காலை 9 மணியைச் சுழலும் கடிகாரம் சுட்டிக்காட்டியது. இன்னும் சில நிமிடங்களில் துணிவின் முடிவு நிரூபிக்கப்படப் போகின்றது. கட்டிலின் மேலே வைக்கப்பட்டிருந்த பெட்டியினுள் மாற்றுவதற்கான இரண்டு ஆடைகளையும் அத்தியாவசியத் தேவைக்கான பொருட்களையும் வைத்த சுவேதா, தன் மனம் போல்; பெட்டியை இறுக்க மூடினாள.;. இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்த கட்டில்கள் தன் வாழ்வின் விரிசலைப் படம் போட்டுக் காட்டியது. 10 வருட காலங்கள் வாழ்ந்த அவள் பொய்யான வாழ்வுக்கு விடிவுகாண அவள் எடுத்த முடிவு சரிதானா? கண்ணாடி முன்னே நின்று தனது உருவத்தை வெறித்துப் பார்த்தாள். அவள் முகம் மன ஆழத்தை மறைத்துக் காட்டியது. போலியாக எத்தனை வருடங்கள் உள்ளத்திற்கும் உடலுக்கும் வஞ்சனை புரிந்து ஒரு பொய்யான வாழ்வில் தன்னைத் தானே ஏமாற்றியிருக்கின்றாள். சமுதாய ஓடையில் அவள் ஒரு சாக்கடை. இழந்த பொழுதுகள் நிம்மதி இழந்த பொழுதுகள். வேதனை சுமந்த உறவுகள். இப்பத்து வருட சிறைத் தண்டனை வடுச்சுமந்த அவள் நெஞ்சை வாட்டியெடுத்திருந்தது. கன்னங்களில் ஆறாக வடிந்து கொண்டிருந்த கண்ணீர், எரிந்த நெஞ்சத்திற்கு மருந்திட்டது. சிவந்த கண்கள் அவள் எடுக்கும் தீர்மானத்திற்கு எச்சரிக்கை செய்தது. பாறாங்கல்லான நெஞ்சுடன் வீதிக்கு வந்தாள் சுவேதா. அவளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாகனத்தினுள் பெட்டியைப் போட்டாள். திரும்பி நின்று அந்த உயர்ந்த கட்டிடத்தை ஒரு தடவை நோக்கினாள். ஆயிரம் நினைவுச் சுமைகள் சுமந்த அந்தக் கட்டிடம் கண்ணில்பட பலமாக மாறிமாறித் தன் கன்னங்களில் என்றுமே விழுகின்ற அடிகள் அவள் மூளையில் சுள்ளிட்டன. தவறுகள் திருத்தப்படலாம்,தண்டிக்கப்படலாம். தண்டனையே வாழ்வானால் தப்புவது தானே வழி. சந்தர்ப்பம் சூழ்நிலை அவள் வாழ்வுக்கு ஏற்படுத்திய கறையும் அதிலிருந்து விடுபடுவதற்காக அவள் எடுத்த முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீரானது.
மூன்று மணிக்கு வீட்டை விட்டுச் செல்லும் கணவன் திரும்பவும் வீட்டை அடைவது காலை 10 மணிக்குத் தான். அதற்கிடையில் அவசர தேவைக்காய் அவள் அடிக்கடி நாடுவது, வாகீசன் அன்பைத் தான். கடமை கடமை என்று குடும்பத்தில் சிறிதும் கவனமின்றி வருமானத்தையே வாழ்க்கையாக வாழும் கணவனிடம் காணாத ஒரு பாசத்தை வாகீசனிடம் கண்டாள், சுவேதா. இந்தத் திருமண பந்தத்தில் இத்தனை வருடங்கள் தாலியைச் சுமந்த அவளுக்கு அவன் செய்தது தான் என்ன? ஒரு ஆண் திருமணம் செய்வது, சமுதாயத்தில் கணவன் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்காக மட்டுமல்ல. தன்னை நம்பி தன் நிழலில் வாழ வந்தவளின் ஆசாபாசங்களிலும் அக்கறை காட்டுவதற்காகவும் தான். ஆனால் அவள் கணவனிடமிருந்து பெற்றது தான் என்ன? அவள் இதை அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கண்ணீரால் துயர் துடைத்த காலங்கள் பல. பெண்மையின் பலவீனம், அந்தரங்க ஆசைகள், வழிதேடித் தந்த பொழுதுகள், கணவனின் அலட்சியப் போக்கு அத்தனையும் சாதகமாக அவன் நடத்தை வாகீசன் மனச்சிரத்தைக்கு அடிமையாக்கியது. அறிவை விட ஆசைக்கே மனம், இடம் தந்தது. கட்டுப்பாட்டை விடக் கட்டாய தேவையாக வாகீசன் மன வாசம் தென்பட்டது. தும்மலையம் காதலையும் மறைக்க முடியாதல்லவா? கணவன் சந்தேகக் கண் வெளிச்சமாக்கியது, அவள் கள்ளத்தொடர்பை. வார்த்தைக் கணைகள் அவள் மனதைச் சல்லடையாக்கின. நம்பிக்கையின் உச்சத்தில் மனைவியைத் தனிமைப்படுத்திய தவறை உணர்ந்த கணவன், தனிமையே இல்லாத பொழுதுகளைத் தந்தான். கிட்ட நின்று மனதால் எட்ட நின்றான். ஒட்டிய படுக்கைகள் பிரிக்கப்பட்டன. தன்னுடைய பெரிய தவறை உணர்ந்த சுவேதா, வாகீசன் தொடர்பைத் துண்டித்தாள். வாழ்க்கை முழுவதும் தன் கறையைக் கழுவித் துடைக்க கணவனுக்கு அடிமையானாள். வெளி உலகிற்குத் தம்பதிகளாயும், வீட்டிற்குள்ளே விரிசலான இதயங்களாயும் குடும்ப வாழ்க்கை வாழ்ந்தனர். அத்தனை பெண்களுக்கும் இருக்கக்கூடிய ஆடை, அலங்காரங்களின் ஆசைகள் அத்தனையையும் அடக்கினாள். பெண்மையைப் பூட்டி வைத்தாள். இவ்வாறு வாழ்க்கையின் 10 வருடங்கள் பாழாக மீதமுள்ள வாழ்வுக்கு விடைகாண இன்று ஏன் இந்த முடிவைத் தேடவேண்டும்? எண்ணச் சிறையில் அடைபட்ட சில சம்பவங்கள், நிழற்படமாய்க் கண்முன்னே தோன்றி மறைய வாகனத்தினுள் ஏறி அமர்ந்தாள், சுவேதா.
