• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 24 பிப்ரவரி, 2014

  என் குற்றமா அவன் குற்றமா       
  நன்றாய்த் தானே வளர்த்தேன். நலமோடு நல்லுரைகள் உவந்தளித்தேன். அளவுக்கதிகமாய் பாசத்தை அள்ளி வழங்கினேன். இரவு பகலாய் இன்பமன்றி துன்பத்தை அறியாது வளர்த்தேன். அளித்த அறிவுரைகள் அனைத்துமே விழலுக்கிறைத்த  நீராகிப் போனதுவோ.
                      
                     சிந்தனையனைத்தும் ஒருமித்து மகனைச் சுற்றிச் சுற்றி வந்தன. நான் செய்த குற்றம் என்ன? மீண்டும் நினைத்துப் பார்த்தேன். என் எண்ண அலைகளில் என் குற்றம் எங்காவது மிதந்து வருகின்றதா என்று. பாடசாலை செல்வதற்காய் ஆடை மாற்றச் சென்ற மகன், உண்டியல் பணத்தை எண்ணிக் கொண்டு நிற்கின்றான். என்ன இது பண ஆராய்ச்சி? என்னும் என் வினாவிற்கு கணக்குப் பார்த்து திரும்ப வைக்கப் போகின்றேன் என்னும் ஒரு பதிலை இறுத்தான். பதிலினுள் பதிந்திருந்த ஒரு மறைவு என் ஆராய்வுக் கண்ணைத் திறந்து விட்டது. எவ்வித சலனமுமின்றி வேறு கடமை முடித்து வந்து பாடசாலைக்கு ஏதோ பணம் கொடுக்க வேண்டும் என்றாயே இதோ உன் பாடசாலைப் பையினுள் வைக்கின்றேன். என்று பணம் வைக்கும் பாங்கில் கைவிரல்களை பாடசாலைப் பையினுள் பரவவிடுகின்றேன். உள்ளே ஒரு ஒயிரோ ஒழிந்திருந்தது.

  "எப்படி இவ் ஒயிரோ இதற்குள் வந்தது. ஏற்கனவே உன்னிடம் இப்பணம் இருந்ததில்லையே? உண்டியலினுள் இருந்து எடுத்தாயா?

  "ஆம்.....''
            என்னும்  உண்மை ஆறுதலாய் வந்தது .

  "நீ இப்படிச் செய்வது சரியா? பொய் சொல்வது முறையா? நீ செய்கின்ற தப்பான காரியங்களால் பெற்றோரை விட்டுநீ சிறுது சிறிதாய் தூர விலகிப் போவாய். பணம் கொண்டு செல்வது பிழை இல்லை.அதை மறைத்துப் பொய் சொல்வதே பெரும் குற்றம். இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஓர் ஒயிரோ உனக்காக வழங்குகின்றேன். அதை உன் சரியான தேவைக்குப் பயன்படுத்திக் கொள். பண்பாக நான் தரும் இச் சலுகை உன் பண்பற்ற செயலைச் சிந்திக்க வைக்கும் என்று நம்புகின்றேன். பெற்றோரிடம்  எதையும் மறைக்கும் இக்குற்றத்தை இன்றுடன் தூர எறிந்துவிடு. மன்னிக்க முடியாக் குற்றம் என்று உன்னை அடித்துத் திருத்த விரும்பவில்லை. என் மகன் பற்றி நான் கொண்ட கருத்தில் ஒரு கரும் புள்ளி விழுந்துவிட்டது''

   கட்டளையை கருத்திட்டு பாடசாலை அனுப்பி விட்டாள்.


  இங்கு ஒரு  தாய் மனம் தவிக்குது. இது என் குற்றமா? அவன் குற்றமா? யாரைக் குற்றம் நான் சொல்வேன்?

  வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

  இது ஒரு காதல் அறிமுகம்

  உலகமே இணைந்து வந்து
  அன்பை அள்ளிச் சொரிந்தாலும் - உன்
  ஒருவன் அன்புக்கு நிகர் எதிலும் காணேன்
  காலங்கள் வேகமாய் பறந்து சென்றாலும்
  உன்னை நினைக்கும் பொழுது
  வேகமும் அருகாமையாய் உணர்கின்றேன்  
  நாளும் பூக்கும் மலர்கள் போல்
  புதிது புதிதாய் நினைவுகளைப்
  பாய்ச்சிச் செல்கின்றாய்
  மின்சாரமாய்ப் பாய்கின்றாய்
  சாரமெல்லாம் இழக்கின்றேன் – உன்
  கண்கள் சொல்லும் கவிதைகளுக்கு
  என்னைத் தவிர விளக்கம் சொல்ல யாருண்டு
  காதல் மனதில் பெருக்கெடுத்தால்
  கோழை உலகில் மறைந்திடுவான்
  உன் நினைவு மனதில் பூத்ததனால்
  கனவுகளே இரவில் நிஜமாகும்
  வார்த்தைகளால் இனிய ராகம் இசைக்கின்றாய்
  பார்வையால் காதல் பாடம் நடத்துகின்றாய்
  உன் நகர்விலே ஓராயிரம் பூப்பந்தல்கள்
  உன் சிரிப்பிலே என் சிந்தை சிக்கித் தவிக்கிறது
  உன் புகழ்ச்சியில் என்னை நான் இழக்கின்றேன்
  உன் இதய வருகை என் இதய ராகம்
  என் கவிதைகளுக்கு கருத் தந்தவனே
  என் காவியத்தின்  நாயகனே
  யாரோ காதலை என்னிடம் சொல்ல
  யானோ உன்னிடம் அதனைச் சொல்ல
  உன் மனம் எனக்கு அறிமுகமானது
  உன் காதலே எனக்குக் காணிக்கையானது
  காதலைச் சொன்னவன்  காயப்பட
  உன் காதலை என் மனம் ரசித்தது
  ஒரு காதல் இழப்பு ஒரு காதல் உதயம்
  உச்சிமுதல் பாதம் வரை ஓவியமாய்
  உன் உருவம் என் மனதில் பதிந்திருக்க
  விழுந்து விட்டேன் உன் அடியில் – இனியும்
  காத்திருக்க நேரமில்லை நானும் இன்று
  காதலர் தினத்தினிலே காதலை சொல்லி
  உன் காவிய மனமேடையில்
  கல்வெட்டாய் பதிகின்றேன்

  அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்


  ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

  முடிவைச் சொல்லிவிடு (பாகம் 4


  இந்த இதயம் இருக்கிறதே இதுகூட சிலவேளை குருதியால் நிறையாது கல்லால் நிறைந்து இருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றும். மலையாய் நினைத்திருக்க மண்ணாய் மாற்றி விட்டாளே. தனியாய் புலம்பவிட்டு எம் தலைமுறையைக் கொண்டு சென்றுவிட்டாளே. நம்பிக்கை என்பது மோசமா? இது மனித வாழ்வில் சகஜமா? ஈட்டி கொண்டு குத்தியிருந்தால் இறந்திருப்போம். இதயம் எம்முடன் இருக்க எப்படி வாழ எம்மால் முடியும். புலம்பிய இரு இதயங்கள்இ புண்ணாகிப்போன மனதுடன் வீடு திரும்பின. அவள் விட்டுப்போன வீட்டை துப்பரவு செய்து வீட்டுக்காரரிடம் ஒப்படைத்தனர். 
               
    ஏமாற்றத்தை எப்படி மனது ஏற்றுக்கொள்ளும்? நடந்தவற்றை எப்படி மனது மறந்து போகும்? வாரிசு எங்கோ வாழ்கின்றது என்னும் போது மனதில் நிம்மதி எங்கே குடிகொள்ளும்? உலகம் உருண்டை ஆனது. தொழில்நுட்ப உலகில் யாரைத்தான் மறைத்து வைக்க முடியும். உலகமே கைக்குள் அடக்கமாகி இருக்க விமானம் ஏறி உளவுப்படை தேடவேண்டுமா?
                   
