• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 3 ஆகஸ்ட், 2020

  திரு.வி.க.அரசுக்கல்லூரி நடத்திய கவியரங்கக் கவிதை .  இக்கவியரங்கத்தை முத்துநிலவன் ஐயா அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார். 


  கன்னித் தமிழே நீ காவியத்தில் புரண்டெழுந்தாய்

  காளமேகம், கம்பனெனும் கவிஞர்கள் நாவினிலே நடம்புரிந்தாய்

  சங்கத்துச் சான்றோர்கள் சபைதனிலே ஆட்சி செய்தாய்

  நக்கீரன் சொற்களிலே வற்றாத நதியானாய்

  கோவை உலா அந்தாதி எனஎமை ஆற்றுப்படுத்தினாய்

  கலம்பகத்தில் களித்து நின்றாய் பாரதியில் மயங்கிநின்றாய்

  வள்ளுவன் வாக்கினுக்கு சாவா மருந்தளித்தாய் - இன்று

  என் நாவினிலே எழுந்தருளி நா இனிக்க நான் பாட

  தேன் இனிக்க விருந்தாகி தெவிட்டாத துணையாக வருவாய்

  தமிழே உனக்கு முதல் வணக்கம்

   

  முத்துப் போல் பல்லிருக்கும் முகம் பார்க்க செழிப்பிருக்கும்

  வித்துவத் தமிழிருக்கும் விற்பனப் பேச்சிருக்கும்

  சரமாரி பொழிகின்ற சந்தத் தமிழாலே

  வானலையில் வலம்வரும் கறுப்பு நிலா

  முத்துநிலவன் ஐயாவிற்கும்

  நற்றமிழால் உலகை விழிப்படையச் செய்யும்

  திரு.வி.க. அரசுகலைக்கல்லூரிக்கு அன்பு வணக்கம்

   

  நான் நடத்தும் பாடத்தை ஏன் மறந்தாய் மனிதா

   

  சிறகில்லாப் பறவைநான் உருவமில்லா அருவம் ஆனேன்

  காற்றென்று பேர் எனக்கு கார்முகிலை வரவழைத்தேன்

  தென்றலென்றும் வாடையென்றும் கோடையென்றும் மேலையென்றும்

  வாகை சூடிநின்றேன் வாரி பொழிய வைத்தேன்

   

  சாதிமதம் பார்ப்பதில்லை பாரபட்சம் ஏதுமில்லை

  ஆடிக் களித்திருப்பேன் ஆடும்போதே தடவிச்செல்வேன்

  நெற்கதிர்கள் தலைகுனிய பூவினங்கள் சிரித்திருக்க

  சோலையிலே புள்ளினங்கள் பாடிப்பறந்து வர

  பாட்டானேன் நறுமணமானேன் மகரந்த மயமானேன்

   

  பேச்சினிலே பாட்டினிலே இன்னிசையின் ஓசையிலே

  பறவைகளின் பாட்டினிலே பூமியின் சுழற்சியிலே

  அப்பப்பா அப்பப்பா உலகனைத்தும் எனக்குள்ளே

  அடக்கி ஆட்சி புரிகின்றேனே.

   

  காற்றில்லா வாழ்வேது நானில்லா ஒலியேது

  ஏற்று நீ கவிபாட வழிதான் ஏது

  காற்றுடன் பிறந்தாலும் மூச்சிலே இல்லையென்றால்

  வெற்று நீ உடம்பாவாய் பிரேதமெனப் பெயரிடுவார்

   

  நான் இல்லா ஓசை ஏது

  நான் இல்லா காது எதற்கு

  நான் இல்லா வாழ்வு எதற்கு

  என்னை நீ உணர மாட்டாமையாலே

   

  காபன் மோனாக்சைட்டை கந்தக ஒட்சைட்டை

  காற்றுடன் நீயே நன்றாய்க் கலந்தாய்

  நானும் சுமந்தேன் வானில் பறந்தேன்

  நச்சுக் காற்றும் உன் சுவாசமானது

   

  ஆலைகளின் வேலைகளால் கரிமச் சேர்மங்கள்

  காற்றிலே கலப்பதனால் வானுடன் கலக்கிறேன்

  மழையில் கலக்கிறேன், மண்ணில் கலக்கிறேன்

  உணவுடன் கலக்கிறேன் உண்டு மகிழ்கிறாய்

   

  வாகன நெரிசல்கள், வானளந்த ஓசைகள்

  புகையைக் கக்கி  என்னை மாசுபடுத்துகிறாய்

  மூச்சுத் திணறி நான் அல்லாடிப் போகிறேன்

  கோபம் கொண்டேநான் மூச்சு விட்டேனேயானால்

  வாகனம் நிலத்தில் ஓடுமா? வானில் பறக்குமா?

  நினைத்துப் பார் மானிடனே!

   

  வானத்தில் ஆராய்ச்சி மோகத்தில் விஞ்ஞானி

  ஆராய்ச்சித் துகள்களினால் வானமே பழுதாச்சு

  கிரகங்கள் நிலைகுலைவு இயற்கையும் தடுமாற்றம்

  புதுப்புது வாயுக்கள் புற்றீசலாய் படையெடுப்பு

   

  காட்டை வெட்டி நாசம் பண்ணுகிறாய்

  கட்டிடம் கட்டுகிறாய் ஆலைகளை அமைக்கின்றாய்

  காடு தந்த ஒட்சிசனைக் காசு கொடுத்து நீ

  வாங்கத் தான் முடியுமா!

   

  காற்றை மாசு படுத்துகின்றாய் நீ

  மூச்சுக் காற்றுக்கு முகமூடி அணிகின்றாய்

  தீராத வலி எனக்கு நீ தந்தால்

  சூறாவளியாகி சுழன்று உன்னை அழித்திடுவேன் 

   

  சைவத்தை நாடு அசைவத்தை ஒதுக்கு

  வீட்டுத் தோட்டம் விரும்பியே செய்

  நடந்து பழகு வாகனம் தேவையில்லை

  இயற்கை வாழ்வை இதயத்தில் ஏற்று

  உன்மூச்சைக் காக்க என்பேச்சைக் கேள்

   

   

   

   

   


  விழி சொல்லும் கதைகளை விட மனம்சொல்லும் கதைகள் உணர்வுபூர்வமானவை

    விழி சொல்லும் கதைகளை விட மனம்சொல்லும் கதைகள் உணர்வுபூர்வமானவை காரணமில்லாமல் மனம் சிலரைத் தேடும். முன்னமே ஒட்டி உறவாடி விட்டுச் சென்றவர்களி...