• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 28 அக்டோபர், 2011

    கம்பரும் அவர் வாழ்வியலும்



                     
    நாம் எமது ஐம்புலன்களினால் பெறுகின்ற இன்பத்தைவிட இலக்கிய இன்பம் பெருமை பெற்றது. அதை அப்படியே ஏற்று சுவைத்து இன்புறுவோரும் உண்டு. வாழ்க்கைக்குத் தேவையான மெய்யுணர்வைக் கொண்டு ஆராய்ந்து பார்த்துப் பொருள் கொள்வோரும் உண்டு. இலக்கியத்தில் இன்பம் பெறுவோர் கம்பரைத் அறியாதிருக்க மாட்டார்கள். கம்பன் கற்றவர்க்கும்;;;, கற்பனை சுவை சுவைத்து இன்புறுவோர்க்கும் சுவாரஸ்யமானவர் மற்றவர்க்குச் சிதம்பரசக்கரம் போலாவார்.  
       
                      இக்கம்பன் இலக்கியச்சுவை சில கண்டு இன்புற்று அவர் அகவாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றையும் எடுத்துக்காட்டி உலகுக்கு அறிவுரை பகரும் ஒரு கவிச்சக்கரவர்த்தி வாழ்வியலில் எவ்வாறு வேறுபட்டுள்ளார் என எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையேயுள்ள வேறுபாடு பற்றியும் இக்காலப் பண்புகளுடன் இவை எப்படி ஒன்றுபடுகின்றன எனவும் சற்று சிந்தித்துப் பார்ப்போம். 
            
                     கம்பர் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டவர். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் ''கம்பர் இலக்கியச்சுவை நுகரநுகர இன்பம் பயக்கும் உள்ளத்திலும் தேனூறும்'' என்று கூறுகின்றார். இக்கம்பர் தமிழ் இலக்கியவரலாற்றிலே சோழர்காலப்பகுதி என்று சொல்லப்படும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் வாழ்ந்தவர். இக்காலப்பகுதியில் அரசியல் தழைத்தோங்கிய காலம், செல்வச்சிறப்பு மிக்க காலம். இக்கால வாழ்வியல் இலக்கியங்கள் போல் அக்காலத்தில் உலகியலைச் சிறப்பித்துக் கூறும் இலக்கியங்கள் தோன்றின. கம்பர் இயற்றிய காவியம் தன்னிகரில்லாத் தலைவனை எடுத்துரைப்பதாய் இருந்தமைக்கு இதுவே காரணமாய் இருந்திருக்க வேண்டும். ஒரு தலைவனுடைய வாழ்க்கைவரலாற்றை எடுத்துக் கூறுமுகத்தால் மக்களுடைய நல்வாழ்விற்குக்கு இன்றியமையாத அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் எடுத்துரைக்கும் இலக்கியம் காவியம் அல்லது காப்பியம் எனப்படுகின்றது. மக்களுடைய நல்வாழ்வுக்கு இன்றியமையாத அறிவுரைகளை இலக்கியச்சுவை சொட்டுச் சொட்ட இராம கதை மூலம் கம்பரால் கம்பராமாயணம் இயற்றப்பட்டது. சொல்நயம், ஓசைநயம், கற்பனைநயம் என பல நயங்கள் எல்லாம் தன்னகத்தே கொண்ட கம்பராமாயணம் ஒரு கடல். அதில் மூழ்கி எடுப்பவை எல்லாம் முத்துக்கள். பாக்களின் சுவைகள் பலாக்கனியின் தேன் சுவைகள். அதில் ஒரு அற்புத சொல்நயம் ஒன்றை ரசிப்போம்

    சொல்நயம்:

    அஞ்சு வணத்தின் ஆடையுடுத்தாள், அரவெல்லாம்
    அஞ்சு வணத்தின் வேகமிகுத்தாள், அருளில்லாள்
    அஞ்சு வணத்தின் உத்தரியத்தாள், அலையாரும்
    அஞ்சு வணத்தின் முத்தொளிர்ஆரத் தணிகொண்டாள்.

    இப்பாடலில் அஞ்சுவணம் என்னும் ஒரு சொல் வேறுவேறு பொருள் கொடுத்து நயம் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முதலாவதில் ஐந்து நிறங்கள், என்றும், அடுத்து அஞ்சும் உவணம் அதாவது அஞ்சுகின்ற கருடன் என்றும் பொருள் தந்தது. அடுத்து அம்சுவர்ணம் என அழகிய பொன் எனப் பொருள் கொண்டது. அடுத்து அம்சுவள் நத்தின் எனப் பிரிந்து அழகிய பெரிய சங்கு எனப் பொருள் கொள்ளப்பட்டது. இதன் பொருளை எடுத்துநோக்கினால், ஐந்து நிறங்களில் ஆடையுடுத்தாள், பாம்புகள் எல்லாம் கண்டு நடுங்கும் கருடனின் வேகத்தைக் கொண்டவள், அழகிய பொன் கொண்டு செய்யப்பட்ட மேலாடையை அணிந்தவள், கடல்நீரில் தோன்றிய அழகிய பெரிய சங்கிலுண்டான முத்துக்களினால் செய்யப்பட்ட ஒளி பொருந்திய மாலையை ஆபரணமாக அணிந்தவள் என இலங்காதேவியைக் கம்பன் சொல்நயம் மிக்க பாடல் மூலம் வர்ணிக்கின்றார். 

