• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 27 டிசம்பர், 2011

  பக்குவப்படாத பகுத்தறிவு


  Add caption
      
     
      விசித்திரமான ஓர் கருவி
         என்னுள்ளே இருந்து
       வில்லங்கம் செய்கிறது
         எடுத்து எறிந்திடவோ
       இருக்குமிடம் புரியவில்லை

  அன்று இசைக்கருவிகளின் மத்தியில் சக்கரைப்பந்தல் நிகழ்ச்சியில் தேன்மாரி பொழிந்து நான் அரங்கிலிருந்து  அகன்ற வேளை என்னருகே வந்த அந்த கம்பீரம் என் வலது கரத்தை இழுத்துக் குழுக்கியபடி 'சசி! உன் பாட்டு அபாரம். உங்கள் அம்மா இப்படியொரு கவிதை எழுதியிருப்பதை இன்று தான் கண்டேன்||;. என்றான். 'இது அம்மா எழுதிய கவிதை இல்லை' என்று நான் கூறிய போது 'நான் சொன்னது பாட்டை இல்லை. உன்னை||. என்று கூறி அகன்று விட்டான். அவன்; துடிப்பான   பேச்சு அடிக்கடி என் மனதில் தொல்லையை ஏற்படுத்துகிறது. காரணம் புரியாது என் மனதைக் கட்டுப்படுத்துவேன். இப்போது அடிக்கடி என் கண்ணில் படும் இவன் யார்? என்னை அவன் தன் பக்கம் இழுக்கின்றானா? சுவாரசியமாக துடிப்பாக அவன் ஒவ்வொரு தடவையும் கூறும் வார்த்தைகளைத் தேடி மனம் அலைகிறதே. ஏன் தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து எதையும் அவரிடம் மறைக்காத எனக்கு இதை மட்டும் ஏன் சொல்ல மனம் மறுக்கிறதுஎன்   குடும்பத்தைச் சமுதாயக்கூண்டில் நிறுத்தும் காரியத்தை எப்போதும் நான் செய்ய மாட்டேன். ஒவ்வொரு நாள் காலையிலும் அவன் கண்ணில் படக்கூடாது. என் மனதில் இருக்கும் அவன் நினைவை எரித்துவிடு
  இறைவா! என ஆண்டவனை வேண்டியபடி வீதிக்கு வரும் நான் அவனைக் கண்டவுடன் பேதலிக்கின்றேன். அனைத்தையும் மறக்கின்றேன்.

            
                         இதுதான் அலைபாயும் மனமா? எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவன் சேர்ந்து வரவேண்டும் என மனம் ஏங்குகிறது. மனதைக் கட்டுப்படுத்தி படிப்பில் கண்நிலைக்கும் போது எதிரில் அவன் படம் நிழலாடுகின்றது. இல்லை. எனக்கு வேண்டியது எனது பெற்றோர். கல்வி இதைத் தவிர வேறில்லை. பிடிக்காது> பொருந்தாது எனத் தவிர்க்க நினைக்கும் நினைவுகளுக்கு மனம் தொடர்பை ஏற்படுத்துவதும் ஏன்? பக்குவப்படாத மனம் கொண்டு துடிக்கின்றேன். இங்கு நான் யார்? நான் வேறு என் அந்தரங்க  பொக்கிஷம் வேறு. நானாக நான் மாறுவது எப்போது?
              பேதலிக்கும் இம்மடந்தையின் வேதனையை உணர்ந்தவளாய் ஓராயிரம் ஆசைகள் சுமக்கும் மனம் ஓர் நொடியில் சலிப்படைவதும் உள்ளிருந்து ஓர் காரியம் உறுத்த வெளிவேஷம் போடுவதும் கண்டொன்று பேசிக் கடந்ததும் கடிந்து பேசுவதும் நாள் முழுவதும் கடிந்து பேசும் பிள்ளையை நடுநிசியில் அணைத்து முத்தம் கொடுப்பதும் கூடாத காரியம் எனத் தெரிந்தும் அதைச் செய்து முழிப்பதும் ஆத்திரத்தில் அடித்துத் துரத்தியவனை அடுத்த நிமிடம் நினைத்து ஏங்குவதும் இந்த மனமே. விநோதமான பலர் மனதின் விந்தையான போக்கை எண்ணி வியந்தபடி
                  

  வெள்ளி, 23 டிசம்பர், 2011

  நத்தார் தின நற்செய்தி
  நத்தார் தின நற்செய்தியாக நண்பர்கள் அனைவருக்கும் இப்படைப்பை மனமுவந்து வழங்குகின்றேன். நத்தார்தின வாழ்த்துகள். 

  கவிதா தன் எண்ணங்களுக்கு வரிவடிவம் இதயத்துத் தேக்கங்கள் வார்த்தைகளால் வழிந்தோடும். தன்னைவிடத் தன் பேனாவையே அதிகம் நேசிப்பாள். ஏனெனில் அதன் மூலமே அவளால்த் தன்னை யாரென்று பிறருக்கு இனம் காட்ட முடிகின்றது. அவள் வார்த்தைகளுக்கும் வரிகளுக்கும் வேறுபாடு இருந்ததே கிடையாது. சொல்லும் செயலும் மாறுபடும் உலகில் முடிந்தவரை எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்து வரிவடிவில் தன் உளவடிவம் பிரதிபலிக்கச் செய்யும் தன்மை கொண்டவள். பேனாபிடிக்கும் விரல்களை கணனித் தட்டச்சு தட்டுகின்ற விரல்களை வினாடிக்கு வினாடி முத்தமிடும் நன்றியுணர்வுள்ள கவிதா வாழ்வில் விதியின் விளையாட்டு மனம் வருந்;தத்தக்கதாகவே விளையாடியது. விரலோடு இணைந்தே அவள் உயிரானது ஒரு விபத்தில் விடைபெறத் தகுதி பெற்றது. உயிரில்லாத உடலால் இவ்வுலகுக்கு ஆவதென்ன என்று அன்று கவிதா நினைத்திருப்பாளேயானால், இன்று இவ் அற்புதம் உருவாகியிருக்குமா? 
         
    தன் அங்கங்களில் எங்கெல்லாம் பயன்பாடு உள்ளதோ அனைத்தையும் தாரைவார்த்துத் தருவதாய் மருத்துவக் காப்புறுதி செய்திருந்தால், யு.ழு.மு என்று அழைக்கப்படும் மருத்துவக் காப்புறுதி நிறுவனம் வழங்கிய உறுப்புத்தான அட்டையை எப்போதும் தனது கைப்பையினுள் வைத்திருப்பாள். திடீரென ஏற்படும் விபத்தின்போது உடனடியாக உடலுறுப்புக்கள் தேவைப்படுவோருக்குப் பொருத்திவிட வேண்டும் அல்லவா. அதனால் திறந்த மனதுடன் அவள் உடலைத் தாங்கிய மருத்துவமனையானது அணுகுண்டு வெடிப்பில் கையிழந்த ஒரு பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது. என்ன ஆச்சரியம் செயலிழந்து உயிரிழந்த கைகளில் நரம்புகள் பொருத்தப்பட்டு இரத்த ஓட்டம் சீராகப் பயணம் செய்ய உயிருள்ள கையாய் கவிதா கை அப்பெண்ணின் உடலில் செயல்பட்டது. ஆச்சரியம் அப்பெண் ஒரு எழுத்தாளர். கவிதா விரல்கள் இன்று அந்தப் பெண்ணின் உடலில் பொருத்தப்பட்டு இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றது. சாகாவரம் பெற்ற கவிதா கைகள் அவள் ஆசையை வேறு ஒரு உடலோடு இணைந்து இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அற்புதம் நாம் வாழும்போதே விஞ்ஞானம் எமக்குத் தந்த வரப்பிரசாதம். 
                                             


          அழிகின்ற உடலை நாடிநிற்பார் நாட்டத்தைத் தீர்க்கத் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வாருங்கள். 
   
   உயிரே பொய்யென்னும் போது - இவ்
       உடலாற் பயனென்ன
      உதிரம் உறைந்து உடலும் அழுகி
      எரியில் பொசுங்கி எரிசாம்பலானால்
      உலகுக்காவதென்ன உமக்கும் ஆவதென்ன – அதைப்
      பிற உயிர்க்காய் உவந்தளித்தால்
      பயனாகும் இவ்வுலகில் 

  அனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் தின வாழ்த்துகள் 

                 
  செவ்வாய், 13 டிசம்பர், 2011

  தலைப்பாகை


                                                     
                            மோவாயில் முறுக்கு மீசையும், தலையிலே தலைப்பாகையும், தோளிலே சால்வையும் அணிந்து வரும் கம்பீரத் தமிழன் எமது கலாச்சார பாரம்பரியத்தை படம் பிடித்துக்காட்டுகின்றான். காலத்தின் மாறுதலால், கலாச்சாரக் கலப்பினால், அந்நிய மோகத்தினால் நாம் தேசிய ஆடைகளை மறந்து அல்லது மறுத்து காலத்திற்கேற்பக் கோலம் மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும் எமது கலாச்சார நிகழ்வுகளில் அதை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது பெருமைப்படத்தக்கதாக இருக்கின்றது. தற்பொழுது திருமணவீடுகளில், மணமகன், தோழன் போன்றவர்களும், திருமணத்தின் போது மாமன் தேங்காய் உடைக்கும் போது கட்டுகின்ற இந்தத் தலைப்பாகை என்ற சொல்லானது முண்டாசு, தலைப்பா, தலைக்கட்டு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.                    
                           
                  ஆரம்பகாலப்பகுதியில் தமிழர்கள் தலைப்பாகை அணிந்து கொண்டு நடமாடிய விபரங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் இது வழக்கு ஒழிந்து போனாலும் அதனை மறவாமல் இருப்பதற்காகத் தமிழர்கள் திருமணவீடுகளில் இதைக் கைக்கொள்ளுகின்றார்கள்.

