• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 29 மார்ச், 2011

  உண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்


                                      
  உற்ற நட்பை உவப்புடன் கூற விரும்புகையில், மற்றைய நட்பையும் சுட்டிக்காட்ட விழைவது இயற்கையே. கண்டொன்று பேசி, கட்டியணைத்துப் பல நகைச்சுவைக் கதைகள் கூறிப் புறமதில் பல கதைகள் புனைந்து கூறும் நட்பும் ஒரு நட்பே. இந்நட்பானது அடியிலிருந்து கரும்பை நுனிவரை உண்பது போன்றது. இனிப்புச் சுவையானது, இன்பத்தை உடனே தந்து மேலே போகப்போக சுவை குன்றிப் போதலைப் போன்றிருக்கும் என முன்னமே நாலடியார் கூறி வைத்திருக்கின்றார். மனிதர்கள் மனதை வெட்டி ஆராய்ந்து நட்புக் கொள்ள முடியாது. அப்படியே வெட்டிப் பார்த்தாலும் பண்புகளை பிரித்தறியத்தான் முடியுமா? பழகிப் பார்த்தே மனிதன் பண்புகளை உணர முடியும். 
         
                  பெற்ற தாயிடமும் பிரியமுடன் துணைசேர்த்த துணையுடனும் பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ விடயங்களை உண்மை நண்பரிடம் கூறி மனப்பாரம் குறைக்கின்றோம். தூய்மைக்கு இலக்கணமாய் உயிரினும் மேலாய்ப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நட்பின் புனிதம் நோக்கியே வள்ளுவப் பெருந்தகை தன் அறிவுப் பெட்டகத்தில் தீ நட்பு, கூடாநட்பு, நட்பு, நட்பாராய்தல் என நான்கு அதிகாரங்களை எழுதி, விபரமாய் விளக்கியுள்ளார். பாரதி தன் ''கண்ணன் என் தோழன்' என்னும் பாடலில் தன்னை அர்ச்சுனனாகவும் கண்ணனைத் தோழனாகவும் பாவனை பண்ணி நல்ல நட்பின் இலக்கணங்கள் அத்தனையையும் கண்ணனில் கண்டு அழகாகப் பாடியுள்ளார்.

          'ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
           இதஞ் சொல்லி மாற்றிடுவான்


           பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென் றாலொரு
           பேச்சினிலே சொல்வான்


           உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில்
            ஓங்கி அடித்திடுவான் - நெஞ்சில்
           கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு
            காறியுமிழ்ந் திடுவான்'

  என நட்பின் இலக்கணங்களைக் கண்ணன் பாட்டில் அறியக்கூடியதாக இருக்கிறது. எனவே உண்மை நண்பன் உரிமையுடன் எதையும் எடுத்துச் சொல்ல வல்லவனாய் இருத்தல் வேண்டும். 

           'காய் முற்றின் தீங்கனியாகும். இளந்தளிர் நாள் போய் முற்றின் என்னாகிப்போம்'' அதாவது காயானது, முற்றினால் உண்ணக் கூடிய இனிய பழமாகும். இளந்தளிரானது முற்றுமானால், முடிவில் சருகுபோல் போய் விடும். நல்லவர்களுடன் நாம் நண்பர்களாக இணையும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து முடிவில் அவர்கள் நட்பானது பழம் போல் இனிக்கின்ற இன்பத்தைப் பெறுவோம்.. கயவர்களுடன் பழகும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சருகுபோல் உயிரற்று  பறந்து போவோம். என்பதை நன்னெறி நவின்றீன்ற சிவப்பிரகாசர் மூலம் அறிந்தோம். இதனையே தான் 'சேராத இடந்தனிலே சேர வேண்டாம்'' அதாவது நல்லிணக்கம் இல்லாதவர்களுடன் இணங்க வேண்டாம் என உலகநீதி கூறுகின்றது. கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல் பழகப்பழக இனிய நன்மை விளைவிப்பதே உண்மை நட்பாகும்

                எனவே 'பேயோடு பழகினும் பிரிவதரிதே'' என மனதில் நினைத்துப் பேய் போன்ற குணநலம் மிக்க நண்பர்களுடன் காலம் முழுவதும் பழகுதல் மூடத்தனமாகும். பன்றியோடு கூடிய கன்றும் பவ்வி தின்னும்'' அதனால், பவ்வி தின்னும் பன்றியோடு பழகுதல் பழி சேர்க்கும் என்று 'பூவோடு கூடிய நாரும் மணம் பெறும்'' எனப் பூப் போன்ற நண்பர்களைத் தேடிப் பெற வேண்டும்;. கர்ணனுக்கோர் துரியோதனன், குசேலனுக்கோர் கண்ணன், ஒளவைக்கோர் அதியமான் என நாம் அறிந்த கதாபாத்திரங்களை நினைவில் நிறுத்தி கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல், பழகப்பழக இனிய நன்மை தரும் சிறந்த நட்பைத் தேடிப் பெறுவோம். 

