• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 31 டிசம்பர், 2012

    தையவள் வந்தாள்





    ஆயிரம் ஆயிரம் ஆசைகள் மனதில் 
     ஆனந்தக்கூத்தாட 
    ஆடிக்கழித்திட்ட ஆசைகொண்டே 
     ஆசையுடன் தையவளை வரவேற்க
    ஆயிரமாயிரம் ஆருயிர் நோய்களை 
     அடியோடழிக்க
    அள்ளிக் கொண்டே உயிர் கொண்டோடும்
     அகிலத்தை எச்சரிக்க
    இயற்கையின் சீற்றத்தின் இன்னல்கள் நீங்கி – உலகு
     இன்புற்றுப் பிரபாலிக்க
    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
     உள்ளங்கள் ஒழிந்து போக 
    உறவொன்று உண்டென்றும் பகையில்லை உலகிலென்றும்
     உண்மையை உலகுணர
    காலத்தை வென்று மனிதன் காவியம் படைக்கும்
     காலம் விரைந்து வந்தடைய
    இருசுடர் ஒளியெலாம் மனிதன்
     இதமாய்க் கட்டுக்குள் அடக்க
    தையவளென நாமமிட்டன்பாய் அழைத்து
     தையவளைய்க் கேட்கிறேன்
    தையவளே!
    வழிசொல்வாயா? எமக்கு வழிசொல்வாயா?


    புதன், 19 டிசம்பர், 2012

    தாய்மொழியாம் தமிழ்மொழியைப் பேசத் தயங்குவது ஏன்?



    தன்னை மறந்தோன் தன் தாயை மறந்தோனாவான். தன் தாயை மறந்தோன் தன் தாய்மொழியை மறந்தோனாவான். தாய் ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ அதேபோலவே தாய்மொழி;யும் அவசியமாகின்றது. மேடைப்பேச்சுக்கும் பலர் பார்வைக்கும் மட்டுமே தாய்மொழியை நேசிப்பதாய்க் காட்டிவிட்டு வீட்டிலும் வாழ்விலும் வேற்றுமொழியில் நாட்டம் கொண்டிருப்பார்க்குத் தம் தாய்மொழியின் அழகும் தனித்தன்மையும்  இரத்தத்தில் ஊறிய இலகுத்தன்மையும் புரியாது.
                தாயின் கருவறையில் சுருண்டு கிடந்த போதே ஒரு குழந்தை தாய்மொழியைக் கற்கத் தொடங்குகின்றது. தாயின் கருவறையில் 11ம் நாளே மூளையைப் பிரித்தெடுக்கக் கூடியதாக இருக்கின்றது. குழந்தை பிறந்த போது உடலில் 11 வீதம் மூளை இருக்கும். வளர்ந்த பின் மனிதனின் உடலில் 2.5 வீதமே மூளை இருக்கும். எனவே கிரகித்தல் என்பது குழந்தையின் வளர்ச்சிப்படியில் முதல்நிலை பெறுகின்றது. கருவறையினுள்ளேயே தனது குழந்தை கேட்டற்புலனைப் பெற்றிருக்கின்றது என்பதை அறிந்த தாய் அக்கால கட்டத்திலேயே அப்புலனை அதிகரிக்கச் செய்ய முயல்தல் வேண்டும். குழந்தை பிறந்தவுடன் அமுதென்று பெயர் கொண்ட தமிழின் முதல் வார்த்தையை அம்மா என்று உச்சரிக்கும் குழந்தைக்கு மம்மி என்று உயிரற்ற உடலுக்குக் கொடுக்கும் பிரத்தியேகமான வார்த்தையை மூளையில் பதிக்கின்றாள். அப்போதிருந்தே தாய்மொழியின் அவசியம் குழந்தைக்கு அற்றுப் போகின்றது.
                 
