கோடை வருகின்றது. மலர்கள் மலர்கின்றன. பூத்துக் குலுங்குகிறன. மரங்கள்
நிறைந்த இலைகளுடன் பச்சைப் பசேலென்று அழகுடனும் மகிழ்ச்சியுடனும் காற்றுக்கு ஏற்ப
தெம்மாங்கு பாடித் தலை அசைத்துத்
தாண்டவமும், அழகு ஆட்டமும் போடுகின்றன. வெறுமையாய் வாடி நின்ற மரங்கள் கோடை
வந்ததும் குதூகலிக்கின்றன அல்லவா. இது தான் மனித வாழ்வும். இல்லை என்னும் போது
சோர்ந்து விடுவோம். இன்பம் வந்து சேர்ந்துவிட கவலை மறந்து ஆர்ப்பரிப்போம்.
இன்று எங்கள் வீட்டுக்குப் பின்புறம் நிறைந்து
நிற்கும் நீண்டு வளர்ந்த மரங்கள், சென்ற மாதம் இலைகளற்று கோடையை நோக்கிக் காத்து
நின்றன. இன்றோ அம்மரங்களைத் தேடிப் புள்ளினங்கள் படையெடுக்கின்றன. தமக்குத் தாமே புரியும்
மொழியில் அவை சல்லாபிப்பதும், காலை வேளை இனிய ராகம் இசைப்பதும் இன்பமான உணர்வை எமக்கு ஏற்ப்படுத்துகின்றது. சில
வேளைகளில் அனைவருமாய் இணைந்து குடும்பப் பிரச்சனைகளைப் பேசிக்கொண்டு இருப்பார்கள்.
தொடர்ச்சியான பேச்சாக இருக்கும். மனிதர்கள் தோற்றுவிடுவார்கள். அவ்வளவு இடைவிடாத
பேச்சாக இருக்கும். தமக்கான காதலர்களைத் தேடி அவை பாடும் ஓசை கேட்டுக் கொண்டே
இருக்கும். இக்காலங்களில் தமக்கான இணையைத் தேடும் பறவைகள் கோடைகாலங்களில் அடை
காத்துக் குஞ்சு பொரிக்கும். மாரி காலத்தில் பறவைகளுக்கு இரையூட்டும். அதற்கேற்ப தமக்கான
துணையைத் தேடி இலைதுளிர் காலங்களில் இனிய கானம் இசைப்பது பறவைகளுக்கு பழக்கமாக
இருக்கின்றது. மாரிகாலங்களில் புலம்பெயர்ந்த ஐரோப்பியப் பறவைகள் இக்காலங்களில் திரும்பவும்
தமது நாடுகளை நோக்கி வருகின்ற அழகை
வானத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
என் வீட்டுப்
பலகணியில் ஒரு பறவை அமர்ந்திருக்க, அதன் அருகே
இன்னுமொரு பறவை பறந்து வந்து அமர்ந்தது. ஏதோ இருவரும் பேசினார். ஒருவர் அருகே
மற்றவர் செல்ல அவர் சிறிது தள்ளி அமர்ந்தார். திரும்பவும் திரும்பவும் இருவரும்
தள்ளித் தள்ளி அமர்ந்தார்கள். காதலியை சமாதானப்படுத்துவதற்காக காதலன் அருகே வர விலத்தி விலத்திச் சென்ற காட்சி
பார்ப்பதற்கு சிரிப்பாக இருந்தது. சிறிது நேரத்தின் பின் இருவரும் ஏதோ பேசினார்.
பின் ஒன்றாகப் பறந்து சென்றனர். பறவைகளின் ஊடல் கூட அழகுதான்.
கோடையில் பறவைகள், மரங்கள்
மட்டுமா களித்திருக்கின்றன. எங்கள் நாட்டு இளையோர் கூட களிப்புடனும் அழகுடனும்தான்
இருக்கின்றார்கள். இத்தனை மாதங்களும் தம்மை மூடிக் கட்டிக் கொண்டு jacket இக்குள்
தம்மைப் புகுத்திக் கொண்டு வலம் வந்த இளையோர் இன்று jacket இன்றி காட்சியளிப்பது
பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. இளமையின் அழகு ஆண்கள் பெண்களிடையே
இக்காலப்பகுதியில் அற்புதமாய்க் காணப்படுகின்றது.
பாலர் பாடசாலை ஆசிரியர்கள்
எல்லாம் உசாராகி விட்டார்கள். சிறுவர்களை அழைத்துக் கொண்டு சுற்றுலாக்குக் கிளம்பிவிட்டனர். ஆனால்
சிறுவர்கள் எல்லாம் வழமைக்கு மாறாக சோர்ந்துதான் காணப்படுகின்றனர். வெயிலுக்குப்
பழக்கப்படாத சிறுவர்கள் சட்டென சோர்வடைவதை இக்காலங்களில் காணக் கூடியதாக
இருக்கின்றது. இதனாலேயே இக்காலப் பகுதியில் வெயில் அதிகரித்து விட்டால் பாடசாலையை குறிப்பிட்ட
நேரத்திற்கு முதலிலேயே மூடிவிடுகின்றனர். அதனாலேயே கோடை விடுமுறை அதிக நாட்களைக்
கொண்டிருக்கின்றது.
வேலைத் தளங்களில் கூட மாரிகாலங்களில் பணியில் ஈடுபடுவதை விட கோடை
காலங்களில் பணி புரிவது குறைவாகவே இருக்கும். பணி புரியும் ஐரோப்பியர்கள் படும்
அவதியைக் கண்கூடாகப் பார்க்கக் கூடியதாக இருக்கும். சட்டென சோர்வடைய வைக்கும்
வெயிலானாலும் கோடைகாலம் மனதுக்கு மகிழ்ச்சியைத்தான் தருகின்றது. நான்கு, ஐந்து
மாதங்களே அனுபவிக்கும் இன்பம் ஆனாலும் ஐரோப்பியர்கள் தம் வீட்டுத் தோட்டங்கள், பலகணிகள்
போன்றவற்றில் மலர் வனங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். நானும்
இணைந்து கோடை இன்பத்தில் குதூகலிக்கின்றேன்
கோடை குதூகலிக்கட்டும்
பதிலளிநீக்குபறவைகளின் உடலை மிக அழகாக கவனித்து எழுதியிருக்கிறீர்கள். அருமை.
பதிலளிநீக்குகோடைக் கதூகலம் நிறை பதிவு
பதிலளிநீக்குநன்று..நன்று....தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.
கோடைக் கதூகலம் நிறை பதிவு
பதிலளிநீக்குநன்று..நன்று....தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.