  ஞாயிறு, 20 மார்ச், 2011

  தவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானாள்?                                                  காலை 9 மணியைச் சுழலும் கடிகாரம் சுட்டிக்காட்டியது. இன்னும் சில நிமிடங்களில் துணிவின் முடிவு நிரூபிக்கப்படப் போகின்றது. கட்டிலின் மேலே வைக்கப்பட்டிருந்த பெட்டியினுள் மாற்றுவதற்கான இரண்டு ஆடைகளையும் அத்தியாவசியத் தேவைக்கான பொருட்களையும் வைத்த சுவேதா, தன் மனம் போல்; பெட்டியை இறுக்க மூடினாள.;. இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்த கட்டில்கள் தன் வாழ்வின் விரிசலைப் படம் போட்டுக் காட்டியது. 10 வருட காலங்கள் வாழ்ந்த அவள் பொய்யான வாழ்வுக்கு விடிவுகாண அவள் எடுத்த முடிவு சரிதானா? கண்ணாடி முன்னே நின்று தனது உருவத்தை வெறித்துப் பார்த்தாள். அவள் முகம் மன ஆழத்தை மறைத்துக் காட்டியது. போலியாக எத்தனை வருடங்கள் உள்ளத்திற்கும் உடலுக்கும் வஞ்சனை புரிந்து ஒரு பொய்யான வாழ்வில் தன்னைத் தானே ஏமாற்றியிருக்கின்றாள். சமுதாய ஓடையில் அவள் ஒரு சாக்கடை. இழந்த பொழுதுகள் நிம்மதி இழந்த பொழுதுகள். வேதனை சுமந்த உறவுகள். இப்பத்து வருட சிறைத் தண்டனை வடுச்சுமந்த அவள் நெஞ்சை வாட்டியெடுத்திருந்தது. கன்னங்களில் ஆறாக வடிந்து கொண்டிருந்த கண்ணீர், எரிந்த நெஞ்சத்திற்கு மருந்திட்டது. சிவந்த கண்கள் அவள் எடுக்கும் தீர்மானத்திற்கு எச்சரிக்கை செய்தது. பாறாங்கல்லான நெஞ்சுடன் வீதிக்கு வந்தாள் சுவேதா. அவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாகனத்தினுள் பெட்டியைப் போட்டாள். திரும்பி நின்று அந்த உயர்ந்த கட்டிடத்தை ஒரு தடவை நோக்கினாள். ஆயிரம் நினைவுச் சுமைகள் சுமந்த அந்தக் கட்டிடம் கண்ணில்பட பலமாக மாறிமாறித் தன் கன்னங்களில் என்றுமே விழுகின்ற அடிகள் அவள் மூளையில் சுள்ளிட்டன. தவறுகள் திருத்தப்படலாம்,தண்டிக்கப்படலாம். தண்டனையே வாழ்வானால் தப்புவது தானே வழி. சந்தர்ப்பம் சூழ்நிலை அவள் வாழ்வுக்கு ஏற்படுத்திய கறையும் அதிலிருந்து விடுபடுவதற்காக அவள் எடுத்த முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீரானது. 
                              மூன்று மணிக்கு வீட்டை விட்டுச் செல்லும் கணவன் திரும்பவும் வீட்டை அடைவது காலை 10 மணிக்குத் தான். அதற்கிடையில் அவசர தேவைக்காய் அவள் அடிக்கடி நாடுவது, வாகீசன் அன்பைத் தான். கடமை கடமை என்று குடும்பத்தில் சிறிதும் கவனமின்றி வருமானத்தையே வாழ்க்கையாக வாழும் கணவனிடம் காணாத ஒரு பாசத்தை வாகீசனிடம் கண்டாள், சுவேதா. இந்தத் திருமண பந்தத்தில் இத்தனை வருடங்கள் தாலியைச் சுமந்த அவளுக்கு அவன் செய்தது தான் என்ன? ஒரு ஆண் திருமணம் செய்வது, சமுதாயத்தில் கணவன் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்காக மட்டுமல்ல. தன்னை நம்பி தன் நிழலில் வாழ வந்தவளின் ஆசாபாசங்களிலும் அக்கறை காட்டுவதற்காகவும் தான். ஆனால் அவள் கணவனிடமிருந்து பெற்றது தான் என்ன? அவள் இதை அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கண்ணீரால் துயர் துடைத்த காலங்கள் பல. பெண்மையின் பலவீனம், அந்தரங்க ஆசைகள், வழிதேடித் தந்த பொழுதுகள், கணவனின் அலட்சியப் போக்கு அத்தனையும் சாதகமாக அவன் நடத்தை வாகீசன் மனச்சிரத்தைக்கு அடிமையாக்கியது. அறிவை விட ஆசைக்கே மனம், இடம் தந்தது. கட்டுப்பாட்டை விடக் கட்டாய தேவையாக வாகீசன் மன வாசம் தென்பட்டது. தும்மலையம் காதலையும் மறைக்க முடியாதல்லவா? கணவன் சந்தேகக் கண் வெளிச்சமாக்கியது, அவள் கள்ளத்தொடர்பை. வார்த்தைக் கணைகள் அவள் மனதைச் சல்லடையாக்கின.  