• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 8 டிசம்பர், 2022

    காதலின் இலக்கணம் இனி இலக்கியங்களில் மட்டுமே இருக்கும்.

     



    இலக்கியக் காதல் தூய கோட்பாடு சார்ந்தது. அதை நடைமுறை வாழ்க்கையில் காண முடியவில்லை. காண முடியாது என்னும் எண்ணப்போக்கில் இக்கட்டுரை தொடர்கிறது. 

    உயர்ந்தோர் மாட்டான ஒரு  செம்மைப்படுத்தப்பட்ட இலக்கிய சமுதாயத்தைக் கற்பனை பண்ணிப் படைக்கப்பட்ட பாடல்களே சங்க இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளன. அங்கும் ஒழுக்க விழுமியங்கள் வலிந்து புகுத்தப்பட்டுள்ளன. தலைவி தன்னுடைய எண்ணக்கருக்களைத் தான் கூறாது, தன்னுடைய  தோழி மூலமே வெளிப்படுத்தியதாக எழுதப்பட்டுள்ளன. 

    பூலோகம் வாழும் வரைக் காதல் வாழும். அதன் நுண்ணிய உணர்வுகளை இலக்கணம் போட்டுக் கட்டுக்கோப்புக்குள் கொண்டுவரமுடியாது. காலமாற்றத்துக்கேற்ப அதன் பண்புகள் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

    "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்"

    மலையின் உச்சியில் உள்ள ஒரு மூலிகை பறித்துவா என்று குப்பனிடம் காதலி கேட்கிறாள். இவ்வளவு உயர்ந்த மலையில் எப்படி ஏறுவது என்று குப்பன் மலைத்து நிற்கிறான். அதைப் பார்த்த காதலி சிரித்து விடுகிறாள். உடனே குப்பன் அவளைத் தூக்கினான், மலையின் மீது தாவினான், பறந்தான் என்று பாரதிதாசன் காதலியரின் கடைக்கண் பார்வைக்குள் கட்டுப்படும் காதலர்களின் துணிவை அழகாக எடுத்துக் காட்டுகின்றார். ஆனால் இன்று விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் கோபிநாத் அவர்கள் காதலியிடம் காதலைச் சொல்வதற்குத் தயங்கும் ஆண்களை இனம் காட்டினார். முடிந்தால் செய்வேன். இல்லையென்றால், நீ பறித்துவா என்று சொல்லும் காதலர்களையே இன்று அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது.  

    "ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்ததென கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்புறுவதொரு பொருளாதலின் அதனை அகம்"

    என்று நச்சினார்க்கினியார் விளக்கம் தருகிறார். காதல் இருவருக்கும் ஒரே அளவானதாக இருக்க வேண்டும். இருவரிடையிலும் குற்றம் குறை கண்ணுக்கு அகப்படாது. 

    "சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்

    பிணைமான் இனி துண்ண வேண்டிக் கலைமான் தன்

    கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்

    உள்ளம் படர்ந்த நெறி"

    தாகம் எடுத்து நீரருந்த வருகின்ற இணைமான்கள் வழியிலே காணுகின்ற குளத்து நீர் சிறிதளவே இருப்பதைக் கண்ட ஆண்மானானது தன்னுடைய பெண்மானுடன் தானும் அருந்துவதாக சாடை காட்டி பெண்மானை அருந்தச் செய்வதாக மாறன் பொறையனார் ஐந்திணை ஐம்பதிலே எழுதியுள்ள பாடல் போல் விட்டுக் கொடுப்புக்களும் இருக்க வேண்டும்.

    இவ்வாறான காதலர்கள் சேருகின்ற போது ஏற்படுகின்ற இன்பமானது அதன் பின் எவ்வாறு அந்த இன்பம் இருந்தது என்பதை வெளியிலே யாருக்கும் சொல்லாது தம்முடைய உள்ளத்துக்குள்ளேயே மறைத்து வைத்துப் பொக்கிசத்தை அடிக்கடி எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவது போல் நினைத்து நினைத்து இன்புறுவார்கள்.

    அகமாகிய உள்ளத்துக்குள் நிகழ்வதால் அதை அகம் என்று நச்சினியார்க்கினியார் குறிப்பிடுகின்றார். இன்று தன் காதலியின் சுகத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுதலும் தத்தமக்கு ஏற்படும்  உள்ளத்துணர்வினை வட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ளுதலும் களவொழுக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவதாக இருக்கின்றது. 

    உயிரினங்கள் அனைத்துக்கும் காதல் கைகூடும். ஆனால், மனித குலத்தின் காதல் மனதுக்குள் இன்பம் துய்ப்பதாகும். மாற்றார் கண்களுக்குள்ளும் கருத்துக்குள்ளும் அகப்படாததாய் உள்ளத்துணர்வாக அமையும். காதல் வயப்பட்ட பெண் தூக்கம் தொலைத்து நிற்பதைப் புலவர் பதுமனார் குறுந்தொகையிலே பாடும் போது 

    "நள்ளென்றன்றே யாமம் சொல் அவித்து

    இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று

    நனந்தலை உலகமும் துஞ்சும்

    ஓர் யான் மற்றத் துஞ்சாதேனே"

    மக்களெல்லாம் பேச்சொலி இன்றி உறங்குகின்றனர். மற்ற உயிர்களெல்லாம் வெறுப்பு எதுமில்லாமல் நன்றாக உறங்குகின்றார்கள் யான் மட்டும் உறக்கமின்றித் தவிக்கின்றேன் என்று பொருள் வழிப் பிரிந்த காதலனை நினைத்து உறக்கம் தொலைத்துக் காதலி பாடிய இலக்கியக் காதலை இக்காலத்து இலத்திரனியல் உலகத்தில் காணமுடியாது. காதலன் பிரிந்து சென்று அடுத்த நிமிடமே எங்கே நிற்கின்றாய். வீடியோ அழைப்பு எடு. வாகனம் ஓடுவதாக இருந்தால், லொகேசனை அனுப்பு என்று கேட்டு காதலன் செல்கின்ற பாதையை எல்லாம் அறிந்து விடுவாள். நினைத்து ஏங்க வேண்டிய அவசியம் அவளுக்குத் தேவையில்லை.  அதுதவிர அடிக்கடி உலகம் தழுவிய நண்பர்கள் தொலைபேசியிலே பலதும் பத்தும் கதைத்து அவளுடைய நேரத்தைக் கொள்ளையடித்து இயல்பான உறக்கத்துக்கு அவளைக் கொண்டு வந்துவிடுவார்கள். இங்கு எண்ணி ஏங்கி உறக்கம் தொலைக்க அவளால் முடிவதில்லை. 

    இங்கு காதல் இலக்கணம் மாறுதோ. இலக்கியம் ஆனதோ. இதுவரை நடித்தது அது என்ன வேதம். இது என்ன பாடம் என்று கண்ணதாசன் வரிகளை எண்ணத் தோன்றுகிறது.

    அன்று இலக்கியம் காட்டிய காதலை மனதுக்குள் நினைத்து தற்கொலைகள் அதிகம் ஏற்பட்டது. இன்று பெண் ஆணுக்குச் சமமாகச் சம்பாத்தியம் பண்ணத் தொடங்கிவிட்டால், ஆணைத் தங்கி வாழும் நிலை பெண்ணுக்கு இல்லை. காதலுக்காக ஏங்கிக் காலத்தை வீணடிக்கும் நோக்கமும் இல்லை. இயற்கையாக ஏற்படும் உணர்வுக்கேற்ப காதலை இருவரும் ஏற்றுக்கொண்டார்கள். 

    விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,

    மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,

    நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப்

    நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்' என்று,

    அன்னை கூறினள், புன்னையது நலனே

    அம்ம! நாணுதும், நும்மொடு நகையே

    விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,

    வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்

    துறை கெழு கொண்க!-நீ நல்கின்,

    இறைபடு நீழல் பிறவுமார் உளவே.

    என நற்றிணையில் சொல்லப்பட்டது போல் நீங்கள் பாலும் தேனும் இட்டு வளர்த்த புன்னை மரம் உங்களுக்குத் தங்கை என்று தாய் சொன்னதால், அதன் கீழ் இருந்து இருவரும் இனி காதல்மொழி பேசவும் பழகவும் முடியாது என்று தோழி தலைவனிடம் சொல்லிய இயற்கையை நேசித்த, பூசித்த இலக்கியக் காதலை  இன்று நினைத்துப் பார்க்க முடியாது. 

    இன்று பணமும், அந்தஸ்தும் இனமும், மொழியும், மதமும், பார்த்துப் பெற்றோர் காதலரைப் பிரித்து வைக்க முடியாது. காதலர்களே பிடித்திருந்தால், சேர்வார்கள். பிடிக்கவில்லை என்றால் பிரிவார்கள். தமக்கு எது செட் ஆகிறதோ அதை நோக்கி போய்க் கொண்டே இருக்கும் காதலுக்கு இலக்கணத்தை நாம் இலக்கியத்திலேயே தேட வேண்டும்.



    ஞாயிறு, 13 நவம்பர், 2022

    Cryonic Technology

     

    இறந்தவர் மீண்டும் எழும்ப முடியுமா? மறுபிறப்பு ஒன்று இருக்கிறதா? ஒரு மணிதனால், 100 ஆண்டுகள் கழிந்தும் வாழ முடியுமா? இவ்வாறான கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றது. சித்தர்கள் ஒரு உடலை விட்டு இன்னும் ஒரு உடலுக்குள் சென்று கூடுவிட்டுக் கூடு பாயும் யுத்தியைக் காட்டியிருக்கிறார்கள். எகிப்து நாட்டவர்கள் இறந்தவர் மீண்டும் எழுவார் என்ற நம்பிக்கையில் அவர்களுடைய உடலை பதப்படுத்தி வைத்து அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் அவர்களுடைய உடலுடன் சேர்த்து மம்மிகள் என்ற பெயரில் பிரமிட்டுகள் செய்திருக்கின்றார்கள். ஆனால் விஞ்ஞானம் நோயால் இறந்த மனிதனை  மீண்டும் உயிருடன் கொண்டுவர முடியும் என்று உறுதியாகச் சொல்லியபடி முயற்சி செய்து செய்து கொண்டிருக்கின்றார்கள். அதுதான் கிறையோனிக். இது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். 



