• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 30 நவம்பர், 2013

  திருக்குறள்

                                        வள்ளுவர் பெருமையும் திருக்குறள் போட்டியும்
  வளமான வாழ்வதனை வாழ்உயிர்க்கு வழங்கவே
  செறிவான குறளமுதம் உவந்தளித்த வள்ளுவரை
  சிரந்தாழ்த்திப் போற்றியே சீரிய வாழ்வதனை
  சிறப்புடனே பேணி  சிறப்பதனை உணர்த்துவோம்.

  இக்காலவாழ்வு அக்கால வாழ்வுபோல் இல்லை. ஆனாலும் கசப்பான ஒரு உண்மை இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் (அதாவது வள்ளுவர் ஆண்டு இன்றுள்ள ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்ட வரும் ஆண்டு) மனிதன் ஏற்று நடக்கவேண்டிய நடைமுறைகள் எதுவாக இருந்ததோ அதே நடைமுறைகள் இன்று வாழுகின்ற மக்களுக்கும் தேவைப்படுகின்றது. விஞ்ஞானம் வளர்ந்திருக்கின்றது. ஆனால், மனிதன் குணங்கள் அப்படியேதான் இருக்கின்றன.
                 
            அக்கால மக்கள் மத்தியில் இருந்த பிரச்சினைகளுக்கு அருமருந்தாக சின்னச்சின்னக் குளிசைகளாக குறள்வடிவத்திலே வள்ளுவர் தந்த மருந்துகள் இக்காலத்திற்கும் அதாவது 2000 ஆண்டுகள் கழிந்த பின்பும் மக்களுக்குத் தேவைப்படுகின்றது. அதனாலேயே வள்ளுவர் ஒரு தீர்க்கதரிசியாக விளங்குகின்றார்.

              திருவள்ளுவர் ஒரு துறவி, தத்துவமேதை, தலைசிறந்த புலவர். இவர் ஆதி, பகவன் என்னும் பெற்றோருக்கு சென்னையிலுள்ள மயிலாப்பூர் என்னும் இடத்தில் பிறந்ததாக வரலாறு கூறுகின்றது. இவர் 2000ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுடன் மன்னர்களுடன் புலவர்களுடன் வாழ்ந்து அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை உற்றுநோக்கி தனது அநுபவங்களை குறள்வடிவில் தந்திருக்கின்றார். பல இடங்களிலே தன்னம்பிக்கை ஊட்டுகின்ற வரிகள் மனித இனத்தினை உயர்வுக்குக் கொண்டு செல்வதற்காக வள்ளுவரால் தரப்பட்டுள்ளன . உதாரணமாக

  "உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது
   தள்ளினும் தள்ளாமை நீர்த்து"

  நீ எண்ணுகின்றவை உயர்வாகவே இருக்கட்டும். அது நிறைவேறவில்லையானாலும் நிறைவேறியதாகவே கருதப்படும்.   இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கருதப்படுகின்றன. சிலர் கூறுவார்கள் காரிலே போகும் நீ சைக்கிளில் போகும் ஒருவனை நினைத்துத் திருப்திப்படு. சைக்கிளில் போகும் நீ நடந்து போகும் ஒருவனை நினைத்துப் பெருமைப்படு. நடந்து போகும் நீ காலில்லாத ஒருவனை நினைத்துப் பெருமைப்படு என்று. எமக்குக் கீழே உள்ளவர்களைநினைத்து நினைத்து  நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால், எப்போது நாம் முன்னேறுவது? எமக்கு மேலே உயர்வில் ஒரு உலகம் இருக்கின்றது. இந்த வாழ்க்கை ஒருமுறைதான் அதில் முயன்று முன்னேற நினைக்கவேண்டும். எண்ணமே செயல் வடிவம் பெறுகின்றது. இதுவே உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்  என்பதாகும்.
            
  இவ்வாறு ஒரு விடயத்தைச் சொல்வதன் மூலம் வேறு ஒரு விடயத்தையும் விளக்கிவிடுகின்றார்.


