• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 31 ஜனவரி, 2012

  பொறுமையின் கனிவு அங்கம் 2


   
             


  முடிவாக எதைத்தான் பரிசோதனை செய்வோம். இந்த இரகுவின் இரத்த அழுத்தத்தின் மேலோட்டம் கீழிறங்க வழிதான் யாது?  இறுதிப் பரிசோதனை சிறுநீரகப்பரிசோதனை. முயற்சி நமது கையில் முடிவு இரகுவின் உடலில். மருத்துவர்கள் ஆலோசனையின் பெயரில் சிறுநீரகப் பரிசோதனைக்காய் வேறு மருத்துவமனை அவனைத் தத்தெடுத்தது. தகுந்த பரிசோதனைகளின் பின் முடிவும் கண்டறிந்தது. ரகுவின் இரண்டு சிறுநீர்த் தொழிற்பாட்டு நிலையங்களும் 25 வீதமே தொழிற்படுகின்றன. இப்போது கவிதா கண்களில் கண்ணீர்த் தேங்கி கட்டுப்பட்டாயிற்று. 

          அளவுக்கு மிஞ்சினால் இன்பம் தரும் மதுபானம் வாந்தியாய் வெளியேறிவிடும். தித்திக்கும் இனிப்புச் சக்கரை, வியாதியை அன்புடன் பரிசளிக்கும். இன்பத்தின் மறுபகுதி துன்பம் அல்லவா. முதுகுதான் வெளித் தோற்றம் இடுப்பில் மறைந்திருக்கும் இடது, வலது சிறுநீரகங்களின் வடிவமும் தொழிலும் வெளித்தோற்றத்தில் யாரறிவார். குருதியில் குணம் தரும் சத்துக்களும் உண்டு, கழிவுகளும் கூடவே உண்டு. நாளொன்றுக்கு 350 தடவைகள் சிறுநீரகத்தினூடாகப் பயணம் செய்யும் வேகக் குருதியைச் சுத்தமாக்கி அனுப்பிக் கொண்டிருக்கும் தொழிற்சாலையே இந்தச் சிறுநீரகம். 
                
           உடலுக்குத் தேவையான புரதத்தை இரத்தம் எடுத்துச் செல்கிறது. செல்கள் புரதத்தைப் பயன்படுத்தியது போக மிஞ்சிய கழிவுகள் நைட்ரஜன் அடங்கிய யூரியாவாக மாறும். இவை இரத்தத்திலே மீண்டும் கலந்துவிட்டால், உயிர் உடலைவிட்டு விடை பெற்றுவிடும். அதனால், இந்த யூரியாவை இரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து சிறுநீராக கழிவான வெளியகற்றுகின்ற பாரிய பணியை சிறுநீரகம் செய்கின்றது. இது நல்லவற்றை உடல் ஏற்கத் தீயவற்றை வெளியகற்றும் சுத்தீகரிப்புத் தொழிலாளி. வாழும் நாள் வரை இரவுபகலின்றி நமக்காய் உழைக்கும் தியாகி. அவர் உழைப்புத் தொய்வு கண்டுவிட்டால், அழுக்கனைத்தும் இரத்தத்துடன் இணைந்து இழுக்கடைந்த உடலாகும். இந்நிலைக்குத் தள்ளப்பட்டான் ரகு.

              நமது இதயத்திலிருந்து இரத்தம் தமணிகளின் வழியாக நெப்ரானை வந்தடைகின்றது. இங்கு இரத்தத்தின் திரவப்பகுதிகளான பிளாஸ்மோ, குளுக்கோஸ், அமினோஅமிலங்கள், பொட்டாசியம், குளோரைட் போன்றவை வடிகட்டப்படுகிறது எஞ்சிய இரத்தம், நெப்ரானிலுள்ள குளோமெருலஸ் குழாய்ப் பகுதியை வந்தடைகின்றது. இங்கு போடோசைஸ் செல்கள் வடிகட்டியாகச் செயல்படுகின்றன. இங்கு இரசயான மாற்றங்களுக்கு உட்பட்ட இரத்தம் டுயூபிள் என்னும் நுண்குழாய்களை வந்தடைகின்றது.  இங்கு உடலுக்குத் தேவையான சத்துக்களாகிய சோடியம், பொஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவற்றின் சரியான அளவுகள் கணக்கெடுக்கப்பட வேண்டும். இத்தொழிலைச் சிறுநீரகம் மிகக் கண்ணியத்துடன் செய்கின்றது. இந்த அளவில் குறைவு காணப்பட்டால் மீண்டும் அவற்றை இரத்தத்தில் கலக்கச் செய்யும் பணியையும் தலைமேற் கொண்டு செய்கின்றது. 
                    
