• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 26 ஜூலை, 2011

  மூன்று முடிச்சு


  ரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா? எனத் தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள் தாங்களே......  பிடித்த உறவுகள்:

  பெற்றோரையும் பெற்றொரைப் பெற்றோரையும்
  நான் சுமந்த என் வாரிசு
  சேய் போல் என்னைத் தாங்கும் என் கணவன்

  பிடித்த உணர்வுகள்:

  அன்பு
  பெண்களுக்குரிய நாணம்
  அடுத்தவர் துயருறும் போது உள்ளம் நெகிழ்தல்


  பிடிக்காத உணர்வுகள்:

  அடக்க முடியாத ஆத்திரம்
  கோபம்
  ஆணவம்


  முணுமுணுக்கும் பாடல்கள்:  எனது தாயாருக்காக நான் எழுதி பாடல்.
  http://www.youtube.com/watch?v=Sm6jpWr9sBo)


  அம்மா என்று அழைக்காத உயிரில்லையே.
  புதிதாக வெளிவரும் கருத்தாழமிக்க பாடல்கள்  பிடித்த திரைப்படங்கள்:

  ஆட்டோகிராப்
  மதராசுபட்டினம்
  மௌனராகம்


  அன்புத் தேவைகள்:

  எதிர்பார்ப்பில்லாத உறவுகள்
  ஈடு செய்ய முடியாத பாசம்
  எனக்காக ஏங்கும் உள்ளங்கள்.

  வலிமையை அழிப்பவை:

  பொறாமை
  சோம்பல்
  தைரியமின்மை

  குட்டித்தத்துவம்:

  உன்னையே முதலில் நீ காதலி. உலகம் உன்னைக் காதலிக்கும்.
  யார் எது சொல்லிடினும் ஏன் என்று கேட்டுத் தெளிந்தபின் நம்பு.
  மற்றவரைக் குற்றம் சொல்லும் முன் உன்னை நீ ஒரு தடவை சரிபார்த்துக்கொள்.

  பயமுறுத்தும் பயங்கள்:

  இயற்கையின் களியாட்டம்
  முதுமையில் எமது நிலை
  ஐரோப்பியசூழ்நிலையில் வளரும் என் மகள்.


  அடையவிரும்பும் நிலையான விருப்பங்கள்:

  வாழும்வரை புதுமைகளைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
  ஏன் என்ற கேள்வி மூலம் பலவற்றை புரிந்துணரவேண்டும்.
  அறிவுக்கு எட்டியவரை தேடல் தொரடவேண்டும்.

  கற்க விரும்புவது:

  இலக்கிய இன்பம்
  பியானோ
  அலைகள் பற்றிய கல்வி (Mind reading )

  வெற்றிபெற வேண்டியவை:

  மறதி
  நேரம்
  வாழ்க்கைச்சுமை

  சோர்வு நீக்கத் தேவையானவை:

  சூடான கப்புச்சினோ ( Cappuccino) காப்பி
  கண்ணைமூடி தலை பின் சாய்த்து இசையில் இலயிப்பது
  மழலை பேசும் குழந்தை மொழி

  எப்போதும் தயாராக இருக்க வேண்டியது:

  தொலைபேசி
  மனம்
  பணம்

  முன்னேற்றத்திற்குத் தேவை:

  சோர்ந்து போகாத ஆர்வம்.
  ஒத்துப்போகும் மூளை
  ஒத்தழைக்கும் குடும்பம்.

  எப்போதும் அவசியமானது:

  ஆரோக்கியமான உடல்நிலை
  தயாரான மனோநிலை
  தேவையான பணநிலை

  பிடித்த தத்துவம்:

  யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்.
  உன்னைத் திருத்து உலகம் திருந்தும்
  உன் செயல்களே உன் வாழ்வை நிர்ணயிக்கும்

  தெரிந்து தெரியாது குழம்புவது:

  இறப்பின் பின் மனிதனின் நிலை
  யாருமே கண்டறியாத கடவுளும், இயற்கையும்
  உடலின் அமைப்பும் தொழிற்பாடும்


  எரிச்சல்படுத்துபவர்கள்:

  மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடப்பவர்கள். 
  அளவுக்கதிகமாகப் பேசுபவர்கள்.
  தொலக்காட்சிகளில் பார்ப்பவை கேட்பவற்றை வைத்துக் கொண்டு அனைத்தையும் நம்புபவர்கள்

  மனங்கவர்ந்த பாடகர்கள்:

  வளர்ந்துவரும் இளந்தலைமுறையினர்.
  தாலாட்டுப் பாடிய எனது தந்தையார்.
  காலைநேரப் பறவைகள்

  இனிமையானது:

  குழந்தைச் சிரிப்பு
  தென்றல்காற்று
  இலக்கியங்கள்

  சாதித்தவர்களின் பிரச்சினை:

  உனக்கு மேமே உள்ளவர் கோடி என்பதை மாற்றியமைக்கப் போராடல்.
  ஓய்வில்லாத ஓட்டம்
  மற்றவர்களில் குறைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருத்தல்

  பிடித்த பழமொழிகள்:

  மற்றவர் வாழ்க்கையோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப்பாராது உங்கள் வாழ்க்கையை ரசியுங்கள் அதில் இன்பமும் இரகசியமும் இருக்கின்றது. 
  யதார்த்தவாதி வெகுசன விரோதி
  உன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் இருக்கின்றது

  பதிவிட அழைக்கும் மூவர்

  1. அப்பாத்துரை http://moonramsuzhi.blogspot.com/
  2. குணா http://zenguna.blogspot.com/2011/07/smart-bird.html
  3. போளுர் தயாநிதி 1.   http://arivan-polurdhayanithi.blogspot.com/  வெள்ளி, 22 ஜூலை, 2011

  பருவமடைந்தார்


      Get this widget |     Track details  | eSnips Social DNA    

         
              ஒருமணிப்பொழுது கணனியில் உன் வயதுக்குப் போதுமானது. உன் மூளைக் கணனிக்கு வேலை கொடு. கொஞ்சம் நில்! எதற்காகத் தொலைக்காட்சியைப் போடுகின்றாய்? உன் உன்னிப்புக்  காட்சிகளை வரிவடிவில் அடுத்தவர் காட்சிக்கு விரித்தியம்பு. நில், நில், நில்! Mp3 Player இப்போதெதற்கு தும்பிக்கையான் புகழ் பாடி வானொலிக்கு அனுப்பி வை. Oh! mann was ist  ist denn losஅது செய்யாதே இது செய்யாதே. அப்படிச் செய் இப்படிச் செய். அம்மா! Ich kann das nicht machen. என்னால் செய்ய முடியாது. என்ன எதிர்த்துப் பேசுகின்றாயா? நாங்கள் எல்லாம் எப்படிப் பெற்றோருக்குக் கட்டுப்பட்டிருந்தோம். இப்போது நான் சொன்ன அவ்வளவும் செய்து முடிக்க வேண்டும். Nein முடியாது. அடம்பிடிக்கும் பருவம் 13. வன்முறையால் வழிக்குக் கொண்டுவர முடியாத வாலிபப் பருவம். அவதானம். அவதானம். பருவத்தின் மாற்றத்தில் பண்பான வார்த்தைகளும் கடுமையான சட்டமாய்த் தொனிக்கும். வேண்டாம் என்பதைச் செய்யத் தூண்டும். பிடிவாதம் பிடிக்கும் சமாதானம் சொல்லி சலிப்பை அடக்க அவதானம் தேவை. பாவம் உள்ளிருந்து ஓர் சுரப்பு ஓமோன் என்ற பெயருடன் உருவாகிக் கொண்டே இருக்கும். அது உடல் அமைப்பையும், உள வளர்ப்பையும், உரு மாற்றம் செய்யும். காரணம் இல்லாது எம் வாரிசுக்கள் எம்மைக் கலங்க வைக்கவில்லை. காரணம் புரிந்து நாம் கையாளப் பழக அவதானம் தேவை. 