                                      இத்தலைப்பாகையானது தலையில் வந்து அமர்ந்ததன் உண்மைக்காரணம் என்ன என்பதை என் தேடல் மூளை தேடித்தவித்த பின் அதற்கான விபரத்தையும் தெரிந்து புரிந்து பிறர் தெரியச் செய்ய விழைந்தது. மூளைக்குத் தேவையான கதிர்வீச்சுக்கள் வெளியேறாமல் இருப்பதற்காகவே இத் தலைப்பாகை அணியப்படுகின்றது. மூளை என்பது எமது உடலின் மூலஸ்தானம். அதாவது எமது உடலின் Head of the Department. இதில் ஏதாவது பிழை ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் கடினத்தை அநுபவிக்க வேண்டியதுதான். எமது உடலினுள் ஞானசக்தி, போகசக்தி என்பன உண்டு. ஞானசக்தி மூளையிலும் போகசக்தி அடிவயிற்றிலும் இருக்கின்றது. எனவே இச் சக்திகள் வெளியேறாமல் இருக்க தலைப்பாகை அணிவது வழக்கமாக இருந்தது. இது கோயில் கோபுரம் போன்ற நிலையில் கட்டப்பட வேண்டும். கூராகக் கட்டும் போது மனிதசக்தியும் பரசக்தியும் நேராக அமையும். அதாவது பூமியிலுள்ள சக்தி காலினூடாக உடலை வந்தடைந்து மனிதசக்தியாகின்றது. இது எமது உடலினுள் உள்ள சக்தியாகும். அத்துடன்; வெளியுலக சக்தியாகிய பரசக்தி நேராக  இணைகின்றது. இதுவே இந்த தலைப்பாகை அணியும் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டது. எதுவும் காரணம் இல்லாமல் செய்யப்படவில்லை. காரணம் புரியாமலே நாம் காலத்தைக் கழிக்கின்றோம். 
           
                                            எப்போதோ பாக்யா என்னும் புத்தகத்தில் நான் வாசித்து ரசித்தவிடயத்தை இங்கு பகிர்ந்து கொள்ளுகின்றேன். குதிரையின் மீது போர்வீரன் அமர்ந்திருக்கும் சிலை உள்ளதல்லவா. அச்சிலையில் பலவேறு வடிவங்கள் இருக்கின்றன. குதிரை முன் இரு கால்களையும் தூக்கியவாறு சிலை அமைந்திருந்தால் அதன் மேல் அமர்ந்திருப்பவர் சண்டையின்போது இறந்து விட்டதாக  அர்த்தமாகின்றது. குதிரை ஒரு காலை மட்டும் தூக்கிக் கொண்டிருந்தால், போரில் காயம் பட்டு பின்னர் இறந்ததாக அர்த்தமாகின்றது. குதிரை எந்தக் காலையும் தூக்காமல் இருந்தால் அவர் இயற்கையாகவே மரணம் அடைந்தார் என்று அர்த்தமாகின்றது. எனவே காரணத்தோடுதான் பல விடயங்கள் நடைபெறுகின்றன. அவற்றை அறிந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மத்தியில் வளர வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கையில் எதற்கும் ஆமாப்போடும் கோழைத்தனம் விரட்டியடிக்கப்படும்.

  வெள்ளி, 9 டிசம்பர், 2011

  கட்டுப்பாடும் சுதந்திரமும்

  உந்தியில் தங்கியபோது
  உந்தியே வரம்பு
  உருண்டதும் உதைத்ததும்
  கருவறையுள் கட்டுப்பாடு
  உதித்ததும் பூமியில் சுதந்திரம்
  உருவாகும் உயர் வாழ்வுக்கு
  மனக் கட்டுப்பாடு
  சந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு
  சரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு
  சிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்
  மிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட
  வாழ்வின் கறை சுமக்க வழி விடாத
  பெற்றோர் கட்டுப்பாடு

  விலங்குகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை
  வீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு
  மீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை
  நீரைத் தாண்டினால் நிலைக்கா துலகில்

  சொற்சுதந்திரமென நாவடக்க மறந்தால்
  சொல்லுக்கேது சுதந்திரம்
  புலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்
  குலநடுக்கம் குலத்தையே அழிக்கும்
  கட்டவிழ்ந்த மந்தைகளாய் மேய்ப்பாரிழந்தால்
  கெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்
  வாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்
  வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்
  சீரழியாது வாழ்வைச் சிறப்பாக்க
  பேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு


  01.12.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது

  வியாழன், 1 டிசம்பர், 2011

  மனிதனும் மிருகமாவான்

            
                

  சித்திரத்தில் கறை படிந்தது போல் அந்தச் சின்னவன் வதனம் களை இழந்ததும் ஏன்? சிட்டுக்குருவி போல் வீட்டடைச் சுற்றிச்சுற்றி வந்த அவன் பாதங்கள், ஒரு அறையினுள் அடைபட்டுக் கிடந்ததும் ஏன்? வீடு முழுவதும் கலகலக்கும் அவன் ஓசை, இன்று நிசப்தமாகியதும் ஏன்? துருதுருவென்ற பார்வை ஒரு புள்ளியை விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததும் ஏன்? இத்தனையும் ஏன்? மூடப்பட்ட அறையினுள் தாயின் மேலங்கியை  அணைத்தபடி தனது அறைக்கட்டிலில் சுருண்டபடியும் கண்கள் மட்டும் எதையோ நினைத்தபடியும் நிலைக்குத்தி நின்றன. மெல்லக்கதவு திறந்து நுழைந்த மருத்துவரை ஓடிவந்து மல்யுத்தக்காரனைப்போல் இரு கைகளாலும் மாறிமாறித் தாக்கினான், ரகு.
               
                             அவன் தாய் சாந்தமாய் இருப்பதனாலோ சாந்தி என்று பெயர் பெற்றாள். அவன் உருவாகக் கரு என்னும் ஆய்வுகூடம் சுமந்தவள்.  உடலுக்குத் தோல்போல் ரகு வளரக் காத்துநிற்பவள். தாலி சுமக்கக் காரணகர்த்தா கடமைக்குத் துணையாய்க் காலமும் கழித்தாள். கணவன் வருவாய்க்கு அவள் கூட்டல் கணக்கு. அவன் இன்பத்திற்கும், உறவினர் நம்பிக்கைக்கும் அவள் பெருக்கல் கணக்கு. இவ்வாறே குடும்பத்தின் முதுகெலும்பு என்னும் படி கணவன் முழு நம்பிக்கையின் பெட்டகமானாள். நம்ப வைத்தாள். 
                         
                                வேலைக்குச் சென்றவள் திரும்பும் நாழி கடந்ததால், மூளைக்குள் பிரளயம் வந்தது போல் கலங்கினான், ரவி. அவன் மூளையின் இதயத்தின் முக்கால்ப் பகுதி சாந்தியல்லவா! அவன் இதயத்தில் மகுடம்;;; சூட்டியல்லவா அவளை வைத்திருக்கின்றான். திடீரென ஒரு எண்ணம் பளீச்சிட்டது. அவள் கைத்துணையான கைத்தொலைபேசியுடன் தான் சென்றாளா! என்று அறியும் அவாவில் அவள் பீரோவைத் திறந்தான். அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களிடையே மோப்பம் பிடிக்கும் நாயானது, அவன் விரல்கள். கைத்தொலைபேசியுடன் இணைந்தே இந்த ஆச்சரியமும் அவனுக்குக் காத்திருந்தது. மனைவி என்னும் அந்தஸ்துக்கு ரவியும், காதல் என்னும் போதைக்கு அந்தக் கடிதக் காதலனும் இருப்பதை, விரசமாய் அவளால் எழுதப்பட்ட அந்தக் கடித அத்தாட்சி காட்டி நின்றது. விறுவிறு என்று ரவியின் இரத்தக் கொதிப்பு மேலோங்கியது. மனிதன் இரு முகத்தில் மறைந்து நிற்கும் மறுமுகம் மட்டுமே இப்போது வெளிப்பட்டது. பதுங்கிய புலியானான். கதவுதிறக்கும் ஓசை கேட்டு ஓடிய மகனை உச்சி மோந்தாள், சாந்தி. காலதாமதத்தின் காரணம் அறியும் ஆவல் ரவியிடம் எள்ளளவும் இருக்கவில்லை. இன்று ரவியின் சமையலைச் சுவை பார்த்த சாந்தியிடம் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வாகனம் அண்டை வந்தடை என்று கட்டளையிட்டு வெளியே சென்றான். அவளின் முகத் திரையைக் கிழிக்கும்படி உத்தரவிட்டபடி அவன் இதயம் அளவுக்குமீறித் துடித்துக் கொண்டிருந்தது.                 
                
