• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  வியாழன், 10 ஆகஸ்ட், 2023

  அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்


  "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்  

  எவருமே வெறுக்காமல் எல்லோருமே விரும்பிய ஏவுகணைகளை விட மாணவர்களின் வினாக்களுக்கு விடை தருவதை பெருமையாக நினைத்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பற்றிய அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் என்ற புத்தகம் பற்றிய என்னுடைய பார்வை.

  இந்த நூலை குடந்தை பாலு அவர்கள் எழுதியிருக்கின்றார். இதை வாசித்த போது அப்துல்கலாம் அவர்கள் மேல் எனக்கு இருந்த மதிப்பு இன்னும் ஒரு படி மேல் உயர்ந்தது. இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கின்றார் என்று பெருமையாக அவரைப் பற்றி நினைத்தேன். 15.10. 1931 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் ஒரு சின்னஞ் சிறிய கிராமத்தில் வறுமைக் கோட்டில் பிறக்கின்றார். 27. 7. 2015 ல் I.A.M மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் இறக்கின்றார். 

  இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற சில சம்பவங்களை ஆசிரியர் குடந்தை  பாலு அவர்கள் தொகுத்திருக்கின்றார். அவருடைய இந்த நூல் உலகத்துக்கு இவர் ஆற்றிய சிறந்த பணி என்றே கருதுகின்றேன். அவர் எடுத்துக் காட்டியதில் சிலவற்றையே நான் கொண்டுவருகின்றேன்.

  டாக்டர் அப்துல் கலாமிடம் ஒரு நல்ல ஆசிரியருக்கு என்ன தகுதி வேண்டும் என்று ஒரு மாணவன்  கேட்டபோது அவர் ஆசிரியர் பணியை விருப்பத்துடன் செய்ய வேண்டும் வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் அத்துடன் ஆசிரியர் புனிதமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாராம். 

  கல்புத்தூர் என்ற சிற்றூரில் இருந்த  சுடர்க்கொடி என்ற ஒரு மாணவி டாக்டர் அப்துல் கலாமிடம் விஞ்ஞானி தமிழன் மனிதன் இந்தியன் இவர்களை நீங்கள் வரிசைப்படுத்துங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அப்துல் கலாமும் மனிதனுக்குள் மற்ற மூவரும் அடங்கி இருக்கிறார்கள் என்று ஒரு நுட்பமான பதிலை கூறினாராம். 

  டாக்டர் அப்துல் கலாம் ஐந்தாம் வகுப்பு ராமேஸ்வரம் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அந்த கால வழக்கத்தின்படி தலையிலே தொப்பி அணிந்திருந்தாராம். அவருக்குப் பக்கத்திலே பூணூலும் குடுமியுமாக அவருடைய நண்பன் ராமநாத சாஸ்திரி என்ற பிராமணர் சிறுவனும் அமர்ந்திருந்தானாம்.  இவர்களுடைய வகுப்பிற்கு வந்த ஆசிரியர் கலாமை பார்த்து கடைசி வரிசையில் போய் இருக்கச் சொன்னாராம். இதை தந்தையிடம் சென்று ராமநாத சாஸ்திரி அவர்கள் கவலையுடன் முறையிட்டாராம்.

  இதைக் கேட்ட அவனுடைய தந்தை லட்சுமணனை சாஸ்திரிக்கு அடக்க முடியாத கோபம் வந்து குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள் அவர்கள் மனம் பரிசுத்தமானவை அவற்றில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற நச்சு கருத்துக்களை புகுத்த கூடாது இறைவன் என்பவன் ஒருவனே சம்பிரதாயங்கள் தான் வேறு வேறு ஆனது என்று அறிவுரை கூறினாராம் இதுதான் கலாமுடைய வாழ்க்கையில் ஆழ்மனதில் பதிந்து எல்லா மதத்தினரையும் மதிக்க கூடிய பக்குவத்தைக் கொடுத்தது என்று அவர் கூறுகின்றார்.

