• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 29 மே, 2014

    ஜேர்மனியில் இடம்பெற்ற பாராட்டுவிழா...

      
           
         .

    ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு  International Zentrum - Flachsmarkt 15, 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த மண்டபத்தில் திருமதி .சந்திர கௌரி சிவபாலன், திருமதி. கெங்கா ஸ்ரான்லி மற்றும் திருமதி கீதாபரமானந்தன் ஆகியோர் மங்கல விளக்கேற்ற ஆரம்பமானது.                    
               
    நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைக் கௌரவித்துப் பாராட்டிவாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டு, நடைபெற்ற விழாவில் தாயகத்தின் விடியலுக்காகத் தம்முயிரை ஈந்த எம் உறவுகளின் ஆத்ம இளைப்பாற்றலுக்காக இருநிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தினை டோர்ட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் மாணவிகளான செல்விகள் ரஜீவா சிறிஜீவகன் சாதுஷா அருணகிரிநாதன் மற்றும் சௌமியா சிவகுமாரன் ஆகியோர் இனிமையாய் நிகழ்த்தினர்.  இதனைத்தொடர்ந்து பாராட்டு விழாவினுக்கு வருகைதந்தவர்களை வரவேற்க வந்தவர்களை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளரும் ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியருமான திரு.அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் கவிதையால் தன் வரவேற்புரையை வழங்கினார். அடுத்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது. கண்களுக்கும் மனதுக்கும் விருந்துபடைத்த வரவேற்பு நடனத்தினை ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியரான திருமதி.கலைநிதி சபேசன் அவர்களின் மாணவிகளான செல்வி கவிநிலா சபேசன்;;, செல்வி நர்த்திகா நகுலேஸ்வரன், செல்வி மதூசி நகுலேஸ்வரன் ஆகியோர் படைத்தனர். இதனைத்தொடர்ந்த கலைநிகழ்வாக வீட்சே கலைவாணி இசைப்பள்ளி மாணவர்களான  செல்வி சகானா முருகதாஸ், செல்வி ஜோபினா யோகநாதன், செல்வி சர்மிலி பால்ராஜா, செல்வி அபிராமி பரமானந்தன், செல்வன் ஜோனுசன் யோகநாதன் ஆகியோரின் இசைப்பாடல் இனிமைக்கு  இனிமை சேர்த்ததெனலாம்.

    தொடர்ந்து தலைமையுரை இடம்பெறும் என்று  அறிவிக்கப்பட்டதனையடுத்து யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் மண் கலையிலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் மிகச்சுருக்கமாக தமதுரையை நிகழ்த்தியதையடுத்து டோர்ட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் இசைவகுப்பு மாணவர்களான செல்விகள் ரஜீவா சிறிஜீவகன், சாதுஷா அருணகிரிநாதன் மற்றும் செமியா சிவகுமாhரன்,  செல்வி ஆர்த்திகா நடனபாதம் ஆகியோரின் வயலினிசைக்கு   செல்வன் ராகுல் ரவீந்திரர் மிருதங்கம் வாசித்து மெருகேற்றினார். தொடர்ந்த நிகழ்வில் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் இசைவகுப்பு மாணவனான செல்வன் ராகுல் ரவீந்திரர் வழங்கிய சுரத்தட்டு இசை இடம்பெற்றது. தமிழ்ச்சினிமாப்பாடல்களை தன் சுரத்தட்டு இசையில் வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்ததென்பதற்கு மண்டபம் அமைதியில் மூழ்கி இரசித்ததனை என்னால் காணமுடிந்தது. தொடர்ந்து இருபதுநிமிட இடைவேளை இடம்பெற்றது. பல்வகைப்பட்ட சிற்றூண்டிகள் பொதிகளில் இடப்பட்டு பார்வையாளர்களுக்கு தம் இருக்கைகளுக்கு  யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இளையோர்களால் விநியோகிக்கப்பட்ட வேளையிலும் இசைக்கதம்பம் மண்டபத்தை நிரப்பிக்கொண்டேயிருந்தது. இடைவேளையானது முப்பது நிமிடத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது விழாவின் முக்கிய நிகழ்வு ஆரம்பமாவதையறிந்து பார்வையாளர்கள் விரைந்து மண்டபத்துள் நுழைந்தனர்.


