• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வெள்ளி, 26 ஜூலை, 2013

  எனது என்னையே நானறியேன் வெளியீட்டுவிழா பேச்சு


       
  எனது குரலில் கேட்க பச்சை பட்டனை அழுத்தவும்
   
  Audio recording software >>
     
            காலத்தின் கட்டாயத்தில் காலன் கையில் அகப்பட்டு
            ஞாலத்தின் போக்கிலே வாழ்வைத் தொலைத்து - இந்
            நூலுக்கு கதாநாயகனாய் நுழைந்து மீண்ட
            அமரர் கல்விராஜன் அவர்களுக்கே சமர்ப்பணம்.


  விரைந்து செல்லுகின்ற பொழுதுகளில், விடியலைத் தேடும் உயிர்களின் மத்தியில், பொழுதுகளின் விரையத்தில், இன்றும் ஒருநாள்; எமக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. என் வாழ்வென்ற புத்தகத்தின் புனிதமான  அங்கமாக இன்றையநாளை நான் கருதுகின்றேன். இந்நாளில் எனை உலகுக்களித்து, உயிர் கொடுத்து, உருவாக்கி இம்மேடையிலே நான் தலைநிமிர்ந்து நிற்க தரம் தந்த என் பெற்றோரை முதலில் வணங்குகிறேன். அழைப்பின் பேரில் இந்நூலின் மூலம் நான் பெற்ற அநுபவச் சேர்வைகளையும்  என் நன்றிக்கடன்களையும் அறியச்செய்யும் உரையை ஆற்ற வந்துள்ளேன்.

                     சூழலில் சிதறிக்கிடக்கும் கேட்டல் உணர்வுகளில் சிக்கியுள்ளோரை மேடைப்புள்ளிக்குக் குவிக்கும் வண்ணம் அரங்கைப் பொறுப்பேற்று தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் நயினை விஜயன் அவர்களே! 
          
                     மழுங்கிக்கிடக்கின்ற, மறைந்து கிடக்கின்ற அறிவை ஊக்கமெனும் நீர் கொண்டு அலசச் செய்கின்ற இலண்டன்தமிழ்வானொலி, பாமுகக் காவலரே! சிறப்பு விருந்தினர் நடாமோகன் அவர்களே!

                   
  வார்த்தைகளால் வடிப்பதை விட இசையால் இதயங்களை நெகிழவைக்கின்ற கவிக்கோ பரமவிஸ்வலிங்கம் அவர்களே! 
                  

   எட்டநிற்கும் சூழ்நிலை ஏற்படினும் விட்டுச்செல்லாது தொடந்து செல்லும் நட்பு உறவுகளே! சொந்தங்களே! தூரத்தை தொலைதூரம் வைத்துவிட்டு இவ்விழா மண்டபத்தை மட்டுமே நெருக்கமாக எண்ணி   எம்மை நெருங்கி வந்திருக்கின்ற அயல்நாட்டு நண்பர்களே! Gelsenkirchen நகரத்து மக்களே! அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

                   2008 ஆம் ஆண்டு இலண்டன்தமிழ் வானொலியில் வாழ்வியல் இலக்கியம் கூறும் இலக்கியநேரம் என்னும்; நிகழ்ச்சியில் வாரம் ஒரு இலக்கியம் நான் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதில் புலம்பெயர்வில் மக்கள் சந்திக்கின்ற பல பிரச்சினைகளை மையமாக வைத்து பல உண்மைக்கதைகளை இலக்கியமாகத் தந்து கொண்டிருந்தேன். அவ்வேளை தவமலர் அவர்கள் தன்னிலை தடுமாறியிருந்த வேளை முழுவதுமான நினைவுப்பேழை குறையுண்டிருந்தவேளை என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தார். தன்னுடைய நிலையினைக் கூறினார். இவற்றை வைத்தும் ஒரு இலக்கியம் எழுதித் தரும்படிக் கேட்டுக் கொண்டார். சிலருடைய பெயர்களை முன் வைத்து அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் என்று நான் கூறினேன். ஆனால், இல்லை, கௌசி ஒருவரிடம் கேட்டேன் மறுத்துவிட்டார். தயவுசெய்து இச்செய்திகள் உலகப்பரப்பில் வெளிவரவேண்டும் அதனால் நீங்களே இதை எழுதுவது சிறப்பு என்று மீண்டும் மீண்டும் வலிந்து கேட்டுக் கொண்டார். சமூக அழுக்குகளைக் கழுவித் துடைக்கும் எழுத்துத் துறையைக் கையேற்ற நான் இவ்வாறான சம்பவங்களை வெளிக்கொண்டுவராவிடில்,             எழுத்தென்ற ஆயதத்தை நான் பயன்படுத்துவதில் எந்தவித பயனுமில்லை என்று உணர்ந்தே சம்மதித்தேன். அக்கதையில் வரும் பிரச்சினைகளுக்கு முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்ளுகின்றேன். என்று தவமலர் அவர்கள் கைப்பட ஒரு கடிதத்தை எனக்கு எழுதித்தந்திருந்தார். அவ்வாரம் தொடங்கி என் குரலில் இசைக்கலவை சேர்க்கப்பட்டு 4 வாரங்கள் இலக்கியமாக இக்கதை இலக்கியநேரத்தில்   வெளியானது. அப்போது இவ்விலக்கியம் மிகுந்த வரவேற்புப் பெற்றது. அம்மகிழ்ச்சியில் தவமலர் அவர்கள் இதை ஒரு நூலாக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
                 