  "கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
   சொல்லா நலத்தது சால்பு"

  சான்றாண்மை பற்றித்தான் சொல்ல வந்தார். ஆனால், தவம் என்பது உயிர்களைக் கொல்லாதததை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் சேர்த்துச் சொல்லிவிடுகின்றார். அதாவது உயிர்களைக் கொல்லாததுதான் தவம் என்று சொல்லப்படுவது. பிறருடைய குற்றங்களை எடுத்துச்சொல்லாதது தான் சான்றாண்மை எனப்படுகின்றது என்று சான்றான்மையையும் தவத்தையும் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். இதில் ஒன்றை நாம் ஆழமாகக் கவனிக்கவேண்டும். பிறருடைய குற்றங்களை கூறக்கூடாது என்றால் அதாவது, குற்றங்களைச் சுட்டிக்காட்டவில்லையானால், குற்றங்களிலிருந்து மனிதன் திருந்திவாழ வழி எங்கே இருக்கின்றது. சிலர் சில தவறுகளைத் தாம் அறியாமலே செய்கின்றார்கள். அப்போது அத்தவறுகளை அவர்களிடமே சுட்டிக்காட்டித் திருத்திக்கொள்ள நாம் உதவி செய்யவேண்டும். அதைவிட்டு ஒருவன் செய்த குற்றங்களை மற்றவர்களிடம் கூறிக்கொள்தல் சான்றாண்மையாகக் கருதப்படாது. என்று கருதிக் கூறாது விட்டால் குற்றங்கள் அதிகரிக்க நாமும் காரணமாகி விடுவோம் அல்லவா!   இங்குள்ள ஆழமான கருத்து பிறர் குற்றங்களை பிறரிடம் கூறாது குற்றம் புரிபவரிடமே எடுத்துரைக்க வேண்டும் என்ற கருத்தில் இக்குறளை நாம் உள்வாங்கலாம்.

       இந்தத் திருக்குறளிலே அதிகமாக என்னைப் பாதித்த திருக்குறள்

  "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்ப தறிவு"

  ஏன் என்ற கேள்விகளைக் கேட்டு அதன் சரியான முடிவை எடுக்க வேண்டும். இதைத்தான் சாக்ரட்டீஸ் அவர்கள்,

  "யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்"என்றார்.

  இக்குறள் ஒவ்வொரு இளையவர்கள் மனதிலும் ஆணி அடித்தது போல் பதியப்படவேண்டிய குறளாகும். அப்போதுதான் எதிர்கால வாழ்வில் மூடப்பழக்க வழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் தகர்த்து எறியப்பட்டு யதார்த்த உண்மை புலப்படும். பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் வாயை அடைத்துவிடாதீர்கள். இது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் எடுத்துரைக்கும் வரிகளாகின்றன.

          "கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள் "
  என புலவர் இடைக்காடனார் பாடியுள்ளார். அதனையே இன்னும் ஒரு படி மேல்சென்று

  "அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்"

   என்று ஒளவையார் கூறியுள்ளார். அதைப்பிரித்தும் காட்டியுள்ளார். விஞ்ஞானி ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் அவர்கள் அணுவைப்  பிரிக்க முடியும் கண்டறிவதற்கு முன்னமே  ஒளவையார் அறிந்து வைத்திருந்தார் . ஒளவை கூறியதுபோல் அவ்வளவு ஆழமாக ஒன்றே முக்கால் வரிகளில் ஆழமான வாழ்வியல் உண்மைகளை வள்ளுவர் படைத்துள்ளார். எனவே திருக்குறளைப் படிக்கும் போது ஆழமாகவும் அழுத்தமாகவும் படிக்க வேண்டும்.


  "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
  துப்பாய தூவும் மழை"

  உண்பவர்களுக்கு உணவுப் பொருள்களை உண்டாக்கி தந்து, தானும் அவர்களுக்கு உணவாக அமைவது மழை. ஆனால், தற்போது துப்பாக்கி என்பது ஒரு உயிரைக்கொல்லும் கருவியாகவே கருதப்படுகின்றது. வள்ளுவர் காலத்துப் பொருள் இக்காலத்தில் விளங்கிக் கொள்வது கடினமாகின்றது. அதனால், பொருள்நாடி ஆழமாக கற்கும்போதே அதன் இனிமை மேலோங்கும். வள்ளுவரும் நாம் வாழும் இக்காலத்தில் வாழ்ந்திருந்தால், நிச்சயமாக அகராதி துணை நாடியே இருப்பார். இது

  "பழையன கழிதலும் புகுவன புகுதலும் வழுவல கால வழக்கே" என்பதுடன் சம்பந்தப்பட்டது.

        திருக்குறளினுள் நாம் சில இடங்களில் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதான விடயங்கள் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றன.

