• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 6 நவம்பர், 2022

    பாயொடு ஒட்ட வைக்கும் அன்பு மந்திரம்


    மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்துவிடுவார் என்ற செய்தி இலங்கையில் பரவலாகப் பேசப்படும் செய்தி. அந்தப் பாய் எங்கே கிடைக்கும் என்று என்னிடம் பலர் விநயமாகக் கேட்டிருக்கின்றார்கள். பாய்க்கும் மட்டக்களப்புக்கும் என்ன தொடர்போ அதே தொடர்புதான் விருந்தோம்பலுக்கும் மட்டக்களப்பு மண்ணுக்கும் உரிய தொடர்பு. அடுத்தவரை வாழ வைக்கும் அற்புதமான மனப்பாங்கும் அம்மக்களுக்கு உண்டு என்பதை வந்தாரை வாழ வைக்கும் மட்டுநகர் என்ற வாக்கியம்; பறைசாற்றும். அக்காலத்தில் மலையகச் சிறுவர்களை வீட்டு வேலை செய்வதற்காக அழைத்து வரும் வழக்கம் இருந்தது. 

    எனது தந்தையும் கல்குடா தொகுதி அமைச்சர் தேவநாயகம் அவர்களும் மரியதாஸ் என்னும் பொறியியலாளரும் இணைந்து வடமுனைக் குடியேற்றம் செய்த காலப்பகுதியில் அம்மக்கள் மேல் இரக்கம் கொண்ட தந்தைஇ எங்கள் வீட்டில் ஒரு பையனையும் ஒரு பெண்ணையும் வேலைக்காக அமர்த்தியிருந்தார். அப்பெண்ணுக்கு நகை போட்டு தன்னுடைய தையற்கலைச் சிறப்பையெல்லாம் அவளுடைய ஆடையிலும் அம்மா காட்டுவதை நான் அறிந்திருக்கின்றேன். அதேபோல் ஒரு ஆண்பிள்ளைப் பிள்ளை இப்படி  வீட்டு வேலை செய்வது சரியில்லை என்று கூறி அப்பையனை வேலை முடிந்து வீட்டில் இருக்கின்ற சமயத்தில் சைக்கிள் திருத்துகின்ற கடைக்கு அனுப்பி அவனுடைய எதிர்காலம் பற்றி சிந்தித்த என்னுடைய தாய் வந்தாரை வாழ வைக்கும் மட்டக்களப்பு என்பதற்கு என் அநுபவ முன்னுதாரணமாக இருந்தார். 


    வியாபார நிமித்தமாகவும்இ உத்தியோக நிமித்தமாகவும் மட்டக்களப்பு மண்ணில் வாசம் செய்ய வருவோர். அங்கு நிரந்தர குடிகளாக மாறி அங்குள்ள பெண்களைத் திருமணம் செய்து மட்டக்களப்பு மக்களாகவே வாழ்ந்து வருவது கண்கூடு. 


    இந்த மட்டக்களப்பார் யாழ்ப்பாண மாப்பிள்ளைகளை எல்லாம் பாயோட ஒட்ட வைத்து வளைத்துப் போட்டுவிடுவார்கள் என்னும் பேச்சு இன்றும் பேசப்படுகின்றது. அந்த மந்திரக்கலையை இன்னும் இலங்கை மண்ணில் வேறு எந்தப் பகுதி மக்களும் கற்கவில்லை என்பது ஆச்சரியமான ஒரு விடயமாக ஒருபுறமிருக்க இலங்கை முன்னாள் பிரதம மந்திரி விஜேயானந்த தஹாநாயக்கா அவர்கள்; குறுமண்வெளிப் பெண்களுக்கு ஈடான அழகுடைய பெண்கள் எங்குமே இல்லை என்று பாராட்டியுள்ளார். ஒட்ட வைக்க அழகு ஒரு புறமிருக்க கொஞ்சு தமிழ் கவியோசை அவர்தம் குரலிலே இருக்கும் என்பதற்கு நாட்டுப் பாடல்களும் பேச்சுவழக்கும் முன்னின்று கையுயர்த்தும். 


    அடுத்து அறுசுவையுடன் மட்டக்களப்பு வாவியின் மீன் கடல் உணவுகளும் கால்நடைகளும் போட்டி போட்டு உணவுக்குள் அமர்ந்து கொள்ள அன்பும் அறனும் கலந்து இனிமையாகப் பேசி உண்ட உணவு உடலில் சேர பரிமாறுகின்ற அழகே தனி அழகு. இத்தனை சிறப்பும் கற்றுக் கொண்டால்இ இலங்கையின் எந்தப் பகுதி மக்களும் பாயோடு மக்களை ஒட்ட வைக்க முடியும். ஏலாதி என்னும் நூல்


    இன்சொல், அளாவல், இடம்இ இனிது ஊண் யாவர்க்கும்

    வன்சொல் களைந்து வகுப்பானேல் - மென்சொல்

    முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும்

    விருந்து ஏற்போர் விண்ணோர் விரைந்து 


    என்று கூறுகிறது. அதேபோல் வீட்டிற்கு வரும் விருந்தினரைப பார்த்து நீங்கள் முன்னமே சொல்லியிருந்தால் சமைத்திருப்போமேஇ நீங்கள் கோப்பி குடித்துவிட்டு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்இ கோப்பி போடட்டுமா என்ற கேள்விகள் மூலம் பசியோடு வருகின்ற விருந்தினரின் பசியைப் பேச்சால் போக்காதுஇ நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று புகழ்தலும்இ முக மலர்ச்சியோடு நோக்குதலும்இ வருக என்று வரவேற்றலும்இ கண்டவுடன் எழுந்து நிற்றலும்இ இனிமையாகப் பேசுதலும்இ அவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சியைக் கூறுதல்இ வந்தவுடன் பக்கத்திலே ஆசையுடன் அமர்ந்து கொள்வதுஇ அவர்கள் வீட்டை விட்டுச் செல்லுகின்ற போது அவரோடு சேர்ந்து சென்று வழி அனுப்பி வைப்பது என ஒன்பது பண்புகள் விருந்தினரைப் பேணலுக்கு இருக்கின்றன என்று விவேகசிந்தாமணி எடுத்துக்காட்டுகின்றது. 