                  இரகுவுக்கு நோய் இதுவே என்று ஊர்ஜிதமாகிவிட வைத்தியர்கள் துரிதமானார்கள். ஜேர்மனிய வைத்தியத்தை உலகமே அறியும். மனிதனைப் பார்த்தே பணத்தைப் பார்க்கும் மனிதத்தன்மை படைத்தவர்கள். பணமில்லாத காரணத்தினால் நோயாளிகளைத் தவிக்கவிட்ட வைத்தியர்களை எத்தனையோ தமிழ்ப் படங்களில் பார்த்திருக்கின்றேன். பண வசதி குறைந்தவர்களுக்குக் கூட அனைத்து மருத்துவ வசதிகளையும் பெறக்கூடியது வாழ்வளிக்கும் நாடு. இந்த வகையிலே இரகுவின் கையின் தோலைக் கிழித்து ஒரு செயற்கை இயந்திரம் நிரந்தரமாய்ப் பொருத்தப்பட்டது. அதனூடக இரத்தம் சுத்தீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். நாடிக்குள்ளால் குருதி வெளியேறும் போது நாளத்தினூடாகப் புதிய குருதி செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். ரகுவின் உடலும் துரும்பானது. உற்றார் உறவினர் துணையிழந்தான். கூடிவந்த உறவுகள் அவனை நாடவில்லை இப்போது சிறுநீரக தானம் வழங்க யாரும் முன் வரவில்லை. யாரால் தான் இம்முடிவு எடுக்க முடியும். முடிந்தவர் இரத்தம் கூட ரகு உடலுக்கும் பொருந்த வேண்டுமே. அப்போதுதானே அவனுடலும் அந்நியனாய் இவ்வுறுப்பை எண்ணாது. ஒன்றுடன் வாழ்ந்து விடலாம், ஆனால், அந்த ஒன்றுக்கு ஏதும் பங்கம் விளைந்து விட்டால்!!!! தம்பதிகள் இருவரும் தவியாய்த் தவித்தனர்.

                        உலகத்தில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ஒரு சிறுநீரகத்துடன் வாழ்கின்றார்கள். 3 சிறுநீரகத்துடனும் பலர் படைக்கப்பட்டுள்ளார்கள். தேவைப்படுவோர்க்குக் கிடைப்பதில்லை. போதுமென்பார்க்கு அளவு மீறித் தரப்படுகிறது. சிறுநீரகம் தானம் புரியவில்லையே என்று யாரையும் குறைகூற முடியவில்லை. யாரும் தருவதற்காய் முயற்சி செய்வதாய் பாசாங்கு கூடச் செய்யவில்லை. 

  காத்திருப்புத் தொடர்கிறது.

   
               

  ஞாயிறு, 29 ஜனவரி, 2012

  ( அங்கம் 1) பொறுமையின் கனிவு ( அங்கம் 1)

                                                  தொடர்கதை

  உடற்பலம் அனைத்தும் சேர்த்து தன் தனிமுயற்சியால் உலகத்தை வெளிக்காட்ட உலோகத்துணை எதுவுமின்றி பூமிக்குத் தன் குழந்தையைக் கொண்டுவந்தாள் கவிதா. குழந்தைக் குரல் கேட்கத் தளர்ச்சி கண்ட அவள் கண்கள் விழித்துக் கொண்டன. கையிலே தரப்பட்ட குழந்தையின் கன்னங்களில் இரண்டு சொட்டுக்கண்ணீர்த் துளிகள் விழுந்தன. இது ஆனந்தக் கண்ணீரா? இல்லை அவள் தாங்கிய வேதனைகளைப் பிழிந்து வந்த கண்ணீரா? 
      
       வேதனைக் காலம் தொடர்வதில்லை – மனிதன்
       சோதனைக் காலம் சொந்தமாவதில்லை
       வேதனையும் சோதனையும் ஓர்நாள் - இன்ப 
       வேதனத்தை விதைத்து விடும் 
       விளைவுகளும் நலமாய்ச் சொரிந்துவிடும்.

