• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 31 டிசம்பர், 2019

  நாம் கொடுத்த வயது 2020  உருண்டு கொண்டிருக்கும் உலகத்திற்கு நாம் கொடுத்த வயது 2020. கோலாகலமாக ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாகவே புதிய வருடத்தை வரவேற்கின்றோம். வருடங்கள் தோறும் நாம் புதிய தீர்மானங்கள் எடுக்கின்றோம். நடத்திக்காட்ட வழி தேடுகின்றோம். வழுக்கி விடுகின்றோம். புதிய தொழில்நுட்பங்கள், நாகரிகங்கள் வருடங்கள் தோறும் நிறைந்து விடுவதுபோல் மனங்களில் மட்டும் ஏன் மாற்றங்கள், தெளிவு. விரிவுபட்ட சிந்தனைத்திறன், பகுத்தறிவு போன்றவை நத்தை வேகத்தில் நகர்ந்து முன்னேறுகின்றது? சிந்திப்போம்…..

  மெய், வாய், கண் மூக்கு, செவி, மனம் என்பவற்றின் மூலம் அறிகின்ற அறிவில் நல்லது எது? தீயது எது? என்று பகுத்தறிகின்ற அறிவே பகுத்தறிவு. இதற்குப் பெரிதாக எதுவும் செய்யத் தேவையில்லை. அறிவைச் சந்தேகித்தாலே போதுமானது. சற்று ஆழமாகச் சிந்தித்தாலே போதுமானது. பகுத்தறிவு தோன்றிவிடும்

  உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
  உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
  உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
  கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?

  இது சிவவாக்கியார் சிந்தனைத் திறன்.

  உலகத்தின் சமூக சீர்திருத்தங்களுக்கு முக்கிய காரண கர்த்தாக்கள் எழுத்தாளர்களே என்பதை மனம்பதிக்க வேண்டும். எழுதிக் குவித்து சமூக சிந்தனைக்கு வித்திட்டவர்கள் திருவள்ளுவர், சுவாமி விபுலானந்தர், பாரதி, பாரதிதாசன், அண்ணாத்துரை, பெரியார் ஈ.வெ.ராமசாமி  போன்ற எழுத்தாளர்கள். இதனால் சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இளவயதுத் திருமணம், பெண்உரிமை, விதவைத் திருமணம், சாதி மத பாகுபாடும் மூட நம்பிக்கைகளும், மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகள் போன்றவைகளின் தாக்கமும் இறுக்கமும் கட்டுப்பாடுகளும் மெல்லமெல்லத் தகர்த்து எறியப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவற்றின் வேகம் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவாகவே இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. 

  ஒன்றை ஏற்கும் போது இன்னொன்று அழிந்துவிட வேண்டும் என்பது நியதி. கையில் தொலைபேசிக்குள் உலகத்தை அடக்கியபோது மற்றைய அனைத்துக் கருவிகளும் இல்லாமல் போகின்றன. அதேபோல் மூடநம்பிக்கைக்குள் இருந்து மனிதன் வெளியேறுகின்ற போது அதைக் கடைப்பிடிக்கின்ற மனிதர்கள் இன்னும் மாறாத காரணம் ஏனென்று புரியவில்லை. இதை மீறுகின்ற போது எமக்கு ஏதாவது நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் மனிதர்களை மீண்டும் மீண்டும் மூடப்பழக்கவழக்கங்களுக்குள் வீழ்த்திவிடுகின்றது என்றே நான் கருதுகின்றேன். 

  ஆச்சாரம், ஆச்சாரம் என்று கூறி கணவன் இறந்த பின் எரிதணலில் மனைவியைத் தள்ளிய சமுதாயம் இப்போது எரி தணலில் தள்ளி கொலை செய்யவில்லை. இப்போது என்ன நடந்து விட்டது? கணவன் இறந்தால், நெற்றியில் பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது என்னும் சம்பிரதாயம் இல்லாமல் போன போது பெண்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? முதலாம் திகதி கோயிலுக்குப் போய் வருடத்தைத் தொடங்கியவர்களுக்கும் கோயிலுக்குப் போகாமல் வருடத்தைத் தொடங்கியவர்களுக்கும்  இடையே என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது? 94 வயதில் இறந்த பெரியாரும் இளவயதில் இறந்த சுவாமிமார்களிடையே வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் காணப்பட்டன? நித்தியானந்த சுவாமிகளைப் போற்றித் தொழுகின்ற சமூகம் இன்னும் இருந்து கொண்டுதானே இருக்கின்றது! புரியவில்லை? மதத்தின் பெயரால் அழிவுகளை மனிதன் சந்திக்கும் போது மதத்தை ஏன் மனிதன் ஆரம்பித்தான் என்னும் அர்த்தம் புரியாத மனிதர்கள் மூடநம்பிக்கைக்குள் மூழ்கிப் போகின்றார்கள். 

  நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே 
  சுற்றி வந்து மொணமொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
  நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
  சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? 

  என்றார் சிவவாக்கியார். 

  நல்லதைச் செய்ய மனம் பதித்தாலே போதும் உலகம் நல்லதாக மாறிவிடும். ஒவ்வொரு மனிதர்களும் நாட்டின் ஒவ்வொரு பிரஜைகள். அவர்கள் திருந்தினால், உலகம் திருந்தும். எழுதிக் குவித்து ஆவது என்ன என்று சிந்தித்து எழுதுவதை நிறுத்தினாலும் சமூகம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், சமூக சிந்தனையுள்ள எழுத்தாளர்கள் எழுதாமல் இருக்கப் போவதில்லை. 

  யாரும் வாசிக்காது விட்டாலும் நான் எழுதுவேன். நானே வாசிப்பேன். எழுதவேண்டியது என் கடமை. சமுதாயத்திடம் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லியே தீர்ப்பேன். சிந்தனையை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டே இருப்பேன். இதுவே இவ்வருடமும் என் தீர்மானமாக இருக்கும்.


  ஞாயிறு, 22 டிசம்பர், 2019

  டுயூஸ்பேர்க் நகரில் 21.12.2019 அன்று கலைகளின் சங்கமம்


  ஆடற்கலைமாமணி திருமதி.றெஜினி சத்தியகுமார் அவர்களின் ஆடற்கலாலயம் கண்ட 30 ஆவது ஆண்டுவிழா   மனிதர்களிடம்தான் வேற்றுமைகளும் பொறாமைகளும் சொந்தம் கொண்டாடும். ஆனால், அம்மனிதர்கள் கண்டு பிடித்த கலைகளுக்குள் பேதமில்லை, பொறாமையில்லை. கலைகளிடையே ஒற்றுமை மட்டுமே இருக்கின்றது. இதனை டுயிஸ்பேர்க் நகரில் நடைபெற்ற ஆடற்கலாலயத்தின் 30 ஆவது ஆண்டுவிழா நிகழ்வுகள் நிரூபித்துக் காட்டியது. இளையோர் கைகளில் பொறுப்புகளைக் கொடுங்கள் அவர்கள் இமயத்தைத் தொட்டுக்காட்டுவார்கள் என்பதை திரு.திருமதி சத்தியகுமாரனனின் பிள்ளைகளான ச.நிமலனும், திருமதி த.தீபனா அவர்களும் நிரூபித்துக் காட்டினார்கள். 

  21.12.2020 அன்று பிற்பகல் 14.30 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வுகள் 23.30 வரை தொடர்ந்தது. நேரம் எம்மைக் கட்டிப்போட்டதா? இல்லை கலை வடிவங்கள் எம்மைக் கட்டிப் போட்டதா? எம்மை மறந்து நடன உருப்படிகளுக்குள் ஆழ்ந்து போனோம். 4 வயதுப் பிள்ளை தொடக்கம் எம்மைக் கலைகளுக்குள் இழுத்து வைத்துக் கொண்டிருந்தனர். 

