• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 8 மார்ச், 2024

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

     


    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து குடும்பத்தைப் பாராமரிக்கின்ற முக்கிய பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அத்தனை பொறுப்புக்களையும் தலைமேற் கொண்டு செய்கின்ற போதும் இலக்கிய முயற்சிகளில் தம்மை இனங்காட்டிக் கொள்ளுகின்ற பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். ஆனால், எத்தனை திறமைகள் இருந்தும் தம்மை குடும்பத்துக்காக மட்டுமே அர்ப்பணிக்கின்ற பெண்கள் அதிகமாக இருக்கின்றார்கள். இந்தக் காரணமே இலக்கிய முயற்சிகளில் பெண்களின் பங்களிப்புக் குறைவாகக் காணப்படுகின்றது.

    எமக்குக் கிடைக்கும் 2381 சங்கப்பாடல்களில்; 2279 பாடல்களில் மட்டுமே அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. அவர்கள் 475 பேர்கள் எனக் காணக்கிடக்கின்றது. இதிலே நச்சௌ;ளையார், நன்முல்லையார், ஆதி மந்தியார், நப்பசலையார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தை, பொத்தியார், பேய்மகள், இளவெயினி, வருமுலையாரித்தி, வெண்ணிக்குயத்தியார், வெள்ளிவீதியார், பாரி மகளிர்கள், காமக்கண்ணியார், முடத்தாமக்கண்ணியார், பொன்முடியார், காக்கைப்பாடினியார்;, ஒளவையார் போன்ற 32 பெண்பால் புலவர்களே அறியக்கூடியதாக இருக்கின்றது. ஏன் இத்தனைபேர்தான் இருந்தார்களா? அல்லது மறைக்கப்பட்டார்களா? என்பது கேள்விக்குறி

    இன்றும் பெண்களை அடக்கி வைக்கின்ற நடைமுறை காணப்படுகின்றது. தம்முடைய சொல்லை மீறி நடக்கின்ற போது பேச்சால் கொல்வது(பெண்களில் கை வைத்தால் காவல்துறை கொண்டு போய்விடும்), அவளுடைய அறிவை துச்சமாக மதிப்பது போன்ற நடைமுறைகள் ஆண்களிடம் காணப்படுகின்றது. இவை அவர்களிடம் தம்முடைய பரம்பரை மரபணுக்கள் இன்றும் இருப்பதை அடையாளங்காட்டுவதாக அமைகின்றது.  இவை தற்போதும் நடைமுறை வாழ்க்கையில் பெண்களின் குற்றச்சாட்டுக்களாகக் காணப்படுகின்றன.


    இக்காலப்பகுதியிலும் ஒரு இலக்கிய விழாவாக இருந்தால் தம்முடைய மனைவிமாருடன் இலக்கிய நிகழ்வுகளுக்குச் சமூகமளிக்கும் ஆண்களைக் காண்பது அரிது. தம்முடைய மனைவிமாருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இல்லை என்று புறக்கணித்து அந்த ஆர்வத்தைத் தூண்டும் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள அவர்கள் முயல்வதில்லை. 

    இவை எல்லாவற்றுக்கும் தாய்வழி சமுதாயம் தந்தை வழி சமுதாயமாக மாறியதே காரணமாக இருக்க வேண்டும். கோடரியை ஆயதமாக வைத்திருக்கின்ற பரசுராமன் தன்னுடைய தந்தை ஆணையிடத் தாயைக் கொன்றிருக்கின்றான். இந்தக் கதை தந்தை வழி சமுதாயமாக மாறியபோதே தோன்;றியிருக்க வேண்டும். இதனாலேயே பெண்ணுக்குக் கற்பு போதிக்கப்பட்டது. 

    இலக்கியத் திறமையுள்ள பெண்களைத் தெய்வமாகப் பார்க்கின்ற தன்மையும் ஒருவகை அடக்குமறை என்றே சொல்ல வேண்டும். சிறந்த படைப்பாளியும் திறமையும் மிக்க காரைக்காலம்மையாரைத் தெய்வமாக காண்பதாக அவள் கால்களில் விழுந்து விடுகின்றான் பரமதத்தன். தான் விரும்பி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து விடுகின்றான். காரைக்காலம்மையாரும் உனக்குப் பயன்படாத உடல் எனக்குத் தேவையில்லை என்று உணவை ஒறுத்து எலும்பு உடம்பு வேண்டிப் பெறுகின்றாள். சிலம்பு உடைத்து கணவனை நிரபராதி என்று நிறுவிய கண்ணகியைக் கூட வந்தவர்கள் நாட்டைத் தீக்கு இரையாக்கி கண்ணகியைக் கடவுளாக்கி விடுகின்றனர். இதனால், கண்ணகி வீரப் பெண்கள் அமைப்பு ஏற்படுத்த முடியாதவளாகி விடுகின்றாள். 