  அதாவது பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது அறியாமை. அப்படி பயப்படுவதற்குப் பயப்படுவது அறிவுடையவர்கள் செயலாக இருக்கின்றது. ஏனென்றால், அவர்கள் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னமே அறிந்து கொள்ளும் வல்லமையுடையவர்கள். இதனால், அவர்களுக்கு திடீரென நடுக்கத்தைக் கொடுக்கும் துன்பம் ஏதும் ஏற்படாது. என்று வாழுகின்ற வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு ஆய்ந்து தயங்கும் பக்குவத்தை மனிதன் கொள்ளவேண்டிய அவசியத்தை

  "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
   அஞ்சல் அறிவுடையார் தொழில்"

  "அறிவுடையார் ஆவது அறிவர் அறிவிலார்
   அஃதறி கல்லாதவர்"

  "எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
   அதிர வருவதுஓர் நோய்"

  என்னும் இம் மூன்று குறள்கள் மூலமாக ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி எடுத்துக் காட்டியுள்ளார்

  குறள் வடிவத்தை நாம் உச்சரிக்கின்ற போது சில இடங்களில் அழுத்திக் கூறும்போதே அதன் அழகு புரிகின்றது.

  "கற்க கசடறக் கற்க கற்றவை கற்றபின்
   நிற்க அதற்குத் தக"

  ஆழமாகக் கற்கும் போது அதில் அழகும் இருக்கும். அறிவும் இருக்கும். கற்கக் கசடறக்கற்க கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்பதுபோல்  நாமும் கற்றபடி வாழுகின்றபோதுதான். எழுதிய எம்பாட்டன் வள்ளுவனுக்குப்  பெருமை சேர்ப்பதாக அமையும். உதாரணமாக

  "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வுஇல்லை
   செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

  என்னும் குறளைக் கற்கின்றபோது ஒருவர் செய்த நன்றியை மறக்கக்கூடாது என்னும் கருத்தை மூளைக்குள் அழியாத அறிவுப்பலகையாக நாம் பதித்து வைக்கின்றபோது அதனைச் செயலில் காட்டவும் தயங்கக்கூடாது. எம் இரத்தத்தில் இக்குறள் பதிந்துவிடும். இச்செய்தியை மூளைக்குத் தேவைப்படும் வேளையில் காட்டிவிடும். 

       "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை"

  என்று மகாகவி பாரதியார் பாடியிருக்கின்றார். இவ்வாறு பாரதி புகழ்ந்துரைத்த வள்ளுவரின் 133 அடி உயரமுள்ள சிலை ஒன்று மூன்று கடல் சங்கமிக்கின்ற கன்னியாகுமரியிலே அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் தந்த திருக்குறளின் பெருமையை உலகுக்குணர்த்த கலைஞர் அவர்கள் இந்தியாவின் தலைநகரில் 1976 ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டத்தை அமைத்தார். அங்கு கிரினைட் பளிங்குக் கற்களிலே திருக்குறள் 1330 குறள்களையும் ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு அதிகாரமாக பொறித்துச் சுவர்களிலே  பொருத்தி  பார்வைக்கு வைத்தார். அத்துடன் திருக்குறளின் பெருமையைப் புலவர்கள் கூறும் திருவள்ளுவமாலையையும் பொறித்து வைத்துள்ளார்.

           தான் உணர்ந்த பெருமையைப் பலரும் உணர கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டம் போல் தான் உணர்ந்த வள்ளுவர் பெருமையை புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய இளையவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஸ்ரீஜீவகன் அவர்கள் வள்ளுவர் பாடசாலை அமைத்து திருக்குறள் போட்டிகளை நடத்தி வள்ளுவர் பெருமைகளை பெற்றோர் சிறார் மத்தியில் கொண்டுசெல்கின்றார் என்றால், இவர் முன்னெடுப்பிற்கும் நாம்  பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகின்றது.
                16.11.2013 அன்று டோட்முன்ட் நகரில் நடந்தேறிய திருக்குறள் பேட்டியில் பங்குபற்றிய சிறுவர்கள், இளையவர்கள் வாழுகின்ற சூழல் அபாரமானது. நாமெல்லாம் திருக்குறள் கறறபோது கிடைத்த பொழுதுகள் இவர்களுக்குக் இப்போது கிடைக்காத பொழுதுகள். இவர்கள் எத்தனை எத்தனையோ தொலைநுட்ப சாதனங்கள் மத்தியில் தமது நேரத்தைத் தொலைத்து, தமது வாழ்நாட்டு வாழ்வாதாரக் கல்வியையும் தொடர்ந்து வாழுகின்ற தலைமுறையினர். இவர்கள் இத்திருக்குறள்களை கற்று மனனம் செய்து அதன் பொருள் உணர்ந்து  இங்கு ஒப்புவித்திருக்கின்றார்கள் என்றால், அதையிட்டு அவர்கள் பெற்றோர் பெருமைப்படவேண்டியது அவசியமாகின்றது. மிகச் சிறப்பாக அன்றைய வள்ளுவருக்குப் பெருமை சேர்த்த விழா நாளின் நிகழ்வுகளின் புகைப்படங்களை இங்கு காணலாம். 
    