  ஒரு கலை ஆசிரியர் தம்முடைய இத்தனை மாணவர்களை ஆசிரிய அந்தஸ்துக்கு உயர்த்திப் பார்க்கும் பெருமையை திருமதி. றெஜினா சத்தியமூர்த்தி பெற்றிருப்பது பாராட்டத்தக்க விடயமே. ச.நிமலன், த.தீபனா, சு.தர்ஷிகா ஆகியோரின் நட்டுவாங்கத்திலும் த.லகீபன் அவர்களின் மிருதங்கத்திலும், செ.நிரூஜன், பா.சுபோஷினி, கா.தாரணி ஆகியோரின் பாட்டிலும், பா.பிரசாந்த் அவர்களின் வயலின் இசையிலும், சு.வர்ணன் அவர்களின் புல்லாங்குழல் இசையிலும் நடனங்கள் கலையின் உச்சத்தைத் தொட்டன.  கலைகள் தனித்தனிப் படைப்பானாலும் அவை ஒன்றாக இணையும் போதுதான் அற்புதம் புலப்படும் அதற்கமைய அனைத்துக் கலைஞர்களும் இவ்விழாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது உண்மையே. 

  பரதக்கலையின் ஒவ்வொரு உருப்படிகளும் ஒன்றையொன்று விஞ்சுவதாக அமைந்திருந்தன. ஒவ்வொரு நடனமணிகளையும் 4 வயது தொடக்கம் அணுவணுவாகப் பார்த்தேன். எவரின் நடனத்திலும் என்னால் குறை கண்டுபிடிக்க  முடியவில்லை. பரதக்கலையின் பல வடிவம் இந்து மதத்தின் புராணக் கதைகளை உலகுக்குக் காட்டுவதாக அமைந்திருக்கும். இதனை ஒவ்வொரு நடனத்திலும் உணரமுடிந்தது. 

  தாய்மாரும் அவர்களுடைய பிள்ளைகளும் இணைந்து  சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னும் பாரதியார் பாடலுக்கு ஆடிய நடனம் மனதை விட்டு அகலாது இருக்கின்றது. பார்க்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது. இன்னும் பரதக்கலை ஜெர்மானிய மண்ணில் 50 வருடம் கடந்து வாழும் என்பது நிச்சயம். 


  ச.நிமலனின் ஹனுமான் நடனம் பார்க்கும் போது நான் நிமலனைக் காணவில்லை. ஹனுமானையும், ஒரு திறமையையும், ஒரு ஊக்கத்தையுமே மேடையில் கண்டு ரசித்தேன். நிமலனுடைய பல நடனங்களைப் பார்த்திருக்கின்றேன். அவருடைய உற்சாகமும், உழைப்பும், ஊக்கமும், திறமையும் ஒவ்வொரு நடனத்திலும் தெரியும். அவரைப் பாராட்டாமல் என் விரல்கள் நகர மறுக்கின்றது. அவரை மனதிலே பதித்தே இந்த நிகழ்ச்சிக்கு நான் சங்கமமாகியிருந்தேன். கலைஞனை கடவுளின் வடிவமாகக் கண்ட வெற்றிமணி, சிவத்தமிழ் ஆசிரியர் கலாநிதி.மு.க.சு,சிவகுமாரன் அவர்கள் 2020 சிவத்தமிழ் இதழை சிவனாகத் தன்னுடைய கண்களுக்குத் தெரிந்த ச.நிமலன் அவர்களுக்கு முதல் பிரதியைக் கொடுத்து வெளியிட்டு வைத்தார். நிமலனுடைய சிவதாண்டவத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சென்றிருந்தேன். அந்த நடனம் இடம்பெறாத காரணத்தால் என் ஆசை நிறைவேறவில்லை.
          


