• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்
    இன்றைய சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
    இன்றைய சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

    சனி, 26 மார்ச், 2016

    பிரேமை

                       


                        

    மூளைக்குள்ளே பாய்கின்ற மின்சாரம் அதிவேகமாக தொழிற்படத் தொடங்குகின்றது. பதிந்து வைத்த ஒரு பகுதி மாத்திரம் அடிக்கடி பளிச்சிட்டுக் கொண்டிருக்கின்றது. அவள் கவனத்தைத் திசை திருப்ப வேறு நிகழ்ச்சிகளை முன் கொண்டு வருகின்றாள்.   ஆனால், அதுவோ அதிவேகமாக அப்பக்கமே இழுக்கின்றது. மூளைக்குள்ளேயே படுபோராட்டம். நினைவும் மறுப்பும் எதிர்த்து நின்று எகிறிப் பாய்கின்றன. காண்போர் காதுகளுக்கெல்லாம் இதுபற்றிய பேச்சே தொடர்கின்றது. இருளிலே அவ்வுருவம் இருப்பது போல் உணர்கின்றாள். தனிமையில் அவள் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிப்பது போல் உணர்கின்றாள். நடந்த சம்பவங்களுக்கும் நடக்கின்ற சம்பவங்களுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கின்றாள். தான் உயிர்நீப்பின் மரணச்சடங்குகள் என் உடலுக்கு வேண்டாம். என் உடலை மருத்துவமனைக்கு ஒப்படைத்து விடுங்கள் என்று வீட்டிலுள்ளோருக்கு கட்டளையிடுகின்றாள். என் உயிர் நீப்பின் என் உடலுக்கு எரியூட்ட வேண்டாம். காக்கைக்கும் புழுவுக்கும் என் உடல் உணவாகட்டும் என்று கூறிய வள்ளுவர் வாக்குப் போல் உத்தரவிடுகின்றாள். 

             இவள் விபரீத நடவடிக்கைகள் கண்ட கணவன் வைத்தியரிடம் அவளை அழைத்துச் செல்ல மனஅழுத்தம் என மருத்துவர் பதிலிறுக்கின்றார். மனமாற்ற நடவடிக்கை எடுக்காது விட்டால், விபரீதத்தை எதிர்நோக்க வேண்டிவரும் என்று மருத்துவரும் அறிவுறுத்துகின்றார். ஏனென்றால், அவள் வாழவேண்டும். அவளால் உருவாக வேண்டிய ஒரு உலகம் இருக்கின்றது. அவள் உதவியை நாடும் உள்ளங்கள் இருக்கின்றன. இவ்வாறுதான் துணையை இழந்த உள்ளங்கள் தனிமைக் கொலையைச் செய்கின்ற ஐரோப்பிய நாடுகளில் தவிக்கின்றன. மறதிநோயும், மயக்கநோயும், மனநிலை தடுமாறும் மந்த நோயும் ஆட்டிப் படைக்கின்றன. 

             இவள் நிலை பலருக்கு நடிப்பு, இவளுக்குத் துடிப்பு, எல்லோரும் ஒரே மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. வளர்ப்பு முறையாலும் வளர்ந்த சூழ்நிலையாலும் கல் மனம் கொண்டார் எதையும் தாங்கும் இரும்பு போலாவர்.  பலர் கூறும் வார்த்தைகளும் ஒரு காதால் வந்து மறு காதல் மறைந்துவிடும். ஆனால், இளகிய மனம் தன் நிலையை இழந்து விடும். கடமையுள்ளவர்கள் வெளியே செல்ல வீட்டில் தனித்திருக்கும் பெண்கள் மனநிலை பாதிக்கப்படுவது இயற்கை. இதனாலேயே ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் இறந்தால், குடும்பத்துடன் இணைந்து ஒப்பாரி வைப்பதை விட்டுவிட்டு அக்குடும்பத்தைச் சிரிக்க வைப்பதற்காக இருக்கும் இடம் விட்டு உறவினர்கள் அவர்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். பல்வேறுபட்ட மூளைப்பதிவுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்துவார்கள். இது எமது கலாச்சாரம் இல்லையென்று திரும்பத்திரும்ப அதேசம்பவத்தை எடுத்துரைத்து 1 வருடம் எந்தவித நிகழ்வுகளுக்கும் சம்பந்தப்பட்டவர் சமூகமளிக்கக் கூடாது என்று கட்டளையிட்டு, சிரித்துவிட்டால், சிரிப்பதைப் பாருங்கள். கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் என்று மறைவாகப் பேசி, மனக்கொலை செய்யும் எமது சமுதாயம் என்றுதான் வெளிச்சம் காணப் போகின்றதோ. 

             வெள்ளைக்காரர் போல் நடையும் உடையும் மாத்திரம் போதாது. நல்பழக்கவழக்கங்களும் கற்றுக் கொள்ள வேண்டும், மனிதத் தன்மையையும் மனம் கொள்ள வேண்டும். 