   


  சனி, 23 நவம்பர், 2013

  ஆயம்

                 
  ஆயம் நோக்கி ஆரம்பித்த தொழில்
  ஆயத்தில் தோற்றதுபோல் ஆயம் தந்தாலும்
  ஆயம் கருதி ஆயம் நீக்கி
  வாழ்வைத் தொடர்வோம்


  இலாபம், சூதாட்டம், துன்பம், கடமை, வருத்தம்,
  பொருள்:

  இலாபம் கருதி ஆரம்பித்த தொழில் சூதாட்டத்தில் தோற்றதுபோல் துன்பத்தைத் தந்தாலும் கடமை கருதி வருத்தம் நீக்கி வாழ்வைத் தொடர்வோம்.


  விளக்கம்:
  நம்பிக்கை என்னும் வாகனம் ஏறி வாழ்க்கை என்னும் சுவாரஷ்யமான பயணத்தைத் தொடர்கின்றோம். இப்பயணம் இன்பம் நிறைந்ததாக அமையவேண்டுமானால், வாழ்வாதரமென அற்புதமான ஒரு தொழிலை மேற்கொள்ளவேண்டும். அத்தொழிலில் இலாபம் மேலும்மேலும் விரிவடையவேண்டுமென பலவிதமான உத்திகள் கையாளத் துணிகின்றோம். அதற்காக எமக்கான வாழ்காலம் வழங்கிய நேரங்களை அதற்குள்ளேயே போட்டுப் புதைக்கின்றோம். ஆனால், அத்தொழிலானது இலாபமின்றி நட்டக்கணக்கையே காட்டி எமக்கு வாழ்வின் இனிமைக்காக ஆரம்பித்த தொழில் துன்பத்தையே தந்து நின்றால், உள்ளத்தால் துவண்டு விடுகின்றோம். சூதாட்டத்தில் பணத்தைப் போட்டு ஆடி பணம் முழுவதுமாக இழந்து வெறுங்கையுடன் திரும்பி வரும்போது ஏற்படுகின்ற துன்பத்தைப் போலவே உணர்வைத் தந்தாலும் இதுவே வாழ்க்கையின் இறுதிக் கட்டமென வாடி நிற்காமல் பெற்றார், பிள்ளைகள், உறவினர்கள் போன்று எமது உதவி நாடி நிற்கின்ற மனிதர்களுக்காக வாழுகின்ற கடமையை நினைத்து மனக்கவலை நீக்கி தரமான வழியைத் தேடி ஷஷவாழ்க்கை என்றால், ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால், ஓடுவதில்லை|| என்னும் கண்ணதாசன் வரிகளை மனதில் பதித்து வாழ்க்கையைத் தொடரவேண்டும்.

  திங்கள், 18 நவம்பர், 2013

  நன்றி நவிலல்


  என்னுடைய கணவரின் தாயாரின் ஆத்மசாந்திக்கு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், வள்ளுவர் பாடசாலைநடத்திய  திருக்குறள்   போட்டி நிகழ்வின் போது மௌன அஞ்சலி செய்தவர்களுக்கும், நேரே வந்து ஆறுதல் கூறி உணவுகள் பரிமாறியவர்களுக்கும் மிக்க நன்றியை குடும்பம் சார்பாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.


   ஜெர்மன் எழுத்தாளர் சங்கம் சார்பாக அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் எழுதிய கவிதை

  எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்..!