    தாய்மொழியில் அறிவுபெற்று அதில் சிந்திக்கும் குழந்தை தன் கல்வி மொழியிலும் சிறப்படையும் என்பது உளவியலாளர் கருத்தாகும். வாழ்க்கைக்குக் கல்வி மொழி அவசியமாய் இருந்தாலும் உணர்பூர்வமான சிந்தனைப் போக்கிற்கு தாய்மொழி அவசியமாகின்றது. 'தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை என்று வேலூர் மாவட்டம் பேராசிரியர் முத்துசிவன் அவர்கள் கூறியிருக்கின்றார். உலகத்து மொழியெல்லாம் கற்க ஆர்வமுள்ள ஒருவன் தன் தாய்மொழியைக் கற்க ஆர்வப்படவில்லையென்றால் தன் இனத்தைத் தன் கலாசாரத்தை தன் பண்பாட்டை எப்படிக் கட்டிக்காக்க முடியும். தமிழ் இனம் ஒன்று இருந்தது என்று சொல்ல வேண்டிய நிலையே எதிர்காலத்தில் தோன்றும். கல்வி மொழிகளில் எமது மொழிகளிலுள்ள சிறந்த பல இலக்கியங்கள் சிறுகதைகளை கவிதைகளை மொழிபெயர்க்கும்போது எமது மொழியின் சிறப்புக்களை நாம் வாழும் மண்ணின் மக்கள் புரிந்துகொள்ள முடியும். இதைவிட நாம் வாழும் கல்விமொழியின் படைப்புக்களை எமது தாய்மொழியில் மொழிபெயர்க்க முடியுமல்லவா! அத்தோடு எத்தனையோ ஆராய்ச்சிப் புதையல்கள் வெளிக் கொண்டுவரப்படும். இவற்றிற்கெல்லாம் தாய்மொழிப்பற்று மனதில் ஏற்படவேண்டும்.
      
    உலகிலுள்ள மொத்தமொழிகளின் எண்ணிக்கை 6809. இவற்றிலே 700 க்கு உட்பட்ட மொழிகளில் மட்டுமே எழுதவும் பேசவும் முடியும். 100 மொழிகள் மட்டுமே சொந்த வரிவடிவத்தில் எழுதப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் மூலமொழியாகத் திகழ்பவை 6 மொழிகளே. அவை எபிரேய மொழி கிரேக்கமொழி சமஸ்கிருதமொழி இலத்தீன்மொழி தமிழ்மொழி சீனமொழி. இவற்றிலே சீனமொழி தமிழ்மொழி தவிர்ந்தவை பேச்சுவழக்கில் இல்லாதவை. எனவே வரிவடிவிலும் பேச்சுவழக்கிலும் ஆட்சிசெய்து மூலமொழியாகத் திகழும் தமிழ் பேசுவதற்கு யாரும் வெட்கம் கொள்ளத் தேவையில்லை. தமது வாரிசுகளுக்குத் தமிழறிவையூட்ட வெட்கப்படத் தேவையில்லை. குறுமுனி தந்த தமிழ்ளூ குழந்தையாய் தவழ்ந்து கன்னியாய் என்றும் ஆட்சி செய்யும் தமிழ்ளூ தான் பிறந்த நாட்டிலே இன்று அல்லாடுகின்றது. தமிழ்ச் சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழ்நாட்டிலே உருவாகும் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்வுகளும் ஆங்கிலத்தைத் தத்தெடுத்து நன்றாக வளர்க்கின்றன. ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டுச் சென்றாலும் அவர்கள் மொழி எம்முடையோர் நாவிட்டு நகர மறுக்கின்றது. 