    திங்கள், 26 ஜனவரி, 2015

    இன்றைய சிந்தனை

                                         


                                                              animierte-blumen-bilder-110

    சமுகத்திற்காய் தன்னை இழப்பதும் 
    கடமையில் கருத்தாவதும் 
    ஆலயம் தொழுவதிலும் மேலான தவம் 


    சந்தேகம் 

          animierte-babys-bilder-102

    1. கல்வியில் சந்தேகம் கொள்பவன் நிறைவான அறிவு பெறுவான். வாழ்வில் சந்தேகம் கொள்பவன் வாழ்வை இழப்பான்.
    2. பிள்ளைகளிடம் இடும் சந்தேகம் என்னும் முதலீட்டின் பயன் அவர்களிடம் இருந்து பெரும் வெறுப்பு என்னும் நட்டமே 
    3. நம்பிக்கை கொண்டு வளர்க்கும் பிள்ளை முன்னேற்றம் காணும்  சந்தேகம் கொண்டு வளர்க்கும் பிள்ளை சலிப்புடன் வாழும்.
    4. பெற்ற பிள்ளையிடம் கொள்ளும் சந்தேகம், எமக்கு சஞ்சலத்தையும் அவர்களுக்கு சங்கடத்தையும் தோற்றுவிக்கும் 

                                                                  ஆழ்ந்த அன்பு     

                                     ஆழ்ந்த அன்பில்   வீழ்ந்த மனத்தை 
                                     ஆட்டிப் படைக்கும் சோதனை -  அதை 
                                     மீட்டிப் பார்க்க விரும்பாது மனம் 
                                    மீண்டும் மீண்டும் ஆழ்ந்த அன்பில் வீழும் 

                                         animierte-babys-bilder-124

    சனி, 20 டிசம்பர், 2014

    சிந்திக்கச் சிலவரிகள்





    • ஒருவர் செய்த ஒரு நன்மையை நினைத்து, தீமைகள் அனைத்தையும்         மறக்கும் பண்பே மனிதனை பிறர் மனதில் நிறுத்தும் உயரிய மந்திரம். 

    • கவலைகளை துடைத்தெறிந்து வாழ்நாளெல்லாம் சிரித்திருக்கும் கலையை கற்கும் மனிதன் உலக இன்பத்தை பெறும் பாக்கியசாலி ஆவான்.

    • அடுத்தவர் பழிப்பார் என்று எண்ணி மனதுக்குள் தோன்றும் உண்மைகளை மறைக்கத் தெரிந்த மனிதன் சமூகத்தை பின்நோக்கிய பாதைக்கு விட்டுச் செல்கின்றான். 

    • சொந்தங்கள், சுற்றத்தினர் என்று குறுகிய வட்டத்துக்குள் வாழும் மனிதன் சுயநலவாதப் புழுவாகின்றான். சாதனை படைக்கத் துடிக்கும் மனிதன் சரித்திர நாயகனாகின்றான். 

    • ஒரு மனிதன் சேர்க்கும் உயரிய சொத்து உறவுகளின் பாசம். 

    • மனிதனின்  அற்புத உறுப்பு மூளை. அதைச் சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாதவன் அவ்வுறுப்பைப் பெற்றிருக்கும் மூடன்.

    • எல்லோரையும் திருப்திப்படுத்தி எல்லோருக்கும் நல்லவராய் வாழ்வது என்பது முடியாத காரியம்.

    • தன்னம்பிக்கையும், ஆசையும்  சரியான முறையில் அமையாது விட்டால், தீயவழிக்கே மனிதனைக் கொண்டு செல்லும்.

    • எதுவுமே எமக்குச் சொந்தமாவதில்லை. உயிருடன் இருக்கும் வரை அநுபவிப்போம். இல்லாது போனால், சொந்தமில்லை என நினைத்திருப்போம்.

    • இன்பமும் துன்பமும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப அமைகின்றன. சந்தர்ப்பம் வந்து அமைவது சந்திக்கும் மனிதர்களையும் சம்பவங்களையும் பொறுத்தது.

    • வாழும்போது யாருடைய நற்குணங்களையும் பிறர் புரிந்து கொள்வதில்லை. இறப்பின் பின்னே நினைத்துத் துன்புறுவர்.

    • சுடரின் வீழ்ச்சியும், பகலின் மறைவும், உறக்கத்தின் நிகழ்வும், இடையிடை துன்பமும் கவலையும் உலகின் நிலையாமையை உணர்த்தும்.

                                                                 ---- கௌசி -------




    திங்கள், 15 செப்டம்பர், 2014

    இன்றைய சிந்தனை (15.09.2014)



    படித்தறியும் அறிவை விட பட்டு  அறியும் அனுபவம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விடும். இதனாலேயே காட்சிப்படுத்தும் கல்வி முறை வழக்கத்தில் வந்தது. 

    ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு நூலகமே அழிகிறது எனலாம். அனுபவம் தரும் பாடம் அனுபவத்ஹின் மூலமே பெற முடியும்.

    வழக்கறிஞனால் சாட்சிகளின் மூலம் வழக்கைத் திசை திருப்ப முடியும். எழுத்தாளனால் சான்றுகளின் மூலம் வரலாற்றைப் புரட்டிப் போடா முடியும் 

    சனி, 13 செப்டம்பர், 2014

    அடையாளப்படுத்தல்



    வாழ்வின் அத்தியாயங்கள் ஒருநாள் மறைந்துபோம். வாழ்வின் தடயங்கள் ஒருநாள் அழிந்துபோம். வாழ்க்கையின் ஆதாரங்கள் நிலைப்பது கலைஞன் வாழ்க்கையில் மட்டுமே. 