    பின் இதனை இணையத்தளத்தில் இன்னும் சிறிது விரிவாக தொடர்கதையாக பதித்திருந்தேன். அதைப் பார்வையிட்ட உலகப்பரப்பிடையும் நல்ல பாராட்டைப் பெற்றது. அப்போது வெல்லவூர் கோபால் என்னும் சிறந்த எழுத்தாளர் அவர்கள், யதார்த்தத்தை உணர்த்தும், இக்கால நடைமுறைக்கு ஏற்ற இந்த கதையை மேலும் விரித்து ஒரு நாவலாக்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறே நூலாக்க வேண்டும் என்று விரும்பியிருந்தவேளையிலே தவமலர் அவர்கள் தனது கணவன் ஒரு வருட நினைவுநாளுக்கு இந்தக் கதையை ஒரு புத்தகமாகலாமா கௌசி என்று கேட்டார். நானும் சம்மதித்து ஒரு நூலுக்குரிய உள்ளடக்கம் அதில் போதாத காரணத்தினால்,  அதை விரிவாக எழுதித்தருவதாகக் கூறியிருந்தேன்.
                 
  கல்விராஜன் அவர்களை நான் கண்டதில்லை.
  கேள்விப்பட்டிருக்கின்றேன். கதை நடைபெறுகின்ற காலங்களில் என்னோடு பேசியிருக்கின்றார். அக்காலங்களில் முழுவதுமாக என்னால் அவர் அறியப்படவில்லை. அதனாலேயே இவ்விலக்கியம் வானொலியில் வலம் வந்தவேளையில் இறுதி அங்கம் முடிவில் இவ்விலக்கியம் ஒரு பக்கப் பார்வையிலேயே பேசப்பட்டது. இது கரன் பக்கப்பார்வையில் வேறுவிதமாக அலசப்படலாம் என்று கூறியிருந்தேன்.
               
                 அதன்படி தவமலர் கூறிய சம்பவங்களைத் தவிர வேறு பல விடயங்களைத் திரட்டத் தொடங்கினேன். கதையின் நாயகன் பற்றிய பல விடயங்களைப் பெற்றுக் கொண்டேன். என் அநுபவங்களால், இக்கதையை அலங்கரித்தேன். கதைக்கு அழகூட்டப் பல கற்பனை நிகழ்வுகளை அணிகலனாக்கினேன். ஒரு சமுதாய எழுத்தாளன் எழுத்துக்கள் வாசகர்களை திருப்திப்படுத்துவதுடன், சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களையே அளிக்கவேண்டும் என்பதில் கூடிய கவனமெடுத்தேன். அதன்படி அவர் கேட்டுக்கொண்டதற்கமைய பங்குனி மாதம் இந்நூலை நிறைவு செய்து தவமலர் அவர்களிடம் ஒப்படைத்தேன். ஆனால், அதை நூல்வடிவில் ஆக்குவதற்கான அச்சகஅநுபவம், உதவிகள் இல்லாத காரணத்தினால், அப்பொறுப்பையும் அவர் என்னிடமே ஒப்படைத்திருந்தார். ஒரு நூல் இலங்கையில் அச்சகத்தில் கோர்க்கப்பட்டு ஒரு நூலாக ஆக்கப்பட்டு விமானம் ஏறி ஜேர்மனி வந்தடைய வேண்டுமென்றால், எத்தனையோ பேரின் உழைப்புக்கள் அதில் சேர்ந்து கொள்ளும் என்பதை நூல் வெளியீடு செய்தவர்கள் அறிந்திருப்பார்கள். இவ்வேளையில் என் உறவினர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

                   எதை எழுதிக்கொட்டினாலும் சட்டைசெய்யாது அதைப் பொன் எழுத்துக்களாக ஏற்று, வான் பரப்பிலே வலம் வரச் செய்து, உறங்காது எம்மை விழித்திருக்கச் செய்து, அறிவுச் சுரங்கத்தை ஆ10ழ்ந்து தோண்டி, வெளிவரச் செய்கின்ற இலண்டன் தமிழ் வானொலிக்கும் அதன் அதிபர் அவர்களுக்கும் இவ்வேளை எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். இலக்கியநேரத்திலே பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும் போக்கை மாற்றியமைத்து, பாட்டுடைத்தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல தந்து ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் சாதாரண குடிமக்களின் வாழ்வும் ஒரு இலக்கியமே என இலக்கியநேரத்தை வாழ்வியல் கூறும் இலக்கியமாக மாற்றியமைத்த அதிபர் நடாமோகன் அவர்களின் தூயசிந்தனைப் போக்கிற்கு நாம் தலைசாய்க்கவேண்டும். பெருநன்றியை மனமுவந்து தந்தேயாக வேண்டும்.
                   