    யாருக்குத்தான் காலங்கடந்தும் வாழ வேண்டும் என்று ஆசை இருக்காது. எனக்கும் ஒரு கவலை இருக்கின்றது. இந்த ரெக்னோலஜி இனிவரும் காலங்களில் எப்படி இருக்கப் போகின்றது. எங்களுடைய மூதாதையர் வீட்டில் இருந்தே திரைப்படம் பார்க்கும் வசதி பெற்றிருக்கவில்லை. கைத்தொலபேசியுடன் உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள வசதி இருந்ததில்லை.

       

    ஆனால், இன்று அந்த வசதியை ரெக்னோலஜி ஆக்கித் தந்திருக்கின்றது. இதைப் போல நானோரெக்னொலஜி மூலம் என்ன எல்லாம் வரும். அதை நாம் பிரயோகிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருக்கிறது. ஆனால், அதற்கேற்ற பணவசதி இருக்க வேண்டாமா. அதுபற்றியே இந்தப் பதிவு  அமைகின்றது. 


    கிறையோனிக் மூலம் நோயால் இறந்த மனிதனை பிரிசேர்வ் பண்ணி வைத்து அந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடனே அந்த மனிதனுக்கு மருத்துவம் பார்த்து அவரை மீண்டும் வாழவைபபதுதான் கிரையோனிக் என்பது. கிரையோனக் என்றால், கிரேக்க மொழியிலே குளிர் என்பது அர்த்தமாகவுள்ளது. ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய உடலை அல்லது உறுப்பை குறைவான குளிரில் அதாவது  −196 °c அல்லது −320.8 °f  இல் பிறிசேர்வ் பண்ணி வைத்தல். அதன்பின் 100 அல்லது அதற்கு மேலும் 1000, 2000, வருடங்கள் கழித்து ஒரு இறந்த மனிதனை எழுப்பலாம் என்னும் ரெக்னோலஜி வருகின்ற போது நானோ ரெக்னோலஜி பயன்படுத்தி என்ன நோயால் இறந்தாரோ அதற்குரிய மருத்துவம் செய்து எழுப்புதல். உதாரணமாக புற்றுநோய் வந்து இறந்தவர்கள் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த பின் மருந்தின் மூலம் பிறிசேர்வ் பண்ணிய உடலை மீண்டும் உயிருடன் எழுப்பலாம். உடம்போ கெட்டுப் போகாது. 1967 இல் முதல் உடல் பதப்படுத்தப்பட்டது. 



    ரொபேர்ட் எடின்பர் என்பவரே இத்தொழில் நுட்பத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். 1963 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில்  கிரையோனிக் நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகில் 7 கிரையானிக் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. 

    இறந்து சில நிமிடங்களுக்குள் வேலையைத் தொடங்கிவிடுவார்கள். முதலில் மூளை செயல் இழக்காமல் இருக்க தேவையான ஒட்சிசன் மூளைக்குக் கொடுக்கப்படும். உடலிலுள்ள இரத்தமும் நீரும் முழுமையாக வெளியேற்றப்படும உடல் சிதையாமல் இருக்க வேதிப்பொருள் இரத்தத்திற்குப் பதிலாகப் பாய்ச்சுவார்கள். பின் ஐஸ்கட்டிகளுக்குள் அந்த உடல் வைக்கப்படும். 




    பின்னர் அந்த உடலை - 196 டிக்கிரி செல்சியஸ் திரவ நைட்ரஜன் நிறைந்த கண்டைனருக்குள் வைத்து மூடிவிடுவார்கள். உதாரணமாக புற்றுநோயால் ஒருவர் உயிரிழந்தால், புற்றுநோய்க்குரிய மருந்தை அந்த உறுப்புக்குச் செலுத்தி நானோ தொழில்நுட்பத்தில் புது உறுப்பாக வளர்க்கப்பட்டு அவருடைய உடலுக்குள் வைக்கப்படும். மூளைக்குத் தேவையான ஒட்சிசனை அளித்து பழைய நினைவுகளைக் கொண்டுவர முடியும். 



    கிரையோயினிக்ஸ் இன்சிரியூட் - 35 ஆயிரம்  அமெரிக்க டொலர் இவ்வாறு பதப்படுத்தத் தேவை என்கிறார்கள்.

    அல்கோல் - 2 இலட்சம் அமெரிக்க டொலர் தேவை என்கிறது 

    ஓகஸ்ட 2022 கணிப்பீட்டின் படி 500 பேர் பிறிசேர்வ் பண்ணப்பட்டுள்ளார்கள். 3000 ககு மேற்பட்டவர்கள். பெயர் பதிவு செய்திருக்கிறார்கள் 

    "நோயாளிகள்" மருத்துவ ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் இறந்த பின்னரே Cryonic  நடைமுறைகள் தொடங்கும். 12. 01.1967 இல் கேன்சர் நோயால் இறந்த கலிபோர்னியா யூனிவேர்சிட்டி சைக்கொலஜி professor James Bedford சடலம் தான் உறைந்த முதல் சடலமாகும். 



     

    மூளையின் அமைப்பு அப்படியே இருக்கும் வரை அதன் தகவல் உள்ளடக்கத்தை மீட்டெடுப்பதற்கு எந்த அடிப்படைத் தடையும் இல்லை என்று கிரையோனிஸ்டுகள் வாதிடுகின்றனர். 

    எதிர்காலத்தில், நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கவும், அவர்களைக் கொன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும் என்று கிரையோனிக்ஸ் வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

    கிரையோனிக்ஸ் விலை உயர்ந்ததாக இருக்கலாம். 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிரையோனிக்ஸைப் பயன்படுத்தி சடலங்களைத் தயாரித்து சேமிப்பதற்கான செலவு America Doller 28,000 முதல் 200,000 வரை இருந்தது.

    ஜெர்மனியின் முதல் கிரையோனிக்ஸ் 96 வயதான முன்னாள் பொறியாளர். பிப்ரவரி 17, ஞாயிற்றுக்கிழமை காலை, டீனிமேஷன் செய்யப்பட்டு, அவர் 6 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 23 அன்று ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருந்து  டெட்ராய்ட்டுக்கு -78°c வெப்பநிலையில் உலர் பனியில் மாற்றப்பட்டு அதன்பின் நோயாளி 5.5 நாட்களில் -196°f க்குக்  குளிரூட்டப்பட்டார். பின்னர் மார்ச் முதலாம் திகதி 2019 அன்று நிரந்தர சேமிப்பிற்காக அமெரிக்காவில் அவருடைய உடல் கிரையோனிக்காக  மாற்றப்பட்டது .



    18.11.2016: இங்கிலாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி லுகேமியாவால் பாதிக்கப்பட்டு, குணமடையாமல் இருந்த போது இந்த உலகத்தில் நான் வாழ வேண்டும் என்றும் ஆசையாக இருக்கிறது என்றும் சமூக நிறுவனங்களிடம் தன்னைப் பதப்படுத்தும்படிச் கேட்டுக் கொண்டாள்.  அதன்படி அவளுடைய உடல் அவள் இறந்தபின்  கிரியோபிரிசேர்வ் செய்யப்பட்டது. அவள் இறப்பதற்கு முன்பே அவளுக்கு இந்த நடைமுறைக்கு  சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது. 

    எனவே நீங்களும் மீண்டும் வாழ விரும்பினால், முயற்சி செய்யலாம். ஆனால், நீங்கள் மீண்டும் எழும்போது உள்ள உலகத்துக்கு ஏற்றபடி உங்களர்ல் வாழமுடியுமோ தெரியாது. வீதியில் ரொபோட்டோக்கள் நடந்து கொண்டு திரியும். வாகனங்கள் வானத்தில் பறக்கும், செயற்கைச சூரியன் இருக்கும். எதை எப்படித் தொடுவது என்று தெரியாமல் உங்களை நீங்கள் அப்டேர் செய்யமுடியாமல் தண்ணீருக்குள் வழுந்து நீந்தத் தெரியாதது போல் தத்தளிப்பீர்கள். யோசித்துப் பாருங்கள். உங்களுடைய கருத்தைப் பகிர மறக்க வேண்டாம். 


    ஞாயிறு, 6 நவம்பர், 2022

    பாயொடு ஒட்ட வைக்கும் அன்பு மந்திரம்


    மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்துவிடுவார் என்ற செய்தி இலங்கையில் பரவலாகப் பேசப்படும் செய்தி. அந்தப் பாய் எங்கே கிடைக்கும் என்று என்னிடம் பலர் விநயமாகக் கேட்டிருக்கின்றார்கள். பாய்க்கும் மட்டக்களப்புக்கும் என்ன தொடர்போ அதே தொடர்புதான் விருந்தோம்பலுக்கும் மட்டக்களப்பு மண்ணுக்கும் உரிய தொடர்பு. அடுத்தவரை வாழ வைக்கும் அற்புதமான மனப்பாங்கும் அம்மக்களுக்கு உண்டு என்பதை வந்தாரை வாழ வைக்கும் மட்டுநகர் என்ற வாக்கியம்; பறைசாற்றும். அக்காலத்தில் மலையகச் சிறுவர்களை வீட்டு வேலை செய்வதற்காக அழைத்து வரும் வழக்கம் இருந்தது. 

    எனது தந்தையும் கல்குடா தொகுதி அமைச்சர் தேவநாயகம் அவர்களும் மரியதாஸ் என்னும் பொறியியலாளரும் இணைந்து வடமுனைக் குடியேற்றம் செய்த காலப்பகுதியில் அம்மக்கள் மேல் இரக்கம் கொண்ட தந்தைஇ எங்கள் வீட்டில் ஒரு பையனையும் ஒரு பெண்ணையும் வேலைக்காக அமர்த்தியிருந்தார். அப்பெண்ணுக்கு நகை போட்டு தன்னுடைய தையற்கலைச் சிறப்பையெல்லாம் அவளுடைய ஆடையிலும் அம்மா காட்டுவதை நான் அறிந்திருக்கின்றேன். அதேபோல் ஒரு ஆண்பிள்ளைப் பிள்ளை இப்படி  வீட்டு வேலை செய்வது சரியில்லை என்று கூறி அப்பையனை வேலை முடிந்து வீட்டில் இருக்கின்ற சமயத்தில் சைக்கிள் திருத்துகின்ற கடைக்கு அனுப்பி அவனுடைய எதிர்காலம் பற்றி சிந்தித்த என்னுடைய தாய் வந்தாரை வாழ வைக்கும் மட்டக்களப்பு என்பதற்கு என் அநுபவ முன்னுதாரணமாக இருந்தார். 