               பெற்ற பிள்ளைகளும் பரம்பரையை மறந்துபோம். தந்தையின் தந்தை பெயர் வரை பரம்பரை ஞாபகங்கள் நிலைத்திருக்கும் அதன்பின் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளமே இல்லாமல் போய்விடும். வாழ்ந்தே ஆகவேண்டுமென வாழ்க்கை சொல்கிறது. வாழ்க்கையின் ஆசைகளும் கூடிக்கொண்டே போகின்றது. தடுத்து நிறுத்த எண்ணுகையில் புதிதாய் ஒன்று பிறப்பெடுக்கின்றது. புதுமையாகத்தான் இருக்கின்றது. ஆனால், புரியாமலே போகின்றது. பிறப்பவர் யாவரும் ஞானிகள் இல்லை. பிறந்தவர் யாவரும் மேதாவிகளும் இல்லை. விஞ்ஞானிகளும் இல்லை. அடையாளப்படுத்தல் தேவை என்றால், அடையாளம் தேடவேண்டும். அடையாளப்படுத்தல் என்பது எம்மால் இயன்ற வரை எம்மை நாமே அடையாளப்படுத்துவோம். அப்போது நாமில்லா உலகில் நம்மைப் பற்றிப் பேசுவார் உலகில் பலர். 

    வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

    மாற்றம் ஒன்றே மாறாதது (இன்றைய சிந்தனை)



    வானத்தில் வட்டமிடும் பட்டாம் பூச்சியல்ல நாம். அந்தரத்தில் சுற்றிச்சுழன்று தொங்கிக் கொண்டிருக்கும் சுகவாசிகள் நாம். ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா ஆனாலும் உண்மை அதுதானே. கோடிக்கணக்கான கோள்கள் அதில் நாம் அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றோம். ஆடுவது தெரியாது ஆட்டம் போடுகின்றோம். தங்கியிருக்கும் இத் தரிப்பிடமோ, இல்லை தொங்கிக் கொண்டிருக்கும் இத் தரிப்பிடமோ ஓர்நாள் விடுபட்டால், விடுபடுவதை அகக்கண்ணால் பாருங்கள். பரசூட் இல்லாமலே அழகாகப் பறந்து கொண்டிருப்போம். சுவாசமின்றி தத்தளிப்போம். உயிர் போவதே தெரியாது மறைந்து போவோம். நினைத்துப் பார்த்தால், பயமாக இருக்கின்றதல்லவா. நினைக்;கின்றோமா? இதுபோல்த்தான் வாழ்க்கை. நிலையில்லை என்று தெரிந்து கொண்டும், நம் வாழ்வு நிலைப்பதில்லை என்று புரிந்து கொண்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவை தேடி ஓடுகின்றோம் அல்லவா! இதுவே வாழ்வின் அதிசயம். 
                     
                   சிலவேளை வாழ்வு தென்றலாய் தாலாட்டும். மகிழ்ச்சியை அள்ளித் தரும். அவ்வேளை இவ்வாழ்வு நிலைக்க வேண்டுமென்று ஆசையில் நீச்சலடிப்போம். ஆடாத ஆட்டமெல்லாம் போடுவோம். இதே மகிழ்வு ஒருநாள் துன்பத்தைத் தந்துவிட்டால், பொல்லாத வாழ்விது வாழத்தான் வேண்டுமா? ஏதாவது நிகழமாட்டாதா! இவ்வாழ்வே முடியமாட்டாதா!  என்று மனமுடைந்து ஓரிடத்தில் அமர்ந்துவிடுவோம். துடிப்போடு துள்ளலிட்ட உடலானது நோயால் ஓர்நாள் துவண்டுவிட்டால், வெறுப்புடனே வேதனையில் ஆண்டவனை நோக்கி பார்வையைத் திருப்புவோம். 

               இன்று நம்பிக் கொள்பவை நாளை நாம் நம்ப மறுப்போம். 16ம் நூற்றாண்டுவரை பூமி உருண்டை என்று யாரும் நம்பவில்லையே. தட்டையானதென்றே நம்பிக்கொண்டிருந்தார்கள். மேருமலையை நடுவில் காண்ட தட்டையான பூமியென நம்பப்பட்ட பூமி உருண்டையென மாறியது எப்படி? ஹிப்பாகிரட்டீஸ், அரிஸ்டோட்டில் கூறவில்லையானால், 1400 இல் மெக்கலன் நிரூபித்துக் காட்டவில்லையானால், இன்னும் பூமி தட்டையானதே. 

              நம்பிக்கையும் ஓர் நாள் இழக்கநேரிடும். எவையுமே ஓர்நாள் மாற்றம் பெறும். குழந்தையாய்க் கன்னியாய்த் தாயாய் பாட்டியாய் பருவங்கள் மாறும். ஏழையாய் செல்வந்தனாய் அல்லது செல்வந்தன் ஏழையாய் தராதரங்கள் மாறும். கோடையாய் மாரியாய் காலங்கள் மாறும். சொந்தவீடு வாடகை வீடாய், வாடகைவீடு சொந்தவீடாய் உரிமைகள் மாறும். தாய்க்கு மகனாய் மனைவிக்கு கணவனாய் சொந்தங்கள் மாறும். நண்பர்கள் மாறும்.  பேனாய் தட்டச்சாய், புத்தகம் கணனித் திரையாய், தொலைபேசி  இணையமாய் தொழில்நுட்பம் மாறும். ஆசைகள் மாறும், அர்ப்பணங்கள் மாறும், தேடல்கள் மாறும், கலாச்சாரங்கள் மாறும். அனைத்துமே மாறும். அதுவே மாற்றம் ஒன்றே மாறாதது.  
                      
