• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

  தெவிட்டா இன்பம்


  தெவிட்டா இன்பம்  என்னைத் தொட்டுச் செல்லும் மேகம் 
  எதையோ சொல்லி மறைந்து சென்றது.
  தமிழும் இனிதே தமிழ்க் கவியும் இனிதே
  கற்பனை இனிதே காட்சியும் இனிதே
  கண்கள் மூட மறுக்கிறது. 
  காட்சிகள் பரந்து கிடக்கிறது.
  ஆயிரம் விழிகள் இருக்க வேண்டும் 
  ஆண்டவன் படைப்பை அநுபவிக்க,
  ஆயிரம் வாய்கள் இருக்க வேண்டும்
  இயற்கையின் அழகை வர்ணிக்க.

  காற்றும் என்னைத் தடுக்கவில்லை,
  மழையும் என்னை விரட்டவில்லை.
  தாளம் போடும் குடையின் துளிகள்
  கற்பனை விரிக்கத் தளமும் ஈன்றது.
  காற்றும் மரமும் கதைகள் பேசும் 
  கானக் குயில்கள் கவிகள் பாடும்
  வானும் மலையும் உரசிக் கொள்ளும்
  வனப்பினைப் பகர வாய்கள் போதா
  வகைவகைப் பச்சைக்கம்பளம் விரித்ததாய்
  பரந்து கிடந்த நிலத்தினில் புரண்டேன் 
  தமிழால் துள்ளிப் பாடம் சொன்னேன்
  தரித்து மெல்ல மீண்டும் வந்தது
  மலைகள் கற்ற தமிழின் பாடம்
  மீண்டு வந்து இதயம் நுழைந்தது

  இறைவனை மெல்ல வரவழைத்து - அவன் 
  காதனில் ஒருமுறை கேட்க வேண்டும்
  மனிதனைப் படைத்ததும் ஏன் இறைவா?
  இயற்கையைப் படைத்ததும் ஏன் இறiவா?
  மனிதனைப் படைத்தது நிஜமானால் 
  இயற்கையை இரசிக்கப் படைத்தாயா? - இல்லை
  இயற்கையை அழிக்கப் படைத்தாயா?
  மரங்களின் அழகை இரசிக்காமல்
  தரித்து நல் இன்பம் காண்பான்
  மலையின் அழகை இரசிக்காமல் 
  குடைந்து மெல்லக் கல் எடுப்பான்
  சுத்தக்காற்றை சுவாசிக்காது 
  தொழிற்சாலைகள் கட்டித் துயர் தருவான்
  பாடும் குயிலை இரசிக்காது 
  பார்வைக்கு வைத்துப் பயன்பெறுவான்
  காட்டுமிருகம் வேட்டையாடி 
  கூட்டில் கொண்டு அடைத்து வைத்து
  காசு உழைத்துக் களித்திருப்பான்

  எத்தனை அழகு இயற்கையில் இருக்க
  இவற்றிற் கெல்லாம் சமாதிகட்டி
  தாய்ச்சியில் பொரியும்மீன் எடுத்து
  தாளிதம் செய்த குழம்பில் விட்டு
  அவித்தசோற்றில் குழைத் தெடுத்து
  உண்டு மகிழும் இன்பம் மட்டும்
  உயர்வே என்று உணரும் வாழ்வு
  வாழும் மனிதர் ஆயிரமே.
  வீட்டுக்கு வீடு கதைகள் பேசி
  வீணே காலம் கழிப்பவரும்
  நாட்டுநடப்பு பேசிப்பேசி
  நல்ல பொழுதைக் கழிப்பவரும் 
  காட்டுவழியே நடந்து நடந்து 
  கால்கள் போன போக்கில் எல்லாம்
  வீட்டு எல்லை மறந்து உள்ளம்
  நாட்டம் கொண்டு நாட்டைவிட்டு
  தெவிட்டா இன்பம் தேடித்தேடித்
  தெரிந்து வர வாரீர்வாரீர்

  வெள்ளி, 6 ஏப்ரல், 2012

  ஆலமரத்தடிப் பிள்ளையார்:  ஆலமரத்தடிப் பிள்ளையார்:   ஆலமரத்துப் பிள்ளையார் 
  பல அற்புதங்கள் காட்டுவார் - என் 
  சொந்தக் கவலை தீரவே 
  சொல்லி அழவே நாடுவேன். 

  ஆலமரத்தடிப் பிள்ளையாரைத் தொழுதால் ஆரம்பிக்கும் கருமங்கள் யாவும் நலம் பெறுமே என அளவிலா நம்பிக்கை கொண்ட பக்தர்குழாம் நாளின் ஆரம்பமே ஆலமரத்தடி என்று வாழ்வது நிஜம். இப்பிள்ளையார் எவ்வாறு இங்கு வந்தமர்ந்தார் என்னும் வினாவிற்கான தேடலின் தெளிவு பெற கீழே தொடருங்கள்.

