• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  புதன், 30 டிசம்பர், 2020

   


  சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து நிற்க முடியுமா? கண்ணுக்குத் தெரியாது எங்கோ ஒரு மூலையில் இருந்து எம்மை அறியாமலும் அறிந்தும் பலரின் பங்களிப்புக்கள் எம்முடைய உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றன. எண்ணம் எம்முடையதாக இருந்தாலும் எம்மைத் தூக்கி நிறுத்த ஒருவர் துணைவருவார் என்பது உண்மையே. தற்போது பல நிறுவனங்கள், வியாபார ஸ்தாபனங்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் என அனைவரின் வளர்ச்சிக்குப் பின்னே பலரின் உழைப்பும் உதவியும் தியாகங்களும் அடங்கியிருக்கும். 

  கோடீஸ்வரன் பில்கேட்ஜ் உயர்வுக்கு அடிப்படையில் அவர் நண்பன் Paul allem இருந்திருக்கின்றார். விஞ்ஞானி ஸ்ரீபன் ஹார்க்கின்  ஆராய்ச்சிக்கும் ஆற்றலுக்கும் பின்னே டிக்ரான் தஹ்ரா (Dikran Tahta) என்னும் கணித ஆசிரியர் இருந்திருக்கின்றார். கற்பித்தலில் மட்டுமன்றி அவரை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு செல்வது வரை அவரின் பங்களிப்பு இருந்திருக்கின்றது. நோய்வாய்ப்பட்டு தற்கொலைக்கு முயற்சியில் இருந்த போதும் அவரைக் காப்பாற்றி  தன்னுடைய முயற்சியினால் ஹார்க்கிங் ஐ முன்னுக்கு கொண்டுவர கூடவே இருந்து காதலையும் அன்பையும் பகிர்ந்து கொண்டு ஒரு காதலியாக மனைவியாக தாதியாக கூடவே பயணித்தவர் ஜேன் ஹார்க்கிங் (Jane Hawhing) ஆவார்.  இவர்களின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாது விட்டால் வெறும் முகத்தசைகளின் அசைவை மட்டும் வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி ஸ்ரீபன் ஹார்க்கிங் ஆராய்ச்சிகள் நிகழ்த்தியிருக்க முடியுமா? வாடிக்கையாளர்களை நம்பியே உற்பத்தியாளன். அவனை ஊக்கிவிக்கும் வங்கிகள் என உயர்ச்சிக்குப் பின் பல கைகள் மறைந்திருக்கும் என்பது உண்மையே. நாம் காணும் உலகத்தை விட்டு இந்த பிரபஞ்சமும் இப்படித்தான் இயங்குகின்றது. 

  இன்று நாம் போற்றும் இரண்டு இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் என்னும் இரண்டையும் எடுத்து நோக்கினால். இவை வெளிவருவதற்கும் காரணகர்த்தாக்கள் இல்லாமல் இல்லை. கம்பர் கம்பராமாயணத்தை எழுதிவிட்டு இதனை அரங்கேற்றுவதற்கு உதவி நாடி சடையப்ப வள்ளலிடம் செல்கின்றார். அவரோ சோழ மன்னனிடம் கம்பரை அனுப்புகின்றார். மன்னனோ தன்னுடைய அரசிலே உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி திருவரங்க ஆச்சார்யார்களுக்கு திருவோலை அனுப்புகின்றான். ஆனால் அவர்களோ தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்பிதல் பெற்றுவரும்படி அனுப்புகிறார்கள். அப்போது பாம்பு தீண்டி இறந்த ஒருவனை நாகபாசத்துப் பாடல்கள் பாடி வியாசர் உயிர்ப்பித்தாராம். அதன் பின்புதான் அவருடைய காவியம் சிறப்பு என்று தீட்சிதர்கள் ஒப்பிதல் கொடுத்தார்களாம். இவ்வாறு அலைந்து திரிந்து இறுதியில் திருவரங்கம் சென்று அரங்கேற்றம் தொடங்கும் போது நஞ்சடகோபனைப் பாடினாயா? என்று ஒருவர் தடுத்தார். பின் சடகோபரந்தாதி பாடினார். அதன் பின் அரங்கேற்றம் தொடங்க பல எதிர்ப்புகள் வைணவர்களிடமிருந்தெல்லாம் தோன்றியது. இறுதியில் ஸ்ரீமன்நாத முனிகள் இரணியவதைப் படலம் ஒன்றே போதும் கம்பரின் காப்பியம் தெய்வீக காப்பியம் தான் என்பதற்கு ஐயம் இல்லை. இது காப்பியத்தில் இடம்பெறலாம் என்றாராம். ஒரு நூல் அரங்கேற எத்தனை சோதனைகளைத் தாண்ட வேண்டும் என்பது தற்காலத்திலிருப்போர்க்குப் புரியாது. ஆனால், ஒரு நூல் வெளிவர பலரின் உதவிகள் இருந்திருக்கின்றன என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. 

  இதேபோல் மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதாகவும் நிறுத்தாமல் வேகமாகப் பாடவேண்டும் என்று பிள்ளையார் நிபந்தனையிடப் பாடலைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று வியாசர் கட்டளையிட்டார். சம்மதித்த பிள்ளையார் வேதவியாசர் சொல்லச் சொல்ல எழுதிய வேகத்தில் பிள்ளையாரின் எழுத்தாணி உடைந்தது. உடனே தன்னுடைய தும்பிக்கையின் தந்தத்தை உடைத்து பிள்ளையார் எழுதினார் என வரலாறு கூறுகின்றது. இவ்வாறு மாபாரதத்தின் தோற்றத்தில் பிள்ளையாரின் பங்கு இருந்திருக்கின்றது. 

  சங்க இலக்கியங்களிலே அகத்திணைப் பாடல்களில் வெகுவாகப் பேசப்படுபவர் தோழி. காதலன் காதலியிடையே காதல் மலர்வதற்கும் இரவுக்குறி பகற்குறி என்று சந்திப்பு நிகழ்வதற்கும் தோழியின் அர்ப்பணிப்பும் ஆலோசனைகளும் மிகுந்து இருந்திருக்கின்றன. 

  “அந்தணர் பெரியோய்! அவலமின்றி இருமின்

  கோதாவரியின் குளிர்பூஞ்சாரலில் 

  அச்சம் ஊட்டிய ஞமலியை இன்று 

  கதமிகு சீயம் கடித்துக் கொன்றதே||

  இப்பாடலின் சந்தர்ப்பம் காதலர் சந்திப்புக்கு தோழியின் உதவியை அழகாக எடுத்துக் காட்டுகின்றது. கோதாவரிக் கரையிலே ஒரு பூஞ்சோலையில் காதலர் இருவரும் சந்திக்க எண்ணினர். ஆனால், அதற்கு முன்னமே அந்த இடத்தில்  ஒரு அந்தணர் உலாவிக் கொண்டிருக்கின்றார். அவரை எப்படி அந்த இடத்தில் இருந்து அனுப்பலாம் என்று எண்ணிய தோழியானவள் அந்த அந்தணர் நாய்க்கு அஞ்சுபவர் என அறிந்து வைத்திருக்கின்றாள். எனவே அவரிடம் சென்ற தோழி “நீ அஞ்சாதே அந்த நாயை ஒரு சிங்கம் கொன்று விட்டது என்கின்றாள். நாய்க்கு அஞ்சுபவர் சிங்கம் என்றால் அந்த இடத்தில் நிற்பாரா? இவ்வாறு காதலுக்கு உதவிய தோழியர் அர்ப்பணிப்புகள் பற்றி சங்கப் பாடல்கள் பல எடுத்துக்காட்டுகின்றன.

  இவ்வாறு ஒருவரின் மகிழ்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் பலரின் தியாகங்களும் ஒத்துழைப்புக்களும் உதவிகளும் நிச்சயம் அமைந்திருக்கும் என்பது உண்மையே. 
  செவ்வாய், 1 டிசம்பர், 2020

  சித்திரக்கவி


  மனதுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவன இலக்கியங்கள். எனவே மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அனைத்துக் கலைவடிவங்களையும் இலக்கியங்கள் என்று கூறலாம். சொல்லை கவிதையாக்கினால் மகிழ்ச்சி. அக்கவிதையைப் பாடலாக்கினால் மகிழ்ச்சி. அப்பாடலை நடனமாக்கினால் மகிழ்ச்சி. அப்பாடலை நடித்தால் மகிழ்ச்சி இவ்வாறு சொற்கள் பல வடிவங்களை எடுத்துக் கொள்ளுகின்றன. இவ்வாறு சொல்லே எழுத்தோவியமானால் அதுவே சித்திரக்கவி. ஓவியம் மனதுக்குள் ஒரு கதை சொல்லும். காட்சிப்படிவத்தை ஏற்படுத்தும். உலகப் புகழ் பெற்ற ஓவியர் லியானாடோர் டாவின்சியின் ஓவியம் பற்றி அறிந்திருப்பீர்கள். அவை பல மர்மங்களை எதிர்காலத் தலைமுறைக்கு சொல்லிச் சென்றதை அறிந்திருப்பீர்கள். இவருடைய லாஸ்ற் சப்பர் (டுயளவ ளரிpநச) என்னும் ஓவியம் பல மர்மங்களை மறைந்திருந்தது. அதில் ஒன்று அப்படத்தில் காணப்பட்ட ரொட்டித் துண்டுகளை இணைத்துப் பார்த்த போது அது இசைக் குறிப்புக்களைக் காட்டியது. அக்குறிப்புக்களை இசைத்துப் பார்த்த போது  பிரபஞ்சத்தின் ஓசை எழுந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு ஓவியத்திற்குள் கருத்துக்கள் அடங்கிக் காணப்படும். இலக்கியத்தில் இவர்கள் என்னும் இப்பகுதியில் இவை பற்றி நோக்குவோம.; 


  முதலில் தமிழில் காணப்படும் இலக்கிய வகையிலே ஒன்றான சித்திரக்கவியை எடுத்துநொக்கினால்,  திருமங்கையாழ்வார், அருணகிரிநாதர், இராமச்சந்திர கவிராயர், பரிதிமாற்கலைஞர் போன்றோர் சித்திரக்கவி பாடுவதில் வல்லவர்களாகக் காணப்பட்டார்கள். அட்டநாக பந்தனம், எழுத்துவர்த்தனம், மாலை மாற்று என்னும் வகைகள் இதில் இருக்கின்றன. 


  அட்டநாக பந்தனம் என்பது எட்டு நாகபாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருப்பது போன்று படம் வரைந்து கவிதை ஒன்றை எழுதி அக்கவிதை அந்தப் பிணைப்புக்குள்ளே நுழைந்து அந்தக்கவிதை பொருந்திவருமாறு ஓவியமும் கவிதையும் அமைந்திருப்பதே அட்டநாகபந்தம் என்னும் சித்திரக்கவி. இது பாம்பின் தலையில் தொடங்கி பாம்பின் வாலில் முடிக்க வேண்டும். உதாரணமாக இச்சித்திரத்திலே 


  பாரதிக் கெல்லை 

  பாருக்குள்ளே இல்லை என்னும் சித்திரக்கவி பாடப்பட்டுள்ளது

  எழுத்து வர்த்தனம் என்பது பாடலுக்குள்ளே எழுத்து வளரும். உதாரணமாக 

  மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும், மற்றொன்று 

  நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் - நிரப்பிய 

  வேறோர் எழுத்துய்க்க வீரராசேந்திரன் நாட்டு

  ஆறாம் - காவிரி

  மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும் - கா

  மற்றொன்று நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் - காவி

  வேறோர் எழுத்துய்க்க வீரராசேந்திரன் நாட்டு

  ஆறாம் - காவிரி


  மாலை மாற்று என்பது

  பின்புறம் படிக்கும் போது முன்புறம் படிப்பது போன்ற பொருள் தரும். 


  தேருவருதே மோரு வருமோ

  மோருவருமோ தேரு வருதே

  அதாவது தேர் வரும் போது நீர் மோர் வருமோ? மோர் வருகிறது. ஓ தேரும் வருகிறது.