  காலம் கடந்தது காத்திருப்புத் தொடர்ந்தது. தன்னுடைய பிள்ளையை நினைத்து நினைத்து சிந்து சிந்தினால் கண்ணீர். நொந்து நூலானாள். வருடங்கள் பதினெட்டுக் கடந்ததன. வேலைநிமித்தம் வேறு ஓர் கிராமம் மாறினான் மதன். மாற்றம் தன் மனைவியின் மனநிலைக்கு நல்லதென வைத்தியரின் அறிவுரையும் கிடைத்தது. புதிய இடம் புதுவித அனுபவம் நினைவுகளுக்கு இடைவெளி தரும் என்பது பலரது கணிப்பு. ஆனால் அது நடக்கவில்லையே. காலையில் கண்விழித்தால் தன்  பதினெட்டு வயது மகனை அல்லவா தேடும் மனம். 
                   
  புதிய கிராமத்தில் உணவுப்பொருள்கள் கொள்வனவு செய்வதற்கு ஒரு கடைக்குள் நுழைகிறான் மதன். என்ன ஆச்சரியம் தன் முன்னே லிசி உணவுப்பொருள்கள் தாங்கிய வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்வது தெரிகின்றது. அவன் கண் அவனுக்குப் பொய் உரைக்காது. ஒரு செக்கனுக்குள் மின்சாரமாய் லிசிமுன் பாய்ந்தான். 

  ' லிசி...... நில் ....'

  திரும்பிப் பார்த்தவள் . பார்க்காததுபோல் வாகனத்தினுள் ஏறினாள். 

  'நில்....' மீண்டும் அவளைத் தடுத்து நிறுத்தினான் மதன்.

  "ஹலோ..... உங்களுக்கு என்ன வேண்டும். நான் உங்களுடன் கதைப்பதுக்கு எனக்கு ஒன்றும் இல்லை. என்னை விடுங்கள்......'

  ஸ்தம்பித்து நின்றான் மதன். சுர்ர்ர்........... என்று ஏதோ மூளைக்குள் ஓடியது. அவள் ஊரை விட்டு ஓடுவதற்குள் அவள் இருப்பிடம் கண்டு பிடிக்க வேண்டும். மனைவிக்கும் சொல்லாமல் வேலைக்கும் லீவு போட்டுவிட்டான். தேடல் தொடர்ந்தது. விட்டுவிடுவானா தனது பதினெட்டு வருட மன உழைச்சல்இ நம்பிக்கைஇ தன் கனவுஇ ப்ரேக் இல்லாத வாகனமாய்த் தொடர்ந்த அவன் தேடலுக்கு முடிவு கிடைத்தது. இடம் கண்டு பிடித்தான். வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். 
             
    வாசல் கதவு திறந்தது. தன் கண்ணையே தன்னால் நம்ப முடியவில்லை. பேச்சு வரவில்லை. கண்ணீரே கண்களில் இருந்து தொடர் ஊற்றாய் ஆனது. ஆண்டவனை இன்று நம்பினான். இவ்வுலகில் துரோகத்தை என்றோ ஒருநாள் காலடியில் விழ வைக்கலாம் என்னும் தத்துவம் புரிந்தது. மதனையே போட்டோக்கொப்பி எடுத்ததுபோல் மதன்  தோற்றத்தில் ஒரு இளைஞன் தன்முன்னே கதவைத் திறந்தது ஒரு கனவாய்த் தெரிந்தது. 