  பாம்பு நடனத்தைப் பார்த்த போது நான் இலங்கையில் ஆடிய பாம்பு நடனத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். எத்தனை கலை நுணுக்கங்கள் இப்போது இணைந்துள்ளன. இதனைப் பழுகுபவர்கள் எந்தவித எலும்பு நோய்களுக்கும் உட்பட முடியாது. புதிய உத்திகளைக் கையாண்டு அக்ரோபாட் வடிவத்தையும் இணைத்து அற்புதமாக நிமலன் பழக்கியிருந்தார். நடனம் பழகுபவர்கள் யோகா பழகத் தேவையில்லை என்றுதான் பொதுவாகவே நான் நினைப்பேன். உச்சி தொடக்கம் உள்ளங்கால்கள் வரை ஒவ்வொரு அங்கங்களுக்கும் அசைவைக் கொடுக்கும் ஒரு நடனமே பரதக்கலை என்பதை நாம் அறிவோம். பரத முனிவரே சிவனிடமிருந்து பரத்தைப் பெற்று உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருந்தும் நிமலனைத் தவிர எந்த ஒரு ஆண்மகனும் அரங்கத்திற்கு நடனம் ஆடவில்லை என்பது வருதத்திற்குரிய விடயமாகவே பட்டது.   “பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாட வைத்தேனே” என்னும் பாடலைப் பாடி சபையோரை தன் இசைக்குள் கட்டிப் போட்ட செ.நிருஜன் பாராட்டுக்குரியவர். இந்தப் பாடலுக்கு இணையாக எந்தப் பாடலும் இதுவரை சினிமாவில் வரவில்லை என்று தான் நான் நினைக்கின்றேன். “சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை கண்கள் வந்தும் பார்வையில்லை” என்னும் பாடல் இதற்கு சற்று நிகராக அமைந்திருந்தது. ஆனால், இந்த அளவிற்கு மிருதங்க இசையைக் கூட்டுச் சேர்த்து மனதை எனக்குக் கொள்ளை கொள்ள வைக்கவில்லை என்று தான் கருதுகின்றேன். இதேபோல் கனடாவிலிருந்து வருகை தந்திருந்த கா.தாரணி பாடிய “பழம் நீ அப்பா. ஞானப் பழம் நீ அப்பா” என்னும் கே.பி.சுந்தராம்பாள் பாடல் சபையோரை மெய் மறக்கச் செய்தது. புலம்பெயர் நாடுகளின் தமிழ் கலை வடிவங்கள் எதிர்காலத்திலும் உச்சத்தைத் தொடும் என்பதற்கு இந்த நிகழ்வை விட எடுத்துக் காட்டுக்கள் தேவையில்லை.   இந்நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து பிரதம விருந்தினர் வந்திருந்தார். ஆச்சரியப்பட்டார். இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினர் ருக்மணி. விஜயகுமார் அவர்கள் வந்திருந்தார். ஆச்சரியப்பட்டார். புலம்பெயர் தேசத்தில் இப்படி, இவ்வளவு பெரிய மாணவக் கூட்டத்துடன் ஒரு ஆண்டுவிழா கண்டது அவர்கள் ஆச்சரியப்படும் விடயமே என்பது திண்ணம்.   இசைக்கலைஞர்களை இணைத்து எம்மை இன்பத்தில் ஆழ்த்திய ஆடற்கலாலய ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அனுசரணையாளர்கள் அனைவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். முழுவதுமாக ஒரு இன்பமான மாலைப் பொழுதாக இந்த நாள் அமைந்திருந்தது. 


  புதன், 18 டிசம்பர், 2019

  மன ஓசை பாகம் 1  ஒரு தாயின் உணர்வுகளின் போராட்டம் அதில் சுகமும் உண்டு சுமைகளும் உண்டு. சுகமாய்ச் சுமந்து வலியோடு வளர்த்து உயிராய் உரமாய் கனவாய் வெளியுலகில் நடமாட விட்ட உயிர்களில் பெண்கள் பிரச்சினைகள் ஒவ்வொன்றாய் தாமாக வெளிப்படுத்தும் விதமாகத் தருகிறேன். இவை அத்;தனை வடிவங்களையும் நீங்கள் வாசிக்கின்ற போது உங்கள் உணர்வுகளின் போராட்டம், உள் உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும்.


  மூளையின் அடங்காத ஆட்டிப்படைப்பு
  ஆழமாய் குடைந்ததால்
  வார்த்தைகளைக் கட்டிப்போட முடியாமல்
  கணனிக்குள் புதைகிறேன்.