நம்பிக்கையின் உச்சத்தில் மனைவியைத் தனிமைப்படுத்திய தவறை உணர்ந்த கணவன், தனிமையே இல்லாத பொழுதுகளைத் தந்தான். கிட்ட நின்று மனதால் எட்ட நின்றான். ஒட்டிய படுக்கைகள் பிரிக்கப்பட்டன. தன்னுடைய பெரிய தவறை உணர்ந்த சுவேதா, வாகீசன் தொடர்பைத் துண்டித்தாள். வாழ்க்கை முழுவதும் தன் கறையைக் கழுவித் துடைக்க கணவனுக்கு அடிமையானாள். வெளி உலகிற்குத் தம்பதிகளாயும், வீட்டிற்குள்ளே விரிசலான இதயங்களாயும் குடும்ப வாழ்க்கை வாழ்ந்தனர். அத்தனை பெண்களுக்கும் இருக்கக்கூடிய ஆடை, அலங்காரங்களின் ஆசைகள் அத்தனையையும் அடக்கினாள். பெண்மையைப் பூட்டி வைத்தாள். இவ்வாறு வாழ்க்கையின் 10 வருடங்கள் பாழாக மீதமுள்ள வாழ்வுக்கு விடைகாண இன்று ஏன் இந்த முடிவைத் தேடவேண்டும்?   எண்ணச் சிறையில் அடைபட்ட சில சம்பவங்கள், நிழற்படமாய்க் கண்முன்னே தோன்றி மறைய வாகனத்தினுள் ஏறி அமர்ந்தாள், சுவேதா. 
                 சாரதி இருக்கையில் அமர்ந்திருந்த வாகீசன், அவளிடம் எதுவுமே கேட்காமல் வாகனத்தை மௌனமாகச் செலுத்திக் கொண்டிருந்தான். நீண்ட மௌனத்தின் பின் '' ஏன் சுவேதா! 10 வருட மௌனத்தின் பின் ஏன் இந்த மனமாற்றம்? திடீரென உன் அழைப்பு வந்ததும், என் நின்ற இதயம் இன்று தான் தொழிற்பட்டது போலிருந்தது. எப்படி இத்தனை வருடங்கள் என்னை உதாசீனம் செய்ய முடிந்தது? என்றான். '' தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலங்களில் கட்டுப்பட்ட ஒரு பெண்தானே நானும். மனதாலும் உடலாலும் கணவனுக்குத் துரோகம் செய்ய மாட்டோம், என்று தானே தாலியைக் கழுத்தில் தாங்குகின்றோம். அதை நெஞ்சில் சுமந்து தவறை மனதால் செய்த பாவத்துக்குத் தான் இத்தனை வருடங்கள் துன்பத்தை அநுபவித்தேன். சோகங்களை எனக்குள்ளே மறைத்து வைத்திருந்தேன். என்னை நினைத்து உங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன ஆறுதல் என்னால் சொல்ல முடியும்? அதனாலேயே மௌனமாக நல்ல வாழ்வு உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று கல்லாய் அமர்ந்து அனைத்து உயிர்களையும் காத்துக் கொண்டிருக்கின்ற ஆண்டவன் காதுகளுக்கு மாத்திரம் எனது வேண்டுகோளைச் சமர்ப்பித்தேன்'. என்றாள். '' சரி எதற்காக மனச்சிறை தகர்த்து பெட்டியுடன் புறப்பட்டு விட்டாய்? என்றான். உத்தம புருஷனுக்குத் துரோகம் செய்து விட்டோமே என்று அவர் எனக்குத் தரும் தண்டனைகள் எல்லாம் ஏற்று அவர் காலடியில் கிடந்த நான், இப்போது தான் அறிந்தேன் அவர் வேறு ஒரு பெண்ணுடன் சந்தோஷமாக உடலாலும் மனதாலும் தொடர்பை வைத்திருப்பதை. எனக்குள்ளேயே அழுது அழுது எனது ஏமாற்றத்தைத் தாங்க முடியாது தன்னந்தனியளாய்த் தவித்தேன். நான் உண்மையை அறியக் அவரிடம் கேட்டபோது '' இதைக் கேட்கும் உரிமை உனக்கேது? நான் ஆண். எது வேண்டுமானாலும் செய்யலாம். நீ என் வீட்டு எச்சிலை உண்ணும் நாய். போட்டதை தின்றுவிட்டு கிட. எனக்குச் சரியென்று பட்டதைத் தான் நான் செய்வேன்'' என்று திமிராகச் சொல்லிவிட்டு, வீட்டிலே அவளுடைய படத்தை படுக்கையறையினுள் வைத்துள்ளார். அதைப் பார்க்கும் போதெல்லாம் பண்பட்ட என் உள்ளம் நிலைதடுமாறுகின்றது. பெண் என்ன கிள்ளுக்கீரையா? நோண்டிப்போடுவதற்கு. வாழ வேண்டிய வாழ்வை அன்பை விலைபேசும் ஒருவனுடன் வாழ்ந்து கெடுக்க நான் விரும்பவில்லை. என்னையே நினைத்துக் காலம் முழுவதும் காத்துக் கிடக்கும் உங்களின் நியாயமான காதலை ஏற்க என் மனது இடம் தந்தது. சம்பிரதாயம் பார்த்துமனப் பொருத்தம் பார்க்காது என் கழுத்தில் ஏறிய மாங்கல்ய பந்தத்தை உடைத்தெறிய நினைத்தேன். என்னை நீங்கள் ஏற்பீர்கள் என்ற தைரியத்தில் துணிந்தேன். வாழ்க்கை வாழ்வதற்கே அது இறப்பு வரை தான் தொடரும். அதைத் தாண்டி யாரும் வாழ்வதில்லையே. இறப்பு வரை இயல்பாக வாழ்வோமே! என்றாள். ''இதுதான் பட்டுத் தெறித்த தத்துவமோ?' என்று கூறிப் புன்னகை புரிந்த வாகீசன், அவள் கண்ணீரைத் துடைத்தபடி அவளை அணைத்தான். மனச்சுமையை இறக்கிய நிம்மதியில் அவள் உடம்பு காற்றுப்போல் இலேசாகியது.

