• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 16 ஜனவரி, 2024

    மனமும் மௌனமும்.




    மனமும் மௌனமும்.


    புதிய ஆண்டில் புதிய சிந்தனை. 


    இந்த உலகம் சுமார் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது. அதன் பின் 380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் சில மூலக்கூறுகள் சேர்ந்து உயிரினங்கள் தோன்றின. 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினத்திற்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர் தோன்றினர். 25 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினம் தோன்றுகிறது. முதன்முதலாகக் கருவிகள் உருவாக்கப்படுகின்றன. சுமார் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினம் ஆபிரிக்காவில் இருந்து யுரேசியாவுக்குப் பரவுகிறது. பல்வேறு மனித இனங்கள் தோன்றுகின்றன. 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நியான்டர்தால் இனம் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தோன்றுகின்றார்கள். 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ சேப்பியன் இனம் கிழக்கு ஆபிரிக்காவில் தோன்றுகிறது. முன் 70,000 ஆண்டுகளுக்கு முன் அறிவுப்புரட்சி எழுகிறது. ஆபிரிக்காவில் இருந்து வெளியேறுகின்றார்கள். 45,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியாவில் குடியேறுகின்றார்கள். விலங்கினங்கள் அழிகின்றன. 30,000 ஆண்டுகளுக்கு முன் நியான்டர்தால் இனம் முற்றாக அழிகின்றன. 16,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறுகின்றார்கள். அங்குள்ள பூதாகரமான விலங்குகள் அழிகின்றன. 12,000 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை, உணவு பயிரிடுதல், விலங்குகள் பழக்கப்படுதல், நிரந்தர குடியேற்றம்; ஆரம்பித்து 5,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மன்னராட்சி, பேச்சுமொழி, எழுத்து வடிவம், பல கடவுள் கொள்கை, மதங்கள் எல்லாம் தொடங்குகின்றன. 4250 ஆண்டுகளுக்கு முன் வரலாற்றின் முதல் பேரரசான சார்க்கானின் அக்கேடிய பேரரசு முதல் தோன்றுகிறது. அதன்பின் 2,500 வருடங்களுக்கு முன் பாரசீகப் பேரரசு, புத்தமதம் தோன்றுகிறது. என்னும் தரவுகளை  மனிதகுல வரலாற்றாசிரியர் யுவால் நோவா ஹராரி அவர்கள் எடுத்துக் கூறுகின்றார். 

    இவ்வாறு ஆண்டுகள் கடந்து மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று வந்த மனித இனம். இந்த இனம் இன்று 2024 இல் காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஆண்டுகளின் வளர்ச்சி மனித மனங்களின் வளர்ச்சியுடன் இணைந்தே பயணிக்கின்றது. கண்டு பிடிப்புக்களும் கண்டம் விட்டுக் கண்டம் தாண்ட அபரிமிதமான தொடர்புகளும், உலகத்தின் எல்லையைத் தாண்டி கிரகங்களுக்கு பயணம்செய்து வரும் விஞ்ஞான வளர்ச்சியும் தோன்றிய இடத்தை நோக்கிய பார்வையைச் செலுத்துகின்றது. இது ஆய்வுலகம், விஞ்ஞான உலகம். இதைத்தண்டி இன்னும் ஒரு உலகம் உதயமாகி இதயங்களின் வேர்களை அசைக்கின்ற உலகமும் தோன்றியுள்ளது. அதுவே இன்றைய புகழை நோக்கிய பயணம்.

    இன்றைய புகழை நோக்கிய பயணத்தின் வண்டிச் சில்லில் நசுக்கப்படும் மனங்கள் ஏராளம். ஏமாற்றங்கள் ஏராளம், துரோகங்கள் கணக்கில்லை, அவமரியாதைகள் அதிகம், நன்றியை விஞ்சும் நன்றிமறத்தல்களின் சிறப்பு, திறமைகள் திட்டமிட்டு மறைக்கப்படல்; திட்டமிட்டுப் பழிவாங்குதல், இயலாமையை மறைக்க கொள்கை வாதங்கள்ளூ உதவிகள் செய்வாரை வெளிப்படுத்த அஞ்சுதல், புகழுள்ளாரில் உரிமை கோரல், மற்றவரை அடித்து விழுத்தி ஏறி நிற்றல் என்று மனித மனங்களின் போக்கிலே அழுக்குகள் வண்டில் வண்டிலாக ஏற்றிக் கொள்ளப்படுகின்றன. டிஜிட்டல் உலகிலே பொருத்தம் இல்லாத பட்டங்களும், விருதுகள் மலிந்து கிடக்கின்றன. உண்மைகளை வாய் திறந்து பேச மனமிருந்தும் மௌனமாகும் மனிதர்கள் இன்று நடமாடும் இயந்திரங்களாகி விட்டார்கள். 

    இவ்வாறு தொடரும் போக்கு ஒருபுறம். இவை எல்லாவற்றையும் மிஞ்சி 2024 இல் செயற்கை நுண்ணறிவைத் தாண்டி மனித மனம் தாவுகிறது. மனித மூளைக்கு முக்கியத்துவம் குறைந்து செயற்கை மூளையின் ஆற்றலில் நம்பிக்கை வலுவடைகிறது. 