                      படிக்காதவனால் படைக்கமுடியாது. வாசிப்புத்தான் ஒரு மனிதனைப் பூரணமனிதனாக்குகின்றது. இது என்ன? தவமலரின் கதைதானே? இதில் என்ன இருக்கப்போகின்றது எனக் கூறுவோர். நிச்சயம் படைக்கமுடியாதவர்கள், படைப்புக்களைப் படிக்காதவர்கள், வெறுமனே இருக்கைகளுக்கு பாரமாகவும், விழாக்களுக்கு முகம் காட்டுபவர்களாகவும் இருப்பவரே என்பதை அறிந்ததனால், செவிக்குள் மட்டுமே இவ்வார்த்தைகளை எடுத்து மூளைக்குச் செலுத்தாது வீசிவிட்டேன். அடுத்தவர் சரித்திரம் எமக்கேன் என்று நினைப்பவர்கள் ஆண்டவனுக்கே நாம் சரித்திரம் உருவாக்கியிருக்கின்றோம். அதற்குள் பல தத்துவங்களை கூறுகின்றோம் என்பதைச் சற்று உணர்ந்து கொள்ளவேண்டும்.

                    இந்நூலுக்குள் என்ன இருக்கின்றது என்பதை நூலுக்கு அணிந்துரை தந்த பவானந்தராஜா அவர்களும், சிறப்புரை தந்த திருமதி.ஜெகதீஸ்வரி மகேந்திரனும், நூலினுள் சிறப்பாகத் தந்திருக்கின்றார்கள். அவர்களுக்கும் இவ்வேளை நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் நூலுக்கு விமர்சனம் செய்த ஸ்ரீஜீவகன் அவர்கள் மிகத் தெளிவாக விமர்சனத்தைச் செய்திருக்கின்றார். இந்தளவிற்கு என்னால் கூட இந்நூல் பற்றிக் கூறமுடியாது. இவ்வேளை சிரமத்தைக் கருதாது முழுவதுமாக ஆழமாகப் பார்வையிட்டு இவ்விமர்சனத்தைத் தந்திருந்த ஸ்ரீஜீவகன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகட்டும். 

               எழுத்துக்களை எனக்குச் சொந்தமாக்கும் போது என் மூளையைத் திறந்து வைத்துக் கொள்ளுகின்றேன். அதனுள் ஓடியோடித் தேடுகின்ற அதிர்வுகளின் அசைவில் வந்து விழுகின்ற எழுத்துக்கள் என்ன ஆச்சரியம் மூளை நினைத்துக் கொண்டிருக்கும்போதே வார்த்தைகள் வந்து விழுகின்றன. எனது எழுத்துக்கள் வேறு பலரின் பெயரில் நூல்களில், பத்திரிகைகளில், மேடைப்பேச்சுக்களில் வெளியாகியுள்ளன. யார் யாரோ என் வரிகளை உச்சரிக்கும்போது எனக்குள் ஆனந்தம் தோன்றுகின்றது

              ஆனால், என் கட்டளைகளை என் கை நிவர்த்தி செய்து முதல் முதல் வெளியான நூல் இந்த தவமலரின் என்னையே நானறியேன் என்னும் நூல்த்தான். இந்த பிரபஞ்ச சாகரத்தில்  Bigban  என்று சொல்லப்படுகின்ற முதல் வெடிப்பில் சிதறிய சூரிய நட்சத்திரங்கள் போல் உலகமெல்லாம் பற்பல கதை வடிவங்கள். அதற்குள் இந்நூலுக்கு தட்டிவிட்டாலும் உதறித்தள்ளினாலும் ஒட்டிக்கொள்ளுகின்ற ஒரு கருவை எனக்களித்து அதை நூலாக்கி வெளியிட்ட  தவமலர் அவர்களுக்கு மிக்கநன்றியுள்ளவளாக இருக்கின்றேன். என் எழுத்துலக சரித்திரத்தில் இந்நூல் போல் தவமலர் அவர்களும் ஓரிடம் பெறுகின்றார்.
                
  ஒரு மனிதன் எண்ணங்களின் ஊற்று ஒரு நூல் என்ற தட்டில் வைத்து பருகப் படைக்கும் போது அதை உள்ளன்புடன் ஏற்றுக் கொள்வோர் எத்தனை பேராக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. ஒரு புத்தகத்தினுள் நுழையும் போது மனிதனுக்கு ஒரு புதிய அகத்தினுள் நுழைவது போன்ற உணர்வு ஏற்பட வேண்டும். ஒரு புதிய வீட்டினுள் புகும் போது ஒரு புதிய அநுபவம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். அதுபோலவேதான் புத்தகமும். அதற்குள் புகுந்து வெளிவரும்போது புதிய ஒரு அநுபவத்தைப் பெற்றுவருவீர்கள். அந்த உணர்வை இந்தப் புத்தகம் உங்களுக்குத் தரும் என்று நான் நிச்சயமாகக் கூறி உங்களிடம் இருந்து தற்காலிகமாக விடுபடுகின்றேன்.

  நன்றி வணக்கம்.