  வியாழன், 17 மார்ச், 2011

  சதக் சதக்


  நண்டு சிப்பி வேய் கதலி 
   நாசமுறுங் காலம் கொண்ட கருவழிக்கும்
  நாவினிக்க நாமுண்ணப் பழம் நமக்களிக்கும் 
   நல்ல கதலி சதக், சதக்

  மண்ணாளும் மன்னனும் மண்ணாசை கொண்டு – பல 
   மன்னுயிர்கள் மாள வன்முறையில் வாளெடுத்தான் 
  சதக், சதக் சதக் சதக் 
   சாய்ந்தன உடல்கள் சாதனை படைத்தான்

  ஆண்டவன் தரிசனம் ஆன்மீகப் பயணம்
   வேண்டிய வரங்கள் தேடியே ஆலயப்பயணம் - அங்கே
  அரக்கர்கள் போலே சதக் சதக் 
   அடுக்கிய உடல்கள் அநாதரவாய் உறவுகள்.

  விருந்தினர் வருகை விருப்புடன் உணவு
   விருந்தோம்பல் பண்பில் விலங்குகள் வதை
  சதக்,சதக் வெட்டிய இறைச்சியில் விலங்குகள் உயிர்கள் 
   துடித்தது அறியாச் சுவையான உணவு

  தொட்டில் தொட்டுப் பாடை வரையில் 
   தொடர்ந்து வரும் ஒரு சொந்தம் - நாம் 
  வளர்ந்து வரும் காலமெல்லாம துணைவரவே – மனிதர்
   மாளச்செய்த மரங்களும் சதக்,சதக்

  சதுப்பு நிலத்தில் விழுந்த மனிதன் 
   வழுக்கி வழுக்கி சதக், சதக்
  எழுந்து நடக்கப் புதைந்த கால்கள்
   எடுத்த போதும் சதக், சதக்

  திங்கள், 14 மார்ச், 2011

  மது அருந்திய மாது


                   
  அவள் அடக்கமாகத்தான் இருந்தாள், அவனின் ஆசைக்கு அடிபணிய மறுத்தபோது. அவள் கற்புக்கரசியாகவே இருந்தாள், கணவன் கட்டளைக்குக் கட்டுப்பட மறுத்தபோது. கணவன் என்ன கடவுளா? மனைவி கொள்கையைக் கலைத்து எறிய. மனத்திறம் இல்லா மங்கை மதித்திறம் மாயமாய்ப் போம். இந்த மதிவதனி கலங்கப்பட்டாள். கணவன் கைகழுவி விட்டான். காரணம் அவள் அவளாக இல்லாத காலப்பொழுது. நண்பர்கள் கூடிக் குடித்துக் கும்மாளம் அடிக்க கூடவே கூட்டுச் சேர்த்தான் மதிவதனியை, அவள் கணவன். வயிற்றைக் குமட்டும் வாடை அவளைத் திக்குமுக்காட வைத்தது. அவள் மூக்கிற்குத் தடைபோட்டது, அவன் விரல்கள். அவன் இன்பத்திற்கும் களியாட்டத்திற்கும் அவள் கைப்பொம்மை. முதல்முதலாகத்தான் அருந்தினாள். தன்னை முழுவதுமாய் இழந்தாள். இரத்தநாளங்களில் தன் கைவண்ணத்தைக் காட்டியது அந்த மது, அதை அருந்திய மாதுக்கு. உள்ளே சென்ற போதை, உலகமே சுற்றுவது போன்ற உபாதையை ஏற்படுத்தியது. தட்டுத்தடுமாறித் தன் படுக்கையில் வந்து விழுந்தாள். கணவனோ மது போதையில் வரவேற்பறைத் தரையில் மல்லாந்து கிடந்தான். கட்டிலில் கிடந்தவன் ஸ்பரிசம் அவள் உள் உணர்வுகளுக்குத் தூபம் போட்டது. தன்னை மறந்தாள், தன் மானம் கெட்டாள், தனை இழந்தாள் நங்கை, தன் கணவன் தோழன் போதையில். கணவன் கண்கள் படம் பிடித்த காட்சியின் சாட்சியால், கணவனால் கைவிடப்பட்டாள். காரணமானவனோ கைவிரித்தான். இன்று மதிவதனி மதி இழந்த காரணத்தால் கெட்ட பட்டஞ்சுமந்த பாவையானாள்.
                     இவை அனைத்தும் ஏன்? ஐரோப்பிய வாழ்வில் அறிவுக்கு ஆயிரம் இருக்க, இந்த அசிங்கமான வாழ்க்கை முறைக்குத்தம்மை அடிமைகளாக்குவதற்கோ விமானம் ஏறி இங்கே எம்மினம் வந்தடைந்தது. பெண்தவறி விழுந்தாலோ, தள்ளி விழுத்தப்பட்டாலோ பழிபாவங்கள் அனைத்தையும் அவளே சுமக்கவேண்டியவளாகின்றாள். தொல்பழங்காலத்தில் வரன்முறையற்ற உறவு இருந்திருக்கலாம். விலங்குகளைப் பார்த்து பழகிய மாந்தரினம் அவற்றைப் போல வாழ்ந்திருக்கலாம். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக பண்பட்ட கலாச்சாரத்தில் சீர்பெற்றுச் சிறப்புப் பெற்று வாழும் இனம் தமிழ் இனம். இன்றும் ஐரோப்பியரால் போற்றிப் புகழப்படும் ஒரு கலாச்சாரம் எம்முடைய தமிழர் கலாசாரம். அதைக் கலங்கப்படுத்தவே இவ்வாறான காட்டுமிராண்டிகள் புல்லுருவிகளாய்ப் புறப்பட்டுப் புகலிடத்தில் நமது புனிதத்தைப் புதைக்கின்றார்கள்.
  பெண்ணினமே உன் மதித்திறத்தையும், மனத்திறத்தை இழக்காதே. 