                  இவ்வாறான மாற்றங்கள் தெளிவாகத் தெரியும் இந்தப் புலம்பெயர்வில் மக்கள் மனங்களின் ஆசைகளால் விழைகின்ற கலாச்சார மாறுபாடுகளும் மனங்களின் ஆச்சரியங்களும் அறியவே என் வாழ்வியல் இலக்கியம் கணனி உலகில் வலம் வருகின்றது. அறிய விரும்புவோம். அதன் பக்கப் பார்வையைச் செலுத்துங்கள். 

    சனி, 22 மார்ச், 2014

    03.03.2014 Rosen Montag



    நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல்  03.03.2014  Rosen Montag அன்று நான் பெற்றேன் இன்பம். அதைப் பகிர்கின்றேன் உங்கள் பக்கம்.  
              வருடம் ஓர் நாள் தம் கவலைகள் மறந்து ஜெர்மானியர் களித்திருக்கும் நாள். விலங்குகளாய், பறவைகளாய், தாம் விரும்பிய வகையில் தமது உருவங்களை மாற்றி அன்றைய தினம் காட்சி அளிப்பார்கள்.

    குடியும் கூத்தும் கும்மாளமுமாய் அன்றைய பொழுது கழியும்.

    பாதுகாப்புக்காக பொலிஸ் வாகனங்களும் ஆங்காங்கே காணப்படும். வாகனத்திலும் நடந்து கொண்டும் வருவோர் இனிப்புப்பண்டங்கள், சிற்சில பொருட்களை வீசி எறிந்து கொண்டுவர சிறுவர்கள் பெரியவர்கள் ஓடியோடிப் பொறுக்கி எடுப்பார்கள் குடைகள் தொப்பிகளை மேல் நோக்கிப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் . அப்போது வீசி எரியும் பொருட்கள் அவற்றினுள் வந்து விழும். பார்ப்பதற்கு அற்புதமாகவும் மகிழ்ச்சியாகவும் இப்பொழுது அமைந்து கொள்ளும்.

         
                       நாமோ கலாச்சாரப் போர்வைக்குள் நுழைந்து மனதுக்குள் மறைந்துள்ள ஆசைகளை துடிப்புகளை மறந்து எம்மவர் துடிப்போடு துள்ளித் திரிய வேண்டிய காலங்களில் கூட துவண்டு கிடப்பது எதனால்? அவர் என்ன சொல்வார் இவர் என்ன சொல்வார்? என்னும் எண்ணப்போக்கே. வாழுகின்ற வாழ்க்கை ஒன்றே. இப்பூமியில் எம் பெற்றோர் இன்பத்தின் வழி நாம் வந்து பிறந்துவிட்டோம். செல்களின் தொகுப்பில் வடிவம் பெற்றோம். சில காலங்களே வாழ்கின்றோம். பின் மண்ணோடு மண்ணாகி மறைந்து போகின்றோம். பார்வைக்குத் தூரச் செல்லும் வாகனம்போல் மெல்ல மெல்ல எங்கள் பற்றிய நினைவுகள் எங்களைச் சார்ந்தவர்களை விட்டு மறைந்து விடுகின்றது. மறுபிறப்பு எமக்கு உண்டு என்னும் நம்பிக்கை அற்ற ஒரு எண்ணத்துடன் வேறு ஒரு வடிவமாகவும் வாழ்வாகவும் வரப்போகின்ர ஒரு வாழை எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வை அடக்கி வாழ்கின்றோம். தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ எம்மவர் இப்படித்தான் வாழவேண்டும் என்பது விதியாகிப் போனது.



                      தினம் ஒன்று எம்மை எல்லாம் மறந்து குழந்தைகளின் குதூகலத்தோடு நாமும் குழந்தைகளாய் மாறி ஒரு நாளை களிப்பதற்குக் கூட நாம் தயங்குகின்றோம். ஆனால் வெள்ளையர்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள். அதனால் நீண்ட காலம் வாழும் பாக்கியம் பெற்றவர்கள். எம்மைப்போல் வரப்போகும் துன்பம் கருதி இன்றே கவலையில் ஆழ்ந்திருக்கும் கவலை அவர்களுக்கு இல்லை. திட்டமிட்டு தம் வாழ்க்கையை சீராகக் கொண்டு செல்கின்றார்கள். வருடம் குறைந்தது ஒரு தடவையாவது சுற்றுலா சுற்றி வந்து ஒரு வருட மன அழுத்தத்தை நீக்கி விடுகின்றனர். அதற்கான திட்டத்தை வருட ஆரம்பத்திலேயே போட்டுவிடுகின்றனர்.