  அப்துல் கலாமுடன் இணைந்து பேராசிரியர் அருண் திவாரி சில நூல்களை எழுதி இருக்கிறார். அவர் கலாமிடம் ஐயா உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாகச் சில வரிகள் கூறுங்கள் என்று கேட்ட போது

  அன்பைக் கொட்டி

  வளர்க்கப்பட்ட ஒரு குழந்தை

  வளர்ந்ததும் போராட்டம் மேலும் போராட்டம்

  துன்பத்தை வெளிப்படுத்தும் கண்ணீர்

  பின் ஆனந்தக் கண்ணீர்

  இறுதியில்

  எழில் நிலவின்

  உதயம் காண்பது போன்ற நிறைவு

  என்றாராம் .


  போலியோவால்  பாதிக்கப்பட்டு 3, 4 கிலோ எடையுள்ள செயற்கைக்கால் அணிந்த குழந்தைகள் நடப்பதற்குக் கடினப்படுவதைக் கண்டு ஏவுகணைக்குப் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு ஃப்ளோர் ரியாக்ஷன் ஆர்தொஸிஸ் என்ற எடை குறைவான 300 400 கிராம்கள் மட்டுமேயுள்ள செயற்கைக் கால்களைத்  தயாரித்தார். அதனை அணிந்த குழந்தைகள் மகிழ்ந்ததைக் கண்ட அவர்  அணு  சோதனையிட்டது ஏவுகணை செலுத்தியது என இவற்றை விட இந்த செயற்கை கால் கண்டுபிடிப்பைத் தான்  நான் பெருமையாக நினைக்கிறேன் என்று கூறி மகிழ்ந்தார் 

  திருச்சி பீமநகர் எஸ் டி ஏ மெட்ரிகுலேஷன் பள்ளி  முதலாம் வகுப்பு மாணவன் உங்களின் சிரிப்பு, புத்திசாலித்தனம்,  சுறுசுறுப்பு இவை எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் உங்களைப் போலவே நானும் அறிவு ஜீவியாக வேண்டும். அதுவே என் லட்சியம் என்று   ஒரு கடிதம் எழுதி அனுப்பினானாம். அதற்கு டாக்டர் அப்துல் கலாமும் 

   

  அன்புள்ள சமீர்!  கற்பது படைப்பு திறனைத் தரும் படைப்புத்திறன் சிந்தனைக்கு வழிகாட்டும். சிந்தனை அறிவைத்தரும். அறிவு உங்களை உயர்ந்த மனிதனாக்கும் என்று பதில் எழுதி அனுப்பினார்

   இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்காவுக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றச் செல்ல வேண்டி இருந்தது. உரையாற்றுவதற்கு முந்தைய தினம் இரண்டு மணிக்கு தன்னுடைய ஆலோசகர் பொன்ராஜ் என்பவரை எழுப்பி உடனடியாக நான் பிரதமர் மன்மோகன் சிங் இடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றாராம். பொன்ராஜும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்கிறார் கலாம் தொலைபேசியில் பேசுகின்றார் என்ற திட்டம் ஒன்றை தயாரிக்கிறேன் அதன் மூலமாக கல்வி சுகாதாரம் மின் ஆளுமை போன்ற துறைகளில் ஆப்பிரிக்காவில் வளர்வதற்கு அந்த நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வலுப்படுத்த வேண்டும் இந்த திட்டத்திற்கு இந்தியா ஒரு சகோதர நாடாக இருந்து உதவ வேண்டும் என்று கோரிக்கையை வைக்கிறார் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்க இந்த திட்டத்திற்கு இந்தியா 600 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று கலாம் சொன்னாராம்.  மறுநாள் ஆப்பிரிக்கா நாடாளுமன்றத்தில் கலாம் இதனை அறிவித்து ஆப்பிரிக்க மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அதன் பின் அவருடைய திட்டம் செயல்முறை படுத்தப்பட்டது.  இருண்ட கண்டம் என்று பெயர் பெற்ற ஆப்பிரிக்காவுக்குத் தான் அறிவியல் முயற்சியைக் கொண்டு ஒளி தர எடுத்துக் கொண்ட கலாமின் முயற்சி அந்த நாட்டின் பொன்னேடுகளில் மின்னிக் கொண்டிருக்கிறது.