  ஞாயிறு, 13 மார்ச், 2011

  தியாகி


  'இரவும் பகலும் கண்விழித்து, இமையிரண்டும் தூங்காது விழித்திருந்து, வளர்த்தவளே! என் சுகமிழந்து நோய்வாங்கி சுடராய் ஏற்றிய உன் வாழ்வு சிறப்படைய மெழுகுதிரியாய் நான் இருப்பேன்'';. இந்த வரிகள் சுமந்த வார்த்தைக்குள் வந்தமர்ந்த மெழுகுதிரியின் விளக்கம் காண மகள், தன் மூளை நரம்பின் வேகம் கூட்டினாள். உலகுக்கு ஒளி தரும் சூரியன், மின்குமிழ், மெழுகுதிரி இம்மூன்றின் பக்கமும் தன் பார்வையைச் செலுத்தினாள்.     
             எங்கு கருத்தா இல்லாத கருவி எமது கண்களுக்குப் புலப்படுகிறது. தான்தோன்றீஸ்வரரானாலும் தோன்றியதற்கும் தோன்றுவித்ததற்கும் கருத்தா எங்கோ உள்ளார் என்று தானே தேடிக் கொண்டிருக்கின்றோம். கருத்தா இல்லாது எதுவும் காட்சிப்படுவதும் இல்லை, பயன்படுத்தப்படுவதுமில்லை. நம் தேவைக்கேற்பத் தேடிப்பெறுவோம். உலகுக்கெல்லாம் ஒளிதரும் சூரியன் பூமியில் பார்வை படும் பகுதியில் மாத்திரமே தன் ஒளியைத் தந்துதவுகின்றான். சூரியன் பார்வை படாத பகுதிகள் இருளாலே மூழ்கியிருக்கும். தானாய்த் தேடி ஒளி தரவுமி;ல்லை, நாம் தேடிச் செல்லும் வேளையில் ஒளி தந்துதவுகின்றான். இங்கு வேண்டியவர்களுக்கே வேலைக்கதிர்கள் பயன்படும். இச்சூரியபகவானையும் மீறி நாளெல்லாம் தேவைப்படும் போதெல்லாம் ஒளி தந்து உதவிபுரிந்திடும் தோமஸ் அல்வாஎடிசன் கண்டுபிடிப்பு மின்குமிழும் ஒளி தேவைப்படும் போது மின்சாரம் ஏற்றப்படும் போதே ஒளி தந்துதவுகின்றது. அதை மீறி அழகழகாய்ப் பலவண்ணங்களில் வடிவங்களில் வார்க்கப்பட்டுத் தியாகி என்று பலரால் புகழ்ந்துரைக்கப்படும் மெழுகும் திரியும் இணைந்த மெழுகுதிரி உருகும் தன்மை பெற்றதனால் எழுத்தை ஆளுபவர்கள் வைத்த பெயர் தியாகி. அது தானாய் பிரகாசம் தரும் தன்மை பெற்றதல்ல. ஒட்சிசன் ஆட்சியும் நெருப்பின் உதவியும் ஒன்றாய் இணையும் போதே வேண்டியவர்களுக்கு விளக்காய் ஒளி தரும். அடுத்தவர் ஏற்றும் போதுதான் அழகாய் எரியும். ஒளி தந்து பெருமை சேர்க்கும். இல்லையேல், அழகாய் மட்டுமே இருக்கும். அதனால் அடுத்தவர் பயன் பெறச் சாத்தியமே இல்லை. 
        சூழலில் இருப்பவர் சுகம் காணத் தன் சுகம் இழக்க ஒரு தியாகி கருதினாலும்  தன் சேவை என்ற தேவையைப் பிறர் ஏற்றுக் கொள்ளத் தேவையான பல காரணிகள் தேவை அல்லவா. உருவாக்கமே உருகலாய் இருக்கும் போது அவ்உருகலில் பல உருவாக்கங்கள் பெறுவதனால் அதை உருவாக்கியவரே சிறப்பாகின்றார். அவ்வுருகலுக்கும் துணை செய்பவரும் சிறப்பாகின்றார். அதில் உருகுபவர் உருகியே தான் ஆகவேண்டும். இது படைப்பின் தத்துவம். ஏந்தி நிற்கும் கரங்களுக்கே பிச்சை போடப்படும். அடுத்தவர்க்குத் தேவை ஏற்படும் போதுதான் தியாகமும் செய்ய முடியும். கொடுப்பவர் இருப்பாரானால் எடுப்பவரும் இங்கு முக்கியம் அல்லவா.
          மெல்லொளியில் புத்துணர்வின் தூண்டலே 
          தண்ணொளியில் கெடுமணம் துலைப்பவளே
          விண்ணவர் வேண்டுதலிற் குறுதுணையே 
          காரிருளின் கார்அகற்றும் காரிகையே 
          தேய்ந்தொ ளிதந்தத னால் 
          தியாகி யாய்த்; திகழ்பவளே.
          தேடிடும் விடை காணத் 
          தேர்ந்தெ டுத்தேன்இவ் விலக்கியமே