  கையளவில் பிள்ளைவரக் கடந்த காலங்களை அவள் கடத்தியதும் ஒரு கனவாகியது. செழிப்பான செல்வக் களிப்பான குடும்பத்திலிருந்து தனக்காய் ஒரு சிறப்பான குடும்பங் காண கடவைச்சீட்டே அவளுக்குச் சிறகாகியது. ஜேர்மனியும் அவளை வரவேற்றது. 6 மாதங்கள் அவளுக்கோ அழகான வாழ்க்கை. அவள் ஆசை மணாளன் அன்புடனே உலகம் அனைத்தும் சுற்றிவந்தாள் கவிதா. அவள் முகம் நிமிர்த்த உலகம் பூச்சொரிந்தது. இன்பமலர்கள் கொட்டிக் கிடந்தன. குதூகலவாசனை இல்லமெங்கும் நுகரப்பட்டது. புகுந்தவீட்டுப் புது உறவுகள் பாசத்தைப் பாத்திரமின்றிப் பருக்கினார்கள். தெளிவான வாழ்க்கை மேகத்தில் சில இன்ப நட்சத்திரங்கள் மட்டுமே மின்னிக் கொண்டிருந்த போது அந்த வானில் விமானக் கீறல் விழுந்தது போல் அந்தத் தலையிடி ரகுவைத் தடங்கள் செய்தது. Vicks அமிர்தாஞ்சனம், Axeoil, Paracetamol இப்படி இக்கால தலையிடி நிவாரணிகள் எல்லாம் தலையிடிக்கு எதிராய் எதிர்த்துப் போரிடத் தனக்காய்க் கையாண்டான் ரகு. ஆனால் முடியவில்லை. இறுதியாய் ஆண்டவனாம் மருத்துவரை நாடினான். இரத்தஓட்டத்தில் அழுத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. இரத்த அழுத்தம் வழமைக்கு மாறாய் அதிகரித்திருந்தமை உணரப்பட்டது.  அப்படியென்றால் எப்படி?
                                  
                                              கீழுள்ள கணிப்பீடு 80 ஆகவும் மேலுள்ள கணிப்பீடு 110 ஆகவும் இருக்க வேண்டிய நிலை மாறி கீழே 120 மேலே 200 ஆக அதிகரித்திருந்தது. இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருத்துவப்பயிற்சிகள் மருந்து மாத்திரைகள் எதற்குமே இரத்தஅழுத்தம் குறைவதாயில்லை. அருகே வைத்துத் தாய் போல் அவதானிப்போம் என ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதத் தெய்வங்கள் மருத்துவசாலையில் வைத்து 3 கிழமைகள் முயற்சித்தார்கள். தமது கட்டுப்பாட்டுக்குள் இரத்தஅழுத்தத்தைக் கொண்டுவரலாம் என முயற்சித்த  அவர்கள் முயற்சி தோற்றுத்தான் போனது. ''அவனைத் தாண்டி அணுவும் அசையாது''.  விதியை வெல்ல விதியாலும் முடியாது.  

  தொடரும்.....  

  வெள்ளி, 27 ஜனவரி, 2012

  பிளாக் குழந்தை பிரசவித்தாள்

                
  கணனித்தாய் பிரசவித்த குழந்தை. அழகழகான வடிவங்களில், அற்புதமான உறுப்புக்களில் பூலோகத்தில் பூத்திருக்கும் புதுக்கவிதை. அறிவு விரும்பிகள் தத்தெடுத்த செல்லப்பிள்ளை. எடுப்பார் கைப்பிள்ளையானாலும் எடுத்தவர்கள் தம் சுவைக்கேற்ப வளர்த்தெடுக்கும் பாக்கியம் பெற்ற பாக்கியவான். 

                           கைவந்த குழந்தையைத் தம் எண்ணங்கள், சிந்தனைகள், ஆசைகள், எதிர்பார்ப்புக்கள் அத்தனையும் அச்சேயினுள் ( சேய் - குழந்தை) புதைத்து உலகெங்கும் நடமாடவிட்டுத் திருப்தி காணுகின்றனர். 

                            தாம் கற்ற விடயத்தை சற்றும் மாறாமல் கச்சிதமாய் காட்சிப்படுத்தும் சிலர் ( பழந்தமிழ் இலக்கியங்கள், கணனி அறிவியல், அறிவியல் தகவல்கள், படித்ததில் சுவைத்தது) 

                            தமது எண்ணங்களைக் கற்பனையாக்கி கவிதையாக்கிப் பலர் கருத்துக்ளுக்கு விருந்தளித்து சிந்திக்கத் தகவல்கள் சிறப்பாய்த் தருகின்றனர். 

                            தாம் கற்ற பலவற்றைத் தம் மூளைப் பாத்திரத்தில் தேக்கி வைத்து அதனை ஆராய்ந்து சேர்மானங்கள் சேர்த்து பிரித்தெடுத்து உலகுக்கு நற்செய்திகளை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகின்றனர். 