    தாயகத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களில் ஒன்றான ஜேர்மனியிலும் கலை, எழுத்து, பொதுப் பணிகளை நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஐவருக்குப் பாராட்டுவிழா ஒன்றினை நடத்துகின்ற இவ்வேளையில் இவர்களில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் சோஸ்ற் நாவலர் தமிழ்ப்பாடசாலையின் முன்னாள் பொறுப்பாளருமான திரு.க.அருந்தவராஜா  அவர்கள் தற்போது இலங்கையில் வசித்து வருகின்ற காரணத்தினால் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பதனை வெளிப்படுத்தியதோடு இவருடன் திருமதி கலைவாணி ஏகானந்தராஜா அவர்கள் திரு. க. பத்மகுணசீலன் அவர்கள், திரு புத்திசிகாமணி அவர்கள், திருமதி ஜெயா நடேசன் அவர்கள்     ஆகியோர் தமிழ், எழுத்து, கலைப்பணிகளையும், சமுகப்பணிகளையும்; தொடர்ந்து செய்வதோடு, எமது எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்ந்தும் சேவை புரிந்து வருபவர்கள். இவர்களை  தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவரும்  ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான திரு பொன் சிறிஜீவகன் அவர்கள், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளர் திரு. அம்பலவன்புவனேந்திரன் அவர்கள், மற்றும் உறுப்பினர்களுடன் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இளையோர் மற்றும் இதர உறுப்பினர் ஆகியோர் பாராட்டுப்பெறுகின்ற அந்தச் சான்றோர்களை மேடைக்கு அழைத்துவந்து அமரச்செய்தனர்

    இவர்களைப்பற்றிய சிறுகுறிப்புரையை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும் மண் கலையிலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் நிகழ்த்தியதனைத் தொடந்து பாராட்டுக்களுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்தேறின. முதலில் தமிழின தமிழ்மொழி தமிழ்ச்சமூக முன்னேற்றத்துக்கான கலை இலக்கியப்பணிகளை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கின்ற திரு. க. பத்மகுணசீலன் அவர்களைப்பற்றிய குறிப்புக்களையும் சிறப்புக்களையும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவரும்  ஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான திரு பொன் சிறிஜீவகன் அவர்கள் தெரிவித்தனையடுத்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான திரு. வைரமுத்து சிவராசா அவர்கள்  திரு. க. பத்மகுணசீலன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததையடுத்து திரு. போன.; சிறிஜீவகன் அவர்கள் சந்தனமாலையணிவித்து மரியாதைசெய்தார். தொடர்ந்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளரும் ஒபகௌசன் அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை ஆசிரியருமான திரு.அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கிப்பாராட்டி ஆசிகளைப்பெற்றார். பலத்த கரகோஷத்தின் மத்தியில் நிறைவேறிய இந்நிகழ்வினையடுத்து பாராட்டைப் பெறுபவரான திருமதி கலைவாணி ஏகானந்தரஜா அவர்களைப்பற்றிய குறிப்புரைகளை திரு. பொன். சிறிஜீவகன் அவர்கள் தெரிவித்தனையடுத்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான திருமதி இராஜேஸ்வரி அவர்கள் பொன்னாடை போர்த்த திருமதி. சந்திரகௌரி சிவபாலன்(கௌசி) அவர்கள் சந்தனமாலையணிவிக்க திருமதி. ராதா புத்திசிகாமணியவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கியதையடுத்து பாராட்டுப்பெறுகின்ற அடுத்தவரான தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாரான திரு. பொன். புத்திசிகாமணியவர்களைப் பற்றிய குறிப்புக்கள் வாசிக்கப்பட்டதனையடுத்து தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் மூலம் மரியாதைசெய்ய அழைக்கப்பட்டபோது திரு. வைரமுத்து சிவராசா அவர்கள் பொன்னாடை போர்த்த திரு. ப.பசுபதிராஜா அவர்கள் சந்தனமாலையணிவித்து மரியாதைசெய்தார்.

    தொடர்ந்து திருமதி. கெங்கா ஸ்ரான்லி அவர்கள் நினைவுக்கேடயத்தினை வழங்கினார். இந்தக் கௌரவத்தினைப்பெற திருமதி. ஜெயா நடேசன் அவர்களின் குறிப்புரைகள் வாசிக்கப்பட்டதனையடுத்து அவருக்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்  உறுப்பினர்களின் மூலம் மரியாதைசெய்ய அழைக்கப்பட்போது திருமதி கீதா பரமானந்தன் அவர்கள் பொன்னாடையினைப்போர்த்த திருமதி. கிளி சிறிஜீவகன் அவர்கள் சந்தனமாலை அணிவிக்க திருமதி. சுலோசனா புவனேந்திரன் அவர்கள் நினைவுக்N;கடயத்தினை வழங்கியபோது  மீண்டும் கரகேசம் மண்டபத்தினை அதிரவைத்தது. தொடாந்த பாராட்டைப்பெறுபவர் பெயர் வாசிக்கப்பட்டது. தமிழ் எழுத்தாளர்சங்கத்தின் முன்னாள் செயலாளரும் சோஸ்ற்நாவலர் தமிழ்ப்பாடசாலையின் முன்னாள் பொறுப்பாளருமான திரு.க.அருந்தவராஜா அவர்கள் பற்றிய குறிப்புரைகளை அடுத்து அவருக்கான மரியாதைகளை அவரின் சகோதரி திருமதி. கலா சிவகுமாரன் அவர்கள் த.எ.ச.தலைவர் திரு. சிவராஜா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். தெலைபேசி வாயிலாகத் தம்  ஆசிகளையும் தெரிவித்தவர்களின் பெயர்கள் வாசிக்கபட்டதோடு அனைவருக்கும் நன்றிதெரிக்கப்பட்டதோடு விழா இனிதே நிறைவுக்கு வந்தது.         