  வியாழன், 10 மார்ச், 2011

  கல்யாணத் தேதி குறித்தாச்சு,  கல்யாணத் தேதி குறித்தாச்சு, 
  கச்சேரி மேளம் பிடித்தாச்சு 
  பத்திரிகை அடிக்க விட்டாச்சு, 
  ஊரெல்லாம் சேதி பறந்தாச்சு
  கல்யாணக் கோலம் காணக் 
  கிலுகிலுப்பு மனசுக்குள்ளே
                                                                                                                    (கல்யாணத்......)
  மலையடிவாரக் காற்றுக்கெல்லாம் 
  வரவேற்புக் கொடுக்க வேண்டும்
  நான் மடிசாய்ந்த மரநிழலில் 
  மணவறைதான் போட வேண்டும்
  சோலைக்குயில்களெல்லாம் கூட்டி வந்து 
  கச்சேரி வைக்க வேண்டும்
  ஆற்றங்கரை நாணல்களை 
  ஆடச் சொல்லிக் கேட்க வேண்டும் 
                             
                                                                                                                   ( கல்யாணத்.....)
  எங்கள் உறவுக்குத் துணை வந்த
  உல்லாச வான் நிலவு விளக்கெரிக்க
  தாரகைகள் சரவிளக்காய் 
  தனிப் பொலிவு காட்டி நிற்க
  சக்கரையில் தேன் கலந்து
  சொக்கும் உந்தன் சொல்லாலே
  நித்தமும் நான் கலந்திருக்க 
                                           
                                                                                                                    (கல்யாணத்....)

