இலக்கியக் காதல் தூய கோட்பாடு சார்ந்தது. அதை நடைமுறை வாழ்க்கையில் காண முடியவில்லை. காண முடியாது என்னும் எண்ணப்போக்கில் இக்கட்டுரை தொடர்கிறது.
உயர்ந்தோர் மாட்டான ஒரு செம்மைப்படுத்தப்பட்ட இலக்கிய சமுதாயத்தைக் கற்பனை பண்ணிப் படைக்கப்பட்ட பாடல்களே சங்க இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளன. அங்கும் ஒழுக்க விழுமியங்கள் வலிந்து புகுத்தப்பட்டுள்ளன. தலைவி தன்னுடைய எண்ணக்கருக்களைத் தான் கூறாது, தன்னுடைய தோழி மூலமே வெளிப்படுத்தியதாக எழுதப்பட்டுள்ளன.
பூலோகம் வாழும் வரைக் காதல் வாழும். அதன் நுண்ணிய உணர்வுகளை இலக்கணம் போட்டுக் கட்டுக்கோப்புக்குள் கொண்டுவரமுடியாது. காலமாற்றத்துக்கேற்ப அதன் பண்புகள் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்"
மலையின் உச்சியில் உள்ள ஒரு மூலிகை பறித்துவா என்று குப்பனிடம் காதலி கேட்கிறாள். இவ்வளவு உயர்ந்த மலையில் எப்படி ஏறுவது என்று குப்பன் மலைத்து நிற்கிறான். அதைப் பார்த்த காதலி சிரித்து விடுகிறாள். உடனே குப்பன் அவளைத் தூக்கினான், மலையின் மீது தாவினான், பறந்தான் என்று பாரதிதாசன் காதலியரின் கடைக்கண் பார்வைக்குள் கட்டுப்படும் காதலர்களின் துணிவை அழகாக எடுத்துக் காட்டுகின்றார். ஆனால் இன்று விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் கோபிநாத் அவர்கள் காதலியிடம் காதலைச் சொல்வதற்குத் தயங்கும் ஆண்களை இனம் காட்டினார். முடிந்தால் செய்வேன். இல்லையென்றால், நீ பறித்துவா என்று சொல்லும் காதலர்களையே இன்று அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது.
"ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்ததென கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்புறுவதொரு பொருளாதலின் அதனை அகம்"
என்று நச்சினார்க்கினியார் விளக்கம் தருகிறார். காதல் இருவருக்கும் ஒரே அளவானதாக இருக்க வேண்டும். இருவரிடையிலும் குற்றம் குறை கண்ணுக்கு அகப்படாது.
"சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக் கலைமான் தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி"
தாகம் எடுத்து நீரருந்த வருகின்ற இணைமான்கள் வழியிலே காணுகின்ற குளத்து நீர் சிறிதளவே இருப்பதைக் கண்ட ஆண்மானானது தன்னுடைய பெண்மானுடன் தானும் அருந்துவதாக சாடை காட்டி பெண்மானை அருந்தச் செய்வதாக மாறன் பொறையனார் ஐந்திணை ஐம்பதிலே எழுதியுள்ள பாடல் போல் விட்டுக் கொடுப்புக்களும் இருக்க வேண்டும்.
இவ்வாறான காதலர்கள் சேருகின்ற போது ஏற்படுகின்ற இன்பமானது அதன் பின் எவ்வாறு அந்த இன்பம் இருந்தது என்பதை வெளியிலே யாருக்கும் சொல்லாது தம்முடைய உள்ளத்துக்குள்ளேயே மறைத்து வைத்துப் பொக்கிசத்தை அடிக்கடி எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவது போல் நினைத்து நினைத்து இன்புறுவார்கள்.
அகமாகிய உள்ளத்துக்குள் நிகழ்வதால் அதை அகம் என்று நச்சினியார்க்கினியார் குறிப்பிடுகின்றார். இன்று தன் காதலியின் சுகத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுதலும் தத்தமக்கு ஏற்படும் உள்ளத்துணர்வினை வட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ளுதலும் களவொழுக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவதாக இருக்கின்றது.
