• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்
    பயண அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
    பயண அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

    திங்கள், 3 அக்டோபர், 2016

    இலங்கைப் பயணத் தொடர் 2


    யாழ்ப்பாணம்
                     
     2012 இல் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்ததை விட பாரிய மாற்றத்தை 4 வருடங்களின் பின் உணரக்கூடியதாக இருந்தது. ஒரு  நாடு முன்னேற வேண்டுமானால், முதலில் பாதைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும என்று மகாத்மா காந்தி ஒரு இடத்தில் கூறியிருக்கின்றார். அதேபோல் விரிவுபடுத்தப்பட்ட பாதை வியாபார போக்குவரத்துக்கு இலகுவாகவும் மக்களின் தொழில் பயணங்களுக்கு இலகுவாகவும் இருப்பது நாடு முன்னேற வழிசெய்கின்றது. ஆனால், வாகனச்சாரதிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் வாகன விபத்துக்களும் வருத்தங்களும் அநுபவிக்க வேண்டிய சூழ்நிலை பிரயாணிகளுக்கு ஏற்படுகின்றது. நான் பயணம் செய்த சொகுசு பஸ் என்று அழைக்கப்படும் பலூன் பஸ் இருப்பிடங்களில் மூட்டைப்பூச்சிகளை வளர்த்து இரத்தம் உறிஞ்சும் பணியையும் செய்கின்றார்களோ! என்று நினைத்தேன். வெளிநாட்டு உணவுண்ட உடல்களை நன்றாகவே அம்மூட்டைப் பூச்சிகள் பதம் பார்த்தன. என்றுமே மூட்டைப்பூச்சியைக் கண்டிராத என்னுடைய மகள் தனது உடலைப் பதம் பார்த்த மூட்டைப் பூச்சியை ஏதோ பூச்சி ஓடுகின்றது என்று பயந்து இருக்கையில் இருப்பதற்கு மறுத்துவிட்டார். சாரதியை விசாரித்தபோது அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று பொறுப்பில்லாது பதிலிறுத்தார்கள். பிரயாணம் முடிந்து வாகனத்தை நிறுத்தினால் மருந்து தெளித்து துப்பரவு செய்த பின்தான் அடுத்த பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற சிறிய வரன்முறை தெரியாமலே வாகனம் சேவையில் ஈடுபடுத்தும் நிலமையை எச்சரித்தேன். அதே பஸ் யாழ்ப்பாணம் நெருங்கிய வேளையில் ரயர் வெடித்து அத்தனை பயணிகளும் வாகனத்தை விட்டு இறங்கி பாதையில் நின்றனர். அளவுக்கு மிஞ்சிய பொதிகளை பயணிகளுடன் ஏற்றிக் கொண்டு வரும்போது இப்படியான அசம்பாவிதங்கள் நடப்பதற்கு வழி இருக்கின்றது அல்லவா! ஏதோ வாழ்வதற்கு நாட்கள் இருக்கின்றது என்னும் காரணத்தால் நாம் உயிர் தப்பினோம். வேகமாக வாகனத்தைச் செலுத்துதல், வீதி ஒழுங்குமுறை தெரியாது வாகனம் கொண்டு செல்லுதல் போன்ற காரணங்களினால் அச்சங் கொண்ட பயணமாகவே போக்குவரத்து இலற்கையில் அமைகின்றது. இவையெல்லாம் சீர்செய்ய முடியாத தவறுகள் அல்ல என்பது யாவரும் அறிந்ததே.
                                                     
                                      யாழ்ப்பாண நூலகம் ஒரு கோயில் போல் வைத்திருக்கின்றார்கள். அழகான வாயில்.



    அங்கும் 



    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் சென்று என் நூலை அன்பளிப்பாகக் கொடுத்தேன். 