  இவ்வாறு சித்திரக்கவி கடினமாக இருந்தாலும் கவிஞர்கள் மனதுக்குள் மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றது. இவ்விலக்கிய வகையில் எமக்குள்ளும் பலர் ஓவியக்கலையின் மூலம் இலக்கியம் சொல்பவர்களாக மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக வெற்றிமணி பத்திரிகையின் ஆசிரியர் மு.க.சிவகுமாரன் அவர்கள் ஓவியக்கலைஞர் சிற்பக் கலைஞர் என்று அறிந்திருக்கின்றோம். ஓவியம் எவ்வாறு இலக்கியம் சொல்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்படத்தை எடுத்துநோக்குவோம். 

  மேலே தரப்பட்டுள்ள படத்தைப் பார்த்தீர்களானால், அங்கு அழகான பின்னணி வர்ணத்தோடு இரண்டு உதடுகள் இருக்கின்றன. ஒரு உதடு வரைய 3 கோடுகள் வேண்டும். இரண்டு உதடுகள் இருக்கின்றன. மேலே உள்ளது ஆணுடையது. கீழேயுள்ளது பெண்ணுடையது. பெண்ணுடைய உதட்டில் மேல் வரியை எடுத்து ஆணுடைய உதட்டிற்கு மேலே மீசையாகப் போட்டிருக்கின்றார். அதாவது ஆணினுடைய கௌரவம் பெருமை என்பன அவனோடு வாழும் பெண்ணைக் குறித்தே இருக்கின்றன. பெண்ணே அவனுடைய தகுதியை உயர்வுக்குக் கொண்டு வந்து வைத்திருக்;கின்றாள். அரசனுக்கு மந்திரிபோல் மிகுந்த நுட்பமான அறிவுடன் தொழிற்பட்டு குடும்பத்தின் பெருமைக்கு காரணமாகின்றாள். அதனை எடுத்துக்காட்டுவதற்காக அந்த கௌரவமான மீசையை பெண்ணின் மேல் உதட்டில் இருந்து எடுத்திருக்கின்றார். அதேபோன்று ஆணினுடைய உதட்டு நடு வரியை எடுத்து பெண்ணினுடைய உதட்டிலே போட்டிருக்கின்றார். அதாவது நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பது போல. அதாவது பெண்ணுக்குரிய பேச்சின் சுதந்திரத்தை ஆண் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் போதுதான் அவனுக்கு அந்த மீசையே உருவாகும். இவ்வாறான உயர்ந்த தத்துவத்தை எழுத்தில் மட்டுமல்ல ஓவியத்திலும் கொண்டு வரலாம் என்பதை இக்கலைஞன் எடுத்துக்காடடியுள்ளார். 

  ஓவியம் கதை கூறும் கலையை இலக்கியமாக்கும் வல்லவர்கள் இலக்கிய காலத்தில் மட்டுமல்ல. இயந்திர உலகத்திலும் வாழுகின்றார்கள் என்பது உண்மையே. 


  சனி, 21 நவம்பர், 2020

  திருமதி வந்தது எப்படி

  ஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம் தான். இதைச் சொல்வது ஆண்களுடைய வாயாக இருந்தாலும் மனதளவில் பெண் ஆண் என்ற வேறுபாடு எம்முடைய தமிழர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை என்றே சொல்லியாக வேண்டும். ஆண்களுக்குள்ளே ஒரு அதிகார மனப்பாங்கு இருந்து கொண்டே இருக்கின்றது. இது மரபணுக்களுக்குள் இருந்து வந்தது என்று சொல்பவர்கள் உண்டு. உண்மையில் உயிர்கள் வலிமை குறைந்தவை வலிமை கூடியவை என்று படைக்கப்படுவதில்லை. வளர்க்கப்டும் முறையிலேதான் அனைத்தும் தங்கியிருக்கின்றது. 

  எமது கலாசாரத்திலே பெண் ஆணைத் திருமணம் செய்யும் போது அந்தப் பெண்ணுடைய பெயர் திருமதி என அடைமொழியிட்டு கணவனுடைய பெயருக்கு மாற்றப்படுகின்றது. இவ்வாறு பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன?  என்று நோக்கினால், அதுகூட தன்னுடைய சொத்து என வாங்கிய பொருளாகவே பெண் பாவிக்கப்பட்டிருக்கின்றாள். இது பற்றி ஆராயப் புகும்போது விடைகாண ஒரு கருவின் வளர்ச்சி பற்றி சற்றுச் சிந்திப்போம்.

  தாயின் கருப்பை நோக்கி நீந்திச் செல்லுகின்ற விந்தணுக்களில் ஒரேயொரு விந்தணு மட்டும் பெண்ணின் முட்டைக் கருவுடன் இணைகின்றது அப்போது ஆண் விந்துக் கலங்களின் தலைப்பகுதி சினைமுட்டையுடன் சவ்வுப் பகுதியை உடைத்துக் கொண்டு உட்செல்லுகிறது. விந்தின் வால் பகுதி வெளியே துண்டிக்கப்பட தலைப்பகுதி உள்ளே செல்ல முட்டையின் தோல்பகுதி இறுக்கமடைந்து மூடிக் கொள்ளும் வேறு எந்த விந்தணுவும் உட்செல்லாதவாறு சவ்வு இறுக்கமடைந்து  மூடிக்கொண்டு கருவைப் பாதுகாக்கும். பெண்ணின் முட்டையிலுள்ள xx என்னும் குரொமோசோம் இருக்கின்றது. ஆணின் விந்தணுவில் xy என்னும் குரோமோசோம் இருக்கின்றது. இப்போது பெண்ணின் ஒரு x ம் ஆணின் x அல்லது y இணையும் போது பிறக்கும் குழந்தை பெண்ணா ஆணா எனத் தீர்மானிக்கப்படுகின்றது. ஆணிடமிருந்து y   சேர்ந்தால் xy என்னும் குரொமோசோம் அமைப்புள்ள ஆண்பாலும்   x சோர்ந்தால்  xx என்னும் குரொமோசோம் உள்ள பெண்ணாகவும் குழந்தை உருவமெடுக்கின்றது. இந்த குரொமோசோமுக்குள் பரம்பரை மரபணுக்கள் ஒளிந்திருக்கும் என்பது உண்மை. DNA இல் (Deoxyribonucleic Acid) மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதிகள் மரபணு((Gene)எனப்படுகின்றன. உயிர் வளர்ச்சிக்குரிய மரபுக் கட்டளைகள் DNA இல் தங்கியிருக்கின்றன. நாம் வளர்வது எமது அங்கங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது எல்லாம் மரபணுக்களின் தாக்கத்தினாலேயே அமைகின்றன. ஒரு குழந்தையை உருவாக்குவதில் ஆணுக்கு ஒரு பங்கு இருந்தாலும் அந்தக் குழந்தையை தங்க வைத்துப் பராமரித்து உலகத்திற்குக் கொண்டுவரக் கூடிய தொழிற்சாலை பெண்ணிடம் மட்டுமே இருக்கின்றது. 

  கருக்கட்டல் நிகழ்ந்து 2 கிழமைகளின் பின் பனிக்குடப்பை உருவாகும். இது நீரினால் நிரப்பப்படும் இந்நீர் கொழுப்பு, புரதம், காபோவைதரேற்றுப் போன்ற அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொண்டிருக்கும். விந்தணுவும் முட்டைக்கருவும் இணைந்து ஒரு கலமாகி பின் 12 மணித்தியாலங்களில் இரண்டாகப் பிரிந்து பின் 12 மணித்;தியாலங்களில் நான்காகப் பிரிந்து 6 நாள்களின் பின் சிறிய உருண்டையாக உருமாறும். இப்போது பலோப்பியன் குழாயிலிருந்து கருப்பை நோக்கி கரு நகர்ந்து செல்கிறது. 7 நாள்களில் தன்னை நோக்கி வந்த கருவை கருப்பையானது ஓரிடத்தில் தங்க வைக்கின்றது. 6 முதல் 12 வாரங்களில் அங்கிருந்து அழகான குழந்தையாக வளர்த்தெடுக்கின்றது. 

  22 ஆவது நாள் இதயத்துடிப்பு ஆரம்பித்தாலும் இதயம் 56 ஆம் நாளுக்குப் பின்பே முழுவடிவமுமாக வளருகின்றது. 

  16 வாரத்தில் சிறுநீரகம் செயற்படத் தொடங்கும். 

  ஆணுமன்றி பெண்ணுமன்றி ஒன்றாக இருக்கும் கருவில் யனெசழபநளெ  என்னும் ஹோமோன் உற்பத்தி செய்யத் தொடங்கும் போது ஆணாக 4 ஆவது மாதத்தில் தன்னுடைய உறுப்புக்களை வளர்க்கத் தொடங்குகின்றது. 

  33 ஆம் நாள் காது வளர ஆரம்பித்து 6 ஆவது மாதத்தில் குழந்தை கேட்கும் சக்தியைப் பெறுகின்றது. 

  31 ஆம் நாள் கண்கள் 40 ஆம் நாள் இமைகள், 7 ஆவது மாதம் பார்க்கும் சக்தி பெறல் 70 ஆவது நாளில் அனைத்து உறுப்புக்களும் உருவாகத் தொடங்குகின்றன. ‘embryo’ஆக இருந்த கரு ‘fetus’ஆக மாறுகின்றது.

  நரம்பு மண்டலங்கள் 5 ஆவது மாதம். குழந்தை 9 அங்குல நீளம் 

  6 ஆவது மாதம் கண் இமைகளில் மயிர்கள் தோன்றுகின்றன. 

  இவ்வாறு குழந்தை கருவறையில் வளர்ச்சியடைகின்றது. ஆகவே குழந்தை கருப்பையில் வளருகின்ற போதே மரபணுக்களைத் தாங்கியே வளர்கின்றது என்பது உண்மையே. அதில் பரம்பரை அணுகுமுறையில் ஆணின் ஆதிக்கம் உள்நுழைக்கப்பட்டிருக்கின்றது. 

  பிள்ளையை வளர்த்தெடுக்கும் போதே ஆண் வெளியில் சென்று வேலை செய்பவன். அவனுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும். களைத்து வருவான் அவனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அவன் எங்கள் ராசா என்று சொல்லிச் சொல்லி அவர்களை ராசாவாகவே மாற்றி விடுகின்றார்கள். அவர்களுக்கும் மனதுக்குள் ஆதிக்க உணர்வு ஊறிவிடுகின்றது. இவ்வாறு மெல்ல மெல்ல மனித வளர்ச்சியில் போதிக்;கப்பட்ட உணர்வுகளே ஊறியிருக்கின்றன

  ஒரு ஆணாக குழந்தையை வளர்த்தெடுக்கும் போது சூழ்நிலை பெற்றோர் பண்புகள் அனைத்துமே அக்குழந்தைகளில் ஆட்சி செலுத்துகின்றன. ஆரம்பத்தில் தாய்வழி சமுதாயத்திலிருந்து மெல்ல மெல்ல தந்தை வழி சமுதாயமாக மாற்றப்பட்ட நிலைமையே ஆண்களுக்கு மேலாதிக்க எண்ணம் தோன்றிய தன்மை என்றே கூற வேண்டும்.  எப்படித்தான் பெண் சுதந்திரம் பேசினாலும் அவர்களுக்குள்ளேயே மனதுக்குள்ளே தன்னைவிட தன் மனைவி உயர்ந்து விடுவாளோ என்ற பயம் அவர்களிடம் இருக்கும். இதனாலேயே சத்தமாகப் பேசுவதும், நாகரீகம் அற்ற முறையில் நடப்பதும், அடித்துத் துன்புறுத்துவதும் நடைபெறுகின்றது. சத்தமாகப் பேசுகின்ற போது தம்முடைய இயலாமையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் நடந்து கொள்ளுகின்றார்கள். 