    விருந்தின னாக ஒருவன் வந்து எதிரின்

    வியத்தல்நல் மொழி இனிது உரைத்தல்

    திருந்துற நோக்கல் வருகென உரைத்தல்

    எழுதல் முன் மகிழ்வன செப்பல்

    பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல்

    போம் எனின் பின் செல்வ தாதல்

    பரிந்துநல் முகமன் வழங்கல்இவ் வொன்பான்

    ஒழுக்கமும் வழிபடும் பண்பே

    உணவைக் கொடுக்கின்ற போது அன்போடும் பாசத்தோடும் விருந்தினருக்கு கொடுக்க வேண்டும். அது எவ்வளவு தரமில்லாத உணவானாலும் அது விருந்தினருக்கு சுவைமிகுந்த உணவாக இருக்கும். அதேவேளை முக்கனிஇ தேன்பாகுஇ பசுந்தயிர் போன்ற உணவுகளை அன்பில்லாமல் படைக்கின்ற போது அது விருந்தினருக்குத் திருப்தியைத் தராது. இதனை 

    கெட்டசாறு தவிடு கஞ்சி கிருமி உண்ட மா அரைக்

    கீரை வேர்தெளித்த மோர்மு றிந்த பாகு கிண்டுமா

    இட்ட சோறு கொழியல் உப்பி டாத புற்கை ஆயினும்

    எங்கும் அன்ப தாக நுங்க இன்ப மாயி ருக்குமே

    பட்ட பாத பசுவின் நெய்ப ருப்பு முக்க னிக்குழாம்

    பானி தங்கள் தாளி தங்கள் பண்ணி கார வகையுடன்

    அட்ட பாலகு ழம்பு கன்னல் அமுத மோடும் உதவினும்

    அன்பனோ டளித்தி டாத அசனம் என்ன அசனமே


    என்னும் பாடலடிகள் மூலம் எவ்வாறு விருந்தை ஓம்புதல் வேண்டும் என்பதை விவேக சிந்தாமணி குறிப்பிடுகின்றது.  

    அசோக வனத்தில் சீதை சிறையிருந்த போது

     அருந்து மெல்லடகு ஆரிட அருந்துமென் றழுங்கும் 

    விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்

    மருந்தும் உண்டு கொல் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும்

    இருந்த மாநிலம் செல்லரித்திடவு மாண்டெழுதால் 


    என கம்பர் விருந்தினர் வந்தால்இ இராமன் தான் இல்லாமல் என்ன செய்வானோ என்று வருந்துவதாக எழுதியிருக்கின்றார். 

    கணவனும் மனைவியும் இணைந்தே விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது சங்கமருவிய காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்தது. அதனாலேயே அந்தணர்க்கு மாம்பழம் உண்ணக் கொடுத்த செய்தியைக் காரைக்காலம்மையார் தன்னுடைய கணவனுக்கு மறைத்தார். கோவலன் மாதவியுடன் வாழ்ந்த காலத்தில் கண்ணகி விருந்தோம்பலை மறந்திருந்தாள் என்பதை 


    "அறவோர்க் களித்தலும் அந்தணரோம்பலும் 

    துறவோர்க் கெளிர்தலும் தொல்லோர் சிறப்பின் 

    விருந்தெதிர் காடலும் இழந்த என்னை"

    என்று கண்ணகி கூறுவதாக இவ்வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால்இ மட்டக்களப்பு மக்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை. பசித்தவர் யாராக இருந்தாலும் யாரையும் எதிர்பார்க்காது உணவளிக்கும் பண்பாடு அங்கு இருந்தது. 

    "இந்திரர் அமிழ்தம்இயைவ தாயினும் 

    இனிதெனத் தமியர் உண்டலும் இலரே"

    என்று புறநானூற்று 182 ஆவது பாடலிலே சாவா மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் விருந்தினர்களுக்குக் கொடுத்து உண்டார்கள் என்று கூறப்படுவதையே வள்ளுவரும் 


    "விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று" என்று கூறுகின்றார். 


    பல்லவர் காலத்திலே சிவனடியார்களுக்கு உணவளித்து உண்ணும் மரபு இருந்தது. அதனாலேயே பாம்பு தீண்டி இறந்த மைந்தனை மறைத்து அப்பர் சுவாமிகளுக்கு அப்பூதியடிகள் உணவளித்தார். 

    இவ்வாறு விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று இலக்கியங்களும் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றை அறிந்த பண்பிலேயே வாழப் பழகினால்இ எல்லாரும் பலரை பாயோடு ஒட்ட வைக்க முடியும். 


    உதவிய நூல்கள்


    ஏலாதி-  சாரதா பதிப்பகம், சென்னை - பதி.2018.

    விவேகசிந்தாமணி-  கற்பகம் புத்தகாலயம்


    நவம்பர் 2022 வெற்றிமணிப் பத்திரிகை வெளியீடு 


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...