  அந்தரங்கங்களில் அற்புதம் தோன்றும்
  அழுக்குகளில் சொர்க்கம் பிறக்கும்
  தலையணை மந்திரம் தாரகமந்திரமாகும்
  இருட்டறை எதிர்காலத்தைக் காட்டும் - அங்கு
  மனிதப்படைப்பு புனிதமாய் உருவெடுக்கும்  ஓருடலில் ஈருயிர் உலகில் நடமாடத் தொடங்கும்
  மார்பகங்கள் மெல்ல மெல்ல வீங்கும்
  தன்னுள் வளரும் உயிருக்கு மூளை
  உணவு தயார் படுத்தத் தொடங்கிவிடும்
  உடலமைப்பு பல மாற்றங்களைக் காட்டும்
  வயிறு மெல்ல மெல்ல பெருக்கும்
  முகத்தின் பொலிவு மெருகேறும்
  உடலினுள் ஒரு உயிர் தாயை
  மெல்ல மெல்ல உருசிக்கத் தொடங்க
  உண்பதெல்லாம் வாந்தியாய் வெளிவரத் தொடங்கும்
  குழந்தைக்கு தலைமயிர் வளர்கிறது என்று
  பாட்டியின் அனுபவக் குறிப்பு வெளிப்படுத்தும்

   
   நிமிர்ந்து அமருகின்றேன்
  நான் தாய்!
  நான் அம்மா!
  என் பலவீனத்தில் உன் தந்தையின் பலத்தில்
  உன் உயிர் என்னுள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.
  என் கரங்களைப் பிடித்தே உன் தந்தை நடக்கின்றார்
  என் பரிசத்தில் உன் பரிசத்தை உணரவிழைகின்றார்.

  அப்பா என்று மனதுள் இசைத்துப் பார்க்கின்றார்.
  எனை இறுகப் பிடித்தே என் இதயம் நுழைகின்றார்
  நன்றி என்றே காதுக்குள் காற்றாய் இசைக்கின்றார்
  பெருங் காரியம் செய்த உணர்வில் கர்வம் கொள்கின்றேன்  எனக்குள் நீ உன் அங்கங்களைப் பொருத்துகிறாய்
  உன்னை நீயே வடிவமைக்கின்றாய்
  அற்புதமாய் உரிமைப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றாய்
  அடித்தாலும் உதைத்தாலும் ஆக்கினைகள் செய்தாலும்
  அன்போடு இரசிக்கும் அந்தமனம் தாய் மனமே  எனக்குச் சுத்தமாய் புரியவில்லை
  வலிக்குக் கூடச் சிரிப்பு வருமா!!
  வலிக்கச் செய்வது யாரென்பதைப் பொறுத்ததே
  வலியின் வலிமை
  எனக்குள் வாழ வாழிடம் தேடிய நீ
  உலகுள் பிரவேசிக்க வழியையும் தேர்ந்தெடுத்தாய்
  அழுதேன் துடித்தேன்
  உனது அவசரமும் எனது துடிப்பும்
  அக்கண அகோர போராட்டம்


  என்னை விட்டு
  நீ வர எத்தனித்தாயா? இல்லை
  வரவுக்கு அஞ்சினாயா?
  காலம் போட்ட கணக்கை உன்னால்,
  கட்டுப்படுத்த முடியவில்லை.
  வெட்டிப்பிரித்து என் நெஞ்சிலே போட்டபோதே
  புரிந்தது தாய் ரசிக்கும் சங்கீதம்
  உடலின் உக்கிர வேதனையின் மருந்து
  பிய்த்து எடுத்த கலங்களின் காயத்தின்
  வேதனையை வென்ற சுகம் அத்தனையும்
  தன் மழலையின் முதல் ஆ, ஓ என்னும்
  சத்தம்தான் என்னும் உண்மை  தொடரும் ..............................................................................  வியாழன், 5 டிசம்பர், 2019

  பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்

  தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும் என்பது நிச்சயமான உண்மை. ''உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால், வாக்கினில் ஒளி உண்டாகும்'' என்பார் பாரதி. உள்ளத்தில் உள்ளது உண்மை என்னும் சத்தியம். வாய்வழி வருவது வாய்மை என்பதாகும். உள்ளத்தால் ஒன்றை நினைத்துவிட்டால், வாய்வழி அந்த உண்மை வாய்மையாக வெளிப்படும். உண்மை உள்ளத்தில் இல்லையென்றால், வாய்மை அந்தப் பொய்யை வெளிப்படுத்திவிடும். அப்படியென்றால், உள்ளம் சொல்வதைத்தான் உடல் செயல்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களே அதிகமானவர்களாக இருக்கின்றார்கள். எனவே வாய்வழி வருவது எல்லாம் உண்மையாக இருக்கும் என்று அர்த்தமில்லை. எனவே வாய்மை உண்மையென்ற பொருள்படாது. எனவே எமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் வாக்கிலும் உண்மை ஒளி உண்டாகும். 

