்படையில் இயலாமையே இதற்கு காரணமாகின்றது. புலம்பெயர்வில் அதிகமாக அரசாங்கப் பணத்தில் வளர்க்கும் மகனுக்கே சீதனம் எதிர்பார்க்கும் பெற்றோர். பெற்றேன் கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்றெல்லாம் வாய் அளப்பது சரியா? தாய் சொன்னார். தனையன் தலை ஆட்டுகின்றான். தாயிற் சிறந்த கோவில் இல்லை என்று காரணம் காட்டி பணத்துக்கு தலை பணிந்து நிற்கின்றனர் ஆண்கள். அதனால், கோவிலினுள்ளே உள்ள சக்தியாக இருக்க வேண்டிய தாய். சீதனம் கேட்டு பழமொழியையே மாற்றி அமைக்கின்றாள்.
பெண்ணைப் பெற்றவர்கள் கூறுகின்றார்கள். பிள்ளையைப் படிக்க வைத்து சிறந்த உத்தியோகம் பெற வைத்து திருமணம் செய்து கொடுக்கும் போது. சீதனமும் தா எனக் கேட்டல் எவ்வகையில் நியாயம் ஆகின்றது. என் பிள்ளை உழைத்துக் கணவனையும் கண் கலங்காது பார்த்துக் கொள்வாள். தன் வாழ்க்கையையும் உயர்வுக்குக் கொண்டு வருவாள். கணவன் உழைப்பில் மண்டியிட்டுக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் மகளை வாழ வைக்க அக்காலம் போல் மருமகனுக்குச் சீதனம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் மட்டுமா, தங்க நகையையே விரும்பாத பெண்களுக்கு தங்க நகைகளும் சீதனமாகக் கேட்கின்றார்கள். வாழ வழி அற்று புலம் பெயர்ந்த நிலைமை மறந்து சொந்த நாட்டில் வீடற்று தங்க வந்த இடத்திலேயே சீதனமாக வீடும் கேட்கின்றார்கள். இரவு பகலாக உழைத்து இரண்டு மூன்று வேலை என்று செய்து வீட்டை வாங்கி, வங்கிக்கு பணத்தைக் கட்டிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், வீட்டை மகள் பெயருக்கு எழுதும் படிக் கூறிப் பின் மகனை வளைத்துத் தன் மகளுக்கு அவ்வீட்டை எழுதிக் கொடுக்கப் பண்ணும் பெற்றோரின் திறமைக்கு நாம் என்ன மடையர்களோ? என்று கேள்வி கேட்கும் பெண்ணைப் பெற்றோர், வாழும் வரை உழைத்து வீடு வாங்கி மீண்டும் வாடகை வீட்டில் குடியிருக்க விரும்புவாரோ!
ஐரோப்பிய நாட்டில் வளருகின்ற பெண்கள் கணவனை விலை கொடுத்து வாங்க மறுப்பதனால், திருமண கலாச்சாரம் மறைந்து போகும் நிலை ஏற்படுகின்றது. ஐரோப்பிய கலாச்சாரம் மேலோங்குகின்றது. இயற்கையான உடல் இச்சைகள் தவறான வழிகளில் தடுமாறும் சூழல் ஏற்படப் போகின்றது. கலாச்சாரக் கட்டுப்பாடுகள் மீறும் நிலை வரும் காலங்களில் மேம்படப் போகின்றது. ஐரோப்பிய நாடுகளில் சூழல், சுற்றம், உறவினர் போன்றோருக்குப் பயந்து பெண்கள் வாழ்ந்த நிலைமை இல்லையென்பதால் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் நடமாடுவதற்கு வழி வகுக்கும் ஆண்களைப் பெற்றவர்களே சிந்தித்துப் பாருங்கள். புலம்பெயர்வில் சீ....... தனம் தேவையா?
எழுதி விட்டேன். இது பற்றி காலம் காலமாக எழுதப்படுகின்றது. ஆயினும் சமுதாயம் சீர்பெற ஒரு சிந்திப்பு என்னாலும் நடக்கட்டும்.