  புதன், 24 ஜூலை, 2013

  ஸ்வரராகா இசைக்கலாலய பேச்சு

                                   
  வானகமும் வையகமும் வாழ்த்த, இவ்வகம் மாஞ்சுவை, தேன்சுவை, பலாச்சுவை என நாச்சுவை கூட்டுமாப்போல் வயலின், மிருதங்கம் வாய்ப்பாட்டு என எம் செவிச்சுவை கூட்டிநிற்க ஸ்வரராகா இசைக்கலாலயத்தின்  20 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற பிரதமவிருந்தினர் ஞானரஞ்சிதம் விஜயரெட்ணம் அவர்களே!   இசைக்கலாலய அதிபர் தர்மினி தில்லைநாதன் அவர்களே! அவருக்குத் துணையாக இக்கலாலயத்தில் பணி ஆற்றுகின்ற வயலின் ஆசிரியை பாலஜோதி அமிர்தலிங்கம் அவர்களே! இசை ஆசிரியர்களே! ஒளியின் திசைக்கேற்ப தலைசாய்த்து வளரும் தாவரம் போல் இசையின் திசைக்கேற்ப நெரளள மாநகரம் நோக்கி வருகை தந்திருக்கும் இசைப்பிரியர்களே! பெற்றோர்களே! அனைவருக்கும் எனை உலகுக்கீன்ற என் பெற்றோரை மனதில் நிறுத்தி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 
              

                                     தேடிக்கற்ற இசைத்தேன் விருந்து படைக்கக் கொடுக்கும் படையல் நாள் இன்று. தமது ஸ்வரராகா இசைக்கலாலயத்தின் தேனீக்களை ஒன்றாக அழைத்து வந்து எமக்கெல்லாம் இசைப்படையல் கொடுத்துள்ள  ஆசிரியர்களுக்கும், காதுக்குள் நுழைந்து இதயத்தை நிரப்பி மனதை ஒருமைப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் இளம் கர்நாடக இசைப்பாடகர்களுக்கும் முதலில் நன்றியைக் கூறவேண்டும்.
              

                                   கோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு நாலுபடி பால் கறக்கும். என புராணம் சொல்கிறது. இசைக்கேட்டு ஓங்கிவளரும் தாவரம் என விஞ்ஞானம் சொல்கிறது. இவ்வாறு உலகத்து மக்கள் அனைவரும் மயங்கும், கட்டுபடும், ஈர்ப்பு சக்தி ஒன்று உண்டென்றால், அது இசை என்கின்ற ஒன்றே என்று சொன்னால், இதை யாரும் மறுக்கமுடியாது. உணவு, உடை, உறையுள் இவற்றிற்கு அடுத்ததாக எது அவசியம் என்றால், அது இசையேதான். பாடாத மனிதன் யாருண்டு, பாடலை ரசிக்காத மனிதன் யாருண்டு. இக்கர்நாடக இசைக்கு தாளம் தெரியாவிடினும் தலையசைத்துத் தலையால் தாளம் போடாத மனிதர்கள் தான் யாருண்டு. 
               


                                 இசையானது மேற்கத்தைய இசை, வட இந்திய இசை அதாவது ஹிந்துஸ்தானி, நாமெல்லாம் இரசித்துக் கொண்டிருக்கின்ற கர்நாடகஇசை என மூன்றுவகைப்படுகின்றது. அதேபோல் இராகங்கள் பலவகைப்படுகின்றன. அவ் இராகங்கள் மூலம் பல பயன்கள் கிடைக்கின்றன என அறிந்தவர்கள் அரிதே. பாகேஸ்வரி ராகம் பாடினால், இரக்கஉணர்வு மேம்பட்டு நிற்கும், கௌரிமனோகரி கேட்பவரைக் கவர்ந்திழுத்து உற்சாகத்தையும் விறுவிறுப்பையும் தரும், தார்சிகா, உடலிலுள்ள நரம்பு மண்டலத்தைச் செவ்வனே பாதுகாக்கும், கேட்டாலோ பாடினாலோ நரம்புவியாதிகள் அனைத்தும் சீரடையும், குறிப்பாக காக்காவலிப்பு நோய் டாட்டா காட்டிவிட்டு ஓடிவிடும். மலகரி ராகம் பாடுங்கள் ஆணவம், கன்மம்,மாயை மறைந்துவிடும். இதுபோல் இன்னும் பல ராகங்களில் இன்னும் பல மருத்துவ குணங்கள். இவை கற்றவர்க்கு புண்ணியம் கேட்பவர்களாகிய எங்களுக்கு கொஞ்சமாவது பலன் கிடைக்கும். 
                  


                             இக்கலாலயத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களே! நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். பலன் பெற்றவர்கள். இங்கு பயில்கின்றீர்கள். அன்பான பெற்றோர்போன்ற இரு ஆசிரியர்கள் உங்களுக்குக கிடைத்திருக்கின்றார்கள். 20 ஆண்டுகள் தடைகள் தாண்டி ஓங்கி வளர்ந்திருக்கின்றது இக்கலாலயம். இதன் ஒவ்வொரு நடைமுறைகளும் ஓரம் இருந்து கேட்டவள் யான். இது எனது மூன்றாவது ஆண்டுவிழா. இக்கலாலய கீதம் என்னால் எழுதப்பட்டது. அம்மாணவர்கள் என் பாடலும் பாடுகின்றார்கள். இக்கலாலய மாணவர்களினால், வெளியிடப்பட்ட அரும்புகளின் ஆராதனை என்னும் இறுவட்டு கேட்டு இதயம் கனிந்திருக்கின்றேன். ஸ்வரராகா இசைக்கலாலய இருமாணவர்களினதும் கர்நாடகஇசை அரங்கேற்றங்களில் அவர்களின் இன்னிசையில் திறமையில் மெய்மறந்திருக்கின்றேன். அதேபோல் தந்திகள் மீட்டும் சங்கீதத்தை வயலின் இசை அரங்கேற்றத்திலும் சுவைத்திருக்கின்றேன். ஒவ்வொரு விழாக்களிலும் ஓயாத கரஓசைபோல், ஓயாத புகழே இக்கலாலயத்திற்கு எட்டி நிற்கின்றது. இதன் வளர்ச்சி அடுத்தவரை வீழ்த்தி வளரவேண்டுமென்ற வளர்ச்சியல்ல. அடுத்தவரை இசையால் நாம் வளரவேண்டும் என ஊக்குவிக்கும் வளர்ச்சி. இளம் கலைஞர்களை வளர்த்துவிட்ட வளர்ச்சி, இளம் இசை ஆசிரியர்களை உருவாக்கிவிட்ட வளர்ச்சி. இதன் வளர்ச்சி கண்டு வெள்ளிவிழா காணும் ஆசையுடன் எதிர்பார்ப்புடன்  மனதார வாழ்த்துகின்ற ஒரு தாயே நான். 
                 