                       இத்தினத்தில் நான் கண்ட இன்பத்தை உங்களுடன் இப்பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன். இந்த வீடியோவைப் பாருங்கள். அன்றைய தினம் என் கருவி படம்பிடித்தா காட்சி 




    புதன், 1 ஜனவரி, 2014

    புத்தாண்டில் உதிதெழுந்த நினைவுகள்





    வண்ண வண்ண வேடிக்கைகள், வகைவகையாய் வாழ்த்தொலிகள், எண்ணமெல்லாம் நல்லுணர்வு, ஏற்றம் பெறவே முன்னெடுப்பு. வருடா வருடம் வந்துதிக்கும் இந்நாளில் மாறாத வரவேற்பு,

                   பூலோகம் சுழல்கிறது புதுவருடம் காண்கிறது. பிறந்தநாள் கொண்டாட்டமென தன் சேவையதை பூமியும்தான் மறப்பதில்லை. தன் போக்கையுமே மாற்றுவதில்லை. யுகம் யுகமாய் கடந்து செல்லும் தன் வாழ்நாளில்  தனக்கு மேலும் தனக்குக்குள்ளும் நடப்பது எதுவும் அறிந்ததுவும் சுழன்றதில்லை. மூளை இழந்த மனிதனாய் அது வாழ்தலினாலோ முன்வைக்கும் காலை பின்வைக்காது பிறர் நற்பேச்சுக்கு இடம் தராது. வாழ்வென்பது நிலை இல்லை என்று கூட உணராது தன் போக்கில் செல்கிறது.

           இருநூறு கோடி ஆண்டுகள் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியிலே முதல் உயிர் கிட்டத்தட்ட ஐந்து கோடி ஆண்டுகளே தோன்றியதாக விஞ்ஞானம் சொல்கிறது. இடைப்பட்ட ஆண்டுகளில் வெறுமையாகக் கிடந்த கிடந்த பூமியிலே எதுவுமே இருந்ததில்லை. கிட்டத்தட்ட முப்பத்தைந்து இலட்சம் ஆண்டுகளே மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான். வளைந்த முள்ளந்தண்டை  நிமிர்த்தினான், இணைந்தே வளர்ந்த வாலை இழந்தான். இன்று பூமியை தன் தேவைக்காய் முயன்று முயன்று தனக்காய் பயன்படுத்துகின்றான். மனிதனை நிறுத்தச் சொன்னால், நிறுத்தப் போவது இல்லை. நிறுத்தினாலும் அவன் மனிதன் இல்லை. மனிதன் தோன்றியதாலேயே பூமியும் பெருமை அடைகின்றது. பூமியின் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் வாழ்காலம் சிறிதே. அவன் சேவைகளோ அளப்பெரிதே. புதுமைகள் காணும் மனிதனை வாழ்த்தி, மனிதன் மற்றவர் மனம் போல் வாழும் வழியையும் ஒருமுறை சிந்திக்கத் துணிந்தேன்.

    குழந்தை:

    வெற்றுக் கடதாசி, பக்கம் இருந்து கிறுக்குபவர்கள் கீறல்களே பதியும் கடதாசி. அக்கீறல்களே அதன் எதிர்காலம். அதனால் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பேசத்தெரியாத வாழத்தெரியாத அவ் எதிர்கால மாமனிதனுக்காய் அவதானம் எடுங்கள்.

    பெற்றோர், கணவன் மனைவி:

    தங்கள் வாழ்க்கைக்காக வந்து பிறந்த உங்கள் மகிழ்ச்சியானது தம் சொந்த மகிழ்ச்சியை கொண்டாட வழிவிட்டு, வழிக்காட்டி,  வழிநோக்குங்கள். அவர்தம் மனவிருட்சம் மகிழ் விருட்ஷமாய் இவ்வாண்டு சிறக்கட்டும்.

                  ஆண்களே! உங்களை நம்பி தங்கள் சொந்த விருப்புகள் விட்டு, என் குடும்பம் என் கணவன் என் பிள்ளை என வாழவந்த மனைவியின் மனம் அறிந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.  அவள் எதிர்பார்ப்புக்களை முடிந்தவரை முடித்து வைக்க முயற்சி எடுங்கள். திருமணத்தின் முன் அவள் இருந்த நிலை மறக்க திருமணத்தின் பின் அவள் இருக்கும் நிலையை மாற்றி அமையுங்கள். கணவன் ஆக நீங்கள்  நடந்து கொள்ளும் முறையிலேயே மனைவி எண்ணப்போக்கு மாற்றம் காணும்.  