  புதன், 9 மார்ச், 2011

  காலக்கணிப்பீடும் என் கருத்தின் ஆழமும்  அவள் உடல் வனப்பென்ன. மொழிச் சிறப்பென்ன. நடை எடுப்பென்ன. பெற்றோர் செதுக்கிய நடமாடும் சிற்பம். அறிவு தேடிவந்து ஒட்டிவளரும் மூளையின் சொந்தக்காரி. நட்பின் குணம் தஞ்சம் அடைந்த தகுந்த இதயம். 21 வயது இளநங்கை. அவள் பெற்றோர் நெஞ்சிலோ தகதகப்பு. இக்காலப்பகுதி இவள் உயிருக்கு ஆபத்து. கவனமாய் இருத்தல் வேண்டும் என காலக்கணிப்பீட்டுச் சாதகர் சாற்றிய வரிகளின் சாட்டையடி. எத்தனை கோயில்கள் உண்டோ அத்தனை கோயில்களிலும் நேர்த்திக்கடன். ஆண்டவனிடமே கடனா? என் மகளைக் காப்பாற்றி தாருங்கள் (இது கடன்) பெற்ற கடனைப் பண்டமாற்றாக கற்பூரச்சட்டி, காவடி, விரதம், தூக்குக்காவடி, சங்கிலி, உடுக்கப் பட்டு, இப்படி தருகிறேன் என்று பேச்சுவார்த்தை. ஆனால், பலன் என்ன? வாகனமென்னும் காலன் வந்து உயிர்வடிவம் தூக்கிப் பறந்து போக உடல் தரையில் சாய்ந்தது. 
                இது சம்பவம். மனச்சஞ்சலம் இப்போது தேடுகின்றேன். சாத்திரம் பொய்யா? கணிப்பீடு பொய்யா? இல்லை. உண்மை என்று உரைக்கிறது சம்பவம். இப்படித்தான் நடக்கும் என்று உயிர்கள் பிறக்கும் போது ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுவிட்டால், பின் எதற்காக இறைவனுடன் பேச்சுவார்த்தை. இப்படித்தான் நடக்கும் என்பது விதியானால், விதியை மதியால் வெல்லலாம் என்பதும் ஒரு வரியானால், அந்த விதியை மதியால் வெல்லலாம் என்னும் ஒரு விதியும் இருந்திருக்க வேண்டும் அல்லவா. 
                 உயிர்ப்படைப்பின் ஆரம்பநிலை முடித்து அவற்றின் தொழிற்பாடு நடைமுறை அனைத்தும் விதியென்று விதித்துவிட்டு அனந்தசயன நிலையில் விஷ்ணு பள்ளி கொள்ளுகின்றார் என்றும் ஞானநிலையில் சிவன் கண்மூடித் தியான நிலையில் வீற்றிருக்கின்றார் என்றும் எடுத்துக் காட்டும் வரைபடங்கள், அக்காலம் அநுபவித்த மனிதர் கூற்றுக்கள்தானோ! இதனால்தான் கத்தினாலும், நேர்த்தி வைத்தாலும் ஆவது ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகின்றதோ. எப்போதோ Programm பண்ணப்பட்டுவிட்டது. நடந்தேயாகும். 
            பிரான்ஸ், சுவிட்சலாந்து எல்லையிலே பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 27 கிலோமீற்றர் நீளத்தில் ஒரு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைத்து, உயிர்கள் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் விஞ்சிய ஞானத்தால் மெய்யான ஞானத்தைத் தேடுகிறார்கள். இந்நிலையும் உயிரை ஆக்கியோன் ஒழுங்குபடுத்திய வளர்ச்சிப் படியின் ஒரு நிலையே தான். ஆய்வுகள் அனைத்தும் முடித்து அற்புதம் வெளிப்படும் நிலையில் அற்புதமாய் வாழ்ந்த உயிரினங்கள் மடியக் காரணமாய் இருந்த பிரளயம் தோன்றுமோ. பிரளயத்தின் பின் மீண்டும் உயிரினங்கள் தோன்றுமோ! அனந்தசயன நிலை என்று பலரால் உரைக்கப்படும் நிலை விழிக்குமோ! மீண்டும் மனிதன் போன்ற ஒரு உயிரினம் பிறக்குமோ! யாரறிவார்.
        நினைப்பது யாவும் நடப்பதில்லை.
         நினைக்காத எதுவோ நடக்கிறது
         தவிப்பது வாழ்வில் கிடைப்பதில்லை
         தவிக்காத எதுவோ கிடைக்கிறது
         நடப்பது எதுவோ நடக்கட்டுமென 
         இருப்பதுவும் வாழ்வில் முடிவதில்லை
         இருக்கிற தெங்கோ இட்டபடி
         நடக்கிற ததுவே விட்டபடி

  செவ்வாய், 8 மார்ச், 2011

  பாதை மாறிய பயணங்கள்      
  பாதை வகுத்த பரம்பொருள் புரியாது
  போதையில் பலப்பல பாதைகள் தேடி 
  வாதையில் வருந்தும் வாழ்க்கையும் முறையோ 
  ஈதைதான் தீர தேவைதான் இறையருள். 

  கொண்டேன் பாதை கொழுநனின் மலரடி 
  தொடர்ந்தேன் வாழ்க்கை வையத்து ஒருபுறம்
  கண்டேன் வாழ்வின் தரிக்காத ஓட்டம் 
  விண்டேன் விதியின் விளங்காத விளக்கத்தை.  

  இக்காயம் புக்க இடம் புதிது 
  அயல் புதிது அயலுரை புதிது 
  நயனம் காணும் நயவரும் புதிது
  பயணம் போகும் பாதையும் புதிது புதிது 

  நிலையா உலகின் நிலையா நினைவில் 
  நிலைக்கும் இன்பம் தேடி நாடி
  நித்தமும் தொடரும் நிலையில்லாப் பயணத்தில் 
  புக்க இடத்தில் புகழடைய புனிதப் பயணம் தொடர்வோம் 