  இயற்கையிலேயே ஆண் வலிமையானாவன் பெண் மென்மையானவள் என்று புகழ்வது போல் சொல்லிச் சொல்லியே பெண்ணை அடிமைகளாக்கி விட்டார்கள். மாதவிடாய்க் காலங்களில் இயல்பாகவே உடலிலும் உள்ளத்திலும் பெண்களுக்கு மாற்றம் ஏற்படுவது இயல்;பே. ஆனால் அதனால் பெண் வலிமை குறைந்தவள் என்று கூறிவிட முடியாது. இந்த மாதவிடாய் ஆணுக்கு ஏற்பட்டால் அவர்கள் கூட இந்த இயல்புடையவர்களாகவே காணப்படுவார்கள். மனிதன் தாங்கும் வலி 42 அலகுகளாக இருக்க பிரசவ வலியானது 52 அலகுகளாக இருக்கின்றது. இது 20 எலும்புகள் ஒன்றாக உடைவதுபோன்ற வலியுடையது. இவ்வாறு வலி பொறுத்து குழந்தையைப் பிரசவித்துவிட்டு மீண்டும் அடுத்த குழந்தைக்குத் தயாராகும் மனத் தைரியம் பெண்ணுக்கு உண்டு. ஆனால், ஆண்களோ ஒரு தடிமல் வந்தால் போதும் இறக்கும் நிலைமையில் இருப்பது போல் வீட்டையே இரண்டாக்கிப் போடுவார்கள். ஒரு தடிமலையே தாங்க முடியாதவர்கள் வலிமையுடையவர்காகத் தம்மை பிரகடனப்படுத்துவார்கள். வலிமையற்றவள் வலிமையற்றவள் என்று சொல்லிச் சொல்லியே பெண்ணைத் தமக்கு அடிமைகயாக ஆண்கள் வைத்திருக்கின்றார்கள். மனம் என்பது ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுகின்ற போது அதுவாகவே ஆகிவிடும் தன்மையுள்ளது. ஏனென்றால் மூளையிலுள்ள பதிவுகளே உடலை வழிநடத்துகின்றது. ஒருவனை நோயாளி நோயாளி என்று சொல்லிக் கொண்டு வாருங்கள் அவன் நோயாளியாகிவிடுவான் என்னுடைய யூரியூபில் கீழேயுள்ள லிங்கை அழுத்திப் பாருங்கள் ஒரு பிள்ளையைத் தாய் நோயாளியாக்கி சக்கரநாற்காலியில் அமர வைத்த கதையை அறிந்து கொள்வீர்கள். எனவே வலிமை என்பது இருபாலாருக்கும் உண்டு.

  அமெசன் காட்டிலுள்ள பெண்களைப் பாருங்கள் ஒரு ஆணுக்குச் சமமான வேலைகள் அத்தனையும் செய்வார்கள், மிருகங்களை வேட்டையாடுவது மரங்களைத் தறிப்பது என்று நாமெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத  பலவிதமான வேலைகளைச் செய்வார்கள் யுரியூப் போய்ப் பார்த்தீர்கள் என்றால் அறிவீர்கள்.  


  மனைவியின் கைப்பக்குவம் போல் வராது. நல்ல சுவையாக அவளாலேதான் சமைக்க முடியும். அவள் உணவைத் தட்டில் போட்டுத் தந்தாலேயே என்னால் சாப்பிட்ட உணர்வு வரும் என்று புகழ்ந்து சொல்லிச் சொல்லியே அவளை சமைக்கும் யந்திரமாக ஆக்கிவிட்டார்கள். ஆண் பெண்ணைப் புகழுகின்ற போது அதன் உள்ளார்ந்த தன்மையை பாருங்கள் அங்கு ஒரு வஞ்சப் புகழ்ச்சி அடங்கியிருக்கும். இவ்வாறுதான் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் போது அவளை வைத்துப் பராமரிக்க சீதனம் என்ற பெயரில் பணத்தையும் கொடுத்துப் பெயரையும் திருமதி என்று மாற்றிக்  கொடுத்துவிட்டார்கள். ஏனென்றால் இடைப்பட்ட காலத்தில் பெண்ணுரிமை பறிக்கப்பட்டது. பெண் கல்வி முடக்கப்பட்டது. கையிலே அகப்பை திணிக்கப்பட்டது. அப்போது ஆணாதிக்கம் வளர்க்கப்பட்டு பெண் திருமதியானால், ஆனால், இப்போது பெண் தன்னுடைய பெயரை எப்படி வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்னும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுவோம். 
   

  திங்கள், 26 அக்டோபர், 2020

  சக்தி அமர்ந்திருக்கும் வடிவங்களின் அறிவியல்விளக்கம்

     சிவனுக்கு 1 இராத்திரி சிவராத்திரி என்பது போல் சக்திக்கு 9 இராத்திரிகள் நவராத்திரி என்று நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இவ்வாண்டு 2020 இல் ஐப்பசி மாதம் 17 ஆம் திகதியில் இருந்து 26 ஆம் திகதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. அம்மன் முதல் 3 நாட்களும் வீரத்தைக் கொடுக்கின்ற துர்க்கை அம்மன் உருவத்திலும் அடுத்து வரும் 3 நாட்கள் செல்வத்தைக் கொடுக்கின்ற இலக்குமி உருவத்திலும் இறுதி 3 நாட்கள் கல்வியைக் கொடுக்கின்ற சரஸ்வதி உருவத்திலும் காட்சியளித்து பக்தர்களுக்கு பலனளிப்பாள் என்பது காலம் காலமாக நாம் அறிந்து வரக்கூடியதாக இருக்கின்றது. மனிதனுக்கு அவசியமான கல்வி,செல்வம்,வீரம் பற்றியும், சக்தியின் 3 வடிவங்கள் பற்றிய குறியீட்டு விளக்கங்கள் பற்றியதே இப்பதிவின் முக்கிய நோக்கம். 


  ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு முக்கியமான 3 விடயங்கள் இருக்கின்றன. அவைதான் கல்வி, செல்வம், வீரம் என்பவை. இவை மூன்றும் முறையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை மகிழ்ச்சிதான். அப்படியானால் உடல்நலம் இல்லையா என்று கேட்டுவிடாதீர்கள் ஏனென்றால் அறிவுள்ள ஒருவரால் உடல்நலத்தைச் சரியான முறையில் பராமரிக்க முடியும். அதில் முதலாவது அறிவு. அந்த அறிவை வளர்த்துக் கொள்ளவே நாம் கல்வி கற்கின்றோம். இந்த அறிவு பல தேடல்களின் மூலமே எமக்குக் கிடைக்கின்றது. தேடிப்பெற்ற அறிவின் மூலமே நாம் செல்வத்தைத் தேடிக் கொள்ளுகின்றோம். இந்த செல்வத்தையும் அறிவையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்ற போது சக்தி எமக்குத் தேவைப்படுகின்றது. இந்த சக்தி எனப்படும் வீரம் கல்வியையும் செல்வத்தையும் எம்மிடம் அழியவிடாது பாதுகாக்கும். 


  அறிவு என்பது படிப்பதனால் மட்டும் வருவதில்லை. அனுபவத்தினாலும் இந்த அறிவு வரும். அந்த அறிவைப் பெற்ற மனிதன் தன்னுடைய சாதுரியத்தால் பணம் புகழ் போன்றவற்றைச் சம்பாதிக்கின்றான். அறிவுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். வீரம் என்றால் துப்பாக்கி, வாள் எடுத்துப் போரிடுவது மட்டும் வீரம் அல்ல. ஒரு சபையிலே தைரியமாகத் தன் கருத்தைச் சொல்வதும் வீரமே. 


  பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் 

  மெய் போலும்மே மெய் போலும்மே 

  மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையினால்

  பொய் போலும்மே பொய் போலும்மே 


  என்று வெற்றிவேற்கையில் அதிவீரராம பாண்டியன் கூறியிருக்கின்றார். தைரியமாக ஒரு சபையிலே தன் கருத்தை ஒருவன் சொல்லாமல் விட்டால் அவன் கூறுவது பொய்யாகவே போய்விடும். ஆனால், தைரியம் உள்ளவன்தன் பொய்யான கருத்தை சொல்வன்மையினால், சொல்லி உண்மையானவனாகிவிடுவான். அதனால், கற்றிருந்தால் மட்டுமே போதாது. அதை வெளிப்படுத்தும் தைரியமும் வேண்டும் அதனாலேயே வீரம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றது.


  சக்தியின் குறியீட்டு விளக்கங்களைப் பார்ப்போம். கல்வியைத் தருகின்ற சரஸ்வதி தாமரையில் வீற்றிருக்கின்றாள். ஒரு பூவில் ஒருவர் அப்பூ வாடாமல்,கசங்காமல் அமர்ந்திருப்பது முடியாத விடயம். இது ஒன்றும் மெஜிக் அல்ல. கடவுள் இருக்கலாம் என்றும் கூறமுடியாது. அப்படியானால், குறியீடாக சரஸ்வதி வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கின்றார் என்னும் விளக்கத்தையே நாம் பார்ப்போம்.  நீரளவேயாகுமாம் நீராம்பல் என்றார் ஒளவை. நீரின் மட்டத்திற்கு மேலேயே தாமரை மலர் இருக்கும். அதேபோல் கற்றவர்கள் என்றுமே எங்குமே தாழ்ந்து போவதில்லை. இதை உணர்த்தவே வெண்தாமரை கீறப்பட்டுள்ளது. உண்மையில் துறையுறக் கற்றவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சிறுகறை பட்டாலும் அவர்களைக் காட்டிக்கொடுத்துவிடும். தன்னைத்தான் காதலனாயிற் எனைத் தொன்றும் துன்னற்க தீவினைபால் என்றார் திருவள்ளுவர். கல்வி கற்றுத் தீங்கு வராமல் தன்னைப் பாதுகாப்பவன் தன் அறிவைக் கொண்டு வேறு யாருக்கும் தீங்கு வராமல் பார்த்துக் கொள்வான். அதனாலேயே வெண்தாமரையின் மேல் சரஸ்வதி வீற்றிருக்கின்றாள். 


  செந்தாமரையில் இலட்சுமி வீற்றிருப்பது ஏனென்றால், அதிகளவு செல்வம் வைத்திருப்பவன் எப்போதும் தன் பணச் செல்வாக்கால் மேலே நிற்பான். பணம் பத்தும் செய்யும் என்னும் பழமொழி இருக்கின்றது. ஆகவே அந்தப் பணம் ஆபத்தானது. அந்தப் பணத்தைச் சரியான வழியில் ஈட்டாமலோ செலவு செய்யாமலே பாதுகாக்காது விட்டால் ஆபத்தானது என்பதைக் குறிப்பதற்கே சிவந்த தாமரையில் இலட்சுமி வீற்றிருக்கின்றாள். 


  வீரத்தைச் சொல்லத் தேவையில்லை. சிங்கவாகனத்தில் துர்க்கை அம்மன் வீற்றிருக்கின்றார் என்றால் வீரத்துக்கு வேறு  எடுத்துக்காட்டுக்கள் தேவையில்லை. காட்டுக்கு அரசன் என்று சொல்லப்படும் சிங்கம் நல்ல கேட்கும் திறன் கொண்டது. மிருகங்களை அடித்து உண்டு எலும்புடன் தசைகள் இருக்கும் வண்ணம் விட்டுச்; செல்லும். அந்தத் தசைகளை மற்றைய ஓநாய் கழுதை போன்ற விலங்குகள் உண்ணும். அதன் பின் நீண்டகாலம் வேட்டையாடாது.  ஒரு மனிதன் எவ்வளவு தான் வீரனாக இருந்தாலும் மற்றவர்கள் கூறுவதற்காகத் தன் தைரியத்தைக் காட்டக் கூடாது. தேவை ஏற்படும் போது மட்டுமே தன் கேட்குந் திறத்தால் சரியென்று படுவதையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிங்க வாகனத்தில் துர்க்கை அம்மன் படம் வரையப்பட்டுள்ளது. 


  இப்போது புரிகின்றதா? இந்து மத காரியங்கள் அனைத்தும் குறியீட்டு அம்சங்கள் மூலம் விளக்கப்படும் போது மதத்தின் அறிவியல் உண்மைகளைப் புரிந்து கொள்வோம்.
  செவ்வாய், 29 செப்டம்பர், 2020

  பாசத்தைப் பரிசீலனை செய்வீர்

    காலத்தைச் சிறைப்பிடித்து கணனிக்குள் செலுத்தினாய் 
  நேரமறியா துன்காலத்தை வீணாகத் தொலைத்தாய் 
  தீராத விளையாட்டில் நோயாகிப் போனாய் 
  நிம்மதியில்லா வாழ்வை நீயாக ஏற்றாய் 
   விளையாட்டு வினையானால் வில்லங்கம் சேர்ந்திடும் 
  வித்தகனாகும் உன்வாழ்வு வீணாகிப் போயிடும் 
  பித்தாகிப் போனதனால் பிதாவை தெரியவில்லை 
  சொத்தான சொந்தங்கள் அத்தனையும் புரியவில்லை 
   உறவுகளைக் கொல்வதற்கும் உதவிகளை அழிப்பதற்கும்
   நிறைவான வாழ்க்கையை நிலையில்லா ஆக்கவும் 
  உயர்வுகளின் உன்னதத்தை உன்மத்தம் ஆக்கவும் 
   உன்னால் முடிவதற்கு கணனிக்குள் புகுந்தாயா! 
   