    வியாபார நிமித்தமாகவும்இ உத்தியோக நிமித்தமாகவும் மட்டக்களப்பு மண்ணில் வாசம் செய்ய வருவோர். அங்கு நிரந்தர குடிகளாக மாறி அங்குள்ள பெண்களைத் திருமணம் செய்து மட்டக்களப்பு மக்களாகவே வாழ்ந்து வருவது கண்கூடு. 


    இந்த மட்டக்களப்பார் யாழ்ப்பாண மாப்பிள்ளைகளை எல்லாம் பாயோட ஒட்ட வைத்து வளைத்துப் போட்டுவிடுவார்கள் என்னும் பேச்சு இன்றும் பேசப்படுகின்றது. அந்த மந்திரக்கலையை இன்னும் இலங்கை மண்ணில் வேறு எந்தப் பகுதி மக்களும் கற்கவில்லை என்பது ஆச்சரியமான ஒரு விடயமாக ஒருபுறமிருக்க இலங்கை முன்னாள் பிரதம மந்திரி விஜேயானந்த தஹாநாயக்கா அவர்கள்; குறுமண்வெளிப் பெண்களுக்கு ஈடான அழகுடைய பெண்கள் எங்குமே இல்லை என்று பாராட்டியுள்ளார். ஒட்ட வைக்க அழகு ஒரு புறமிருக்க கொஞ்சு தமிழ் கவியோசை அவர்தம் குரலிலே இருக்கும் என்பதற்கு நாட்டுப் பாடல்களும் பேச்சுவழக்கும் முன்னின்று கையுயர்த்தும். 


    அடுத்து அறுசுவையுடன் மட்டக்களப்பு வாவியின் மீன் கடல் உணவுகளும் கால்நடைகளும் போட்டி போட்டு உணவுக்குள் அமர்ந்து கொள்ள அன்பும் அறனும் கலந்து இனிமையாகப் பேசி உண்ட உணவு உடலில் சேர பரிமாறுகின்ற அழகே தனி அழகு. இத்தனை சிறப்பும் கற்றுக் கொண்டால்இ இலங்கையின் எந்தப் பகுதி மக்களும் பாயோடு மக்களை ஒட்ட வைக்க முடியும். ஏலாதி என்னும் நூல்


    இன்சொல், அளாவல், இடம்இ இனிது ஊண் யாவர்க்கும்

    வன்சொல் களைந்து வகுப்பானேல் - மென்சொல்

    முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும்

    விருந்து ஏற்போர் விண்ணோர் விரைந்து 


    என்று கூறுகிறது. அதேபோல் வீட்டிற்கு வரும் விருந்தினரைப பார்த்து நீங்கள் முன்னமே சொல்லியிருந்தால் சமைத்திருப்போமேஇ நீங்கள் கோப்பி குடித்துவிட்டு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்இ கோப்பி போடட்டுமா என்ற கேள்விகள் மூலம் பசியோடு வருகின்ற விருந்தினரின் பசியைப் பேச்சால் போக்காதுஇ நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று புகழ்தலும்இ முக மலர்ச்சியோடு நோக்குதலும்இ வருக என்று வரவேற்றலும்இ கண்டவுடன் எழுந்து நிற்றலும்இ இனிமையாகப் பேசுதலும்இ அவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சியைக் கூறுதல்இ வந்தவுடன் பக்கத்திலே ஆசையுடன் அமர்ந்து கொள்வதுஇ அவர்கள் வீட்டை விட்டுச் செல்லுகின்ற போது அவரோடு சேர்ந்து சென்று வழி அனுப்பி வைப்பது என ஒன்பது பண்புகள் விருந்தினரைப் பேணலுக்கு இருக்கின்றன என்று விவேகசிந்தாமணி எடுத்துக்காட்டுகின்றது. 

    விருந்தின னாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல்நல் மொழி இனிது உரைத்தல்

    திருந்துற நோக்கல் வருகென உரைத்தல்

    எழுதல் முன் மகிழ்வன செப்பல்

    பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல்

    போம் எனின் பின் செல்வ தாதல்

    பரிந்துநல் முகமன் வழங்கல்இவ் வொன்பான்

    ஒழுக்கமும் வழிபடும் பண்பே

    உணவைக் கொடுக்கின்ற போது அன்போடும் பாசத்தோடும் விருந்தினருக்கு கொடுக்க வேண்டும். அது எவ்வளவு தரமில்லாத உணவானாலும் அது விருந்தினருக்கு சுவைமிகுந்த உணவாக இருக்கும். அதேவேளை முக்கனிஇ தேன்பாகுஇ பசுந்தயிர் போன்ற உணவுகளை அன்பில்லாமல் படைக்கின்ற போது அது விருந்தினருக்குத் திருப்தியைத் தராது. இதனை 

    கெட்டசாறு தவிடு கஞ்சி கிருமி உண்ட மா அரைக்

    கீரை வேர்தெளித்த மோர்மு றிந்த பாகு கிண்டுமா

    இட்ட சோறு கொழியல் உப்பி டாத புற்கை ஆயினும்

    எங்கும் அன்ப தாக நுங்க இன்ப மாயி ருக்குமே

    பட்ட பாத பசுவின் நெய்ப ருப்பு முக்க னிக்குழாம்

    பானி தங்கள் தாளி தங்கள் பண்ணி கார வகையுடன்

    அட்ட பாலகு ழம்பு கன்னல் அமுத மோடும் உதவினும்

    அன்பனோ டளித்தி டாத அசனம் என்ன அசனமே


    என்னும் பாடலடிகள் மூலம் எவ்வாறு விருந்தை ஓம்புதல் வேண்டும் என்பதை விவேக சிந்தாமணி குறிப்பிடுகின்றது.  

    அசோக வனத்தில் சீதை சிறையிருந்த போது

     அருந்து மெல்லடகு ஆரிட அருந்துமென் றழுங்கும் 

    விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்

    மருந்தும் உண்டு கொல் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும்

    இருந்த மாநிலம் செல்லரித்திடவு மாண்டெழுதால் 


    என கம்பர் விருந்தினர் வந்தால்இ இராமன் தான் இல்லாமல் என்ன செய்வானோ என்று வருந்துவதாக எழுதியிருக்கின்றார். 

    கணவனும் மனைவியும் இணைந்தே விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது சங்கமருவிய காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்தது. அதனாலேயே அந்தணர்க்கு மாம்பழம் உண்ணக் கொடுத்த செய்தியைக் காரைக்காலம்மையார் தன்னுடைய கணவனுக்கு மறைத்தார். கோவலன் மாதவியுடன் வாழ்ந்த காலத்தில் கண்ணகி விருந்தோம்பலை மறந்திருந்தாள் என்பதை 


    "அறவோர்க் களித்தலும் அந்தணரோம்பலும் 

    துறவோர்க் கெளிர்தலும் தொல்லோர் சிறப்பின் 

    விருந்தெதிர் காடலும் இழந்த என்னை"

    என்று கண்ணகி கூறுவதாக இவ்வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால்இ மட்டக்களப்பு மக்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை. பசித்தவர் யாராக இருந்தாலும் யாரையும் எதிர்பார்க்காது உணவளிக்கும் பண்பாடு அங்கு இருந்தது. 

    "இந்திரர் அமிழ்தம்இயைவ தாயினும் 

    இனிதெனத் தமியர் உண்டலும் இலரே"

    என்று புறநானூற்று 182 ஆவது பாடலிலே சாவா மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் விருந்தினர்களுக்குக் கொடுத்து உண்டார்கள் என்று கூறப்படுவதையே வள்ளுவரும் 


    "விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று" என்று கூறுகின்றார். 


    பல்லவர் காலத்திலே சிவனடியார்களுக்கு உணவளித்து உண்ணும் மரபு இருந்தது. அதனாலேயே பாம்பு தீண்டி இறந்த மைந்தனை மறைத்து அப்பர் சுவாமிகளுக்கு அப்பூதியடிகள் உணவளித்தார். 

    இவ்வாறு விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று இலக்கியங்களும் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றை அறிந்த பண்பிலேயே வாழப் பழகினால்இ எல்லாரும் பலரை பாயோடு ஒட்ட வைக்க முடியும். 


    உதவிய நூல்கள்


    ஏலாதி-  சாரதா பதிப்பகம், சென்னை - பதி.2018.

    விவேகசிந்தாமணி-  கற்பகம் புத்தகாலயம்


    நவம்பர் 2022 வெற்றிமணிப் பத்திரிகை வெளியீடு 


    புதன், 2 நவம்பர், 2022

    அபியால் முடியவில்லை





    "மணி 7 ஆகிறது. இன்னும் குறட்டைச் சத்தம் குறைந்த பாடில்லை. இரவு முழுவதும் முழித்திருந்து என்ன கன்றாவி எல்லாம் ரிவியில பார்க்கிறரோ தெரியாது. இந்தக் கர்மத்தைக் கட்டி இந்த நாட்டில வாழ வேண்டிக் கிடக்கிறது" வாய்க்குள் முணுமுணுத்தபடி கோகிலா வேலைக்குப் போகத் தயாரானாள். 

    "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

    அதனை அவன்கண் விடல்"

    என்ற வள்ளுவர் வாக்குப் போல் இவன் இதைச் செய்வான் என்று ஆராய்ந்து அவனிடம் அந்தத் தொழிலைக் கொடுக்க வேண்டும் என்று இயற்கை கீரனை கோகிலாக்குக் கட்டிக் கொடுத்திருக்கிறது. கோகிலாவின் முணுமுணுப்பெல்லாம் அவளுக்குள் மட்டும்தான் கேட்கும். வெளியே கேட்டால், மனிசன் துள்ளி வந்து குடலை உருவிப் போடுவான் என்ற பயம் அவளுக்குள் இருக்கிறது. 