உயிரினங்கள் அனைத்துக்கும் காதல் கைகூடும். ஆனால், மனித குலத்தின் காதல் மனதுக்குள் இன்பம் துய்ப்பதாகும். மாற்றார் கண்களுக்குள்ளும் கருத்துக்குள்ளும் அகப்படாததாய் உள்ளத்துணர்வாக அமையும். காதல் வயப்பட்ட பெண் தூக்கம் தொலைத்து நிற்பதைப் புலவர் பதுமனார் குறுந்தொகையிலே பாடும் போது
"நள்ளென்றன்றே யாமம் சொல் அவித்து
இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மற்றத் துஞ்சாதேனே"
மக்களெல்லாம் பேச்சொலி இன்றி உறங்குகின்றனர். மற்ற உயிர்களெல்லாம் வெறுப்பு எதுமில்லாமல் நன்றாக உறங்குகின்றார்கள் யான் மட்டும் உறக்கமின்றித் தவிக்கின்றேன் என்று பொருள் வழிப் பிரிந்த காதலனை நினைத்து உறக்கம் தொலைத்துக் காதலி பாடிய இலக்கியக் காதலை இக்காலத்து இலத்திரனியல் உலகத்தில் காணமுடியாது. காதலன் பிரிந்து சென்று அடுத்த நிமிடமே எங்கே நிற்கின்றாய். வீடியோ அழைப்பு எடு. வாகனம் ஓடுவதாக இருந்தால், லொகேசனை அனுப்பு என்று கேட்டு காதலன் செல்கின்ற பாதையை எல்லாம் அறிந்து விடுவாள். நினைத்து ஏங்க வேண்டிய அவசியம் அவளுக்குத் தேவையில்லை. அதுதவிர அடிக்கடி உலகம் தழுவிய நண்பர்கள் தொலைபேசியிலே பலதும் பத்தும் கதைத்து அவளுடைய நேரத்தைக் கொள்ளையடித்து இயல்பான உறக்கத்துக்கு அவளைக் கொண்டு வந்துவிடுவார்கள். இங்கு எண்ணி ஏங்கி உறக்கம் தொலைக்க அவளால் முடிவதில்லை.
இங்கு காதல் இலக்கணம் மாறுதோ. இலக்கியம் ஆனதோ. இதுவரை நடித்தது அது என்ன வேதம். இது என்ன பாடம் என்று கண்ணதாசன் வரிகளை எண்ணத் தோன்றுகிறது.
அன்று இலக்கியம் காட்டிய காதலை மனதுக்குள் நினைத்து தற்கொலைகள் அதிகம் ஏற்பட்டது. இன்று பெண் ஆணுக்குச் சமமாகச் சம்பாத்தியம் பண்ணத் தொடங்கிவிட்டால், ஆணைத் தங்கி வாழும் நிலை பெண்ணுக்கு இல்லை. காதலுக்காக ஏங்கிக் காலத்தை வீணடிக்கும் நோக்கமும் இல்லை. இயற்கையாக ஏற்படும் உணர்வுக்கேற்ப காதலை இருவரும் ஏற்றுக்கொண்டார்கள்.
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப்
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்' என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!-நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே.
என நற்றிணையில் சொல்லப்பட்டது போல் நீங்கள் பாலும் தேனும் இட்டு வளர்த்த புன்னை மரம் உங்களுக்குத் தங்கை என்று தாய் சொன்னதால், அதன் கீழ் இருந்து இருவரும் இனி காதல்மொழி பேசவும் பழகவும் முடியாது என்று தோழி தலைவனிடம் சொல்லிய இயற்கையை நேசித்த, பூசித்த இலக்கியக் காதலை இன்று நினைத்துப் பார்க்க முடியாது.
இன்று பணமும், அந்தஸ்தும் இனமும், மொழியும், மதமும், பார்த்துப் பெற்றோர் காதலரைப் பிரித்து வைக்க முடியாது. காதலர்களே பிடித்திருந்தால், சேர்வார்கள். பிடிக்கவில்லை என்றால் பிரிவார்கள். தமக்கு எது செட் ஆகிறதோ அதை நோக்கி போய்க் கொண்டே இருக்கும் காதலுக்கு இலக்கணத்தை நாம் இலக்கியத்திலேயே தேட வேண்டும்.