        பெற்றோரைக் கட்டி அணைப்பர். ஒருவேளைக் கிட்ட நெருங்கவே மாட்டாது எட்ட நிற்பர். ஏனென்று புரிந்து கொள்ளும் பக்குவம் எமக்குத் தேவை. சதந்திரம் இல்லையென்று எகிறிக் குதிப்பர். தருவது போல் தந்து தடுப்பது தெரியாது தடுத்தல் வேண்டும். பாதுகாப்பைத் தவிர்க்க நினைப்பர். பாதுகாப்புத் தரத் துடிப்போம் யாமும். இங்கும் புரிந்து கொள்ளத் தயங்கி நிற்போம் யாம். துணிந்து செய்யத் தொடங்கும் போது என்ன துணிச்சல் என்று எடுத்தெறிந்து பேசுவோம். ஆர்வமாய்ப் பேச அருகில் வரும்போது தூரமாய்ச் சென்று வேலையென்று ஒதுங்கி விடுவோம். பேச்சுத் தொடர்பே இப்பருவத்தை எம்மோடணைக்கத் தகுந்த மருந்தென்று உணர்வதில்லை யாரும். தம்மைத் தாமே அழகுபடுத்தத் துடிக்கும் பருவம். அப்படியில்லையென்றால் மட்டுமே யாம் ஆராய வேண்டும். பாராட்டுப் புகழுக்கு அடிமையாகும். தன்னை விடுத்து அடுத்தவரைப் புகழும் பெற்றோரை வெறுக்கும். சற்றுச் சிந்தித்துப் பார்ப்போமா! தன்  அருகே வேறு ஒரு பெண்ணைப் புகழ்ந்து கொண்டிருக்கும் கணவனில் சந்தோஷம் தான் கொள்வாளா? மனைவி. தன் அருகே வேறு ஒரு ஆணைப் புகழ்ந்து கொண்டே இருக்கும் மனைவியில் நாட்டம் கொள்வானா, கணவன். இப்படி உங்கள் பிள்ளையின் பின் அடுத்தவர் பிள்ளைகளை நாளும் புகழ்ந்து கொண்டிருப்பதை விட்டு விட்டு, உங்கள் பிள்ளையை நாளொன்றுக்கு ஒரு தரமாவது புகழ்ந்து பாருங்கள். புரிந்து கொள்ளுவீர்கள். பருவமடைந்த பிள்ளைகள் ஊடாகப் பெற்றோர் பக்குவப்படுகின்றனர். பெற்றோர் என்பவர் யார்? பிள்ளை வளர்க்கும் பாங்கில் அநுபவம் பெற்றோரே. இங்கு உளவியலாளர் உத்தரவுக்குக் கட்டுப்படுவதா? இல்லை உள்ளம் போடும் கணிப்பீட்டு உதவியுடன் பெற்றோர் பதவி புரிவதா? அவதானம், அவதானம். இயந்திரங்களும் படைக்கப்பட்டு அது கக்கும் வாயுக்களையும் உடலேற்று அது செலுத்தும் கழிவுகள் சுரப்புக்களுக்கு ஏற்ப உடல் மனநிலையை மாற்றி நடமாடும் ஒரு உயிருள்ள 'ரொபோற்றோ'' யாம். யாரை யார் பழி சொல்ல முடியும்.

      ' உருவான உயிரொன்று உலகேறி நடமாட 
        பலமான பராமரிப்பின் பக்குவத்தைப் பழகிடுவோம்.''    

  ஜேர்மனி வாழ் சிறார்கள் வாயிலிருந்து சிந்துகின்ற ஓரிரு வார்த்தைகள் அம்மொழியிலேயே வந்திருக்கின்றன) 


  செவ்வாய், 19 ஜூலை, 2011

  பெண்ணின் பெருமை உணர்வோம்!


                                                                                                 

  பூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் உலகைக் காக்கும் குழந்தையைப் பாதுகாக்கும் கருவறையினுள், பூமியைக் குளிரச் செய்யும் கடல் போன்ற கருப்பைத் திரவத்தினுள் மிதந்து வாழ்ந்து கரு இருளில் களித்துறங்கிய கருமுகில் பெண்ணாள், கருவிறங்கி உலகின் குளிர்மைக்காய்க் கண்விழித்தாள். உலகின் ஒளி பூமித் தாயின் மடியில் புகலிடம் புகுந்தது. பெண்ணாய்ப் பிறந்து கள்ளிப் பாலுக்கு இரையாகிய காலம் கரைந்தோடி, அவள் சொல்லுக்காய் நாடு விழித்திருக்கும் காலம் காட்சிக்கு வந்து விட்டது. இன்று விண்வெளியில் உலாவந்த பெண் தைரியத்தின் முழுவடிவம், இன்பம் சுவைக்கும் சுதந்திரப் பறவை.

  பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள். அவளின் மென்மை அடக்கத்தை அணிகளனாக்கியது. அன்றும் இன்றும் பெண்களைப் பாடும் கவிஞர்களே அதிகம். கொடியெனக் கணவன் தோளில் சாய்ந்தாள். கொழுகொம்பாய் அவன் இருக்க, அவனைப் படர்ந்தாள். கரமென மாமியார் உறவில் கைகோர்த்தாள். ஆசானாய் குழந்தைகளை ஆற்றுப்படுத்தினாள். நாத்தனார் வாழ்வில் நலன் விரும்பியானாள். மொத்தத்தில் குடும்பச் சொத்தே அவளானாள். பல வீடுகளின் ஆட்சியே நாட்டின் ஆட்சி. பல வீடுகள் இணைந்ததே, நாடு. வீடு விளங்க நாடு விளங்கும். எனவே தான் பெண்கள், வீட்டின் ஒளி அல்லது நாட்டின் ஒளி என்கின்றோம். இந்த வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு பெண் தேவை என மாமியார் நாடுவதன் சூட்சுமம்தான் என்ன? விளக்கேற்ற விரல்கள் அற்றவர்களா வீட்டிலிருப்போர். புகுந்த வீட்டின் பெருமை ஒளியை உலகிற்கு விளக்கவென புகுந்தவளாதலால் விளக்கெரிக்க ஒரு பெண் வரவேண்டுமென்ற வார்த்தையைப் பிரயோகித்தனர், பெரியோர். மென்மையான இதழ் பட்ட ஊதுகுழல் வெறுங்காற்றை உள்ளெடுத்து இசையாக வெளியே பரப்புதல் போல கணவன் மனையில் மென்மையாகப் புகுந்து சாதாரண குடும்பத்தைத் தரமான குடும்பமாய் உலகிற்கு உணர்த்தப் புகுமனையில் கால் வைப்பாள்.

  உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். பெண்ணுக்குப் பிரசவம் என்பது மறுபிறப்பு என்பார்கள். ஒரு குழந்தை பிறக்கும் வரை எத்தனையோ வேதனைகளைச் சுமக்கின்றாள். தன் உயிரைப் பணயம் வைத்து அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தை பிறந்து மறு வருடமே அடுத்த குழந்தைக்குத் தயாராகி விடுகின்றாள். இதுவே அவளின் தைரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. கருணைக்கும் இரக்கத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் பொறுமைக்கும் இருப்பிடம் பெண்தான். எனவேதான் ஒரு குழந்தை வளரும் வரையில் தாயின் பராமரிப்பில் இருக்க வேண்டுமென்று சட்டம் கூறுகிறது.

  இல்லறத்தை விடச் சிறந்த அறம் ஒருவனுக்கு இல்லை. இந்த இல்லறத்தைச் சிறப்பான முறையில் நடத்த வேண்டுமென்றால், சிறந்த இல்லாள் தேவை. இதன் மூலமே அவன் சமூகத்தின் முன் ஏறுபோல் பீடுநடை பயில முடியும் என வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கின்றார். உடலால் வாழும் ஆணைவிட உள்ளத்தால் வாழும் ஆற்றல் பெற்ற பெண் உலகில் சிறப்புப் பெறுகின்றாள். இந்தப் பெண்மையின் பெருமையை உணர்ந்துதான்
  மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
  மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
  என்று கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.

  ஒரு அழகிய கற்புடைய பெண் ஆண்டவனின் முழுமையான சிறந்த படைப்பாகவும், தேவதைகளின் பெருமையாகவும், உலகின் அதிஅற்புதமான தனித்த அதிசயமாகவும் விளங்குகின்றாள்.” என்று ஹெர்மிஸ் என்னும் அறிஞர் கூறுகின்றார்.
  நாம்பெற்றிருக்கின்ற வாழ்விற்கும், அந்த வாழ்வைத் தகுதியுள்ளதாக அமைத்துத் தந்ததற்கும், நாம் கடவுளுக்கு அடுத்தபடியாகப் பெண்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்” என்று பொவீ என்னும் அறிஞர் மொழிந்துள்ளார்.
  இதனையேதான் நமது மகாகவி பாரதியாரும்
  பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
  புவி பேணி வளர்த்திடும் ஈசன்.”
  என்று முழுமையாகப் பாடிச் சென்றார். எனவே பெண்ணின் பெருமையை உணர்வோம். புவி பேணி வளர்த்திட அவள் புகழ் பாடுவோம்.