  இவ்வாறு மற்றவர்களைப் பற்றிய சிந்தனை மட்டுமே தன்னுடைய நோக்கமாகக் கொண்டிருந்த கலாம் அவர்களுக்குத் தனக்கென்று சொந்தமாக வீடு கிடையாது, சொத்து, சுகம் ,வாங்கி சேமிப்பு என்று எதுவும் கிடையாது.  குடும்பம்,  குழந்தைகள் என்று யாரும் இல்லை ஆனால் அவருக்கு எல்லாமே இருந்தது. அவரை நேசிக்க பல கோடி இதயங்கள் இருந்தன இந்தியாவில் ஒவ்வொரு வீடும் அவரது வீடாக இருந்தது

   குடியரசுத்தலைவர் பதவியில் நிறைவான பணியாற்றி புது டில்லியில் இருந்து புறப்பட்ட போது அவர் கையில் இரண்டு சிறு பெட்டிகள் ஒரு பை முழுக்கத் தன்னுடைய சொந்தப் புத்தகங்கள் மட்டுமே கொண்டு வெளியேறுகின்றார். பலர் அவருக்கு பரிசுப்பொருள்கள் கொடுத்த போது என்னுடைய தந்தை ஒருபோதும் பரிசுப் பொருள்களை வாங்காதே என்று அறிவுரை கூறினார் என்று எதனையும் வாங்காது செல்கின்றார்

  இவ்வாறு இந்த நூல் முழுவதும் டாக்டர் அப்துல் கலாம் என்ற உயரிய மனிதன் பற்றிய சிறப்பான பல நிகழ்ச்சிகள் கொட்டி கிடக்கின்றன. ஆசிரியருக்கு நன்றி

   


  செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

  எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

  எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது .

  எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது .

  எது நடக்க இருக்கிறதோ 

  அதுவும் நன்றாகவே நடக்கும்.

  உன்னுடையதை எதை இழந்தாய்?

  எதற்காக நீ அழுகிறாய்?

  எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு

  எதை நீ படைத்திருந்தாய்?அது வீணாவதற்கு 

  எதை நீ எடுத்துக்கொண்டாயோ,

  அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .

  எதை கொடுத்தாயோ

  அது இங்கேயே கொடுக்கப்பட்டது .

  எது இன்று உன்னுடையதோ

  அது நாளை அடுத்தவருடையது ஆகிவிடும்,

  மறு நாள் அது வேறொருவருடயதாகின்றது.

  இந்த மாற்றம் உலக நியதியாகும்.


  இது யோகநூல் பகவத்கீதையின் கீதாசாரம். இது எவ்வளவு பெரிய உண்மை. இது புரிந்தும் புரியாமலேயே மனிதர்கள் அலட்டிக் கொள்ளுகின்றார்கள். இந்த கீதாசாரத்தை வைத்துக் கொண்டே இன்றைய இந்தியப் பாடகர்களின் வருகையைப் பற்றிச் சற்றுச் சிந்திப்போம். 

  அறிவே தெய்வம் என்றார் தாயுமானவர். அந்த அறிவு சிந்தனைத் திறன்மிக்கதாகவும், காலத்துக்கேற்ப பட்டைதீட்டப்பட்டதாகவும், ஊரோடு ஒத்து வாழக்கூடியதாகவும் இருந்தாலேயே எமது வாழ்க்கைப் பண்பாடானது பண்பட்ட பண்பாடாக அமையும். சிந்தனையில் மாற்றம் கொண்டுவந்தால் மாத்திரமே கால ஓட்டத்திற்கேற்ப  எம்மை ஈடுகொடுக்க முடியும். இந்தப்பண்பாட்டுக்கும் கீதையின் சாரத்துக்கும் இந்தியக் கலைஞர்களின் வருகைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று நோக்குவோம்.

  ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமல்ல ஆசிய நாடுகளுக்கும் இந்தியக் கலைஞர்களின் குறிப்பாகப் பாடகர்களின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. இதுதான் தற்காலத்தில் Trend.. விளம்பரக் கவர்;ச்சியும், நாங்களும் போனோம் என்னும் பெருமையும், Instagram, Facebook, WhatsApp போன்ற இணையத்தளங்களில் பதிவிட்டு நாங்கள் இசையை மிதமாக விரும்புகின்றோமோ இல்லை இசைக்காகக் கூடுகின்ற கூட்டங்களை விரும்புகின்றோமோ என்பதை வெளிப்படுத்தப் பதிவிடுவதும், நடைமுறையாக உள்ளது என்பாரும் உண்டு. ஆனால், இது பற்றி யாரும் விமர்சிக்க முடியாது.  இதுதான் தொழில்நுட்பம் எமக்குத் தந்திருக்கும் வாய்ப்பு. இதற்குள் இருக்கும் சூக்குமத்தை, நன்மையை மட்டுமே சீர்தூக்கிப் பார்ப்போம். 