                வாழ்க்கைப் பாடத்தைக் கதாபாத்திரங்களில் ஏற்றி கதைகளாய்க் காட்சிப்படுத்துவோர் சிலர்,  

                                 அகிலங்கடந்த சிந்தனையில் ஆன்மீகக் கருத்துக்களை நம்பிக்கை என்னும் நீருற்றி வளர்த்தெடுத்து பிறர் நன்மை கருதி கண்கவர் வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்துகின்றனர் சிலர்.

              அநுபவங்களைப் பலரறியப் படங்களுடன் இணைத்துப் பார்வைக்கு விடுவோர் சிலர்.

              அகப்புறக் காட்சிகளுக்கு விருந்தளித்த அற்புதக் காட்சிகளை இரசித்து இன்புற்றுத் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தம் புகைப்படக் கருவிக்குள் அடக்கிக் கொண்டுவந்து பிளாக் குழந்தையில் பிரதிபலிக்கச் செய்கின்றார்கள் புகைப்படக்கலைஞர்கள்.

                சுவைகளிலே சிறந்த சுவை நகைச்சுவை. இத்திறமை யாவருக்கும் கிடைக்கப் பெறாத செல்வம். மனிதன் நோய்நொடியின்றி வாழவேண்டுமானால், அவன் நன்றாகச் சிரிக்க வேண்டும். இப்பணியை நற்பணியாய்க் கொண்டு எமையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவென்றே பிளக் குழந்தையைத் தத்தெடுத்திருக்கின்றார்கள் . நகைச்சுவை மன்னர்கள்.

                இயக்குனர்கள், தயாரிப்பாளர், நடிகர், தொழில்நுட்பக்கலைஞர் என முடிதிருத்துபவர் தொடக்கம் ஆடைத்தொழிலாளி வரை பற்பல மக்களுக்குத் தொழில் வாய்ப்பளித்து அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் திரைப்படத்துறையினர் வழங்கும் திரைப்படங்களைத் தமது விமர்சனம் மூலம் பலர் பக்கப் பார்வைக்கு விருந்தளிப்போர் சிலர், 

                     இயற்கைப் படைப்புக்களை இதமாய்க் கலந்தளித்து சுவையூட்ட சிற்சில மசாலாக்களை சுவைக்கேற்ப சேர்த்தெடுத்து பற்பல வகைகளில் நற்சுவை மேம்பட அறுசுவை உணவுகளை அழகாய்ப் படங்களுடன் காட்சிப்படுத்துகின்றனர் சிலர், நாமும் நம் கணவர் மனமகிழ குடும்பத்தார் குதூகலித்து சுவைத்தின்புற தின்பண்டங்களை திறனாய்ச் செய்து வழங்குகின்றோம். 

                    நாட்டுநடப்புத் தெரியாது நாம் உலகில் வாழ வீட்டில் இருந்து கொண்டே அறிந்து கொள்ளுங்கள் விருந்தாய்த் தருகின்றோமென செய்திகளைத் தொகுத்துத் தளம் இறக்குவோர் பலர்.

                    இவ்வாறு பூமியிலே புதிதாய் அவதரித்த பிளாக் குழந்தையினால், கற்றவர் பலர், தம் அறிவைப் பன்மடங்கு விருத்தி செய்தவர் பலர். குடத்துள் விளக்காய் இருந்தாரைக் கோபுரத்து விளக்காக்கியதும் இதுவே. தெரியாதிருந்த பலவிடயங்களைத் தெளிவுற தெரியப்படுத்தியதும் இதுவே, இலக்கியம் அறியாதோரை இலக்கியம் எழுதச் செய்ததும் இதுவே. முகமறியா உறவுகளின் உண்மை நட்பினை உணரச் செய்ததுவும் இதுவே. கற்றவர் பலர் தாம் கற்றவற்றைப் பிறருக்குக் கற்பிக்க களம் தந்ததும் இதுவே. 

              ஓடி வந்து விருப்புடனே பின்னூட்டம் இட்டு உறவுகளின் வெளிப்பாட்டை விருந்தாய்ப் பருகி, காந்தமாய்க் கருத்துக்களைத் தந்து கவர்ந்திருப்போரும் இங்கே. காட்சிக் குழந்தையைக் கனவிலும் நினைத்து, அழகுபடுத்தி, அற்புதம் காட்டுவோரும் இங்கே. எங்கோ இருந்தபடி எங்கோ கவி எழுதுவோரைக் கருத்துடனே பின்னூட்டம் இட்டு கவியாற்றல் மேம்பட கருணை புரிவோரும் இங்கே. 