           மண் சஞ்சிகைக்காக ஜேர்மனியிருந்து கவிச்சுடர் அம்பலவன்.புவனேந்திரன்...   
         

    சனி, 24 மே, 2014

    கோடைக் குதூகலம்

                       



    கோடை வருகின்றது. மலர்கள் மலர்கின்றன. பூத்துக் குலுங்குகிறன. மரங்கள் நிறைந்த இலைகளுடன் பச்சைப் பசேலென்று  அழகுடனும் மகிழ்ச்சியுடனும் காற்றுக்கு ஏற்ப தெம்மாங்கு பாடித்  தலை அசைத்துத் தாண்டவமும், அழகு ஆட்டமும் போடுகின்றன. வெறுமையாய் வாடி நின்ற மரங்கள் கோடை வந்ததும் குதூகலிக்கின்றன அல்லவா. இது தான் மனித வாழ்வும். இல்லை என்னும் போது சோர்ந்து விடுவோம். இன்பம் வந்து சேர்ந்துவிட கவலை மறந்து ஆர்ப்பரிப்போம்.
            
               இன்று எங்கள் வீட்டுக்குப் பின்புறம் நிறைந்து நிற்கும் நீண்டு வளர்ந்த மரங்கள், சென்ற மாதம் இலைகளற்று கோடையை நோக்கிக் காத்து நின்றன. இன்றோ அம்மரங்களைத் தேடிப் புள்ளினங்கள் படையெடுக்கின்றன. தமக்குத் தாமே புரியும் மொழியில் அவை சல்லாபிப்பதும், காலை வேளை இனிய ராகம் இசைப்பதும் இன்பமான  உணர்வை எமக்கு ஏற்ப்படுத்துகின்றது. சில வேளைகளில் அனைவருமாய் இணைந்து குடும்பப் பிரச்சனைகளைப் பேசிக்கொண்டு இருப்பார்கள். தொடர்ச்சியான பேச்சாக இருக்கும். மனிதர்கள் தோற்றுவிடுவார்கள். அவ்வளவு இடைவிடாத பேச்சாக இருக்கும். தமக்கான காதலர்களைத் தேடி அவை பாடும் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும். இக்காலங்களில் தமக்கான இணையைத் தேடும் பறவைகள் கோடைகாலங்களில் அடை காத்துக் குஞ்சு பொரிக்கும். மாரி காலத்தில் பறவைகளுக்கு இரையூட்டும். அதற்கேற்ப தமக்கான துணையைத் தேடி இலைதுளிர் காலங்களில் இனிய கானம் இசைப்பது பறவைகளுக்கு பழக்கமாக இருக்கின்றது. மாரிகாலங்களில் புலம்பெயர்ந்த ஐரோப்பியப் பறவைகள் இக்காலங்களில் திரும்பவும் தமது நாடுகளை நோக்கி  வருகின்ற அழகை வானத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

                 என் வீட்டுப் பலகணியில் ஒரு பறவை அமர்ந்திருக்க, அதன் அருகே இன்னுமொரு பறவை பறந்து வந்து அமர்ந்தது. ஏதோ இருவரும் பேசினார். ஒருவர் அருகே மற்றவர் செல்ல அவர் சிறிது தள்ளி அமர்ந்தார். திரும்பவும் திரும்பவும் இருவரும் தள்ளித் தள்ளி அமர்ந்தார்கள். காதலியை சமாதானப்படுத்துவதற்காக  காதலன் அருகே வர விலத்தி விலத்திச் சென்ற காட்சி பார்ப்பதற்கு சிரிப்பாக இருந்தது. சிறிது நேரத்தின் பின் இருவரும் ஏதோ பேசினார். பின் ஒன்றாகப் பறந்து சென்றனர். பறவைகளின் ஊடல் கூட அழகுதான்.

                    கோடையில் பறவைகள், மரங்கள் மட்டுமா களித்திருக்கின்றன. எங்கள் நாட்டு இளையோர் கூட களிப்புடனும் அழகுடனும்தான் இருக்கின்றார்கள். இத்தனை மாதங்களும் தம்மை மூடிக் கட்டிக் கொண்டு jacket இக்குள் தம்மைப் புகுத்திக் கொண்டு வலம் வந்த இளையோர் இன்று jacket இன்றி காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. இளமையின் அழகு ஆண்கள் பெண்களிடையே இக்காலப்பகுதியில் அற்புதமாய்க் காணப்படுகின்றது.