  "லிசியை சந்திக்கலாமா....' ஜெர்மன் மொழியில் அவன் உதடுகள் உச்சரித்தன. 
  தாயை அழைத்தான் அவ் இளைஞன். முன்னே வந்த லிசி திகைத்துப் போனாள். தன்  கண்முன்னே காட்சி அளிக்கும் மதனைக் கண்டாள். 

  "லூயிஸ் உள்ளே போ.......' உத்தரவிட்டாள். 

  "உங்களுக்கு என்ன வேண்டும் மதன். என்ன கேட்டு இங்கே வந்துள்ளீர்கள். உங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' வார்த்தைகளை மனச் சாட்சியே இல்லாது உதிர்த்துவிட்டுக் கதவைத் தாளிட்டாள் லிசி. 

  உடைந்து போனான் மதன்.  பாறாங்கல் ஒன்று மனதுக்குள் அழுத்தியது. விடை பெற்றாலும் பல தடவை லிசியை சந்திப்பதற்கு முயற்சித்தான். அவளும் ஒவ்வொரு தடவையும் எடுத்தெறிந்து பேசிவிட்டு துணிவாய் நடந்தாள். மனைவியிடமும் வெளிப்படுத்தாது பயித்தியமான மதன் இறுதியாக சமுகநற்பணிமன்ற கோட்டுக்கு முறையிட்டான். அன்றுதான் முதல் முறையாக சிந்துவுடன் நடந்தவற்றை விளக்கினான். 

  "சிந்து நீ சிந்திய கண்ணீருக்கு விடை கிடைத்துவிட்டது. உன் காத்திருப்புக்கு பலன் கிடைத்திவிட்டது. உன் மகன் உன்னிடம் வரும் காலம் நெருங்கிவிட்டது'

  என்னப்பா.... என்ன சொல்றீங்கள்! என்ன நடந்தது? பட்டென்று சொல்லிடுங்கள். என்னால் பொறுக்க முடியாது. எனக்கு அந்த சக்தியும் இல்லை. மகன் கிடைச்சிட்டானா? எங்க கண்டனீங்கள்? 

  அடுக்கடுக்காய் கேள்விகள் மாலை போட்டன. விழுந்த கேள்விகளுக்கு நடந்தவை அத்தனையும் விளக்கங்கள் ஆகின. 

  "என்ன தைரியம். என்னமாக் கதைத்தாள். இப்படிச் செய்திட்டாளே?  எங்களுடைய பாசத்துக்கு சக்தி இருக்குபா. அது என்ர மகனை என்னிடம் கொண்டு சேர்க்கும்' 

  இரு குடும்பமும் கோர்ட்டுக்கு அழைக்கப்பட்டது. தனி அறையில் லூயிஸ் இருந்தான். ஏன் அழைத்தார்கள்? நான் ஏன் இங்கே? என்னும் எந்த விடயமும் தெரியாது தனி அறையில் லூயிஸ். விசாரணை அறையினுள் மதன்இ சிந்து. லிசியின் தற்கால கணவன் நால்வரும் நீதிபதியின் முன் நின்று கொண்டிருந்தனர். லிசியைக் கண்ட சிந்துவின் கண்கள் நெருப்பை கக்கின. தன்னுடன் சிரித்துக் கும்மாளம் இட்டு பல கதை பேசி பழகிய லிசி எதிரியாய் உருவெடுத்திருக்கும் மாயத்தை நினைத்துப் பார்த்தாள். பூசி மினிக்கி வந்திருக்கும் ஒரு மாயப் பிசாசாய் தன் கண்முன்னே நிற்கும் லிசியைப் பார்த்து முதல் வாய் திறந்தாள்.