  காற்றுத் திசைமாறுவதை யாரும் தடுத்திட முடியாது
  காலங்களின் கால்களை  கட்டிப்போடுதல் இலாது

  ஏற்றமும் இறக்கமும்  இவ்வுலகில் புதுமை இல்லை
  இழப்புகளையும் இணைவுகளையும்  எவரும் தடுப்பதில்லை


  ஆற்றொணாத் துயரங்கள்  அனைவருக்கும் வந்து போகும்
  அதற்குள்ளே உறைவதால் அனைத்துமே  அடங்கிப்போகும்

  ஆற்றுவதும் ஆறுவதும் அவன்செயல் என நம்பியே
  அடுத்தடுத்த கடமைகளில் அமிழ்ந்திடுதல் சிறப்பே

  தேற்றிடுதலும் தேறிடவைப்பதும் தேவனின் கருணையே
  தேவைகளை அறிந்துதான் தெய்வங்களும் அருளுமே

  காற்றாய்த்  தென்றலாய்க் கருணையினை வீசுவார்
  காலங்களின் ஓட்டத்தில் கவலயினைப் போக்குவார்

  மாற்றங்களைத் தந்திட மன்றாடி வேண்டுகிறோம்
  மாயவனின் கீதைதனை மனங்களிலே ஏற்றுவோம்

  போற்றிப்பேணிய அந்த பொன்னெழில் தாயவளின்
  பூம்பாதம் பற்றியே  பூத்தூவி நாம் அஞ்சலிக்கிறோம்..


  ஜே...சங்க நண்பர்கள் சார்பாக
  அம்பலவன்புவனேந்திரன்..


  வெள்ளி, 15 நவம்பர், 2013

  சிந்திக்க வைத்த ஒரு சம்பவம்

      Photo Sharing

   

  சிந்தித்துப் பார்த்தேன். இதுகூட எனக்குத் தவறாகத் தெரியவில்லை. பாசத்தை வெளிக்காட்டி நம்மைநாமே வருத்தி வெளிவேஷம் போடுவதால் ஆவதென்ன? என்னைச் சிந்திக்க வைத்த ஒரு சம்பவம்.
  வழமையாக நானும் எனது ஜேர்மனிய நண்பியும் கிழமையில் இரண்டு முறை ஜிம்மில் சந்திப்போம்.  இரண்டு நாட்களும் இவ்விரண்டு courses செய்து விட்டு சிறிது அளவளாவி விட்டுத் திரும்புவோம். வழமையாக திங்கள் அன்று வரவேண்டிய எனது நண்பி வரவில்லை. திரும்பவும திங்கள் வராததன் காரணத்தை புதனன்று வினாவினேன். மருத்துவப் பரிசோதனை மூலம் தனது தந்தை புற்றுநோய் கண்டுள்ள விபரம் அறிந்து, அதற்காக மருத்துவசாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அங்கு சென்று வந்ததாகக் கூறினார். அவர் இரண்டு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு மீண்டு, வயோதிபர் இல்லத்தில் தற்போது தங்கியிருக்கும் நல்ல செய்தியையும் பின் ஒருமுறை பகிர்ந்து கொண்டார். சில நாட்களின் பின் மீண்டும் ஒரு திங்கள் வரவில்லை. புதனன்று ஒரு உழரசளந இற்கு வந்தபின் இரண்டாவதான Dance course இற்கு நிற்காமல் வீட்டிற்குச் செல்வதற்குப் புறப்பட்டார். தொடக்கத்தில் அவருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இடையில் போகும்போது என்னருகே வந்து என்னை ஆரத் தழுவிக்கொண்டார்.  கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்தபடி தனது தந்தை ஞாயிறு அன்று காலமாகிவிட்டதாகவும் நாளை வியாழன் இறுதிஅஞ்சலி செய்து அடக்கம் செய்யவிருப்பதாகவும் முதலாவது Course பறவாயில்லை. Dance course  என்னால் செய்யமுடியாது என்று கூறி விடைபெற்றார். அவர் தனது தந்தையில் வைத்திருந்த பாசத்தை நான் நன்கு அறிவேன்.
                                    இதுவே சம்பவம்.  இதைக் கேட்டபோது மனம் ஏங்கிப் போனேன். தந்தை அங்கே உயிரற்ற உடலுடன் உறங்கிக் கொண்டிருக்கின்றார். இவர் ஜிம்மிற்கு வருகின்றார். தந்தை இறந்து மூன்றாவது நாள் எங்களால் எப்படி முடியும்? வியப்பாகவே இருந்தது. இந்த சமயத்தில் தந்தையின் மரணச்சடங்கு முடிந்து அடுத்ததினமே தாயாரை Golf விளையாட அழைத்துச் சென்ற எனது இன்னுமொரு நண்பரை நினைத்துப் பார்த்தேன். இது சரியா தவறா என்ற சிந்தனையில் விரிகின்றது மனம்.
               