    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்து கலைப்பிரிவு பீடாதிபதி பேராசிரியர் 
    N. ஞானக்குமரன் அவர்களைச் சந்தித்து என் நூலை வழங்கினேன். நன்றாக உபசரித்து என் நூலைப் பெற்றுக் கொண்டார். நல்ல மனிதர். ஆனால், என்ன செய்வது அவருக்குத் தமிழ் ஒரு சொல் கூடத் தெரியாது என்பதே வருத்தப்பட வைத்தது. பூலோகசிங்கம் புத்தகசாலையிலும் என் நூல்கள் சிலவற்றை ஒப்படைத்தேன்.

                
                           காங்கேசன் துறை (தல்சேவனா) கடற்கரை அழகான ஹொட்டல்கள் கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது. ரசிக்கும் படியான புகைப்படங்களை எனது மகளின் கைத்தொலைபேசி பிடித்துக் கொண்டது.







    யாழ்ப்பாண நகரம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் முன்னேற்றம் கண்டிருக்கின்றது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும் போது சிறிதளவேனும் அரசாங்கம் கவனம் எடுக்கவில்லையானால் வினாக்களை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும் என்னும் காரணத்தினால் போர் நடைபெற்ற பிரதேசங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்தேன். கிளிநொச்சியில் நின்று போர்க்கால அனர்த்தங்களை நினைத்துப் பார்த்தேன். தீமையிலும் நன்மை உண்டு என்று எண்ணத் தோன்றியது. 

    யாழ்மண்ணில்  தலைவாழை இலைபோட்டு உணவுண்ட மரக்கறிச் சுவையுடன் யாழ்மண்ணை விட்டு பயணமானோம்.

    வியாழன், 10 ஜூலை, 2014

    இங்கிலாந்து பயண அனுபவங்கள்

    கப்பலில் ஏறினோம் காலேசைக் (cales) கடந்தோம் 
    இல்லமாம் கப்பலினுள் இருந்தே டோவர்(Dover) நகரை அடைந்தோம் 
    வழக்கமாய்ச் செல்லும்  பயணமே ஆயினும் 
    வழமைக்கு மாறான தகவல்கள் தந்த பயணமிது 
    விருந்தை நாடவில்லை விடயங்கள் நாடிய விடுமுறைப் பயணம் 

    கப்பலினுள் ஒரு காட்சி 

                                       
     இலங்கையின் நினைவில் பிரான்ஸ் நகரம்
     மின்சார கம்பிகள் வெளியே மின்னிய  காட்சி


    இங்கிலாந்தின் மிகப் பிரபலமான இயற்கை அடையாளங்களில் ஒன்று டோவர் வெள்ளைப் பாறை. சுண்ணாம்புக் கற்களாலான வெண்மைப் பாறை அழகுமிகு தோற்றப் கொண்டு அற்புதமாய்க் காணப்படும். 7௦ தொடக்கம் 1௦௦   மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இப்பாறை பிரான்சையும் இங்கிலாந்தையும் பிரிக்கின்றது. மில்லியன் ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட மிருகங்களின் உருவங்களே படிவுகளாகி இப்பாறை வெண்மையாக உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. 


    calais க்கும் dover க்கும் இடையில் உள்ள தூரம் 22 மைல்கள். இங்கிருந்தபடியே தொலைநோக்குக் கண்ணாடியினூடாக பிரான்ஸைப பார்க்கலாம். 


    இதன் அருகாமையால் நடந்து செல்வது இன்பமாக இருக்கும் 


    பிரான்சுக்கும் dover க்கும் இடையில் மலையைக் குடைந்து புகையிரதபாதை அமைத்து இருக்கின்றார்கள். நீருக்கடியில் செல்கின்ற புகையிரத பாதை போக்குவரத்துக்கு இலகுவாக இருக்கின்றது 



    இப்பாதை அமைப்பதற்காக மலையைக் குடைந்த போது   எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கடற்கரை அமைக்கப்பட்டுள்ளது.

    Folkstone நகரத்தில் ஒரு கடற்கரை



    இரண்டாவது உலக யுத்தத்தில் தமது உயிரை மாய்த்த  வானப்படை வீரர்களின் பெயர்கள் அடங்கிய ஞாபகார்த்த நடுகல். 