               இவ்வாறெலாம் அழகும் அறிவும் மாறாமல் வளருகின்ற Blog குழந்தை உருவாவதற்கு யார் காரணம்? வெறுமனே கணக்குப் போட மட்டுமே பயன்படுத்தப்பட்ட கணனியை அதிவிரைவு தகவல் தொடர்பு சாதனமாக மாற்றியமைத்த பெருமை அமெரிக்க பாதுகாப்புத்துறை ஏற்படுத்திய ARPA
   (Advance Research Projects Agency) என்ற அமைப்பையே சாரும். இது பலத்த ஆராய்ச்சியின் பயனாக 1968 ஜூன் மாதம் ARPANET என்னும் வலையமைப்பை அமெரிக்க அரசின் பாவனைக்குக் கொண்டுவந்தது. இது உருவாவதற்கு அடிப்படைக் காரணம் சோவியத் அரசே ஆகும். ஒன்றை ஒன்று வெல்லவே நாடுகளும் மனிதனும் போட்டாபோட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. 1957 இல் சோவியத் அரசு முதலில் ஸ்புட்னிக் என்னும் செயற்கைக் கோளை விண்ணில் ஏவிவிட

                          இணையம் இல்லையென்றால், பிளாக் இல்லை பிளக் இல்லையென்றால், எம் உறவுகள் இல்லை. மேற்கூறிய இன்பங்கள் அனைத்தும் இல்லை. எனவே இணையத்திற்கு நன்றி சொல்வோம் எம்மால் அறியப்படாமலே எம்மை நெறிப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றி சொல்வோம். பிளக் உலகு தொடர்ந்து பல பரிமாணங்கள் கண்டு உலகெல்லாம் அறிவுமயம் பரிமளிக்க வேண்டும் என மனமார வாழ்த்தி இணைந்த உறவுகள் யாம் இணைபிரிய வாழ்வு கண்டு பொறாமை வஞ்சனை கலந்த பரிசுத்தவாழ்வு வாழவேண்டும் என நம்மைநாமே நம்பி தொடர்வோம்.  திங்கள், 23 ஜனவரி, 2012

  இச்சு இச்சு
     


  படபடக்குது பட்டாம் பூச்சி
  மனசுக்குள்ளே என்ன ஆச்சு
  கட்டி அணைத்து இச்சுஇச்சு
  கன்னம் ரெண்டும் போச்சுபோச்சு

  கதிரவன் முன் எழும்பியாச்சு
  சாமிபடத்தில் சந்தனக் குச்சு
  சந்தோஷமனதில் ஏத்தி வைச்சு
  சக்கரவாக கச்சேரி வைச்சு
  கட்டி அணைத்து இச்சுஇச்சு

  ஆசையெல்லாம் சேர்த்துவைச்சு
  அன்னையர்தின நாளும் ஆச்சு
  அன்புச் செல்வம் ஆர்வப்பேச்சு
  அன்பளிப்புக் கவிதை வீச்சு
  அம்மாவின் வாழ்வின் மூச்சு
  கட்டிஅணைத்து இச்சுஇச்சு

  பிஞ்சு எண்ண ஆசை நெஞ்சு
  பிள்ளை பேசும் வெள்ளைப்பேச்சு
  உள்ளம் எங்கும் உண்மை வீச்சு


  பொய்மை  வாழ்வு இஞ்சி அளவும்
  மிஞ்சிடாது இன்பங் காண
  எஞ்சியுள்ள காலம்வரை 
  மச்சிபோல காப்போம் வாழ்வை. – என்றும்
  விஞ்சி கிடைக்கும் இச்சுஇச்சு.

                                
  மச்சு – வீட்டின் கூரை 
                

  புதன், 18 ஜனவரி, 2012

  சொர்க்கம் ஒன்று கண்டேனே


  சொர்க்கம் ஒன்று கண்டேனே - வாழ்வில்
  சொல்லவொண்ணா சுகம் ஒன்று கொண்டேனே – உன்
  சொக்க வைக்கும் சுவர்க்கச் சிரிப்பினிலே – என்
  துக்கமெல்லாம் துறந்தேனே


  கலகலத்து வந்த குரலினிமை தனிலே
  காதுமடல் கனிந்து வர வுணர்ந்தேனே – நீ 
  காலெடுத்து தத்தித் தத்தி வருகையிலே – சொர்க்கம்
  காலடியில் கிடப்பதைக் கண்டேனே


  பச்சைக்கிளியாய் நீ பகர்ந்த மொழி – என் செவியில்
  பாலும் தேனும் கலந்தொலிக்கிறது
  பத்துவிரலாலே பதம் பார்த்தவுன் உணவை – நான்
  பகிர்ந்து உண்கையிலே
  பஞ்சாமிர்தச் சுவையும் தோற்றுப் போகுதடி