                   இதேபோல் இவர் காவியத்தில் வருகின்ற ஒரு பாடலில் படிக்கும் போதே ஓசைநயம் மிக்கு  இருக்கின்ற ஒரு பாடலை எடுத்துநொக்குவோம்.

    ஓசைநயம்:

    உறங்கு கின்ற கும்பகன்ன
      உங்கள் மாய வாழ்வெலாம்
    இறங்கு கின்ற தின்றுகாணெ
      ழுந்தி ராயெழுந் திராய்
    கறங்கு போல விற்பிடித்த
      கால தூதர் கையிலே
    உறங்கு வாயு றங்குவாயி
      னிக்கி டந்து றங்குவாய்

    கும்பகர்ணனை யுத்தத்திற்கு அழைக்கும் பாடலை ஒரு தடவை உச்சரித்துப் பாருங்கள். அதன் ஓசைநயம் நன்கு புரியும்.

    இவ்வாறு சுவைகள் எல்லாம் கொட்டிக்கிடக்கும் கம்பராமாயணத்தை இக்காலப்பகுதியிலும் கம்பன் கழகம் வைத்துப் பலவாறாகப் போற்றிப் பாடுகின்றார்கள். பலவாறாக ஆராய்ந்து இன்புறுகின்றார்கள். 

                இக்கம்பராமாயணம் தந்த கம்பர் சற்றுத் தலைக்கனம் மிக்கவர் என்று அறியப்படுகின்றார். சிலம்பி என்னும் ஒரு விலைமகள் கம்பனிடம் ஒரு கவி புனைந்து தரும்படிக் கேட்டாளாம். ஆயிரம் பொன் தருவாயா என்று கம்பர் அவளைக் கேட்டிருக்கின்றார். என்னிடம் ஆயிரம் பொன் இல்லை ஐந்நூறு பொன்னே இருக்கின்றது என்று சிலம்பி கூறியிருக்கின்றாள். அதை வாங்கிய கம்பர்

    தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
    மண்ணாவ துஞ்சோழ மண்டலமே 

             என ஒரு வெண்பாவை அரைவாசியாகப் பாடிவிட்டு அதனை முடிக்காமல் சென்றுவிட்டார். இப்பரத்தை அப்பாடலைக் கொண்டு அடுத்தநாள் ஒளவையாரை கண்டபோது இப்பாடலை முடித்துத் தாருங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். ஒளவையும்

    ...........................................................பெண்ணாவாள்
    அம்பொற் சிலம்பி யரவிந்தத் தாளணியும்
    செம்பொற் சிலம்பே சிலம்பு.

                          எனப்பாடி முடித்துப் பழங்கஞ்சி வாங்கிக் குடித்துவி;ட்டுச் சென்றாராம். இச்சம்பவத்தின் பின் என் சஞ்சலம் விரிகிறது. ஒரு இலக்கிய கர்த்தா தமிழின் மேல் கொண்டுள்ள பற்று பணத்திற்கு விற்கப்பட்டதா? பொன்னையும் பொருளையும் மன்னர்கள் அள்ளி வழங்குவதற்காக, அவர்கள் புகழை மிகைப்படுத்திப் புலவர்கள் பாடியிருப்பது யாவரும் அறிந்ததே. இந்நிகழ்வு கம்பரில் வைத்திருந்த எண்ணத்திற்குப் பங்கம் விழைவிக்கின்றது. 

                   ஒரு இடத்தில் இரட்டையர்கள் பாடுகின்றார்கள்

    குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து
    சென்று திரிவதென்றுந் தீராதோ – ஒன்றுங் 
    கொடாதானைக் கோவென்றுங் காவென்றுங் கூறின்
    இடாதோ நமக்கிவ் விடர்.

                பரிசில்கள் யாதொன்றும் வழங்காத மன்னனை யாம் புகழ்ந்து பாடியதனாலேயே இவ்வாறான நிலைமை எமக்கு ஏற்பட்டது. அப்படியானால் பரிசில்கள் பெறுவதற்காக மன்னர்களைப் பலவாறாகப் புகழ்ந்து பாடிப் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டு சென்ற புலவர்கள் பாடிய பாடல்கள் அக்காலச் சூழலை எடுத்துக் காட்டும் கண்ணாடி என எப்படி நாம் எடுத்துரைப்பது. 