                      பாலர் பாடசாலை ஆசிரியர்கள் எல்லாம் உசாராகி விட்டார்கள். சிறுவர்களை அழைத்துக்  கொண்டு சுற்றுலாக்குக் கிளம்பிவிட்டனர். ஆனால் சிறுவர்கள் எல்லாம் வழமைக்கு மாறாக சோர்ந்துதான் காணப்படுகின்றனர். வெயிலுக்குப் பழக்கப்படாத சிறுவர்கள் சட்டென சோர்வடைவதை இக்காலங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. இதனாலேயே இக்காலப் பகுதியில் வெயில் அதிகரித்து விட்டால் பாடசாலையை குறிப்பிட்ட நேரத்திற்கு முதலிலேயே மூடிவிடுகின்றனர். அதனாலேயே கோடை விடுமுறை அதிக நாட்களைக் கொண்டிருக்கின்றது.


               வேலைத் தளங்களில் கூட மாரிகாலங்களில் பணியில் ஈடுபடுவதை விட கோடை காலங்களில் பணி புரிவது குறைவாகவே இருக்கும். பணி புரியும் ஐரோப்பியர்கள் படும் அவதியைக் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக இருக்கும். சட்டென சோர்வடைய வைக்கும் வெயிலானாலும் கோடைகாலம் மனதுக்கு மகிழ்ச்சியைத்தான் தருகின்றது. நான்கு, ஐந்து மாதங்களே அனுபவிக்கும் இன்பம் ஆனாலும் ஐரோப்பியர்கள் தம் வீட்டுத் தோட்டங்கள், பலகணிகள் போன்றவற்றில் மலர் வனங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். நானும் இணைந்து கோடை இன்பத்தில் குதூகலிக்கின்றேன் 

    திங்கள், 19 மே, 2014

    விளக்கின் தத்துவம்


    இருளான இடங்கள்;;> பொருள்கள் எல்லாவற்றையும் ஒளியானது விளங்கச் செய்கின்றது. எனவே இருள் விலகி ஒளி விளங்க ஏற்றப்படும் விளக்கு எரியும் போது ஆன்மீக அறிவு ஒளிர எதிர்மறை மனப்பாங்கு நீங்கும் என ஆன்மீகம் கூறுகின்றது. மேல்நோக்கித் தீபம் எரிகின்ற போது எம்முடைய எண்ணங்கள் உயர்வு நிலைக்குச் செலுத்தப்படும். 

                
    அறிவால் பலருக்கு அறிவைக் கொடுக்கலாம். அறிவு எமக்குள் தோன்ற அறியாமையாகிய இருள் எம்மைவிட்டு நீங்கும். அறிவு> எண்ணம்> செயல்களுக்குச் சாட்சியாக தீபம் ஏற்றுகின்றோம். அன்பு> மனஉறுதி> சகிப்புத்தன்மை> நிதானம்> சமயோசிதபுத்தி> இந்த 5 தத்துவங்களை புரிந்து கொண்டு தானும் தன்னைச் சார்ந்த குடும்பத்தையும் விளங்கச் செய்யவேண்டும் என்பதற்காகவே திருமணமாகி புகுந்தவீட்டிற்குள் புகும் மருமகளை விளக்கேற்றும்படிச் சொல்கின்றார்கள். 
                விழாக்கள் ஆரம்பிக்கும் முன் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு நடைபெறும். நடைபெறப்போகின்ற விழா ஒளிமயமாக அமைய அத்தாட்சியாக நன்மக்களை அழைத்து விளக்கேற்றும்படி அழைப்பார்கள். இதைவிட எவ்வித ஆன்மீக காரணங்களும் விளக்கேற்றலுக்குக் காரணமாகாது. அப்படி என்றால்  விழாக்களின் வாசலில் விளக்கேற்றல் முறையாகாது. 

    வெள்ளி, 16 மே, 2014

    கடற்பறவை möve




    ஒரு வாரம்  இங்கிலாந்திலுள்ள dover என்னும் இடத்திலே விடுமுறையைக் கழிப்பதற்க்காக சென்றிருந்தோம். கடற்கரையை அண்மிய ஒரு வீட்டில் எமது ஆங்கில நண்பர்களின் வீட்டிலேயே தங்கியிருந்தோம். அக்காலப்பகுதியில் எனக்கேற்பட்ட அனுபவங்களை சில பதிவுகளில்  தரலாம் என்று எண்ணினேன். அதில் முதல் பதிவாக இப்பதிவு அமைகின்றது.



