ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு
என்னும் மாங்குடி மருதனாரின் வார்த்தைகளை முன் வைத்து இந்த வள்ளுவர் விழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் நடுவர்களே, ஆசிரியர்கயே, வருங்கால மேதைகளே, வள்ளுவத்தை வாழ்விக்க வந்திருக்கும் சபையோரே உங்கள் அத்தனை பேரையும் வணங்கி என் பெற்றோரை முன் நிறுத்தி என் உரையைத் தொடங்குகின்றேன்.
ஒரு மனிதன் எதுவும் செய்யாமலே மற்றவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டுமென்றால் இந்த ஒலி வாங்கியைப் பிடித்தால் போதும். அவரவர்கள் மனதுக்குள் முணுமுணுக்கத் தொடங்கிவிடுவார்கள். வந்திட்டாள் யா.... பேசியே கொல்லப் போகின்றாள். அது என்னவோ தெரியாது. இது ஒரு வியாதி. பிடித்தவர்களை பிடித்துக் கொள்ளும். பேசியே கொல்வது என்பார்களே அது இதுதான். இப்படி இருக்கும் போது என்ன வள்ளுவர் கேள்வி என்னும் அதிகாரத்தை வைத்து
''செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை''
என்று சொல்லுகின்றார். அதில் 16 செல்வங்களினுள்ளும் கேள்விச் செல்வமே சிறப்பு என்கிறார். பேச்சே மனிதனைக் கொல்லும் போது அதை ஏன் சிறந்த செல்வம் என்கிறார். கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்கிறார்களே இவ்வாறான எண்ணங்கள் எல்லாம் உங்களிடம் தோன்றும். எதனால் கேட்கின்றோம் காதால் தானே. அந்தக் காது மூடியிடாமல் திறந்தே இருக்கிறது. ஆனால், வாய் மூடிபோட்டு மூடி பற்கள் என்னும் அரணிட்டு நாக்கைப் பாதுகாத்து வைத்திருக்கின்றது. அதனால், அளந்து பேசு, அளவில்லாமல் கேள் என்பதே அர்த்தம். வள்ளுவர் உங்களிடம் கேட்கும் படி கூறியது கடன் அல்ல. பிச்சை அல்ல.
''எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்'' என்கிறார்.
அதாவது கேட்கின்ற போது நல்லதையே கேட்க வேண்டும். அது கேட்ட அளவு சிறிதாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் பெருமை உயர்வாக இருக்கும். அது எப்படி காதுதான் மூடியிடப்படாததே என்று நீங்கள் மீண்டும் கேட்கலாம். அதற்கும் ஒரு குறள் சொல்கிறார். மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில்
''எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு''
எந்தப்பொருள் எந்த இயல்பாகத் தோன்றினாலும் அந்தப் பொருளில் உண்மையான இயல்பை அறிவதுதான் அறிவு. இதனையே கேள்வி அதிகாரம் படிக்கின்ற போது இவ்வாறான கேள்விகள் எழும் என்று அறிந்து அடுத்து வருகின்ற அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் மனதை அது போக விரும்புகின்ற இடமெல்லாம் போக விடாமல் தீமையிலிருந்து நீக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவு அதாவது
''சென்ற இடத்து செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு'' என்று கூறி
''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு'' என்றார்.
எந்தப் பொருளை எத்தகையோர் சொல்லக் கேட்டாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அந்தப் பொருளிலுள்ள உண்மையான தன்மையைக் காண்பதுதான் அறிவு என்று சொல்கின்றார். இதனையே கி.மு. 470 – கி.மு. 399 காலப்பகுதியில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி சோக்ரட்டீஸ் என்பவர் ''யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப் பார்'' என்று சொல்கிறார். வள்ளுவர் இப்படியும் அப்படியும் யோசித்துப் பார்த்துத்தான் அனைத்துக் குறள்களும் யாத்துள்ளார். வள்ளுவர் கிரேக்க தத்துவஞானியைக் கற்றிருக்க் கூடும். அதற்குரிய சந்தர்ப்பங்களும் உண்டு. ஏனென்றால் சங்ககாலத்தில் தோன்றிய புறநானுற்றுப் பாடல்களிலேயே பொன்னோடு வந்து யவனப்பிரியா என்று அழைக்கப்படும் மிளகைப் பெற்று யவணர்கள் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வள்ளுவரை சோக்கிரட்டீஸ் கற்றிருக்க வாய்ப்பில்லை. திருக்குறள் சோக்கிரட்டீஸ் காலத்தின் பின்பே தோன்றியிருக்கக் கூடும். நிச்சயமாக இதுபற்றிய சிந்தனை இருவருக்கும் வந்திருக்கக் கூடும். அதுபற்றியெல்லாம் ஆராயும் மேடை இதுவல்ல. வள்ளுவர் தொல்காப்பியம், அர்த்தசாஸ்திரம், மனுசாஸ்திரம், வெள்ளிவீதியார் பாடல்கள், ஒளவையார் பாடல்கள் இவையெல்லாம் கற்றே திருக்குறளைத் தந்திருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு.