                       ஒளவை ஒரு பாடலிலே மன்னன் அதியமானைப் புகழ்ந்து பாடும்போது மாற்றரசனை வெட்டிவெட்டி மழுங்கேறிய கத்தியையுடைய மன்னனே என்று பாடுகின்றார், அவ் அரசனின் கண்கள்  தன்பிள்ளையைப் பார்த்தபோதும் சிவப்பாகவே இருந்தனவவாகப் பாடுகின்றார். அதாவது செறுவரை நோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பனவே  இவை போன்ற பாடலின் மூலம் போர் வெறியைத் தூண்டும் பாடலைப் பாடிப் பாடி வீர உணர்ச்சியை ஊட்டிப் பல உயிர்களைச் சூறையாடச் செய்து பரிசில்களைப் புலவர்கள் பெற்றுச் சென்ற செயலானது அப்புலவர்கள் பின் நீதிநூல்களைப் பாடியிருந்தும் அதன் பயன்தான் என்ன இருக்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது அல்லவா! அவ்வாறே இக்காலத்திலும் தமக்கு ஒரு சலுகை, புகழ், ஆதாயம் வரும் என நம்பிப் பலர் உணர்வு மிக்க வரிகளைப் பயன்படுத்திப் பாடல்கள் பாடுவதும், கவிதைகள் வடிப்பதும் நோக்கமாக்க கொண்டிருக்கின்றார்கள். 
      
                      அக்காலத்திலும் புலவர்களிடையே போட்டியும் பொறாமையும் இழையோடிக் காணப்பட்டன. ஒளவையும் கம்பரும், ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் ஒருவருக்கொருவர் போட்டியாக வாழ்ந்துள்ளார்கள் என ஆதாரம் காட்டக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறே இக்காலத்திலும் எழுத்தாளர்களிடையே போட்டியும் பொறாமையும், எழுத்துக்களிடையே காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டமாட்டாமல், புகழ்வதும், தமிழின் இலக்கண மரபுகளுக்கு பங்கம் ஏற்படும் எழுத்துக்களைக் கண்டுகொள்ளாமல் தமிழாராய்வாளர் வாய் மூடியிருப்பதுவும் தமது பாராட்டுக்களுக்குப் பங்கம் வந்துவிடும் என்னும் சுயநலமே ஆகும். இச்செயலும் அக்காலப் புலவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் தூற்றிப் பாட வேண்டிய இடங்களில் போற்றிப் பாடிய செயலுக்கு ஒப்பாக அமைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் எழுத்துக்களில் தூய்மையைக் கொண்டுவர முடியும். செயலிலே நல்ல உணர்வுகள் விதைக்கப்படும். சுட்டிக்காட்டும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் மக்களிடம் ஏற்பட வேண்டும். மெய்மைக்கு இடமளிக்க நாமும் மெய்யாய் வாழவேண்டும். 

                       இனி விட்ட இடத்திற்குத் தொடருகின்றேன். உலகுக்கு நீதி சொல்லிய கம்பர் ஆயிரம் பொன்னுக்குத் தன் பாடலைப் பேரம் பேசி; அரைவாசி பணம் கிடைத்தமையால் அரைவாசிப் பாடல் பாடிச் சென்றிருக்கும் சம்பவம்; இலக்கிய கர்த்தாக்களுக்கு எவ்வாறு உணரப்படுகின்றது. சொல்லும் செயலும் ஒன்றானால் உலகம் சொல்லும் உன் பெயர் என்னும் ஒரு வாக்கை நான் எழுதியிருந்தேன். ஏனெனில் உலகுக்கு ஒரு செய்தியை நாம் சொல்லும் முன் நாம் அதுபோல் நடக்க வேண்டும். இதனையே பரிசுத்தம் என்பார்கள். இங்கு கம்பர் செயல் என்னைக் கலங்க வைக்கின்றது. இது பற்றி அறிந்த இலக்கியவாதிகள் உங்கள் கருத்துக்களை இதில் பதிவிடுங்கள்.

    புதன், 26 அக்டோபர், 2011






    http://esnips.com/displayimage.php?pid=32947296

    அகவிருளில் அறியாமை சுகங்காணு முலகில்
    திரைவிலக்கி ஒளிபெருக்கி 
    அகமது ஒளிர்ந்து புறமது பரவி 
    பகலவன் ஒளியென அறிவதன் சுடரது
    பரவியொளி பாரெல்லாம் பரிமளிக்க
    பண்பெலாம் நிறைந்துலகில் படர்ந்திருக்க
    வஞ்சனை தீர்ந்துலகில் வஞ்சினம் நீறாக
    நெஞ்சமதில் பொறாமை இஞ்சியளவு தேங்கிடாது
    வந்தனை புரிந்தெமைப் பெற்றோர் அடிபணிந்து
    இத்தீபத் திருநாளதனில் நல்லனவெலாம் பெற்று 
    வாழ்கவென வாழ்த்துகிறேன்.