    போராட்டக் குணம், விட்டுக்கொடுப்புக்களையும், ஒற்றுமையையும், அன்பு பாசங்களையும் அடித்து விழுத்தி விட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. நான், எனது, எனக்கு மட்டும் என்ற பண்புகள் மேலோங்கியதால், நாடுகளில் இனங்களுக்குப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நாடு விட்டு நாடு தாவி மக்கள் தூரத்து வெளிச்சத்தைத் தேடுகின்றார்கள். நிலவுலகுக்கோர் ஆட்சி, போரில்லாத நல்லுலகம், நேர்மையான நீதிமுறை போன்ற 14 தத்துவங்கள் அடங்கிய வேதாத்திரியம் தந்த வேதாத்திரி மகரிசியின் ஆசை நிராசையாக இன்று தத்தளிக்கிறது. உலகமே போரச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. 

    ஆண், பெண், என்பதை விட வேறு ஒரு இனம் வெளிப்படையாக விளம்பரங்களில் இடம்பிடிக்கின்றது. சட்டரீதியான ஓர் பாலினத் திருமணங்கள் நடைமுறையை அழகுபடுத்துகின்றன. இதை ஏற்றுக் கொள்பவர்கள் சமூகத்திலே அதிகரித்து விட்டனர். 

    ஒப்பனையும், அரிதாரமும் சொற்களில் மட்டுமல்ல அழகிலும் ஆட்சி செலுத்துகிறது. பெண்களின் அலங்காரம் வங்கிக் கணக்கில் கடன் தொகையை மேலோக்கிய அட்டவணைக்கு உயர்த்துகிறது. வீட்டில் இருக்கும் பெண்ணை வெளியில் அடையாளம் காண முடியவில்லை. பெண்கள் ஒப்பனை செய்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால், செயற்கை அரிதாரங்கள் அதிகரித்துவிட்டன. பிறக்கும் போது இருந்த உடல் உறுப்புக்கள் விருப்பம் போல மாற்றப்படல் இலகுவாகிவிட்டன. ஆடவர் மட்டும் விதிவிலக்கில்லை.  ஆடவர்க்கான ஒப்பனையைச் செய்பவர் "கோலவித்தகர்" என சங்க காலத்திலேயே அழைத்திருக்கின்றார்கள்.

    சங்ககாலத்திலே பெண்களின் அலங்காரங்களில் முக அலங்காரம் செய்யும் போது கண், காது, மூக்கு, புருவம், நெற்றி, உதடு கவனிக்கப்படுகின்றன. அப்படியானால், முகமே மனிதனினை அடையாளப்படுத்துகிறது. அதுவே அலங்காரத்தால் மெருகேற்றப்படுகிறது. 

    "உண்கண் பசப்பது எவன்கொல்

    மடவரல் உண்கண், வாள்நுதல் விறலி" 

    என்று சீதையின் கண்களுக்கு மைதீட்டியதை கம்பர் எடுத்துக்காட்டியுள்ளார். உண்கண் என்றால், மைதீட்டிய கண்கள். 

    அஞ்சனத்தை எடுத்து ஒரு சிறிய கோலினால், பெண்கள் கணிகளுக்குப் பூசுவார்கள். பாதங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசினார்கள். தோள்களிலும் தனங்களிலும் தொய்யில் எழுதினார்கள். சந்தனக்கட்டையைத் தேய்த்து அதனோடு பச்சைக் கற்பூரத்தைக் குழைத்து மார்பிலும் தோளிலும் அழகான படங்களை வரைந்தார்கள். மஞ்சள் பூசும் வழக்கமும் மங்கையர்களுக்கு இருந்திருக்கின்றது. முக்கூடற்பள்ளிலே 

    "இல்லறத் திற்கி யைவன ஈட்டுவார் 

    அல்ல செய்தே அறிதின் அழித்திடார்

    புல்லி காதலர் ஆயள் பொலிவுற

    மல்லல் ஓங்கணி மஞசள் அணிவராள்"

    என்று மஞ்சள் பூசியமையை எடுத்துக்காட்டுகிறது. 

    "குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் 

    மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

    கல்வி அழகே அழகு"

    என்று நாலடியாரும் மஞ்சள் பூசியமையை எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

    அதுபோல தற்காலத்தில் கிறீம் பூசுவுது போல அக்காலத்தில் நறுமண பொருள்களைக் கலந்து செய்து பூசினார்கள். 

    "ஒருபகல் பூசின் ஓராண்டு ஒழிவின்றி விடாது நாறும்

    பெரியவர் கேண்மை போலும் பெறற்கரும் வாச வெண்ணெய்"

     என்று சீவகசிந்தாமணி எடுத்துக் காட்டுகின்றது.

    இவ்வாறு ஒப்பனை அழகு பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது. ஆனால், இன்று பெண்களின் தோல்களின் இயற்கை அழகைச் சீரழிக்கும் அரிதாரங்கள் அதகரித்து விட்டன. 2024 இல் முகத்தின் மேலே சிலிக்கோன் முகம் பொருத்தும் காலமும் வரலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 

    இவை அத்தனையையும் பார்த்து மௌனமாக நகரவேண்டிய காலமே மனத்தின் மௌனமான காலம்

    தை மாதம் வெற்றி மணி பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை  

    உசாத்துணை கட்டுரை

    https://www.tamildigitallibrary.in





    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    திராவிட இலக்கிய கர்த்தாக்களில் பாரதிதாசன்

    தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழ னுக்குத்  தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்  தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை தமிழ்த் தொண்டன்...