                                           எனது நண்பி கூறினார். கணவன், பிள்ளைகள் வேலை, பாடசாலை என்று போய்விடுவார்கள். வீட்டில் தனியே இருக்கும் போது தந்தையின் ஞாபகமே வருகின்றது. முடியவில்லை. அதனால், இங்கு வந்தேன் என்றார். இதில் என்ன தவறு இருக்கின்றது. ''ஆண்டாண்டு கோடி அழுது புலம்பினாலும் மாண்டார் வருவரோ இம்மாநிலத்தே'' கூடி இருந்து நடந்ததையே நினைவுபடுத்தி வாழுகின்றவர்களையும் நோயாளியாக்குதல் மடைமையல்லவா. கவலையை நீக்குவதற்குக் கூட இருப்போர் முயற்சிக்கவேண்டும். அதனாலேயே தனியே இருந்து தாய் கலங்குவார் என்று தாயை Golf விளையாட மகன் அழைத்துச் சென்றிருக்கின்றார். எனது நண்பியோ மனதைத் தேற்ற இங்கு வந்திருக்கின்றார் என்று ஆறுதல் அடைந்தேன்.
               
                                      எமது கலாச்சாரத்தில் இறந்தவீட்டில் இருப்போர் சமைப்பதற்குக் கூட இடம்விடாது. வருவோர் உணவைச் சமைத்துக் கொண்டு வருவார்கள். வந்திருந்து நடந்ததையே திரும்பத் திரும்பப் பேசி ஒரு மாதம் வரை நினைவுகளை வேறுதிசை போகவிடாது நிறுத்தி வைப்பார்கள். தன் இரத்தம் தனக்கு உயிர் கொடுத்து வளர்த்த தந்தை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டால், சுடுகாட்டிற்குச் சென்று வந்தாலே தலைமுழுகவேண்டும் என்பார்கள். ஐரோப்பியர்களோ கிழமைக்கு ஒருதடவை சென்று மலர் வைத்து தந்தையை வணங்கிவிட்டு வருவார்கள். அது நம்முடன் ஒன்றாக இருந்து வாழ்ந்து, மகிழ்ந்து, அநுபவித்த, சொந்தங்கள் உறங்கும் இடம் என்று தெரிந்தும் அவ்விடம் துடக்கு இடம் என்று கருதுவர். எம்மவர் ஒரு மாதம் கோயிலுக்குச் செல்வதற்குத் தடைவிதித்துவிடுவார்கள். விழாக்களில் கலந்து கொள்ளத் தயங்குவார்கள் (மனதுக்குள் விருப்பத்தை வைத்துக்கொண்டு). இறந்தவீட்டிற்குச் செல்பவர்கள் தண்ணீர்கூடக் குடிக்கமாட்டார்கள். அது துடக்கு என்று ஒரு தடையைப் போட்டுவிடுவார்கள். 
                   
                             அடுத்தவர்களைக் குறை கூறும் நாம், அதில் இருக்கும் மறுபக்கத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்யடியது அவசியமாகிறது. அதனால், எமது பண்பு சீராக்கப்படும்.


  ஞாயிறு, 10 நவம்பர், 2013

  ஆழ்ந்த அன்பில் ஆழ்ந்திருப்போம்
                                Free Image Hosting 
                 ஒவ்வோர் இதயங்களிடையும் பாசமாயும், இளம் உள்ளங்களைப் பிணைத்து கலந்து நிற்கையிலே காதலாயும்,  தன்னலமின்றி பிற உயிர்களின் மேல் பரந்து நின்று பரிவாயும், ஆண்டவன் காலடியில் சேவித்து அனைத்தையும் அடக்கி ஒடுக்கி சேவித்து நிற்கையிலே பக்தியாயும் பல்வேறு வடிவங்கள் தாங்கி வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு உணர்வின் வடிவமாகிய அன்பைப் பெறாத, அநுபவிக்காத உயிரினமே இல்லையல்லவா! ஈரமில்லா நெஞ்சமுள்ள கல் நெஞ்சக்காரர்கள் கூட ஏதோ ஒரு அன்பின் வடிவத்தைக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் அதையும் மீறிய இரும்பு இதயம் படைத்த மனிதர்களல்லா மாக்கள் கூட இவ்வுலகில் மனிதர்களாக நடமாடுகின்றார்கள்.
                    