    வெள்ளி, 21 அக்டோபர், 2011

    துடக்கு



    தமிழர்கள் மத்தியில் தீட்டு என்றும் துடக்கு என்றும் விலக்கி வைக்கும் நாட்கள் பல. இந்த நாட்களை நீக்க பூஜை, கிரியைகள் என்றெல்லாம் ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் எம்மவர் மத்தியில் இருக்கின்றன. எப்போதோ எமது தலையில் அரைக்கத் தொடங்கிய மிளகாய் இப்போதும் அரைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. முப்பதாவது நாள் நடத்தவேண்டிய கிரியைகளுக்காக இந்தத் தடுப்புநாள் தந்தவர் யார்? கிரியைகள் தேவையா? இவைபற்றி விளக்கமாய்த் தெரிந்து கொள்ள மீண்டும் சுரண்டியது என் மூளை. தேடியது தெளிவுபெற பேனா திறந்தது, குனிந்தது.

    மாதவிடாய்த் தீட்டு: 

    தீட்டு என்னும் சொல், மகளிர்சூதகம், ஆசூசம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. பெண்களுக்கு வருகின்ற மாதவிடாய்க் காலங்கள் தீட்டு வந்த நாட்களாக கருதப்படுகின்றன. இக்காலப் பகுதியில் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் வழக்கம் இல்லை. அதிகமாக வெளியில் நடமாட மாட்டார்கள். புத்தியைத் தீட்ட வேண்டிய பெண்கள் மூளையில் அடங்கியிருப்பார்கள். அக்காலத்தில் போதிய சுகாதாரவசதிகள் குறைந்திருந்த காரணத்தினால் பெண்கள் ஒதுங்கியிருந்தார்களே தவிர ஒதுக்கப்படவில்லை. இக்காலத்தில் இருப்பது போன்று அக்காலங்களில் போதிய கிருமிநாசினிகள் இருந்ததில்லை. பெண்கள் கைகளில் கிருமிகள் விரைவாக வளரக்கூடிய கூடிய சூட்டுத்தன்மை உள்ளது.  பெண்கள் வயிற்றினுள் முட்டையையே கருவாக்கக் கூடிய வெப்பத்தையுடையவர்கள். அதனால் இவர்கள் மூலம் கிருமிகள் இலகுவாகப் பரவக்கூடியதாக இருக்கும். இக்காலங்களில் இவர்களுடைய உடலில் சுரக்கப்படும் ஓமோன்கள், மனநிலையிலும் மாற்றங்களைச் செய்வதுடன்,  ஒருவித எரிச்சல் உணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்தும். முதன்முதல் மாதவிடாய் கண்ட பெண்கள். மனநிலையால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அத்துடன் உடல் உபாதைகளும் (அடிவயிற்றில் வலி,கால்கள் நோ, இடுப்பு நோ) இவர்களுக்கு ஏற்படும். இவர்கள் மனஉணர்வு எதிலுமே மனதை ஒட்டவைக்காது. இந்த உணர்வு கோயிலுக்குச் சென்று ஆண்டவனைத் தரிசிப்பதற்குத் தடையாக இருக்கும். அவ்வாறே கோயிலுக்குச் சென்று மற்றையவர்களுக்கும் இவர்களின் உடலில் இருந்து வரும் மனஉணர்வினால் ஏற்படும் அதிர்வுகளும் கோயிலின் ஒருநிலைப்பாட்டு வணக்கமுறையைத் தடைசெய்யும். ஒரு மனிதனின் உடலில் இருந்துவருகின்ற அதிர்வுகள் மற்றைய மனிதர்களைச் சென்றடைகின்றன என்னும் விளக்கம் யாவரும் அறியவேண்டியதே. இதனாலேயே இந்த கட்டிப்பிடி வைத்தியம், சுவாமிமார்கள் என்று சொல்லப்படும் மனிதர்கள், தமது கையை அடியார்களின் தலையில் வைப்பது, போன்றவையெல்லாம் நடைபெறுகின்றன. எனவே ஒரு மனிதனின் உடலில் இருந்துவரும் அதிர்வுகள் அருகே இருக்கின்ற மனிதர்களைச் சென்றடையும். இதனாலேயே மாதவிடாய்க் காலங்களில் இருக்கின்ற பெண்களினுடைய மனநிலை அதிர்வுகள் ஆலயத்தில் வழிபாடு செய்கின்ற மற்றைய மனிதர்களின் வழிபாட்டைத் தடுக்கக் கூடியதாக இருப்பதனால், இக்காலங்களில் பெண்கள்  ஆலயங்களைத் தவிர்த்துக் கொள்வார்கள். அத்துடன் சுகாதாரவசதி குறைந்த அக்காலப்பகுதியில் சரியான முறையில் தன்னை சுத்தமாக்கி வெளியில் செல்லக் கூடிய வசதிவாய்ப்புக்கள் அக்காலப் பெண்களிடம் இருந்ததில்லை. இதனாலேயே அப்பெண்கள், கோயிலுக்குச் செல்லக் கூடாது என்று சொல்லப்பட்டது. செல்லக்கூடாது என்பதைவிட அப்பெண்கள் தவிர்த்துக் கொண்டார்கள் என்பதே பொருந்தும்.