  "இப்படிச் செய்து போட்டாயே? எங்களுடைய ஒப்பந்தத்தை குழி தோண்டி புதைத்து விட்டாயே. உன் நிலைமை என்னவோ என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே. இப்படி நயவஞ்சகப் பெட்டகமாகப் பழகியிருக்கிறாயே. போதும் உன் வஞ்சனை இனி எங்கள் பிள்ளையை எங்களிடம் கொடுத்துடுவிடு. உன்னை மன்னித்து விடுகின்றோம்''

  "நல்லாய் இருக்கிறது. இத்தனை வருடமும் வயிற்றிலும் மார்பிலும் தூக்கி வளர்த்த பிள்ளை. பார்த்துப் பார்த்து பனி தண்ணீர் பாதிக்காது பக்குவமாய் வளர்த்த பிள்ளை. இன்று வளர்ந்து அழகாய் என் தோளுக்கு மேல் நிற்கின்றான். சும்மா கூட்டிப்போக விடுவதற்கு நான் என்ன பெற்று எடுக்காது. பிய்த்து எடுத்தேனா? பிள்ளை உங்களுடையது என்பதற்கு என்ன உரிமை உங்களிடம் இருக்கின்றது' 

  வார்த்தைகளை அளந்து பேசினாள்.

  "உனக்கு என்ன மறதி மருந்து தந்தார்களா? இந்தப் பிள்ளைக்கு உயிர் கொடுத்ததே நாங்கள் தான். கரு வளர அத்தனை சத்துக்களையும் தந்ததே நாங்கள் தான். அவன் உடலின் ஒவ்வொரு அங்கங்களையும் தனியே எடுத்துப் பார். அவனைப் போர்த்தியிருக்கும் தோலை மறந்து பார். அத்தனையும் எங்கள் மரபணுக்களால் கட்டப்பட்ட மனிதன். உனக்குள் தயாரிக்கப்பட்ட இயந்திரம். உருவான இடம் சொந்தமா? உருவாக்கியவர்கள் சொந்தமா? எங்களுடைய பிள்ளையை எங்களுக்குத் தந்துவிடு' மதன் மறுமொழி அளித்தான்.

  "ஏழு மாதங்கள் உணவு தந்தால்இ பிள்ளை வளர்ந்து விடுமா? ஒரு கேலிச் சிரிப்பை உதிர்த்தாள். 

  "அது தானே நீ வயிற்றிலே தூக்கிக் கொண்டு போய் விட்டாயே'
  வளர்ந்த வார்த்தைகள் முடிவில்லாது முளைத்துக் கொண்டே இருந்தன. பிள்ளையை உரிமையாக்க ஒருவருக்கு ஒருவர் காரணங்களை கடைந்து கடைந்து தந்தனர். இறுதியில் நீதிபதியின் கட்டளையின் பெயரில் லூயிஸ் அழைக்கப்பட்டான். 

  உடலுக்குள்ளே இருந்து ஏதோ ஒரு உணர்வு. மதன் தம்பதியினரிடம் இருந்து வெளிப்பட்டது. தங்கள் பல வருடக் கனவு முன்னே காட்சியளிக்க கண்ணீர் மடை திறந்தது. உணர்வுகளின் வெளிப்பாட்டை ஒழிக்காது வெளிப்படுத்தும் சக்தி கண்ணீருக்கு மட்டும்தான் உண்டு. அந்த உப்புத் தண்ணீருக்கு எந்த கடல் தண்ணீரும் சமமாகாது. வார்த்தைகளுக்கு வடிகால் போடலாம். கண்ணீருக்கு அணைக்கட்டு கிடையாது. எதுவுமே புரியாது உள்நுழைந்த லூயிஸை ஓடிச் சென்று கட்டி அணைத்து கண்ணீரைச் சொரிந்தாள் லிசி. பார்த்துக் கொண்டிருந்த மதன் சுதாவிற்கு ஏக்கமும் எரிச்சலும் கூட்டுச்சேர்ந்து வெறுப்பு என்னும் உணர்வை ஊட்டியது. தன் உரிமை பிறர் கைக்குள் சென்று உரிமை கொண்டாடும் உணர்வைப் பார்த்துக்  கொண்டிருக்க எப்படி இருக்கும்? அருகே இருக்கும் மகனைக் கட்டி அணைக்க உரிமை அற்றவர்களா நாம் என்னும் தவிப்பு இருவரையும் ஆட்டிப்படைத்தது.