                                            மகனுடன் கீழே வந்த சாந்தி,  அவனைப் பின் இருக்கையில் இருத்திப் பாதுகாப்புப்பட்டி அணிவித்தாள். அவளுக்காய் முன் இருக்கைக் கதவு திறக்கப்படவில்லை. கதவினுள் இருந்தவண்ணம் தனது கையில் இருக்கும் கடிதத்தை வீட்டினுள் வைத்துவரும்படி கட்டளையிட்டான். கடிதத்தைப் பெறுவதற்காக தன் கழுத்துடன் இணைத்தே கரத்தையும் நீட்டினாள். திடீரெனச் சாளரம் மேலெழுந்தது. அதனுள் பட்டென அவளது கழுத்து சிக்கிக் கொண்டது. அலறத் தொண்டை இடம் தரவில்லை. ஆதரவு கேட்டு உயிர் நிற்கவில்லை. ஓவென்று அலறிய மகன் மயக்கமானான். 
            
             பொய்மைக்கு இங்கு மரணதண்டனை. நம்பிக்கைத் துரோகத்திற்குச் சாவுமணி. சந்தர்ப்பங்களாலும் சூழ்நிலைகளாலும் மனிதன் மிருகமாகின்றான். தன்னைத் தாக்கவருபவரைக் கண்டாலே மிருகம் துடித்தெழும். அழகாய் நடித்த அந்தப் பெண்ணை அழித்தே ஆகவேண்டும் என்று ஆத்திரம் கொண்ட அவன் செய்கை, இப்படியான பெண்களுக்கு எச்சரிக்கை. ஆனால் அநாதரவான அந்தக் குழந்தைக்கு ...........

  வாசகர்களே இக்கதை பற்றிய உங்கள் கருத்துக்களை இதில் பதிவிடுங்கள்.
                          

  செவ்வாய், 22 நவம்பர், 2011

  திருநீலகண்டன்
  மதங்களிலே பழமையானது இந்துமதம் என்பது யாவரும் அறிந்ததே. சைவம், வைணவம், சாக்தம், சைளமாரம், காணாபத்யம் என்பன இந்துமதத்தினுள் அடங்குகின்றன. சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சமயம் சைவசமயம் ஆகும். இச்சிவபெருமான் திருநீலகண்டர் எனவும் சைவசமயத்தவர்களினால் அழைக்கப்படுகின்றார். திருநீலகண்டர் என்னும் நாமத்தினால் சிவபெருமானை அழைத்ததன் உண்மைக் காரணம் என்ன என்பதைப் பராணக்கதை எடுத்துரைக்கின்றது. உலகத்திற்கு உண்மை ஞானத்தை முதலில் எடுத்தியம்பிய சைவசமயத்தின் ஆன்மீகக் கதைகளின் மெய்ப்பொருள் அறியாது, கதையை மட்;டும் உள்வாங்கிக் கருத்தை மட்டும் விட்டுவிட்டதனால், மதம் நின்று நிலைக்கின்றது. இயற்கை மறைபொருளாக மறைந்து கிடக்கின்றது.
                   
                                   புராணக்கதை திருநீலகண்டர் என்னும் நாமத்திற்குக் கொடுக்கும் விளக்கமாவது,  தேவர்களும் அசுரர்களும் நீண்ட காலம் வாழவேண்டும் என்று சிவனாரிடம் வேண்டிக் கொண்டனர். அப்போது சிவபெருமானும் பாற்கடலைக் கடைந்து, அதனுள் இருக்கும் அமுதத்தை அருந்தினால், நீண்டகாலம் உயிர்வாழலாம் என்று எடுத்துரைத்தார். அப்போது தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது விஷம் பிரிந்து வெளியேறியது. அவ்விஷத்தை சிவபெருமான் எடுத்து உண்டதாகவும் அவ்விஷமானது சிவபெருமானைக் கொன்றுவிடும் என்று எண்ணிய உமையம்மையார், உடனே சிவபெருமானுடைய கழுத்தைப் பிடித்ததாகவும், அதனால் அவ்விஷமானது சிவபெருமானுடைய  கண்டத்தில் தங்கிவிட்டதாகவும் இதனாலேயே சிவனுக்குத் திருநீலகண்டர் என்ற ஒரு பெயர் நிலவுவதாகவும் புராணக்கதை புனையப்பட்டது. அத்துடன் அசுரர்கள் அமுதத்தை உண்டால் நீண்டகாலம் உயிர்வாழ்ந்துவிடுவார்கள். அதனால், உலகுக்குத் தீங்கு ஏற்படுமே என்று கருதிய கிருஷ்ணபரமாத்மாவும் அழகான பெண் வடிவம் தாங்கி அங்கு தோன்ற அசுரர்கள் கவனமெல்லாம் அப்பெண்வடிவில் இலயிக்க, மறுபுறம் சிவபெருமானும் தேவர்களுக்கு அமுதம் முழுவதையும் கொடுத்து முடித்துவிட்டதாகவும் அக்கதை கூறுகின்றது. இதுவே புராணக்கதை கூறும் விளக்கமாகப்படுகின்றது. 
                           
                     ஆனால், அற்புதமான அண்டவெளி இரகசியத்தை சுவையான கதையாக இந்து மதம் கூறியிருக்கின்றது என்றால் அதிவிவேகமுள்ள மக்கள் அக்காலத்தில் வாழ்ந்து மடிந்திருக்கின்றார்கள் என்ற உண்மை புலனாகின்றது. ஆனால் இந்த அண்டவெளி இரகசியத்தின் உண்மை விளக்கத்தை எடுத்துரைக்காது சமயத்தோடு எடுத்துரைத்த காரணத்தினால், விளக்கம் மறைந்து போக மதம் நின்று நிலைக்கிறது.  இப்போது விளக்கத்திற்குள் வருகின்றேன். பாற்கடல் என்றால், என்ன? பால் போன்றிருக்கும் கடலல்லவா! அதுவே ஆங்கிலத்தில் Milkyway  என்றும் ஜேர்மனிய மொழியில் Milchstaße  என்றும் அழைக்கப்படும் அண்டவெளியாகும். தூரத்தில் நின்று பார்க்கும் போது பால் போன்று வெண்மையாகவே காட்சியளிக்குமாம். அதனாலேயே எம்மவரும் பாற்கடல் என்றழைத்தார்கள். 

                     மேருமலை என்னவென்று அறிய ஆவல் மேன்படுகிறதல்லவா! அதுவே எம்மையெல்லாம் காக்கின்ற கதிரவன். கதிரவனை பக்கமாக நின்று பார்த்தால், மேல் நோக்கி எரியும் மலையாகத்தான் காட்சியளிக்கும். உச்சியில் நின்று பார்த்தால், புள்ளியாகவே, அதாவது எமக்குத் தெரிவது போன்றே காட்சியளிக்கும். மேரு என்பது பொன். மேருமலையெனில் பொன்மலை என்பது புலப்படுகின்றது.  எனவே பொன்மலை என்பது எம்மைக் காக்கும் சூரியன் என்னும் உண்மை மிக இலகுவாகப் புரிகிறதல்லவா

                    அவ்வாறெனில் வாசுகி என்னும் பாம்பு! அதுவே சூரியனைச் சுற்றி வலம் வருகின்ற அந்த 9 கிரகங்களும் ஆகும். கிரகங்கள் ஒன்பதும் தலையாகவும் அவற்றின் நிழல் வால் போன்றும் தூர நின்று பார்ப்பவர்களுக்குத் தோன்றமளிக்குமாம். இதனையே மேருமலையைச் சுற்றிவருகின்ற வாசுகி என்ற பாம்பாக எடுத்துரைத்தனர். 

                     சூரியன் தோற்றத்திலும் கிரகங்களின் சுழற்சியிலும் தோன்றிய நச்சுவாயுவானது அண்டவெளியிலே கலந்திருக்கின்றது. இது உயிரினங்கள் தோன்ற முடியாத நச்சு நிலையாகும். அது சுழன்று பூமிக்கு வருகின்றது. உலகெங்கும் பரந்திருக்கும் இந்த நச்சுவாயுவினால், உலகமக்கள் அனைவருக்கும் பாதிப்பே. அது எந்த வடிவில் என்று கூறமுடியாது. ஆனால், அழிவு நிச்சயமாகிறது. அந்த அழிவைத் தருகின்ற நஞ்சை கண்டத்தில் தாங்கியவராக சிவபெருமான் உருவகிக்கப்பட்டார். நஞ்சை விழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது. இரண்டும் ஆபத்தே. ஆனால் உலகெங்கும் நஞ்சு இருப்பது நிச்சயம். அவரவர் உடல்நிலைக்கேற்ப நாம் நஞ்சற்ற காற்றைச் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வெண்குருதிசிறுதுணிக்கை எம்மைப் பாதுகாக்கின்றது. எனவே கண்டத்தில் நஞ்சை அடக்கிய சிவனும் அறிவின் படைப்பே. 