  பெற்றோரே! 

   ஆயிரம் விளையாட்டுக்கள் ஆணித்தரமாக ஆக்கியளித்தார் 
  ஆயுளும் அறிவுமோங்க தமிழர் தரணியாண்டார் 
  ஆட்சியுறு வாழ்வில் மக்கள் சீராய்பெருமையுற்றார் 
  நேசமொடு பண்பும் நிலைத்திட உழைத்திட்டோம் 
   வாரிசுகள் நல்வாழ்வுக்காய் நல்வார்த்தை எடுத்துரைப்பீர் 
   பெற்றபிள்ளை வாழ்வதற்குநம் பெருமைகளை எடுத்துரைப்பீர் 
  கணனிக்குள் கண்வைப்பீர் 
  கண்காணிப்பில் வளர்த்திடுவீர் - வாழ்வு 
  வளம்பெறவே பாசத்தைப் பரிசீலனை செய்திடுவீர் 

   

  ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

  இறுதி நிகழ்வில் தன்னுடைய இறப்பை வெளிப்படுத்தினார்

   

  காலம் கவர்ந்து சென்ற பிரபலங்களில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களும் இணைந்து கொண்டார். பாடுகின்ற போது அவர் இதயத்தில் எத்தனை உணர்வுகளைச் சேர்த்திருப்பார். அத்தனை உணர்;வுகளுக்கும் குரலால் வடிவம் எமக்காகக் கொடுத்தார். மனதுக்குள் கொண்டு வந்து அதனை உணர்ந்து இராகங்களை பரீட்சித்துப் பார்த்து அழகான இனிமையான வடிவத்தை அவராலேயே கொடுக்க முடியும். சொற்களை உச்சரிக்கும் அழகும் பாடலின் பாவங்களை காட்டுகின்ற அழகும் கண்முன்னே காலமெல்லாம் எமக்கு தெரிந்து கொண்டுதான் இருக்கும் என்பது உண்மை. பாலெல்லாம் நல் ஆவின் பாலாமோ பாரிலுள்ள குரலெல்லாம் பாலசுப்பிரமணியம் குரலாமோ என்று சொல்லத் தோன்றுகின்றது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்னும் அந்தக் குயில் தன் குரலை அடக்கிக் கொண்டது. இந்தக் குயிலின் குரல் எமக்கு எப்போதும் கேட்கும். எம்மை விட்டுப் பிரிந்தாலும் இசையாய் ஒலிப்பார். என்று அவரே பாடியிருக்கின்றார். 


  அவருடைய புதிய பாடல்களை நாம் கேட்க முடியாது போகும் அவ்வளவுதான். ஆனால் அவர் எம்மோடுதான் வாழ்ந்து கொண்டு இருப்பார். 

    


  Tokyo தமிழ்சங்கம் நடத்திய இணையவழி விழாவிலே  அவர் பாடிய கடைசிப் பாடல் சாதி மலர் பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே என்னும் பாடல். கிண் என்ற குரலில் எந்தவித சோர்வையும் குரல் காட்டிக் கொடுக்கவில்லை. 4 சுவருக்குள் வாழ நீ என்ன கைதியா? தேசம் வேறல்ல. தாயும் வேறல்ல. ஒன்றுதான். தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான். கடுகு போல் உன் மனம் இருக்க் கூடாது. கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்.  இறக்கப் போகின்றேன் என்று தெரியாது அவர் கூறிய வார்த்தைகள் அவரை அறியாமலே உலகத்திற்கு சைகை காட்டியிருக்கின்றது. வருங்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்று யாருக்கும் தெரியாது. இப்போது நான் இங்கு பாடிக் கொண்டிருக்கின்றேன். என் முன்னே பார்வையாளர்கள் இல்லை. எனக்கப்புறம் எப்படி எல்லாம் நிகழ்வுகள் வரும் என்று எனக்குத் தெரியாது. என்று தனது இறுதிநாளை வெளிக்காட்டினார். இரசிகர்கள், தனக்காகப் பாட்டுக்களை எழுதிய பாடலாசிரியர்கள், இசையமைத்தவர்கள், என்று தன்னுடைய நன்றியைத் தெரிவித்து விடைபெற்றார். இதுவே அவர் நேரடியாக எம்மிடமிருந்து விடைபெற்ற வாசகங்களாக இருக்கின்றன. இயற்கையை நேசிக்கச் சொன்னார். ஆனால், சொன்ன அந்த நல்ல உள்ளத்தையே கொரொனா என்னும் நுண் அரக்கன் தொலைத்துவிட்டான். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டி  

  போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று அவர் எமக்குச் சொன்ன வரிகளை நினைவு படுத்தி விடைபெறுகின்றேன்.


  வெள்ளி, 4 செப்டம்பர், 2020

  மகாபாரதத்தில் ஏகலைவன் கதையும் மறு வாசிப்புக்களும்

     நாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தாம் கற்ற வித்தையை மதித்து கற்றுத் தந்த குருவுக்கு குரு தட்சணை கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வளவு தொகை குருதட்சணையாக எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுப்பெறும் ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். ஆசிரியர் கேட்காமலே மாணவர்கள் விரும்பிக் கொடுக்கும் தொகையைக் குருதட்சணையாகப் பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். குருதட்சணை கொடுப்பதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் மனம் என்பது முதல் இடத்தில் வந்து அமர்ந்து கொள்ளுகின்றது. இந்த மனம் இணக்கம் ஏற்படுவதற்கு கற்பித்தல் முறை முன்னிலையில் நிற்கின்றது. இக்கருத்தை மனதில் நிறுத்தி இலக்கியத்திலே ஒரு குருதட்சணை பற்றி நாம் பார்ப்போம். அத்துடன் இக்குருதட்சணையை விளக்குகின்ற மகாபாரத உபகதைகளுள் ஒன்றான ஏகலைவன் கதை மறுவாசிப்புக்குள்ளான விடயங்களையும் நோக்குவோம். 

  மகத நாட்டைச் சேர்ந்த ஹிரண்யதனு என்னும் மன்னனின் மகனே ஏகலைவன். வேட்டுவ குலத்தைச் சேர்ந்திருந்தாலும்; ஒடுக்கப்பட்ட நிஷாத மக்களுக்கு இளவரசன் ஆவான்;;. இந்த மகதநாடு அஸ்தினாபுரத்திற்கு அருகே அமைந்து இருந்தமையால் அர்ச்சுனன், துரியோதனன் ஆகியோர் துரோணாச்சாரியாரிடம் வில் வில்வித்தை பயில்வதைக் காண்கின்றான். அவர் கற்பிக்கும் முறையில் ஆசை கொள்கின்றான். அவரிடம் எப்படியாவது சீடனாக சேர்ந்து வில்வித்தை பயில வேண்டும் என்று ஆசை கொள்ளுகின்றான். இங்கு கற்பித்தலின் கவர்ச்சியை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. கற்பித்தல் என்பது ஒரு கலை. பல பட்டங்களைப் பெற்று இருப்பவர்களுக்குக் கூட கற்பிக்கும் முறை என்பது தெரியாமல் இருக்கும். அக்கலை தெரிந்த ஆசிரியர்களே மாணவர்களின் மனதில் இடம்பிடிக்கின்றார்கள். அந்த ஆசிரியர்களை மேதாவிகளாகவே மாணவர்கள் கருதுகின்றார்கள். இதை மனதில் பதித்து ஏகலைவனையும் துரோணரையும் அணுகுவோம். 

  துரோணரிடம் தனக்கு வில்வித்தை கற்றுத் தரும்படி ஏகலைவன் கேட்கின்றான். ஒரு வேட்டுவ குலத்தில் பிறந்தவனுக்கு வில்வித்தை கற்றுத் தர முடியாது என துரோணர் மறுக்கின்றார். இதையிட்டு ஏகலைவன் கோபம் கொள்ளாது, துரோணரைச் சிலையாக முன்னிறுத்தி அவரைத் தனது குருவாகக் கொண்டு வில்வித்தை கற்கின்றான். துரோணர் இளவரசர்களுக்கு வில்வித்தை கற்பிக்கும் போது ஒளித்திருந்து பார்த்துவிட்டு பின் சிலையின் முன்னின்று தானாகவே முயற்சிசெய்து பயிற்சி பெறுகின்றான்.  எதுவானாலும் ஒரு வேடுவ குலத்தில் பிறந்த ஒருவனுக்கு வில்வித்தை ஒன்றும் கடினமான காரியமல்ல. ஒரு கற்கின்ற மாணவனுக்கு ஆசிரியர் ஒன்றும் முக்கியமல்ல. ஒரு வழிகாட்டி மாத்திரமே ஆகும். ஆனால், அவனின் நம்பிக்கை அந்த ஆசிரியர். அந்த நம்பிக்கையே ஏகலைவனுக்கு துரோணாச்சாரியாராக அமைகின்றது. 


  ஒரு அமாவாசையிலே ஒரு நாய் குரைக்கும் சத்தம் தன்னுடைய நித்திரையை குலைக்கும் போது   வில்வித்தையிலே சிறந்த வீரனான ஏகலைவன், அந்த நாயின் வாயைக் கட்டுவதற்காக ஒலி வந்த திசையை நோக்கி 7 அம்புகளைப் பாய்ச்சுகின்றான். ஒலி வந்த இடமான நாயினுடைய வாயினுள் அத்தனை அம்புகளும் சென்று வாயைக் கட்டிப் போடுகின்றது. என்னைத் தவிர வேறு யாரும் இக்கலையை அறிந்திருக்க முடியாது என்னும் எண்ணப் போக்கில் இருந்த அர்ச்சுனன் இந்த நாயைக் காண்கின்றான். இதனை யார் செய்திருக்க முடியும் என்று பொறாமை கொள்ளுகின்றான். துரோணாச்சாரியாரிடம் கேட்கின்றான். காட்டிலே அவ்வித்தையைச் செய்தவனை துரோணரும் அர்ச்சுனனும் தேடிப் போகின்றனர். ஏகலைவனைக் காணுகின்றனர். இதனைக் கற்பித்த குரு யார் என்று ஏகலைவனை வினாவ அவனும் துரோணாச்சாரின் சிலையைக் காட்டி அவரே தன்னுடைய குரு என்கின்றான். துரோணாச்சாரியாரும் குருதட்சணையாக ஏகலைவனுடைய வலது கை கட்டைவிரலைக் கேட்கின்றார். மறுப்புத் தெரிவிக்காத ஏகலைவனும் தன்னுடைய கட்டைவிரலை அவருக்குக் குருதட்சணையாகக் கொடுக்கின்றான். இங்கு குருதட்சணை கொடுப்பது தருமம் என்று ஏகலைவன் கருதுகின்றான். கட்டைவிரலைக் கேட்பது சரியா என்னும் கேள்வி காலம் காலமாகக் கேட்கப்படும் கேள்வி. குருதட்சணை கேட்கும் போது யாரிடம் எது கேட்க வேண்டும் என்னும் அடிப்படை அறிவு ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். இதுவே மறுவாசிப்பில் அலசப்பட வேண்டிய அறிவாக இருக்கின்றது. 