                    இரை தேடும் பறவை விரும்பியது கிடைக்கும் வரை ஓயாது. அதுபோல்தான் மனிதன் தன் தேவை நிறைவேறும் வரை தேடிக்கொண்டே இருப்பான். தேடலும் தெளிதலும் யாவர்க்கும் நலமே என்னும் என் வாசகத்துக்கேற்ப ஆழக் கடல் மேலே தன் உணவுக்காய் வட்டமிடும் gulls என்னும் பெயருடைய பறவையை என் kamera படம் பிடித்தது. அழகான வெண்மை நிறத்தில் பரந்து விரிந்து காணப்படும் இக்கடல் பறவையின் சில இனங்களின் தலைப்பகுதி மெல்லிய கருமை நிறத்தில் இருக்கின்றது. கூடுதலாக இவ் இனம் கடலோரப்பகுதிகளில் வாழுகின்றது. உப்பு நீரை குடிநீராகப் பயன்படுத்தும் இப்பறவை. தலையின் முன் பகுதியில் உப்பை சேகரித்து வைக்கும். பின் மூக்கு வழியாக வெளியகற்றும். பொதுவாக அனைத்தும் உண்ணக்கூடிய இப்பறவை மீன்களையும் இறால் வகைகளையும் உட்கொள்ளும். தலையையும் உடலின் சில பகுதிகளையும் கடலுக்குள்ளே உள்ளே விட்டு உணவுகளைத் தேடிப்பிடிக்கும். கடற்கரை ஓரத்தில் நாம் உணவு உண்ணுகின்ற போது உணவு வேண்டி அருகே வருகின்ற அழகே தனி அழகுதான். கூர்மையான வலுவான இறகுகளைக் கொண்ட இப்பறவை வலுவான காற்றிலும் எதிர்த்துப் பறக்கக் கூடியது.



               இதன் வாழ்காலம் 30 வருடங்களாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு தொடக்கம் நான்கு முட்டைகளை இடுகின்றன. மூன்று தொடக்கம்
    ஐந்து கிழமைகள் முட்டை பொரிப்பதற்கு எடுக்கின்றன. 3 தொடக்கம் 9 கிழமைகள் இறகு வளரும் காலம் வரை பெற்றோரே உணவுகளை வழங்குகின்றன. உண்மையில் சத்தமாக கத்துகின்ற பறவை இனத்தில் இதனையே நான் அவதானித்திருக்கின்றேன்.

    காற்றின் விசையை எதிர்த்துப் பறக்கும் அதன் திறமையை மெச்சி இவ் video வைப் பாருங்கள்
    https://www.youtube.com/watch?v=lyMXIOwmCL8&feature=youtu.be



    Flying Dove from AnimateIt.net

    சனி, 10 மே, 2014

    உருத்தந்த பிரம்மா



     தாயின் பெருமை உலகே உணர்ந்தாலும்
    இந்நாளில் அப்பெருமை ஓங்கி ஒலிக்கிறது

    வலி தாங்கி வாழ்வளித்த தெய்வமே 
    என் முதல் மொழி தமிழ் மொழியானால்
    என் உதட்டின் முதல் சொல் அம்மா அல்லவா
    பூவிற்கு மணம் உண்மையானால்
    என் வாழ்வுக்கு வளம்  நீங்கள் அல்லவா
    படைப்பின் கடவுள் பிரம்மாவானால்
    என்னைப் படைத்த பிரம்மா நீங்கள்
    எனைக் காக்கும் கடவுளும் நீங்களே
    பாலைவனக் குடிநீர்  நீங்கள்
    கோடைகாலக் குளிர்நீர் நீங்கள்
    மாரிகால வெப்பமூட்டி நீங்கள்
    வருவாய் காணாத் தொழிலாளி நீங்கள்
    கொட்டும் மழைக்கு ஈடாமோ நீங்கள்
    என்னில் கொட்டிய பரிவுக்கு
    விளைநிலம் கண்டு பயிர் செய்வான் உழவன் – என்
    மனம் கண்டா பாசத்தை கொட்டுகின்றீர்கள்
    உங்கள் மடியே எனக்குப் பஞ்சணை
    என் மனத்தின் கவலை நீக்கும் அரியணை
    இடியைத் தாங்கி மழை தரும் மேகம் போல்
    என் உதையைத் தாங்கி உறவு தந்த உத்தமி
    வானத்தின் எல்லை தெரிவதில்லை – உங்கள்
    பாசத்தின் அளவும் சொல்லக் கணக்கில்லை
    வெட்டிப் பொலிவானது வைரம் – உங்களை
    ஒட்டிய வாழ்வில் தரமானேன் நான்
    வகைவகை உணவுதான் உண்டாலும்
    உங்கள் வாயமுதுக்கு ஈடாமோ
    தாய்பாலை மிஞ்சிய சத்துணவு எங்குண்டு
    தாய்ப்பாசத்திற்கு மிஞ்சிய அன்பு எங்குண்டு
    தாலாட்டும் இதமான சூடும் தந்ததுங்கள் கருவறை
    காலாட்டிக் கையாட்டிக் களித்திருந்த துங்கள் கருவறை
    வாடகை இன்றி வாழ்ந்த இடமது கருவறை – என்
    வாழ்க்கையிலே எங்குமில்லை இதுபோல் தனியறை
    சூரியன் உள்ள காலம் வரை நீங்கள் வாழவேண்டும்
    சந்திரனின் ஒலி போல் தேகம் ஒளிரவேண்டும்
    பூமியின் ஈர்ப்பு சக்திபோல் எம்மிடையே ஈர்ப்பு வேண்டும்
    என் தாய்போல் யாருமில்லை என்னும் நேசம் வேண்டும்
    என் வாழ்வுவரை நீங்கள் என்கூட வர வேண்டும்
    என் வாழ்வின் வசந்தமெல்லாம் களித்திருக்க வேண்டும்



    அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்






    வியாழன், 1 மே, 2014

    திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களே!

       


    பெண்ணைப் பெற்ற பெற்றோர் அவளை ஒரு ஆணிடம் கையளிக்கும் வரை யார் பொருத்தமானவன் என்று தேடிக்கொண்டே இருப்பார்கள். அலை அடித்துக் கொண்டுதான் தான் இருக்கும். காற்று வீசிக் கொண்டுதான் இருக்கும். பெற்றோரும் வரன் தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் தனித்து ஒரு மனிதனால் இன்பமாக வாழ்ந்துவிட முடியாது. அதனால் பொருத்தம் தேடி இரு மனங்களைப் பொருத்திவிடுகின்றார்கள். ஆனால், தேடி ஆராய்ந்து, சேர்த்துவைக்கும் திருமணங்கள் சில ஆண்டுகளில் மனப்பொருத்தம் இன்றி ஒருவரை ஒருவர் குறை கூறிய வண்ணம் பிரிந்து  அகன்று விடுகின்றன.
                
                    காரணம் தான் என்ன? தேடிவைத்தல் நன்றா? அவர்கள் தேடிக்கொள்ளல் நன்றா? வாழ்க்கை என்பது ஒரே ஒருமுறைதான் . இதை ஆத்திகனும் நம்ப வேண்டும். நாத்திகனும் நம்ப வேண்டும். மறுபிறப்பு உண்டென்று நம்பும் ஆத்திகன் கூட நம்பவேண்டியது மறுபிறப்பில் அவன் சூழல் வேறு, சொந்தம் வேறு, வாழ்க்கை வேறு, ஏன் .... அவனே வேறு. முற்பிறப்பு பற்றி ஒரு அணுக் கூட அவனால் புரிந்து கொள்ளமுடிவதில்லை. புரியாது வரப்போகின்ற மறு பிறப்புக்காக புரிந்து கொள்ள வேண்டிய இப்பிறப்பில் அனுபவிக்க வேண்டிய எத்தனையோ விடயங்களை இழந்து வாழ்வோர் பலர். இவ்வாறு  இருக்கும்போது பிறந்த பிறப்பை மனிதன் புரிந்து நடந்து கொள்ள வாழ்க்கையைப் பூரணமாக வாழவேண்டும். அதில் பிரிவுகளோ இணைவுகளோ காரணத்தோடுதான் நடக்க வேண்டும்.

                       கலாச்சாரம் என்ற பெயரிலும் பிறர் எம்மைப்பற்றி என்ன நினைத்து விடுவார்கள் என்னும் தன்மான உணர்விலும், அந்தஸ்து வெறியிலும் இளைய தலைமுறைகளின் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கும் எத்தனையோ பெற்றோர்கள் எம்மிடையே இருக்கின்றார்கள். எமது பிள்ளைகளின் குடும்ப வாழ்வு என்று நினைத்து அவர்கள் சந்தோசமே எமது சந்தோசம் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கின்ற பொழுதே பொருத்தமான கணவனைப் பெண்ணுக்கும் பொருத்தமான மனைவியை ஆணுக்கும் தெரிவு செய்ய முடியும்.