                                         காலம் சுழல்கிறது, உலகம் உருள்கிறது, நாளும் புதுமைகள் பூக்கின்றன. இக்காலகட்டத்தில் இளைஞர்களே கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் சொன்னது போல் இளைஞர்களே புதுமைகள் படையுங்கள். என்று நான் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். றால வாளை கொலைவெறி எவ்வாறு உலகமெங்கும் பேசப்பட்டதோ! அதேபோல் இளந்தலைமுறையினரே உங்கள் இசைத்திறமையும் புதுமை காணவேண்டும். உலக அரங்கிலே உங்கள் தனித்தன்மை புலப்படவேண்டும். சுவைபுதிது, பொருள் புதிது, வளம்புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை என கவதையில் புரட்சி காட்டிய பாரதி இல்லையென்றால், இன்று வசனக்கவிதை ஹைக்கூக்கவிதை என் கவிதைகளின் பரப்பு விரிந்திருக்குமா?  அதேபோல் இசைக்கு இசையுங்கள்,  இசை ஆராய்ச்சி செய்யுங்கள், மறைவாக எமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற வரிகளைப் புரிந்தவர்கள் நீங்கள். இந்நாட்டார்க்குப் பொறுமையுண்டோ இல்லையோ, ரசிப்பார்களோ, இல்லையோ என்ற ஐயம் கொள்ளத் தேவையில்லை. அழைத்து வாருங்கள், இசைக்கு மொழியில்லை. வார்த்தை புரியவில்லையானாலும் கண்மூடி ரசிப்பார்கள். தெலுங்கு புரிந்தா நாம் தெலுங்கு கீர்த்தனைகள் பாடுகின்றோம். இக்கலாலய மாணவர்கள் துடிப்பானவர்கள். மாற்றுமொழி பேசுவாரிடை எம் கர்நாடக இசையைக் கலக்கச் செய்யும் வல்லமை உங்களுக்குத்தான் உண்டு. இளைஞர்களுக்குத்தான் உண்டு. இக்கர்நாடக இசைவிழாவில் கலப்பிசையைக் கலக்கச் செய்த பெருமை தர்மினி தில்லைநாதன் அவர்ளையே சாரும். அதற்கு இவ்விடத்தில் அவரைப் பாராட்டியே தீரவேண்டும்.
              


                                        தமிழ் பெற்றோர்களுடன் எதுவும் செய்யமுடியாது அன்ரி என்று ஒரு மாணவி சலித்துக் கொண்டதை கேட்டேன். ஒரு தாயாய்ப் புண்பட்டது மனம். காரணம் என்ன. 
                    


                                     வழிவிடுங்கள் பெற்றோரே. உங்கள் பிள்ளைகளை நம்புங்கள். அவர்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்குங்கள். அவர்கள் சிந்தனைச் செயல்பாடுகளை வளரவிடுங்கள், எதிர்த்துப் பேசுகின்றார்கள் என்று அவர்கள் சிந்தனையைத் தொலைத்துவிடாதீர்கள். ஒருதாயாய் ஒரு எழுத்தாளராய் எதிர்காலத்தை வளரும் சமுதாயத்திடம் ஒப்படைத்துவிடுங்கள் அதை மெருகேற்றிக் காட்டுவார்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.   இவ்விழா அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இங்கு மிருதங்கம், வயலின் போன்ற இசைக்கருவிகளை இளையோரே இசைத்தார்கள். இவ்விழா நடைமுறைகள் அத்தனையையும் ஆசிரியர்களுடன் பொறுப்பேற்றார்கள். இதுபோன்றே இனிவரும் காலங்களில் நாம் பார்வையாளர்கள், எம் பழங்கதைகளுக்கு விடைகொடுப்போம் என்று கூறிக்கொண்டு இசைபயிலும் மாணவர்களே! சினமிறக்கக் கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும், மனமிறக்கக் கல்லார்க்கு, வாயேன் பராபரமே எனத் தாயுமானவர் பாடியதுபோல் இசைப்பற்றும், பொறுமையும் பணிவும் இல்லாதுவிட்டால் இசை உங்களைவிட்டு ஓடிவிடும். அதனால், இவற்றை மனதில் பதித்து இசையால் வளருங்கள் என்று உங்களை வாழ்த்தி, வானுயர ஸ்லரராகா இசைக்கலாலயம் புகழ் வளரவேண்டும் என்று மனதார வாழ்த்தி சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். 

