• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  சனி, 22 ஜூன், 2019

  தவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை

         


  உலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்பதற்காக கையில் ஒரு மெல்லிய இழையிலான விசிறி கொண்டு நிலத்தில் விசிறி நடப்பார்களாம். ஆனால், அவ்விசிறியின் காற்றினால், எத்தனை சிறிய பூச்சிகள் இறந்தன என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். மனிதர்கள் தம்மை அறியாமல் ஏதோ ஒரு இடத்தில் தவறு செய்தே இருப்பார்கள். உணவுக்காகவோ, தொழிலுக்காகவோ, தேவைக்காகவோ தவறுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இது தவிர்க்க முடியாமலும் போகின்றன. 

  1972 ஆம் ஆண்டு ஒரு விமானம் திடீரெனக் காணாமல் போனது. இவ்விமானத்தை யாராலும் தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் போனது. 90 நாட்களின் பின்பு சில மனிதர்களுடன் ஒரு பனி படர்ந்த, எந்தவித வெளித் தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாத ஒரு மலைப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விமானத்தில் பிரயாணம் செய்தவர்கள் பலர் இறந்துவிட மீதமுள்ளவர்கள் சிலரே உயிரோடு இருந்தார்கள். சூழவுள்ள பகுதிகளில் பனி படர்ந்த மலைப்பிரதேசங்களே இருந்த காரணத்தினால், உயிர் தப்பியவர்கள் வாழ்வதற்கு உணவை எங்கேயிருந்து பெற்றார்கள் என்று கேட்டபோது, இருந்த உணவெல்லாம் தீர்ந்து போக பசியால் ஒருவரை ஒருவர் கொன்று தின்றே வாழ்ந்திருக்கின்றார்கள். விமானத்தில் பயணம் செய்தவர்கள் அக்காலத்தில் படித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆளுக்காள் சண்டை செய்து கொல்வதை விட்டு எல்லோருடைய பெயரையும் சீட்டில் எழுதி, அதில் 3 சீட்டுகளை எடுத்து அச்சீட்டில் பெயர் உள்ளவர்களை கொன்று உண்டிருக்கின்றார்கள். மனிதன் தன் தேவைக்காக எந்தளவு கேவலமான நிலைக்கும் போவான் என்பதற்கு இது சான்றாக அமைகின்றது. இவ்வாறான மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் கேவலமானவர்கள் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலையானது மனிதனை இவ்வாறான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதே உண்மை.   ஒரு அறையில் நல்ல கல்வி கற்ற, பண்பாளர்கள் மூவரை அடைத்து வைத்து அவர்களுக்கு 3 வேளை 3 சிறிய தட்டில் ஒரு வாரம் உணவு வழங்கப்பட்டது. அடுத்த வாரம் 2 தட்டாக மாற்றப்பட்டது. அதன் அடுத்த வாரம் 1 தட்டாக மாற்றப்பட்டது. ஒரு வேளை உணவே ஒரு தட்டில் வழங்கப்பட்டது. சிறிது சிறிதாக உணவு குறைக்கப்பட அந்த அறையில் ஒரு பிரளயமே ஏற்பட்டது. ஒவ்வொருவரும் பசி தாங்கமுடியாது ஆளையாள் உணவுக்காகச் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் தாறுமாறாக தாக்கத் தொடங்கினர். பசி வந்தால் பத்தும் பறந்து போம் என்பார்கள். அந்த பத்தில் பண்பு கூட பறந்து போய்விடும். சந்தர்ப்பம் சூழ்நிலை மனிதர்களை பண்பற்றவர்களாக மாற்றிவிடும். ஆனால், இதையும் மீறி மனவஞ்சம் கொண்டவர்களும் இருக்கின்றார்கள். எனது பாட்டி எனது தாயார் இறந்தபின் நான் உயிர் வாழ மாட்டேன்  என்று பிடிவாதமாக இருந்து வாயில் ஒரு பிடிச் சோறு கூட உண்ணாது, அடுத்த 3 வாரங்களில் உயிர்நீத்தார். எனவே சந்தர்ப்பம் சூழ்நிலையே மனிதனை பக்குவத்திற்கும் கொண்டு செல்லுகின்றது. படுகுழியிலும் கொண்டு விழுத்துகின்றது. 

        இதற்கு மனிதனுடைய மனதை ஓரளவிற்கு பக்குவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், அவன் பட்டுத் திருந்த வேண்டும். அல்லது பண்பட்டுத் திருந்த வேண்டும். தனக்குத்தானே பல கேள்விகளை கேட்க வேண்டும். தன்னுடைய தவறுகளை உணர வேண்டும். வாசிப்பு மனிதனை சிந்திக்க வைக்கும். இதற்கு ஒரு உதாரணம் ஆனி மாத வெற்றிமணி பத்திரிகையில் ஊடகவியலாளர் செல்வராஜா அவர்களுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். அமெரிக்காவின்  Northern Verginia     என்னும் மாநிலத்தின் ஆஷ்பேர்ண் என்னும் கிராமத்திலே இருந்த கறுப்பு இனத்தவர்களின் ஒரு சிறிய பள்ளியில், கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான வார்த்தைகளை 16 -17 வயதுடைய 5 வெள்ளை இனச் சிறுவர்கள் செப்ரெம்பர் 2016 இல் பள்ளிச் சுவர்களில் இரவோடிரவாக எழுதியிருந்தனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை விசாரித்த பெண் நீதிபதி Alejandra Rueda என்பவர் வழங்கிய வித்தியாசமான தீர்ப்பானது வாசிப்பின் மகத்துவத்தை உலகத்திற்கு உணர்த்துவதாக இருந்தது. 