  பொய்மையும் வாய்மையிடத்துப் புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என வள்ளுவர் கூறுகின்ற போது நன்மையைத் தரும் என்றால் பொய் கூட உண்மைக்குச் சமமானது என்பார்கள். இங்கு கூட உண்மைக்கு அப்பால் வாய்மை என்ற வார்த்தையையே வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். இங்கு உள்ளத்தில் உண்மை இருக்க வாய்வழி வாய்மையாகப் பொய் வெளிப்படுகின்றது. பிறருக்கு நன்மை கிடைப்பதற்காக என்றே இதைக் கருதவேண்டியுள்ளது. ஆனால், அங்கு நன்மை கிடைப்பதற்காக மறைக்கப்பட்ட உண்மைகூட ஒரு இடத்தில் வெளிப்பட்டு விடும் என்பதே சத்தியம். அதனால், நம்பிக்கை உள்ளவர்களிடமும், நல்ல நண்பர்களிடமும், பெற்றோரிடமும் உண்மையை மறைத்தல் கூடாது. அது கொலைக்குச் சமமானதாகும். 

  சரித்திரத்தில் இடம் பிடிப்பதற்கு மனமறிந்து உண்மைகளை மறைப்பதற்குப் பலர் முற்படுகின்றார்கள். உலோபியைப் போல உள்ளம் நிறைந்த உண்மையும் ஓலைக்குடிசையில் வாழ்கிறது என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்கின்றார். ஆனால் தோண்டத் தோண்டப் புலப்படும் அகழ்வாராய்ச்சிகள் போல என்றோ ஒருநாள் உண்மை வெளிவரும் என்னும் சத்தியத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். பாவத்திற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், அவற்றுக்கெல்லாம் பொருத்தமான கருவியாகப் படுவது பொய்யே ஆகும். பாவமான காரியங்களைச் செய்துவிட்டு அவற்றை மறைப்பதற்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. எனவே உண்மைக்கு மாறானது பொய் என்றால், பொய் சொல்பவர்கள் பாவம் செய்பவர்களாகவே கருதப்படுகின்றார்கள். உண்மை வெளிப்படும் பட்சத்தில் மானம், மரியாதை என்னும் பண்புகளை இழந்து தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலைமை பொய் கூறியவர்களுக்கு ஏற்படுகின்றது.

  ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் நடத்தலாம் என்பார்கள். ஆனால், அந்தப் பொய்கள் வெளிப்படும் பட்சத்தில் அந்தக் குடும்பமே சிதைந்து போகும். இதனால், உண்மையை மறைத்தமைக்கு எந்தவித பயனுமில்லை. குடிகாரன் குடிக்கமாட்டேன் என்று கூறுகின்ற சத்தியமானது அடுத்த விநாடியே மறைந்து விடுகின்றது என்றால் உண்மையன்றி அக்குடிகாரன் கூறியது வாய்வழி வந்த வார்த்தைகளே ஆகும். அது நில்லாது ஓடிவிடும்.

  சில உண்மைகள் கூட காலத்துக்குக் காலம் மாறக்கூடியது. சூரியன் பூமியை வலம் வருகின்றது என்று அன்று விஞ்ஞானிகள் கூறிய உண்மை இன்று பொய்யாகப்பட்டுள்ளது. சூரியன் நகர்வதில்லை பூமியே சூரியனைச் சுற்றி வருகின்றது என்பது நிரூபணமாகியுள்ளது. ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புக்களும் நிச்சயமான உண்மைகளாகாதவை. அவை காலத்துக்குக் காலம் மாறக்கூடியது. 