இப்போது கேள்வி என்னும் அதிகாரத்திற்கு வருவோம். செல்வம் எல்லாவற்றிற்குள்ளும் இந்த கேள்விச் செல்வமே சிறந்தது. அதனால், கேட்பதற்கு உயிர் வாழ வேண்டும் இல்லையா அதற்காக உணவை உண்ண வேண்டும். அதுகூட செவிக்குணவு இல்லாத போதுதான் என்பதை மனம் பதிக்க வேண்டும். அப்படியான செவி உணவைப் பெற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள். தேவர்கள் என்பவர்கள் யார் இந்திரனைத் தலைவனாகக்கொண்ட தேவலோகத்தில் வாழ்பவர்கள். இவர்களுக்கு இன்பம் மட்டுமே கிடைக்குமாம். செவியுணவாகிய கேள்வி உணவு பெற்றவர்களுக்கு இன்பம் மட்டுமே கிடைக்கும் என்று கருதுகிறார். நீ படிக்கவில்லை என்றாலும் கேள் என்று ஆiணை இடுகின்றார். ஏனென்றால் நீ தளர்வுறுகின்ற காலத்தில் உனக்குத் துணையாக இருக்கும். ஒரு நல்லவனைக் கொல்வதற்காக ஒரு சிலர் ஓடிவருகின்றார்கள். அவன் ஓடிய வழியில் நின்ற உங்களை ஷஷஇந்த வழியால் அந்நபர் ஓடினானா? என்று கேட்கும் போது வள்ளுவர் வாய்மை பேசச் சொன்னார் என்று நிற்பீர்களா? இல்லை, வள்ளுவரைப் படித்த நீங்கள் இல்லை என்று பொய்யைச் சொல்வீர்களா? நிச்சயமாக
'பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்''
''வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்''
என்னும் குறள்கள் அவ்விடத்தில் பொய்யே சொல்லப் பணித்திருக்கும்.
படிப்பதனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்ற பாடல் கேட்டிருப்பீர்கள். மொகலாய மன்னன் அக்பர் எழுதப்ப படிக்கத் தெரியாதவர். சாக்ரடீஸ் தத்துவஞானி, தோமஸ் அல்வா எடிசன், மைக்கல் பரடே என்னும் விஞ்ஞானிகள் பெரிதாகப் படிக்கவில்லை. இவர்களுக்கெல்லாம் கேள்விச் செல்வமே கைகொடுத்தது. ஒழுக்கமுடையவர்களிடமிருந்து பெற்ற வாய்ச்சொற்களே வழுக்குநிலத்திலே ஊன்றிய கோல் போல் தெளிவாக இருக்கும். அப்படியான வாய்ச்சொற்களைக் கேட்டவர்கள் சில விடயங்களைப் புரிந்து கொல்லுதல் கடினம். அப்படித் தவறாகப் புரிந்து கொண்டாலும் அவர்கள் வாயிலிருந்து அறியாமை காட்டும் சொற்கள் வராது. ஏனென்றால், அவற்றில் ஆழமான தெளிவு இல்லாவிட்டால் பேசமாட்டார்கள். ஏனென்றால், அதனையும் வள்ளுவர் சொல்லியிருக்கின்றார்.
''கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்''
கற்றவர் முன் வாயைத் திறந்து பேசினால் அவனுடைய மதிப்பு அப்படியே அழிந்து போய்விடும். அதனால்தான்
''பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார்; இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்'' என்றார்.