                       இப்பிரபஞ்சமே சிவனின் வடிவம். அவர் கழுத்தில் தங்கிய விஷமே இப்பிரபஞ்சத்தில் தங்கியுள்ள விஷமாகும். ஒரு உடலில் கழுத்துப்பகுதியில் விஷம் தங்கினால், அவ்விஷத்தை விழுங்கவும் முடியாது, துப்பவும் முடியாது. துப்பினால் பிறருக்குக் கேடு. விழுங்கினால், விழுங்கியவருக்குக் கேடு. இதனாலேயே திருநீலகண்டர் வடிவில் கழுத்தில்(கண்டம்) விஷம் தங்கியதாக கதை புனையப்பட்டுள்ளது

                        இங்கு அசுர தேவர்களை தோற்றம் தான் யாது! என்ற ஆராய்ச்சியில் இறங்கினால், சுரம் அசுரம் என்னும் இரண்டு பதங்களையும் எடுத்து நோக்கினால், . சுரம் என்றால் தேவர்கள் அசுரம் என்றால், அசுரர்கள். இதன் விளக்கம் தான் யாது! நியூட்டனின் விதி தரும் விளக்கமே இதன் விளக்கமாகும். எதற்கும் ஒரு செயலுக்கும் எதிர்ச்செயல் இருக்கும். என்பதாகும். தீமை இருந்தால், நன்மை இருக்கும். மகிழ்ச்சி இருந்தால், துன்பம் இருக்கும். எனவே தேவர்கள் இருந்தால் அசுரர்கள் இருக்க வேண்டும் அல்லவா! உலகில் இந்த இரண்டுவகை மனிதர்கள் வாழுகின்றார்கள்: அவர்களே இந்த அசுர தேவர்கள் ஆவார்கள். 
                
                      எனவே அழகான அற்புதமான இயற்கை நிகழ்வுகள், அக்கால அறிவாளிகளின் தவறான வெளிப்படுத்தலால் உலகிலே ஆன்மீகம் புகுந்தது. பகுத்தறிவு அழிந்தது. திருநீலகண்டர் வடிவம் தெய்வமானது. இயற்கை நிகழ்வு தெரியாமல் போனது. இவ்வாறு பல இன்னும் இருக்கிறன தொடருவேன். பொறுத்திருங்கள்.
                                                     

  வெள்ளி, 18 நவம்பர், 2011

  மழலைகள் உலகம் மகத்தானது


                                                     தேன் வந்து காதில் பாய
  சிந்திய சிரிப்பில் எந்தனை மறந்து – என்
  இதழ்கள் என்னை அறியாது விரிய
  இதயப் பெட்டகம் இன்ப அருவியில்
  மூழ்கிப் பெருக்கெடுத்து ஓடியது

  வான் மழையில் நனைந்தால் குளிர் எடுக்கும் மழலை மொழியில் நனைந்தால் சுவை எடுக்கும். தேன்சுவை மிகைப்படின் திகட்டும். மழலைத்தேன் மிகைப்படத் தித்திக்கும். 
          
                                            கவிதையும் காவியமும் இலக்கியமும் படைக்கப்படலாம் அவற்றில் சுவை ததும்பும். ஆயினும் சிறுகுழந்தை தனது குரலெடுத்து உதிர்க்கும் வார்த்தைகள், இதயத்தில் இன்ப உணர்ச்சியை தூண்டி கவலைக்கு விடைகொடுக்கும். 
           
                                 உயர்ந்த கருத்தை ஏற்க உள்ளம் ஒன்றி நிற்க வேண்டும். ஆனால், மழலை மொழி தானாகவே செவிபுலன்களைக் கவர்ந்துவிடும். எவ்வளவோ பரபரப்பான வேலையின் ஈடுபாட்டையும் குறைத்துவிடும். உடம்பின் இரத்த ஓட்டம், இதயத்துடிப்பு, நுரையீரல் இயக்கம் அனைத்தையும் ஒருவகை ஒழுங்குமுறைக்கு இயைபுபடுத்தி இயங்க வைக்கும் சக்தி மழலைமொழிக்கு உண்டு. குழலிசையிலும் குயிலிசையிலும் அருவி இசையிலும் கேட்டுணர முடியாத ஒரு நுண்ணிய வேறுபாட்டை மழலைமொழியில் காண்கின்றேன். 
         
                           எவ்வாறு மழலைமொழியில் மகத்தான சக்தி படைக்கப்பட்டுள்ளது. அடிக்க உயர்த்திய கைகளையும் அணைக்க வைக்கும் அபாரசக்தி அதற்குண்டு. அம்மா என வாயெடுத்து முதல்மொழி தொடுக்க இதயராகம் இன்பஇசை மீட்டத்தொடங்கும். சொல் இணைத்து வாக்கியம் வடிக்க சுவை தொடராய் வடிந்து வரும். களங்கமில்லா மனதிற்கு எடுத்துக்காட்டு அவர்கள் எண்ணங்களில் வடிக்கும் சொல்லோவியம். குழந்தைகள் வளர்கின்ற போது அவர்கள் எண்ணங்களில் வில்லங்கம் தோன்றும் போதுதான் குரலிலும் கரகரப்பும் மாற்றங்களும் ஏற்படுகின்றது போலும். 
          
                                     மழலை மொழியில் மயங்கி நிற்கும் யாம், அதன் அழகுச் சிரிப்பில் மதிமயங்கி நிற்பது ஒன்றும் வேடிக்கை இல்லையே. இங்கு நான் தந்திருக்கும் கிளிப்பை அழுத்திப் பாருங்கள். ஒரு சில நிமிடங்கள் உங்களை மறக்கின்றீர்கள் அல்லவா? உங்களை அறியாமலே உங்கள் உள்ளங்களும் உதடுகளும் சிரிக்கின்றன அல்லவா? இந்த அபார சக்தியை என்னென்று யாம் அழைப்பது. இவ்வாறான மழலைகள் உலகத்து அனைத்துக் குழந்தைகளுக்கும் என் பறக்கும் முத்தங்களைப் பறக்கவிடுகின்றேன்.


           
                                            இவ்வாறான சக்தி படைத்த குழந்தைகளில் சில, குமரனாய், குமரியாய், முழுமனிதனாய் மாறுகின்ற போது குணநலன்கள், போக்குகள், பேச்சுகள், நடத்தைகள் அனைத்தும் மாறுபட்டு சில சமயங்களில் பெற்றோரால் தாக்குப்பட்டு சில சமயங்களில் மற்றோரால் ஏச்சுப்பட்டு, உலகப்பார்வையில் ஓரங்கட்டப்படுகின்றமைக்கு யார் காரணம்? கள்ளங்கபடமற்ற பிஞ்சு உள்ளம் கள்ளம் நிறைந்த வஞ்ச உள்ளமாய் வடிவெடுப்பதற்கு யார் காரணம்? எழுதப்படாத வெள்ளைக் கடதாசியாய் உலகில் அவதரிக்கும் குழந்தை மூளை என்னும் பாத்திரத்தில் நிரப்புகின்ற அநுபவ உணவுகள்தான் எவை?
                    
                                      குழந்தையாய் தவளும்போது அன்பாய் அனைத்த பெற்றோர், அக்குழந்தை வளருகின்ற போது தமது பல அபிலாசைகளை அக் குழந்தைமேல் புகுத்துகின்றனர். வயலின் இசையைப் பிள்ளை இரசிக்கின்றதா? அநுபவிக்கின்றது? முழு ஈடுபாட்டுடன் அவ் இசையில் இருக்கின்றதா? என்பதைப் பரிசீலனை செய்யாமலே அப்பிள்ளை வயலின் வித்துவானாய் வரவேண்டும் என்று பெற்றோர் நினைக்கும் போது வீட்டில் சிக்கல் ஏற்படுகின்றது. அடுத்த வீட்டுப்பிள்ளைக்கு முடிகின்றது உன்னால் மட்டும் ஏன் முடியவில்லை? என்றால், அப்பிள்ளை வேறு இப்பிள்ளை வேறு என்று பெற்றோரால் புரிந்து கொள்ள முடியவதில்லை. இங்கு பெற்றோரின் முதல் தவறு தென்படுகின்றது. ஒரு பிள்ளையுடன் தன் பிள்ளையை ஒப்பீட்டுப் பார்க்கும் போது பிள்ளையின் மனதில் வஞ்சனை வளர்கிறது. பெற்றோரின் நிராகரிப்பும், காட்டும் வெறுப்பும் பிள்ளையின் நடத்தையைச் சீர்குழைக்கும் என்பதும் உண்மையே.
                  
