இன்று தமிழர்கள் வாழும் நாடுகளில் பரவலாகப் பேசப்படும் ஒரு நிகழ்ச்சி Bigg Boss. இந்நிகழ்ச்சி எம்முடைய தமிழ்க் கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் நிகழ்ச்சி, வேலையில்லாதவர்களே இந்நிகழ்ச்சியைப் பார்க்கின்றார்கள் என்று பலரும் விமர்சனங்களைத் தந்தாலும், விமர்சிப்பவர்களே ஒவ்வொரு நாளும் இந்நிகழ்ச்சிக்குள் மூழ்கிப் போகின்றவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்பது உண்மையே.
என் பார்iவையில் இந்நிகழ்ச்சி மனித மனங்களைப் பற்றிய ஆச்சரியத்தையே கொண்டுவருகின்றது. பல்வேறுபட்ட துறைகளிலுள்ள, பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குள் வாழ்ந்த, பல்வேறுபட்ட குணாதிசயங்களுக்குள்ள மனிதர்களை ஒரு வீட்டுக்குள் 100 நாள்கள் அவர்களுக்குப் பிடித்த துறைகளுக்கான பொருள்களோ, விடயங்களோ எதுவுமில்லாமல், நேரத்தைக் காட்டும் மணிக்கூடு கூட இன்றி, 24 மணிநேரமும் கைத்தொலைபேசியுடன் அலைந்தவர்களின் கையில் எந்தவித தொலைத்தொடர்பு சாதனங்களும் இன்றி, தொலைக்காட்சி, கணனி இன்றி உலாவ விட்டால் எப்படி இருக்கும் என்பதை இந்த உலகம் பார்க்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியாகவே படுகின்றது. மற்றையவர் விடயங்களில் தலையிடுவார்கள். தம்முடைய கருத்துக்களை பிறர் மேல் திணிக்க முற்படுவார்கள். ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவார்கள். தம்முடைய கருத்துக்களே சரியென்று நிறுவ முற்படுவார்கள். இவ்வாறு மனித மனங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் வேறுபட்ட ஆசாபாசங்களும், கருத்துகளும், விருப்பு வெறுப்புக்களும் இருக்கின்றன. இவற்றை அவர்கள் வாழ்ந்த சூழலும், கற்ற கல்வியும், குடும்ப வளர்ப்பு முறையும், மரபணுக்களின் செல்வாக்குமே தீர்மானிக்கின்றன. இவர்களை ஒரு வீட்டுக்குள் எந்தவித வெளித்தொடர்புகளும் இன்றி அனுப்பினால் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதே இந்நிகழ்வாக இருக்கின்றது. இதிலிருந்து என் சிந்தனை விரிவு காணுகின்றது.
ஒரு அறையில் நல்ல கல்வி கற்ற, பண்பாளர்கள் மூவரை அடைத்து வைத்து அவர்களுக்கு 3 வேளை 3 சிறிய தட்டில் ஒரு வாரம் உணவு வழங்கப்பட்டது. அடுத்த வாரம் 2 தட்டாக மாற்றப்பட்டது. அதன் அடுத்த வாரம் 1 தட்டாக மாற்றப்பட்டது. ஒரு வேளை உணவே ஒரு தட்டில் வழங்கப்பட்டது. சிறிது சிறிதாக உணவு குறைக்கப்பட அந்த அறையில் ஒரு பிரளயமே ஏற்பட்டது. ஒவ்வொருவரும் பசி தாங்கமுடியாது ஆளையாள் உணவுக்காகச் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் தாறுமாறாக தாக்கத் தொடங்கினர். அறையெங்கும் சோற்றுப் பருக்கைகள் வீசப்பட்டன. உணவுக்காக நாய்கள் அடிபட்டுக் கொண்டது போல் இவர்கள் நடந்து கொண்டார்கள். பசி வந்தால் பத்தும் பறந்து போம் என்பார்கள். அந்த பத்தில் பண்பு கூட பறந்து போய்விடும். சந்தர்ப்பம் சூழ்நிலை மனிதர்களை பண்பற்றவர்களாக மாற்றிவிடும். அவர்களுக்குள் இருக்கும் மிருகக் குணம் விழித்துக் கொள்ளும். பண்பற்ற குணம் வெளியே வரும்.
கற்றறிந்த பண்புள்ள புலவர் ஒளவையார் ஒரு இடத்தில்
'எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது'
என்று கம்பரை விளித்துப் பாடுகின்றார். அவலட்சணமே, எருமையே, மூதேவியே, குட்டிச்சுவரே, குரங்கே. இவ்வாறான பண்பற்ற சொற்கள் ஒளவை வாயிலிருந்து கம்பர் மேல் ஏற்பட்ட கோபத்தினால் வெளிப்படுகின்றது.
1972 ஆம் ஆண்டு ஒரு விமானம் திடீரெனக் காணாமல் போனது. இவ்விமானத்தை யாராலும் தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் போனது. 90 நாட்களின் பின்பு சில மனிதர்களுடன் ஒரு பனி படர்ந்த, எந்தவித வெளித் தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாத ஒரு மலைப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விமானத்தில் பிரயாணம் செய்தவர்களில் சிலர் இறந்துவிட மீதமுள்ளவர்கள் சிலரே உயிரோடு இருந்தார்கள். சூழவுள்ள பகுதிகளில் பனி படர்ந்த மலைப்பிரதேசங்களே இருந்த காரணத்தினால், உயிர் தப்பியவர்கள் வாழ்வதற்கு உணவை எங்கேயிருந்து பெற்றார்கள் என்று கேட்டபோது, இருந்த உணவெல்லாம் தீர்ந்து போக பசியால் ஒருவரை ஒருவர் கொன்று தின்றே வாழ்ந்திருக்கின்றார்கள். விமானத்தில் பயணம் செய்தவர்கள் அக்காலத்தில் படித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆளுக்காள் சண்டை செய்து கொல்வதை விட்டு எல்லோருடைய பெயரையும் சீட்டில் எழுதி, அதில் 3 சீட்டுகளை எடுத்து அச்சீட்டில் பெயர் உள்ளவர்களை கொன்று உண்டிருக்கின்றார்கள். மனிதன் தன் தேவைக்காக எந்தளவு கேவலமாக பிணந்தின்னும் கழுகாகவும் மாறிப் போவான் என்பதற்கு இது சான்றாக அமைகின்றது. இவ்வாறான மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் கேவலமானவர்கள் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலையானது மனிதனை இவ்வாறான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதே உண்மை.
மனிதர்களுக்குள் இரண்டு பக்கம் இருக்கும் என்பார்கள். அதன் ஒரு பக்கம் உறங்கிக் கொண்டிருக்கும். சந்தர்ப்பம் சூழ்நிலை வாய்க்கும் போது விழித்துக் கொள்ளும் உதாரணத்திற்கு ஒரு தாய் பிறரிடம் பேசும் போது என்னுடைய பிள்ளை குழப்படி செய்தால் நான் அடிப்பதில்லை, பேசி தவறைப் புரிய வைப்பேன். பிள்ளை என்னுடைய உயிர் கை வைக்க எப்படி மனம் வரும் என்பாள். ஆனால், சில சந்தர்ப்பத்தில் பிள்ளையின் குழப்படியைப் பொறுக்க முடியாது ஓங்கி அடித்துவிடுவாள். பின் நிதானித்து பிள்ளையைத் தூக்கி அணைத்துத் தடவிக் கொடுப்பாள். ரெமோ என்ற படத்தில் விக்ரம் இரு வேறுபட்ட குணாதிசயங்களை மாறி மாறி வெளிக்காட்டுகின்றார் இதை Multiple Personality என்பார்கள். சிலருக்கு வெளிப்படையாக இம்மாறுபட்ட குணாதிசயங்கள் வெளிப்படும். எத்தனையோ பிரபலங்கள் தமக்குப் பிடித்த பொருளைக் களவாடியிருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். அடக்கமும் பொறுமையும் கொண்ட கண்ணகி மதுரையையே எரிக்கும் பெண்ணாகின்றாள். அவளுக்குள் அடங்கியிருந்த ஆவேசம் தன்னுடைய கணவன் கள்வன் என்று சொன்னபோது வெளிவருகின்றது. இவ்வாறு மனிதனுக்கு மனிதன் வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவனாக இருக்கின்றான்.
இவ்வாறான மனிதர்கள் அனைத்து விடயங்களிலும் ஒத்துப் போவார்களா என்றால் அதுதான் இல்லை. கூடப்பிறந்த சகோதரர்கள் கூட கருத்து வேறுபாடுள்ளவர்களாகவே காணப்படுவார்கள். அதைத்தானே ஐந்து விரல்களும் ஒரு மாதிரி இல்லை என்று சொல்வார்கள். நல்ல நண்பன் என்று சொன்னாலும், அவர்களிடையே விட்டுக் கொடுப்புடனேயே நட்புத் தொடர்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பொருந்தாத அமைப்புக்களும், பொருந்தாத திருமண வாழ்க்கையும், பொருந்தாத உறவுகளும் என்றோ ஒருநாள் முறிந்துதான் போகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் மனமே. எனவே மனிதர்களை இப்படியானவர்கள் என்று நாம் தீர்ப்பளிக்க முடியாது. மனித மனங்கள் எந்த நேரம் எப்படி மாறும் என்று யாராலும் கூற முடியாது. 'மனம் ஒரு குரங்கு. மனித மனம் ஒரு குரங்கு. நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது' என்று கண்ணதாசன் பாடியிருக்கின்றார்.
Bigg Boss பார்த்த போது இவ்வாறான சிந்தனைகள் எனக்குள்ளே எழுந்தன.
ஆவணி மாத வெற்றிமணியில் வெளியான என்னுடைய கட்டுரை
அருமையான கட்டுரை...
பதிலளிநீக்குஆழமான அருமையான அலசல்..இன்றைய சூழலில் மிக அவசியமானப் பதிவும் கூட..பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஇதுவரை இந்நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை.
பதிலளிநீக்கு