    பிள்ளைபிறந்த வீட்டுத்தீட்டு:


    அற்புதமான பிஞ்சு உடல் இந்த பூமியில் வந்து பிறப்பெடுக்கின்றது. இந்த உலகமே அதனை வரவேற்கின்றது. பூமித்தாய் வாஞ்சையுடன் தாங்குகின்றாள். மருத்துவர்கள் தாதிகள் முகம் மலர வரவேற்கின்றார்கள். அக்குழந்தையின் உடலை வருடும் இன்பமும் அக்குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும் இன்பமும் கவலைகளெல்லாம் பறந்தோடச் செய்யும். ஆனால் அக்குழந்தையைக் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஆண்டவன் தன்னகம் வரவேற்பதில்லை. 30 நாட்கள் காக்க வைத்தே தன்னிடம் அழைப்பார். அதுவும் அக்குழந்தையில் பிடித்திருக்கும் துடக்குக் கழிய வேண்டும். அதுமட்டுமல்ல இரத்த உறவுகள் யாவரும் கோயிலுக்குத் தூரத்தில் நிற்க வேண்டும். ஏனென்றால், எல்லோருக்கும் பிடித்திருக்கின்றது அத்துடக்கு. இவ்வாறு சலித்துக் கொள்பவர்கள் இன்று நம்மத்தியில் இருக்கின்றார்கள். 
                                                         
              தாயின் சுத்தமின்மை இதற்கும் பொருந்தும். தாயையும் பிள்ளையையும் பிரித்துக் கோயிலுக்குக் கொண்டு போக முடியாது. தாய் உடனடியாக சரியான மனநிலைக்கு வருவதற்கும் எழுந்து நடமாடுவதற்கும் நாளாகும். இவற்றைவிட குழந்தைக்கு இலகுவில் நோய்க்கிருமிகள் தொற்றிக்கொள்ளும். இதனால் இப் பச்சிளம் குழந்தை நோய்க்கு ஆளாகலாம். ஆனால், காலப்போக்கில் மெல்லமெல்ல தாய்ப்பாலிலிருந்து இக்குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுக் கொள்ளும். எனவே இக்குழந்தை உலகத்தோடு தன்னை இணைத்துக்கொள்ள நாட்கள் எடுக்கும். இதனாலேயே வெளியில் குழந்தைகளைக் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டது. வெளியிலிருந்து வீட்டிற்கு வருபவர்களும், வீட்டில் இருந்து வெளியில் செல்பவர்களும் ஆசையுடன் இக்குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுக்கும் போதும் வெளியில் இருந்து கொண்டுசேர்க்கும் நோய்க் கிருமிகள் இக்குழந்தையை வந்தடைவதுடன் இக்குழந்தைக்குப் பாதிப்பும் ஏற்படும்;. இந்தக் காரணத்தினாலேயே இவ்வீட்டில் இருப்பவர்களுக்கும் கட்டுப்பாடு விதித்து துடக்கு வீட்டுக்காரர் என்று பட்டமும் கொடுக்கப்படுகின்றது. 
                               

            இன்னும் ஒருவிடயம் ஒலியைக்கடத்துவதற்கு உதவும் குழந்தையின் செவிப்பறை மென்சவ்வு மிகவும் மென்மையாக இருக்கும். கோயிலுக்குக் குழந்தையைக் கொண்டு செல்லும் போது ஆலயங்களில் ஒலிக்கும் மணிச்சத்தங்கள், மேளவாத்தியங்கள் போன்றவற்றிலிருந்து வரும் பலத்த ஒலியலைகள் குழந்தையில் செவிப்பறையைப் பழுதுபடுத்திவிடும். இக்காரணத்தினாலுமே கோயிலுக்கு குழந்தையைக் கொண்டுசெல்லும் வழக்கம் தடைப்படுத்தப்பட்டது.
                                     
                               இவ்வாறான காரணங்களினாலேயே அக்கால மக்கள் துடக்கு என்ற நாட்களைத் தடுப்பு நாட்களாகப் பயன்படுத்தினார்கள். 

    ஒரு வீட்டில் ஒருவர் இறந்தால், அவருடைய குடும்பத்தினர், இரத்த உறவினர்களுக்குத் துடக்கு.
    ஒருவர் ஒரு வீட்டில் இறந்துவிட்டால்,  அவ்வீட்டிலுள்ள அவருடைய குடும்பத்தாருக்கும். அவருடைய இரத்த உறவினர்களுக்கும் துடக்கு வந்துவிடுவதாகவும் அவர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாது என்பதுவும் வழக்கமாக இருக்கின்றது. அந்த வீட்டிற்கு வருபவர்கள் யாவரும் அவ்வீட்டில் நீரருந்தக் கூடாது என்பதுவும் அவ்வீட்டிற்கு வந்து சென்றால், தலைமுழுக வேண்டும் என்பதுவும் நியதியாக இருந்தது. வெளிநாட்டில் இருந்தால்க் கூட உறவினர்கள் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள். அவ் உறவினர்கள் வீட்டிற்குச் செல்பவர்கள் கூட குளித்துமுழுகியே அடுத்த கருமங்களைச் செய்வார்கள். உறவுகள் எங்கிருந்தாலும் அன்பும் பாசமும் ஒன்றுதான். அருகாமையிருந்து பெறும் பாசத்தைப்போல் சேய்மையிலிருந்து நாளும் எண்ணி ஏங்கும் பாசமும் வலிமைமிக்கதே. சொந்தங்கள் மீளாப்பிரிவில் சென்றுவிட்டால், அத்துயரை ஈடுசெய்யவொண்ணாக் கவலையில் கலந்திருக்கும் சொந்தங்கள் வாடித்துயருறுவதும் இயற்கையே. 
                         