    கீரன் நல்ல பட்டரும் கொழுப்பும் உண்டு பிள்ளைத்தாச்சிப் பெண்கள்போல வயிறு வளர்த்திருப்பான். மதியம்தான் அவனுக்குக் காலை. எழுந்து குளித்து சுவாமியறைக்குள் போனால், அரைமணி நேரம் வெளியே வராமல் பக்திப் பழமாகிவிடுவான். வெளியே போனால், இராசா மாதிரி நிமிர்ந்த நடையுடன் வெயிலென்ன பனியென்ன கோர்ட்டும் சூட்டும் போட்டுத் தன்னை ஒரு பணக்காரன் போல காட்டிக் கொள்ளுவான். கடையில் சாமான் வாங்குவதென்றால் கட்டுக் கட்டாகப் பேர்சில் பணத்தை வைத்து வெளியிலே மற்றவர்கள் பார்ப்பது போல் சாமான்கள் வாங்கக் காசு எடுத்துக் கொடுப்பான். 

    குடிக்கிறது கூழ். கொப்பளிக்கிறது பன்னீர். இந்த நாய் வேலைக்கும் போகாது. வீட்டிலயும் வேலை செய்யாது. ஆனால், கை நிறைய காசை காட்டிக் கொண்டு திரியும். இந்த அரசாங்கத்துக்கு என்ன மூளை. வருத்தம் வருத்தம் என்று வெளியில காட்டிறது. வீட்டுக்குள்ள மூக்குமுட்டத் தின்றது. சனங்கள் கஸ்டப்பட்டு வேலை செய்து ரெக்ஸ் கட்ட, இப்பிடியான ஏமாத்துக்காரனுகள் சொகுசா வாழுறானுகள். இதுக்குள்ள சோசலில இருக்கிறதுகளுக்கு கஸ்டம் என்று அரசாங்கம் நம்பி பணத்தைக் கட்டிக் கொடுக்கிறது. இந்தப் பாவங்களெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ" என்று திட்டித் தீர்ப்பது கீரனுடைய மனைவி கோகிலாதான். கோகிலா தனக்குள்ளே தான் திட்டித் தீர்ப்பாள். அவளுடைய வாழ்க்கை ஒரு பிள்ளையுடன் முடிந்து விட்டது.  

    சுறுசுறுப்பும் ஆர்வமும் மிக்க தன்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று மனதுக்குள் கலங்குவாள். வீட்டுக்குத் தலைமகன் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு பெண்ணாகச் செய்கின்ற போது உடல்வலி தாங்காது தனியாக அழுது தீர்ப்பாள். மகனும் எப்போதும் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டே இருப்பான். 

    காலை வானம் வெளுக்க முன்னமே அவள் எழுந்து விடுவாள். ஒரு உணவகத்திலே அவள் நிலங்களைத் துடைத்து சமயலறையைத் துப்பரவு செய்து விட்டு வரவேண்டும். இங்கு வேலை செய்தால் ஒரு 100 ஒயிரோக்குப் பதிந்து விட்டு மீதமுள்ள காசைக் கையிலே கொடுப்பார்கள். இதனாலே அரசாங்கம் கொடுக்கின்ற அரசாங்கப்  பணத்தை விட கையில் கொஞ்சம் காசு புளங்கும். அப்படி உழைத்தாலேயே ஜெர்மனியில் கொஞ்சம் சொகுசு வாழ்க்கை வாழ முடியும். என்ன சொகுசுப் பணம் என்பதைத் தவிர வெளியே போய் வேறு 4 முகங்களைப் பார்த்தால் அவளுக்கு மனம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். அவருக்கு 100 ஒயிரோவில் சன்கிளாஸ், விலைகூடிய உடுப்பு, விடுமுறைக்கு வேறு எங்காவது நாட்டுக்குப் போக வேண்டும். இதற்கெல்லாம் எந்த நாடு சும்மா காசு கொடுக்கப் போகிறது. இந்த நாடுதான் சும்மா இருக்க காசு கொடுக்கிறதே. ஜெர்மனி உழைத்துச் சாப்பிடுபவர்களைத் தவிர ஏதாவது சாட்டுப் போக்குச் சொல்லி ஏமாற்றி அரசாங்கப் பணத்தில் வாழுகின்றவர்களுக்குத்தான் சலுகை செய்து கொடுக்கிறது என்று புளுங்குபவர்கள் தான் அதிகம்.  

    கோகிலாக்கும் கீரனுக்கும் ஒரே ஒரு மகன் அபி வளர்ந்து வாட்டசாட்டமாகத்தான் இருக்கின்றான். சிறுவனாக பாடசாலையில் ஆசிரியர்கள் எதுவுமே வாய்திறந்து பேசாத பெடியன் என்று சொல்வார்கள். அது இந்த நாட்டுக்குப் பொருந்தாதே. கோகிலா, கீரன் இருவரையும் ஆசிரியர் அழைத்து எப்போதும் பேசுவார்கள். உங்களுடைய மகன் சுமாராகப் படித்தாலும் கலகலப்புக் குறைவாகவே இருக்கின்றான் என்று அவர்கள் சொல்லுகின்ற போது வாய்பேச முடியாதவர்களாகவே அவர்கள் இருவரும் இருந்தனர். 

    கோகிலா படபடப்பாக வேலைக்குப் போக ஆயத்தமாகினாள். சமையலறைக்குள் மதியச் சாப்பாடு தயாரித்துவிட்டாள். காலைச் சாப்பாட்டுக்குரிய பாண் பட்டர், வூஸ்ட் என்னும் இறைச்சி எல்லாம் வைத்துவிட்டாள். முட்டை ஒம்லெட் போட்டு தட்டில் வைத்துவிட்டாள். அபியை பாடசாலைக்குப் போவதற்காக எழுப்பிவிட்டு அவசரமாகக் கதவைப் பூட்டிவிட்டு வேலைக்குத் தயாரானாள். 

    அப்பாக்குப் பக்கத்தில் படுத்திருந்த அபியும் பாடசாலைக்குப் போவதற்காக எழும்பினான். எழும்பியவனுடைய கையைப் பிடித்து இழுத்தான் கீரன். அப்பா பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று கையை உதறிய மகனை. ஒன்றுமே பேசாமல் மீண்டும் கட்டிப் பிடித்து இழுத்தான். அவனுடைய இறுகிய பிடிக்குள் அகப்பட்டான் அபி. அவனுடைய ஒவ்வொரு அங்கங்களும் கீரனால் ருசிபார்க்கப்பட்டன.  இளமையின் உச்சத்தில் வாலிப்பான உடற்கட்டில் மெருகேறிப் போன அவனுடைய அங்கங்கள் தன்னுடைய தந்தையின் காமவெறிக்குள் கட்டுப்பட்டுப் போனது. மெல்ல மெல்ல தன்னுடைய காமவெறியின் ஆற்றல் ஓய்ந்து போன நிலையில் கீரன் மீண்டும் போர்வைக்குள் அடங்கிப் போனான். 

    படபடப்புடன் எழுந்த அபியும் குளியல் அறைக்குள் போய்க் கண்ணாடி முன் நின்று சிலமணிநேரம் அழுது தீர்த்தான். தன்னுடைய முகத்தைப் பார்க்கத் தனக்கே பிடிக்கவில்லை. எத்தனை நாளாக இப்படிச் சித்திரவதையை அவன் அனுபவிப்பான். இதற்கு ஒரு முடிவு இல்லையா? பாசத்தோடு தூக்கி வளர்த்த பிள்ளையை இப்படி அனுபவிக்க எந்த மிருகம்தான் விரும்பும். எத்தனை ஆண்கள் இப்படி பாலியல் வன்முறைக்கு உட்படுகின்றார்கள் என்பதை அறியாதவர்கள் தான் அதிகம்

    ஒரு பிளேட்டை எடுத்தான். தன்னுடைய கைகளில் கீறிக் கீறி தன்னுடைய ஆவேசத்தைத் தீர்த்தான். நேரம் 8 ஐக் காட்டியது. இதற்குப் பிறகு பாடசாலைக்குப் போக முடியாது என்பதை உணர்ந்தான், ஏற்கனவே இவனுடைய கைகளில் இந்தக் கீறல் காயங்கள் அதிகமாகவே இருந்தன. எப்போதுமே நீண்ட கையுள்ள மேலங்கி அணியும் இவனுக்கு மட்டும்தான் தெரியும் தன்னுடைய மனதின் அழுகையும் வேதனையும். இந்தக் கைக் காயங்களின் வலியைவிடப் பெரியது அவனுடைய உளக் காயங்கள் என்னும் உண்மையை அவனுக்குத் தானே தெரியும். குளித்துவிட்டு பிளாஸ்டரை எடுத்து காயங்களின் மேல் ஒட்டினான். ஆடை மாற்றிவிட்டு வெளியே கிளம்பி விட்டான். 

    வீட்டை விட்டு வெளியே வந்த அபி நகரத்தின் அருகாமையில் போடப்பட்டிருந்த ஒரு கல் போன்ற இருக்கையில் அமர்ந்து கொண்டு நகரத்தின் நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். கொலோன் நகரம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். அங்குள்ள தேவாலயத்தைப் பார்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகளும் குவிந்து கொண்டிருப்பார்கள். அந்தத் தேவாலயத்துக்கு முன்னே கலைஞர்கள் பாடுவதும் படம் வரைவதும் என்று தம்முடைய ஆற்றல்களை வெளிப்படுத்திப் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள். அங்கு வந்து இருந்தாலே போதும் பொழுது பஞ்சாகப் பறந்து போய்விடும். கவலைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். பாடசாலைக்குப் போகாமல் அபியும் அங்கு வந்து அமர்ந்து விட்டான். எண்ணங்களை தன் பாட்டிலே தவள விட்டபடி வாய்க்குள்ளே சிப்ஸ் ஐ அடைந்தபடி வருவோர் போவோரை உணர்ச்சியில்லாதவனாகப் பார்த்துக் கொண்டிருந்தான். 

    இங்குள்ளவர்கள் எத்தனை பேர் பாவச்சுமைகளையும், பழிச் சுமைகளையும், கவலைச் சுமைகளையும் வேதனைகளையும் மூட்டை மூட்டையாய்ச் சுமந்து கொண்டு போவார்கள். மனதைப் படம் பிடிக்கும் கருவி இருந்தால் எல்லாம் வெளிப்படையாகத் தெரியும்.