                  அதேபோல் தனக்காக ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது என ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து நடந்து கொள்ள சந்தர்ப்பம் அமைவது திருமணத்தின் பின்புதான். எதிர்கால சமுதாயத்தின் ஒரு துளி என் கையிலும் இருக்கின்றது என்னும் எண்ணம் கொண்டு அவதானத்துடன் பொறுமையைத்  துணைக்கொண்டு இல்லத்தின் ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் அச்சாணியாய் நடமாட வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறமையும் ஒவ்வொரு பலவீனமும் இருக்கின்றது. அனைத்து ஆண்களின் திறமையும் என் கணவனிடம் இருக்க வேண்டும். அனைத்து ஆண்களின் பலவீனத்தில் ஒன்று கூட என் கணவனிடம் இருக்கக் கூடாது என்று நினைத்தல் கூடாது. விட்டுக்கொடுத்தல் என்னும் பண்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் . கணவன் குறையை மற்றவர்களிடம் பறைசாற்றக் கூடாது. சின்னச் சின்ன அன்பளிப்புக்கள் அன்புக்குத் துணை ஆகின்றது. கணவனுக்கு நிகரான இடம் பிடிக்க பெண்களே நீங்கள் நடந்துகொள்ளும் முறையைப் பொறுத்தே அமைகின்றது. இவ்வருடம் குடும்பங்களில் அமைதியும் அன்பும் நிறைந் திருக்கட்டும். அதன் மூலம் அகிலம் சிறக்கட்டும். 

    சகோதரர்கள்:

    ஒரு வயிற்றில் பூத்த மலர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக கணனித் துணை இன்றி வீட்டில் கலந்துரையாடுங்கள். உங்கள் பெற்றோர் ஏங்கும் எதிர்பார்க்கும் அன்பைத்தாருங்கள். உங்கள் வீட்டில் இருந்து உலகு வியக்கும் சாதனை ஒன்றை உருவாக முயற்சி எடுங்கள் அதன் மூலம் இவ் ஆண்டு நல்லாண்டாய் அமையட்டும்.

    நண்பர்கள் :

    உன்னத உறவென்பார், உதவிடும் துணை என்பார் உலகமே மெச்சிடும் தொடர்பாடல் மனிதப்பிறவி என்பார். ஆனால், நீதான் என் நண்பேன்டா என்று சொல்லி மறுமுனையில் நண்பன் சிறப்பை மனதுள் புதைத்துப் புழுங்குவது, அவன் உயர்வை சகிக்க முடியாது போட்டி போடுவது, போன்ற எண்ணங்கள் இன்றி ஒற்றுமையாய் வாழப் பழகிக்கொண்டால் நீங்கள் இணைந்த முயற்சிகள் உலகின் கண்ணைத் திறக்கும் உயர் திறமை இவ்வருடத்தில் புலப்படும்.

    எழுத்தாளர்கள்:

    எழுத்தென்னும் ஆயுதத்தைத் தாங்கி உலகென்னும் உயர் சிற்பம் உருவாக்கிடும் கலைஞன். தனக்காக வாழாது தன் சமூகத்திற்காக எழுத்தைப் பயன்படுத்துபவன். எழுத்தாளர்களே ! நடந்ததைத் திரும்பிப்பாருங்கள். நன்றி கூறுங்கள்.

    பிரபல்யம் வேண்டி உங்களை விளங்கச் செய்ய மனட்சாட்சியை இழக்க வேண்டாம். மனதில் ஒன்றை நினைத்து புகழுக்காக வேறொன்று பேச வேண்டாம். வாழும் வாழ்க்கை ஒன்றாகவும் எழுதும் வாக்கு ஒன்றாகவும் இருக்க வேண்டாம். புரிந்ததைக் கொண்டு புரியும் வகையில் பிறருக்குப் புரியச் சொல்லுங்கள். எழுத்தில் வடிப்பது எதுவோ அது அனைத்துப் பக்கமும் ஆழ்ந்து பார்த்த  வரிகளாய் இருக்கட்டும். கற்பனைக்கு இடம் கொடுங்கள் காட்சியை நிஜமாக்குங்கள். மனதார வாழ்த்துங்கள். மறைவாக இகழாதீர்கள். உங்கள் எழுத்தை மதிப்பவர் தமக்கு, நீங்களும் மதிப்பை அளியுங்கள். வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள். இவ்வருடம் உலகு நன்மைக்காய் உங்கள் படைப்புக்கள் விரியட்டும். உலகம் உய்யட்டும்,

    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்





    வெள்ளி, 15 நவம்பர், 2013

    சிந்திக்க வைத்த ஒரு சம்பவம்

        Photo Sharing

     