  முத்துக்கமலம் இணையத்தில் வெளியான எனது படைப்பு

  வெள்ளி, 15 ஜூலை, 2011

  என்னால் உள்வாங்கப்பட்ட இசையின் இரு சம்பவங்கள்


      Get this widget |     Track details  | eSnips Social DNA    

     
                        என்னால் உள்வாங்கப்பட்ட இசையின் இரு சம்பவங்கள்

  இதயம் நுழைந்து உணர்வுகளை மீட்டி உடலுக்கும் உயிருக்கும் உற்சாகத்தை அள்ளி வழங்கும் உன்னதக்கலை இசை ஆகும். உலகம் முழுவதும் ஓசை மயம். அவ் ஓசைகள் ஒருமித்து ஒலிக்கையில் நாம், உன்னத இசையை ஊனக்கண்களாலாலும் காதுகளாலும் பார்த்தும் கேட்டும்; மகிழலாம். புல்லாங்குழலினுள் நுழையும் காற்று வெளிவரும் போது இசையாகப் பரிமளிக்கின்றது. எனவே ஓசையில் இன்பம் கண்ட மனிதன், தன் ஆசையில் கருவிகளை உருவாக்கி, அக்கருவிகளுக்கு நாமம் வழங்கி அக்கருவிகளின் ஓசைகளை இசையாக்கி இன்பங் கண்டான். அவ் இசைக்கருவிகளின் தனித்தன்மைக்கு இணை சேர்க்கக் கவி வடித்து இராகம் அமைத்து பாடலாக்கிப் பலரும் இரசிக்க பிரபலமாக்கினான். பாடலும் ராகமும் இசைக்கருவிகளின் இணைவும் இணைந்து ஒலிக்கும் ஓசைக்கு மனிதன் அடிமையானான். 
                               காலைவேளை நாளும் நான் காணும் காட்சி ஒன்றை, இன்று இவ்வேளையில் வெளிக் கொண்டு வருகின்றேன். நான் வேலைக்குச் செல்வதற்காய் பஸ்தரிப்பில் காத்திருக்கும் வேளையில், வாகனங்களின் ஓசையை செவிமடுத்து எனக்குள் ஒரு இசையை உருவாக்கிக் கொண்டு நிற்பேன். அவ்வேளை என்னருகே ஒரு இசைப்பிரியர் தன்னை மறந்து காதுக்குள் கருவி மாட்டி (Head Phone)  காலிரண்டும் ஆட்டம் போடத் தன் கீழுதட்டை மேற்பற்களால் கடித்துக் கொண்டு முணகியபடி நிற்பார். சுற்றவர என்ன நடக்கிறது என்ற எந்தவித எண்ணமும் அவரிடம் இல்லை. உணர்வுகள் அனைத்தும் அவர் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் இசைக்குள் அடங்கிக் கிடக்கும். அவரருகே அவர் தாயார் சிரித்தபடி நிற்பார். தன் மகன்,  பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவரேயானாலும், இன்னல்கள் பல மத்தியில் வளர்த்தெடுக்கும் பிள்ளையேயானாலும் தன் பிள்ளையின் மகிழ்வில் இன்பம் கண்டபடி புன்சிரிப்புடன் பக்கத்தில் நிற்பாள். இவர்கள் காத்து நிற்பது, வலதுகுறைந்தோர் பாடசாலை பேரூந்துக்காக. அவர் முனகலே அவரது இசையாகும். அவர் வாயிலிருந்து வடிந்து கொண்டிருக்கும் எச்சிலே அவர் இசையில் இன்பம் கண்ட இனிப்பாகும். அந்த பேதலித்த புத்தியில்லா மனிதனுக்கு இவ் இசை எவ்வளவு இனிப்பை அள்ளி வழங்குகிறது என்று பார்த்தீர்களா? புத்தியுள்ள மனிதர்கள் தான் இசைக்கு அடிமையென எண்ணி நாம் இருத்தல் ஆகாது. உண்மையில் என்னை மறந்து அந்த இசைப்பிரியனின் செயற்பாட்டை நோக்கியபடியே நிற்பேன். இவ்வாறு இசையானது, நோயாளிக்கு மருந்து, இசைக் கலைஞர்களுக்கு உயிர், இசைப்பிரியர்களுக்குப் போதை. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
            இந்த இசையைப் புலம்பெயர்வில் கையாளும் இளந்தலைமுறையினரின் திறமையை எண்ணி நான் வியந்து போவதுண்டு. இங்கு வாழும் இளந்தலைமுறையினர் பேசுவதற்கு கடினப்படும் ஒரு மொழி தமிழ். இதில் ஆச்சரியப்படுவதற்கோ, கோபப்படுவதற்கோ யாதொன்றும் இல்லை. நாள்முழுவதும் பாடசாலை, வேலைத்தளங்கள், வியாபார ஸ்தாபனங்கள், என்று எங்கு பார்த்தாலும் வாழும் நாட்டுமொழியே ஒலித்துக் கொண்டிருக்கும் போது தாய்மொழிப் பயன்பாடு குறைந்து காணப்படல் உண்மையே. ஆயினும், இவ்வாறான சூழ்நிலையிலும் தாய்மொழி சினிமாப்பாடல்களை மனனம் செய்து இசைக்கருவிகளை நளினமாகக் கையாண்டு இசை வழங்குகின்றார்களேயானால், அவர்களைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா? அவர்களை வெளியுலகுக்குக் கொண்டு வராமல் இருக்கமுடியுமா? அன்று ஜேர்மனியில் வசிக்கும் இளங்குயில் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி ஒன்றைச் செவிநுழைக்கும் சந்தர்ப்பம் ஒன்றைப் பெற்றேன். எசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்;கும் தமிழ்ப் பற்றாளர். இசைப்பற்றாளர், சமூகசிந்தனையாளர் நயினை விஜயன் அவர்களின் மேற்பார்வையின் கீழ், இளவட்டங்கள் இணைந்து உருவாக்கிய இசைக்குழுவே, இளங்குயில் இசைக்குழுவாகும். பாடகர்கள், இசைக்கலைஞர்கள் எசன் நகரிலும் வேறுவேறு பகுதிகளிலும் இருந்து ஒன்று சேருகின்றனர். இதில் இசை வழங்கும், பாடல் இசைக்கும் சின்னவர்கள் உற்சாகத்தையும் திறமையையும் வார்த்தைகளால் வடிக்க முடியாது. இந்தியத் திரைப்படங்களில் பாடப்பட்ட பாடல்களேயானாலும் இந்நாட்டு இளையவர்கள் முயற்சியில் வெளிவருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்றேயாகும். பாடல்கள் காதுகளில் நுழையும் போது எம்மை மறந்து விடுகின்றோம். 