    அபியுடைய நண்பன் சுரேஸ் அன்று லீவு எடுத்திருந்தான். கொரொனாத் தாக்கத்திலிருந்து இப்போதுதான் மீண்டிருக்கின்றான். தற்செயலாக அபியைக் கண்டவன். ~~என்னடா அபி ஸ்கூலுக்குப் போகவில்லையா? என்று கேட்டபடி அருகில் வந்து அமர்ந்தான். பதில் இல்லாமல் தலையை மட்டும் இலலையென்று ஆட்டினான் அபி. என்னடா என்ன நடந்தது. என்றான். எதுவுமே பேசாமல் அபி இருக்க. பலமுறை அவனை அசைத்துப் பார்த்தான். இறுதியில் எப்படியோ போ. எதையோ பறி கொடுத்தவன் போல எப்படித்தான் எப்பவும் உன்னால் இருக்க முடிகிறதோ. ஆன்டியிடம் உன்னைப் பற்றிச் சொல்ல வேண்டும். அப்பாக்குத்தான் உன்னைப் பற்றி என்ன தெரியப் போகிறது. ஆன்டிதானே தாயுமானவள், தந்தையுமானவள் என்று சொல்லிவிட்டு நாளைக்கு ஸ்கூலுக்கு வா. சரிதானே. அதுக்கும் மௌனமா? என்னவோ போ என்று சொல்லிவிட்டுப் போனான். 

    அபிக்குத் தன்னை நினைக்க வெறுப்பாக இருந்தது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் எத்தனை நாளைக்குத் தான் நான் இப்படி வாழ்வது. வெளியில் சொல்லுகின்ற தைரியமும் இல்லாமல் நான் என்ன ஈனப் பிறப்பு பிறந்திருக்கிறேன். இப்போது சுரேசிடம் சொல்லியிருக்கலாமே. ஏன் என்னால் முடியவில்லை? என்று தன்னுடைய மனதை நினைத்துத் தவித்துக் கொண்டே இருந்தான். இந்த நேரத்திலே வேலை முடிந்து வந்து கொண்டிருந்தாள் கோகிலா.

    தூரத்தில் வருகின்ற போதே அபியைக் கண்டு விட்டாள். இந்த நேரத்தில் இவன் இங்கே இருந்து என்ன செய்கிறான். இவன் பள்ளிக் கூடத்துக்குப் போகாமல் இங்கே வந்திருந்து காவாலியாகத்தான் போகப் போகிறான் போல இருக்குது என்று நினைத்தபடி அவனருகே ஓடி வந்தாள். 

    "அபி..... " என்று அவனை அசைத்துப் பார்த்தாள். அவன் பதில் எதுவுமே பேசவில்லை. என்னடா ஏன்டா பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை. நான் மாடுபோல் வேலை செய்வது உனக்காகத்தானே என்று அவனை அணைக்கப் போனாள். விரைவாக அவனுடைய கைகள் தாயுடைய கைகளைத் தட்டி விட்டது. அபி... என்னடா என்றாள். 

    "ஏன் உனக்குத் தெரியாதா? நடிக்காத அம்மா. என்னத்துக்கு என்னைப் பெத்தனீ? இப்படிப் பலி கொடுக்கவா? எல்லாம் உன்னாலதான். 

    "நான் என்னடா செய்றது? உனக்குத் தெரியும் தானே அவரைப்பற்றி. வா வீட்ட போவம்"

    நீ போ. நான் வரல்ல. வராமல் எங்கே போகப் போகிறாய்? பயத்துடன் அவள் கேட்டாள். 

    எங்கேயோ போறன். நீ உன்ர புருஷனுக்குச் சமைச்சுக் கொடுத்துத் தாலாட்டு. உனக்கு ஏனம்மா புள்ள? ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தான். என்ர வயசில பிள்ளைகள் எப்படியெல்லாம் திரியுதுகள். என்னால படிக்க முடியல்ல. நித்திரை கொள்ள முடியல்ல. இப்படியே போனால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில தான் கொண்டு போட வேணும். விருக்கென்று எழுந்தான். 

    "எங்க போறாய் என்று இழுத்தாள் கோகிலா. இது இன்று நேற்றா மகன் நடக்கிறது. என்ன செய்வது வாய் திறக்க முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம். இவ்வளவு காலமும் கட்டிக் காப்பாத்தி வந்த மானமும் மரியாதையும் இவனால போகப் போகிறதே என்று தான் பயமாக இருக்கிறது. எப்படி இருந்த என்னை இந்த மிருகத்திட்டக் கட்டிக் கொடுத்திட்டார்கள். ஊருக்குத் தெரிந்தால், அதுகள் நிம்மதியா இருக்குங்களா?  என்றுதான் பார்க்கிறேன் என்றாள். 

    "ஓ.. ஓஹோ நீ உன்ர மானம் மரியாதையைப் பார்த்து இத்தனை நாளும் நடக்கிறதெல்லாம் தெரிஞ்சு தெரியாத மாதிரி இருக்கிறாய். உனக்கு ஊரில இருக்கிறவர்களுக்குத் தெரியக் கூடாது. மானம் மரியாதை போய்விடும். இவைகள் தான் முக்கியம். என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று எழுந்து நடந்தான். அவன் கால்களை விட மனம் வேகமாக ஓடியது. 

    பக்கத்தில் போகின்றவர்கள் எல்லாம் எதையோ மனதுக்குள் கொண்டு ஓடுவது போல் அவனுடைய கண்களுக்குத் தெரிந்தன. விடுதலை பெறத் துடித்த மனம் செய்வதறியாது துடித்தது. ஓடிக்களைத்து ஆறுதல் காண ஒரு தரிப்பிடத்தில் தரித்தது புகைவண்டி. 

    கோலோன் புகையிரத நிலையம் மக்களால் நெருங்கி வடிந்தது. நிற்பவர்களும் நடப்பவர்களும் முகத்திலே ஏதோ அவசரத்தைப் புதைத்துக் கொண்டு நடந்தார்கள், நின்றார்கள். பிரயாணிகளின் சலசலப்பு புகையிரத நிலையத்தில் குறைவாகவே இருந்தது. வாயை மூடிய மாஸ்க் போட்டு வருபவர்கள் போகின்றவர்களை அடையாளம் தெரியாமல் மறைத்திருந்தது. அவனுடைய உள்ளக்கிடக்கையும் அப்படித்தான். இந்த ரெயினில் குதித்து விடுவோமா? 

    இல்லை நான் ஏன் குதிக்க வேண்டும். வெலன்டீனா என்னிடம் எத்தனை தடவை நெருங்கியிருக்கிறாள். அவளுடைய அழகும் அன்பும் எனக்காகவே காத்துக் கிடக்கிறது. தமிழர்கள் போல் பிள்ளைகளுடைய மனதைப் புரியாதவர்கள் இல்லையே ஜெர்மனியர்கள். என்னை அவள் புரிந்து கொள்வாள் தானே. ஏன் அவளிடம் கூட என்னை வெளிப்படுத்த எனக்கு முடியவில்லை? ஒரு கோழையை வளர்த்து அவருக்குப் பணிவிடை செய்கின்ற என்னுடைய அம்மாவை நான் என்ன செய்வது? வெறுப்பு வெறுப்பாக அவனுடைய மனம் தத்தளித்தது. 

    இருக்கையை இறுக்கிப் பிடித்தபடி கைகால்கள் நடுங்க மனம் படபட என்று அடித்துக் கொள்ள கோகிலா நிசப்தமாக அழுகையைக் கட்டுப்படுத்தியபடி இருந்தாள். விடியல் என்பது தானாக வர வேண்டும் என்று அவள் நினைப்பது எந்த அளவுக்கு நடக்கும். வாழ வேண்டிய மகனை இப்படிச் சிறைக்குள் அடைத்து வைத்து வாழ்வது எந்த அளவிற்கு நன்மையில் முடியும். நடைப்பிணமாக எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள்.

    இரயிலினுள் ஒருவர் பின் ஒருவராக உள் நுழைகின்றார்கள். எப்படித்தான் சனநெருக்கடி என்றாலும், உள்ளே இருந்து இறங்குபவர்கள் முழுவதும் இறங்கிய பின்தான் வெளியே இருப்பவர்கள் உள்ளே நுழைவார்கள். இது எல்லாம் படித்து வருவதில்லை. பழக்கத்தால் வருவதுதான். அவன் நினைக்காமலே இரயிலினுள் ஏறிவிட்டான். அது வூப்பற்றால் தாண்டிப் போகின்ற இரயில். வூப்பற்றாலில் ஒரு அம்மன் ஆலயம் இருக்கிறது. இரயிலல் போகின்றவர்கள் இறங்கிப் போக அருகாமையில்த்தான் அமைந்திருக்கிறது. இன்று வெள்ளிக் கிழமை என்ற காரணத்தால் நிச்சயமாக் கோயில் திறந்திருக்கும். அங்கு போக அவனுடைய மனம் நினைக்கின்றது. சரி அங்கே போவோம் என்று நினைத்தபடி இருந்துவிட்டான். 

    இரயில் ஓட்டத்தில் எண்ணங்கள் வேகமாக ஓடுகின்றன. பக்கத்து சாளரத்தால் ஓடிப் போகின்ற மரங்களை அவனால் நிறுத்த முடியாது அதுபோல தன்னுடைய எண்ணங்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், மரங்கள் போல எண்ண அலைகள் மூளைக்குள்ளே பதியம் போட்டு வைக்கப்பட்டுவிட்டது. அப்போது மனதுக்குள் ஒரு தைரியம் வந்தது போல் உணர்வு தோன்றியது. இந்த உணர்வைக் கோயில் தந்ததா? இல்லை தானாகவே வந்ததா? கையிலே கைத்தொலைபேசி இருக்கிறது. பக்கத்தில் பலர் இருக்கின்றார்கள். ஆனால், அவனுக்கு எதிலுமே நாட்டமில்லை. கடந்த காலத்தை மட்டும் மீட்டிப் பார்க்கிறான். அவன் எவ்வளவு அடிமையாகக் கோழையாக இருந்திருக்கின்றான் என்று திரும்பத் திரும்ப மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. 

    கோயிலுக்குள் போய்க் கண்மூடி நிற்கிறான். பூஜை மாலை 7 மணிக்குத்தான் என்பது அவனுக்குத் தெரியும். அவன் பூஜை பார்க்க வந்தவன் இல்லையே. மன்றாட வந்தவன். தன் உள்ளத்தைப் பேசாத கடவுளிடம் திறந்து காட்டிப் பேச வந்தவன். கண்மூடி நிற்கிறான். வருபவர் போகின்றவர் எவருமே அவனுக்குத் தெரியவில்லை. கண்ணுக்குள் படம் ஓடுகின்றது. அத்தனையும், இத்தனை நாள் மறைத்து வைத்த அத்தனையும் சிற்பத்தின் முன் காட்டப்படுகின்றது. படம் ஓடி முடிந்தது. முற்றும் என்று படம் முடிந்துவிட்டது. திரும்பிப் பார்க்காமல் மீண்டும் ஒரு தெளிவுடன் இரயில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டான். 