    சிந்தித்துப் பார்த்தேன். இதுகூட எனக்குத் தவறாகத் தெரியவில்லை. பாசத்தை வெளிக்காட்டி நம்மைநாமே வருத்தி வெளிவேஷம் போடுவதால் ஆவதென்ன? என்னைச் சிந்திக்க வைத்த ஒரு சம்பவம்.
    வழமையாக நானும் எனது ஜேர்மனிய நண்பியும் கிழமையில் இரண்டு முறை ஜிம்மில் சந்திப்போம்.  இரண்டு நாட்களும் இவ்விரண்டு courses செய்து விட்டு சிறிது அளவளாவி விட்டுத் திரும்புவோம். வழமையாக திங்கள் அன்று வரவேண்டிய எனது நண்பி வரவில்லை. திரும்பவும திங்கள் வராததன் காரணத்தை புதனன்று வினாவினேன். மருத்துவப் பரிசோதனை மூலம் தனது தந்தை புற்றுநோய் கண்டுள்ள விபரம் அறிந்து, அதற்காக மருத்துவசாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அங்கு சென்று வந்ததாகக் கூறினார். அவர் இரண்டு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு மீண்டு, வயோதிபர் இல்லத்தில் தற்போது தங்கியிருக்கும் நல்ல செய்தியையும் பின் ஒருமுறை பகிர்ந்து கொண்டார். சில நாட்களின் பின் மீண்டும் ஒரு திங்கள் வரவில்லை. புதனன்று ஒரு உழரசளந இற்கு வந்தபின் இரண்டாவதான Dance course இற்கு நிற்காமல் வீட்டிற்குச் செல்வதற்குப் புறப்பட்டார். தொடக்கத்தில் அவருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இடையில் போகும்போது என்னருகே வந்து என்னை ஆரத் தழுவிக்கொண்டார்.  கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்தபடி தனது தந்தை ஞாயிறு அன்று காலமாகிவிட்டதாகவும் நாளை வியாழன் இறுதிஅஞ்சலி செய்து அடக்கம் செய்யவிருப்பதாகவும் முதலாவது Course பறவாயில்லை. Dance course  என்னால் செய்யமுடியாது என்று கூறி விடைபெற்றார். அவர் தனது தந்தையில் வைத்திருந்த பாசத்தை நான் நன்கு அறிவேன்.
                                      இதுவே சம்பவம்.  இதைக் கேட்டபோது மனம் ஏங்கிப் போனேன். தந்தை அங்கே உயிரற்ற உடலுடன் உறங்கிக் கொண்டிருக்கின்றார். இவர் ஜிம்மிற்கு வருகின்றார். தந்தை இறந்து மூன்றாவது நாள் எங்களால் எப்படி முடியும்? வியப்பாகவே இருந்தது. இந்த சமயத்தில் தந்தையின் மரணச்சடங்கு முடிந்து அடுத்ததினமே தாயாரை Golf விளையாட அழைத்துச் சென்ற எனது இன்னுமொரு நண்பரை நினைத்துப் பார்த்தேன். இது சரியா தவறா என்ற சிந்தனையில் விரிகின்றது மனம்.
                 
                                             எனது நண்பி கூறினார். கணவன், பிள்ளைகள் வேலை, பாடசாலை என்று போய்விடுவார்கள். வீட்டில் தனியே இருக்கும் போது தந்தையின் ஞாபகமே வருகின்றது. முடியவில்லை. அதனால், இங்கு வந்தேன் என்றார். இதில் என்ன தவறு இருக்கின்றது. ''ஆண்டாண்டு கோடி அழுது புலம்பினாலும் மாண்டார் வருவரோ இம்மாநிலத்தே'' கூடி இருந்து நடந்ததையே நினைவுபடுத்தி வாழுகின்றவர்களையும் நோயாளியாக்குதல் மடைமையல்லவா. கவலையை நீக்குவதற்குக் கூட இருப்போர் முயற்சிக்கவேண்டும். அதனாலேயே தனியே இருந்து தாய் கலங்குவார் என்று தாயை Golf விளையாட மகன் அழைத்துச் சென்றிருக்கின்றார். எனது நண்பியோ மனதைத் தேற்ற இங்கு வந்திருக்கின்றார் என்று ஆறுதல் அடைந்தேன்.
                 
                                        எமது கலாச்சாரத்தில் இறந்தவீட்டில் இருப்போர் சமைப்பதற்குக் கூட இடம்விடாது. வருவோர் உணவைச் சமைத்துக் கொண்டு வருவார்கள். வந்திருந்து நடந்ததையே திரும்பத் திரும்பப் பேசி ஒரு மாதம் வரை நினைவுகளை வேறுதிசை போகவிடாது நிறுத்தி வைப்பார்கள். தன் இரத்தம் தனக்கு உயிர் கொடுத்து வளர்த்த தந்தை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டால், சுடுகாட்டிற்குச் சென்று வந்தாலே தலைமுழுகவேண்டும் என்பார்கள். ஐரோப்பியர்களோ கிழமைக்கு ஒருதடவை சென்று மலர் வைத்து தந்தையை வணங்கிவிட்டு வருவார்கள். அது நம்முடன் ஒன்றாக இருந்து வாழ்ந்து, மகிழ்ந்து, அநுபவித்த, சொந்தங்கள் உறங்கும் இடம் என்று தெரிந்தும் அவ்விடம் துடக்கு இடம் என்று கருதுவர். எம்மவர் ஒரு மாதம் கோயிலுக்குச் செல்வதற்குத் தடைவிதித்துவிடுவார்கள். விழாக்களில் கலந்து கொள்ளத் தயங்குவார்கள் (மனதுக்குள் விருப்பத்தை வைத்துக்கொண்டு). இறந்தவீட்டிற்குச் செல்பவர்கள் தண்ணீர்கூடக் குடிக்கமாட்டார்கள். அது துடக்கு என்று ஒரு தடையைப் போட்டுவிடுவார்கள். 
                     
                               அடுத்தவர்களைக் குறை கூறும் நாம், அதில் இருக்கும் மறுபக்கத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்யடியது அவசியமாகிறது. அதனால், எமது பண்பு சீராக்கப்படும்.


    சனி, 31 ஆகஸ்ட், 2013

    வேதனைக் காலம் தொடர்வதில்லை







          வேதனைக் காலம் தொடர்வதில்லை – மனிதன்
         சோதனைக் காலம் சொந்தமாவதில்லை
         வேதனையும் சோதனையும் ஓர்நாள் - இன்ப
         வேதனத்தை விதைத்து விடும்
         விளைவுகளும் நலமாய்ச் சொரிந்துவிடும்.