                                                    
             இத்தனை திறமையும் கொட்டிக் கிடக்கும் இளையவர்கள் உண்டு துப்பிய எச்சிலைத்தான் பாடுகின்றார்கள் என்ற எண்ணம் பாடல்களைக் கேட்கும் போது விட்டுப் போகின்றது. ஆனாலும், அவர்கள் தனித்திறமைக்கு ஒரு சவாலாக சாதனை படைக்க நாம் ஊக்கம் கொடுத்தல் எமது கடமையாகின்றது. அதாவது திரைப்படப்பாடல்கள் ஒரு திரைப்படச்சூழ்நிலைக்காகப் (Situation) பாடப்படுகின்றது. யாரோ பாடி, யாரோ இசையமைத்து இந்தியாவில் வெளியான பாடல்களே திரைப்படப்பாடல்கள். இவற்றைத் திரும்பவும் எடுத்துப் பாடுவதில் இளங்குயில் இசைக்குழுவினருக்கு உள்ள உற்சாகமும் ஊக்கமுமானது மேலும் அதிகரித்து தாமாகவே இசையமைத்துப் புதுப் பாடலாய் படைத்து பலரும் சுவைக்கச் செய்ய வளரவேண்டும். அப்போது உலகறியும், மேலும் உலகு மெச்சும் கலைஞர்களாக இவர்கள் போற்றப்படுவார்கள். அதற்குரிய திறமையும் அவர்களுக்கு இருக்கின்றது என்பதை அறியக்கூடியதாக இருந்தது.  இதைவிட இசை வழங்கும் போது பலரும் சுவைக்கும் அளவில் இசையின் ஒலியை மட்டுப்படுத்த வேண்டியது பொறுப்பாளர்களின் கடமையாகும். இல்லையெனில், தரம் நிறைந்த இசையின் தரத்தை கேடபோர் தரம் குறைத்து எடைபோட்டுவிடுவார்கள் என்பதை மிகவும் அக்கறையுடன் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன்.   எவ்வளவு திறமை இருந்தாலும் அதைச் சரியான முறையில் கையாளாவிட்டால், அத்தனை திறமையும் இழந்துவிடும். காதுக்கு இனிமை கூட்டும் இசையே சிறப்பானது. காது வெடிக்கும் இசையை யார் கேட்பார். 
     இதைவிட புலம்பெயர்வில் கல்வி, வேலையென எத்தனை பல சுமைகளுக்கு மத்தியில் கலைஞர்கள் தமது படைப்பைப் பலரறிய வெளிக் கொண்டுவரும் போது அதனைக் கேட்போர் உற்சாகமாகக் கரங்களால் தாலாட்டாது, சோம்பி இருத்தலானது, அக்கலைஞர்களின் உற்சாகத்தைக் கீழிறங்கச் செய்யும் செயலாகும். எம்மவரிடமுள்ள பாரிய குறைபாடு என்னவென்றால், யாரெது செய்தாலும் புகழ்வதற்கு மனம் ஒவ்வாது. கரகோஷம் செய்து கலகலப்பாக்க உற்சாகம் இராது. செய்பவர்கள் செய்யட்டும் எமக்கென்ன என்று கண்ணெதிரே நடப்பவற்றைக் கண்டு கண்திறந்து தூங்கிக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறான உள்ளங்கள் திருந்த வேண்டும். திறமைசாலிகள் மேலும் வளர ஊக்கம் தரவேண்டும். வாழ்க இளங்குயில் இசைக்குழுவினர்.
    இவ்வாறு இசையின் வேறுபட்ட இரு சம்பவங்கள் என் பார்வையில் இங்கு படைக்கப்பட்டுள்ளன. நுகர்ந்தோம் தம் கருத்தைப் பலரறியத் தெரியப்படுத்தினால் நானும் இன்புறுவேன்.  சனி, 9 ஜூலை, 2011