                      பொதுவாகவே பொருத்தம் பார்த்து தேர்ந்து செய்கின்ற திருமணங்கள் குடும்பங்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு செய்யப்படுகின்றன. இதில் பணம் என்பதை மீறி பண்பை கவனித்தல் அவசியமாகின்றது. ஐந்து விரலும் ஒன்றாக இல்லாவிட்டாலும் ஒரு மரபணுவில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு அந்த மரபணுத் தாக்கம் இல்லாது விடாது. சகோதரர்களிடையே ஒற்றுமைப் போக்கு சிலவிடயங்களில் காணப்படும். அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு இருக்கின்ற குணமானது மற்றைய சகோதரர் சிலரிடமாவது இருக்க வேண்டும். முயற்சி இல்லாத சில சகோதரர் இருந்தால் மற்றையவரிடமும் அக்குணம் இருக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. ஒருவர் கோபக்காரனானால் மற்றையவர்களிடமும்  இக்குணம் இருப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. குடும்பப்  பழக்க வழக்கங்கள் எவ்வாறு கூட வருகின்றது என்றால் ஒன்றாக வளருகின்ற சகோதரர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து வளருகின்ற போது பழக்கவழக்கங்கள் அவ்வாறே பின்பற்றப்படுகின்றன. பேசுகின்ற தன்மை, நடவடிக்கைகள், சமூகப்பார்வை  அனைத்துமே ஒன்றாக அமைகின்றன.  தொற்று வியாதி போல் கூடவே இருந்து மூளை கற்றுக் கொள்ளும் விடையங்களாக இவை அமைகின்றன.

                            திருமணங்கள் முறிவடைந்து விடக்கூடாது. என்று அக்கறை கொள்ளும் பேற்றோர் இதனாலேயே குடும்ப நிலைமைகளைக்  கவனத்தில் கொண்டு  திருமண ஒப்பந்தங்கள் செய்கின்றார்கள். ஆனால்,  இளந்தலைமுறையினர் இதை உணர்ந்து கொள்வதில்லை. நான் குடும்பத்தை திருமணம் செய்யவில்லை. அவரைத்தான் திருமணம் செய்யப் போகின்றேன் என்று அடம் பிடிக்கின்ற இளையவர்கள் பெற்றோர் அனுபவத்தை சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். அத்துடன் பேற்றோர் பார்க்கும் பொருத்தம் சரிதானா என்னும் பரிசீலனை செய்யும் உரிமையும் ஒரு பெண்ணுக்குத் தேவை.

                       காதல் உணர்வினால் இணைந்து கொள்ளும் இளந்தலைமுறையினர் கூட தற்செயலாக வருகின்ற ஒரு ஈர்ப்புக்குத் தம்மை முழுமையாக ஈடுபடுத்த முயலுதல் கூடாது. எதிர்காலம், திருமணம், குடும்ப வாழ்க்கை, குடும்ப மகிழ்ச்சி, யதார்த்தம் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே திருமணத்தை முடிவு செய்தல் வேண்டும். முடிவு செய்த பின் முறித்துக் கொள்ள முன்வருவதை விட முதலிலேயே முயற்சி செய்து தனக்கு வரும் கணவனை புரிந்து கொண்டு திருமணம் செய்வது அவசியமாகின்றது. அதற்கு எத்தனை காலமும் பொறுத்திருக்கலாம். திருமணத்தின் முன் அவரைப் புரிந்து கொள்ள அவருடன் பழக முடியாது என்னும் பிற்ப்போக்கான எண்ணத்தைக் கைவிட்டுவிடுங்கள். நன்றாக நண்பர்களாகவே பழகிப் பாருங்கள். முடிவை எடுத்துவிட்டு முறிக்க முயலாதீர்கள். உண்மைக்கும் போலிக்கும் வேறுபாடு கண்டுகொள்ள முடியாதவரை உங்கள் எதிர்கால வாழ்வு நரகமே என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். காதலித்து விட்டேன். அவனைத் திருத்த முடியும் என்று நீங்கள் நம்பினால், அதை நடத்தி காட்டும் தைரியம் உங்களிடம் இருக்கின்றதா என்னும் நம்பிக்கையைப் பரிசீலனை செய்து பாருங்கள்.
                          
                      திருமணம் செய்துவிட்டீர்களா? குடும்ப வாழ்க்கை சிக்கலானது. பொறுப்புக்கள் நிறைந்தது. அதேபோல் இப்பிறப்பும் அழகானது. அதை சிக்கல் நிறைந்ததாக மாற்றி வாழும் காலம் முழுவதும் மகிழ்ச்சி இல்லாது, அழுது புலம்பி இப்படியே இருந்து இறந்து விடுவோம் என்றுமட்டும் எண்ண வேண்டாம்.

