உலகமெல்லாம் தமிழ் உளவாக்கலும்
உலகமெல்லாம் தமிழ் பெருமை உணரச் செய்தலும்
உளமெல்லாம் உறைந்து நிமிர்ந்து வாழ்ந்த
அளவிலா அறிவு சேர் அமரர் தனிநாயகம் அடிகளார்க்கே சமர்ப்பணம்.
வானகமும் வையகமும் வாழ்த்தி நிற்க - இவ்வகமும்
வண்ணத் தமிழ் கொண்டு வாழ்த்தொலிகள் தூவி நிற்க
தனிநாயகம் அடிகளார் பிறந்த ஆண்டுக்கு நூற்றாண்டுவிழாவா?
தனிநாயகம் அடிகளாருக்கு நூற்றாண்டுவிழாவா? என
சிந்தைக்குள் புகுந்த சந்தேகத் தமிழ் கொண்டு
ஜேர்மன் தமிழ் சங்கக் கவிநான்
சந்தங்கள் சேரும் உலகத் தமிழ் தூதுவர்
கவிதாங்கி வந்துள்ளேன்.
நூறாண்டு காலமாக ஓர் மனிதன் எண்ணம்
மக்கள் மனதில் ஆறாக ஓடுகிறது.
தமிழே உனக்குத்; தூதுவனானேன்
உண்மைத் தூதுவனாய் நான்
உலகில் வலம் வந்ததனால்,
இறந்தும் நான் வாழ்கிறேனென
கத்தோலிக்க மதகுருவான ஓர் மனிதன்
முத்திங்கள் ஏடுதந்த வித்தகன்
தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு அடிகோலிய அறிஞன்
அருவாய் சாற்றும் வரிகள்
அனைவர் உள்ளங்களிலும் ஆர்ப்பரித்திருக்க
அவ்விடிவெள்ளி, அழிக்கமுடியாத அறிவுப்பலகை
தனிநாயகம் அடிகளார் அவர்கள் ஆற்றிய பணிகளை ஆழப்பதிக்கும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கும்
அனைவருக்கும் தமிழ்தாயை மனதில் நிறுத்தி
முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
உலகத்தமிழ் தூதுவர்
சொல்வன்மை தொகுத்துச் சொல்லல்
சொல்லும் வார்த்தையில் குற்றமின்மை
இடம், பொருள், ஏவல், அறிந்து சொல்லல்
சொல்லும் தன்மையில் துணிவு
உயிருக்கு ஆபத்து எனும்போதும்
சொல்வதை அஞ்சாத நெஞ்சுடன் சொலல்
இத்தனையும் கொண்டவரே புத்தியுள்ள தூதுவர்
அவரே உத்தம தூதுவர்.
பிசிராந்தையார் தூதாய் அனுப்பியது கொக்கை
நளன் தூதாய் அனுப்பியது அன்னத்தை
சத்திமுத்தப்புலவர் தூதாய் அனுப்பியது நாரையை
சுந்தரர் தூதாக அனுப்பியது இறைவனாரை
தமிழ்த்தாயோ உலகத்தூதாக அனுப்பினாள்
தனிநாயகம் அடிகளார் அவர்களை,
தனி – நாயகம் அடிகளார் அவர்களை - அதனாலேயே
தாயின் கருவறையில் இருந்தபோதே
தரையிறங்கிவிட்டார் என நூற்றாண்டுவிழாக்கள்
உலகெங்கும் தடபுடலாக நடக்கின்றன.
அடிகளார் வெள்ளை அங்கிக்குள் விதந்து கிடக்கும்
தமிழறிவை தனக்குச் சாதகமாகிக் கொண்டாள் தமிழன்னை - அவர்
வெள்ளை உள்ளத்துள் புகுந்தாள் - அடிகளாரோ
137 நூல்களைத் தமிழ்த்தாய்க்குத் தாரைவார்த்தார்.
உலகெங்கும் தமிழ் மணம் வீசச்செய்தார் - இன்றும்
தமிழ்த்தாய் நவீனத்தைக் குழைத்து இளமையுடன் வாழ்கிறாள்.
தமிழுக்கோர் சிறப்புண்டு – அதை
முழுமனதுடன் பற்றிக் கொள்வார் தமைத்
தன்னுடன் கட்டுப்போடும். தனை விட்டுச்செல்ல
மனம் ஒப்புக்கொள்ளா சித்தம் தரும்.
மாஞ்சுவை தேன்சுவை பலாச்சுவையென
தித்திக்கும் சுவைகளை சேர்த்துத் தரும் - அதனால்
கத்தோலிக்க மதத்தூதுவர், உருமாறி
உலகத் தமிழ்தூதுவராய் உலா வர
தெவிட்டாத தளராத
தீஞ்சுவையைச் சேர்த்துத் தந்தது - இன்று
அள்ளஅள்ளக் குறையாத
ஆராய்வுப் பொக்கிசங்களைக் கொட்டித் தந்தது.
அடிகளார் கற்றதோ ஆங்கிலம் மனம் பற்றியதோ தமிழ்
தீந்தமிழின் சுவையதனை பருகத் திடம் கொண்ட
இடம் புனித திரேசா மடப்பாடசாலை
தலைமைப்பதவி பெற்ற அங்கு அவர்
தலைமேல் கொண்ட அவா தமிழ்கல்வி – அதனால்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வரை
அழைத்துச் சென்றாள் தமிழ்த்தாய்
சங்கஇலக்கியத்தை ஆய்வு செய்யத் தூண்டினாள்
முதுமாணிப் பட்டத்தை முடிசூட்டி விட்டாள்.