  நெஞ்சம் மகிழும் நிதம்


     
    நெஞ்சம் மகிழும் நிதம் 
      
    

  தந்தனத்தோம் என்று மனம்
  தன்னந்தனியாக என்றும் 
  சிந்தை மகிழ்வதில்லையே – அது
  சொந்தம் பல கூடி
  இன்பம் பல கண்டு
  விந்தை உலகதனில் 
  நெஞ்சம் மிக மகிழுமே

  தன்னந்தனி எழுத்து
  ஒன்று சேர்ந்திடாமல்
  கன்னல் மொழி தோன்றுமா 
  இன்னல் காணும் மனம் 
  ஓன்று கூடி என்றும்
  நெஞ்சம் மகிழும் நிதமே

  பென்னம்பெரு உலகில்
  கண்ணில்காணும் பல 
  வண்ணக் காட்சிகளுமே
  கண்டு களித்திருக்க 
  நெஞ்சம் மகிழும் நிதமே

  மாலை நேரத் தண்மதியும்
  வானில் தோன்றும் தாரகையும் 
  துள்ளி ஓடும் புள்ளி மானும்
  தோகை விரிக்கும் கோல மயிலும்
  வெள்ளை நிறப் பசுவும் 
  கள்ளமில்லாப் பிள்ளைச் சிரிப்பும்
  காதில் கேட்கும் மழலை மொழியும் 
  கானம் இசைக்கும் குயிலும்
  சின்னஞ்சிறு புள் இனமும்
  சின்னக்கதை பேசும் சிட்டுக்குருவியும் 
  சிலுசிலுக்கும் நீரோடையும்
  காற்றில் ஆடும் கனிமரமும்
  வாட்டம் கொள்ளும் வேளையிலே 
  கண்டு கேட்டு இன்புற்று
  நெஞ்சம் மகிழும் நிதமே