  குட்டை வண்ணச் சட்டையிலே
  குதித்திரு கைதட்டி
  கும்மாளம் இடுகையிலே – எனதுள்ளம்
  குதிக்குதடி விண்ணோக்கி


  கட்டி அணைக்கையிலே கள்ளி! நீ தந்த
  கன்னத்து முத்தமதில் 
  என்னுள்ளம் கொள்ளை போகுதடி
  உள்ளமெல்லாம் துள்ளல் கொள்ளுதடி


  கழுவி மடித்து வைத்த ஆடைகளை – நீ
  கசக்கி மீண்டும் நீரில் போட்டு
  கன்னத்தில் கைவைத்து நின்றநிலையது 
  கண்டுள்ளம் கோபம் கொள்ளவில்ல
  சிட்டாய்ப் பறக்குதடி – உன்னைச்
  சுற்றிச் சிறகடிக்குதடி

  கட்டித் தங்கமே! கரும்பே! தேனே!
  உனை நான் பார்க்கையிலே 
  உனைப் போல் யானிருக்க 
  உள்ளம் ஏங்குதடி 
  உதிர்ந்து விட்ட காலமது
  உருப்பெற்று வாராது
  உள்ளம் தான் ஏங்கினாலும்.  15.01.2012 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது
  வெள்ளி, 13 ஜனவரி, 2012

  2012 பொங்கல் திருநாள்


           

  ஆதவனே! உன் ஆட்சியில் அண்டமெல்லாம் பூரிப்பு
  ஆளும் உன் ஆட்சியில் அகிலத்தில் பல பிறப்பு
  ஆண்டவனாய் ஆதிக்கம் செலுத்தும் நீ
  வெடித்துச் சிந்தியதால் விண்ணிலே பிறப்புக்கள் 
  கிரகங்களாய் பல் சிறப்புக்கள் 
  அண்டவெளியின் ஐந்து வீதங்களில்
  அற்புதமாய் அடக்கலமாயின
  ஆளுக்காள் சிறப்பம்சங்கள் காட்டின - இன்று

  பூமித்தாய்க்கோ வயதாகி விட்டது
  பிரசவித்த தாயே! பகலவனே!
  உமக்கும் எமக்கும் இடையேயுள்ள
  நெருக்கம் அதிகமானாலும் குறைந்தாலும்
  வாழும் மக்கள் எம்மிடையே குலநடுக்கம்

  பூலோகம் இவ்வருடம் அஸ்தமனமாய் 
  அண்டவெளியிலே அழியப் போகுதென
  அச்சுறுத்தல் ஆரம்பம் அனைவருக்கும் பேரச்சம் - உன்
  புன்னகையால் எரிக்கப் போகின்றாயா? - இல்லையுன்
  அலைக்கரத்தைச் சுருக்கப் போகின்றாயா?
  புன்னகைத்தால் எரிந்திடுவோம்
  அலைக்கரம் சுருக்கினால் உறைந்திடுவோம்

  எரித்துத் தள்ளும் உன் எரிப்பொரியில்
  ஒரு புதுக் கிரகம் உருவாக்கிவிடு
  பூமியிலிருந்து மனிதன் புதுக்கிரகம் நாடிப்
  புகலிடம் தேடட்டும், புதிதாய் ஓர் உலகு
  மனிதன் கைப்பட்டுச் சுவர்க்கம் ஆகட்டும்

  பில்லியன் ஆண்டுகள் தாண்டி நீ 
  பிறப்பு எடுத்தாலும்
  பில்லியன் ஆண்டுகள் தாண்டி நீ
  வாழவேண்டும்
  நீ வாழ உன் எரிபொருள்கள் 
  பெருக வேண்டும்.
  நாம் வாழ உன் கதிர் அதிர்வுகள்
  கிடைக்க வேண்டும்.

  ஆண்டில் ஓர்நாள் மக்கள் இனிப்புப் பொங்கலுனக்கு
  இனிதாய்ப் படைக்கின்றார்.
  அர்ச்சதை ஏதும் இல்லை மந்திரம் சொல்லவில்லை
  புதுப்பானையிலே புத்தரிசி எடுத்ததனுள்
  சர்க்கரையும் பாலும் அளவாய்க் கலந்திட்டு
  இனிப்புப் பொங்கலை இனிதாய்ப் படைக்கின்றார்
  பொங்கலோ பொங்கலென புகழ்ந்து பாடுகின்றார் - இந்நாளை
  உழவர் திருநாளென உரக்கச் சொல்கின்றார்
  உணவளிக்கும் உழவர் உரிமை பாராட்டுகின்றார் 
  உலகத் திருநாளிதென உரக்கச் சொல்வோம்
  உலக மக்களெலாம் நன்றி உரைக்கும் நானௌ
  போற்றி வணங்கிடுவோம்.

