நன்றி google
விடைபெற்ற மதனும் சிந்துவும் வீடு வந்தனர். நாட்களின் நகர்விலே காலியாய் இருந்த மேல்வீடு தற்போது லிசியின் வதிவிடமானது. சிரிக்கின்ற குழந்தையின் சித்திரங்கள் நிறைந்த வீட்டிலே அலங்காரங்கள் அமர்க்களம், இலகுவாகவாழும் வசதிகள் செலவு பாராமல் செய்யப்பட்டிருந்தன. வீடுவந்து சேர்ந்த லிசியின் வாழ்க்கையில் வசந்தம் குடிகொண்டது. நட்பின் பிடிப்பிலும் அன்புப் பராமரிப்பிலும் மகாராணியாய் வலம் வந்தாள். சுற்றுலாக்களில் மூவரும் இணைந்தே எடுக்கும் புகைப்படங்கள் இவர்கள் அன்பிற்கு அத்தாட்சியானது. லிசியின் வயிற்றைத் தடவித் தன் குழந்தையை அணைக்கும் இன்பத்தை கண்ணீர்மல்க அநுபவிப்பாள் சிந்து.
அரசாங்கம் அளிக்கும் அன்பளிப்புகள் மட்டுமல்ல, மதனின் பணப்பையும் லிசியின் செலவுக்குத் திறந்தே இருந்தது. சிந்து தனக்காக எதுவும் கொள்வனவு செய்வதை மறந்தாள். தன் வாரிசுக்கே தன் ஆசைகளை இடம்மாற்றினாள். ஏழு மாதங்கள் இடைவெளி தெரியாமல் பறந்தன. இடைவெளியில் தங்கை மகளின் பூப்புனிதநீராட்டுவிழாவிற்குச் செல்லவேண்டிய அவசியம் சிந்துவிற்கு ஏற்பட்டது. மதனும் சிந்துவும் மூன்றுநாள் இடைவெளியில் இலண்டன் பயணமாயினர்.
''லிசி என் உயிரை இங்கே விட்டுப் போவது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. எனது மகனை கவனமாகப் பார்த்துக்கொள். வெளியில் செல்லாதே. விபரீதம் எதுவும் ஏற்படாது வீட்டிலே இரு. 3 நாட்களில் நாங்கள் வந்துவிடுவோம். பிளீஸ் லிசி. எங்கள் குழந்தையை எந்தப்பிழையும் இல்லாமல் எங்களிடம் ஒப்படைத்துவிடு. அதற்குப் பிறகு உன்னை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை''
மண்டியிட்டாள் சிந்து. மனங்குழைந்தான் மதன்.
''என்ன சிந்து எனக்குத் தெரியாதா? எங்கள் ஒப்பந்தமும் அதுதானே. ஏதற்கும் பயப்படாமல் போய் வாருங்கள். நான் இந்த மூன்று நாட்களில் வெளியிலேயே போகப் போவதில்லை. ஓகே...''
தன் மகனைப் பிரிந்து செல்லும் வேதனை இருவரையும் வாட்டவே லண்டன் பயணமானார்கள். ஆனால், பாசஇழை பற்றி இழுக்கவே விரைவாய் திரும்பி வந்த இருவரும் பயணப்பைகளைப் போட்டுவிட்டு லிசி வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினர். நிசப்தம். வாசல் கதவு திறக்கவில்லை. அவளுக்காய்க் கொண்டுவந்த அன்பளிப்புப் பொருள் தரை நோக்கித் தளம் இறங்கியது. மீண்டும், மீண்டும் அழுத்தினர் நிசப்தம்...நிசப்தம். சிந்து ஓடிச்சென்று தம்மிடமுள்ள திறப்பை எடுத்துவந்து மின்னலெனக் கதவைத் திறந்தாள். வீட்டினுள் எங்குமே லிசியில்லை. இந்த இரவில் எங்கே சென்றிருப்பாள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ற போது சாப்பாட்டறை மேசையில் ஒரு கடிதம் பளீச்சிட்டது.
ஈர நெஞ்சங்களுக்கு இதயமில்லா லிசி எழுதிக்கொள்வது,
என்னால் முடியவில்லை. எங்கள் மூவரின் தொடர்பில் எனக்குள் வளரும் உயிருக்கு என்னை மட்டுமே உரிமையாளியாக்க விரும்புகின்றேன். என் கருவறை வாடகை வீடு அல்ல. உயிருக்குள் உறைந்துவிட்ட உறைவிடம். என் உணர்வுகளின் நடமாடுகின்றது. இது என்றோ உருவாகிவிட்டது. எப்படி எடுது;துரைப்பது என்று அறியாது தத்தளித்தேன். அவனை விட்டுப் பிரியும் சோகம் எனக்கு வேண்டாம். அவனோடு வாழவேண்டும், அவனோடு விளையாட வேண்டும், அவனோடு பேசவேண்டும், அவனுக்காக என்னை இழக்கவேண்டும். அவன் எனக்கு மட்டுமே, எனக்கு மட்டுமே.....
இப்படிக்கு
மன்னிக்கப்பட வேண்டிய
லிசி
இதயங்கள் சுக்குநூறாகுவது என்பதன் அர்த்தம் இன்றுதான் மதன் தம்பதியினருக்குப் புரிந்தது. அவள் விடுதலையானாள். இவர்கள் மனம் கல்லறையுள் அடக்கமானது. கையில் இருந்த கடதாசியை விட்டெறிந்தான் மதன்.
''இதுக்குத்தான் சொன்னேன். வேண்டாம். வேண்டாமென்று.... உன் ஆட்டம் இப்போது எப்படிப் போனது தெரிகிறதா? கண்ணுக்குள் வெண்ணெய் விட்டோமே. இன்று கண்ணையே தோண்டி எடுத்துவிட்டாள். இப்படி ஒரு நிலமை எமக்குத் தேவையா?''
இடிவிழுந்து அமர்ந்த சிந்துவுக்கு மதனின் வார்த்தைகள் எங்கே நுழையப்போகின்றது
தொடரும்....... எதிர்காலம். காத்திருங்கள்.