  புலம்பெயர்ந்து மக்கள் அடுத்த தலைமுறை கண்டுவிட்டனர். தமது வாரிசுகள் வளர்ந்து நிமிர்ந்து தத்தம் உழைப்பில் உயர்ந்து நிற்கின்றனர். இவர்களுக்குத் தேவையான பொழுதுபோக்கு அம்சம் எங்கே கிடைக்கப் போகின்றது. ஆடலாம், பாடலாம், ஆனந்தக் கூத்தாடலாம் என்றால், யார்தான் தயங்கப் போகின்றார்கள். எமது தலைமுறையானது தமது சமூகத்தை ஒன்று கூட்டுவதற்காக  விழாக்களையும் பண்டிகைகளையும், கோயில் திருவிழாக்களையும் நடத்தியிருக்கின்றது. மக்களுடைய சோர்வுகளைப் போக்கி அவர்களுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவன விழாக்கள். கோயில் திருவிழாக்களில் தம்முடைய இன மக்கள் ஒன்று கூடித் தேர் இழுப்பது ஒரு காரணமாக இருந்தது. ஆனால், இங்கு எத்தனை தேர்கள் மனதால் இழுக்கப்பட்டன என்பது அறியாதவர்கள் இல்லை. செவ்வாய்க் கிழமை தோறும் துர்க்கை அம்மனுக்கு கன்னிகள் விரதம் இருந்து காளைகளைத் திருமணம் செய்த நிகழ்ச்சிகள் எம் மனக்கண்ணில் வந்து போகின்றன. ஆணென்று இருந்தால், பெண்ணென்று இருந்தால், காதல் என்பது கட்டாயம். அக்காதல் chemistry  யானது கண்டாலும், காணும் சந்தர்ப்பத்தைப் பெற்றாலும், ஏதோ ஒரு ஈர்ப்பைப் பெற்றாலுமே ஏற்படும் அல்லவா! இதற்கு இவ்வாறான இசை நிகழ்ச்சிகள் கைகொடுக்கின்றன. 

  "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் 

  மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' - (பாரதிதாசன்)

  இந்த 250 ஒயிரோக்கள் ஆண்களுக்குப் பெரும் பணமா?

  இந்தப் பிள்ளைகளுக்கு எம்மால் வரன் தேட முடியாது. இப்பிள்ளைகள் சொல்லுகின்ற காரணங்களைப் பட்டியலிட்டால், எந்த உலகத்தில் இருந்து நாம் மாப்பிள்ளை, மணமகள் கொண்டு வரமுடியும். நீங்களா கொண்டு வந்தால், நாங்கள் தலையாட்டுகின்றோம் என்னும் நிலைமைக்கு எமது தலைமுறை வந்துவிட்டது.சிறிது சிறிதாகப்; பெருகி இருக்கும் இந்த இளந்தலைமுறையினரைக் கொண்டு அடுத்த தலைமுறையை விரிவு படுத்த வேண்டுமென்றால், இவ்வாறான சந்திப்புக்கள் அவசியமாகின்றன. 

  அன்றையநாள் தாயகத்தில் கோயில் திருவிழா வரப் போகின்றது என்றால், ஆண்களும் பெண்களும் அதற்காகவே புதிய ஆடைகள் தைப்பதும், அலங்காரங்கள் செய்வதும் வழக்கம். தலைநிறையப் பூச்சூடி, தாவணி பாவாடை போட்டு, கைநிறைய வளையல்கள் அணிந்து தம்மை அழகாக அலங்கரித்துக் கொண்டு பெண்களும், அதேபோல் பட்டு வேட்டியுடன் மார்பிலே தங்கச் சங்கிலி தாளமிட மேலங்கி அணியாது  ஆண்களும் சென்ற  இறுதிநாள் திருவிழா, தீர்த்தம், அல்லது தீமிதிப்புச் சடங்கு வயதுக் கவர்ச்சிக்குக் களமாக அமைந்திருந்தன. திருவிழாக் கடைகளில் எத்தனை கண்கள் மோதின. எத்தனை இதயங்கள் பரிமாறின என்பதை எண்ணிக்கையில் அடக்க முடியாது. 