சில இடங்களிலே மிகக் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை வள்ளுவர் வைக்கின்றார். சிலருக்கு தாழ்மையாகச் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். சிலருக்கு இடித்துரைக்க வேண்டும். கேள்வி அறிவால் துளைக்கப்படாத செவிகள் எவ்வளவு ஆழமான பார்வை என்று பாருங்கள். காதிலே செவிப்பறை இருக்கின்றது. சொற்கள் அச் செவிப்பiறையை ஊடுருவிச் செல்லும். அதனை துளைத்துக் கொண்டு போதல் என்கிறார். அப்படித் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்கும் தன்மையைப் பெற்றிருந்தாலும் செவிட்டுச் செவி என்கிறார். கேள்வி அறிவைப் பெறாத செவியன் செவிடன் செவிடனே. இதைவிட இன்னும் ஒரு இடத்தில் படுகேவலமாகச் சொல்லுகிறார். கேள்வி அறிவால் பெறுகின்ற சுவை உணவைப் பெறாது நாவால் பெறுகின்ற கறி உணவும் ஆட்டுக்கால் சூப்பும் வகைவகையாய் உணவுகளும் உண்ணுகின்ற சுவையை விரும்புபவர்கள்; உயிரோடு வாழ்ந்தால் என்ன? இறந்தால் என்ன? நீ செத்தவன்தான்டா என்று கூறுகின்றார்.
செல்வத்துக்குள்ளே எல்லாம் கேள்விச் செல்வமே சிறந்தது. அதைக் கேட்பதற்காக உணவை உட்கொள். அந்தக் கேள்வி செல்வம் உனக்கு இருந்தால் தேவர்களுக்கு ஒப்பாவாய், அதனால் நீ படிக்க வில்லை என்றாலும் கேள். அது உனக்கு துணையாக இருக்கும். அதனால் ஒழுக்கமுடையவர்களுடைய வாய்ச் சொற்களில் நல்லதைக் கேள் அது எந்த அளவில் கிடைக்கிறதோ அதற்கேற்ப உனக்குப் பெருமை தருவதுடன் வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். நீயும் மற்றவர்களுக்கு அறியாத சொற்களைப் பேச மாட்டாய். அப்படி நீ கேள்விச் சுவை பெறவில்லையோ உன்னுடைய செவி செவிட்டுச் செவி, நீ யாரிடமும் பணிவான வார்த்தைகள் சொல்ல மாட்டாய், நீ வாழ்வதும் ஒன்றுதான் இறப்பதும் என்று தான் என்று கூறி கேள்வி அதிகாரத்தை முடித்து விடுகின்றார்.
இந்தப் பேசிக் கேட்கும் கேள்வி பற்றிய ஒரு சம்பவம் சொல்கின்றேன். ஒரு பெண் கல்வியறிவற்றவள். ஒரு பெண் ஒரு நிறவனத்தில் கூலித் தொழில் செய்பவள் சில நாட்களாக அவள் வேலைக்கு வந்தாள் சோர்வாக இருக்கின்றாள். அப்போது அருகே இருந்த தொழிலாளி அவளைப் பிடித்துக்கேட்டார் ''ஏன் இப்படி சோர்வாக இருக்கின்றாய்'' என்று. அது ''ஒவ்வொரு நாள்களும் இரவில் திருக்குறள் சொற்பொழிவுக்குப் போவேன். அதுதான் கொஞ்சம் தூக்கக் களைப்பு'' என்றாள். ''அப்படியா? திருக்குறள் உனக்கு என்ன விளங்கி இருக்கிறது. சரிசரி ஒரு குறளை சொல் பார்ப்போம்''என்றார். ''அது வந்து சார்... அது எனக்குத் தெரியாது'' என்றாள். ''அப்படி என்றால் எதற்காக இப்படி ஒவ்வொரு நாளும் போய் உன் நேரத்தை வீணாக்குகின்றாய்'' என்று தொழிலாளி கேட்டார். உடனே தன்னிடமுள்ள ஓட்டையான அழுக்குப் பாத்திரம் ஒன்றை அவரிடம் கொடுத்து நீர் மொண்டு தருவீர்களா என்று கேட்டாள். அவரும் சிரித்து விட்டு எப்படி ஓட்டைப் பாத்திரத்தில் நீர் எடுக்க முடியும் என்றார். பறவாயில்லை முயற்சி செய்யுங்கள் என்றாள். அவரும் ஒரு முறை முயன்றார். நீர் தங்கவில்லை. இப்படி 3 தடவை செய்து காட்டி பைத்தியம் இப்போது தெரிகிறதா என்றார். அதற்கு அவளும் அப்பாத்திரத்தைக் காட்டி நீர் தங்கவில்லை பாத்திரம் துப்பரவாகி விட்டது அல்லவா. அதேபோல் தான் என் மனதில் குறள்கள் தங்கவில்லை. என் மனதும் துப்பரவாகிவிட்டது. என்றாள். இச்சம்பவம் கூட நான் கேள்வி அறிவால் பெற்றதே. அதனால் நீங்கள் கற்கவில்லை என்றாலும் கேளுங்கள் நீங்கள் கேட்ட மாத்திரத்தில் அந்தளவில் பயனைப் பெறுவீர்கள்.