  துரோணாச்சாரியார் ஏகலைவனுக்கு வில்வித்தை கற்பிக்க மறுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆசிரிய மமதையாக இருக்கலாம். இல்லையெனில் அரசகுமாரர்கள் கற்கும் இடத்தில் ஒரு வேடுவக் குலத்து மனிதன் கற்பது தராதரக் குறைவாக மற்றைய அரசகுமாரார்கள் நினைத்து மறுப்புத் தெரிவிப்பார்கள் என்ற காரணமாகவும் இருக்கலாம். ஒரு வேடுவன் இவ்வாறு திறமையுடன் இருந்தால் சட்டதிட்டங்களை மீறும் வழியில் தன்னுடைய திறமையைப் பிரயோகிப்பான் என்ற எண்ணப் போக்கும் காரணமாக இருக்கலாம்.  இதைவிட வேடுவ குலத்தில் வளருகின்ற ஒருவனுக்கு இரத்தத்திலேயே வில்வித்தை ஊறியிருக்கும். இக்கலையை ஏகலைவன் ஏன் துரோணாச்சாரியாரின் அவமானச் சொல்லைத் தாங்கி அவரை குருவாகக் கொள்ள வேண்டும் என்பதும் கேள்விக்குறியே! கற்கும் வல்லமையுள்ளவன் ஒரு ஆசிரியரையே தஞ்சம் அடைந்து கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாம் கற்கின்ற கல்வி எங்கிருந்து கிடைக்கப்பெற்றது என்பதைப் பொறுத்தே அதற்குப் பெருமை அமைகின்றது. இது எக்காலத்திற்கும் உரிய பொதுவிதியாகப் படுகின்றது. யுஉhநn பல்கலைக்கழகத்தில் டீயரiபெநnநைரச கல்வி கற்பவர்களுக்கு ஒரு மதிப்பு இருப்பதை நாம் அறிவோம். அதுபோலவே துரோணரின் மாணவன் என்பதில் ஏகலைவனுக்குப் பெருமை இருந்தது. 

  ஏகலைவனும் வேடனாகப் பிறந்தது என் குற்றமில்லை என்று எதிர்த்துப் பேசியிருக்கலாம். குருதட்சணையாக என்னுடைய விரலைத் தரமுடியாது என்று சொல்லியிருக்கலாம். 👀👀ஆனால், ஏகலைவன் தருமத்தை மதிக்கும் ஒரு மாணவனாக இருந்தான். அதுபோலவே மாணவர்கள் தருமத்தை மதித்து குருதட்சணை வழங்குகின்றார்கள். ☺☺

  இந்த ஏகலைவன் கிருஸ்ணரின் தந்தை வாசுதேவரின் சகோதரரான தேவேஸ்டிரவின் மகனாவான். ஏகலைவன்; சிறுவயதில் தொலைந்து போனதாகவும்  ஹிரணியதனுசு என்னும் வேடர் தலைவன் ஏகலைவனை எடுத்து வளர்த்ததாகவும் கதை கூறுகின்றது. ஏகலைவன் கதை பல மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பிரளயன் தன்னுடைய உபகதையில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக மறுவாசிப்புச் செய்துள்ளார். ஏகலைவன் துரோணரிடம் வில்வித்தை கற்பிக்கக் கேட்கவுமில்லை. அவருடைய சிலையை வைத்து மானசீக குருவாக அவரை நினைத்து வில்வித்தை கற்கவும் இல்லை. யாரிடம் இக்கலையைக் கற்றாய் என்று துரோணர் ஏகலைவனிடம் கேட்கும் போது மீன்குஞ்சுக்கு நீச்சல் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லாத போது வேட்டுவ இளைஞனான எங்களுக்கு யாரும் கற்றுத் தரத் தேவையில்லை என்று ஏகலைவன் பதில் கூறுகின்றான். அர்ச்சுனா வெட்டி எறி இவன் கட்டை விரலை என்று துரோணர் கூற அர்ச்சுனன் கட்டை விரலை வெட்டி எறிவதாக  பிரளயன் கதை கூறுகிறது. இளைய பத்மநாபன் அவர்களால் எழுதப்பட்ட ஏகலைவன் நாடகத்திலே ஏகலைவனே தன்னுடைய விரலை வெட்டி துரோணாச்சாரியாரின் பாதங்களில் குருதட்சணையாக வைத்ததாக எழுதப்பட்டுள்ளது. இதேபோல் தமயந்தி என்னும் படைப்பாளி தன்னுடைய தென்மோடிக் கூத்திலே கட்டைவிரல் என்ன என்னுடைய உயிரினை ஈயவும் சித்தமாயுள்ளேன். ஆனால் உங்கள் உள்ளெண்ணம் குரோதமானது சதி நிறைந்தது. வரலாறு உங்கள் துரோகத்தை இழித்துரைக்கும். என்னையும் மூடனென நகைத்துரைக்கும். நான் தரும் குருக்காணிக்கையால் இந்த இரண்டு தவறும் நடக்கவேண்டாம் நீங்கள் சென்று வருக என்று அனுப்பி வைக்கின்றான். 
  திங்கள், 3 ஆகஸ்ட், 2020

  திரு.வி.க.அரசுக்கல்லூரி நடத்திய கவியரங்கக் கவிதை .  இக்கவியரங்கத்தை முத்துநிலவன் ஐயா அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார். 


  கன்னித் தமிழே நீ காவியத்தில் புரண்டெழுந்தாய்

  காளமேகம், கம்பனெனும் கவிஞர்கள் நாவினிலே நடம்புரிந்தாய்

  சங்கத்துச் சான்றோர்கள் சபைதனிலே ஆட்சி செய்தாய்

  நக்கீரன் சொற்களிலே வற்றாத நதியானாய்

  கோவை உலா அந்தாதி எனஎமை ஆற்றுப்படுத்தினாய்

  கலம்பகத்தில் களித்து நின்றாய் பாரதியில் மயங்கிநின்றாய்

  வள்ளுவன் வாக்கினுக்கு சாவா மருந்தளித்தாய் - இன்று

  என் நாவினிலே எழுந்தருளி நா இனிக்க நான் பாட

  தேன் இனிக்க விருந்தாகி தெவிட்டாத துணையாக வருவாய்

  தமிழே உனக்கு முதல் வணக்கம்

   

  முத்துப் போல் பல்லிருக்கும் முகம் பார்க்க செழிப்பிருக்கும்

  வித்துவத் தமிழிருக்கும் விற்பனப் பேச்சிருக்கும்

  சரமாரி பொழிகின்ற சந்தத் தமிழாலே

  வானலையில் வலம்வரும் கறுப்பு நிலா

  முத்துநிலவன் ஐயாவிற்கும்

  நற்றமிழால் உலகை விழிப்படையச் செய்யும்

  திரு.வி.க. அரசுகலைக்கல்லூரிக்கு அன்பு வணக்கம்

   

  நான் நடத்தும் பாடத்தை ஏன் மறந்தாய் மனிதா

   

  சிறகில்லாப் பறவைநான் உருவமில்லா அருவம் ஆனேன்

  காற்றென்று பேர் எனக்கு கார்முகிலை வரவழைத்தேன்

  தென்றலென்றும் வாடையென்றும் கோடையென்றும் மேலையென்றும்

  வாகை சூடிநின்றேன் வாரி பொழிய வைத்தேன்

   

  சாதிமதம் பார்ப்பதில்லை பாரபட்சம் ஏதுமில்லை

  ஆடிக் களித்திருப்பேன் ஆடும்போதே தடவிச்செல்வேன்

  நெற்கதிர்கள் தலைகுனிய பூவினங்கள் சிரித்திருக்க

  சோலையிலே புள்ளினங்கள் பாடிப்பறந்து வர

  பாட்டானேன் நறுமணமானேன் மகரந்த மயமானேன்

   

  பேச்சினிலே பாட்டினிலே இன்னிசையின் ஓசையிலே

  பறவைகளின் பாட்டினிலே பூமியின் சுழற்சியிலே

  அப்பப்பா அப்பப்பா உலகனைத்தும் எனக்குள்ளே

  அடக்கி ஆட்சி புரிகின்றேனே.

   

  காற்றில்லா வாழ்வேது நானில்லா ஒலியேது

  ஏற்று நீ கவிபாட வழிதான் ஏது

  காற்றுடன் பிறந்தாலும் மூச்சிலே இல்லையென்றால்

  வெற்று நீ உடம்பாவாய் பிரேதமெனப் பெயரிடுவார்

   

  நான் இல்லா ஓசை ஏது

  நான் இல்லா காது எதற்கு

  நான் இல்லா வாழ்வு எதற்கு

  என்னை நீ உணர மாட்டாமையாலே

   

  காபன் மோனாக்சைட்டை கந்தக ஒட்சைட்டை

  காற்றுடன் நீயே நன்றாய்க் கலந்தாய்

  நானும் சுமந்தேன் வானில் பறந்தேன்

  நச்சுக் காற்றும் உன் சுவாசமானது

   

  ஆலைகளின் வேலைகளால் கரிமச் சேர்மங்கள்

  காற்றிலே கலப்பதனால் வானுடன் கலக்கிறேன்

  மழையில் கலக்கிறேன், மண்ணில் கலக்கிறேன்

  உணவுடன் கலக்கிறேன் உண்டு மகிழ்கிறாய்

   

  வாகன நெரிசல்கள், வானளந்த ஓசைகள்

  புகையைக் கக்கி  என்னை மாசுபடுத்துகிறாய்

  மூச்சுத் திணறி நான் அல்லாடிப் போகிறேன்

  கோபம் கொண்டேநான் மூச்சு விட்டேனேயானால்

  வாகனம் நிலத்தில் ஓடுமா? வானில் பறக்குமா?

  நினைத்துப் பார் மானிடனே!

   

  வானத்தில் ஆராய்ச்சி மோகத்தில் விஞ்ஞானி

  ஆராய்ச்சித் துகள்களினால் வானமே பழுதாச்சு

  கிரகங்கள் நிலைகுலைவு இயற்கையும் தடுமாற்றம்

  புதுப்புது வாயுக்கள் புற்றீசலாய் படையெடுப்பு

   

  காட்டை வெட்டி நாசம் பண்ணுகிறாய்

  கட்டிடம் கட்டுகிறாய் ஆலைகளை அமைக்கின்றாய்

  காடு தந்த ஒட்சிசனைக் காசு கொடுத்து நீ

  வாங்கத் தான் முடியுமா!

   

  காற்றை மாசு படுத்துகின்றாய் நீ

  மூச்சுக் காற்றுக்கு முகமூடி அணிகின்றாய்

  தீராத வலி எனக்கு நீ தந்தால்

  சூறாவளியாகி சுழன்று உன்னை அழித்திடுவேன் 

   

  சைவத்தை நாடு அசைவத்தை ஒதுக்கு

  வீட்டுத் தோட்டம் விரும்பியே செய்

  நடந்து பழகு வாகனம் தேவையில்லை

  இயற்கை வாழ்வை இதயத்தில் ஏற்று

  உன்மூச்சைக் காக்க என்பேச்சைக் கேள்

   

   

   

   

   


  புதன், 29 ஜூலை, 2020

  வாழ்க்கை என்பது வழுக்கையா?

   


   எனக்குள்ளே நான் பல கேள்விகள் கேட்கின்றேன். பல பக்கப் பார்வையில் என் சிந்தனைகள் விரிவுபடுகின்றன. இறுதியில் ஒரு தீர்மானம் எடுக்கின்றேன். அவை எவ்வாறு விரிவுபடுகின்றன என வாருங்கள் இணைந்தே சிந்திப்போம். நாம் பிறக்கும்போது தலை முழுவதும் தலைமயிரோடே பிறந்தோம். கூட வந்த மயிர்கள் ஒவ்வொன்றாகக் கழன்றன. புதிது புதிதாக மயிர்கள் முளைத்தன. தலையில் முளைத்தவையும் கூடவரவல்லை. பழைய மயிர்களும் எமது தலையில் இருப்பது இல்லை. கழுவினோம்; துடைத்தோம்; அலங்கரித்தோம்; இருந்தும் எம்மை விட்டே போனது. இறுதியில் வழுக்கையானது. எதுவுமே இல்லாத மண்டையில் அடர்த்தியாக இருந்த மயிர்களும் அலங்கரிப்பும் இருந்த இடம் தெரியாமல் போவது போலவேதான் வாழ்க்கையும் அமைந்திருக்கின்றது. 

  தனியாகப் பிறந்தோம்; தலை நிமிர்ந்து வாழ்ந்தோம்; தோளோடு சேர்ந்தோம்; தோல்விகளை வென்றோம்; சாதனைகள் புரிந்தோம்; சாதித்துக் காட்டினோம்; இறுதியில் தெரியாமல் போனோம். இதுவே வாழ்க்கை. போராடித் தொடர்கின்ற வாழ்க்கையில் இறுதியில் யாருடனும் போராடாது எமக்கு நாமே போராடித் தோற்றுப் போக வைப்பதே இயற்கை நியதி. அப்படியானால், இப்படித்தான் நடக்கப் போகின்றது என்பதை நாம் முன்னமே தெரிந்திருந்தும் எமது வாழ்க்கையில் ஏன் இந்தப் போராட்டம்? ஏன் இந்த மகிழ்ச்சி? ஏன் இந்த பாசப் பிணைப்பு? ஏன் இந்தப் பிரிவுத் துயர்? என்று சிந்தித்துப் பார்த்தோமென்றால், வாழ்க்கை என்பது வழுக்கை என்றே உணர்வோம். 