                               
  என்று உயிரோடு இணைந்து உடல் பிறந்த முக்கியத்துவமே பிறருடன் அன்பு செலுத்தி வாழ்வதற்காகவே என எமது முப்பாட்டன் வள்ளுவனார் அழகாய் எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.

                 தோண்டத்தோண்ட ஊற்றெடுக்கும் ஊருணி, அள்ளஅள்ள ஊற்றெடுக்கும் ஆழ்ந்த அன்பு. இவ்வாறான அன்பானது இறுக்கமான இதயத்தைக் கூட இளகவைக்கும் பண்பு கொண்டது. இதனாலேயே திரைப்படங்களில் உள்ளத்தை உருக்கும் காட்சிகளைப் பார்க்கும் போதும் எம்மையறியாமலே பொலபொலவென்று கண்ணீர் ஊற்றெடுக்கின்றது.
           


  வெற்றிடத்தை நிரப்பும் காற்றுப்போல் அன்புள்ளார் இதயத்தை நாடி அகிலமே சென்றடையும். இவ்வாறான பண்பு கொண்ட அன்பைப் பெறதவர்களுடைய உயிர் வாழ்க்கை பாலைநிலத்திலே பட்டுப்போன மரம் தளிர்த்ததைப் போன்றிருக்கும்.

                ''இல்லானுக் கன்பிங் கிடம்பொருள் ஏவல் மற்று
                 எல்லாம் இருந்துமவற் கென்செய்யும் - நல்லாய்
                 மொழியிலார்க்கு ஏது முதுநூல் தெரியும்
                 விழியிலார்க்கு ஏது விளக்கு''

  பேசத்தெரியாதவர்களுக்கு தொன்மையான நூல்கள் இருப்பினும் அவற்றால் ஒரு பயனும் இல்லை. பார்க்கும் கண் அற்றார்க்கு விளக்கு இருந்தும் பயன் இல்லை. அதுபோல் குடியிருக்கும் வீடும், செலவழிக்கப் பொருளும், பணிசெய்ய ஏவலாரும் இருந்தாலும் நெஞ்சில் அன்பில்லாதவனுக்கு இது எதிலுமே பயன் இல்லை. என நன்னெறி எடுத்துக்காட்டுகின்றது.

                 ''வாடிய பயிர்களைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்று கூறிய வள்ளலார் போல் உள்ளத்திலே அன்பென்னும் மாளிகைளைக் கட்டிவைப்போம். அங்கு குடியிருக்க அனைத்து நுண்ணுயிர்களையும், விலங்குகளையும், பறவைகளையும், மனிதர்களையும், இனமதபேதமின்றி ஏற்றுக் கொள்வோம். அன்புள்ளார் இதயத்திலே வன்முறைக்கு இடமில்லை. மனிதாபிமானம் நிறைந்திருக்கும். பணிவு பரிமளிக்கும், விட்டுக்கொடுக்கும் பண்பு வீற்றிருக்கும், கல்லையும் கனியவைக்கும் கலை கலந்திருக்கும். ஆதலால்,


                ஆழ்ந்த அன்பில் வீழ்ந்த மனதை 
                ஆட்டிப் படைக்கும் சோதனை – அதை
                மீட்டிப்பார்க்க விரும்பாது மீண்டும்
                ஆழ்ந்த அன்பில் ஆழ்ந்திருப்போம்.
               
                                         Image Host

  வெள்ளி, 1 நவம்பர், 2013

  தீபாவளி வாழ்த்துகள்   


  எதற்காய் இந்நாள் என்ற ஆய்வுதனை மேற்கொண்டு அதற்கான கொண்டாட்டம் கொள்வதிலே பெருமை இல்லை. இன்றொருநாள் என்றாலும் எம் மன இருளதனை  மறந்திருப்போம். எமைச் சுற்றி ஒளியமைப்பை அமைத்திடுவோம். உள்ளமெங்கும் மகிழ்ச்சி ஒளி பெருக்கிடுவோம். வாழ்த்துகளைப் பகிர்ந்திருப்போம்.

  அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...