        மனிதனின் உடலிலே சுரக்கப்படுகின்ற பெரமோன ( Pheromone)என்னும் ஒரு சுரப்பானது மனிதனுடைய வியர்வை அல்லது அவருடைய தனிப்பட்ட நறுமணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மையுள்ளது. இந்தத் திரவமே ஒருவருக்கொருவர் காதல் உணர்வு ஏற்படுவதற்கும் காம உணர்ச்சி ஏற்படுவதற்கும்,  காரணமாக அமைகின்றன. இத்திரவத்தை மூளையிலுள்ள அமிக்டாலா ( Amigdala) உணர்ந்து கொள்ளும்.
     இந்த அமிக்டாலாவானது மூளையின் உச்சியில் வலது இடது பக்கங்களில் அமைந்திருக்கின்றன. இது நாம் உணராமலேயே பெரமோனாவை( Pheromone) அறிந்து கொள்ளும். பிரிவுத்துயரில் இருக்கும் ஒருவருடைய உடலிலே ஏற்படும் நறுமண மாற்றத்தை அருகே இருப்பவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமிக்டாலா தொழிற்படும். இதனால்,   இவர்களை நாடிச்செல்பவர்களின் உணர்வுகளிலும்; சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவேதான் அவ்வீட்டிற்குச் செல்பவர்களும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பியவுடன் குளித்துமுழுகித் தத்தம் காரியங்களில் ஈடுபடுகின்றார்கள். குளிப்பதன் காரணம் யாதெனில், நீரானது ஒலியைக் கடத்தவல்லது, அதிலிருக்கும் மூலக்கூறுகள் எண்ண அலைகளையும் கடத்தக்கூடியது. இறந்தவரின் சம்பந்தமுள்ள உறவுகளின் எண்ண அலைகளினால் பாதிப்புற்றவர்களின் எண்ணங்களை நீரலை கொண்டு நீக்குவார்கள். நீக்கும் சக்தியும் நீருக்க உண்டு. அதனாலேயே செப்புப் பாத்திரத்தில் நீர் எடுத்து மந்திரங்களை எமது சுவாமிமார் ஓதிக்கொடுக்கின்றார்கள். நீருக்குள்ள சக்தியே அது. அத்துடன் செப்புப் பாத்திரம் மின்னைக்கடத்தும் அல்லவா. நாம் நீரில் கூறும் சொற்கள் வலிமைமிக்கவை. எனவே தான் நீரால் தமக்குள்ளாய் நிரம்பியிருக்கும் கவலையலைகளைக் கழுவித் துடைக்கின்றார்கள். 
     
                                          அடுத்து இந்தத் துடக்கு நீங்குவதற்கு 30 நாள்கள் கடக்க வேண்டும் என்னும் விடயத்திற்கு வருகின்றேன். எம்மவர்கள் சந்திரனின் வளர்ச்சி 14 நாட்கள் தேய்வு 14 நாட்கள் என்னும் 28 நாள்க் கணக்கையே எல்லாவற்றிற்கும் வைத்திருக்கின்றார்கள். அதனாலேயே அது 31 நாள்கள் ஆகியது.  இதில் பொற்கொல்லர், பிராமணர் போன்றோர்க்கு 16 நாட்களில் தொடக்குக் கழிப்பார்கள். இவர்கள் கோயில்களில் பூசை செய்பவர்கள். இது மனிதனால், காலம்காலமாகக் கொண்டுவரப்பட்ட வழக்கம். இவர்கள் ஒருநிலைப்படுத்தும் பயிற்சி மூலம் தாமாகவே தம்மை கட்டுப்படுத்தும் தன்மையைப் பெற்றிருப்பார்கள். இதனால் மிகக் குறுகிய காலப்பகுதியில் மீண்டும் வாழ்வியலுக்குள் தம்மை ஈடுபடுத்தும் தன்மை இவர்களுக்குள் இருக்கின்றது. இதனாலேயே இவர்கள் குறைந்த நாட்களில் துடக்கு நீங்குபவர்களாகக் கருதப்படுகின்றார்கள். தம்மைக்கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமது மனநிலையில் உடனடித் திருத்தத்தைக் கொண்டுவர முடியாதவர்கள் எப்படி 16 நாட்களில் துடக்கு நீங்குபவர்களாக கருத முடியும். இதைவிடுத்து துடக்கு என்பது அவரவர் உடல் எண்ணங்களின் தொழிற்பாடே என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் எமக்கு இருந்துவிட்டாலே துடக்கு எம்மைவிட்டுத் தூரப் போய்விடும். புரியாத மந்திரங்களால் பலனளிக்காத  கிரியைகளால் நாம் என்ன பலனைப் பெறப் போகின்றோம் என்று நாம் புரிந்து கொள்வதால் மட்டுமே நாம் பலனைப் பெற்றுக் கொள்வோம். 