  நாம் காணுகின்ற இச்சமுதாயத்தில் தமக்கு பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனமறிந்து பல பொய்களை துணிந்து கூறுகின்றார்கள். ஆனால், அப்பொய்கள் ஒருநாள் பூதாகரமாக வெளிப்பட்டு நிற்கும் என்று அவர்கள் அறியாது இருக்கின்றார்கள். பாண்டிமாதேவியின் சிலம்பைக் கோவலன் திருடினான் என்று  பொற்கொல்லன் கூறிய பொய்யானது, பொய்ப்பிக்கப்பட்டு உண்மை வெளிப்பட்டது. அப்போது பார்ப்பார், அறவோர் பசு, பத்தினிப் பெண்டீர், மூத்தோர், குழவி நீங்கலாக பாண்டியநாடு முழுவதுமாக எரிக்கப்பட்ட செய்தி சிலப்பதிகாரம் தெரியாதவர்கள் கூட தெரிந்த செய்தியாகும். 

  போர்க்களத்தில் குற்றுயிரும் குறை உயிருமாகக் கிடக்கின்றான் கர்ணன். அவன் செய்த தர்மங்கள் அவன் உயிரைப் போகவிடாது காப்பாற்றுகின்றது. இங்கு தர்மம் தலைகாக்கின்றது. அந்த சந்தர்ப்பத்தில் மறைக்கப்பட்ட உண்மை வெளிப்படுகின்றது. குந்தியானவள் அத்தனை வருடங்களும் கர்ணன் தன்னுடைய மகன் என்று மறைத்து வைத்திருந்த உண்மை, அவனது இறப்பின் இறுதித் தருணத்தில் வெளிப்படுகின்றது. உண்மை கடைசிக் காலத்தில் கூட கைவந்து உதவும். தோண்டத் தோண்ட வெளிப்படுகின்ற அகழ்வாராய்ச்சித் தடயங்கள் போல உண்மைகள் எம்முன்னே வந்து நிற்கும்.

  சத்தியம், உண்மை என்றவுடன் எம்முடைய மனதிலே முதலில் வந்து நிற்பது சூரிய குலத்தின் 28 ஆவது மன்னனாகிய அரிச்சத்திர மன்னனே ஆவார். அவர் கனவிலே செய்த சத்தியத்தை மறைத்து ஒரு பொய் சொல்லியிருந்தால் தன் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவித்திருக்கத் தேவையில்லை. பாம்பு கடித்து மகன் இறந்த போதும் கூட உண்மையை மறைக்கவில்லை. ஆனால், தக்க சந்தர்ப்பத்தில் உண்மை தன் வீரியத்தைக் காட்டியது. அரிச்சந்திரமன்னனும் சுவர்க்க வாழ்வு பெற்றார். கதைகள் எல்லாம் உண்மையானவையான இல்லை கட்டுக்கதைகளேதான் என்று நாம் கருதினாலும், இவை அனைத்தும் மனித வாழ்வுக்குத் தேவையான கருத்துக்களையே எமக்குத் தெரிகின்றன. 

  பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின் அரிச்சந்திர நாடகம் பார்க்கச் சென்ற காந்தியடிகள் தன்னுடைய நண்பனையும் அழைத்துச் சென்றாராம். நாடகம் பார்த்துத் திரும்பிய போது இந்நாடகம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது, இந்த நாடகம் என் வாழ்க்கையையே மாற்றப் போகிறது. சத்தியத்தை உயிருள்ளவரை காப்பாற்ற வேண்டும் என்று கருதுவதாகச் சொன்னாராம். அவருடைய நண்பரிடம் கேட்ட போது சத்தியத்தின் படி நடந்தால், மனைவி, பிள்ளைகளைக் கூட  இழக்க வேண்டிவரும் என்று கூறினாராம். எனவே அனைத்தும் அவரவர் புரிதலின்படியே நடக்கும். இக்கட்டுரையைக்கூட உங்கள் புரிதலின்படியே ஏற்றுக் கொள்வீர்கள் என்பது நிச்சயம்.

  எனவே கண்ணதாசன் தந்த வரிகளுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். ''உண்மையை வாங்கிப் பொய்களை விற்று உருப்பட வாருங்கள். காலம் போனால் திரும்புவதில்லை. காசுகள் உயிரைக் காப்பதுமில்லை. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது'' 

  Neuralink Ni

  Brain computer interface research or brain machine interfaces   மனிதனின் இதயத்தில் கை வைத்தாகள். இதய மாற்று சத்திரசிகிச்சை, கல்லீரல், சிறு...