  வாழ்க்கையில் இறுதிவரை போராடித் தோற்றுப் போனவர்களும் இருக்கின்றார்கள். வாழ்க்கையின் வெற்றி உச்சத்தைத் தொட்டவர்களும் இருக்கின்றார்கள். ஆனால், இறுதியில் இரு தரத்தினரும் உலக வாழ்க்கையில் ஒன்றுமில்லாமல் போனவர்களே. மாட மாளிகைகள், கோடான கோடிக் கோபுரங்கள் கட்டி வாழ்ந்த மன்னர்கள் இன்று எங்கே? பாட்டாலே உலகத்தை வென்ற பாவேந்தர்கள் எங்கே? நாயன்மார்கள் எங்கே? ஆழ்வார்கள் எங்கே? உலகத்தையே தன் கைக்குள் அடக்கிவிடலாம் என்று போர் தொடுத்த ஹிட்லர் எங்கே? அண்டவெளி ஆராய்ச்சியாளர்கள் எங்கே? தொழில்நுட்ப ஆய்வாளர்கள் எங்கே? தம்முடைய பெயரை நிலை நிறுத்திப் போனவர்கள் கூட பெற்றது ஏதுமில்லை. அவர் பெயர் சொல்லிப் பெயர் பெறும் சொந்தங்களே அவர்கள் புகழுடன் தொடர்கின்றார்கள் என்பது உண்மையே. அதுகூட ஓரிரு சந்ததி கடந்து மறக்கப்பட்டு அப்படியென்றால், ஏனிந்த போராட்டம்! வாழ்க்கையை நன்றாக அனுபவித்துச் செல்ல மனம் தடைபோடுவதும் ஏன்? ! இறப்பு என்பது நிச்சயம். இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை. படைப்புக்கள் அத்தனையும் ஒருநாள் இல்லாமல்தான் போகின்றன. கண்டுபிடிப்புக்கள் எல்லாம் காணாமல்தான் போகின்றன. அன்று நாம் பயன்படுத்திய உபகரணங்களை நாம் பயன்படுத்துகின்றோமா?(Radio, Taperecorder சமையல் உபகரணங்கள்) இன்று பயன்படுத்துபவவை நாளை தொடருமா? இல்லவே இல்லை. தொழில்நுட்பங்கள் பழையவற்றை ஒன்றுமில்லாமல் பண்ணிவிடுகின்றன. சிந்திக்கச் சிந்திக்க புதியவை பிறப்பெடுக்கின்றன. பழையவை தேக்கம் கண்டுவிடுகின்றன. எனவே உயர்திணை அஃறிணை அத்தனையும் வாழ்க்கையில் வழுக்கையே.

   ஆனால், தனக்காக வாழ்ந்து ஆடு, மாடுகள் போல் பசித்தால் புல்லைத் தின்று, உறக்கம் வந்தால் உறங்கி வாழ வேண்டுமா? மிருகங்கள் போல் தேடி வேட்டை ஆடி, பசி நீங்க காலாற நடந்து, உறக்கம் வர உறங்கிப் போகும் வாழ்க்கை சரியா? அவ்வாறு மனிதன் வாழ்ந்தால், இந்தப் பூமியில் மாற்றங்கள் தோன்றியிருக்குமா! இலை குழை உடுத்தே இன்றும் மனிதன் வாழ்ந்திருப்பான். அவ்வாழ்க்கை அழகென்று சொல்பவர்களும் உண்டு. ஆறறிவு படைத்த மனிதனின் படைப்புக்கள் மேம்பட உலகத்தை வசதி படைத்த உலகம் ஆக்குவோம் என்று சொல்பவர்களும் உண்டு. 

  "காயமே பொய்யடா காற்றடைத்த வெறும் பையடா
  மாயனார் குயவன் செய்த மண்பாண்டம் ஓடடா'' 

  என்று பாடிய சித்தர் உலகநிலையாமையை உரைத்தார். 

  "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"

  என்ற பட்டினத்தார் இல்லாமல் போகும் உடலின் நிலையாமையை எடுத்துரைத்தார். 

  "ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? 
  தேடிய செல்வம் என்ன? 
  திரண்டதோர் சுற்றம் என்ன? 
  கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவது என்ன? 

  என்று எதுவுமே எமக்குச் சொந்தம் இல்லை என்று கண்ணதாசன் பாடினார். இவ்வாறு அவரவர் நிலையாமை பற்றி எடுத்துரைக்க, அந்த உலக நிலையாமையை எடுத்துரைத்த திருமூலர் கூட தன்னை நன்றாகத் தமிழ் செய்ய என்னை நன்றாக இறைவன் படைத்தனன் என்று பாடித் தன் கடமையை திருமூலரே உணர்த்தியிருக்கின்றார். அதாவது உலக வாழ்க்கை வழுக்கை என்றாலும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் கடமை உள்ளது அல்லது கடமையை உள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது புலப்படுகின்றது. துறவியானவர் துறவறத்தில் இருந்த வண்ணம் சமூகத்திற்கு நல்லவற்றை உரைக்கவில்லையா? ஒன்றுமில்லாமல் போவோம் என்று தெரியாமலே பிறக்கின்றோம். வாழ்க்கையில் நாம் எதுவுமில்லாமலே போவோம் என்று தெரிந்தே வாழ்கின்றோம்; சாதிக்கத் துடிக்கின்றோம். ஆனால், மனிதன் மூளையில் ஒன்று குடைந்து கொண்டே இருக்கும். இந்த பூமியில் பிறந்து விட்டோம். எமக்கோ அல்லது எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கோ ஒரு வெளிச்சத்தைக் காட்டிவிட்டு மறைவோம் என்று சில மனிதர்கள் வாழ்க்கையைக் கொண்டு செல்வார்கள் என்பது உண்மையே. இங்கு எதிர்கால சமூகம் பற்றிய அக்கறை தொனிக்கின்றது. சிலருக்கு பிறப்பிலேயே தொடர் ஊக்கம் தொழிற்படும். தன்னால் முடியாது என்றாலும் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு தம் இறுதிக்காலங்கள் வரையிலும் தம்முடைய எண்ணக்கருக்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். 

  வாழ்க்கையை நிலையானதான மாற்ற விஞ்ஞானிகளும் முயற்சி மேற்கொண்டுதான் இருக்கின்றார்கள். இது நடக்குமா என்று சந்தேகப்பட்ட எத்தனையோ விடயங்கள் இன்று நடத்திக்காட்டப்பட்டுள்ளன. உருவ மாற்றுச் சிகிச்சை என்பது பிறந்தது எப்படியான தோற்றமோ அத்தோற்றத்தை முழுவதுமாக மாற்றுகின்றார்கள்(Pடயளவமை ளரசபநசல) ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுகின்றார்கள், குளோனிங் முறையில் ஒரு மனிதனை மறுபடியும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைந்து கொண்டிருக்கின்றார்கள். குளோனிங் முறையில் கலவியில்லா குளோனிங், (Asexual Reproductionமரபணுக்களையும் DNA கூறுகளையும் பிரதி எடுக்கும் மரபணு குளோனிங் (Gene cloningஒரு மிருகத்தை அப்படியே பிரதி எடுக்கும் இனப்பெருக்க குளோனிங் (Reproductive Cloning) சிகிச்சை முறைகுளோனிங் (Therapeutic Cloningஎன குளோன்களை உருவாக்க மனிதன் முனைந்து கொண்டிருக்கின்றான். எம்மால் அறியப்பட்ட டாலி என்னும் செம்மறி ஆடு, டியூவி என்றழைக்கப்படும் மான், ஸ்நூபி என்றழைக்கப்படும் நாய் போன்றன குளோனிங்குக்கு அத்தாட்சிகளாகக் காணப்படுகின்றன. அண்டங்கள் தாண்டி ஆராய்ச்சிகளில் பிரபஞ்சத்தை நோக்கி பார்வையைக் கொண்டு செல்கின்றார்கள். இவையெல்லாம் வாழ்க்கையையும் பிறப்பையும் நியாயப்படுத்துவதற்கும் நிலைப்படுத்துவதற்கும் மனிதனின் முயற்சிகளாக இருக்கின்றன. விஞ்ஞானிகளின் வரிசையில் உலகின் தலைசிறந்த அறிவியலாளரான ஸ்ரீபன் வில்லியம் கார்க்கிங் (08.01.1942 – 14.03.2018) என்றுமே எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துபவராகக் காணப்படுகின்றார். வாழவே முடியாத ஒரு மனிதன். தசையூட்டமற்ற பக்க மரப்பு நோயால் (Amyotrophie lateral sclerosis – ALS) அதாவது இயக்க நரம்பணு நோயால் (Motor neuron disease) பாதிக்கப்பட்டார். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை சொல்வதை தசை செய்யாது. உடல் அடங்கி ஒரு சக்கர நாற்காலிக்குள் ஐக்கியமாகிவிட்டது. இயக்கவியல் விஞ்ஞானியான இவர் ~~ஈக்வலைசர்|| என்ற கொம்பியூட்டர் புரோக்ராம் உதவியோடு கன்னத் தசைகள் மூலம் கொம்பியூட்டரில் பேசி வந்தார். இந்நோய் கண்டபோது இன்னும் 2 வருடங்களே ஸ்ரீபன் வில்லியம் ஹாக்கிங் வாழ்வார் என்று மருத்துவர்கள் இவருடைய இறப்புக்கு நாள் குறித்தனர். 23 வயதில் இவருக்கு இவ் அச்சுறுத்தல் கிடைத்தது ஆனால், உலகவாழ்க்கையை விட்டுப் பிரியப் போகின்றோம் என்று தெரிந்திருந்தும் காதலித்தார். திருமணம் செய்தார். பிரபஞ்சத்தை முழுவதுமாக அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலும் முயற்சியும் அவரை 76 வருடங்கள் வரை வாழ வைத்தது. இறப்பு எந்த நிமிடமும் வரலாம் என்று சிந்தித்த ஸ்ரீபன் ஹாக்கிங் வாழும் வரை அசைய முடியாத நிலையிலும் தன்னுடைய மூளையைப் பயன்படுத்தி தன்னுடைய ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டே இருந்தார். இவ்வாறான மனிதர்களை சிந்தித்துப் பார்க்கின்ற போது வாழ்ககை என்பது வழுக்கை என்று நினைத்தாலும், எதற்காவது வாழ வேண்டும் என்ற நினைப்பானது மூளை சுறுசுறுப்பான மனிதர்களுக்கு தோன்றிக் கொண்டே இருக்கும். இது இயற்கையின் நியதி, கோட்பாடு என்றே கூறலாம்.