யார் அந்த வள்ளுவர். அவரை நினைத்துப் பார்க்க என் கண் முன்னாலே மிகப் பிரமாண்டமாக தெரிகின்றார். யார் அந்த வள்ளுவர்? அவர் உருவம் தெரியுமா? இப்போது கீறப்பட்ட உருவம் கற்பனை வடிவம். யாருக்காவது அவர் காலம் தெரியுமா? அதுவும் கற்பனை. எப்படி காரைக்கால் அம்மையார் காலத்திலே வெண்பா தோன்றுவதற்கு முன் குறள் வெண்பாவால் அவர் பாடியிருக்க முடியும். காதலும், வீரமும் போற்றப்பட முன் அவற்றின் சீர்கேட்டை எழுதியிருக்க முடியும். சங்ககாலத்திலே குறுந்தொகை பாடலொன்றில் ''யானும் அவனும் புணர்ந்த ஞான்று. குறுகுகள் பார்த்திருந்தனவே. தானது பொய்ப்பின் நானெது செய்வேன்'' என்னும் பாடல் உட்பட சங்கப்பாடல்களில் பல முறை தவறிய காதல் போர்முறைகள் பேசப்படுகின்றன. இவற்றைச் சீர்திருத்தும் நோக்குடன் குறள் வடித்த வள்ளுவர் கிறிஸ்துவுக்கு முன் தோன்றியிருக்க முடியாது என்று எண்ணத் தோன்றுகின்றது. இது ஆய்வுக்கு உரிய விடயம். ஆனாலும், இன்று 3 வயதுப் பிள்ளை அவர் எழுதிய திருக்குறள் மனனம் செய்து எம்முன் ஒப்பித்து விளக்கம் சொல்கின்றது என்றால், இன்றும் நின்று நிலைக்கும் அந்த மனிதன் இனியும் நிலைப்பார் என்பதற்கு என்ன சந்தேகம் இருக்கின்றது. பரிணாம வளர்ச்சியின் தந்தை என்று சொல்லப்படும் சார்ள்ஸ் டாவின் அவர்கள் சொன்ன ''வலிமையுள்ளது வாழும்'' என்ற கூற்றுக்கிணங்க வள்ளுவம் வாழும் என்பது நிச்சயம்.
இன்றைய உலகில் நீண்ட கட்டுரைகள் வாசிப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. வட்ஸப், வைபர் மெசெஞ் இல் 2 வரியில் எழுதிவிட்டு போய்விடுகின்றான். 21 ஆம் நூற்றாண்டில் மனிதன் இப்படித்தான் இருப்பான் என்று நினைத்து அன்றே 7 சொற்களில் குறளை வடித்து விட்டுப் போய் இருக்கின்றாரே! என்ன ஆச்சரியம். சமுதாயத்தை நோக்கி எழுப்பப்படும் உணர்வுகள் நின்று நிலைக்கும் என்பது எனது முழுநம்பிக்கை. மக்களுக்காக மக்களுக்குச் சொல்லப்படுபவையும் சொல்பவர்களும் நின்று நிலைப்பார்கள்.
வெறும் உள்ளத்து உணர்ச்சிகளுக்காகப் பாடப்படுபவை அழிந்து போம்.
தேடிச்சோறு நிதம் தின்று சில சின்னஞ்சிறு கதைகள் பேசி ... என்னும் பாடலிலே பாரதி
''சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே'' என்றார். தான் வாழ்வதற்கு வல்லமை கேட்கவில்லை. மாநிலம் பயனுற வாழவதற்குக் கேட்டார். அதனால் இன்றும் நின்று நிலைக்கின்றார். அவ்வாறே திருவள்ளுவர் தன் நன்மைக்காகப் பாடவில்லை. சமுதாய சீர்திருத்தத்துக்காகப் பாடினார். சமுதாய சீர்கேடுகளை களைந்தெறியவே வள்ளுவர் 1330 குறள்களை யாத்தார். இந்த குறள்களிலே கேள்வி என்ற அதிகாரம் கூறியவற்றை கேட்ட நீங்கள் இன்று தெளிவு பெற்றிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உண்மையில் பேசிக்கொல்லும் கொலையை நான் நடத்தியிருந்தேன் என்றால் மிகச் சந்தோசப்படுவேன். ஏனென்றால், உங்கள் கேள்வி சிறப்புப் பெற அறியாமையை நான் கொன்றிருந்தால் அதுவும் கொலைதானே.