                       பொறுப்புக்களும் பொறுமையும் மனிதனுக்கு இருக்க வேண்டியது அவசியமே. அது கணவன் மனைவி இருவருக்கும் அவசியமானது. பிரச்சனை என்று வரும் போது பேசித்தீர்க்கும் மனநிலை இருவருக்கும் அவசியம். மனம் திறந்து இருவரும் பேசும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். குற்றம் யாரிடம் உள்ளதோ மன்னிப்புக் கேட்கும் மனநிலை அவரிடம் இருக்க வேண்டும். குற்றத்தை யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் நல்ல மனம் தேவை. எதையும் ஆற அமர இருந்து சிந்திக்கும் குணம் வேண்டும். ஆத்திரம் அறிவைக் கெடுக்கும். சிறுவிடயத்தைக் கூட ஆறுதலாக ஏற்றுக் கொள்ளாது, ஆத்திரப்பட்டு காட்டுக் கூச்சல் போடுவதும் காது கிழியக் கத்துவதும், கூட இருக்கும் குடும்பத்தினரைப் பாதிப்பதுடன் இக்குணம் அனைவரையும் பற்றிக் கொள்ளும். குடும்ப அமைதி சீரழிந்து போகும். மனநிலையில் பாதிப்பு ஏற்படும். எனவே பொறுமைசாலிகளை தேடிக்கொள்ளுங்கள்.

                       தேடல் நிறைந்த வாழ்வில் எதிர்பார்ப்புக்கள் நிறையவே இருக்கும். கணவன் தன்னைத் தாங்க வேண்டும் என்று மனைவியும், மனைவி தன்னைத் தாங்க வேண்டும் என்று கணவனும் நினைப்பது இயற்கை. அவர்கள் ஆசைக்கேற்ப சின்னச் சின்னப் பரிசில்களை அல்லது அரவணைப்பை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அன்பும் ஆதரவும் இல்லை என்றால் ஏக்கம் இருவர் மத்தியிலும் இருப்பதுடன் இடையில் சிறிய இடைவெளி வந்துவிடும். எனவே உங்களுக்காக ஏங்கும் ஒரு பொருத்தத்தைத் தேடுங்கள்.

                       முயற்சி இல்லாத ஒரு மனிதனால் தன்னையும் தன்  குடும்பத்தையும் மகிழ்ச்சியில் வைத்திருக்க முடியாது. கிடைக்கின்ற சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பொறுமையுடன் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். காலத்தைக் குறைகூறி காரியத்தைக் கைவிட்டு விடக்கூடாது. வாழ்க்கையை முன்னிலைக்குக் கொண்டுவரும்  எண்ணமே நோக்கமாக இருக்க வேண்டும். கையில் இருக்கும் பணத்தைக் கரைப்பதை விட பெருக்குவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அடுத்தவர்களை விட நானே நம்பர் 1 என்னும் எண்ணத்தை மனதில் பதிக்க வேண்டும். அவர்களே முன்னேறத் துடிப்பவர்கள். மமதையை விட்டு மனங்களைப் போற்றி வாழ்வில் முன்னேற்றம் காணும் பொருத்தத்தைத் தேடுங்கள் வாழ்வில் மகிழ்ச்சி காண்பீர்கள். 

                     பணத்தை மட்டும் குறியாகவும் பாசத்தை ஒரு சிறு பகுதியாகவும் கொள்ளும் பொருத்தமும் வாழ்க்கையில் கசப்பை ஏற்படுத்தும். உண்மைப்பாசம் மனதில் இருந்தால் மனைவி பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்கும் மனநிலை கணவனுக்கு ஏற்படும். அதனால் உண்மை அன்பைத் தேடிப்பெறுங்கள். எனது குடும்பம், எனது வாழ்க்கை, எனது குடும்பத்தின் மகிழ்ச்சி  என்று எண்ணும் பொருத்தத்தை பொறுமையாகத் தேடுங்கள்.

                    வாழ்க்கை முறியாது வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்கள் கண்கள், அறிவு ஆராய்ச்சி கொள்ளட்டும். முயன்று வெல்லுங்கள். பிறகு பார்த்துக் கொள்வோம் என்று அசட்டையாக விட்டுவிட்டீர்களேயானால்  வாழ்க்கை சூனியம். அதிலிருந்து மீளமுடியாது. பிரிந்து வாழுகின்றபோதும் மனதில் பெரிய சுமையுடனே வாழ்வீர்கள். சமுதாயத்திடையே கரை பூசப்பட்டவர்களாவே காணப்படுவீர்கள். உங்களிடம் உள்ள உண்மை, அதாவது சரியான தீர்மானம் யாருக்கும் புலப்படாது. உங்களிடமுள்ள குறைகளே பேசப்படும். நிறைகள் வீசப்படும். அதனால் பின் வரும் பழியைவிட முன் வரும் பழி மேலானது.

                    ஒருமுறையே வாழ்கின்றோம். அதை இன்பமாக வாழுங்கள்.

    திருமண முறிவுகள் எண்ணிக்கையில் அதிகரித்துப் போகும் இக்காலகட்டத்திலே எதிர்காலத் தலைமுறைக்கான இப்பதிவை படிப்பவர்கள் என்னால் தவற விடப்பட்ட விடயங்கள் இருந்தால், அதனை உங்கள் பின்னூட்டத்தில் சேர்த்திக் கொள்ளுங்கள். நன்றி 


            






    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...