• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 31 டிசம்பர், 2019

    நாம் கொடுத்த வயது 2020



    உருண்டு கொண்டிருக்கும் உலகத்திற்கு நாம் கொடுத்த வயது 2020. கோலாகலமாக ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாகவே புதிய வருடத்தை வரவேற்கின்றோம். வருடங்கள் தோறும் நாம் புதிய தீர்மானங்கள் எடுக்கின்றோம். நடத்திக்காட்ட வழி தேடுகின்றோம். வழுக்கி விடுகின்றோம். புதிய தொழில்நுட்பங்கள், நாகரிகங்கள் வருடங்கள் தோறும் நிறைந்து விடுவதுபோல் மனங்களில் மட்டும் ஏன் மாற்றங்கள், தெளிவு. விரிவுபட்ட சிந்தனைத்திறன், பகுத்தறிவு போன்றவை நத்தை வேகத்தில் நகர்ந்து முன்னேறுகின்றது? சிந்திப்போம்…..

    மெய், வாய், கண் மூக்கு, செவி, மனம் என்பவற்றின் மூலம் அறிகின்ற அறிவில் நல்லது எது? தீயது எது? என்று பகுத்தறிகின்ற அறிவே பகுத்தறிவு. இதற்குப் பெரிதாக எதுவும் செய்யத் தேவையில்லை. அறிவைச் சந்தேகித்தாலே போதுமானது. சற்று ஆழமாகச் சிந்தித்தாலே போதுமானது. பகுத்தறிவு தோன்றிவிடும்

    உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
    உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
    உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
    கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?

    இது சிவவாக்கியார் சிந்தனைத் திறன்.

    உலகத்தின் சமூக சீர்திருத்தங்களுக்கு முக்கிய காரண கர்த்தாக்கள் எழுத்தாளர்களே என்பதை மனம்பதிக்க வேண்டும். எழுதிக் குவித்து சமூக சிந்தனைக்கு வித்திட்டவர்கள் திருவள்ளுவர், சுவாமி விபுலானந்தர், பாரதி, பாரதிதாசன், அண்ணாத்துரை, பெரியார் ஈ.வெ.ராமசாமி  போன்ற எழுத்தாளர்கள். இதனால் சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இளவயதுத் திருமணம், பெண்உரிமை, விதவைத் திருமணம், சாதி மத பாகுபாடும் மூட நம்பிக்கைகளும், மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகள் போன்றவைகளின் தாக்கமும் இறுக்கமும் கட்டுப்பாடுகளும் மெல்லமெல்லத் தகர்த்து எறியப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவற்றின் வேகம் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவாகவே இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. 

    ஒன்றை ஏற்கும் போது இன்னொன்று அழிந்துவிட வேண்டும் என்பது நியதி. கையில் தொலைபேசிக்குள் உலகத்தை அடக்கியபோது மற்றைய அனைத்துக் கருவிகளும் இல்லாமல் போகின்றன. அதேபோல் மூடநம்பிக்கைக்குள் இருந்து மனிதன் வெளியேறுகின்ற போது அதைக் கடைப்பிடிக்கின்ற மனிதர்கள் இன்னும் மாறாத காரணம் ஏனென்று புரியவில்லை. இதை மீறுகின்ற போது எமக்கு ஏதாவது நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் மனிதர்களை மீண்டும் மீண்டும் மூடப்பழக்கவழக்கங்களுக்குள் வீழ்த்திவிடுகின்றது என்றே நான் கருதுகின்றேன். 

    ஆச்சாரம், ஆச்சாரம் என்று கூறி கணவன் இறந்த பின் எரிதணலில் மனைவியைத் தள்ளிய சமுதாயம் இப்போது எரி தணலில் தள்ளி கொலை செய்யவில்லை. இப்போது என்ன நடந்து விட்டது? கணவன் இறந்தால், நெற்றியில் பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது என்னும் சம்பிரதாயம் இல்லாமல் போன போது பெண்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? முதலாம் திகதி கோயிலுக்குப் போய் வருடத்தைத் தொடங்கியவர்களுக்கும் கோயிலுக்குப் போகாமல் வருடத்தைத் தொடங்கியவர்களுக்கும்  இடையே என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது? 94 வயதில் இறந்த பெரியாரும் இளவயதில் இறந்த சுவாமிமார்களிடையே வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் காணப்பட்டன? நித்தியானந்த சுவாமிகளைப் போற்றித் தொழுகின்ற சமூகம் இன்னும் இருந்து கொண்டுதானே இருக்கின்றது! புரியவில்லை? மதத்தின் பெயரால் அழிவுகளை மனிதன் சந்திக்கும் போது மதத்தை ஏன் மனிதன் ஆரம்பித்தான் என்னும் அர்த்தம் புரியாத மனிதர்கள் மூடநம்பிக்கைக்குள் மூழ்கிப் போகின்றார்கள். 

    நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே 
    சுற்றி வந்து மொணமொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
    நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? 

    என்றார் சிவவாக்கியார். 

    நல்லதைச் செய்ய மனம் பதித்தாலே போதும் உலகம் நல்லதாக மாறிவிடும். ஒவ்வொரு மனிதர்களும் நாட்டின் ஒவ்வொரு பிரஜைகள். அவர்கள் திருந்தினால், உலகம் திருந்தும். எழுதிக் குவித்து ஆவது என்ன என்று சிந்தித்து எழுதுவதை நிறுத்தினாலும் சமூகம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், சமூக சிந்தனையுள்ள எழுத்தாளர்கள் எழுதாமல் இருக்கப் போவதில்லை. 

    யாரும் வாசிக்காது விட்டாலும் நான் எழுதுவேன். நானே வாசிப்பேன். எழுதவேண்டியது என் கடமை. சமுதாயத்திடம் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லியே தீர்ப்பேன். சிந்தனையை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டே இருப்பேன். இதுவே இவ்வருடமும் என் தீர்மானமாக இருக்கும்.


    12 கருத்துகள்:

    1. சிவவாக்கியார் சிந்தனைத் திறன் சிறப்பு...

      உங்களின் தீர்மானங்கள் வெற்றியடைய வாழ்த்துகள்...

      பதிலளிநீக்கு
    2. //எழுதவேண்டியது என் கடமை//

      உண்மை இந்த உறுதி போதும்
      இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

      பதிலளிநீக்கு
    3. வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. பின்னூட்டத்திற்கு நன்றி மனோ சாமிநாதன் அவர்களே

        நீக்கு
    4. பொருள் பொதிந்த கட்டுரை. பொருத்தமான தலைப்பு. தொடர்ந்து எழுதுங்கள் கௌசி . அதுவே நம் குறிக்கோள்.

      பதிலளிநீக்கு
    5. இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

      பதிலளிநீக்கு
    6. யாரும் வாசிக்காது விட்டாலும் எழுதுவேன்....அதிகம் ரசித்தேன்.

      பதிலளிநீக்கு
    7. சிறப்பான பகிர்வு. சிறப்பான சிந்தனைகள். தொடர்ந்து எழுதுங்கள்.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...