                          நான் கண்ட நிகழ்வொன்று தமிழர்கள் மாத்திரமே கூடியிருக்கும் சபையிலே ஆங்கிலத்தில் ஒருவர் உரையாற்றுகின்றார். வீதியில் நடக்கும் போது ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றார். கேலிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருப்பதென்னவென்றால் அங்குள்ளவர்கள் அனைவரும் தமிழ் தெரிந்தவர்கள். ஓரிருவர் அரைகுறை ஆங்கிலம் புரிந்தவர்கள். இவ்விடத்தில் ஆங்கிலம் ஏன்? என்பது புரியாத விடயமாக இருக்கின்றது. மொழி என்பது கருத்துப் பரிமாற்று ஊடகம். தாம் நினைப்பதை பிறருக்கு உணர்த்துவதற்காகப் பயன்படுத்துகின்ற ஒரு சொற்கோவை. இலக்கண இலக்கிய விதிகளுக்கமைய ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மொழி ஊடகமே தமிழ். இம்மொழி தெரிந்தவர்களிடம் இம்மொழியில் பேசுவதுதானே உண்மைத்தன்மை. ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்த தமக்கென ஒரு மொழியை உருவாக்குகின்றார்கள். ஐரோப்பியர்கள் தமது மொழியை நேசிப்பதாக பேசிக்கொண்டு திரிவதில்லை. ஆனால் தம்முடைய மொழி தவிர்ந்த எந்த மொழியையும் பேசுவதில்லை. பல மொழிகளைத் தேடித்தேடிக் கற்றிருந்தாலும் தேவைக்கேற்பவே அவற்றைப் பயன்படுத்தும் பண்புள்ளவர்கள். மேடைநிகழ்வுகளில் தமது மொழி தவிர்ந்த பிறமொழி பயன்படுத்துவதில்லை. பிறமொழி தெரிந்தவர்கள் மட்டுமே சபையில் கூடியிருக்கும் படசத்தில் பிறமொழியை பயன்படுத்துவார்கள். இது மொழிப்பற்று என்று நாம் சொல்லிக்கொள்ளும் விடயம் இல்லை. தேவையில்லை என்பதே அதற்கான காரணம். தேவை கருதியே பேசப்படுகின்றது. அதைப்புரிந்து கொண்டு இனியதமிழ் பேச நாக்கூசத் தேவையில்லை. அந்நியமொழியில் ஆசை கொள்ளலாம். அதற்காக அதற்கு அடிமையாக வேண்டியதில்லை. அனைத்துமொழிகளும் அறிந்திருத்தல் சிறப்பு. அதைத் தக்கசமயத்தில் பயன்படுத்துவது பெருமை. தகுதியற்ற இடங்களில் பயன்படுத்துவது சிறுமை.

                 மேலைத்தேய நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி எமக்கு உழைப்புக்கல்வியல்ல என்பது உண்மையே. ஆனால், விஞ்ஞானமோ பொறியியலோ கற்று கல்லுடனும் மண்ணுடனும் சதையுடனும் உறவு வைத்திருக்கும் ஒருவரைவிட மொழிக்கல்வியும் இலக்கியக்கல்வியும் கற்ற ஒருவரால் வாழ்க்கையின் உன்னத மனிதப்பண்புகள்> மனித உணர்வுகள்> ஒழுக்கநெறிகளை சிறப்பாக அறிந்து கொள்ள முடியும்.

                  
    அதைவிட எம் தேசம்விட்டுப் பரந்து வாழும் எம்மவர்கள் மத்தியில் உள்ள ஒரு கருத்து தமிழைக் கற்றுத் தமிழைப் பேசி இங்கு என்ன செய்ய முடியும்ளூ என்ன சாதிக்க முடியும் என்பதே. இங்குள்ளவர்கள் அனைவரும் தாம் வாழும் தேசத்து மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்களும்; இல்லை பேசித் தெளிந்தவர்களும் இல்லை.  ஆனால், எமது தாய்மொழியை அனைவரும் புரிந்தவர்களே. அத்துடன் தாய்நாட்டுத் தொடர்பை என்றும் கொண்டிருக்க வேண்டும். தமக்குப் பின் தமது வாரிசுகள் தமது உறவுகளை தாய்நாட்டிற்குக்  காவிச்செல்ல வேண்டும். எமக்கென சீர் பெற்ற சிறப்புப் பெற்றளூ காலங்கடந்த உன்னத இலக்கியச் செல்வங்கள் கொண்ட ஒரு மொழி இருக்கின்றது என்றும்  நினைப்பவர்கள் வீட்டிலும் வீட்டிற்கு வெளியிலும் தமது வாரிசுடன் தமது மொழியில் பேசுவது சாலச்சிறந்தது என்பது உண்மையே. இதன் மூலம் அழியாச் செல்வமாய் என்றும் எங்கும் தமிழ்மொழி அரசோச்சும் என்பது திண்ணம்.
     