               ஏனென்ற கேள்வி கேட்காது விட்டால் 
               மடையன் நீயென்று ஆக்கிடும் உலகு
               ஆமென்று எதற்கும் தலையாட்டிவிட்டால்
               தலையில் ஏனிந்தமுளை இடம்பிடிக்க வேண்டும்

    வியாழன், 13 அக்டோபர், 2011

    தமிழர் கலாசாரத்தில் தாலி




    தாலி என்பது திருமணத்தின் போது மணவாளன் தன் உரிமைப் பெண்ணாக ஒரு பெண்ணை அடையாளப்படுத்த அணிகின்ற ஒரு சாதனமாகிய மாங்கல்யம் ஆகும். அதாவது தாலி என்பது ஒரு அடையாளச் சின்னமே. திருமணத்தின்போது ஒரு ஆண் பெண்ணுக்குக் கழுத்தில் அணிவிக்கும் ஒரு அணிகலனாகும். தலைநிமிர்ந்து வரும் ஒரு ஆடவன் தாலி அணிந்த பெண்ணைக் காணும்போது இவள் திருமணமான ஒரு பெண் என்று தன்னை விலத்திக் கொள்வான். 

    இந்த வகையிலேயே மெட்டி என்னும் ஒரு அணிகலன் ஆண்கள் கால்களில் அணியப்பட்டது. தலைகுனிந்து வரும் பெண்கள், மெட்டி அணிந்த ஆண்களைக் கண்டு விலகிச் செல்வார்கள். ஆனால், அதில் இன்னுமொரு உண்மைக் காரணமும் உண்டு. மெட்டியிலுள்ள உலோகம் விஷத்தை நீக்கக்கூடியது தன்மையுள்ளது. காடுகளில் திரிகின்றபோது விஷ ஜந்துக்களின் தாக்கத்தில் இருந்து ஆண்களைப் பாதுகாக்க இம்மெட்டி அணியப்பட்டது. ஆனால், திருமணமான ஆண்களே விஷ ஜந்துகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்களா? என்பது கேள்வி. இதன் மறுமுனியில் சிந்தித்தால், அக்காலத்தில் சிறுபிராயத்திலேயே திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள் என்பதும் உண்மையே. சிறுவயதிலேயே குடும்பத்திற்காக உழைப்புத் தேடவேண்டிய பொறுப்பு ஆண்மகனுக்கு ஏற்பட்டது. ஆனால் இந்த மெட்டி, ஐரோப்பிய மண்ணுக்கு பொருத்தமில்லாதது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டியதே. பாதணி அணியாத பாதத்துடன் விஷ ஜந்துக்கள் நடமாடும் இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இங்கு ஏற்படப் போவதில்லை. ஐம்பொன் நகைகள் அணியப்படுவதும். செம்பு பயன்படுத்தவதும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். இதைவிட இம்மெட்டியானது தற்பொழுது திருமணநாளன்னு பெண்களுக்கே அணியப்படுகின்றது. மெட்டி அணியப்படும் விரலுக்கும் கர்ப்பப்பைக்கும் இடையே தொடர்பு இருப்பதனால், இம்மெட்டியானது கர்ப்பப்பைக்கு வலிமையைக் கொடுக்கின்றது என்றுஅறியப்பட்டிருக்கின்றது. இம்மெட்டி விடயம் இவ்வாறிருக்க தாலிக்குத் திரும்புவோம்.

                  ஆரம்ப காலத்தில் தான் விரும்பும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண்மகன் அன்பளிப்பாக மலரைக் கொடுத்தே பெண்ணை ஆண்மகன் ஆண்டு கொண்டான். இம்முறை குரங்குகளிடமும் இருக்கிறதாம். பிற்காலத்தில் பூமாலை அணிவித்தார்கள். இது ஒரு அன்பளிப்புப் பொருளாகவே கருதப்பட்டது. பின் மஞ்சள்கயிற்றில் அணிவிக்கப்பட்டது. மஞ்சளானது தோலுக்கு மென்மையையும், அழகையும் கொடுக்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. இதனால், மஞ்சள் கயிற்றில் தாலி அணிவிக்கப்பட்டது. முற்காலத்தில் வேட்டையாடி புலியைக் கொன்ற ஆடவன், அதன் பல்லை எடுத்துக் கழுத்தில் மாலையாக அணிவது வழக்கமாக இருந்தது. பின் திருமணத்தில் அதனைத் தன் மனைவிக்கு அணிவித்தான் என்றும் அறியப்படுகின்றது. அதனாலேயே மஞ்சளில் தாலி கட்டும்போது மஞ்சள் புலிப்பல் வடிவிலே எடுக்கப்படுகின்றது. தற்பொழுது அது பொற்தாலி என்னும் வடிவத்திற்குத் தாவிச் செல்வப்பெருமையை வெளிக்காட்டும் ஒரு சாதனமாக அணியப்படுகின்றது. இப்போது 25,30 பவுண்களிலும் பெண்ணின் எடைக்கு ஏற்பவும் அணியப்படுகின்றது.  தாலியைத் தாங்க முடியாத கழுத்துக்குனிய விழாக்களுக்கு மட்டும் அணியப்பட்டு மறுவேளை வீட்டு அலுமாரியில் அடைந்து கிடக்கின்றது.