   


  திங்கள், 22 ஜூலை, 2013

  அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் கவிதை  என்னால் எழுதப்பட்ட தவமலரின் என்னையே நானறியேன் நூல்வெளியீட்டுவிழாவிற்கு அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் வாசித்த வாழ்த்துக்கவி


  ஜேர்மனி - கெல்சன்கிர்ஷனில் (20.07.2013) நடைபெற்ற திருமதி: சந்திரகௌரி சிபபாலன் அவர்கள் எழுதிய தவமலரின் ' என்னையே நானறியேன் „ நூல்வெளியீட்டுவிழாவுக்காக எழுதிய வாழ்த்துக்கவிதை.

         என்னினிய வாழ்த்துக்கள்..!

  நினைவுகள் ஆழ் மனமெங்கும் நிறைந்தே வியாபிக்கும்
  நேசமும் நெருடல்களும் நீண்டே நித்தமும் விரியும்
  கனவுகள்போல சில காணாமலும் மறைந்துபோய்விடும்
  கன்றிய வடுக்களாய் காலத்தையும் விஞ்சி சில நீளும்
  நனவாக நம்மிடையே நடப்பவை நாளும் நாளும் -மிக
  நல்லவற்றை ஆக்குவதற்கும் நலியாதென்றும் துணைபுரியும்..!

  எண்ணங்கள் எல்லாமே எழுத்துருவாய் ஆகிடுமோ -அதை
  எழுதுவதற்கு தருணங்கள் எல்லோர்க்கும் வாய்த்திடுமோ
  திண்ணமாய் உரைத்தவற்றைத் திரட்டியே அழகுசேர்த்து
  தீந்தமிழின்; சுவையூற்றித் திகட்டிடாமலேயே தருவதற்கு
  வண்ணங்கள் குழைத்தவைத்து வரிகளாய் வடித்தெடுத்து
  வாஞ்சையுடன் நூலாக்கிய திருமதி.கொளசியைவாழ்துகிறேன்..!

  இன்னமும்  சேர்த்துவைத்த இதயம்சுமந்த நினைவுகளை -தான்
  இறக்கினால் படையலாக்க இசைந்துவந்த திருமதி:கொசியுடன்
  கண்களுக்குள் அடங்கிடாத காட்சிகளையும் சாட்சிகளையும்
  காலத்தால் வற்றிடாது என்றும் கரைந்திடாது காப்பதற்காய்
  பண்ணிவைத்த இப்பதிவு பாதுகாக்கப்பட வேண்டியபொக்கிஷமாய்
  பதியம்வைத்த திருமதி:தவமலருக்கு தனித்துவமான வாழ்த்துக்கள்..!

  மண்ணிலே வாழ்ந்த பதியால் மனதுக்குள் பதிந்ததெல்லாம்
  மறந்திடமுடியாதுள்ளம் மறுகிடும் நிலையினை இவருணர்ந்து
  நுண்ணிய சுவைகளெல்லாம் மிகநுட்பமாய் வடித்தெடுத்து
  நூலில் கோர்த்திட்ட இந்த நூதனத்தைக் காண்கையிலே- பலர்
  கண்களின் தரிசனத்தக்காய் கரிசனத்தோடு காட்சிப்படுத்திய
  கௌசியின் உழைப்புக்கு என் கௌரவமான வாழ்த்துக்கள்..!

  அந்நியர்தேசம் புகுந்துவந்த அநுபவங்களோ பலவிருந்தும்
  ஆறிடாத நினைவுகளோ அறுபட்டுப் போய்விடாத வண்ணம்
  உன்னிய உணர்வுகளையெலாம் உருக்கொடுத்துப் பதிவாக்கி
  உரமான நூலுருவாக்கியே உலவவிடுகின்ற பணிகளின்னும்
  இன்னும் பலவாகிடுவதற்கு இதுவொரு தெடக்கம்தானென -இன்று
  இங்குவந்த உறவுகளனைவருடன் இவனது இனிய வாழ்த்துக்கள்..!

                              -அம்பலவன்புவனேந்திரன்..

  திங்கள், 1 ஜூலை, 2013

  உலகத்தமிழ் தூதுவர்
  உலகமெல்லாம் தமிழ் உளவாக்கலும்
  உலகமெல்லாம் தமிழ் பெருமை உணரச் செய்தலும்
  உளமெல்லாம் உறைந்து நிமிர்ந்து வாழ்ந்த
  அளவிலா அறிவு சேர் அமரர் தனிநாயகம் அடிகளார்க்கே சமர்ப்பணம்.

  வானகமும் வையகமும் வாழ்த்தி நிற்க - இவ்வகமும்
  வண்ணத் தமிழ் கொண்டு வாழ்த்தொலிகள் தூவி நிற்க
  தனிநாயகம் அடிகளார் பிறந்த ஆண்டுக்கு நூற்றாண்டுவிழாவா?
  தனிநாயகம் அடிகளாருக்கு நூற்றாண்டுவிழாவா? என
  சிந்தைக்குள் புகுந்த சந்தேகத் தமிழ் கொண்டு
  ஜேர்மன் தமிழ் சங்கக் கவிநான்
  சந்தங்கள் சேரும் உலகத் தமிழ் தூதுவர்
  கவிதாங்கி வந்துள்ளேன்.