     'பார் பிறந்த தேதியினை பகலறியும் - நீர்சுமக்கும்
     கார் பிறந்த தேதியினை கடலறியும் - நிலத்தடியில்
     வேர் பிறந்த தேதியினை விதையறியும் - நற்றமிழின்
     சீர் பிறந்த தேதியினை செகத்தினிலே யாரறிவார்||
                          

    வியாழன், 6 டிசம்பர், 2012

    கணனி அருகேயோர் அம்மா

    Image Host

           கள்ளி என் கடைக்குட்டி – ஏன்
           கன்னத்தில் நீர் வடித்தாய்
           பொல்லாப்பு யானொன்றும் புரியவில்லை
           பெண்ணாய் மகவிரண்டைப் பெற்றுவிட்டேன்
        

           செல்லப்பிள்ளை உன் செவ்விதழ்கள்
           சில்லறை கொட்டவில்லை – உன்
           சிந்தையில் உள்ளதைத் தாயறிதல்
           விந்தையொன்றும் இல்லை.

           பத்தரை மாற்றுத் தங்கமே
           பண்பில் நிறைகுடம் நீயன்றோ
           பத்துமாதம் உன் அக்காளும் உன்போல்
           பத்திரமாயென் வயிற்றில் குடியிருந்தாள்.
       


    மூவாறு வயதாகியும் தாயின் முகம்பார்த்தே தூங்கும் மகளைக் கட்டிலில் விட்டு வந்து கதிரையில் சட்டென்று சாய்ந்தாள், சாந்தி. கண்ணீர் கண்களின் ஓரமாய் வடிந்து இதழ்களில் உப்புக் கரித்தது. சின்னவயதில் அக்காள், தங்கை இருவரினதும் சில்லறைச் சண்டைகளைச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் பார்த்த இரசித்துள்ளாள். அக்காவைவிட ஒருபடி உயர வேண்டும் எனத் தங்கை எடுக்கும் முயற்சிகளைத் தட்டிக் கொடுத்துத் தாயாய் ஒத்துழைப்பும் தந்துள்ளாள். அக்கா பாட வாயெடுக்க அதை அற்புதமாய்ப் பாடி முடித்து அப்பா அம்மா பாராட்டைப் பெற்றுவிடுவாள், தங்கையும். போட்டி வளர்ச்சிக்கு உறுதுணையென்று தூபம் போட்டு வளர்த்தவள் அல்லவா, தாய். ஆனால், பத்துப் பிள்ளைப் பெற்றாலும் தாயன்பு பத்துப் பேருக்கும் மாற்றமில்லாது பகிர்ந்தளிக்கும் பரிசுத்த நீரல்லவா. பெற்றோர்களாகிய தாம், வயோதிப காலத்தின்பின் சகோதரிகள் இருவரும் தமக்குள் தாமே துணையாய் வாழ்வை இங்கிதமாய்க் கழிப்பார்களென்ற நம்பிக்கையில் வாழ்க்கையைச் செலுத்தும் பெற்றோர். சஞசலத்தில் இன்று தவித்தனர். குமணன் இளங்குமணன் வாழ்க்கைபோல் தமது குஞ்சுகள் இரண்டும் தம்மைத்தாமே கொத்தித் தின்றுவிடுமோ என்று பேதலித்தனர்.
                       