                                                      நல்ல வளர்ப்பு முறையில் வளருகின்ற பிள்ளை தவறுகளைச் சந்திக்கின்றது என்றால், அங்கு சூழலும் நட்பும் ஆட்சி புரிகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சூழல் பிள்ளையின் பழக்கவழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது என்றால், பெற்றோர் சூழலை மாற்றுவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பிள்ளையின் சுதந்திரத்தைக் அளவுக்கதிகமாகக் கட்டுப்படுத்துவதை விட்டு அவர்கள் போக்கில் சென்று மனமாற்றத்தை ஏற்படுத்தும் வழிவகைகளைச் செய்தல் வேண்டும். சொற்களுக்குப் பொருள் இருப்பது மட்டுமல்ல, அதன் பொருளுக்கேற்ற வலிமையும் இருக்கின்றது. இதைத்தான் கட்டுரைத்தல் என்பார்கள். பெற்றோர் தமது பிள்ளைகளைச் சரியாக அறிந்து கொள்ளாததும், அவர்களை மதிக்காததும், அவர்கள் நிலையில் மாறுதல் காணப்படுவதற்குக் காரணமாகின்றது. அவர்களைப் போற்றிப்பாருங்கள். சொற்களின் வலிமையைப் புரிந்து கொள்வீர்கள். மனமானது ஒரு சக்தி நிலையம். அதன் சக்தியை அதிகப்படுத்துவதும் குறைப்பதும் பெற்றோர் கையிலேயே தங்கியுள்ளது. இளம்வயதிலே குற்றவாளிகள் உருவாகுவதற்கு பாரம்பரியம், சுற்றப்புற சூழல், உடல் அமைப்புக் குறைபாடு, மூளையில் ஏற்படும் இரசாயணப் பொருள்களின் மாற்றங்கள் போன்றவையும் பொதுக் காரணங்களாக அமைகின்றன. இவற்றிலும் கூடிய அக்கறை காட்ட வேண்டியது வளர்ந்தோர் கடமையாகும். 
                   குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. பெற்றேரில்  சிலர் இப்பரீட்சையில் வெற்றி பெறுகின்றார்கள். சிலர் தோல்வியைச் சந்திக்கின்றார்கள். வெற்றி பெறுவதனால் எதிர்கால உலகம் பிரகாசம் அடைகின்றது. தோல்வியடைவதனால் எதிர்கால உலகம் சீரழிகின்றது. 
                சீனுவாசன்.கு அவர்கள் அழைப்பின் பெயரில் மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடரை நானும் எழுதினேன். இத்தொடர் இடுகைக்காய் நானும் நால்வரை அழைக்கின்றேன். மழலைகள் உலகு அழகுபெற நீங்களும் நால்வரை அழையுங்கள். நான் அழைப்பவர்கள்.

  வேதா இலங்காத்திலகம்
  மாலதி 
  மனோ சாமிநாதன்
  சக்தி சக்திதாசன்
  ஞாயிறு, 13 நவம்பர், 2011

  தனிமை இனிமை தராது


                                              

  அடுத்த வீட்டை ஜன்னலோரம் நின்ற வண்ணம் ஏக்கத்துடன் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரமேஷ். அழகான கண்கள். ஏக்கத்துடன் எதையோ விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன. மகனின் அருகே சென்ற அன்னையின் கண்களும் அடுத்த வீட்டை ஆர்வமாய் நோக்கின. திக்கென்றது இதயம். சகோதரர்கள் இணைந்து ஓடிப்பிடித்து இழுத்துப்பறித்துக் குதூகலமாய் விளையாட்டில் தம்மை மறந்து இலயித்திருந்தனர். மகனை மெல்ல அணைத்தாள், தாய். '' எனக்கு ஏனம்மா தம்பி தங்கை இல்லை?|| இப்படிக் கேட்பானென அவள் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, '' இன்னும் ஒரு பிள்ளை இருந்தால், உன்னில் உள்ள பாசம் குறைந்துவிடும் என்று நினைத்த நானும் உன் அப்பாவும் உனக்கொரு சகோதரன் கிடைக்க விரும்பவில்லை|| என்று ஆதரவாகக் கூறினாள். ஆனால் மகனோ, '' போங்கள் அம்மா. நீங்களும் விளையாடுவதில்லை. விளையாடினாலும் கொஞ்சநேரத்தில் அலுத்து விடுவீர்கள். இல்லையென்றால், வேறு ஏதாவது வேலை பார்ப்பீர்கள். அப்பாவும் வேலை, வேலை, வேலை. எனக்குக் கதைக்கவும் படிக்கவும் துணை வேண்டும். யாருடனும் விளையாடப் போகவும் விடுகிறீர்கள் இல்லை. தனியே விளையாடி, விளையாடி அலுத்துப் போய்விட்டுது அம்மா. ஒரு பிள்ளையைப் பெறுவது மட்டும் கவலையில்லை அம்மா! ஒரு பிள்ளையாகப் பிறப்பதும் பெரிய கவலை. மகனை வாரிஅணைத்தாள் தாய். கட்டி அணைத்து இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டாள். தன் தவறை அந்தச் சின்னமனம் சுட்டிக்காட்டியதை நினைத்து கோபப்படும். சாதாரண தாயல்லவே அவள். '' வா! நாங்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானத்திற்கு உனது நண்பன் டெனீஷையும் கூட்டிக் கொண்டு போவோம்'' என்றாள். ''ய்யா''என்று துள்ளி எழுந்தான் மகன்.   தன் வயதுப் பிள்ளைகளுடன் விளையாடுவதில் ஏற்படும் இன்பம் தன்னுடன் விளையாடுவதில் இருக்காது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.  
            

                 
                                                அநுபவம் குறைந்த இளமைப் பருவம் அறிவுரை ஏற்காது. அநுபவித்துப் பார்க்கும் போதுதான், அடுத்தவர் கூறிய அநுபவ உண்மைகள் புலப்படும். காலங்கடந்து எடுக்கும் தீர்மானங்கள் கைகொடுக்காது. தனியே வளருகின்ற பிள்ளைக்கும்; பல பிள்ளைகள் உறவினர்களுடன் வளருகின்ற பிள்ளைக்குமிடையே பாரிய வேறுபாடு இருக்கின்றது. 1000 ஒயிரோக்களுக்கு விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுத்து உயிரற்ற பொருளைத் தடவி விளையாடி ஒரு பிள்ளை பெறுகின்ற இன்பத்திற்கும் தன் சகோதரருடன் சண்டை செய்து, ஒருவர் பொருளை ஒருவர் பயன்படுத்தி, ஒருவருக்காய் மற்றவர் விட்டுக்கொடுத்து, கவலைப்பட்டு, அன்பு காட்டி, ஆதரவு தந்து, பெறுகின்ற இன்பங்களுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. பிள்ளைச் செல்வம் என்பதன் பொருள் இதுவல்லவா. ஒரு பிள்ளையைப் பெற்றவர்கள், உண்மையில் வறியவர்களே. புலம்பெயர்வு மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்களில் மிகப் பாரதூரமான பாதிப்பு இதுவும் ஆகும். ஆளுமையுடன் குழந்தை வளர கூட்டுக்குடும்ப வாழ்க்கை கைகொடுப்பதுடன், குதூகலமான உளவியல் வாழ்க்கைக்கும் கைகொடுக்கின்றது. நமது கலாச்சாரம் சீரழிந்து போகுமென்று வீட்டுக்குள் தனிப்பிள்ளையைப் பூட்டி வைப்பதனால், அப்பிள்ளையின் எதிர்கால பிரகாசமான வாழ்வு மழுங்கடிக்கப்படுகிறது. உலகஅறிவு குறைகின்றது. தனிமை சிறுவர்களுக்குச் சுமையே. அதைக் கலைவதற்குரிய வழிவகைகளைக் கையாள்வது பெற்றோர்களின் கடனே.

  ஞாயிறு, 6 நவம்பர், 2011

  7 ஆம் அறிவு திரைப்பட விமர்சனம்.
  காலம் கடந்த பதிவானாலும் கட்டாயம் பதியவேண்டிய பதிவாகையினால், கரங்கள் வடிக்கின்றன. போதிமாதவர் ஒரு தமிழன். தமிழர்களின் ஆதித் திறமை அகிலம் புரியவேண்டும். இதை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்னும் உணர்வுடன் ஏ.ஆர். முருகதாஸ் அவர்களினால், கதை புனையப்பட்டு இயக்கப்பட்டு உழைப்பெல்லாம் கொட்டி சூர்யாவின் முத்திரை பதிக்கப்பட்ட நடிப்பால், வெளிவந்த திரைப்படமே 7ஆம் அறிவு. தமிழின் மேல் கொண்டுள்ள பற்று இத்திரைப்படத்தில் நன்றாகப் புலப்படுகின்றது. முதலில் நிறைவைக் கவனித்து முடிவில் குறையையும் கண்காணிப்போம். இது விமர்சகர் கடமையல்லவா? 
               