  நூறாண்டு காலமாக ஓர் மனிதன் எண்ணம்
  மக்கள் மனதில் ஆறாக ஓடுகிறது.
  தமிழே உனக்குத்; தூதுவனானேன்
  உண்மைத் தூதுவனாய் நான்
  உலகில் வலம் வந்ததனால்,
  இறந்தும் நான் வாழ்கிறேனென
  கத்தோலிக்க மதகுருவான ஓர் மனிதன்
  முத்திங்கள் ஏடுதந்த வித்தகன்
  தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞன்
  அருவாய் சாற்றும் வரிகள்
  அனைவர் உள்ளங்களிலும் ஆர்ப்பரித்திருக்க
  அவ்விடிவெள்ளி, அழிக்கமுடியாத அறிவுப்பலகை
  தனிநாயகம் அடிகளார் அவர்கள்  ஆற்றிய பணிகளை ஆழப்பதிக்கும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கும்
  அனைவருக்கும் தமிழ்தாயை மனதில் நிறுத்தி
  முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.                                    உலகத்தமிழ் தூதுவர்

  சொல்வன்மை தொகுத்துச் சொல்லல்
  சொல்லும் வார்த்தையில் குற்றமின்மை
  இடம், பொருள், ஏவல், அறிந்து சொல்லல்
  சொல்லும் தன்மையில் துணிவு
  உயிருக்கு ஆபத்து எனும்போதும்
  சொல்வதை அஞ்சாத நெஞ்சுடன் சொலல்
  இத்தனையும் கொண்டவரே புத்தியுள்ள தூதுவர்
  அவரே உத்தம தூதுவர்.

  பிசிராந்தையார் தூதாய் அனுப்பியது கொக்கை
  நளன் தூதாய் அனுப்பியது அன்னத்தை
  சத்திமுத்தப்புலவர் தூதாய் அனுப்பியது நாரையை
  சுந்தரர் தூதாக அனுப்பியது இறைவனாரை
  தமிழ்த்தாயோ உலகத்தூதாக அனுப்பினாள்
  தனிநாயகம் அடிகளார் அவர்களை,
  தனி – நாயகம் அடிகளார் அவர்களை - அதனாலேயே
  தாயின் கருவறையில் இருந்தபோதே
  தரையிறங்கிவிட்டார் என நூற்றாண்டுவிழாக்கள்
  உலகெங்கும் தடபுடலாக நடக்கின்றன.

  அடிகளார் வெள்ளை அங்கிக்குள் விதந்து கிடக்கும்
  தமிழறிவை தனக்குச் சாதகமாகிக் கொண்டாள் தமிழன்னை - அவர்
  வெள்ளை உள்ளத்துள் புகுந்தாள் -  அடிகளாரோ
  137 நூல்களைத் தமிழ்த்தாய்க்குத் தாரைவார்த்தார்.
  உலகெங்கும் தமிழ் மணம் வீசச்செய்தார் - இன்றும்
  தமிழ்த்தாய் நவீனத்தைக் குழைத்து இளமையுடன் வாழ்கிறாள்.

  தமிழுக்கோர்  சிறப்புண்டு – அதை
  முழுமனதுடன் பற்றிக் கொள்வார் தமைத்
  தன்னுடன் கட்டுப்போடும். தனை விட்டுச்செல்ல
  மனம் ஒப்புக்கொள்ளா சித்தம் தரும்.
  மாஞ்சுவை தேன்சுவை பலாச்சுவையென
  தித்திக்கும் சுவைகளை சேர்த்துத் தரும் - அதனால்
  கத்தோலிக்க மதத்தூதுவர்,  உருமாறி
  உலகத் தமிழ்தூதுவராய் உலா வர
  தெவிட்டாத தளராத
  தீஞ்சுவையைச் சேர்த்துத் தந்தது - இன்று
  அள்ளஅள்ளக் குறையாத
  ஆராய்வுப் பொக்கிசங்களைக் கொட்டித் தந்தது.

  அடிகளார் கற்றதோ ஆங்கிலம் மனம் பற்றியதோ தமிழ்
  தீந்தமிழின் சுவையதனை பருகத் திடம் கொண்ட
  இடம் புனித திரேசா மடப்பாடசாலை
  தலைமைப்பதவி பெற்ற அங்கு அவர்
  தலைமேல் கொண்ட அவா தமிழ்கல்வி – அதனால்
  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரை
  அழைத்துச் சென்றாள் தமிழ்த்தாய்
  சங்கஇலக்கியத்தை ஆய்வு செய்யத் தூண்டினாள்
  முதுமாணிப் பட்டத்தை முடிசூட்டி விட்டாள்.