    வீட்டின் கதவு திறபடக் கோகிலா ஓடி வந்தாள். வந்திட்டியா அபி. வந்திட்டியா அபி. வா சாப்பிட. கையக் கழுவிட்டு வா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். குளியலறைக்குள் போனான். அது பூட்டிக் கிடந்தது. அப்போதுதான் கீரனுக்கு விடிந்திருக்கின்றது என்று தெரிந்தது. அறைக்குள்ளே போனவன் திரும்பவும் சமையலறைக்குள் வந்தான். என்னடா கைகழுவ இல்லையா? 

    எங்க கழுவ என்று கத்திவிட்டு சமையலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டிக்குள் கைகளைக் கழுவினான். கோகிலாவும் அபிக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு நின்றாள். 

    பக்கத்தில் வந்த அபி லாச்சியைத் திறந்தான். கையில் எடுத்த மீன் வெட்டும் கத்தியால் முதலில் கோகிலாவின் முதுகில் குத்தினான். பெரிதாகக் கத்தியபடித் திரும்பியவளின் மார்பில் மீண்டும் கத்தி பதிந்தது. மூர்ச்சித்து விழுந்தாள். 

    கோகிலா கத்திய சத்தம் கேட்டு ஓடி வந்த கீரன் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் அவனுடைய மார்;பிலும் கண்ட கண்ட இடங்களிலும் கத்தியைப் பல முறை ஆசை தீரப் பதித்தான். மலை சரிந்தது. கண் மூடித் திறப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. இருவரையும் வெறித்துப் பார்த்த அபி மெதுவாக நடந்தான். 

    உலகத்தில் வாழக் கூடாதவர்கள். தண்டனை என்ற பெயரிலே ஜெர்மனிய 5 நட்சத்திர ஹொட்டல் போன்ற சிறையிலே தண்டனை அனுபவிப்பதற்கு அவன் விரும்பவில்லை. தொலைபேசியை அழுத்திய அபி. என்னுடைய அப்பாவையும் அம்மாவையும் நான் கத்தியால் குத்திக் கொன்று விட்டேன். என்னுடைய வீட்டு விலாசம் ஹேர்பேட் ஸ்ராச 43. என்று பொலிசுக்கு சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தான். அந்த இடத்திலேயே நிலத்தில் இருந்து விட்டான். படபடவென்று வந்த பொலிஸார் பிரேதங்களை வெளியகற்றினார்கள். 

    சலனமில்லாமல் சுதந்திரப் பறவையாய் அபியின் உள்ளம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது




     





    திங்கள், 24 அக்டோபர், 2022




    ஆண்டுகள் செலவில் 
    ஆயிரம் ஆயிரம் நினைவுகள்
    இழந்தவை அநேகம் 
    பெற்றவை அநேகம் 
    பிரிந்தவை அநேகம் 
    சேர்ந்தவை அநேகம்
    கவலைகள் அநேகம்
    மகிழ்வுகள் அநேகம் 
    அனுபவம் அநேகம் 
    ஆய்வுகள் அநேகம் 
    புரிந்தவை அநேகம் 
    புரியாதவை அநேகம்
    தாழ்ந்தவை அநேகம் 
    உயர்ந்தவை அநேகம் 

    கசந்த நினைவுகள் அநேகம் 
    இனித்த பொழுதுகள் அநேகம் 
    உறவுகளின் விரிசல்கள் அநேகம்
    உறவுகளின் சேர்க்கைகள் அநேகம்

    இழப்புக்கு வரவு சமனாகும்
    உலகம் சுழன்று கொண்டே
    கொடைகள் வழங்கும் . 

    இப்பிரபஞ்சம் 

    அன்புக்கு அன்பு, 
    பாசத்துக்குப் பாசம்
    பகைக்குப் பகையென 
    மனஅலைக்கேற்ப பலன்களை 
    அள்ளித் தருமென உணர்ந்து 
    அன்போடும் மகிழ்வோடு
    தீபத் திருநாளைக் கொண்டாடுவோம் 

    தீபத் திருநாள் வாழ்த்துகள் 
    வாழ்க வளமுடன் 

     

    செவ்வாய், 27 செப்டம்பர், 2022

    கர்ப்பக்கிரக ஆய்வுகூட அன்பளிப்பு



    கழுத்தில் தாலி ஏறிவிட்டால் புதுமணத் தம்பதிகளிடம் கேட்கும் அடுத்த கேள்வியாக அமைவது வயிற்றில் பூச்சி புழுக்கள் இல்லையா? என்பதே. இந்தக் கேள்வி தமிழர்கள் மத்தியில் கலாசாரமாகவே இருக்கின்றது. திருமணம் மூலம் அங்கீகாரம் வழங்கி அவர்களை இனத்தின் விருத்திக்குத் தயாராகச் செய்யும் கடமை தம்மிடம் இருப்பதாக பெரியவர்கள் கருதுகின்றார்கள். அந்தக் கருக்கட்டல் சரியான முறையில் ஏற்படுவதற்கும் அக்கருவைச் சரியான முறையில் வளர்த்தெடுப்பதற்கும் உரிய ஆலோசனைகளை வழங்குவதும் அவர்களின் கடமையாக இருக்கின்றது. முதல் இராத்திரிக்கு நாள் குறித்துக் கொடுப்பதும் இல்லையென்றால் தேனிலவுக்கு தம்பதியினரை அனுப்பி வைப்பதும் ஒரு ஆரோக்கியமான குழந்தையை உலகத்துக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கமாக அமைகின்றது. இச்செயற்பாடு எந்த அளவிற்கு இளந் தலைமுறையினரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது என்பது தற்காலத்தில் கேள்விக்குறியாக இருந்தாலும் முறையற்ற உறவுகளால் கருத்தரித்தல் ஏற்படுவது இக்காலத்தில் சர்வசாதாரணமாக இருக்கின்றது. இதனால் கருச்சிதைவுகள் நடைபெறுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. உருவான குழந்தையை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலமோ வீட்டில் மருத்துவச்சியை அழைத்தோ குழந்தைப் பேறை கவனமாகச் செய்கின்ற முறை ஐரோப்பிய நாட்டிலும் இருக்கின்றது. 

    குழந்தை வயிற்றில் உருவாவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள், எப்படி வளர்கின்றது, எவ்வாறு வளர்த்தெடுக்கப்படுகின்றது. ஏன் பிள்ளைக்குக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. பிள்ளையை எப்படி வெளியே இலகுவாக எடுப்பது. கருச்சிதைவு செய்வது என்பன பற்றி நற்றிணை, புறநானூறு, திருமந்திரம், குறுந்தொகை, பட்டினத்தார் பாடல்கள், போன்ற பல பாடல்களிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. 

    அக்குழந்தை கருவாகின்ற காலத்திலே புல்லுக்கு மேலே விழுந்த பனித்துளியின் அளவிற்கு அந்த கரு இருக்கும் என்று அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழிலே பாடியிருக்கின்றார்.

    "அறுகுநுனி பனியணைய சிறிய துளி

    பெரியதொரு ஆகமாகி " என்கிறார். 

    இதனைப் பட்டினத்தார் பாடுகின்ற போது 

    "ஒருமட மாதும் ஒருவனுமாகி இன்ப சுகம்தரும் அன்பு பொருந்தி

    உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணிதம் மீது கலந்து

    பனியில் ஓர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு

    பதும அரும்பு கமடமி தென்று பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்று

    உருவமும் ஆகி உயர வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும்

    நிறைந்து மடந்தை உதரம் அகன்று புவியில் விழுந்து

    ஓரறிவு ஈரறிவாகி வளர்ந்து"


    என்று பாடிச் செல்கின்றார் 


    இதனையே திருவாசகத்திலே அற்புதமாக கரு உருவாகி குழந்தையாக பிறப்பது பற்றி மாணிக்கவாசகர்  பாடுகின்றார். 


    "மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்

    தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்

    ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்

    இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்

    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

    ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்

    அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்

    ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்

    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

    தக்க தசமதி தாயொடு தான்படும்"

    மனிதப் பிறப்பிலே தாயின் வயிற்றிலே கருவுறுகின்ற போது அதனை அழிப்பதற்குச் செய்யும் குறைவில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும், முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுள்ள கரு இரண்டாகப் பிரிவு படாமல் தப்பியும், இரண்டாம் மாதத்தில் நடக்கின்ற காரியங்களாலே உருக்கெடுவதிலிருந்து தப்பியும், மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும், நான்காவது மாதத்தில் அம்மத நீர் நிறைவினால் உண்டாகும் பெரிய இருளுக்குத் தப்பியும், ஐந்தாவது  மாதத்தில் உயிர் பெறாது இறப்பதிலிருந்து தப்பியும், ஆறாம் மாதத்தில் கருப்பையில் சொறி மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்று தப்பியும், ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும்(குறைப்பிரசவம்), எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்று தப்பியும்(இட நெருக்கடி), ஒன்பதாவது மாதத்தில் வெளியே வர முயல்வதால் வருந்துன்பத்தினின்று தப்பியும், குழந்தை வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்திலே தாய் படுகின்ற கடல் போன்ற துன்பத்தோடு துயரத்தினின்று தப்பியும், பூமியிற்பிறக்கின்றது. 

    இவ்வாறு பிறக்காது காந்தபுரத்து மன்னன் மகள் பிரசவ வேதனையால் துடித்தபோது நறையூர் மருத்துவச்சி அவளுடைய வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்ததாகக் கொங்கு மண்டல சதகம் 92 ஆவது பாடலிலே பாடப்பட்டுள்ளது. இந்நூல் 11 ஆம் நூற்றாண்டு எழுதப்பட்டது. 

    "குறைவறு தெண்ணீர் நதியணை காந்தபுரத் தொரு நல்

    லிறை மகளார் மக வீனப் பொறாதுட லேங்க வகிர்

    துறை வழி பேற்று மகிழ்வூட்டு மங்கல தோன்றி வளர்

    மறைவழி நேர் நறையூர்நாடு சூழ் கொங்கு மண்டலமே "

    என அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த செய்தி கூறப்பட்டுள்ளது. 