  புதன், 22 ஜூலை, 2020

  மூச்சு விட இடம் தேவை

  https://oss.neechalkaran.com/tamilfonts/7uni-amma/uniAmma-14.ttf');

   
  ஒத்த அன்பினராகிய ஒருவரும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்தில் பிறந்த பேரின்பம் காதல் எனப்படுகின்றது. சங்ககாலத்திலே காதல் என்பது பேரின்பமாகவே கருதப்பட்டது. இந்த காதலர் இருவர் கருத்தொருமித்து உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து தமக்குள் இன்பம் துய்த்து வாழ்தல் காதல் என்று நச்சினார்க்கினியர் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். அக்காலத்திலே திருமணம் என்ற முறை இருக்கவில்லை. ~~

                  பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 
                   ஐயர் யாத்தனர் கரணம் என்ப” 

  அதாவது கரணம் என்றால், சடங்குகள். இந்த திருமணச் சடங்குகள் வந்தமைக்குக் காரணம் களவில் கூடிய காதலன், களவு வெளிப்படும் காலத்தில் நான் அப்பெண்ணைக் கண்டதில்லை என்று கைவிட்டு விடும் நிலை மேலோங்கிக் காணப்பட திருமணச் சடங்கு முறைகள் வழக்கத்திற்கு வந்தன. இவ்வாறே மணவினை முடித்து இன்பம் துய்த்திருப்பது இயற்கை. எதுவாக இருந்தாலும் வேறு வேறு குடும்பச் சூழலில் இருந்து வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ள இருவர் இணைகின்ற போது சிற்சில விட்டுக் கொடுப்புக்களும், புரிந்துணர்வுகளும் ஏற்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. விருப்பு வெறுப்புக்கள் ஆளுக்காள் மாறுபடலாம். அதனைப் புரிந்து நடந்து கொள்ளும் போதே மனக்கசப்புக்கள் குறைந்தளவில் ஏற்பட்டு மணவாழ்க்கை சுமுகமாக அமையும்.☺👭😁

  சென்ற ஆறு மாதங்களில் திருமண பந்தத்தை அறுப்பதற்காக பதிவு செய்துள்ளோர்களின் புள்ளிவிபரம் அதிகரித்துக் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இதற்குக் காரணம் யாது? மனக்கசப்பும் மனச்சோர்வுமே இதற்குக் காரணங்களாக அமைகின்றன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜப்பான் குறைந்த வாடகையில் தங்கும் விடுதிகளை அமைத்து ஒருநாளுக்கு 36 ஒயிரோக்களை சம்பாதிக்கின்றனர். இளந்தம்பதிகளுக்குத் தம்முடைய தாம்பத்ய வாழ்வை சரியான முறையில் நடத்தத் தெரியவில்லை, விட்டுக் கொடுப்புக்கள் இல்லை, புரிந்துணர்வு இல்லை, சகிப்புத் தன்மை இல்லை. எத்தனை பேரைத்தான் தெரிவு செய்து வாழ்வார்கள்? பிடிக்கவில்லை, பிரிகின்றோம் என்று இவர்களுக்கு எத்தனை பேரைப் பிடிக்காமல் போகும்? என்று பலவாறாகப் பேசும் பெரியவர்களே இக்காலங்களில் என்னையும் அவளையும் வெட்டி விடுங்கள் கடைசிக் காலத்தில் நிம்மதி வேண்டும் என்று விவாகரத்துக்குப் பதிவு செய்கின்றார்கள். இல்லையென்றால், இவ்வாறான விடுதிகள் தேடிப் போகின்றார்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால், மனம் என்பது ஆளுக்காள் மாறுபட்டுத்தான் உருவாக்கப்படுகின்றது. மனப்பதிவுகளும் அவருக்கு ஏற்றாற்போலவே பதியப்படுகின்றன. மூலத்தை மாற்ற முடியாது என்றே கருதுகின்றேன். மாற்றத் தொடங்கினால், மனஅழுத்தம் ஆரம்பமாகும். முதுமையென்ன, இளமையென்ன உணர்வு என்பது ஒன்றே. 

  கொரொனாக்கு 1.5 மீற்றர் இடைவெளி தேவை போல் கணவன் மனைவிக்கு இடையிலும் இவ் இடைவெளி தேவைப்படுகின்றது போலும். கணவன் வீட்டில் இருக்கின்ற போது தம்முடைய சுதந்திரம் பறி போவதாகவும், தம்முடைய நாளாந்த வேலைகள் அதிகமாக இருப்பதாகவும் பெண்கள் கருதுகின்றார்கள். அதிகமான நேரம் ஒன்றாக இருக்கும்போதும், நெருக்கம் அதிகமாகும் போதும் வாக்கு வாதங்கள் அதிகரிப்பதாகவும் தம்முடைய சகல விடயங்களிலும் ஒருவருக்கொருவர் தலையிட்டு பிரச்சினைகளை அதிகரிப்பதாகவும் இருவரும் கருதுகின்றார்கள். வீட்டில் இருக்கும் ஆணுக்குத் தேவையான சுகங்களைப் பெண் கொடுக்காத பட்சத்தில் கருத்து வேறுபாடுகளும் மன உழைச்சல்களும் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இருப்பது நிஜமே. கோபம் வந்தால், அதனைத் தவிர்ப்பதற்கு வெளியே போகின்ற நிலை கடந்த மாதங்களில் சாத்தியப்படவில்லை. ஆளுக்காள் பேச்சு வளருகின்ற போது மனக்கசப்புக்கள் ஏற்படுவது இயல்பே. 

  எனவே ஒருவருக்கொருவர் சுமையாக இல்லாமல் சுகமாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகிக்கும். யாராக இருந்தாலும் சிறிதளவு மூச்சுவிட இடம் தேவை. 💖

  ஞாயிறு, 5 ஜூலை, 2020

  ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றமும் தற்கால வாழ்க்கை முறையும்
  எழுத்துரு மாற்றத்திற்கு உதவிய வலைச் சித்தர் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. பெயருக்கு ஏற்றது போல் பொறுமையாக விளக்கம் தந்த அவருக்கு மேலும் பாராட்டுக்களும் நன்றியும் 

  இலங்கை மண்ணில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் மக்கள் மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருந்தாலும், ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றம் ஒரு வகையில் மக்களின் வளர்ச்சிப் போக்கிற்கு வழி வகுத்திருக்கின்றது, மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது, ஏற்றத்தாழ்வுகளை மாற்றியும் அமைத்திருக்கின்றது, கல்வியறிவில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றைவிட கலாசார மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் போரின் தாக்கம் பாதிக்கப்பட்ட மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதனால் பின்விளைவுகள் பலவற்றை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

  தாய்நாட்டில் வாழ்ந்த மக்கள் போரின் காரணத்தினால், உடைமைகளை இழந்து வெறும் கையுடன் புலம்பெயர்ந்த நாட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்களிடம் இருந்த சொத்து மதிப்பு 10 விரல்களும், நம்பிக்கை என்னும் உயரிய ஆயதமும் மட்டுமே. அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் கற்றவர்கள் மட்டுமன்றி சகல தரப்பினரும் கொழும்பு விமானநிலையத்தை முதல் தடவையாகப் பார்த்தவர்களும், வீட்டை விட்டு வெளியே போகாமல் குடும்பம், பிள்ளை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை அடக்கிக் கொண்டு வாழந்த எத்தனையோ தாய்மார்களும் இவர்களுக்குள் அடங்குகின்றார்கள்

  . எம்முடைய தமிழர்கள் தம்முடைய வீட்டை விற்று, தாலிக்கொடியை விற்று, வளவை விற்று, கடன்கள் பெற்று, தரகர்களிடம் பணத்தை அள்ளிக் கொடுத்துத் தம் உறவுகளை விட்டு தம்முடைய உயிரைப் பாதுகாக்க என்று அந்நியநாடுகளுக்குள் புகுந்தார்கள். அவர்கள் எவ்வாறு எல்லாம் புலம் பெயர்ந்தார்கள் என்று எத்தனையோ எழுத்தாளர்கள் கதையாகக், கவிதையாகக், கட்டுரையாக விளக்கியுள்ளார்கள். ஆனால், இன்று தமிழ் மக்கள் போர் நிமித்தம் புலம்பெயர்ந்து சுமார் 35 வருடங்கள் கடந்துவிட்டன. தற்பொழுது 50.000 இலங்கைத்தமிழர்கள் ஜேர்மனியில் வாழுகின்றார்கள். இப்போது புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழும் மக்கள் நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன என்பது பற்றிச் சிறிது சிந்திப்பதே இக்கட்டுரை.

  உலகம் முழுவதும் சிதறிப் பரந்த தமிழ் இனம். ஜேர்மனி மண்ணையும் தொட்டது. ஒரு இடத்தில் நட்ட மரத்தை இன்னும் ஒரு இடத்தில் பிடுங்கி நட்டால், அம்மரம் தளர்ச்சி கண்டு மீண்டும் துளிர்க்கும் இல்லையேல் பட்டுப்போகும். அது போலவே இலங்கை மண்ணில் வாழ்ந்த மக்கள், புரியாத கலாசாரம், புரியாத காலநிலை, புரியாத மொழி, புரியாத மக்கள் என்று சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தது போல் ஜேர்மனி நாட்டைப் பார்த்தார்கள். வலிமையுள்ளது வாழும் என்ற கூர்ப்புக் கோட்பாட்டின்படி இம்மண்ணிலும் தமிழ் இனம் தலைத்தோங்கியது. தமிழ் மொழி அறிவுடனும் சிறிதளவு ஆங்கில அறிவுடனும் ஜேர்மனிய நாட்டுக்குள் தமிழர்கள் புகுந்த போது அகதி அந்தஸ்தைத் தம்முடைய முதல் அடையாளமாகப் பெற்றுக் கொண்டனர்.

  ஒரு இனம் வாழ வேண்டுமானால், அவ் இனத்தின் மொழி வாழ வேண்டும். தம்மை அடையாளப்படுத்துவதற்கு முதலில் மொழியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டனர். ஜேர்மனிய மொழி பாடசாலைக்குச் சென்று கற்கக் கூடிய வசதி வாய்ப்புக்கள் தமிழர்களுக்கு அவர்கள் புலம்பெயர்ந்த காலப்பகுதிகளில் கிடைக்கவில்லை. தம்முடைய இருப்புக்களை உறுதியாக ஊன்றிக்கொள்ள கிடைத்த வேலைகளை கிடைத்த போதெல்லாம் செய்யத் தொடங்கினர். தம்முடைய வளங்களைப் பெருக்கினர். ஜேர்மனிய இனமே மெச்சத்தக்க வகையில் வாழ்ந்து காட்டினர்.

  “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
  மாடுஅல்ல மற்றை யவை”

  கொடுத்தாலும் குறைவுபடாத மேன்மையான செல்வம் கல்வியே. ஆகவே பிற செல்வங்கள் உயர்ந்த செல்வங்களாக மதிக்கப்படுவதில்லை என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க ஜேர்மனிய அரசின் உதவியுடன் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியறிவைப் பெற்றோர்கள் ஊட்டி வளர்த்தனர் என்றால், அது மிகையில்லை. பெற்றோர்கள் போட்டி போட்டுப் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக முயற்சி மேற்கொண்டனர். ஜிம்னாசியம் என்று அழைக்கப்படும் உயர்தர பாடசாலைக்குத் தம்முடைய பிள்ளைகளை அனுப்புவதற்காகத் தம்முடைய முழுமுயற்சிளையும் எடுத்தனர். இந்தப் போட்டியும், பொறாமையும் வேடிக்கையாக இருந்தாலும் இன்று ஜேர்மனிய மண்ணிலே சிறந்த தமிழ் கல்வியாளர்களை, பொறியியலாளர்களை, வைத்தியர்களை, கணக்காளர்களை, சிறந்த உத்தியோகத்தர்களை ஜேர்மனியர்களுக்கு இணையாகக் காண்பதற்கு இந்தப் போட்டியும், பொறாமையுமே காரணமாக இருந்திருக்கின்றது.

  “ஒரு நாட்டிற்கு நிரந்தர செல்வத்தைத் தேடித் தருபவர்கள் ஆசிரியர்கள்” என்று அறிஞர் அண்ணா கூறியிருக்கின்றார். ஓய்வு நேரங்களில் தம்முடைய தாய் மொழியைத் தம்முடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்கள். இதற்குக் கற்றறிந்த பெற்றோர்கள் எவ்வித வேதனத்தையும் எதிர்பார்க்காது சேவை மனப்பாங்குடன் பிள்ளைகளுக்குத் தமிழ்க் கல்வி போதித்தார்கள். தாம் தங்கியிருந்த அகதி முகாமிலேயே ஒரு சிறு அறையில் தமிழ் கற்பிக்கத் தொடங்கினார்கள். அது வளர்ந்து தமிழாலயம், தமிழ் கல்விச்சேவை, தமிழ் கல்விக்கழகம் போன்ற பல பெயர்களில் விரிவடைந்தன.  எதிர்காலத் தலைமுறையினருக்கு தாய்மொழியாம் தமிழ் மொழியை ஊட்டி வளர்த்தனர்.