  நடந்தவை அத்தனையும் லூயிஸ்க்கு விளக்கப்பட்டது. ஒவ்வொன்றாக வெளிப்படும் போது அவன் கண்கள் விரிந்தன. குழப்ப மூட்டை ஒரேயடியாக அவன் மூளைக்குள் கொண்டு கொட்டப்பட்டது. இவ்விடத்துக் கதாநாயகனாயும் முடிவு தர வேண்டிய பொறுப்பாளியாயும் ஆனான் லூயிஸ். 

  முடிவைச் சொல்லிவிடு லூயிஸ். எங்கே போகப் போகின்றாய். பெற்று வளர்த்தவர்களிடமா? அல்லது நீ உருவாகுவதற்கே காரணமானவர்களிடமா? அவர்கள் உன் தாய் செய்தது நம்பிக்கைத் துரோகம் என்கின்றார்கள். நீ அவர்களுக்கே சொந்தமானவன் என்று இத்தனை நாளும் உன்னைத் தேடி அலைந்துள்ளார்கள். தாய் பாசத்திற்காய் இருவரும் ஏங்குகின்றார்கள். உன் உறவை எண்ணி உன் தந்தை தவிக்கின்றார். உன் முடிவைச் சொல்லிவிடு. 
  முதல் முறையாய் வாய் திறந்தான் லூயிஸ். என் அம்மா செய்தது பிழை தான். ஆனால் என்னில் வைத்திருக்கும் பாசத்தினாலேயே செய்தாள். இவர்களை எனக்குத் தெரியாது. இவர்களைப் பார்க்கும் போது பாவமாகத்தான் இருக்கின்றது. அம்மாவை விட்டுப் போக என்னால் முடியாது. ஆனால்இ அம்மா இத்தனை நாளும் இத்தனையையும் எனக்கு மறைத்தது என்னால் மன்னிக்கவே முடியாத பிழையாக இருக்கின்றது. எனக்கு இருவரும் வேண்டும். உயிர்தந்தவர்களை மதிக்கின்றேன். ஆனால் பெற்று வளர்த்தவர்களுடனேயே வாழ விரும்புகின்றேன். ஆனால் நானே அவர்கள் என்னும்போது அவர்களுடனும் சேர்ந்து வாழ்வேன். காலம் தான் என் எதிர்கால மாற்றத்திற்கு விடை சொல்லும். 

  நீதிபதியின் பணிப்பின் பேரில் சிந்து, மதன் அருகே சென்றான் லூயிஸ். ஆசை தீர லூயிசைக் கட்டி அணைத்தனர் இருவரும். சாரை சாரையாய் கண்ணீரை வடித்தனர். லூயிஸை அருகே செல்லவிடாது பல நாள்கள் தடுத்த லிசி இன்று எதுவும் செய்யமுடியாது நின்றாள். 

  தொடர்புகள் விட்டுப் போவதில்லை. உயிர் உள்ளவரை காந்தம் போல் எங்கிருந்தாலும் கவர்ந்து இழுத்துவிடும். மன அலைகளுக்கு வலிமை உண்டு. உலகெங்கும் நிறைந்திருக்கும் அலைகளுக்கு மத்தியில் பாச அலைகள் நிச்சயம் பக்கம் வந்தே தீரும். எதிலும் நாட்டம் வைத்தால்இ வாழ்வின் உச்சி வரை தொடர்ந்து முயற்சியுங்கள் உச்சத்தைத் தொடுவீர்கள் .
                                   
                                             முற்றும் 

                     

  Neuralink Ni

  Brain computer interface research or brain machine interfaces   மனிதனின் இதயத்தில் கை வைத்தாகள். இதய மாற்று சத்திரசிகிச்சை, கல்லீரல், சிறு...