    இவ்வாறு பெற்றெடுக்கும் பிள்ளைகளைக் கருச்சிதைப்பது பற்றிக் கூறும் போது இது ஒரு பாவச் செயல் எனவும் மருத்துவர்களோ மற்றவர்களோ அதற்கு ஊக்கமளிக்கக் கூடாது என புறநானூற்றுப் பாடல் எடுத்துரைப்பதில் இருந்து அக்காலத்தில் கருச்சிதைவும் நடைபெற்றிருக்கின்றது என்பதை அறியக்;கூடியதாக இருக்கின்றது. 

    கருப்பை என்பது கர்ப்பக்கிரகம் போன்றது. அங்கு பரிசுத்தமான ஒரு உயிர் உற்பத்தி நடைபெறுகின்றது. ஆணும் பெண்ணும் தம்முடைய எதிர்கால வாரிசை உருவாக்க எடுக்கும் முயற்சியின் ஆய்வுகூடம். இதனாலேயே  இக்கரு வளர்ச்சி சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பழைய தமிழ் இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் அற்புதமாக எடுத்துக்காட்டியிருக்கின்றன. 


    வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

    Dr.Abraam George - Shanti Bhavan




    கல்வியின் மூலம் வறுமையை, ஏற்றத்தாழ்வுகளை நீக்க முடியும் என்று முன்னெடுத்து வெற்றி கண்டவரே டாக்டர் ஆபிரகாம் ஜோர்ஜ் என்பவர். இவர் என்ன செய்தார். எவ்வாறான சமூகத்தைக் கட்டி எழுப்பினார் என்பதை அறிய வாருங்கள் தொர்ந்து பார்ப்போம். தனக்காகத் தன்னுடைய சொந்த நலனுக்காக சொத்துக்களைச் செர்த்து வாழுகின்ற மக்களுக்கு மத்தியிலே இந்த மனதரைப் பற்றிப் பேச வேண்டும் என்று என்னுடைய மனம் விரும்பியது

     

     யார் இந்த ஆபிரகாம் ஜோர்ஜ் இவர் இந்திய-அமெரிக்க தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் மற்றவர்களுக்கு உதவுகின்ற தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத பின்தங்கிய மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உயர்ந்த நிலைக்கு வருவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஒரு இலாப நோக்கமிலலாத அமைப்பான ஜார்ஜ் அறக்கட்டளையின் (TGF) நிறுவனர் தான் இவர்.

     அவரது அறக்கட்டளை வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம், ஈய நச்சு தடுப்பு, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றில் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு 4 வயது முதல் கல்லூரி வரை இலவசக் கல்வி வழங்க உதவுவதற்காக சாந்தி பவன் பள்ளியை நிறுவியிரக்கின்றார். ஜார்ஜ் இந்தியாவின் உள்ள கேரளாவின் திருவனந்தபுரத்தின் கடலோர நகரத்தில் பிறந்து வளர்ந்தார். ஒருவரான மேத்யூ மற்றும் ஏலியம்மா ஜார்ஜ் அவர்களின் நான்கு குழந்தைகளின் இரண்டாவது மகன். பதினான்கு வயதில், ஜார்ஜ் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார். 

    பின்னர் அவர் இந்திய இராணுவத்தின் நடுத்தர பீரங்கி படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்டாக பட்டம் பெற்றார். 1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டில் ஜார்ஜின் முதலாவது போஸ்டிங் சீனாவின் எல்லையான வடகிழக்கு எல்லைப் பகுதியில் இருந்தது ஒருமுறை திடீரென டைனமைட் வெடித்தபோது ஜார்ஜ் காயமடைந்தார். அவர் குணமடைந்து திரும்பியதும், அவர் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு நியமிக்கப்பட்டார், அங்கு அவர் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார் மற்றும் கேப்டன் பதவிக்கு உயர்ந்தார். 

     1968 ஆம் ஆண்டில், ஜார்ஜ் பணியின் மூன்றாம் ஆண்டில், அவர் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். அதற்கு சிறப்பு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இந்த கட்டத்தில், அவரது தாயார் ஏற்கனவே அமெரிக்காவில்physics teacher மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானியாக நாசாவில் பணிபுரிந்தார். அவரது தாயின் நிலை அவருக்கு அமெரிக்காவிற்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கியது, அங்கு அவர் அறுவை சிகிச்சை செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

      அமெரிக்காவிற்கு வந்த ஜார்ஜ் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ; stern school of Business  ஸில் பட்டதாரி மாணவராக பயின்றார். அந்த நேரத்தில், அவர் அமெரிக்க Development Economy and international finance  ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார், பின்னர், இப்போது J.P Morgen Chace வங்கியின் ஒரு பகுதியாக இருக்கும் கெமிக்கல் வங்கி, ஜார்ஜுக்கு வங்கியில் officer  வேலை வாய்ப்பை வழங்கியது. 

    ஜார்ஜ் 1976 ஆம் ஆண்டு தனது சொந்த நிறுவனமான Multinational Computer Models Inc (MCM) தொடங்க முடிவு செய்தபோது MCM  பின்னர் உலகளாவிய முதலீட்டு வங்கியான Credit Suisse First Boston  உடன் ஒரு கூட்டு முயற்சியை உருவாக்கியது, அங்கு ஜார்ஜ் அதன் புதிய செயல்பாடுகளின் தலைமை ஆலோசகர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். 1998 இல், ஜார்ஜ் MCM I Fortune 500 நிறுவனமான SunGard  டேட்டா சிஸ்டம்ஸ{க்கு விற்றார், அங்கு அவர் இரண்டு ஆண்டுகள் துணைத் தலைவராக பணியாற்றினார். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையம் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவில் அவர் இருந்தார். அவர் நியூயார்க் பல்கலைக்கழக ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் துணைப் பேராசிரியராக உள்ளார். 

     ஜார்ஜ் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜனவரி 1995 இல் இந்தியா திரும்பினார். அவர் அறிந்திருந்த அநீதிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதே அவரது நோக்கமாக இருந்தது, இதற்காக அவர் தி ஜார்ஜ் அறக்கட்டளை, ஒரு இலாப நோக்கற்ற தொண்டு அறக்கட்டளையை www.shantibhavanchildren.org  மற்றும்  www.tgfworld.org 
    நிறுவினார். அவரது ஆரம்ப திட்டங்களில் ஒன்றான சாந்தி பவன் குடியிருப்புப் பள்ளி, தலித் அல்லது "தீண்டத்தகாத" சாதிகளைச் சேர்ந்த இந்தியாவின் ஏழ்மையான பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் பராமரிப்பை வழங்குகிறது. 

    2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, பள்ளியின் 20 வருட செயல்பாடுகளுக்குப் பிறகு, முதல் நான்கு  Batch students இப்போது கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளன, மேலும் Mercedes Benz, Goldman Sachs, Ernst & Young போன்ற உலகளாவிய நிறுவனங்களில் வேலை செய்கின்றார்கள்.இது இந்தியாவின் சமூகத்தில் ஈடு இணை இல்லாத சாதனையாகும். வரலாறு. 2021 ஆம் ஆண்டில், ஆறு சாந்தி பவன் பட்டதாரிகள் இளங்கலைப் படிப்பிற்காக Dartmouth, Hofstra, Duke, Princeton,  Middlebury, and Northwestern universities
     மற்றும் வடமேற்கு பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கின்றார்கள். 95 வீதம் தீண்டத்தகாதவர்கள் என்று இந்தியாவில் கருதப்பபடும் பிள்ளைகள் படிக்கின்றார்கள். இது ஒரு பெரிய சாதனை எங்கேயா குப்பத்தில் இருந்த பிள்ளைகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுகின்ற போது அவர்களுடைய பெற்றோர் கண்களிலே மலர்ச்சி தெரிகின்றது. விளையாட்டுக்கள், கணினி, பியானோ போன்ற இசைகள் சிறுவர்கள் பயிலுகின்ற போது கணிகளல் ஆனந்தக் கண்ணீர் வருகின்றது. 'அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்னும் வரிகளே ஞாபகத்தில் இருக்கின்றன. இவ்வாறான மனிதர்களிலேதான் நாம் இறைவனைக் காணுகின்றோம்.

    செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

    என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்தியோர்



    அலையடித்து ஓய்ந்தது போல்
    என்மீது விழுந்த வாழ்த்தலைகள்
    மெல்ல மெல்ல சாந்தி பெறுகின்றன
    ஓரப் பார்வையால் பார்க்கிறேன்
    இன்னும் தூறல்கள் தாலாட்டுகின்றன
    காலம் தன் கண்களை உயர்த்தி - என்
    வாழ்நாள்களை கணக்கு வைக்கிறது
    சுற்றுகின்ற பூமியும் நரம்புகளின் வலுவுக்கு
    எச்சரிக்கை கொடுக்கின்றது - இருந்தாலும்
    மனதுக்குள் துணிவின் உச்சம் ஊற்றெடுக்கிறது
    உயர்வது எண்ணமா! உயர்த்துவது உலகமா!
    சிந்திச் சிதறிய காலங்கள்
    என்னைச் செதுக்கிய காலங்கள் - இனி
    சிந்தித்துச் செயலாற்ற எச்சரிக்கின்றன - இருப்பினும்
    எனக்குள் ஆழக் கடலாய் ஆர்ப்பரிக்கும் செய்தி
    நீ உனக்காகப் பிறந்தவள் அல்ல
    நீ உனக்காக வாழ்பவள் அல்ல
    காலம் கட்டளையிட்டுக் கொண்டே இருக்கிறது மீதமுள்ள காலங்கள் அதுவே
    என்னைக் கூட்டி செல்லும் தொடருவோம்
    என் பிறந்த நாளுக்கு வாழ்த்துரைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க மிக்க நன்றி


    எழுத்தாளர், கவிஞர், பாடகர் கூவிலூர் செல்வராஜன் 

     

    MTV தொலைக்காட்சி 



    வெற்றிமணி யின் இனிய பிறந்தநாள்
    வாழ்த்துக்கள்
    !
    வெற்றிமணி யின் சிறந்த படைப்பாளிகளின், ஒருவரும், தமிழ் வான் அவை ஸ்தாபகரும், கலைஞர், படைப்பாளிகள் என பன்முகப்பட்ட ஆளுமைகளை இனம்கண்டு பாராட்டும் சிறந்த பெண்மணியான கெளசி சிவபாலன் அவர்களுக்கு வெற்றிமணி யின் பிறந்தநாள்
    வாழ்த்துகள்
    .
    07.08.2022