                        இருவருக்கும் கொள்வனவு செய்யும் பொருட்களில் சிறிது வேறுபாட்டைக் கண்டால், அல்லது அக்காவிற்கு ஏதோ ஒரு பொருள் பொருத்தமென்று கண்டு அதை வாங்கி வந்தால், போதும்,  ``உங்கள் செல்ல மகளுக்குத்தான் எல்லாம் வாங்குவீர்கள்´´என்று குறையைப் போட்டுவிடுவாள், இளையவள். ஆனால், மூத்தவளோ இதைப் பொருட்படுத்துவதாய் இல்லை. ஏட்டிக்குப் போட்டியாய் வார்த்தையை எடுத்தெறிந்து கொள்ளும்போக்குச் சிறிதும் இல்லை. ஆனால், கடைக்குட்டி என்று கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்த சின்னவள், பண்பிலே நிறைகுடம், பாசத்திற்கு உறைவிடம் அக்காவைப் பிரிந்திருக்கும் வேளைகளில் பிதற்றித் திரிவாள். ``எங்கே, எங்கே´´ என்று அலைந்து திரிவாள். ஆனால், பெற்றோர் பாசம் பகிர்ந்து கொள்ளும்போது மனதுள் வெம்புகிறாள். வார்த்தைகளால் தாயை வம்புக்கு இழுக்கிறாள். அன்றும் அவ்வாறே உயர்கல்விக்கு உயர்ந்ததான பெறுமதியில் உயர்வான பொருளொன்று கட்டாய தேவை கருதி மூத்தவளுக்காய் வாங்கப்பட்டது. அக்காட்சி பொறுக்காது கண்ணீர் வடித்தாள், கட்டிலில் படுத்திருந்த தங்கையென்ற உடன்பிறப்பு. அறிவுரை ஆயிரம் முறை ஆறுதலாய்க் கூறியும் அதை மனதில் நிறுத்த முடியாத மகளை எண்ணிக் கலங்குகிறாள், தாய். 
                         
    இங்கு காட்சி காட்டப்பட்டுள்ளது. முடிவறியாத் திரைப்படமாய் வாசகர்கள் சிந்தனை சிறகடிக்கப்பட்டு அறிவுரைகளும், ஆலோசனைகளும், அநுபவங்களும் பகிரப்படும்போது கணனி காட்டும் கருத்துகளில் தனக்குரிய சாதகங்களைச் சேகரிப்பாள், சாந்தி.

    ஞாயிறு, 2 டிசம்பர், 2012

    01.12.2012 அன்று செல்வன் தி.நிரோஜன் அரங்கேற்ற வாழ்த்துப்பா


     எனது குரலில் கேட்ட அம்புக்குறியை அழுத்துங்கள்


    திருநாவுக்கரசு மைந்தன் புகழாரம் பாட நாதுணிந்தபோது
    நாலாயிரம் வார்த்தைகள் நாவிலே  வந்து நின்று நடனம் புரிகின்றன
    சுந்தரத் தமிழாலே சொல்லாரம் சூட்ட நான் சொல்லெடுக்கும்போது
    சுவையான அவர் குரலினிமை பாடென சொல்லாட்சி ஆணையிடுகிறது.

    கலைமகளும் மகிழ்ந்தணையும் கலைமைந்தன் கவின் மைந்தன்
    நடம்புரியும் நடராஜன் நலம்சேர்ந்த அபிநய நர்த்தகன்
    தடம்பதிக்கும் சொல்லாலே குரலெடுக்கும் இசைவித்தகன்
    தனம்சேர குலம்சேர குணம்சேர உன்னத உறவிணைப்பாளன்

    இராகதாள பாவ முத்திரைகள் - இவர்
    உடலோடு உயிரோடு உணர்வோடு உறைந்தாள
    அதரங்கள் நகையாள அழகு அபிநயங்கள் முகங்காட்ட
    சிலம்பொலியும் சேர்ந்தாட சிருங்காரம் சில காட்ட
    அடவுகளின் துணையோடு அவதாரம் தசம்காட்ட
    அங்கங்களின் அசைவுகளில் அரங்கேற்றம் களைகட்ட
    அற்புதமாய் பரத அரங்கிங்கு வெற்றி நடைபோட்டது

    நற்றாய் பெற்ற நறுந்தவதா லுதித்த நன்மகவென
    உற்றாரும் மற்றாரும் நல்லறிவுற்றாரும் உரைத்திடவே
    ஞாலத்தின் மேன்மைக்காய் ஞானமாம் பரதத்தை
    வானுயரப் புகழ்பரப்பி வாழ்வாங்கு வாழவேண்டும்
    இன்னிசையும் பரதமும் திக்கெட்டும் நின்புகழ்பரவ
    இறையருளும் நின்உழைப்பும் இணைந்தேகூடவேண்டும்
    நடராஜன் அருளாலே நவரசன் நர்த்தகன் நிரோஜன்
    நன்மகனாய் நற்கலைஞனாய் நற்கல்விமானாய்
    உலகெங்கும் உலாவர மாதார வாழ்த்துகிறேன்







    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...