    கணவன் தாலி என்னும் வேலி போட்டு மனைவியைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்கின்றான். தாலி என்பது நிமிர்ந்து வரும் ஆடவன் இவள் திருமணம் ஆனவள் என்று அடையாளங்காட்டுவதாக காரணம் காட்டுகின்றான். சில பெண்கள் என்ஸ் ரே எடுக்கின்ற போது கூடத் தாலியைக் கழட்டத் தயங்குகின்றார்கள். அவர்கள் தம்முடைய கணவனுக்கு ஏதாவது அபரிவிதமாக நடந்துவிடும் என்ற மூடநம்பிக்கையை வைத்திருக்கின்றார்கள். பெண்கள் கழுத்தில் அணியும் தாலி என்னும் அணிகலன் சங்ககாலத்தில் இருந்ததில்லை. 10 ஆம் நூற்றாண்டின் பின்புதான் அது வழக்கத்துக்கு வந்தது. அப்படியானால், அதற்கு முன் பிறந்த பெண்களுக்கு இந்தப் பயம் இருந்திருக்குமா? 

    நாம் இப்போது மேற்கொள்ளுகின்ற பண்பாட்டு அம்சங்கள் எமக்குரியவை அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உணவு தொடங்கி உடை, வீடு, விழாக்கள் அனைத்துமே அந்நியரின் படையெடுப்புக்களினாலும் மக்களின் மாற்றங்களினாலும் தமிழர்கள் மத்தியில் வந்து சேர்ந்தவையே. தற்போது பெண்கள் அணியும் புடைவை கூட தெலுங்கு பேசுகின்ற மக்களால் வந்ததே. சிலப்பதிகாரத்துக்கு முந்திய தமிழ் பெண்கள் மார்புக்கச்சை கூட அணிந்ததுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. கி.பி 9 ஆம் நூற்றாண்டின் பின்பே மார்புக்கச்சை அணிந்தார்கள். தெலுங்கு மக்களாலேயே இரவுக்கை அணியும் வழக்கம் வந்தது எனத் தன்னுடைய ஆய்வின் மூலமாக தொ.பரமசிவன் எடுது;துரைக்கின்றார். எனவே பண்பாடு கலாசாரம் என்று பெண்களின் ஆளுமைக்கு விலங்கு போட முடியாது. 

    நளாயினி தன்னுடைய குஷ்டரோகியான தன்னுடைய கணவனைத் தாசியின் வீட்டுக்குக் கூடையிலே சுமந்து செல்கின்றாள். தீக்குளிக்க வைத்துக் காட்டில் விட்டுத் துன்புறுத்தப்பட்ட சீதை, கோவலனால், தவிக்கவிடப்பட்ட கண்ணகி, மாதவி, இவ்வாறான இலக்கியங்களை கற்பித்த காரணத்தால், பிற்குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புமிக்க பெண் இலக்கிய ஆளுமைகளின் படைப்பாற்றலை இன்று இழந்து நி;ற்கின்றோம்.


    "கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகும்"என்று பாடும் ஒக்கூர் மாசாத்தியார் 

    "பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆதலின்

    செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியோடு

    உயவொடு வருந்தும் மன்னே! இனியே

    புகர்நிறம் கொண்ட களிறு அட்டுஆனான்

    முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே

    உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு

    மானுளை அன்ன குடுமித்

    தோல்மிசைக் கிடந்த புலஅண லோனே"

    குழந்தைப் பருவத்திலே பால் உண்ணாமல் இருக்க கோபம் கெண்டவளைப் போலச் சிறுகோலை எடுத்தால் பயந்து உணவு உடனே உண்ணுகின்ற தன்மையையுடையவனே இன்று களிறுகளைக் கொன்றும் தளராது, அந்தப் போரிலே மார்பகத்து அம்புபட்டுக் கேடகத்தின்மேல் வீழ்ந்து கிடந்தவனை எடுத்து, 'ஐயோ! மார்பில் அம்பு தைத்துளதே? என வருந்தினேன். அவனோ, அதை நான் அறியவில்லையே! என்றான். உரவோர் மகன் அன்றோ அவன்! என்று பாடிய பொன்முடியார் பாடலைப் போலும் சங்க காலத்திலே ஆளுமையும், படைப்புத் திறனும், வீரமும்  பெண்கள் பெற்றிருந்த பண்பாடு மாற்றம் கண்டது. 

    இன்று மீண்டும் பெண்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும் தன்மை காணப்பட்டாலும் திறமைமிக்க இலக்கியகர்த்தாக்கள் அகப்பையை எறிந்து விட்டு கணினியைத் திறக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களைப் போதிக்கும் நாடகக் குகைக்குள் இருந்து வெளிவந்து நன்னெறி இலக்கியங்கள் படைக்க வேண்டும். 

    வெற்றிமணி பத்திரிகையில் 2024 மார்ச் மாதக் கட்டுரை 

    உரங்கொண்ட மங்கையர்க்கு மகளிர்தின வாழ்த்துகள்  


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...