தணிந்ததா தாகம் கத்தோலிக்க மதசேவை செய்யக்
கற்ற மொழிகளாம் மலாய், ஆங்கிலம், இலத்தீன்,
இத்தாலியம், இபுரு, பிரெஞ்சு, போத்துக்கீசம்,
உருஷியம், கிரேக்கம், ஸ்பானியம், சமஸ்கிருதம்
சிங்களம், தமிழ், ஜேர்மனி....
சொல்வதற்கே மூச்சுவாங்கும் இத்தனை மொழிகளையும்
கற்ற பன்மொழிப்புலமையால், வல்லமையால், சொல் திறனால்
அத்தனை நாடுகளிலும் அத்தனை மொழிகளுள்ளும்
அற்புதத் தகவல்களை தேடித்தேடித் தொகுத்து
Reference Guide to Tamil Studies
என்னும் நூலாகத் தமிழுக்குத் தாரை வார்த்தார்.ஆங்கிலநூல்? தமிழுக்குத் தாரை வார்ப்பதா?
அகலக்கண் கொண்டு நீங்கள் அனுப்பும்
கேள்விக்கணைகள் அறியாதவள் நானில்லை
சீர்பெற்ற தமிழின் சிறப்பதனை தமிழர்க்கே உணர்த்தி
சிரித்திருப்பதனால், பயனென்ன கண்டீர்?
வண்ணத்தமிழ் வளர்ச்சி பெற்ற தமிழ் - இன்று
செம்மொழியாய் அந்தஸ்து பெற்ற தமிழ்
இருபத்தியொரு நூற்றாண்டின் முன்னும்
இலக்கண இலக்கியச் சிறப்புப் பெற்றதமிழ்
விஞ்ஞான நிகழ்வுகளை விஞ்சிடும் தமிழறிவால்
வியத்தகு இலக்கியங்களில் புகுத்திய தமிழ்
இச்சிறப்பெல்லாம் தனிச்சிறப்பாய் பெற்ற தமிழ் பற்றி
மாற்றுலகம் கைதட்டி வாழ்த்த வேண்டும்
வேற்றுமொழி மக்களெல்லாம் வியந்து நிற்கவேண்டும்
ஷஷமறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமையில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்|| என்று
அன்று பாடினான் அற்புதக்கவி பாரதி – அதற்கு
அவரவர் மொழிகளில் எடுத்துரைத்தல்
அவசியம் என பொதுமொழிஆங்கிலத்தில்
புரியச் செய்தார்.
தூது செல்வார் சேதி கொண்டு செல்வார்
மீண்டுவருவேளை அங்கிருந்து
நற்செய்து கொண்டுவருவார் - தனிநாயகம் அடிகளார்
யப்பான், சிலி, பெரு, மெக்சிக்கோ, நியூசீலாந்து
எக்வடோ, ஐக்கிய அமெரிக்காவிற்குத் தமிழ்த்தூது சென்றார்.
அங்குள்ள தமிழ் ஏடுகள், அச்சுநூல்கள்,
மீட்டுக் கொண்டுவந்தார். தமிழ்த்தூதுவனாய் தலைநிமிர்ந்தார்.
மதத்தை நேசித்திருந்தால் மதசேவை புரிந்திருந்தால்
மதமே உலகநாடுகளில் பரவியிருக்கும்
மதத்தை மட்டுமன்றி தமிழ்மொழியையும்
மூச்சாகக் கொண்ட சமயசமரச சாகரமே!
தேவார ஆழ்வார்கள் பாடல்களின்
பக்திச்சுவையைப் பலரறிய எடுத்துரைத்த
பண்பாட்டுக் காவலனே!
ஒல்காப்புகழ் கொண்ட ஒப்பற்ற தூதுவனே!
தாய்லாந்து மன்னருக்கு முடிசூட்டுவிழா
சென்றதோ அழைப்பை ஏற்று
அங்கும் தெளிந்ததோ தமிழின்தூது
மாணிக்கவாசகர் திருவாசகப்பாடல்கள்
தாய்லாந்து மொழியில் பாடியதைக் கேட்டு இன்புற்று
தமிழகத்திற்கும் தாய்லாந்திற்கும் உள்ள தொடர்பை
எழுதி வெளிப்படுத்தினீர். தமிழே வியந்தது உமைப்பார்த்து
தகுதி தேடித்தேடி தந்துவிடும் உன் சேவை பார்த்து
ஆராய்வுச் சுழற்சியால் நீவீர்
ஆற்றிவிட்ட சேவையதின் மகிழ்ச்சியால் -
உமக்குப் பிறந்த போது இட்டபெயரைத் தமிழினம்
விட்டுவிட்டுத் தனிநாயகம் அடிகளார் என - நீவீர்
இட்டபெயரை இன்று நிலைநாட்டிவிட்டது.
இன்னும் சில காலம் நீவீர் வாழ்ந்திருந்தால்
ஜேர்மன் மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை
தொட்டுக் காட்டியிருப்பீர் - ஆனால்
யாராய் இருந்தாலும்
யாவரும் காலன் கைப்பொம்மைகளே - அதனால்,
எதிர்வரும் தலைமுறைக்கு அப்பொறுப்பை விட்டுவிட்டீர்.
தமிழர் கடமை இன்னும் உள்ளதென வழிகாட்டிவிட்டீர்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்ஆராய்ச்சி
நிலைக்க சேவியர் தனிநாயகம் அடிகளார் புகழ்
நன்றி வணக்கம்
29.06.2013 அன்று முன்ஸ்ரர் நகரில் நடைபெற்ற தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவிற்கு என்னால் வாசிக்கப்பட்ட கவிதை
சிறப்பிற்கு சிறப்பு சேர்த்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதமிழை சிறப்பித்தீர்
பதிலளிநீக்கு