  ஆலமரத்தின் சிறப்பு அது கீழ்ச்செலுத்தும் விழுதுகளின் அமைப்பு. கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள் அம்மரத்தைத் தாங்கி நிற்பதாகப் பார்ப்பவர்களுக்குக் காட்சியளிக்கும். அம்மரத்தின் அருகாமையில் அற்புதமாய்ப் படர்ந்து செழித்து வளர்ந்திருந்தது அறுகம்புல். இவ் அறுகம்புற்களை மேயவிடுவதற்காக பசுமாடுகளைக் கொண்டுவந்து விடுவது அக்கால மக்களின் வழக்கமாக இருந்தது. இதில் இயற்கையாகவே பல மருத்துவத்தன்மை நிறைந்திருக்கின்றன. விற்றமின் ஏ சத்து நிறைந்த இவ்அறுகம்புல் இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் இரத்தத்திலுள்ள செங்குருதிச்சிறுத்துணிக்கைகளை( சிவப்பணு ) அதிகரிக்கச் செய்வதுடன் இரத்தச்சோகை, இரத்தஅழுத்தம் போன்ற நோய்களையும் தீர்த்து வைக்கின்றது. உடற்சூட்டைத் தணித்து வாயுத் தொல்லைகளை நீக்குவதுடன் நரம்புத்தளர்ச்சி நோய்க்கும் மருந்தாகவும் அமைகின்றது. பெண்களுக்கு மாதவிடாய்க்காலங்களில் வரும் தொல்லைகளும் இதனால் தீர்க்கப்படும். இதைவிட இன்னும் பல நோய்களைத் தீர்த்து வைக்கும் அவ்அறுகம் புற்களைப் பசுமாடுகள் மேய்ந்து அது தரும் பாலைக் குடிப்போர், ஆரோக்கியம் மிகுந்தவர்களாகக் காணப்படுவார்கள். அப் பாற்சுவை நோக்கியும் நிறைபலன் கருதியும் அக்கால மக்கள் அப்பசுமாடுகளை அங்கு மேயவிடுவார்கள். ஆனால், அவ் ஆலமரத்தை நாடி யானைகள் வருவதும் வழக்கமாக இருந்தது. இனச்சேர்க்கையில் விருப்புக் கொண்ட யானைகள் அம்மரத்தை வந்தடைந்தன. ஏனெனில், இனச்சேர்க்கையின் போது ஆண்யானையின் பலத்தைப் பெண்யானை தாங்கமாட்டாத காரணத்தினால், ஆண்யானை தன்னுடைய பலத்தையெல்லாம் ஆலமர விழுதை இழுத்துத் தாங்கி நின்று பலத்தைக் குறைக்கும். இவ் யானைகள் வரும்போதும் போகும் போதும் அருகே படர்ந்து கிடக்கும் அறுகம்புற்களை மிதித்தழித்துச் சேதப்படுத்திவிடும். யானைக்குப் புற்களும் தாவரங்களும் உணவில்லையே பெரிய மரங்களையல்லவா உணவுக்காக அது நாடி நிற்கும். பசுக்களுக்குகந்த அறுகம்புற்கள் சேதப்படுவது பாதுகாக்கப்பட வேண்டுமல்லவா! இதைவிட யானை போடும் லத்திக்கும் யானைகளுக்கும் பயந்த பசுமாடுகள் அவ்விடம் நோக்கி வரமாட்டாது. இதனால், யானையைத் தடுக்க நினைத்த அக்கால மக்கள். மாட்டுச்சாணத்தினால், பல உருவங்களைச் செய்து ஆலமரத்தைச் சுற்றி வைத்துவிடுவார்கள். பின் விளையாட்டாக அருகே படர்ந்து கிடக்கும் அறுகம்புல்லை அதன் மேல் குற்றிவிடுவார்கள். மாட்டுச்சாணத்தின் மணத்திற்கு யானைகள் அவ்விடத்தை எட்டியும் பார்க்காயின. இச்சாணத்தின் வடிவங்களே மெல்லமெல்ல ஆலமரத்தடிப்பிள்ளையார் வடிவங்களாயின. வீடுகளில் பூஜைகள் செய்யும் போது பிள்ளையார் என்று மாட்டுச்சாணத்தையும் அதன்மேல் அறுகம்புல்லையும் குற்றி வைப்பதும் அக்காரணத்தினாலேயே தான்.

  எனவே காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. காரணங்களைக் கேட்காது நாம், காரியங்களை ஆற்றிக் கொண்டிருந்ததனால், காரணங்கள் மறைவாயின. இன்று எதற்கும் ஏன் என்று கேட்கும் பழக்கம் வளர்க்கப்பட்டால், அறிவு தெளிவுபெறுவது நிச்சயம்.  மகாகவி பாரதி 100 ஆவது நினைவு நாள் 2021

                                               கவி என்னும் வித்துக்குள்  உலகை கட்டிப் போட்ட கவிஞனே 💪 காற்றும் கூடப் பேசும் உன்  மொழியைக்  கால...