    வெள்ளி, 22 ஜூலை, 2022

    எந்த உயிர்களுக்கும் காதல் உணர்வு பொதுவானது

     

    காற்றுக்கும் இலைக்கும் காதல். ஒட்டியிருந்து உறவாடிப் பின் பறந்து சென்றுவிடும். மீண்டும் மீண்டும் தன் கவனத்தை காட்டிச் செல்லும். கடற்கரைக்கும் அலைக்கும் காதல். வந்து வந்து மீண்டும் பிரிந்து சென்று விடும். தொடர்புகள் அறுவதில்லை. தொடர்ந்து இருப்பதும் இல்லை. பூமியைச் சூரியன் நெருங்க விட்டதில்லை. தூரப் போக அனுமதி தந்ததில்லை. சுற்றிச் சுற்றி வட்டமிடும் நிலை புரிந்திருந்தும் கண்காணிப்பில் வைத்துக் கொண்டே இருக்கின்றது. அணைப்பதில் சுகம் இருந்தாலும் அணைக்க விடுவதில்லை. இப்படி எத்தனையோ காதலர்கள் இளமையில் கண்ட காதலை தொடவும் முடியாது, தொலைக்கவும் முடியாது தொடருகின்றனர். தண்டவாளம் இரண்டும் ஒன்றாகச் சேர்வதில்லை. இங்கு காமம் போனது காதல் இருக்கின்றது. முறையற்ற காதலினால், இடைநடுவே முறிந்து போன காதலும் கணக்கில்லை. முடிவுரை எழுதி திருமணத்தில் கரைந்து போன காதலும் பல. 


    ~~காதலினால் சாகாம லிருத்தல் கூடும் கவலைபோம். அதனாலே மரணம் பொய்யாம். என பாரதி குயில்ப் பாடலிலே பாடினார்.  இது ஒரு புறம் இருக்க 

    எந்த உயிர்களுக்கும் காதல் உணர்வு பொதுவானது 

    ~~காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் 

    கடலும் மலையும் எங்கள் கூட்டம்

    நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை

    நோக்க நோக்கக் களியாட்டம்|| என்று உயிர்கள் எல்லாம் ஒன்றிலிருந்துதான் பலவாகிப் பெருகின. அதனால் எல்லாமே எங்கள் ஜாதி என்று பாரதி பாடினார். 

    எங்கள் வீட்டுப் பலகணையில் ஒரு பறவை பறந்து வந்து அமர்ந்தது. சற்று நேரங்கழித்து அதனருகே இன்னுமொரு பறவை வந்தமர்ந்தது. தன் காதலன் வந்தமர்ந்ததைப் பார்த்த பறவை சற்று நகர்ந்தது போய் நின்றது. அதுவும் விடாது கிட்டக் கிட்ட நெருங்கியது. ஊடலின் அழகான காட்சியை அமைதியாய்க் கண்காணித்தேன். நீண்ட நேர சம்பாஷணையின் அந்நியோன்யத்தின் உச்சத்தில் இறுதியாக இருவரும் ஒன்றாகப் பறந்து சென்ற காட்சி. ஊடலும் அதன்பின் வரும் கூடலும் உச்சக் காதலை உணர்த்தும் என்பதை நேரடியாக உணரக்கூடியதாக இருந்தது. 

    துடிஅடிக் கயந்தலை கலக்கிய நன்னீரைப்

    பிடிஊட்டிப் பின் உண்ணும் களிறு, எனவும்

    உரைத்தனரே|| 

    என்னும் பாடலில் குட்டியானை கலக்கிய நீரை பெண் யானைக்குக் கொடுத்து மீதமிருந்தால் தான் உண்ணுகின்ற ஆண்யானையின் காதலை கலித்தொகை எடுத்துக் காட்டுகின்றது. 

    சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்

    பிணைமான் இனி துண்ண வேண்டிக் - கலைமாத்தன்

    கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்

    உள்ளம் படர்ந்த நெறி

    சுனைநீர் சிறிதளவே இருக்கின்றது. தாகத்தில் இருக்கும் பெண்மான் தன்னை எண்ணிக் குடிக்காது என்று எண்ணிய ஆண்மானானது அச்சுனைநீரில் வாயை வைத்துக் குடிப்பது போன்று பாசாங்கு செய்கின்றது என்பதை இப்பாடல் மூலம் மறைப்பொறையனார் ஐந்திணை ஐம்பதில் பாடினார். 

    காதல் கொண்ட மான்களுக்கு உள்ள ஒரு வழக்கம் ஒரு பெண்மனைத் துணைக் கொள்ள எண்ணிய  மான்கள் பெரிதான சத்தமிட்டுக் கத்துகின்றன. எந்த மான் பெரிதாக கத்துகின்றதோ, அந்த மானையே பெண்மான் கூடுமாம். ஆண்மான்கள் பெண்மான்கள் அறுகம்புல்லைத் தின்னுமாறு செய்து, தெளிந்த நீர் ஓடுகின்ற கானாற்றின் மணற்கரையிலே தூங்கச் செய்து அவ்வாறு தூங்கும் போது இடையூறு வராதபடி காவலும் காத்து நிற்கின்றன. இதேபோல் பெண்யானையின் பசியையும் கன்றின் பசியையும் தீர்ப்பதற்காக ஆண்யானை முற்றாத மூங்கிலின் முளையைத் தந்து அன்போடு உண்ணச் செய்விக்கும். இவ்வாறு அகநானூறு பாடல்கள் பல உயிரினங்களின் காதலை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.

    இந்தோனேசியாவில், பலினீஸில் ~~மானுக் தேவதா" என்னும் தெய்வங்களின் பறவை என்று அழைக்கப்படும் பறவையானது,  ஒரு துணையை ஈர்க்க முயற்சிக்கும்போது ஒரு இடத்தைத் தெரிவு செய்கின்றது. அந்த நிலத்திலே கிடக்கின்ற சுள்ளி, கல் போன்றவற்றையெல்லாம் தன்னுடைய சொண்டினால் அகற்றித் துப்பரவு செய்த பின் அந்த இடத்திலே நின்று நடனமாடவும் பாடவும் செய்கிறது. அந்நடனத்தில் மயங்கிய பெண் பறவை இந்நடனத்தில் மயங்கி அதனோடு இணைந்து நடனமாடி ஒன்றிணைகின்றது. இதேபோல் ஆண் மூட்டைப்பூச்சியின் இனப்பெருக்க உறுப்பு ஒரு கம்பி போன்று கூர்மையானது. இந்த ஆண் மூட்டைப் பூச்சியானது காதல் கொண்ட பெண் மூட்டைப்பூச்சியின் அடி வயிற்றிலே இந்தக் கம்பி போன்ற கூர்மையான பகுதியால் குத்தி விந்தணுக்களை உள்ளே செலுத்திவிடும். இந்த இடம் காயப்பட்டு பெண் மூட்டைப்பூச்சிக்குத் தாங்க முடியாத வலியை ஏற்படுத்திச் சில கணங்களில் மறைந்து போகும். இது இயற்கை அதற்கு அழித்திருக்கும் கொடை ஆகும். தாம் விரும்பிய காதலியை அடையக் காதலர்கள் நடத்துகின்ற நாடகங்களை இந்த ஆண் மூட்டைப் பூச்சி  காட்டித் தருகின்றது.

    பாலியல் முதிர்ச்சியடைந்த நத்தைகளின் தலைப்பகுதியில் Dart Sac என்னுமொரு பை இருக்கிறது. அதறற்குள் ஒரு கூர்மையான கம்பி போன்று இருக்கின்றன. இது லவ் டொட்ஸ் எனப்படுகின்றது. இந்த லவ் டொட்ஸை மற்றைய நத்தையின் தலையிலே செலுத்தும். அப்பொழுது அதற்குள் இருக்கும் ஹார்மோன்; நத்தைக்குள் செல்லும் அதற்குள் இருக்கும் விந்தணுக்கள் மற்றைய நத்தைக்குள் பரவுகின்றன. காதலைப் பரிமாறும் இந்த வித்தை நத்தைகளுக்கே உரியன. இவ்வாறு உலகத்திற் பிறந்த அனைத்து உயிர்களிடத்திலும் காதல் மேம்பட்டிருப்பதையும் அதன் மூலம் உயிர்களின் விருத்தியையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றன.

    இவ்வாறு காதலுக்காகத் தம்மைத் தியாகம் செய்வதும், விட்டுக் கொடுப்பதும் காலம் காலமாக அனைத்து உயிர்களிடத்திலும் காணப்படுகின்ற பண்பு. தலைவனிடம் காதல் கொண்ட தலைவி அவன் தன்னை மணப்பானோ என்று அறிய தரையிலே மண் பரப்பி தன்னுடைய கண்களை மூடி விரலினால் வட்டம் வரைவாள். தொடங்கிய இடத்தில் விரல் போய் நிற்க வேண்டும். அப்போது தலைவி நினைத்தது நடக்கும் இதனைக் கூடல் இழைத்தல் என்று கூறுவார்கள். இதில் ஏதாவது தவறு வந்து விடுமோ என்று கூடல் இழைத்துப் பார்க்க அஞ்சுகின்ற பெண்களும் உண்டு. இதேபோல் காதலியை அடைவதற்காக வட்டக்கல்லைத் தூக்குவதும், ஏறு தழுவுதலும். வரைபாய்தலும், மடல்மா ஏறதலும் போன்ற சம்பவங்களை இலக்கியக் காதல் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. தமது காதலில் வெற்றி கிடைப்பதற்காக தமது கொள்கையை விட்டுவிடாது கடைப்பிடித்து காதலர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். 

    ஆனால் இன்று நட்பும் காதலும் கணவன் மனைவி உறவும், பெற்றோர் பிள்ளைகள் உறவும் என்று அனைத்தும் கேள்விக்குறியாக காணப்படுகின்றன. உண்மைக் காதல் நினைத்து ஏங்குவதில் தொடர்கிறது. திருமணமான காதல் பிரிவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. இருப்பினும் காதலுக்கு முடிவில்லை. காலம் உள்ளவரை தொடரும். 




    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...