• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

    அன்றும் இன்றும் எழுத்தாளர்கள்

          


    உலகத்தில் போட்டி இல்லாத வாழ்க்கை எங்குமே இல்லை. உணவுக்காக மிருகங்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றன. புகழுக்காகவும் பெருமைக்காகவும் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றார்கள். போட்டி என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது பொறாமையாக மாறும் போது மனங்களுக்கிடையில் பிரிவுகளை ஏற்படுத்துகின்றது. அறிவும், ஆய்வுகளும் மனங்களின் வேற்றுமைகளை மாற்றிவிடும். காலம் ஒரு நாள் மாற்றும் என்பது கோட்பாடு. ஆனால் இக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் மட்டும் இக்கோட்பாடு பிழைக்கின்றது. புகழுக்காகப் போட்டியும் பொறாமையும், வித்துவச் செருக்கினால் போட்டி, அன்று பொன்னுக்கும் பொருளுக்கும் பொய்யுரைத்தல் என்று இலக்கிய உலகம் எழுத்தாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

                        எழுத்தாளர்களிடம் போட்டி என்பது இன்று நேற்று வந்ததல்ல. அன்றும் இருந்திருக்கின்றது. அக்காலத்திலும் புலவர்களிடையே போட்டியும் பொறாமையும் இழையோடிக் காணப்பட்டன. ஒளவையும் கம்பரும், ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் ஒருவருக்கொருவர் போட்டியாக வாழ்ந்துள்ளார்கள் திறமைகள் போட்டியிடுவது ஆரோக்கியம். ஆனால், திறமையுடன் போட்டியிட தயக்கம் தேவையல்லவா! சங்ககாலத்திலே வாழ்ந்த சீத்தலைச் சாத்தனார் என்னும் ஒரு புலவர் தான் எழுதும் பாடல்களிலே அல்லது பிறருடைய பாடல்களிலே குற்றங்களைக் கண்டுவிட்டால் தன்னுடைய எழுத்தாணியால் தன்னுடைய தலையில் குத்திக் கொள்ளுவாராம். இதனால், தலையில் ஆங்காங்கே சீழ் பிடித்திருக்கும். சீழ்தலை சாத்தனார் என்பது மருவி சீத்தலை சாத்தனார் என்று அவர் பெயர் வழங்கப்பட்டது. பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அல்லது சொல்ல முடியாத இடத்தில் நமக்கு நாமே தலையில் அடித்து என்ன கருமம்டா என்று சொல்வோமே அதுபோலவேதான் சீத்தலைச் சாத்தனார், எழுத்தாணியால் தன்னுடைய தலையில் குத்தித் தமிழிலில் காணும் தவறுக்குத் தனக்குத் தண்டனை கொடுக்கின்றார். இங்கு தவறு விடுபவர்கள் குற்றத்தால் கூனிக்குறுகிப் போகின்றனர். 

                      கம்பரும் ஒளவையும் சிறந்த போட்டியாளர்கள். ஒருமுறை ஒளவையார் குலோத்துங்க சோழன்  அவைக்குச் செல்கின்றார். அவர் தமிழ் கேட்க ஆசை கொண்ட அரசன் அவரை பாராட்டி உபசரித்தான். இதைப் பொறுக்காத கம்பரும் தற்காலத்திலே அவரை மட்டும் ஏன் புகழ்கின்றார்கள். அவரிடம் என்ன இருக்கின்றது அவரை விட நாம் எவ்வளவு மேலானவர்கள் என்று புளுங்குபவர்களைப் போலவே கம்பரும் 'நான் சொல்லுகின்ற ஒரு அடியிலே உள்ள பொருள் என்னவென்று கண்டு ஒரு பாடல் பாடவேண்டும்|| என்று ஒளவையாரிடம் கேட்கின்றார். குலோத்துங்கன் சோழத்து ஆஸ்தான கவி அல்லவா கம்பர். ஒளவையும் அவர் வேண்டுகோளுக்குச் சம்மதிக்க

    'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ|| என்று வரி கொடுத்தார். அதாவது

    ஒரு தண்டிலே 4 இலைகள் கொண்டுள்ள ஆரைக்கீரையைப் பொருளாகக் கொண்டு பாடினார். அடீ என்ற வார்த்தை ஒளவையை நாகரிகம் அற்ற முறையில் விளிப்பதாக ஒளவைக்குப் படுகின்றது. அந்தளவில் பொறாமை கம்பர் மனதுக்குள் இருந்தது. உடனே ஆத்திரம் கொண்ட ஒளவையும்

    'எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
    மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
    கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
    ஆரையடா சொன்னாயது'

    என்று பாடினார். எட்டு என்றால் தமிழ் எண் அ வைக் குறிக்கும். கால் (1ஃ4) என்பது தமிழ் எண் வ என்று குறிக்கும். என்வே எட்டேகால் இலட்சணமே என்றால், அவலட்சணமே.
    எமனேறும் பரி எருமை என்பது யாவரும் அறிந்ததே
    பெரியம்மை என்பது மூதேவி. அவரின் வாகனம் கழுதை
    கூரையில்லா வீடு குட்டிச்சுவராகும்.
    இராமனின் தூதுவன் குரங்கு
    ஆரையடா சொன்னாயது என்றால் ஆரைக்கீரையை நீ சொல்லியிருக்கின்றாய் என்று பாடினார். கம்பரும் வெட்கித்துப் போகின்றார். இதைக் கம்பருக்குச் சுடும் வண்ணம் சிலேடையாக தன்னை அடீ என்றாய் யாரையடா நீ என்று பாடி முடித்தார். 

    அவலட்சணமே, எருமையே, மூதேவியே, குட்டிச்சுவரே, குரங்கே ஆரைக்கீரையை நீ சொல்லியிருக்கின்றாய் என்று அவர் பாடிய ஒருவரிப் பாடலின் பொருளை அறிந்து உடனே பாடினார்.(ஒளவையார் தனிப்பாடல்கள் - புலியூர்க்கேசிகன்)

    குட்டு வாங்கினாலும், மோதிரக் கையால் வாங்க வேண்டும் என்னும் பழமொழி சொல்வார்கள். இங்கு போட்டி கூட ஆரோக்கியமாகவே பட்டது. கம்பருக்குச் சுட்டது. தமிழார்வலர்களுக்கு இனித்தது. இவ்வாறு போட்டி போடவும் தகுதி வேண்டுமல்லவா? 

                      தரமான படைப்பாளிக்குத் தலைக்கனம் இருப்பது இயற்கை. ஆனால், இது தவறு என்று வாதிடுவோரும் உண்டு. இங்கு இருவரைப் பார்ப்போம். ஒருவர் கம்பர் தலையில் கனம் மிக்கவர். மற்றையவர் கம்பர் காலத்து ஒளவையார். கூழுக்குப் பாடி என்று கம்பரால் அழைக்கப்படுபவர். ஒரு சமயம் சிலம்பி என்னும் ஒரு விலைமகள் கம்பனிடம் ஒரு கவி புனைந்து தரும்படிக் கேட்டாளாம். ஆயிரம் பொன் தந்தால் கவி கிடைக்கும் என்று கம்பர் கூறினார். என்னிடம் ஆயிரம் பொன் இல்லை ஐந்நூறு பொன்னே உள்ளன என்று சிலம்பி கூறியிருக்கின்றாள். இப்பொன்னைப் பெற்றுக் கொண்ட கம்பர் 

    தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
    மண்ணாவ துஞ்சோழ மண்டலமே

                என ஒரு வெண்பாவை அரைவாசியாகப் பாடிவிட்டு ஐந்நூறுக்கு இது சரியாகிவிட்டது என்று அவ்வெண்பாவை முடிக்காமல் சென்றுவிட்டார். இப்பரத்தை அப்பாடலைக் கொண்டு அடுத்தநாள் ஒளவையாரை கண்டபோது இப்பாடலை முடித்துத் தாருங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். ஒளவையும்

    ...........................................................பெண்ணாவாள்.
    அம்பொற் சிலம்பி யரவிந்தத் தாளணியும்
    செம்பொற் சிலம்பே சிலம்பு. (ஒளவையார் தனிப்பாடல்கள் - புலியூர்க்கேசிகன்)

                          எனப்பாடி முடித்துப் பழங்கஞ்சி வாங்கிக் குடித்துவிட்டுச் சென்றாராம். இங்கு கம்பர் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு அச்சிலம்பியை உதாசீனப்படுத்தினார். ஒரு பெண்ணின் ஆசையை பெரிதாகக் கருதிய ஒளவையார் கம்பருக்குப் போட்டியாக அவள் ஆசையைத் தீர்த்து வைத்தார். இச்சம்பவம் நம் மத்தியில் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. கவிச்சக்கரவர்த்திக்குத் தலைக்கனம் வருவது இயற்கையானால், தற்போது தகுதியற்றோருக்குக் கூடத் தலைக்கனம் வருவதை நாம் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. 

              ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும், குலோத்துங்க சோழ மன்னனும் தனித்தனிப் பல்லக்கில் வீதி உலா வந்து கொண்டிருந்தார்கள். முன்னால் ஒட்டக்கூத்தர் வருகின்றார். நடுவில் மன்னனும், பின்னால் புகழேந்திப்புலவரும் பல்லக்கில் வருகின்றார்கள். இச்சமயம் ஒளவையார் அவர்கள் வரும் வழியிலுள்ள ஒரு திண்ணையில் இரு கால்களையும் நீட்டிக் கொண்டு அமர்ந்திருக்கின்றார். பல்லக்குகளைக் கண்ட ஒளவையார் முதலில் ஒட்டக்கூத்தர் வரும்போது இரண்டு கால்களையும் நீட்டியபடி அமர்ந்திருக்கின்றார். மன்னன் பல்லக்கு வரும்போது ஒரு காலை மடக்குகின்றார். புகழேந்திப் புலவர் வரும்போது இரண்டு கால்களையும் மடக்குகின்றார். மன்னன் ஒளவையாரிடம் ஏன் இப்படி ஒட்டக்கூத்தரை அவமானம் செய்தீர்கள் என்று கேட்க, மரியாதை செய்யும் அளவிற்கு ஒட்டக்கூத்தர் ஒன்றும் அறிவாளியில்லை என்று கூற, மன்னனும் நிரூபித்துக் காட்டும்படிக் கேட்கின்றார்ர்.  அதற்கு ஒளவையும் 3 முறையும் மதி வரும்படி பாடல் பாடவேண்டும் என்று கேட்கின்றார். அதற்கு 

    ஒட்டக்கூத்தரும்

    'வெள்ளத்து அடங்காச் சின வாளை
     வேலிக் கமுகின் மீதேறி
     துள்ளி முகிலைக் கிழித்து மழை
     துளியோடு இறங்கும் சோணாடா!
     கள்ளக் குறும்பர் குலம் அறுத்த
     கண்டா! அண்டர் கோபாலா!
     பிள்ளை மதி கண்ட எம்பேதை
     பெரிய மதியும் இழந்தாளே||

    அதாவது வெள்ளத்துக்கு அடங்காத வாளைமீன்கள் துள்ளி மேலெழுந்து கமுகு மரத்தின் மேலேறி, அங்கிருந்து துள்ளி முகிலேக் கிழித்து அந்த மேகம் பொழியும் மழையுடன் மீண்டும் பூமிக்கு வரும் நாட்டையுடைய சோழ மன்னனே! பகைவர் கூட்டத்தை அழிக்கும் வாளுக்குரியவனே என்று பாட ஒட்டா ஒரு மதி கெட்டாய் என்று அவரின் பாடலில் ஒரு மதி இழந்திருப்பதைச் சுட்டிக் காட்டி அவருடைய ஆணவத்தை அடக்கினாள். ஆனால், புகழேந்தியோ 

    'பங்கப் பழனத்து உழும் உழவர்
     பலவின் கனியைப் பறித்தொன்று 
     சங்கிட்டு எறியக் குரங் கிளநீர்
     தனைக் கொண்டு எறியும் தமிழ்நாடா
     கொங்கார்க் கமரர் பதியளித்த 
     கோவே! ராஜ குல திலகா! 
     வெங்கட் பிறைக்கும் கரும் பிறைக்கும்
     மெலிந்த பிறைக்கும் விழி வேலே!

    என்று பாடினார்.  குரங்குகள் பலாக்கனியை உண்கின்றன என்று வயலிலே உழுகின்ற உழவர்கள் சங்குகளை எடுத்து குரங்குகளை நோக்கி எறிய குரங்குகளும் இளநீர்க்காய்களை பறித்தெறியும் தமிழ்நாட்டவனே! கொங்கு நாட்டு மன்னனை வென்று தேவலோகம் செல்ல வைத்த இராஜகுல திலகா! வெண்மையான பிறைச்சந்திரன் ஒளியாலும், கரும்பை வில்லாகக் கொண்ட மன்மதன் அம்பினாலும் உடல் தளிர்ச்சியுற்று வேல் போன்ற கண்களையுடைய இப்பெண் கண்ணீர் சிந்துகின்றாள் என்று 3 மதியும் வரும் வண்ணம் பாடலைப் பாடி ஒளவையார் புகழைப் பெற்றார்.  அக்காலத்தில் புலவர்கள் பிறர் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆணவத்தை அடக்கிய செயல்கள் இப்பாடலின் மூலம் புலப்படுகின்றது. 

                பொன்னையும் பொருளையும் மன்னர்கள் அள்ளி வழங்குவதற்காக, அவர்கள் புகழை மிகைப்படுத்திப் புலவர்கள் பாடியிருப்பது யாவரும் அறிந்ததே. இந்நிகழ்வு இன்று மட்டுமல்ல அன்றும் பணத்துக்காக தம் பெருமைகளை நிலைநாட்டிக் கொண்ட புலவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். 


    ஒரு இடத்தில் இரட்டையர்கள் பாடுகின்றார்கள்

    குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து
    சென்று திரிவதென்றுந் தீராதோ – ஒன்றுங் 
    கொடாதானைக் கோவென்றுங் காவென்றுங் கூறின்
    இடாதோ நமக்கிவ் விடர்.

                பரிசில்கள் யாதொன்றும் வழங்காத மன்னனை யாம் புகழ்ந்து பாடியதனாலேயே இவ்வாறான நிலைமை எமக்கு ஏற்பட்டது என்று பாடினார்கள். இவ்வாறே ஒளவையாரும் ஒரு இடத்தில்

    'கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்
     காடேறித் திரிவானை நாடா என்றேன்
     பொல்லாத ஒருவனையான் நல்லாய் என்றேன்
     போர்முகத்துக் கோழையையான் புலியே றென்றேன்
     மல்லாரும் புயமென்றேன தேம்பற் றோளை
     வழங்காத கையணையான் வள்ளால் என்றேன்
     இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான் 
     யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!

    என்று பாடியுள்ளார்.

    இவ்வாறு பரிசில்கள் பெறுவதற்காக மன்னர்களைப் பலவாறாகப் புகழ்ந்து பாடிப் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டு சென்ற புலவர்கள் பாடிய பாடல்கள் அக்காலச் சூழலை எடுத்துக் காட்டும் கண்ணாடி என எப்படி நாம் எடுத்துரைப்பது. இக்காலத்திலும் தமது புகழுக்காக தகுதியற்றோரைப் புகழும் வழக்கம் இருக்கின்றது அல்லவா?

               இக்காலத்திலும் எழுத்தாளர்களிடையே போட்டியும் பொறாமையும், எழுத்துக்களிடையே காணப்படும் தவறுகளைச் சுட்டிக் காட்டமாட்டாமல் புகழ்வதும், தமிழின் இலக்கண மரபுகளுக்கு பங்கம் ஏற்படும் எழுத்துக்களைக் கண்டுகொள்ளாமல் தமிழாராய்வாளர் வாய் மூடியிருப்பதுவும் தமது பாராட்டுக்களுக்கும், புகழுக்கும் பங்கம் வந்துவிடும் என்னும் சுயநலமே ஆகும். இச்செயலும் அக்காலப் புலவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் தூற்றிப் பாட வேண்டிய இடங்களில் போற்றிப் பாடிய செயலுக்கு ஒப்பாக அமைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டும் தைரியம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். அப்போதுதான் எழுத்துக்களில் தூய்மையைக் கொண்டுவர முடியும். இதற்குப் பொறாமை என்ற அர்த்தமில்லை. செயலிலே நல்ல உணர்வுகள் விதைக்கப்படும். சுட்டிக்காட்டும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் மக்களிடம் ஏற்பட வேண்டும். மெய்மைக்கு இடமளிக்க நாமும் மெய்யாய் வாழவேண்டும். போட்டியும் ஆரோக்கியமாக அமைய வேண்டும். 


    செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

    விமர்சிப்பவர்களே ஒவ்வொரு நாளும் இந்நிகழ்ச்சியில் மூழ்கிப் போகின்றார்கள்




    இன்று தமிழர்கள் வாழும் நாடுகளில் பரவலாகப் பேசப்படும் ஒரு நிகழ்ச்சி Bigg Boss. இந்நிகழ்ச்சி எம்முடைய தமிழ்க் கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் நிகழ்ச்சி, வேலையில்லாதவர்களே இந்நிகழ்ச்சியைப் பார்க்கின்றார்கள் என்று பலரும் விமர்சனங்களைத் தந்தாலும், விமர்சிப்பவர்களே ஒவ்வொரு நாளும் இந்நிகழ்ச்சிக்குள் மூழ்கிப் போகின்றவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்பது உண்மையே. 
             
       என் பார்iவையில் இந்நிகழ்ச்சி மனித மனங்களைப் பற்றிய ஆச்சரியத்தையே கொண்டுவருகின்றது. பல்வேறுபட்ட துறைகளிலுள்ள, பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குள் வாழ்ந்த, பல்வேறுபட்ட குணாதிசயங்களுக்குள்ள மனிதர்களை ஒரு வீட்டுக்குள் 100 நாள்கள் அவர்களுக்குப் பிடித்த துறைகளுக்கான பொருள்களோ, விடயங்களோ எதுவுமில்லாமல், நேரத்தைக் காட்டும் மணிக்கூடு கூட இன்றி, 24 மணிநேரமும் கைத்தொலைபேசியுடன் அலைந்தவர்களின் கையில் எந்தவித தொலைத்தொடர்பு சாதனங்களும் இன்றி, தொலைக்காட்சி, கணனி இன்றி உலாவ விட்டால் எப்படி இருக்கும் என்பதை இந்த உலகம் பார்க்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியாகவே படுகின்றது. மற்றையவர் விடயங்களில் தலையிடுவார்கள். தம்முடைய கருத்துக்களை பிறர் மேல் திணிக்க முற்படுவார்கள். ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவார்கள். தம்முடைய கருத்துக்களே சரியென்று நிறுவ முற்படுவார்கள். இவ்வாறு மனித மனங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன.
      
               ஒவ்வொரு மனிதர்களுக்கும் வேறுபட்ட ஆசாபாசங்களும், கருத்துகளும், விருப்பு வெறுப்புக்களும் இருக்கின்றன. இவற்றை அவர்கள் வாழ்ந்த சூழலும், கற்ற கல்வியும், குடும்ப வளர்ப்பு முறையும், மரபணுக்களின் செல்வாக்குமே தீர்மானிக்கின்றன. இவர்களை ஒரு வீட்டுக்குள் எந்தவித வெளித்தொடர்புகளும் இன்றி அனுப்பினால் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதே இந்நிகழ்வாக இருக்கின்றது. இதிலிருந்து என் சிந்தனை விரிவு காணுகின்றது. 
           
       ஒரு அறையில் நல்ல கல்வி கற்ற, பண்பாளர்கள் மூவரை அடைத்து வைத்து அவர்களுக்கு 3 வேளை 3 சிறிய தட்டில் ஒரு வாரம் உணவு வழங்கப்பட்டது. அடுத்த வாரம் 2 தட்டாக மாற்றப்பட்டது. அதன் அடுத்த வாரம் 1 தட்டாக மாற்றப்பட்டது. ஒரு வேளை உணவே ஒரு தட்டில் வழங்கப்பட்டது. சிறிது சிறிதாக உணவு குறைக்கப்பட அந்த அறையில் ஒரு பிரளயமே ஏற்பட்டது. ஒவ்வொருவரும் பசி தாங்கமுடியாது ஆளையாள் உணவுக்காகச் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் தாறுமாறாக தாக்கத் தொடங்கினர். அறையெங்கும் சோற்றுப் பருக்கைகள் வீசப்பட்டன. உணவுக்காக நாய்கள் அடிபட்டுக் கொண்டது போல் இவர்கள் நடந்து கொண்டார்கள். பசி வந்தால் பத்தும் பறந்து போம் என்பார்கள். அந்த பத்தில் பண்பு கூட பறந்து போய்விடும். சந்தர்ப்பம் சூழ்நிலை மனிதர்களை பண்பற்றவர்களாக மாற்றிவிடும். அவர்களுக்குள் இருக்கும் மிருகக் குணம் விழித்துக் கொள்ளும். பண்பற்ற குணம் வெளியே வரும். 
                      
     கற்றறிந்த பண்புள்ள புலவர் ஒளவையார் ஒரு இடத்தில்

    'எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
     மட்டிற் பெரியம்மை வாகனமே  முட்டமேற்
     கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
     ஆரையடா சொன்னாயது'

    என்று கம்பரை விளித்துப் பாடுகின்றார். அவலட்சணமே, எருமையே, மூதேவியே, குட்டிச்சுவரே, குரங்கே. இவ்வாறான பண்பற்ற சொற்கள் ஒளவை வாயிலிருந்து கம்பர் மேல் ஏற்பட்ட கோபத்தினால் வெளிப்படுகின்றது. 

              1972 ஆம் ஆண்டு ஒரு விமானம் திடீரெனக் காணாமல் போனது. இவ்விமானத்தை யாராலும் தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் போனது. 90 நாட்களின் பின்பு சில மனிதர்களுடன் ஒரு பனி படர்ந்த, எந்தவித வெளித் தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாத ஒரு மலைப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விமானத்தில் பிரயாணம் செய்தவர்களில் சிலர் இறந்துவிட மீதமுள்ளவர்கள் சிலரே உயிரோடு இருந்தார்கள். சூழவுள்ள பகுதிகளில் பனி படர்ந்த மலைப்பிரதேசங்களே இருந்த காரணத்தினால், உயிர் தப்பியவர்கள் வாழ்வதற்கு உணவை எங்கேயிருந்து பெற்றார்கள் என்று கேட்டபோது, இருந்த உணவெல்லாம் தீர்ந்து போக பசியால் ஒருவரை ஒருவர் கொன்று தின்றே வாழ்ந்திருக்கின்றார்கள். விமானத்தில் பயணம் செய்தவர்கள் அக்காலத்தில் படித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆளுக்காள் சண்டை செய்து கொல்வதை விட்டு எல்லோருடைய பெயரையும் சீட்டில் எழுதி, அதில் 3 சீட்டுகளை எடுத்து அச்சீட்டில் பெயர் உள்ளவர்களை கொன்று உண்டிருக்கின்றார்கள். மனிதன் தன் தேவைக்காக எந்தளவு கேவலமாக பிணந்தின்னும் கழுகாகவும் மாறிப் போவான் என்பதற்கு இது சான்றாக அமைகின்றது. இவ்வாறான மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் கேவலமானவர்கள் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலையானது மனிதனை இவ்வாறான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதே உண்மை.        


                  மனிதர்களுக்குள் இரண்டு பக்கம் இருக்கும் என்பார்கள். அதன் ஒரு பக்கம் உறங்கிக் கொண்டிருக்கும். சந்தர்ப்பம் சூழ்நிலை வாய்க்கும் போது  விழித்துக் கொள்ளும் உதாரணத்திற்கு ஒரு தாய் பிறரிடம் பேசும் போது என்னுடைய பிள்ளை குழப்படி செய்தால் நான் அடிப்பதில்லை, பேசி தவறைப் புரிய வைப்பேன். பிள்ளை என்னுடைய உயிர் கை வைக்க எப்படி மனம் வரும்  என்பாள். ஆனால், சில சந்தர்ப்பத்தில் பிள்ளையின் குழப்படியைப் பொறுக்க முடியாது ஓங்கி அடித்துவிடுவாள். பின் நிதானித்து பிள்ளையைத் தூக்கி அணைத்துத் தடவிக் கொடுப்பாள். ரெமோ என்ற படத்தில் விக்ரம் இரு வேறுபட்ட குணாதிசயங்களை மாறி மாறி வெளிக்காட்டுகின்றார் இதை Multiple Personality என்பார்கள். சிலருக்கு வெளிப்படையாக இம்மாறுபட்ட குணாதிசயங்கள் வெளிப்படும். எத்தனையோ பிரபலங்கள் தமக்குப் பிடித்த பொருளைக் களவாடியிருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். அடக்கமும் பொறுமையும் கொண்ட கண்ணகி மதுரையையே எரிக்கும் பெண்ணாகின்றாள். அவளுக்குள் அடங்கியிருந்த ஆவேசம் தன்னுடைய கணவன் கள்வன் என்று சொன்னபோது வெளிவருகின்றது. இவ்வாறு மனிதனுக்கு மனிதன் வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவனாக இருக்கின்றான். 
                  இவ்வாறான மனிதர்கள் அனைத்து விடயங்களிலும் ஒத்துப் போவார்களா என்றால் அதுதான் இல்லை. கூடப்பிறந்த சகோதரர்கள் கூட கருத்து வேறுபாடுள்ளவர்களாகவே காணப்படுவார்கள். அதைத்தானே ஐந்து விரல்களும் ஒரு மாதிரி இல்லை என்று சொல்வார்கள். நல்ல நண்பன் என்று சொன்னாலும், அவர்களிடையே விட்டுக்  கொடுப்புடனேயே நட்புத் தொடர்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பொருந்தாத அமைப்புக்களும், பொருந்தாத திருமண வாழ்க்கையும், பொருந்தாத உறவுகளும் என்றோ ஒருநாள் முறிந்துதான் போகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் மனமே. எனவே மனிதர்களை இப்படியானவர்கள் என்று நாம் தீர்ப்பளிக்க முடியாது. மனித மனங்கள் எந்த நேரம் எப்படி மாறும் என்று யாராலும் கூற முடியாது. 'மனம் ஒரு குரங்கு. மனித மனம் ஒரு குரங்கு. நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது' என்று கண்ணதாசன் பாடியிருக்கின்றார். 
    Bigg Boss பார்த்த போது இவ்வாறான சிந்தனைகள் எனக்குள்ளே எழுந்தன. 

    ஆவணி மாத வெற்றிமணியில் வெளியான என்னுடைய கட்டுரை 

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...