                    திருமணநாளன்று சுபமுகூர்த்த நேரத்தில் கூறைச்சீலை உடுத்து மணமகனின் வலது பக்கத்திலே கிழக்கு நோக்கி மணமகள் அமர மணமகன் எழுந்து மணமகளின் வலதுபக்கம் வந்து வடக்குத் திசையை நோக்கி நின்று குருக்கள் மற்றும் பெரியோர் ஆசீர்வதித்துக் கொடுத்த மாங்கல்யத்தை எடுத்து, மாங்கல்யம் தந்துநாநே நமஜீவன ஹேதுநா கண்டே பத்தாமி ஸுபுகே சஞ்ஜிவசரதசம்' என்ற மந்திரத்தைக் குருக்கள் உச்சரிக்க, கெட்டிமேளம் முழங்க (அபசகுன வார்த்தைகள் எதுவும் காதில் கேட்காவண்ணம்) பெரியோர்கள் அர்ச்சதை, மலர்கள் தூவ மணமகன் மேற்குத் திசை திரும்பி நின்று மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவான்.
                                 
                   கணவன் வாழும்வரை மனைவி மார்பில் எப்பொழுதும் இத்தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தான் தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்ட வேண்டும். இவ்வாறு இத்தாலி அணியப்பட்ட நிலைமை மாறி இப்போது அழகுசாதனமாக்கப்பட்டு விட்டது. தமிழர் கலாசார சின்னத்துள் ஒன்றாகக் கருதப்படும். இத்தாலிக்கு ஒரு மகத்துவமும் உண்டு. மார்பிலே உயிரோட்டம் உள்ள இதயத்தில் இத்தாலி தட்டுப்பட்டுக் கொண்டு இருக்க, அது சீன மருத்துவ முறையான அக்யூபக்சர் முறைபோல் தொழிற்படுகின்றதாம். எனவே, தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்பது மாத்திரம் அன்றி பெண்ணுக்கு வலிமை என்றும் சொல்ல வேண்டும். கலாசார விழுமியங்கள் காரணம் இல்லாமல் தோன்றவில்லை. அது கால சூழலுக்கேற்ப கட்டிக் காக்க வேண்டியதும் அவசியமே.

    செவ்வாய், 4 அக்டோபர், 2011

    மணமகள் மாங்கல்யம்




    கொழுமை கொஞ்சும் கோமளமேனிக் 
    கோதை கொண்டாள் திருமணக்கோலம்
    கயல் இரண்டு களிநடம் புரியும் சாயலிலே
    காரிகை கவின்மிகு கண்கள்
    நித்திலமாய் நெற்றியிலே 
    கச்சிதமாய் ஒரு குங்குமப் பொட்டு
    வனப்பும் வாளிப்பும் வார்த்தெடுத்த ஆக்கை
    சிவப்பும் செம்மஞ்சள் படடும் சீர் உடுத்து 
    புனைபல புனைந்து அணிபல அணிந்து
    இட்ட அடிநோக எடுத்த அடி கொப்பளிக்க
    பட்டுவிரலாலே பல வண்ணச் சரமெடுத்து
    பக்கம் வந்தடைந்தாள் ஏந்திழையாள்
    பாதிவழித் துணை நாயகன் நாடி
    நறவம் அனைய குரலாள்
    நலங்கள் அனைத்தும் காக்கும்
    ககனம் வாழ் காதலனோ! எனக்
    கடைக்கண் பார்வை கணக்கெடுக்க
    அம்மி மிதித்தோர் அருந்ததி பார்த்து 
    அண்டம் ஆய பொறை அவணியில் காக்க
    சங்குக் கழுத்தில் தொங்கவோர்
    தங்கச் சரட்டை அங்கமாய் அணிந்து – தன்
    சொந்தச் சிறையில் பந்தலிட்டான்
    சொந்தப் பெயரில் திருமதி இட்டான்


    என்னால் எழுதப்பட்ட இக்கவிதை மெல்லிசை மன்னன் எம்.பி. பரமேஸ் அவர்களால் திருமணவீடுகளில் பாடப்படுகின்றது.




    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...