                                    ஒரு திரைப்படம் எடுக்கவேண்டுமானால், அதில் காதலும் வீரமும் காஸ்யமும் கலந்து வெளிவருவது தமிழ் திரைப்படக்கலாசாரம். அதன்படியே பல எண்ணங்களை மனதுள் அடக்கினாலும் அதில் காதலையும் புகுத்த வேண்டும் அதில் நாட்டமுள்ள ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்னும் எண்ணத்தில் காதல் புகுத்தப்பட்டுள்ளது. காஸ்யம் இணைந்துள்ளது. போதிதர்மர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் இவர் மருத்துவக்கலை, தற்பாதுகாப்புக்கலை, மனவசியப்படுத்தும் கலை (Hypnotism ) போன்ற கலைகளில் வல்லவர். சூர்யா இப்பாத்திரத்தில் புகுந்து அவராகவே மாறிக் காட்சி தோறும் அற்புதமாக நடித்திருக்கின்றார். தான் பெறும் சம்பளத்திற்கு தன் உழைப்பைக் கொட்டியிருக்கின்றார். சீனாவில் ஏற்பட்ட கொள்ளைநோயை நீக்குவதற்காக சீனாவிற்கு போதிமாதவர் அனுப்பப்படுகின்றார். அந்நோய் அவரால் நீக்கப்பட்டு அந்நாட்டு மக்களினால் கடவுளாகப் போற்றப்படுகின்றார். இவரிடம் இருக்கும் திறமைகளை சீன மக்களுக்குக் கற்றுத்தருகின்றார். இவர் உடலை தமது மண்ணில் புதைத்தால் தம் நாட்டிற்கு நன்மை கிடைக்கும் என்று நம்பிய சீன இனத்தவர்கள் நஞ்சு கொடுத்து அவரைக் கொல்லுகின்றனர். இது தெரிந்திருந்தும் அந்நஞ்சை அருந்தி போதிதர்மர் இறக்கின்றார். நஞ்சென்று அறிந்தும் போதிமாதவர் அதை அருந்தி இறப்பது நம்பமுடியாத சம்பவமாகக் காணப்படுகின்றது. ஆனாலும் கதை புனையப்பட்டதா? உண்மையாக நடந்ததா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இவ்வளவும் உண்மைச்சம்பவமாக இத்திரைப்படத்தில் சொல்லப்படுகின்றது. இனிவரும் கதை கதாசிரியரின் கற்பனையில் எழுந்த உயரியநோக்கம். வரவேற்கப்பட வேண்டியது. இக்காலத்திற்குத் தேவையானது. பாமரமக்களுக்குச் சில விடயங்களை அறியச் செய்வதற்கு திரைப்படத்துறையே சிறந்த துறை அதைப்பயன்படுத்தி ஏ.ஆர் முருகதாஸ் தன் பணியைச் செய்திருக்கின்றார். 
                 

                            சிலவருடங்களின் பின் இப்படி ஒருமனிதன் வாழ்ந்தார். அவர் திறமைகளை அவர் மரபணுக்களைக் கொண்ட ஒருவரிடம் மீண்டும் கொண்டுவர முடியும் என இந்தியநாட்டு இளம் விஞ்ஞானியான ஸ்ருதி பல இடையூறுகளுக்கு மத்தியில் முயற்சி செய்கின்றார். மீண்டும் இத்திறமைகளைக் கொண்ட இளைஞனாக சூர்யாவே உருவெடுக்கின்றார். இச்சமயம் சீனநாட்டில் பல்லவகாலத்தில் தோன்றிய அதேநோயை இந்தியாவில்; வரவழைப்பதற்கு சீனநாட்டவர் ஒருவர் இந்தியாநோக்கி அனுப்பப்படுகின்றார். அவராக நடிப்பவர் யோனிரைன்கியூ (Johnny rynk) என்கிற வியட்நாமிய ஸ்ரன்ட் நடிகர். அற்புதமான நடிப்பு. இவர் ஒருநாய்க்கு இந்நோயை ஊசிமருந்தின் மூலம் வரவழைக்கின்றார். இந்நோய் இந்தியமண்ணில் பரவுகின்றது. தன்னுடைய மனவசியப்படுத்தும் கலை மூலம் பலரை அழித்து தன் முயற்சில் முன்னேறுகின்றார். ஆனால், பல முயற்சிகளின் மூலம் இளம் விஞ்ஞானியான ஸ்ருதி சூர்யாவில் காணப்படும் மரபணுவலுவை அதிகரிக்கச் செய்து சீனநாட்டவரை அழிக்கின்றார். இதுவே கதை.
                   
       
         காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. புகைப்படக்கலைஞனுக்கு வெற்றி கிட்டியுள்து. சூர்யாவை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்துகின்ற விதம் வரவேற்கப்படுகின்றது. வியட்நாமிய கலைஞனின் சண்டைக்காட்சிகள் அதிசயிக்கும் வண்ணம் மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றது. சூர்யா மிகத்திறமையாகச் சண்டைக்காட்சிகளில் தோன்றியுள்ளார். ஸ்ருதி மரபணுக்கள் பற்றிய விளக்கத்தை பாமரமக்களும் அறியும் வண்ணம் சூர்யாவிற்கு மெதுவாக மென்மையாக விளக்கும் விதம் சிறப்பாக இருக்கின்றது. இது பற்றிய அறிவை மக்களுக்கு விளங்கச் செய்யும் பணியைக் கதாசிரியர் அழகாகச் செய்திருக்கின்றார். பார்வை மூலம் மக்களைத் தன்வயப்படுத்தும் கலையை மிக அதிகமாக எடுத்துக்காட்டியிருக்கின்றார். இக்காட்சி அதிகரித்து விட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது. இவ்வசியம் பற்றிய பல நிகழ்ச்சிகளை ஜேர்மனிய தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கின்றேன். இப்படி நடக்குமா எனப் பலரும் சந்தேகப்பட்டுப் பேசலாம். ஆனால், இது சாத்தியம் என்பது எனது ஆழ்ந்த தேடலின் மூலம் கிடைத்தது. ஆனால், இவ்வாறான திறமைகள் கெட்டவர்கள் கைகளில் அகப்படக்கூடாது என்பதே இத்திரைப்படம் எடுத்துக்காட்டும் விளக்கமாகப்படுகின்றது. இத்திரைப்படம் அலுப்பபைத் தரவில்லை ஆர்வத்தையே தூண்டியுள்ளது. இயக்குனருக்கு ஒரு சமாஷ் போடலாம். 
                        
                                              இத்திரைப்படம் புலம்பெயர்ந்தநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் இதயங்களில் இடம்பிடிக்கவேண்டும். நல்ல வசூலை அள்ளிக் கொட்டவேண்டும் என்ற எண்ணத்தில் சில இடங்களில் கதைவசனங்கள் கையாளப்பட்டிருப்பது. பாமரமக்களும் புரியும் வண்ணம் இருக்கின்றது. இனவெறுப்புக்களை ஏற்படுத்துவதில் தலையாய பொறுப்பு தொடர்பு சாதனங்களுக்கு உண்டு. இதில் திரைப்படத்துறை முக்கிய பங்குவகிக்கின்றது. பிறமக்களைப் பற்றிய பொய்யான தகவல்களை ஓயாமல் பரப்புவது, எழுதுவது, பேசுவது, விளம்பரப்படுத்துவது, போன்றவற்றின் மூலம் ஒரு இனத்தைப்பற்றி நாட்டைப்பற்றிய தப்பான எண்ணங்களை ஏனைய மக்களிடம் பரப்ப முடியும். ஐப்பானியர், Nஐர்மனியர்களைப் பற்றியும் ஆங்கிலேயர், அமெரிக்கர்களைப் பற்றியும் செய்த விளம்பரச் செய்திகள் செய்த விபரீதங்கள் யாவரும் அறிந்ததே. Nஐர்மனிய நாசிகாரரான கிட்லரின் விளம்பர அமைச்சரும் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவருமான கோயபல்சைக் கொண்டு யூதமக்களைப் பற்றியக் கொடுமையான பொய்ப்பிரசாரங்கள் செய்து இனவெறுப்பை வளர்த்தனர். ஒரு இன மக்களின் அறிவையும் பண்பையும் சிறு வாய்ப்பாட்டில் அடைத்துவிடுவதன் மூலம் மெய்மையைக் கண்டறியும் நேரமும் முயற்சியும் குறைக்கப்படுகின்றது. வடஇந்தியர் சீக்கியரை அறியாத அப்பாவிகள் சிரிப்புக்குள்ளானவர்கள் என்றும் சீனரைப் பாம்பு தின்னிகள் என்றும் இத்தாலியர் பாட்டுப்பாடிச் சோம்பித் திரிபவர் என்றும் ஸ்கொட்லாந்து கருமிகள் என்றும் கருதப்படுவது இவ்வாறு பரப்பப்பட்ட செய்திகளாலேயே ஆகும். சீனநாட்டவர்களுடன் தற்போதுள்ள பகை உணர்வை மேலும் தூண்டும் வண்ணம் இத்திரைப்படம் தற்பொழுது வெளிவந்திருப்பது. இவ்வுணர்வை மேலும் மேலும் தூண்டும் வண்ணமேயுள்ளது. 


                       ஐரோப்பிய நாடுகளில் பிறந்து வளருகின்ற பிள்ளைகளே சரளமாகத் தமிழ் பேசுகின்ற போது தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பிரபல தமிழ்நடிகர் கமலகாசனுடைய மகள் தமிழைப் பேசுகின்ற பாணி விசித்திரமாக இருக்கின்றது. 
                       