சாரதி இருக்கையில் அமர்ந்திருந்த வாகீசன், அவளிடம் எதுவுமே கேட்காமல் வாகனத்தை மௌனமாகச் செலுத்திக் கொண்டிருந்தான். நீண்ட மௌனத்தின் பின் '' ஏன் சுவேதா! 10 வருட மௌனத்தின் பின் ஏன் இந்த மனமாற்றம்? திடீரென உன் அழைப்பு வந்ததும், என் நின்ற இதயம் இன்று தான் தொழிற்பட்டது போலிருந்தது. எப்படி இத்தனை வருடங்கள் என்னை உதாசீனம் செய்ய முடிந்தது? என்றான். '' தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலங்களில் கட்டுப்பட்ட ஒரு பெண்தானே நானும். மனதாலும் உடலாலும் கணவனுக்குத் துரோகம் செய்ய மாட்டோம், என்று தானே தாலியைக் கழுத்தில் தாங்குகின்றோம். அதை நெஞ்சில் சுமந்து தவறை மனதால் செய்த பாவத்துக்குத் தான் இத்தனை வருடங்கள் துன்பத்தை அநுபவித்தேன். சோகங்களை எனக்குள்ளே மறைத்து வைத்திருந்தேன். என்னை நினைத்து உங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன ஆறுதல் என்னால் சொல்ல முடியும்? அதனாலேயே மௌனமாக நல்ல வாழ்வு உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று கல்லாய் அமர்ந்து அனைத்து உயிர்களையும் காத்துக் கொண்டிருக்கின்ற ஆண்டவன் காதுகளுக்கு மாத்திரம் எனது வேண்டுகோளைச் சமர்ப்பித்தேன்'. என்றாள். '' சரி எதற்காக மனச்சிறை தகர்த்து பெட்டியுடன் புறப்பட்டு விட்டாய்? என்றான். உத்தம புருஷனுக்குத் துரோகம் செய்து விட்டோமே என்று அவர் எனக்குத் தரும் தண்டனைகள் எல்லாம் ஏற்று அவர் காலடியில் கிடந்த நான், இப்போது தான் அறிந்தேன் அவர் வேறு ஒரு பெண்ணுடன் சந்தோஷமாக உடலாலும் மனதாலும் தொடர்பை வைத்திருப்பதை. எனக்குள்ளேயே அழுது அழுது எனது ஏமாற்றத்தைத் தாங்க முடியாது தன்னந்தனியளாய்த் தவித்தேன். நான் உண்மையை அறியக் அவரிடம் கேட்டபோது '' இதைக் கேட்கும் உரிமை உனக்கேது? நான் ஆண். எது வேண்டுமானாலும் செய்யலாம். நீ என் வீட்டு எச்சிலை உண்ணும் நாய். போட்டதை தின்றுவிட்டு கிட. எனக்குச் சரியென்று பட்டதைத் தான் நான் செய்வேன்'' என்று திமிராகச் சொல்லிவிட்டு, வீட்டிலே அவளுடைய படத்தை படுக்கையறையினுள் வைத்துள்ளார். அதைப் பார்க்கும் போதெல்லாம் பண்பட்ட என் உள்ளம் நிலைதடுமாறுகின்றது. பெண் என்ன கிள்ளுக்கீரையா? நோண்டிப்போடுவதற்கு. வாழ வேண்டிய வாழ்வை அன்பை விலைபேசும் ஒருவனுடன் வாழ்ந்து கெடுக்க நான் விரும்பவில்லை. என்னையே நினைத்துக் காலம் முழுவதும் காத்துக் கிடக்கும் உங்களின் நியாயமான காதலை ஏற்க என் மனது இடம் தந்தது. சம்பிரதாயம் பார்த்துமனப் பொருத்தம் பார்க்காது என் கழுத்தில் ஏறிய மாங்கல்ய பந்தத்தை உடைத்தெறிய நினைத்தேன். என்னை நீங்கள் ஏற்பீர்கள் என்ற தைரியத்தில் துணிந்தேன். வாழ்க்கை வாழ்வதற்கே அது இறப்பு வரை தான் தொடரும். அதைத் தாண்டி யாரும் வாழ்வதில்லையே. இறப்பு வரை இயல்பாக வாழ்வோமே! என்றாள். ''இதுதான் பட்டுத் தெறித்த தத்துவமோ?' என்று கூறிப் புன்னகை புரிந்த வாகீசன், அவள் கண்ணீரைத் துடைத்தபடி அவளை அணைத்தான். மனச்சுமையை இறக்கிய நிம்மதியில் அவள் உடம்பு காற்றுப்போல் இலேசாகியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.