  வெள்ளி, 1 ஜூலை, 2011

  மாமரத்தில் மாங்கனியே பெறமுடியும்  அன்று அந்தத் தொடர்மாடிக் கட்டிடம் கலகலப்பில் களித்திருந்தது. மேலும் கீழுமுள்ள குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்தாய்விட்டது. தமிழர்கள் விழாவென்றால் ஒருபடி மேல்த் தான் ஒலியலைகள் வருமென்று சில வருடங்களாக அறிந்துதானே வைத்திருக்கின்றார்கள். சகித்துக்கொள்ளும் பொறுமைசாலிகளை அயலில் பெற்ற ஆனந்தத்தில் தனது பதினொராவது பிறந்ததினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தாள், சிறுமி கவிதா. அங்குமிங்குமாகச் சிறுவர்கள் ஓடிக்கொண்டிருந்தனர். அனைத்துக் கருமங்களும் முடிந்து சாப்பாடும் பரிமாறியாயிற்று. சிறுவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தமது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். என்பதே அந்த வேண்டுகோள். இயல்பாகவே எல்லாவற்றிற்கும் முந்திரிக்கொட்டை போல் முன்றியடித்துக் கொண்டு முன்வரும் கவிதா, ஆடல் பாடல் என்று அனைவரையும் கவர்ந்து கொண்டிருந்தாள். ஒருபுறத்தில் ஒரு சிறுமி விக்கிவிக்கி அழுது கொண்டு நின்றாள். பார்ப்பதற்கே அநுதாபமாக இருந்த அந்தச் சிறுமியை அண்டிய நான், ‚''ஓடிவிளையாடிய கால்கள் நோக்கண்டு விட்டதோ? இல்லை கண்ணில் பெரிதாக ஒரு தூசி விழுந்து விட்டதோ? எங்கே சிரியுங்கள் பார்ப்போம்'' என்று சிரிப்பதற்காக சில்மிசம் பண்ணினேன். அழுகை அதிகரித்தது. பக்கத்தில் சர்வாதிகாரி போல் அச்சிறுமியினுடைய தாயார் நின்று கொண்டிருந்தார்.''விடுங்கள் நன்றாக அழட்டும். எதற்காக இவ்வளவு பணத்தைக் கொட்டி இவளைப் படிப்பிக்க வேண்டும். மொக்கு மாதிரி நிற்கிறதைப் பாருங்கள்ஹஹ எந்நெஞ்சில் சுருக்கென்றது அந்தத் தாயினுடைய வார்த்தைகள். ''ஏன் இவள் கெட்டிக்காரி தானே. படிப்பில் நல்ல புள்ளிகள் தானே வழமையாகப் பெறுவாள். சில சிறுவர்களுக்குத் தங்களுடைய திறமையை வெளிக்காட்டுவதில் விருப்பம் இல்லை. அதற்காக இப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் கூடாது. சிலருக்குச் சிலவிடயங்களில் நாட்டமில்லை. எதற்குக் குழந்தை மனத்தைப் புண்படுத்துவான்'' என்று தாயிடம் கூறி அச்சிறுமியைச் சமாதானம் பண்ணிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தேன். 
         அடுத்த வீட்டுக்காரன் பிள்ளை உதைப்பந்தாட்டத்தில் பதக்கம்  பெற்று விட்டால் எனது வீட்டுப் பிள்ளை அதை விடப் பெரிய பதக்கம் பெறவேண்டும்.  அறிந்தவன் வீட்டுப் பிள்ளை வயலின் வாசித்தால், என்வீட்டுப் பிள்ளையிடம் தூக்கி மிருதங்கம் கொடுக்கப்பட்டு விடும் அப்பிள்ளை அதில் ஈடுபாட்டுடன் இருக்கின்றதோ இல்லையோ அதனுடன் மாயத்தான் வேண்டும்.  யாரிடம் என்ன திறமை கொட்டிக்கிடக்கிறது என்று அறியாது சிறுவர்களை ஆக்கினைப்படுத்தும் எமது சமுதாயம், உணரவேண்டியது திறமைகள் வௌ;வேறு விதமாக ஒவ்வொரு சிறுவர்களும் பெற்றிருப்பார்கள்.  அவற்றை அறிந்து அவர்கள் ஈடுபாட்டைப் புரிந்து அவர்களை ஈடுபடுத்தல் மனநிலை மருந்தல்லவா. மாமரத்தில் மாங்கனியே பறிக்கலாம். அனைத்து வகைக் கனிகளையும் மாமரத்தில் பெற நாம் முயற்சிப்பது முறையா? எம்மால் முடியாத காரியத்தை எனது பிள்ளை சாதிக்கவேண்டும், அடுத்தவன் பெருமைப்படும் அளவிற்கு என் பிள்ளை திறமை காட்டவேண்டும் அதன் மூலம் என் பெருமையை விலாசப்படுத்த வேண்டும். என்று நாம் நினைப்பது எந்தவிதத்தில் நியாயம். ஆசையெல்லாம் தீர்த்து வைக்க நம் கைக்கு அகப்பட்ட பொருளல்ல நமது வாரிசுக்கள். அவர்கள் அவர்களுக்காகவே பிறந்தவர்கள். அவர்களுக்கென ஆசாபாசங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்வோம் இரம்யமான உலகை இயல்பாகவும் இன்பமாகவும் வாழ வழிவிடுவோம்.


  இவ் இலக்கியத்தை என் குரலில் கேட்க விரும்பினால் :

      Get this widget |     Track details  | eSnips Social DNA    

  அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்

  "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்   எவரும...