                           வழமையாக அனைத்துப் படங்களிலும் கதாநாயகன் வில்லனிடம் இறக்கும் வண்ணம் அடிவாங்குவார். இறுதியில் திடீரென வீரம் எழுந்து வில்லனை வெளுத்து வாங்குவார். இது அனைத்துப் படங்களிலும் பார்த்ததுப் பார்த்துப் புளித்துப் போன விடயம். இதுவே இங்கேயும் கையாளப்பட்டிருப்பது விரும்பத்தக்கதாக இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை திரைப்படம் எடுத்துப் பணம் உழைப்பதற்கு இன்னும் எத்தனை இயக்குனர்கள் முனைந்திருக்கின்றார்கள் என்று புரியவில்லை. தமிழர்களின் மேல் ஏற்படும் பரிதாப உணர்வை இத்திரைப்படத்தில் எடுத்துப் பேசுவது. வடிவேல் பாணியில் ஒரு சின்னத்தனமாகப்படுகின்றது. இவர்கள் எல்லாம் முனைந்து நின்று நடிகர்கள், இயக்குனர்கள் போன்றோர் இத்திரைப்படத்தில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறுதொகையாவது அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினால், இத்திரைப்படம் எடுத்த முயற்சியில் ஒரு நல்ல காரியம் பண்ணிய திருப்தி ஏற்படும். பல இழப்புகள் கண்டு தற்பொழுது அமைதியாக வாழுகின்ற இலங்கைத் தமிழர்களை சில காலம் விட்டுவைக்கலாம் என்று நினைக்கின்றேன். முதலில் சேர,சோழ,பாண்டியர் வாழ்ந்து சங்கத்தமிழ் வளர்த்து வீரம் பொருந்திய மண்ணாகக் கருதப்படும் இந்தியநாட்டில் தனித்தமிழ்நாடு பெறுவோம். அங்கிருந்து இலங்கை நோக்கிப் பின் புறப்படுவோம். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எல்லோரும் மடையர்கள் அல்ல. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் எத்தனையோ கண்ணீர்காவியங்கள் புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் காணப்படுகின்றன. யாராவது இயக்குனர்கள் தமிழர்களே தமிழர்களை அழித்த வீரசம்பவங்களையும் படமாக்கினால், இன்னும் சிறப்பாக இருக்கும் அப்போதும் சில உண்மைகள் விழித்துக்கொள்ளும். 
                

                                   7 ஆம் அறிவு ரசிக்கக் கூடியது. பழைய உண்மைச் சம்பவம் ஒன்றை வெளிக்கொண்டுவருகின்றது. மரபணு, வசியப்படுத்தல் பற்றிய தகவல்களை மக்களுக்கு வழங்குகின்றது என்னும் மட்டில் சிறப்புப் பெறுகின்றது. நல்லதையே எடுத்துக் கொள்வோம். விரோதங்களைக் களைந்தெறிந்தோம். பகுத்தறிவைப் பெருக்குவோம். பண்பட்ட சமுதாயத்தை வெளிக்கொண்டு வருவோம். 
                          

                 
  வெள்ளி, 4 நவம்பர், 2011

  டிக்டிக் டிக்டிக்
                                      டிக்டிக் டிக்டிக் 


  டிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்
  காலங் காட்டும் கடிகாரம்
  கடுகதியாய் சுழன்று வர
  வேகங்கொள்ளும் வாழ்வின் கணக்கு
  நாளும் ஒன்று இழக்கிறது.


  காலம் என்றும் நிற்பதில்லை
  கனவுபோல் மறைந்து போம்
  நெஞ்சில் கொள்ளும் ஆசைகள் 
  கொஞ்சமும் தங்க விடவேண்டாம்.


  டிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்
  படபடக்கும் இதயம் என்றும்
  பயத்தின் மிகுதி காட்டிவிடும்
  பழக்கம் இல்லா சூழலிலும்
  தவறு செய்யும் வேளையிலும் 
  துடி துடித்துக் காட்டிவிடும் 


  மனதின் சாட்சி மனசாட்சி
  வாழ்வில் என்றும் அதனாட்சி
  தேடும் உள்ளம் புகழாட்சி
  போடும் வேஷம் நிஜமாச்சு
  போலி வாழ்க்கை விஷமாச்சு.

  டிக்டிக் டிக்டிக் டிக்டிக் டிக்டிக்
  மரங்கொத்தியே! உன் உதடுகளில்
  உரங்கொள் கூர்மை யார் வைத்தார்
  மரங்களின் வலிமை அறிந்திருந்து
  கருவியை உடலில் கொண்டாயே
  பறவையே! உன் படைப்புப்போல்- மனிதப்
  பிறவியின் கருவிகள் அறிவாயோ
  பற்களின் கூர்மை பாhத்ததுண்டா
  நகங்களின் கூர்மை அறிந்ததுண்டா – தற்காப்புக்
  கருவிகள் உடலில் கொண்டும் - மனப்
  பயத்தையும் சேர்த்தே கொள்ளும் 
  வியத்தகு மனிதனும் வாழ்கின்றான்
  வீணராய் உலகில் மடிகின்றான்.

  வெள்ளி, 28 அக்டோபர், 2011

  கம்பரும் அவர் வாழ்வியலும்                   
  நாம் எமது ஐம்புலன்களினால் பெறுகின்ற இன்பத்தைவிட இலக்கிய இன்பம் பெருமை பெற்றது. அதை அப்படியே ஏற்று சுவைத்து இன்புறுவோரும் உண்டு. வாழ்க்கைக்குத் தேவையான மெய்யுணர்வைக் கொண்டு ஆராய்ந்து பார்த்துப் பொருள் கொள்வோரும் உண்டு. இலக்கியத்தில் இன்பம் பெறுவோர் கம்பரைத் அறியாதிருக்க மாட்டார்கள். கம்பன் கற்றவர்க்கும்;;;, கற்பனை சுவை சுவைத்து இன்புறுவோர்க்கும் சுவாரஸ்யமானவர் மற்றவர்க்குச் சிதம்பரசக்கரம் போலாவார்.  
     
                    இக்கம்பன் இலக்கியச்சுவை சில கண்டு இன்புற்று அவர் அகவாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றையும் எடுத்துக்காட்டி உலகுக்கு அறிவுரை பகரும் ஒரு கவிச்சக்கரவர்த்தி வாழ்வியலில் எவ்வாறு வேறுபட்டுள்ளார் என எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையேயுள்ள வேறுபாடு பற்றியும் இக்காலப் பண்புகளுடன் இவை எப்படி ஒன்றுபடுகின்றன எனவும் சற்று சிந்தித்துப் பார்ப்போம். 
          
                   கம்பர் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டவர். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் ''கம்பர் இலக்கியச்சுவை நுகரநுகர இன்பம் பயக்கும் உள்ளத்திலும் தேனூறும்'' என்று கூறுகின்றார். இக்கம்பர் தமிழ் இலக்கியவரலாற்றிலே சோழர்காலப்பகுதி என்று சொல்லப்படும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் வாழ்ந்தவர். இக்காலப்பகுதியில் அரசியல் தழைத்தோங்கிய காலம், செல்வச்சிறப்பு மிக்க காலம். இக்கால வாழ்வியல் இலக்கியங்கள் போல் அக்காலத்தில் உலகியலைச் சிறப்பித்துக் கூறும் இலக்கியங்கள் தோன்றின. கம்பர் இயற்றிய காவியம் தன்னிகரில்லாத் தலைவனை எடுத்துரைப்பதாய் இருந்தமைக்கு இதுவே காரணமாய் இருந்திருக்க வேண்டும். ஒரு தலைவனுடைய வாழ்க்கைவரலாற்றை எடுத்துக் கூறுமுகத்தால் மக்களுடைய நல்வாழ்விற்குக்கு இன்றியமையாத அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் எடுத்துரைக்கும் இலக்கியம் காவியம் அல்லது காப்பியம் எனப்படுகின்றது. மக்களுடைய நல்வாழ்வுக்கு இன்றியமையாத அறிவுரைகளை இலக்கியச்சுவை சொட்டுச் சொட்ட இராம கதை மூலம் கம்பரால் கம்பராமாயணம் இயற்றப்பட்டது. சொல்நயம், ஓசைநயம், கற்பனைநயம் என பல நயங்கள் எல்லாம் தன்னகத்தே கொண்ட கம்பராமாயணம் ஒரு கடல். அதில் மூழ்கி எடுப்பவை எல்லாம் முத்துக்கள். பாக்களின் சுவைகள் பலாக்கனியின் தேன் சுவைகள். அதில் ஒரு அற்புத சொல்நயம் ஒன்றை ரசிப்போம்

  சொல்நயம்:

  அஞ்சு வணத்தின் ஆடையுடுத்தாள், அரவெல்லாம்
  அஞ்சு வணத்தின் வேகமிகுத்தாள், அருளில்லாள்
  அஞ்சு வணத்தின் உத்தரியத்தாள், அலையாரும்
  அஞ்சு வணத்தின் முத்தொளிர்ஆரத் தணிகொண்டாள்.