  சனி, 5 மார்ச், 2011

  புலம்பெயர்வில் பெண்கள்

  இறக்கை விரித்த விமானம் அதில்
  சிறக்கப் பறந்தனர் தமிழ் பெண்கள்
  தாயாய் தாரமாய் சேயாய் தளமிறங்கிப்
  புகலிடத்தில் இணைப் பாதங்கள் பதித்தனர்
  காற்சட்டைக்குள் கால்கள் அடங்கின 
  கலாச்சாரக் காப்பாளர் கடிந்து கொட்டினர்.
  வாழ்வாங்கு வாழ வகுத்த நெறிகளில் - அவர்
  வாழ்நாட்டில் வாழ வசப்படவில்லை.
  நறவம் அனைய நலங்கள் அணுகாது
  மாமேரு அனைய பாரங்கள் சுமந்தனர்
  கொட்டும் பனியில் கூதல் குளிரில் 
  சொட்டும் வியர்வை சுகமே சுமந்து
  பூங்கொடி பூத்துக் குலுங்கிய பாரம் 
  தாங்கியபோதும் வருந்தாது மலர்ந்து நின்றன்ன
  கடுங்குளிர் நடுக்கத்தில் காதலன் தனக்கு
  நடுங்கு குளிர்காட்டாத் தகைசால் பூங்கொடியானார்
  இரத்த உறவுகளே ஈன்ற என்தாயே – என்
  இதயத்தை இனங்காணுங்கள் என இறைஞ்சியதில்லை
  வெத்திலை வாய்சிவத்த வேலம்மா பாட்டியும்
  அதரத்தில் அரிதாரம் அழகாய்ப் பூசி
  கதிரவன் கரந்தொடுமுன் கழிவறைத் தொழிலுக்காய்
  கதியாய் நடக்கின்றாள், கடமை கருதியதாய்.
  மலருக்குமலர் தாவும் மணவாளன் மாங்கல்யந்தாங்கி
  புலத்திற்பூத்த மடந்தையரோ மனமிழந்து மடிந்ததில்லை
  வடுக்களில்லா வாழ்வைக் கெடுக்க யார்வரினும்
  விடுத்தவர் துணையில் விடுதலை பெற்றிடுவார்
  தாயகமும் புகலிடமும் இருகண்களாய்
  கங்குலும் கதிரொளியும் கருதாது கடமையில்
  களித்திருக்கும் காரிகையரே வாழி நீவீர்
  புகலிடத்தில் புதுமைகள்பல காட்டிட வாரீர்.  செவ்வாய், 1 மார்ச், 2011

  கூட்டை விட்டு வெளியே வாருங்கள்  தம்மைச் சுற்றி ஓர் கோட்டை வரைந்து அதன் உள்ளே வாழ்ந்து கொண்டு வெளியே வர வழியின்றித் தவிக்கின்றார், சிலர். இது தான் வாழ்க்கை எனத் திட்டம் தீட்டுகிறார். வாழ்வின் விடியலைச் சுற்றியுள்ள கோட்டினுள்ளே சுற்றிச் சுற்றித் தேடுகிறார். செக்கிழுக்கும் மாடு போல் குறித்த இடத்திலேயே சுற்றி வந்து தரிக்கிறார். வலைக்குள்  அகப்பட்ட மீனால் நீந்த முடியாது. பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நாகத்தால் சீறமுடியாது. குகைக்குள் உறங்கும் சிங்கத்தால் சீற்றம் கொள்ள முடியாது. எமக்குள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் திறமையைத் தட்டி எழுப்பி வீறு நடை போடச் செய்தால், எந்தக் கூட்டையும் தாண்டி வெளிவரும் உத்வேகம் தோன்றும். மதங் கொண்ட யானையை அடக்கும் அங்குசம் போல், மனத்துள் தாழ்வு மனப்பான்மை என்னும் அங்குசம் வெற்றிப் பாதையை நோக்கி இலட்சியத்துடன் செல்லும் மனதை அடக்கும். அதை அழித்து எடுக்கும் முயற்சிகள் வெற்றி காண்பது நிச்சயம். 
                 பெண்ணடிமை உடைக்கப் பாரதி ஏடெடுக்கவில்லையானால், அடிமை விலங்கை உடைக்கப் பெண்கள் முன்வந்திருப்பார்களா? அடிமைப்படுத்தப்பட்ட பெண் தன் ஆக்ரோஷத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்த முடிந்திருக்குமா? '' உன்னையே எண்ணிப்பார் || என்று சோக்ரடீஸ் சொன்னது போல் உங்களுக்குள்ளே என்ன இருக்கின்றது எனத் தோண்டிப்பாருங்கள். உள்ளத்துள் உறங்கிக் கிடக்கும் உண்மைகளை, அநுபவங்களை, தத்துவங்களைக் கொட்டித் தீருங்கள். பெரிய வனாந்திரத்தையே கொழுத்திவிடும் தீக்குச்சி போல் எழுத்தாணி கொண்டு மடமையை நீக்குங்கள். குறுகிய மனப்பான்மையுடன் கூனிக் குறுகி நிற்காது, பரந்துபட்ட மனத்துடன் பலவற்றைச் சிந்தியுங்கள். கனி தரும் விருட்சங்களாக வியாபித்திருந்து வேலி போட்டு வாழாது, வேலியைத் திறந்து விடுங்கள். கனிகள் பலரின் பசி தீர்க்கும் உணவாகட்டும். அவர்கள் உண்ட களிப்பில் நீங்கள் இன்பங் காண்பீர்கள். உங்களை இரு கரம் கொண்டு வரவேற்கக் கணனி காத்திருக்கின்றது. அந்த இலத்திரனியல் உங்கள் இரும்பு வரிகளையும் பொன்வரியாக்கிக் காட்டும்.                                          
                                            

  அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்

  "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்   எவரும...