உதவி செய்வது என்பது இப்போது விளம்பரமாகப் போய்விட்டது. வலது கை கொடுத்தால், இடது கைக்குப் புலப்படாது என்று இருந்த காலம் மாறி, இப்போது உதவி செய்கின்றோம் என்று விளம்பரப் பலகை கட்டி உதவி செய்கின்ற வழக்கமும், அதைப் பலரும் பார்க்கும் இடங்களில் பதிவு செய்கின்ற நிலைமையும் ஏற்பட்டு விட்டது. அப்படிக் காட்டினாலேயே நாமும் கடையெழு வள்ளல்கள் போல் ஒருவராகக் கருதப்படுவோம் என்பது விருப்பமாகிவிட்டது. இப்போதெல்லாம் எப்போது மரத்திலிருந்து ஒருவர் விழுவார். எப்போது நாம் ஓடிச் சென்று உதவுவோம் என்று காத்திருப்பது போலாகிவிட்டது என்பவர்களும், நாமெல்லோரும் இங்கு பிச்சையா எடுத்து வாழுகின்றோம் என்று சினங்கொண்டு எழுந்து சில தாயக மக்கள் ஆத்திரக் கணைகளை வீசுவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால், உதவி செய்பவர்களோ, நாம் இப்படி வெளிப்படையாகக் காட்டினாலேயே வேறு பலரும் முன் வந்து உதவி செய்வார்கள் என்று காரணம் காட்டுகின்றாhகள். அதுவும் ஒருவகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது. ஏனென்றால், மனிதர்களுக்கு ஏட்டிக்குப் போட்டி இயல்பு அல்லவா!
இந்நிலையில் வாழ்க்கை முழுவதும் உதவி செய்து விட்டு அடுத்த வீட்டுக்குத் தெரியப்படுத்தாத பலரைக் காண்கின்றோம். இம்மனிதர்களிடம் இருந்து சிலரின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது புன்னகை ஒன்று வெளிவருக்கின்றது. தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் நிலையில் பல நிறுவனங்கள் இருந்தாலும், தற்போது அவரவரே அடுத்தவருக்குத் தெரியாது தம்மிடம் இருப்பதைக் கொடுத்துவிட்டு இவ்வாறான இடங்களுக்கு நீங்கள் விரும்பினால், நேரடியாகக் கொடுங்கள் என்று ஆற்றுப்படுத்திவிட்டு அமைதியாக இருந்து விடுகின்றார்கள். உதவி செய்வது எமக்குத் தெரிந்தால் போதும் மற்றவருக்குத் தெரிய வேண்டும் என்று ஒரு கட்டாயம் இல்லை. பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த போது அரசவைக்குச் சென்று ஆலோசனை பெற்றுச் செய்யவில்லை. உடனே தேரிலிருந்து இறங்கி கொடி படர விட்டுச் சென்றான். பேகன் மயிலுக்குப் போர்வை கொடுக்கும் போது தனக்கு வேறு ஒரு போர்வை பெற்று மயிலுக்குப் போர்த்தவில்லை. அதியமான் எந்தவித ஆலோசனையும் இல்லாமல் நெல்லிக்கனியை ஒளவைக்கு வழங்கினான். இவ்வாறு இலக்கியத்தில் இடம்பெற்ற கடையேழு வள்ளல்கள் காலத்தால் அழியப்படாதவர்களாக காணப்பட்டனர்.
தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்த மன்னர்களை இலக்கியத்தில் காணுகின்றோம். தேடிச் சென்று பரிசில்களை யாரும் வழங்கவில்லை. தேவையேற்படும் போது அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள் அம்மன்னர்கள் கூட தமது மக்களிடம் இருந்து பெற்ற வரி மானியத்திலிருந்தே வாரி வழங்கினார்கள். தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கே பரிசில்கள் வழங்கினார்கள். எனவே கொடையைத் தூண்டும் வண்ணம் புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடினார்கள்.
“இன்று செலினும் தருமே. நாளை செலினும் தருமே
சிறிது நின்று செலினும் தருமே”
என்று எப்போது போனாலும் பரிசில்கள் கிடைக்கும் என்று அதியமானைப் புகழ்ந்து பாடிய ஒளவையார் கூட பாடிப்பாடிப் பரிசில்கள் பெற்றார். ஒரு அரசனைப் புகழ்ந்து பாடி யானையைப் பரிசாகப் பெற்ற புலவன் வீட்டிற்கு வருகின்றான். வறுமையில் இருந்த மனைவி என்ன பெற்று வந்திருக்கின்றாய் என்று கேட்கின்றாள்.
இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாங் களபமென்றேன் பூசுமென்றாள்.
மாதங்கமென்றேன் யாம் வாழ்ந்தோமென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் தின்னுமென்றாள்
கம்பமா என்றேன் நற்களியா மென்றாள்
கைமா என்றேன் சும்மா கலங்கினாளே.
களபம் என்று சொல்ல சந்தனம் என்று நினைத்து நீ பூசிக்கொள் என்கின்றாள். மாதங்கம் என்று சொல்ல தங்கம் என்று நினைத்து நாம் வாழலாம் என்கிறாள். வேழம் என்றார். உடனே அவளும் கரும்பு என்று நினைத்து சாப்பிடுங்கள் என்றாள். கம்பமா என்று சொல்ல கம்பு மா என்று நினைத்து களி செய்து சாப்பிடலாம் என்றாள். இறுதியில் புலவரும் கைமா என்கிறார். அப்போதுதான் யானை என்று நினைத்து எம் இருவருக்குமே சாப்பாட்டுக்கு வழியில்லை எப்படி யானைக்கு உணவு போடுவது என்று கலங்கினாள். என்று ஒரு பாடல் வருகின்றது. யானையைக் குறிக்க இத்தனை சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாடியதற்கு யானை பரிசாகக் கிடைக்கிறது.
உதவி உதவி வரைத்தன்று உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
எனவே எதிலுமே புகழும் புகழ்ச்சியும் கை உயர்த்தி நிற்கின்றன. சறுக்கச் சறுக்க மேலேறுவது போல புகழின் மேல் ஏறிக்கொள்வதற்கே அக்கால மன்னர்கள் தொட்டு இக்கால மக்களும் முனைந்து நிற்கின்றார்கள் என்பது உண்மை.
அருமை சகோதரி...
பதிலளிநீக்கு