  இப்பொங்கல் திருநாளில் உறவினர்கள்> நண்பர்கள்;> சுற்றத்தார் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை என் குடும்பம் சார்பாகச் சொல்லி மகிழ்கின்றேன்.

  சனி, 7 ஜனவரி, 2012

  பிள்ளைப்பிராயத்திலே


         

     என்னுடைய பிள்ளையென எச்சொல்லும் 
     எடுத்தெறிந்து பேசாதீர்கள் - அச்சொல்
     உள்ளமதில் போய்விழுந்து 
  கல்லெனத் திரும்பவரும்
     பல்லுடைந்த போகாதீர்கள், 
  சொல்லிழந்து சொதப்பாதீர்கள்.

  தொலைபேசி அலறல் கேட்டு ஓடிப்போய் அழைப்பை ஏற்றாள், செல்வி. இது வழமை. தாயாரிடம் தொலைபேசி அகப்பட்டால், தான் தனித்து விடுவேன் என்னும் அங்கலாய்ப்பாகவும் இருக்கலாம். பேசும் பகுதியைக் கையால் மறைத்தபடி ''அம்மா! பிரான்சிஸ்கா விளையாட வரட்டாம். போகட்டா? ''சரிசரி,'' திரும்பவும் கேட்டாள். ''எத்தனை மணிக்கு?, தாயும் 3 மணிக்கு என்று விடையளித்தாள். பிரான்சிஸ்காவிடம் சம்மதம் தெரிவித்து வந்த மகளிடம். ''போவதற்கு முன்னமே ஆக்கம் எழுதி கவிதையும் எழுதிவிட்டு வயலினும் பயிற்சி செய்துவிட்டுத்தான் போக வேண்டும் கட்டுப்பாடு போடப்பட்டுவிட்டது. முனைப்புடன் ஓடிஓடி வேலை செய்தாள். ஆனால் இடையிடையே தாயாரின் கட்டுப்பாடு மீறி வேறுவிடயங்களும் பார்க்கத் தொடங்கிவிட்டாள். நேரம் வந்துவிட்டது. ஆனால், தாயாரின் உத்தரவு பிழைத்துவிட்டது. ''அம்மா வந்து கவிதை எழுதுகின்றேன்'' ஆனால் தாயாரோ ''சொன்னால் சொன்னதுதான். எழுதிவிட்டுப் போகலாம்'' ''அம்மா! 3 மணிக்கு வருவதாகச் சொன்னேனே'' ''குறிக்கப்பட்ட நேரத்திற்குப் போக வேண்டுமென்ற அவசியம் இல்லை'' ''நீங்கள் மட்டும் போன கிழமை தமிழ் நிகழ்ச்சிக்கு 3 மணிக்கென்றால் 3 மணிக்கு நிற்கின்றீர்கள்தானே. நானும் அப்படித்தான் நேரம் கடைப்பிடிக்க வேண்டும் அம்மா'' திரும்ப வந்து விழுகின்றது அடி. சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டிவிட்டது, அவ்வார்த்தை.  ''நீ சொல்வது சரிதான். ஆனாலும் நான் எனது வேலைகளை போவதற்குள் முடித்து விடுவேன்''அம்மா... வடை செய்துமுடியவில்லையென்று மீதியை வைத்துவிட்டுத்தானே போனீர்கள். அதேபோலவே நானும் வந்து மீதியைச் செய்யலாம்தானே? இடையில் கட்டளை மீறியது சமாளிக்கப்படுகின்றது. உணர்கின்றோம். ஆனாலும், சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. இறுக்கம் இப்போது தளர்கின்றது. விட்டுப்பிடித்து விடயத்தைக் கையாளலாமா? சிந்திக்கத் தொடங்கினாள், சுதா.
              
  இதுவே சம்பவம். பொருத்தமான இடத்தில் சூத்திரத்தைப் பயன்படுத்தி விடை காண்பது போலவே வார்த்தைகளைத் தேக்கி வைத்துப் பொருத்தமான நேரத்தில் பயன்படுத்த வல்லவர்கள் எமது வளர்பயிர்கள். பேச்சு சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இப்படி எத்தனையோ கேள்விகள் எமக்குள்ளே புதையுண்டு போயின. செய்வது சரியென்று நாம் உணராத பருவத்திலே உணராமலேயே வாய்மூடி மௌனிகளானோம். ஆனால், இன்றைய சமுதாயத்தினர் மனதில் பட்டதைச் சட்டெனப் பேசி தம்மைத் தெளிவுபடுத்தக் கூடிய திறமைமிக்கவர்கள். எனவே அதற்கேற்றதுபோல் காலசூழ்நிலைக்கேற்ப பிள்ளைப்பிராயத்திலே அவர்கள் மனநிலை உணர்ந்தவர்களாய் சந்தர்ப்பத்திற்கேற்ப வார்த்தைகளைப் பிரயோகப்படுத்துவதன் மூலம் நிலமையைச் சமாளிக்கும் வல்லமையை நாம் வளர்த்துக்கொள்ளல் அவசியமாகின்றது.