    Tudor ஆட்சியின் போது  13 க்கும்  15 ம் நூற்றாண்டிற்கும்  இடைப்பட்ட காலப்பகுதியில்   கட்டப்பட்ட ஒரு வீடு. margate நகர்த்தில் அமைந்திருந்தது. இவர்கள் உயரத்தில் குறைந்தவர்கள் என்பதை அவ்வீட்டினுள் நுழைந்த போது அறியக்கூடியதாக இருந்தது.


    வெள்ளி, 16 மே, 2014

    கடற்பறவை möve




    ஒரு வாரம்  இங்கிலாந்திலுள்ள dover என்னும் இடத்திலே விடுமுறையைக் கழிப்பதற்க்காக சென்றிருந்தோம். கடற்கரையை அண்மிய ஒரு வீட்டில் எமது ஆங்கில நண்பர்களின் வீட்டிலேயே தங்கியிருந்தோம். அக்காலப்பகுதியில் எனக்கேற்பட்ட அனுபவங்களை சில பதிவுகளில்  தரலாம் என்று எண்ணினேன். அதில் முதல் பதிவாக இப்பதிவு அமைகின்றது.



                    இரை தேடும் பறவை விரும்பியது கிடைக்கும் வரை ஓயாது. அதுபோல்தான் மனிதன் தன் தேவை நிறைவேறும் வரை தேடிக்கொண்டே இருப்பான். தேடலும் தெளிதலும் யாவர்க்கும் நலமே என்னும் என் வாசகத்துக்கேற்ப ஆழக் கடல் மேலே தன் உணவுக்காய் வட்டமிடும் gulls என்னும் பெயருடைய பறவையை என் kamera படம் பிடித்தது. அழகான வெண்மை நிறத்தில் பரந்து விரிந்து காணப்படும் இக்கடல் பறவையின் சில இனங்களின் தலைப்பகுதி மெல்லிய கருமை நிறத்தில் இருக்கின்றது. கூடுதலாக இவ் இனம் கடலோரப்பகுதிகளில் வாழுகின்றது. உப்பு நீரை குடிநீராகப் பயன்படுத்தும் இப்பறவை. தலையின் முன் பகுதியில் உப்பை சேகரித்து வைக்கும். பின் மூக்கு வழியாக வெளியகற்றும். பொதுவாக அனைத்தும் உண்ணக்கூடிய இப்பறவை மீன்களையும் இறால் வகைகளையும் உட்கொள்ளும். தலையையும் உடலின் சில பகுதிகளையும் கடலுக்குள்ளே உள்ளே விட்டு உணவுகளைத் தேடிப்பிடிக்கும். கடற்கரை ஓரத்தில் நாம் உணவு உண்ணுகின்ற போது உணவு வேண்டி அருகே வருகின்ற அழகே தனி அழகுதான். கூர்மையான வலுவான இறகுகளைக் கொண்ட இப்பறவை வலுவான காற்றிலும் எதிர்த்துப் பறக்கக் கூடியது.



               இதன் வாழ்காலம் 30 வருடங்களாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு தொடக்கம் நான்கு முட்டைகளை இடுகின்றன. மூன்று தொடக்கம்
    ஐந்து கிழமைகள் முட்டை பொரிப்பதற்கு எடுக்கின்றன. 3 தொடக்கம் 9 கிழமைகள் இறகு வளரும் காலம் வரை பெற்றோரே உணவுகளை வழங்குகின்றன. உண்மையில் சத்தமாக கத்துகின்ற பறவை இனத்தில் இதனையே நான் அவதானித்திருக்கின்றேன்.

    காற்றின் விசையை எதிர்த்துப் பறக்கும் அதன் திறமையை மெச்சி இவ் video வைப் பாருங்கள்
    https://www.youtube.com/watch?v=lyMXIOwmCL8&feature=youtu.be



    Flying Dove from AnimateIt.net

    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...