  தணிந்ததா தாகம் கத்தோலிக்க மதசேவை செய்யக்
  கற்ற மொழிகளாம் மலாய், ஆங்கிலம், இலத்தீன்,
  இத்தாலியம், இபுரு, பிரெஞ்சு, போத்துக்கீசம்,
  உருஷியம், கிரேக்கம், ஸ்பானியம், சமஸ்கிருதம்
  சிங்களம், தமிழ், ஜேர்மனி....
  சொல்வதற்கே மூச்சுவாங்கும் இத்தனை மொழிகளையும்
  கற்ற பன்மொழிப்புலமையால், வல்லமையால், சொல் திறனால்
  அத்தனை நாடுகளிலும் அத்தனை மொழிகளுள்ளும்
  அற்புதத் தகவல்களை தேடித்தேடித் தொகுத்து


  Reference Guide to Tamil Studies
  என்னும் நூலாகத் தமிழுக்குத் தாரை வார்த்தார்.
  ஆங்கிலநூல்? தமிழுக்குத் தாரை வார்ப்பதா?
  அகலக்கண் கொண்டு நீங்கள் அனுப்பும்
  கேள்விக்கணைகள் அறியாதவள் நானில்லை
  சீர்பெற்ற தமிழின் சிறப்பதனை தமிழர்க்கே உணர்த்தி
  சிரித்திருப்பதனால், பயனென்ன கண்டீர்?
  வண்ணத்தமிழ் வளர்ச்சி பெற்ற தமிழ் - இன்று
  செம்மொழியாய் அந்தஸ்து பெற்ற தமிழ்
  இருபத்தியொரு நூற்றாண்டின் முன்னும்
  இலக்கண இலக்கியச் சிறப்புப் பெற்றதமிழ்
  விஞ்ஞான நிகழ்வுகளை விஞ்சிடும் தமிழறிவால்
  வியத்தகு இலக்கியங்களில் புகுத்திய தமிழ்
  இச்சிறப்பெல்லாம் தனிச்சிறப்பாய் பெற்ற தமிழ் பற்றி
  மாற்றுலகம் கைதட்டி வாழ்த்த வேண்டும்
  வேற்றுமொழி மக்களெல்லாம் வியந்து நிற்கவேண்டும்
  ஷஷமறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
  சொல்வதிலோர் மகிமையில்லை
  திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
  அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்|| என்று
  அன்று பாடினான் அற்புதக்கவி பாரதி – அதற்கு
  அவரவர் மொழிகளில் எடுத்துரைத்தல்
  அவசியம் என பொதுமொழிஆங்கிலத்தில்
  புரியச் செய்தார்.


  தூது செல்வார் சேதி கொண்டு செல்வார்
  மீண்டுவருவேளை அங்கிருந்து
  நற்செய்து கொண்டுவருவார் - தனிநாயகம் அடிகளார்
  யப்பான், சிலி, பெரு, மெக்சிக்கோ, நியூசீலாந்து
  எக்வடோ, ஐக்கிய அமெரிக்காவிற்குத் தமிழ்த்தூது சென்றார்.
  அங்குள்ள தமிழ் ஏடுகள், அச்சுநூல்கள்,
  மீட்டுக் கொண்டுவந்தார். தமிழ்த்தூதுவனாய் தலைநிமிர்ந்தார்.


  மதத்தை நேசித்திருந்தால் மதசேவை புரிந்திருந்தால்
  மதமே உலகநாடுகளில் பரவியிருக்கும்
  மதத்தை மட்டுமன்றி தமிழ்மொழியையும்
  மூச்சாகக் கொண்ட சமயசமரச சாகரமே! 
  தேவார ஆழ்வார்கள் பாடல்களின்
  பக்திச்சுவையைப் பலரறிய எடுத்துரைத்த
  பண்பாட்டுக் காவலனே!
  ஒல்காப்புகழ் கொண்ட ஒப்பற்ற தூதுவனே!

  தாய்லாந்து மன்னருக்கு முடிசூட்டுவிழா
  சென்றதோ அழைப்பை ஏற்று
  அங்கும் தெளிந்ததோ தமிழின்தூது
  மாணிக்கவாசகர் திருவாசகப்பாடல்கள்
  தாய்லாந்து மொழியில் பாடியதைக் கேட்டு இன்புற்று
  தமிழகத்திற்கும் தாய்லாந்திற்கும் உள்ள தொடர்பை
  எழுதி வெளிப்படுத்தினீர். தமிழே வியந்தது உமைப்பார்த்து
  தகுதி தேடித்தேடி தந்துவிடும் உன் சேவை பார்த்து

  ஆராய்வுச் சுழற்சியால் நீவீர்
  ஆற்றிவிட்ட சேவையதின் மகிழ்ச்சியால் -
  உமக்குப் பிறந்த போது இட்டபெயரைத் தமிழினம்
  விட்டுவிட்டுத் தனிநாயகம் அடிகளார் என - நீவீர்
  இட்டபெயரை இன்று நிலைநாட்டிவிட்டது.
  இன்னும் சில காலம் நீவீர் வாழ்ந்திருந்தால்
  ஜேர்மன் மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை
  தொட்டுக் காட்டியிருப்பீர் - ஆனால்
  யாராய் இருந்தாலும்
  யாவரும் காலன் கைப்பொம்மைகளே - அதனால்,
  எதிர்வரும் தலைமுறைக்கு அப்பொறுப்பை விட்டுவிட்டீர்.
  தமிழர் கடமை இன்னும் உள்ளதென வழிகாட்டிவிட்டீர்
  வாழ்க தமிழ் வளர்க தமிழ்ஆராய்ச்சி
  நிலைக்க சேவியர் தனிநாயகம் அடிகளார் புகழ்
  நன்றி வணக்கம்

  29.06.2013 அன்று முன்ஸ்ரர் நகரில் நடைபெற்ற தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவிற்கு என்னால் வாசிக்கப்பட்ட கவிதை  அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்

  "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்   எவரும...