  “வேறுவேறு பாஷைகள் கற்பாய் வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ"  “தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்படிச் செய்ய வேண்டும்" என்று பாரதி கேட்டுக் கொண்டது போல் வாழ்ந்து காட்டினார்கள். உலகின் முதன்மொழி தமிழ் மொழி என்பதை உலக இனங்கள் எல்லாம் அறியும் வண்ணம் எடுத்துக்காட்டுகளை எம்முடைய இளங்தலைமுறையினரே இனங்காட்டுகின்றனர். மேடைகளில் தமிழ் முழக்கம் செய்தனர். அது மட்டுமன்றி பெற்றோரின் அயராத உழைப்பிற்கும் ஊக்குவிப்புக்களுக்கும் ஏற்ப இன்று எமது தமிழ் இளந்தலைமுறையினர் ஜேர்மனிய மொழி கற்று ஜேர்மனிய நாட்டு அரசாங்கத் திணைக்களங்களிலும், மருத்துவ மனைகளிலும், பிரபல நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளை வகிப்பதுடன் தமிழர்களின் திறமையை இனம் காட்டுகின்றனர்.

  கூறுபடும் மொழிகளைப் போல் புதையவில்லை்கொஞ்சிப் பேசும் வழக்கற்றுக் குமையவில்லை சாறுபட்ட மரங்களைப் போல் சாயவில்லை தரங்கெட்ட மனிதர்களைப் போல் தாழவில்லை

  என்ற பெருஞ்சித்திரனார் பாடலுக்கமைய ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புக்களை அமைத்துப் பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியீடு செய்வதுடன் பல எழுத்தாளர்களை இனங்காட்டி, வெளிக் கொண்டு வருகின்றனர். இதற்குப் பல அமைப்புக்களும், ஊடகங்களும் கூடப் பணிபுரிகின்றன.

  தமிழ்மொழியிலே என் அறிவுக்கு எட்டிய வரையில் வெற்றிமணி, ஐ.பி.சி, அகரம், தமிழ்ரைம்ஸ் போன்ற பத்திரிகைகள் வெளிவருகின்றன. சிவத்தமிழ், மண் போன்ற சஞ்சிகைகள் வெளிவருகின்றன. எம்.ரி.வி, எஸ்.ரி.எஸ் போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. நுவுசு என்ற வானொலி ஒலிபரப்பப்படுகின்றது. இவ்வாறு தமிழ் பரப்பை விரிவுபடுத்துவதற்குப் பல அர்ப்பணிப்புக்களைச் செய்கின்ற மக்கள் ஜேர்மனி மண்ணில் வாழ்ந்து வருகின்றார்கள்.

  தமிழர்கள் ஒரு கிறிஸ்தவ நாட்டில் வாழ்ந்தாலும் பாரம்பரியமாக எம்முடைய பரம்பரை பண்பாட்டுக் கூறுகளை, உணவு உடை பழக்கவழக்கங்களை, சமய நம்பிக்கைகளை சிறிதளவும் மறந்ததில்லை. தம்முடைய அகதி முகாமிலேயே ஒரு சிறிய அறையில் சுவாமிப் படங்களை வைத்து இந்து ஆலயமாக வழிபடத் தொடங்கினார்கள். அது விரிவடைந்து பல பரப்பில் கட்டப்பட்ட கோபுரங்களுடன் கூடிய கோயில்களாக மாறியுள்ளன. இவ்வருடம் 2019 இல் கிட்டத்தட்ட 14.000 மக்கள் ஹம் என்னும் நகரத்தில் அமைந்திருக்கின்ற காமாட்சி அம்மன் ஆலய உற்சவத்திற்கு வந்திருந்ததாக கணிப்பீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதேபோல் ஸ்வெற்றா, ஹற்றிங்கன், டோட்முன்ட், ஸ்ருட்காட் என்று ஜேர்மனியில் தமிழ் மக்கள் பரவலாக வாழுகின்ற நகரங்களில் எல்லாம் பல ஆலயங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் பெற்று திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

  மொழியும், மதமும் போற்றிப் பாதுகாக்கப்படுவதுபோல் கலைகளையும் தம்முடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்க பெற்றோர் தயங்கியதில்லை. கர்நாடக சங்கீதம், வயலின், பரதநாட்டியம், வீணை, மிருதங்கம், தவில் போன்ற கலைகளும் மேற்கத்தைய நடனங்களையும், இசைக்கருவிகளையும் கூட தம்முடைய பிள்ளைகளுக்குக் கற்பித்துப் பேரும் புகழும் அடைந்துள்ளார்கள்.

  தாம் வாழும் மண் தமக்களித்த வசதி வாய்ப்புக்களை வைத்துத் தாம் பிறந்த மண்ணை மறக்காத தமிழர்கள் அதிகமானவர்கள் நம் மத்தியில் வாழுகின்றார்கள். இலங்கையிலுள்ள அநாதை விடுதிகளுக்கும், வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கும் ஜேர்மனியில் இருந்தவண்ணம் பண உதவிகளையும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகளையும் செய்து கொண்டு வருகின்றார்கள்.

  இவ்வாறு ஜேர்மனியில் தமிழ் இனம் வளர்ச்சி கண்டு சொந்தமாக வீடு, வியாபார ஸ்தாபனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், வாகன வசதிகள் போன்ற சகல சைளகரியங்களுடனும் ஜேர்மனிய மக்களுக்கு நிகராக வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு எமது தமிழ் மக்கள் ஜேர்மனிய மண்ணில் வாழ்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஜேர்மனிய மக்களின் மனிதாபிமானப் பண்புகளும், விட்டுக்கொடுப்புக்களும், எல்லோரையும் சமமாக மதிக்கும் உயரிய பண்புமே என்பதில் சிறிதளவும் சந்தேகமில்ல.

  ஜேர்மனி நாட்டில் தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினரைக் கண்டுவிட்டார்கள். இப்போது விரும்பியோ விரும்பாமலே பெற்றோர் தம்முடைய பிள்ளைகளின் கலாசார கலப்புக்கு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். பன்மொழிக்கலாசாரததி;ல் வாழும் பிள்ளைகளின் இயற்கை விருப்பிற்கு ஏற்ப இந்த மண்ணில் வாழுகின்ற ஜேர்மனி, போலந்து, துருக்கி, மொறக்கோ, கிறிஸ்லாந்து, போன்ற பல நாட்டு பிள்ளைகளின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களைத் தம்முடைய வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு வாழ்கின்றார்கள். ஆயினும் சில பெற்றோர்கள் வெள்ளை இன மக்களைத் திருமணம் செய்தாலும் பறவாயில்லை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சாதி குறைந்தவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிடிவாதமாக இருப்பதனால், பெற்றோரைப் பிரிந்து வாழுகின்ற பல இளந்தலைமுறையினர் ஜேர்மனியில் இப்போதும் காணப்படுகின்றார்கள். ஆனால், மக்களை சாதி வழமையால் பிரிப்பது அருவருக்கத்தக்கது என்று இளந்தலைமுறையினர் கூறுவதை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இம்மனப்போக்கு எதிர்காலத் தலைமுறையினருடன் எம்முடைய பெற்றோரின் பிடிவாதப் பண்பு உடைத்தெறியப்படும் என்பது நிச்சயமான உண்மையாக கருதப்படுகின்றது.

  பண பலம் மிக்க தமிழ் தனவந்தர்கள் தம்முடைய பணபலத்தைப் பலருக்கும் காட்டுவதற்கு விழாக்களைக் கோலாகலமாக நடத்துகின்றனர். அதனைப் பார்த்து பண பலமற்றவர்கள் கூட கடன் பெற்று திருமண வைபவங்களையும், பூப்புனித நீராட்டு விழாக்களையும், பிறந்தநாள் வைபவங்களையும் நடத்தி கடன்காரர்களாக வாழ்வதைத் தற்போது காணக்கூடியதாக இருக்கின்றது. ஓயாத உழைப்பும், கடன் தொல்லையும் பல ஆண்களை இருதய நோயாளியாக்கி மரணத்தைத் தழுவச் செய்திருக்கின்றது. 18 ஆவது பிறந்தநாள் விழாவில் தம்முடைய பிள்ளைகளுக்கு அதிக விலை மதிப்புள்ள வாகனங்களைப் பெற்றோர் பரிசளிப்பதும். அதன் பெறுமதி உணராது வயதுக் கோளாறினால், பிள்ளைகள் விபத்துக்களைச் சந்திப்பதும், ஹெலிகொப்டர்களில் மாப்பிள்ளை, பெண் அழைப்பு, தேரில் பவனி, போன்ற ஆடம்பரான விழாக்களும் தற்போது நடக்கின்றன. கடினமான தொழில்களைச் செய்து சம்பாதிக்கின்ற பணத்தை, இவ்வாறான அர்த்தமற்ற செலவுகளைச் செய்வதன் மூலம் பணத்தின் பெறுமதியைப் பிள்ளைகள் உணர்ந்து கொள்வதில்லை.

  போர்க் காலங்களில் தம்முடைய உடைமைகளையும், உறவுகளையும் பறி கொடுத்த தாக்கம் மனிதர்கள் மனநிலையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தம்முடைய நினவுகளை மறப்பதற்காக குடிக்கு அடிமையான பலர் புலம்பெயர்வில் இளவயதிலேயே உயிரை இழக்கின்றார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட பல கணவன்மார்கள் மனைவிமாரைத் துன்புறுத்தி பல இன்னல்களை அனுபவிக்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையிலும் விவாகரத்து ஜேர்மனிய மண்ணிலே தமிழர்களிடையே அதிகரித்துள்ளதை நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது. பணத்தைக் கொட்டித் திருமணவிழாவை நடத்தி அடுத்த இரு மாதங்களின் பின் விவாகரத்துக் கேட்டு பெற்றோரிடம் திரும்பும் எத்தனையோ இளைய தலைமுறையினரை தற்காலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. அளவுக்கு மிஞ்சிய பெண் சுதந்திரமும் விவாகரத்துக்களை அதிகரிக்கச் செய்துள்ளது. இது தற்போது சர்வசாதாரணமாகப்படுகின்றது. இதனால் பல பெற்றோர்கள் மனஉழைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

  சில பெற்றோர்களின் தவறான வழிகாட்டலில் வாழுகின்ற பிள்ளைகள் தம்முடைய சுயபண்புகளை இழந்து காணப்படுகின்றார்கள். தாம் வாழுகின்ற நாடு எமக்கு வசதி வாய்ப்புக்களைத் தந்திருக்கின்றது. பொது உடைமைகளை சீரழிக்கக் கூடாது. கிடைக்கின்ற பயன்களைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். அரசாங்கப் பணத்தில் வாழ்வதும். அப்பணத்தை முறையற்ற வழியில் செலவு செய்வதும் சில தரமற்ற பிள்ளைகளிடையே காணப்படுகின்றது. இவ்வாறான பிள்ளைகளுக்குச் சூழலும் கைகொடுக்கின்றது. பல மொழி கலாசாரத்தில் வாழுகின்ற போது இவற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

  இவ்வாறான தவறுகள் சிலவற்றைக் காலம் மறக்கச் செய்யும் என்றே கருதுகின்றேன். இந்த மண்ணில் கால் வைத்தபோது நாம் எவ்வாறு இருந்தோம் என்பதை எமது மக்கள் பலர் மறந்து விட்டனர். ஆயினும் காலம் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவருக்கும் கற்றுத் தருகின்றது என்பதே உண்மை.

  ஆனால், இனிவரும் காலங்களில் எமது மொழி, கலாசார பண்புகள் எதிர்வரும் தலைமுறையினருக்கு எவ்வாறு கடத்தப்படும், போற்றிப் பாதுகாக்கப்படும் என்பது பெற்றோர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. கலப்புத் திருமணமானது மொழி, கலாசாரத்தை எதிர்காலத்தில் எந்த அளவில் பாதுகாக்கும்? வேற்றுமொழியில் கல்வி, தொழில் புரிகின்ற எமது இளஞ்சமுதாயம் எமக்குப் பின் தமிழ் மொழியை எந்த அளவிற்குக் கொண்டு செல்வார்கள்? என்ற சந்தேகங்களுடனேயே இங்குள்ள தமிழ் கல்வி நிறுவனங்களும், இலக்கிய சங்கங்களும், தமிழ் ஊடகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எமக்குப் பின் இவற்றையெல்லாம் யார் தொடர்ந்து கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையற்ற மனங்களுடனேயே புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

  Neuralink Ni

  Brain computer interface research or brain machine interfaces   மனிதனின் இதயத்தில் கை வைத்தாகள். இதய மாற்று சத்திரசிகிச்சை, கல்லீரல், சிறு...