  பழந்தமிழ் இலக்கியங்களும் விழாக்களும் ஆண், பெண் உறவு கலத்தலும் பற்றி எடுத்துக் காட்டுகின்றன. சங்க இலக்கியத்திலே தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்; காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலங் கொள்ளச் செய்து காதல் விழா நகரமாக மாற்றி, காதல் திருவிழாவைக் கொண்டாடியுள்ளான் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விழா காமதேவனுக்காக திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. கரிகால் வளவன் மகள் ஆட்டனந்தியும், ஆதிமந்தி என்னும் சேரனும் காதல் கொண்டு, இருவரும் காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழாவின் போது புனலாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, ஆதிமந்தியைக் காவிரி ஆற்றுநீர் அடித்துச் செல்லவே ஆதிமந்தியைத் தேடி ஆட்டனந்தி காவிரி நதிக்கரை வழியாகச் செல்கின்றாள் இப்போது அங்கே காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்ததாக ஆதிமந்தி தன் பாடலில் குறிப்பிடுகின்றாள். 

  காமவேள் விழாவின்போது காதலர்கள் களித்து விளையாடுவதை

  "மல்கிய குருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்தவர்

  வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ' என்றும் 

  "காமவேள் விழாவயின் கலங்குவள் பெரிதென

  ஏமுறு கடுந்திண்டேர் கடவி

  நாம் அமர் காதலர் துணைதந்தார் விரைந்தே' 

  என ஊரில் காமவேள் விழா நடப்பதைக் கண்டால் தலைவி கலங்குவாள் எனக் கருதிய தலைவன் திண்டேரேறி வந்தாகத் தோழி குறிப்பிடுவதாகவும் 

  காமவேள் விழாவின்போது கணவனைப் பிரிந்த மகளிர் வருந்துவர். சில ஆடவர்கள் பரத்தையருடன் கூடியாடுவர்.

  "உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்

  விறலிழை யாவரோடு விளையாடுவான் மன்றே' எனவும்  

  கலித்தொகையில் இக்காதல் விழா பற்றி எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

  எனவே நாம் காதல் விழாக்கள் நடத்திய மக்கள் ஜெர்மனியர் போல் Love Parade நடத்த முடியாது. இவ்வாறான நிகழ்ச்சிகள் நடப்பதைக் கண்டு மனம் விரும்புவோம். எமது இளையவர்களும்  இப்போது போல் சிகையலங்கார நிலையம் சென்று சிகையை அலங்கரித்து அழகான ஆடைகள் புதிதாக கொள்வனவு செய்து கண்கவரும் இளையோராக களித்திருக்க இசைநிகழ்ச்சிகளுக்குச் சென்று வரட்டும். வியாபார ஸ்தாபனங்களும் பொலிவடையட்டும். இப்போது மீட்டுவோம் 

  "எது நடந்ததோ நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' இதேபோல் கீதாசாரம் முழுவதையும் பார்ப்போம். இந்த மாற்றம் உலக நியதியாகும். 10 விரல்களை நம்பிப் புலம்பெயர்ந்தோம். இங்கு உழைத்தோம், இங்கு செலவு செய்கின்றோம். இன்று நாம் வாழும் பூமியில் நாளை நாம் இல்லை. அது வேறு யாருடையதாகிவிடுகிறது. 

  பாடகர்களுக்கு அள்ளிக் கொடுப்பது. இந்தியக்காரன் அள்ளிக்கொண்டு போகின்றான் என்னும் போது எம்முடைய இயலாமையையே இங்கு வெளிப்படுத்தப்படுகின்றது. அவரவர் திறமையைத்தானே நாம் தேடுகின்றோம். நாம் ஏன் அதைவிடத் திறமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அதற்கு முனைந்து நிற்போம். அப்போது எம்மைத்தேடி வேற்றுநாட்டினர் வருவார்கள். அள்ள அள்ள ஊற்றெடுக்கும் கிணறு. போற்றப் போற்ற ஏற்றம்பெறும் வாழ்வு.   அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்

  "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்   எவரும...