                           

  புதன், 4 ஜனவரி, 2012

  நெற்றிக்குத் திருநீறு, சந்தனம்; அழகுச்சாதனமா? அவசிய சாதனமா?


   இந்துமதகாரியங்களின் உட்கிடக்கை
                                                  
   இந்துசமயச் சின்னங்களாகக் கருதப்படும் விபூதி அல்லது திருநீறு, சந்தனம் போன்றவற்றை அணிவதன் அவசியம் தான் யாதோ? அவை அழகுசாதனமா? அவசிய சாதனமா? வினாவுக்கு விடை தேடி அங்கலாயத்தது மூளை. அவசிய காரணம் அறிந்ததனால், குனிந்தது பேனா. 
                             
                          பூமியில் பிறப்பெடுத்த உடல் என்றோ ஓர் நாள் எரிக்குச் சாம்பலாகும். ஞானத்தீயில் உடல் எரிந்த பின் எஞ்சுவது சிவதத்துவமே என்னும் கருத்தை வெளிப்படுத்தி தீருநீறு நெற்றியில் இடப்படுகின்றது. இது ஆரம்பப் பாடசாலையிலிருந்து நான் கற்றறிந்த விடயமாக இருந்தது. ஆனால், என்றோ ஒரு நாள் அழியவிருக்கும் உடலுக்கு வாழும் போதே அச்சுறுத்தல் தந்து கொண்டிருத்தல் முறையோ! மனம் தானே வாழ்வு. இந்த மனத்தை நாளும் அச்சுறுத்தலால் நலம் என் யாம் பெறுவோம். எனவே அறியாத பருவத்தில் அச்சுறுத்தி அளிக்கப்பட்ட பாடத்தை விடப் பாரதூரமான காரணம் யாதோ இருக்கின்றது என்பதை ஆராய மனம் விழைந்தது.  

                                                           

                          
                       அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை  உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். 
  இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. 
                           
                      இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள். 
          
                      தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.       
                        

                   இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள   frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது. சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும்  Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த  frontal cortex  சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!  

                                                   
          
             நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. 

                       இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது. 
          
  ஞாயிறு, 1 ஜனவரி, 2012

  வெற்றியாண்டாய் மலர்வாய்!  வார்த்தைகளால் வாழ்த்தொலிகள்
  வானவேடிக்கைகளால் வரவேற்புகள்
  கோர்த்து வைத்த பாமாலைகளால்
  கோர்வாய் உனைப் பாடிக் குதூகலிப்பும்
  கோலாகல வரவேற்பும் – நீ
  கொண்டுவந்த சேதியென்ன சொல்லிவிடு – நீ
  பூப்பதொன்றும் புதுமையில்லை – உலகில்
  புரிகின்ற சாதனையில் புதுமை காண்பாய்
  புரியாத அழிவுகளால் - இப்பூமி
  புரியாது மாள்கிறது, புன்னகை யிழக்கிறது
  பூரிப்பாய் வரவேற்ற பூலோகக் கண்களுக்கு
  புரிய வைக்கும் சாதனைதான் யாதோ?


  சாதனைகள் புரியப் பல வேதனைகள் காண்போம்
  சான்றுகள் பெருகப் பல சோதனைகள் காண்போம்
  வேதனையும் சோதனையும் கண்டுவிட்டோம்
  சாதனையும் சான்றுகளும் சாதிக்க வேண்டும்
  சாக்கடைப் புழுவாய் சகதியில் வாழும் மக்கள்
  நோக்காடு இன்றி மேன்மை பெறல் வேண்டும்
  சுழலுகின்ற பூலோகம் சுகங்கள் தர வேண்டும்
  உழலுகின்ற துன்பங்கள் உருண்டோட வேண்டும்
  உள்ளத்தில் நற்சிந்தனை உருக்கொள்ள வேண்டும்
  செல்லச் சிறாரெலாம் சிந்தையறிவு பெறல் வேண்டும்
  அத்தனையும் பெற்றுவிட்டால் அகிலம் போற்றும்
  வெற்றியாண்டாய் மலர்வாய் நீ!

                                                               

  அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...