                 


           

    வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

    பெற்றோரின் பங்கு


    தவறுகள் நடக்கின்றன. தண்டனைகள் பெறுவது பெற்றோரா? எனத் தத்தளிக்கும் உங்கள் மனதிடமே கேட்டுப்பாருங்கள். நீங்களும் ஒருவகையில் குற்றவாளிகளே. உங்களிடம் இருக்கும் இருப்புக்களை வெளியிலே காட்ட ஆசைப்படுகின்றீர்களா? குற்றங்களைச்சுமந்துதான் ஆகவேண்டும். குரங்கு மனத்தின் குறிப்பறியாது பிள்ளைகள் ஆசைகளை நிவர்த்தி செய்ய விரும்புகின்றீர்களா? வரும் துன்பங்களை ஏற்றுத்தான் ஆகவேண்டும். போட்டிகள் ஒருவருக்கொருவர் பணஅளவை வெளிக்காட்ட அல்ல. திறமையை மேம்படுத்தவே என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புக்கள் நல்லவை கருதியே செய்யப்படுகின்றன. அதை தவறான வழியில் செலுத்துபவர்கள் பண்பாடற்ற மனித ஜென்மங்களே. பிள்ளைகளைப் பெற்றவர்கள் குறிப்பறிந்து, காலம் உணர்ந்து, வயதை அநுபவம் மூலம் கற்றுக் கொண்டு எதிர்கால வாரிசுகளை வளத்தெடுக்க முனைந்திடுங்கள். இப்படிச் செய்துவிட்டார்களே!! என்று பிள்ளைகளைக் கரிந்து கொட்டாதீர்கள். அடிப்படை என்னவென்று ஆராய்ந்து பாருங்கள். அதில் உங்கள் தவறும் அடங்கியிருக்கும்.

    வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

    நா


     

    உதிரம் இன்றி வலி தரும் ஆயுதம்
    வார்த்தைகளெனும் குண்டு தாங்கி
    இதயத்தின் துடிப்பை அதிகமாக்கும்
    இரத்தத்தின் அழுத்தத்தை துரிதமாக்கும்
    சுவைக்க மட்டுமன்றி உணவைச் செரிக்கவும்   
    சொற்சுவையை அளிக்கவும் செய்வதனால்
    இதைச் சுமந்தே வாழவேண்டிய மனிதர்கள் நாம் - ஆனால்
    இதை அறிந்தே கட்டுப்படுத்த வேண்டிய மனிதர்களும் நாமே

    வியாழன், 28 மார்ச், 2013

    ஆத்திரம் அறிவைக் கெடுக்கும் 28.03.2013


    "ஆத்திரம் அறிவைக் கெடுக்கும்'', "பதறிய காரியம் சிதறிப் போகும்''. பிரச்சினையை எப்படி அணுகுகின்றோம், சமாளிக்கின்றோம், அதை எப்படி அநுபவித்து மீளுகின்றோம் என்பதிலேயே எல்லாம் அடங்கியிருக்கின்றது. மனதினாலே எல்லாம் ஆகும். மூளையே மனமாகச் சக்தி வடிவம் பெறுகின்றது. எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. விதையிலிருந்து செடி முளைப்பது போல எண்ணத்திலிந்து செயல் பிறக்கின்றது. எண்ணத்தைப் புரிந்து கொண்டு உள்ளத்திலிருந்து எண்ணத்தைப் பிரித்தால், எளிதான விடிவு கண்டுவிடலாம். திடீரெனத் தோன்றும் பதற்ற நிலையில் சுயஉணர்வு குறைந்துவிடும். என்ன நடந்தாலும் புரிந்து கொள்ள முடியாது கவனம் சிதறுண்டு போகும். பதற்றம் நீங்கிய பொறுமையே முதலில் கையாளப்பட வேண்டியது. குறிக்கோளும் மகிழ்ச்சியும் பொருள் என்று கொள்ளாது எது நன்மை வளைவிப்பது என்று எண்ணுபவனே பொறுமைசாலி. அப்பொறுமை மூலம் பிரச்சினையை நீக்கிவிடலாம். அமைதியாக இருக்கும் போது ஆலோசனை மூலம் எண்ணங்களை மாற்றியமைக்கலாம். பொறுமை இழந்து கோபப்படும்போது நாம் நிதானம் இழக்கின்றோம். இரத்தக் கொதிப்பு அதிகரிக்கின்றது. கைகால்கள் உதறுகின்றன. நமக்கு நாம் கொடுக்கின்ற தண்டனைதான் கோபம்.

    எனவே பொறுமை, நிதானம், பதற்றமற்ற நிலை போன்றவையே மனித வாழ்க்கையை சீரான பாதையில் வழிநடத்திச் செல்ல உறுதுணையான காரணிகளாக அமைகின்றன.

    நேரத்தால் அழியாத ஒரு காதல்

    மாலை நேரம் . சூரியன் தன் கடைசி ஒளிக்கீற்றை பூமியின் நெற்றியில் மெதுவாகத் தடவி விட்டு மறைந்து கொண்டிருந்தது . அந்த வெளிச்சம் போல் , ஒரு மனிதன...