  இப்பாடலில் அஞ்சுவணம் என்னும் ஒரு சொல் வேறுவேறு பொருள் கொடுத்து நயம் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முதலாவதில் ஐந்து நிறங்கள், என்றும், அடுத்து அஞ்சும் உவணம் அதாவது அஞ்சுகின்ற கருடன் என்றும் பொருள் தந்தது. அடுத்து அம்சுவர்ணம் என அழகிய பொன் எனப் பொருள் கொண்டது. அடுத்து அம்சுவள் நத்தின் எனப் பிரிந்து அழகிய பெரிய சங்கு எனப் பொருள் கொள்ளப்பட்டது. இதன் பொருளை எடுத்துநோக்கினால், ஐந்து நிறங்களில் ஆடையுடுத்தாள், பாம்புகள் எல்லாம் கண்டு நடுங்கும் கருடனின் வேகத்தைக் கொண்டவள், அழகிய பொன் கொண்டு செய்யப்பட்ட மேலாடையை அணிந்தவள், கடல்நீரில் தோன்றிய அழகிய பெரிய சங்கிலுண்டான முத்துக்களினால் செய்யப்பட்ட ஒளி பொருந்திய மாலையை ஆபரணமாக அணிந்தவள் என இலங்காதேவியைக் கம்பன் சொல்நயம் மிக்க பாடல் மூலம் வர்ணிக்கின்றார். 

                 இதேபோல் இவர் காவியத்தில் வருகின்ற ஒரு பாடலில் படிக்கும் போதே ஓசைநயம் மிக்கு  இருக்கின்ற ஒரு பாடலை எடுத்துநொக்குவோம்.

  ஓசைநயம்:

  உறங்கு கின்ற கும்பகன்ன
    உங்கள் மாய வாழ்வெலாம்
  இறங்கு கின்ற தின்றுகாணெ
    ழுந்தி ராயெழுந் திராய்
  கறங்கு போல விற்பிடித்த
    கால தூதர் கையிலே
  உறங்கு வாயு றங்குவாயி
    னிக்கி டந்து றங்குவாய்

  கும்பகர்ணனை யுத்தத்திற்கு அழைக்கும் பாடலை ஒரு தடவை உச்சரித்துப் பாருங்கள். அதன் ஓசைநயம் நன்கு புரியும்.

  இவ்வாறு சுவைகள் எல்லாம் கொட்டிக்கிடக்கும் கம்பராமாயணத்தை இக்காலப்பகுதியிலும் கம்பன் கழகம் வைத்துப் பலவாறாகப் போற்றிப் பாடுகின்றார்கள். பலவாறாக ஆராய்ந்து இன்புறுகின்றார்கள். 

              இக்கம்பராமாயணம் தந்த கம்பர் சற்றுத் தலைக்கனம் மிக்கவர் என்று அறியப்படுகின்றார். சிலம்பி என்னும் ஒரு விலைமகள் கம்பனிடம் ஒரு கவி புனைந்து தரும்படிக் கேட்டாளாம். ஆயிரம் பொன் தருவாயா என்று கம்பர் அவளைக் கேட்டிருக்கின்றார். என்னிடம் ஆயிரம் பொன் இல்லை ஐந்நூறு பொன்னே இருக்கின்றது என்று சிலம்பி கூறியிருக்கின்றாள். அதை வாங்கிய கம்பர்

  தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
  மண்ணாவ துஞ்சோழ மண்டலமே 

           என ஒரு வெண்பாவை அரைவாசியாகப் பாடிவிட்டு அதனை முடிக்காமல் சென்றுவிட்டார். இப்பரத்தை அப்பாடலைக் கொண்டு அடுத்தநாள் ஒளவையாரை கண்டபோது இப்பாடலை முடித்துத் தாருங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். ஒளவையும்

  ...........................................................பெண்ணாவாள்
  அம்பொற் சிலம்பி யரவிந்தத் தாளணியும்
  செம்பொற் சிலம்பே சிலம்பு.

                        எனப்பாடி முடித்துப் பழங்கஞ்சி வாங்கிக் குடித்துவி;ட்டுச் சென்றாராம். இச்சம்பவத்தின் பின் என் சஞ்சலம் விரிகிறது. ஒரு இலக்கிய கர்த்தா தமிழின் மேல் கொண்டுள்ள பற்று பணத்திற்கு விற்கப்பட்டதா? பொன்னையும் பொருளையும் மன்னர்கள் அள்ளி வழங்குவதற்காக, அவர்கள் புகழை மிகைப்படுத்திப் புலவர்கள் பாடியிருப்பது யாவரும் அறிந்ததே. இந்நிகழ்வு கம்பரில் வைத்திருந்த எண்ணத்திற்குப் பங்கம் விழைவிக்கின்றது. 

                 ஒரு இடத்தில் இரட்டையர்கள் பாடுகின்றார்கள்

  குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து
  சென்று திரிவதென்றுந் தீராதோ – ஒன்றுங் 
  கொடாதானைக் கோவென்றுங் காவென்றுங் கூறின்
  இடாதோ நமக்கிவ் விடர்.

              பரிசில்கள் யாதொன்றும் வழங்காத மன்னனை யாம் புகழ்ந்து பாடியதனாலேயே இவ்வாறான நிலைமை எமக்கு ஏற்பட்டது. அப்படியானால் பரிசில்கள் பெறுவதற்காக மன்னர்களைப் பலவாறாகப் புகழ்ந்து பாடிப் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டு சென்ற புலவர்கள் பாடிய பாடல்கள் அக்காலச் சூழலை எடுத்துக் காட்டும் கண்ணாடி என எப்படி நாம் எடுத்துரைப்பது. 

                     ஒளவை ஒரு பாடலிலே மன்னன் அதியமானைப் புகழ்ந்து பாடும்போது மாற்றரசனை வெட்டிவெட்டி மழுங்கேறிய கத்தியையுடைய மன்னனே என்று பாடுகின்றார், அவ் அரசனின் கண்கள்  தன்பிள்ளையைப் பார்த்தபோதும் சிவப்பாகவே இருந்தனவவாகப் பாடுகின்றார். அதாவது செறுவரை நோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பனவே  இவை போன்ற பாடலின் மூலம் போர் வெறியைத் தூண்டும் பாடலைப் பாடிப் பாடி வீர உணர்ச்சியை ஊட்டிப் பல உயிர்களைச் சூறையாடச் செய்து பரிசில்களைப் புலவர்கள் பெற்றுச் சென்ற செயலானது அப்புலவர்கள் பின் நீதிநூல்களைப் பாடியிருந்தும் அதன் பயன்தான் என்ன இருக்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது அல்லவா! அவ்வாறே இக்காலத்திலும் தமக்கு ஒரு சலுகை, புகழ், ஆதாயம் வரும் என நம்பிப் பலர் உணர்வு மிக்க வரிகளைப் பயன்படுத்திப் பாடல்கள் பாடுவதும், கவிதைகள் வடிப்பதும் நோக்கமாக்க கொண்டிருக்கின்றார்கள். 
    
                    அக்காலத்திலும் புலவர்களிடையே போட்டியும் பொறாமையும் இழையோடிக் காணப்பட்டன. ஒளவையும் கம்பரும், ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் ஒருவருக்கொருவர் போட்டியாக வாழ்ந்துள்ளார்கள் என ஆதாரம் காட்டக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறே இக்காலத்திலும் எழுத்தாளர்களிடையே போட்டியும் பொறாமையும், எழுத்துக்களிடையே காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டமாட்டாமல், புகழ்வதும், தமிழின் இலக்கண மரபுகளுக்கு பங்கம் ஏற்படும் எழுத்துக்களைக் கண்டுகொள்ளாமல் தமிழாராய்வாளர் வாய் மூடியிருப்பதுவும் தமது பாராட்டுக்களுக்குப் பங்கம் வந்துவிடும் என்னும் சுயநலமே ஆகும். இச்செயலும் அக்காலப் புலவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் தூற்றிப் பாட வேண்டிய இடங்களில் போற்றிப் பாடிய செயலுக்கு ஒப்பாக அமைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் எழுத்துக்களில் தூய்மையைக் கொண்டுவர முடியும். செயலிலே நல்ல உணர்வுகள் விதைக்கப்படும். சுட்டிக்காட்டும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் மக்களிடம் ஏற்பட வேண்டும். மெய்மைக்கு இடமளிக்க நாமும் மெய்யாய் வாழவேண்டும். 

                     இனி விட்ட இடத்திற்குத் தொடருகின்றேன். உலகுக்கு நீதி சொல்லிய கம்பர் ஆயிரம் பொன்னுக்குத் தன் பாடலைப் பேரம் பேசி; அரைவாசி பணம் கிடைத்தமையால் அரைவாசிப் பாடல் பாடிச் சென்றிருக்கும் சம்பவம்; இலக்கிய கர்த்தாக்களுக்கு எவ்வாறு உணரப்படுகின்றது. சொல்லும் செயலும் ஒன்றானால் உலகம் சொல்லும் உன் பெயர் என்னும் ஒரு வாக்கை நான் எழுதியிருந்தேன். ஏனெனில் உலகுக்கு ஒரு செய்தியை நாம் சொல்லும் முன் நாம் அதுபோல் நடக்க வேண்டும். இதனையே பரிசுத்தம் என்பார்கள். இங்கு கம்பர் செயல் என்னைக் கலங்க வைக்கின்றது. இது பற்றி அறிந்த இலக்கியவாதிகள் உங்கள் கருத்துக்களை இதில் பதிவிடுங்கள்.

  LGBTQ

  கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகள...