• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 8 மார்ச், 2024

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

     


    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து குடும்பத்தைப் பாராமரிக்கின்ற முக்கிய பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அத்தனை பொறுப்புக்களையும் தலைமேற் கொண்டு செய்கின்ற போதும் இலக்கிய முயற்சிகளில் தம்மை இனங்காட்டிக் கொள்ளுகின்ற பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். ஆனால், எத்தனை திறமைகள் இருந்தும் தம்மை குடும்பத்துக்காக மட்டுமே அர்ப்பணிக்கின்ற பெண்கள் அதிகமாக இருக்கின்றார்கள். இந்தக் காரணமே இலக்கிய முயற்சிகளில் பெண்களின் பங்களிப்புக் குறைவாகக் காணப்படுகின்றது.

    எமக்குக் கிடைக்கும் 2381 சங்கப்பாடல்களில்; 2279 பாடல்களில் மட்டுமே அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. அவர்கள் 475 பேர்கள் எனக் காணக்கிடக்கின்றது. இதிலே நச்சௌ;ளையார், நன்முல்லையார், ஆதி மந்தியார், நப்பசலையார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தை, பொத்தியார், பேய்மகள், இளவெயினி, வருமுலையாரித்தி, வெண்ணிக்குயத்தியார், வெள்ளிவீதியார், பாரி மகளிர்கள், காமக்கண்ணியார், முடத்தாமக்கண்ணியார், பொன்முடியார், காக்கைப்பாடினியார்;, ஒளவையார் போன்ற 32 பெண்பால் புலவர்களே அறியக்கூடியதாக இருக்கின்றது. ஏன் இத்தனைபேர்தான் இருந்தார்களா? அல்லது மறைக்கப்பட்டார்களா? என்பது கேள்விக்குறி

    இன்றும் பெண்களை அடக்கி வைக்கின்ற நடைமுறை காணப்படுகின்றது. தம்முடைய சொல்லை மீறி நடக்கின்ற போது பேச்சால் கொல்வது(பெண்களில் கை வைத்தால் காவல்துறை கொண்டு போய்விடும்), அவளுடைய அறிவை துச்சமாக மதிப்பது போன்ற நடைமுறைகள் ஆண்களிடம் காணப்படுகின்றது. இவை அவர்களிடம் தம்முடைய பரம்பரை மரபணுக்கள் இன்றும் இருப்பதை அடையாளங்காட்டுவதாக அமைகின்றது.  இவை தற்போதும் நடைமுறை வாழ்க்கையில் பெண்களின் குற்றச்சாட்டுக்களாகக் காணப்படுகின்றன.


    இக்காலப்பகுதியிலும் ஒரு இலக்கிய விழாவாக இருந்தால் தம்முடைய மனைவிமாருடன் இலக்கிய நிகழ்வுகளுக்குச் சமூகமளிக்கும் ஆண்களைக் காண்பது அரிது. தம்முடைய மனைவிமாருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இல்லை என்று புறக்கணித்து அந்த ஆர்வத்தைத் தூண்டும் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள அவர்கள் முயல்வதில்லை. 

    இவை எல்லாவற்றுக்கும் தாய்வழி சமுதாயம் தந்தை வழி சமுதாயமாக மாறியதே காரணமாக இருக்க வேண்டும். கோடரியை ஆயதமாக வைத்திருக்கின்ற பரசுராமன் தன்னுடைய தந்தை ஆணையிடத் தாயைக் கொன்றிருக்கின்றான். இந்தக் கதை தந்தை வழி சமுதாயமாக மாறியபோதே தோன்;றியிருக்க வேண்டும். இதனாலேயே பெண்ணுக்குக் கற்பு போதிக்கப்பட்டது. 

    இலக்கியத் திறமையுள்ள பெண்களைத் தெய்வமாகப் பார்க்கின்ற தன்மையும் ஒருவகை அடக்குமறை என்றே சொல்ல வேண்டும். சிறந்த படைப்பாளியும் திறமையும் மிக்க காரைக்காலம்மையாரைத் தெய்வமாக காண்பதாக அவள் கால்களில் விழுந்து விடுகின்றான் பரமதத்தன். தான் விரும்பி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து விடுகின்றான். காரைக்காலம்மையாரும் உனக்குப் பயன்படாத உடல் எனக்குத் தேவையில்லை என்று உணவை ஒறுத்து எலும்பு உடம்பு வேண்டிப் பெறுகின்றாள். சிலம்பு உடைத்து கணவனை நிரபராதி என்று நிறுவிய கண்ணகியைக் கூட வந்தவர்கள் நாட்டைத் தீக்கு இரையாக்கி கண்ணகியைக் கடவுளாக்கி விடுகின்றனர். இதனால், கண்ணகி வீரப் பெண்கள் அமைப்பு ஏற்படுத்த முடியாதவளாகி விடுகின்றாள். 

    கணவன் தாலி என்னும் வேலி போட்டு மனைவியைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்கின்றான். தாலி என்பது நிமிர்ந்து வரும் ஆடவன் இவள் திருமணம் ஆனவள் என்று அடையாளங்காட்டுவதாக காரணம் காட்டுகின்றான். சில பெண்கள் என்ஸ் ரே எடுக்கின்ற போது கூடத் தாலியைக் கழட்டத் தயங்குகின்றார்கள். அவர்கள் தம்முடைய கணவனுக்கு ஏதாவது அபரிவிதமாக நடந்துவிடும் என்ற மூடநம்பிக்கையை வைத்திருக்கின்றார்கள். பெண்கள் கழுத்தில் அணியும் தாலி என்னும் அணிகலன் சங்ககாலத்தில் இருந்ததில்லை. 10 ஆம் நூற்றாண்டின் பின்புதான் அது வழக்கத்துக்கு வந்தது. அப்படியானால், அதற்கு முன் பிறந்த பெண்களுக்கு இந்தப் பயம் இருந்திருக்குமா? 

    நாம் இப்போது மேற்கொள்ளுகின்ற பண்பாட்டு அம்சங்கள் எமக்குரியவை அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உணவு தொடங்கி உடை, வீடு, விழாக்கள் அனைத்துமே அந்நியரின் படையெடுப்புக்களினாலும் மக்களின் மாற்றங்களினாலும் தமிழர்கள் மத்தியில் வந்து சேர்ந்தவையே. தற்போது பெண்கள் அணியும் புடைவை கூட தெலுங்கு பேசுகின்ற மக்களால் வந்ததே. சிலப்பதிகாரத்துக்கு முந்திய தமிழ் பெண்கள் மார்புக்கச்சை கூட அணிந்ததுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. கி.பி 9 ஆம் நூற்றாண்டின் பின்பே மார்புக்கச்சை அணிந்தார்கள். தெலுங்கு மக்களாலேயே இரவுக்கை அணியும் வழக்கம் வந்தது எனத் தன்னுடைய ஆய்வின் மூலமாக தொ.பரமசிவன் எடுது;துரைக்கின்றார். எனவே பண்பாடு கலாசாரம் என்று பெண்களின் ஆளுமைக்கு விலங்கு போட முடியாது. 

    நளாயினி தன்னுடைய குஷ்டரோகியான தன்னுடைய கணவனைத் தாசியின் வீட்டுக்குக் கூடையிலே சுமந்து செல்கின்றாள். தீக்குளிக்க வைத்துக் காட்டில் விட்டுத் துன்புறுத்தப்பட்ட சீதை, கோவலனால், தவிக்கவிடப்பட்ட கண்ணகி, மாதவி, இவ்வாறான இலக்கியங்களை கற்பித்த காரணத்தால், பிற்குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புமிக்க பெண் இலக்கிய ஆளுமைகளின் படைப்பாற்றலை இன்று இழந்து நி;ற்கின்றோம்.


    "கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகும்"என்று பாடும் ஒக்கூர் மாசாத்தியார் 

    "பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆதலின்

    செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியோடு

    உயவொடு வருந்தும் மன்னே! இனியே

    புகர்நிறம் கொண்ட களிறு அட்டுஆனான்

    முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே

    உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு

    மானுளை அன்ன குடுமித்

    தோல்மிசைக் கிடந்த புலஅண லோனே"

    குழந்தைப் பருவத்திலே பால் உண்ணாமல் இருக்க கோபம் கெண்டவளைப் போலச் சிறுகோலை எடுத்தால் பயந்து உணவு உடனே உண்ணுகின்ற தன்மையையுடையவனே இன்று களிறுகளைக் கொன்றும் தளராது, அந்தப் போரிலே மார்பகத்து அம்புபட்டுக் கேடகத்தின்மேல் வீழ்ந்து கிடந்தவனை எடுத்து, 'ஐயோ! மார்பில் அம்பு தைத்துளதே? என வருந்தினேன். அவனோ, அதை நான் அறியவில்லையே! என்றான். உரவோர் மகன் அன்றோ அவன்! என்று பாடிய பொன்முடியார் பாடலைப் போலும் சங்க காலத்திலே ஆளுமையும், படைப்புத் திறனும், வீரமும்  பெண்கள் பெற்றிருந்த பண்பாடு மாற்றம் கண்டது. 

    இன்று மீண்டும் பெண்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும் தன்மை காணப்பட்டாலும் திறமைமிக்க இலக்கியகர்த்தாக்கள் அகப்பையை எறிந்து விட்டு கணினியைத் திறக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களைப் போதிக்கும் நாடகக் குகைக்குள் இருந்து வெளிவந்து நன்னெறி இலக்கியங்கள் படைக்க வேண்டும். 

    வெற்றிமணி பத்திரிகையில் 2024 மார்ச் மாதக் கட்டுரை 

    உரங்கொண்ட மங்கையர்க்கு மகளிர்தின வாழ்த்துகள்  


    வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

    Neuralink Ni




    Brain computer interface research or brain machine interfaces



     மனிதனின் இதயத்தில் கை வைத்தாகள். இதய மாற்று சத்திரசிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், என்று ஒவ்வொரு உறுப்பாகக் கை வைத்து வெற்றியும் கண்டுள்ளார்கள், இப்போது மனிதனின் மூளையில் கை  வைக்கப்பட்டுள்ளது. 

    மனிதனின் உடலை இயக்குவது மூளை. மூளையிலுள்ள நியூரன்ஸ் உயிரணுக்கள் மூலமாக சிக்னல் அனுப்பப்பட்டு உடலுக்குத் தேவையானவற்றை இந்த மூளை செய்கின்றது. அதுதான் மூளை தான் எங்களுடைய Head of the Department. 10 எங்களுடைய மூளையில் 10 ஆயிரம் கோடி நியூரன்ஸ்கள் இருக்கின்றன. நியூரன்ஸ் சிக்னல் அனுப்புவதற்கு 20 வார்ட்  மின்சாரம் இருந்தால் போதும்.


    இப்போது இந்த நியூரன்களைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒரு chip மூளையிலே பொருத்துகின்றார்கள். இதன் மூலமாக நியூரன்கள் பயிற்சி பண்ணாமல் இலகுவாக மேலதிகமாக வேலை செய்ய வைக்கிறார்கள்

    மூளையில் இருந்து வருகின்ற signal computer க்கு அனுப்பி மற்ற மூளையை control பண்ண முடியும் இதனால்

    நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

    ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

    மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள்.

    பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

    அல்ஸ்கைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

     இந்த சத்திரசிகிச்சையின் மூலம் சுகமடைவார்கள்,

    எலன் மாஸ்க் தான் இதனை ஆரம்பித்தவர் 2016 இல் இந்த பரிசோதனை கலிபோர்னியாவில் Neuralink என்ற நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

    முதலில் பன்றியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதற்கு Gertrud செயற்பாடு எனப் பெயர் வைத்தார்கள். அதன் பின் 2021 இல் குரங்கில் செய்துபார்த்து 90 வீதம் வெற்றி கண்டார்கள். இப்போது மனிதர்களில் இந்த சிப் பொறுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு 28 ஆம் திகதி ஜனவரி மாதம் ஒரு மனிதனில் பொருத்தி இருக்கின்றார்கள். இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

    இது எப்படி என்றால் ஒரு சிறிய நாணயம் போன்ற ஒரு சாதனம் இருக்கும் அதிலே நியூரோன்களைப்போல மெல்லிய வயர்கள் இருக்கும். இவை பொலி மேட் என்ற பொருளால் செய்யப்பட்டு  இருக்கும்.  மண்டையிலே ஒரு சிறிய துவாரம் போட்டு அதற்குள் இந்த சிப்பை  மூளையிலே பொருத்தி விட்டு மூடி விடுவார்கள். இந்த சத்திரசிகிச்சை 30 நிமிடங்களில் முடிந்துவிடும். இரத்தக் கசிவு பெரிதாக இல்லை. மயக்கம் மருந்து தேவை இல்லை. வலி இருக்காது

     


    மூளையிலுள்ள date க்கள் computer உடன்  transfer பண்ணப்பட்டு

    ஒரே நேரத்தில் 1024 கம்ப்யூட்டர்களுடன் இந்த சிப்ஸை இணைக்கலாம்

    இந்தச் சிப்புக்கான பேட்டரி 24 மணி நேரங்கள் தொழிற்படும். இதற்குரிய battery சார்ஜ் பண்ணக்கூடியது. wireless charge . மூளைக்கு உடலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை ஏனென்றால் மூளையை விட எட்டு மடங்கு சிறிய சென்சார் இருப்பதனால்  மூளைக்கோ எந்த வித உறுப்புகளுக்கோ பாதிப்பு இல்லை

    கணினி போன்ற  எலக்ட்ரானிக் பொருட்களுடன் இணைக்கலாம். அப்படி இணைக்கும் போது உங்களுடைய மூளை என்ன செய்ய நினைக்கிறதோ அதை உடனே கண்டு பிடித்து விடலாம்.

     மனதை அறியும் கருவி இருந்தால் என்று கட்டுரை எழுதினேன். இப்போது வந்து விட்டது. நீங்கள் நினைப்பதை அறிந்து விடலாம்.

     

     

     

     

     

     

     

    செவ்வாய், 16 ஜனவரி, 2024

    மனமும் மௌனமும்.




    மனமும் மௌனமும்.


    புதிய ஆண்டில் புதிய சிந்தனை. 


    இந்த உலகம் சுமார் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது. அதன் பின் 380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் சில மூலக்கூறுகள் சேர்ந்து உயிரினங்கள் தோன்றின. 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றினர். 25 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினம் தோன்றுகிறது. முதன்முதலாகக் கருவிகள் உருவாக்கப்படுகின்றன. சுமார் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினம் ஆபிரிக்காவில் இருந்து யுரேசியாவுக்குப் பரவுகிறது. பல்வேறு மனித இனங்கள் தோன்றுகின்றன. 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நியான்டர்தால் இனம் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தோன்றுகின்றார்கள். 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ சேப்பியன் இனம் கிழக்கு ஆபிரிக்காவில் தோன்றுகிறது. முன் 70,000 ஆண்டுகளுக்கு முன் அறிவுப்புரட்சி எழுகிறது. ஆபிரிக்காவில் இருந்து வெளியேறுகின்றார்கள். 45,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியாவில் குடியேறுகின்றார்கள். விலங்கினங்கள் அழிகின்றன. 30,000 ஆண்டுகளுக்கு முன் நியான்டர்தால் இனம் முற்றாக அழிகின்றன. 16,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறுகின்றார்கள். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன. 12,000 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை, உணவு பயிரிடுதல், விலங்குகள் பழக்கப்படுதல், நிரந்தர குடியேற்றம்; ஆரம்பித்து 5,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மன்னராட்சி, பேச்சுமொழி, எழுத்து வடிவம், பல கடவுள் கொள்கை, மதங்கள் எல்லாம் தொடங்குகின்றன. 4250 ஆண்டுகளுக்கு முன் வரலாற்றின் முதல் பேரரசான சார்க்கானின் அக்கேடிய பேரரசு முதல் தோன்றுகிறது. அதன்பின் 2,500 வருடங்களுக்கு முன் பாரசீகப் பேரரசு, புத்தமதம் தோன்றுகிறது. என்னும் தரவுகளை  மனிதகுல வரலாற்றாசிரியர் யுவால் நோவா ஹராரி அவர்கள் எடுத்துக் கூறுகின்றார். 

    இவ்வாறு ஆண்டுகள் கடந்து மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று வந்த மனித இனம். இந்த இனம் இன்று 2024 இல் காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஆண்டுகளின் வளர்ச்சி மனித மனங்களின் வளர்ச்சியுடன் இணைந்தே பயணிக்கின்றது. கண்டு பிடிப்புக்களும் கண்டம் விட்டுக் கண்டம் தாண்ட அபரிமிதமான தொடர்புகளும், உலகத்தின் எல்லையைத் தாண்டி கிரகங்களுக்கு பயணம்செய்து வரும் விஞ்ஞான வளர்ச்சியும் தோன்றிய இடத்தை நோக்கிய பார்வையைச் செலுத்துகின்றது. இது ஆய்வுலகம், விஞ்ஞான உலகம். இதைத்தண்டி இன்னும் ஒரு உலகம் உதயமாகி இதயங்களின் வேர்களை அசைக்கின்ற உலகமும் தோன்றியுள்ளது. அதுவே இன்றைய புகழை நோக்கிய பயணம்.

    இன்றைய புகழை நோக்கிய பயணத்தின் வண்டிச் சில்லில் நசுக்கப்படும் மனங்கள் ஏராளம். ஏமாற்றங்கள் ஏராளம், துரோகங்கள் கணக்கில்லை, அவமரியாதைகள் அதிகம், நன்றியை விஞ்சும் நன்றிமறத்தல்களின் சிறப்பு, திறமைகள் திட்டமிட்டு மறைக்கப்படல்; திட்டமிட்டுப் பழிவாங்குதல், இயலாமையை மறைக்க கொள்கை வாதங்கள்ளூ உதவிகள் செய்வாரை வெளிப்படுத்த அஞ்சுதல், புகழுள்ளாரில் உரிமை கோரல், மற்றவரை அடித்து விழுத்தி ஏறி நிற்றல் என்று மனித மனங்களின் போக்கிலே அழுக்குகள் வண்டில் வண்டிலாக ஏற்றிக் கொள்ளப்படுகின்றன. டிஜிட்டல் உலகிலே பொருத்தம் இல்லாத பட்டங்களும், விருதுகள் மலிந்து கிடக்கின்றன. உண்மைகளை வாய் திறந்து பேச மனமிருந்தும் மௌனமாகும் மனிதர்கள் இன்று நடமாடும் இயந்திரங்களாகி விட்டார்கள். 

    இவ்வாறு தொடரும் போக்கு ஒருபுறம். இவை எல்லாவற்றையும் மிஞ்சி 2024 இல் செயற்கை நுண்ணறிவைத் தாண்டி மனித மனம் தாவுகிறது. மனித மூளைக்கு முக்கியத்துவம் குறைந்து செயற்கை மூளையின் ஆற்றலில் நம்பிக்கை வலுவடைகிறது. 

    போராட்டக் குணம், விட்டுக்கொடுப்புக்களையும், ஒற்றுமையையும், அன்பு பாசங்களையும் அடித்து விழுத்தி விட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. நான், எனது, எனக்கு மட்டும் என்ற பண்புகள் மேலோங்கியதால், நாடுகளில் இனங்களுக்குப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நாடு விட்டு நாடு தாவி மக்கள் தூரத்து வெளிச்சத்தைத் தேடுகின்றார்கள். நிலவுலகுக்கோர் ஆட்சி, போரில்லாத நல்லுலகம், நேர்மையான நீதிமுறை போன்ற 14 தத்துவங்கள் அடங்கிய வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிசியின் ஆசை நிராசையாக இன்று தத்தளிக்கிறது. உலகமே போரச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. 

    ஆண், பெண், என்பதை விட வேறு ஒரு இனம் வெளிப்படையாக விளம்பரங்களில் இடம்பிடிக்கின்றது. சட்டரீதியான ஓர் பாலினத் திருமணங்கள் நடைமுறையை அழகுபடுத்துகின்றன. இதை ஏற்றுக் கொள்பவர்கள் சமூகத்திலே அதிகரித்து விட்டனர். 

    ஒப்பனையும், அரிதாரமும் சொற்களில் மட்டுமல்ல அழகிலும் ஆட்சி செலுத்துகிறது. பெண்களின் அலங்காரம் வங்கிக் கணக்கில் கடன் தொகையை மேலோக்கிய அட்டவணைக்கு உயர்த்துகிறது. வீட்டில் இருக்கும் பெண்ணை வெளியில் அடையாளம் காண முடியவில்லை. பெண்கள் ஒப்பனை செய்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால், செயற்கை அரிதாரங்கள் அதிகரித்துவிட்டன. பிறக்கும் போது இருந்த உடல் உறுப்புக்கள் விருப்பம் போல மாற்றப்படல் இலகுவாகிவிட்டன. ஆடவர் மட்டும் விதிவிலக்கில்லை.  ஆடவர்க்கான ஒப்பனையைச் செய்பவர் "கோலவித்தகர்" என சங்க காலத்திலேயே அழைத்திருக்கின்றார்கள்.

    சங்ககாலத்திலே பெண்களின் அலங்காரங்களில் முக அலங்காரம் செய்யும் போது கண், காது, மூக்கு, புருவம், நெற்றி, உதடு கவனிக்கப்படுகின்றன. அப்படியானால், முகமே மனிதனினை அடையாளப்படுத்துகிறது. அதுவே அலங்காரத்தால் மெருகேற்றப்படுகிறது. 

    "உண்கண் பசப்பது எவன்கொல்

    மடவரல் உண்கண், வாள்நுதல் விறலி" 

    என்று சீதையின் கண்களுக்கு மைதீட்டியதை கம்பர் எடுத்துக்காட்டியுள்ளார். உண்கண் என்றால், மைதீட்டிய கண்கள். 

    அஞ்சனத்தை எடுத்து ஒரு சிறிய கோலினால், பெண்கள் கணிகளுக்குப் பூசுவார்கள். பாதங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசினார்கள். தோள்களிலும் தனங்களிலும் தொய்யில் எழுதினார்கள். சந்தனக்கட்டையைத் தேய்த்து அதனோடு பச்சைக் கற்பூரத்தைக் குழைத்து மார்பிலும் தோளிலும் அழகான படங்களை வரைந்தார்கள். மஞ்சள் பூசும் வழக்கமும் மங்கையர்களுக்கு இருந்திருக்கின்றது. முக்கூடற்பள்ளிலே 

    "இல்லறத் திற்கி யைவன ஈட்டுவார் 

    அல்ல செய்தே அறிதின் அழித்திடார்

    புல்லி காதலர் ஆயள் பொலிவுற

    மல்லல் ஓங்கணி மஞசள் அணிவராள்"

    என்று மஞ்சள் பூசியமையை எடுத்துக்காட்டுகிறது. 

    "குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் 

    மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

    கல்வி அழகே அழகு"

    என்று நாலடியாரும் மஞ்சள் பூசியமையை எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

    அதுபோல தற்காலத்தில் கிறீம் பூசுவுது போல அக்காலத்தில் நறுமண பொருள்களைக் கலந்து செய்து பூசினார்கள். 

    "ஒருபகல் பூசின் ஓராண்டு ஒழிவின்றி விடாது நாறும்

    பெரியவர் கேண்மை போலும் பெறற்கரும் வாச வெண்ணெய்"

     என்று சீவகசிந்தாமணி எடுத்துக் காட்டுகின்றது.

    இவ்வாறு ஒப்பனை அழகு பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது. ஆனால், இன்று பெண்களின் தோல்களின் இயற்கை அழகைச் சீரழிக்கும் அரிதாரங்கள் அதகரித்து விட்டன. 2024 இல் முகத்தின் மேலே சிலிக்கோன் முகம் பொருத்தும் காலமும் வரலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 

    இவை அத்தனையையும் பார்த்து மௌனமாக நகரவேண்டிய காலமே மனத்தின் மௌனமான காலம்

    தை மாதம் வெற்றி மணி பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை  

    உசாத்துணை கட்டுரை

    https://www.tamildigitallibrary.in





    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...