             இந்த ஐவருக்கும் 35 ஆங்கில நூல்களைக் கொடுத்து அவற்றில் ஒவ்வொருவரும் 12 நூல்களைத் தெரிவுசெய்து ஆழமாக வாசித்து, அவ் ஒவ்வொரு நூலின் சாராம்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு வருடத்தில் 12 ஆய்வுகளைச் செய்து அந்நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தீவிர தண்டனையை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று தீர்ப்பளித்தார். இது இளயோர் குற்றவியல் கோர்வையில் இயற்பண்பு சார்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  இங்கு நாம் ஒரு முக்கியமான கருதுகோளை மனதில் கொள்ள வேண்டும். தண்டனைகள் மனிதன் தன்னுடைய தவறுகளை உணர்ந்து திருந்துவதற்காகவே வழங்கப்படுகின்றன. தண்டிக்கப்படல் ஒரு பழிவாங்களாக இருக்கக் கூடாது. ஆதாம் ஏவாள் அப்பிள் அருந்தியது தவறுகள் செய்யத் தூண்டியது எனனும் போது, அந்தத் தவறை நடக்கத் தூண்டும் சந்தர்ப்பததை வழங்கியதுடன் ஆதாம் ஏவாள் மனதை மாற்ற முனையாத கடவுளையே நான் கேள்வி கேட்பேன். இது வாதத்துக்குரிய விடயமானாலும், தவறுகள் செய்பவர்களே மனிதர்கள். 

  Alejandra Rueda வழங்கிய தீர்ப்பை பலர் எதிர்த்தாலும் கறுப்பினத்தவர்களுக்கு இவர் எதிரானவர். வெள்ளை இனப் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காகவே இவ்வாறான தீர்ப்பை வழங்கியிருக்கின்றார் என்று கறுப்பினத்தவர்கள் கொதித்தெழுந்தாலும், அப்பெண்மணியே உண்மையில் நீதிக்கு அரசி என்பதை அவருடைய தீர்ப்பானது வெளிக்கொண்டுவந்திருந்தது. ஓராண்டின் பின் இவ் ஐவரையும் அழைத்து அவர்களுடைய ஆய்வுகளை நீதிமன்றம் பெற்றுக் கொண்டது. அவற்றைப் பரீசீலனை செய்வதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. 

  இந்த ஐவரையும் பீ.பீ.சி தொலைக்காட்சி பேட்டி கண்டபோது ஒவ்வொருவரும் தமது அனுபவங்களைக் கூறியிருந்தார்கள். அவர்களின் பதில்களிலிருந்து தெரிய வந்தது. இந்நிகழ்ச்சியின் பின் 2 ஆண்டுகள் தாம் எந்தவித குற்றச் செயல்களுக்கும் உட்படவில்லை. அவர்கள் வாசித்த நூல்கள் அடிப்படைவாதம், இனவாதம், என்றால் என்ன? என்பதை அறிந்திருந்தார்கள். ஜேர்மனியில் நாஜிகள் யூதர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகள் பற்றிய தன்மைகள், பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற்றிருந்தார்கள். தென்ஆபிரிக்காவின் இனவாதம் பற்றி  எதுவுமே தெரியாது. ஆனால், அலன்பட்டன் அவர்களின் நூல்களே அதுபற்றிய தெளிவை ஏற்படுத்தின. கறுப்பு, வெள்ளை இனம் என்ற பாகுபாட்டிற்கு மேலாக மனித இனம் என்ற ஒன்று உள்ளது என்பதைப் புரிந்து கொண்டோம். நாம் கற்ற கல்வி இது பற்றிய விளக்கத்தை எமக்குத் தரவில்லை. எப்படி எம்மால், நிறத்தையும் இனத்தையும் வைத்து சக மாணவர்களை ஒதுக்கி வைக்க முடிந்தது. லியோன் ஊரிஸ் எழுதிய எக்சோடஸ் என்னும் நூலை வாசிக்கும் வரை இஸ்ரேல் என்ற நாடு பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. இவ்வாறு ஒவ்வொருவரும் தாம் வாசித்த 12 புத்கங்களின் மூலம் தாம் பெற்ற அறிவை விளக்கியிருந்தார்கள். 

  நீதியரசர்  Alejandra Rueda வழங்கிய தீர்ப்பானது குற்றவாளிகளை நல்ல மனிதர்களாக மாற்றியது. தரமான படைப்புக்கள் மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் படைப்புக்களின் முக்கியத்துவமும், படைப்பாளிகளின் அவசியமும் அறியப்படும். வாசிப்பது மட்டுமல்லாமல் ஆழமாக அவற்றை உள்வாங்கி எம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வோம். 

  நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டில் நன்மரம் என்றார் ஒளவைப்பிராட்டி.


  வெள்ளி, 21 ஜூன், 2019

  உயிரினில் பாதி, மனிதரில் எத்தனை நிறங்கள்

                     உயிரினில் பாதி, மனிதரில் எத்தனை நிறங்கள் 

  இரு நூல்கள் ஒரு மேடையில் ஜேர்மனி எழுத்தாளர் சங்க அனுசரணையுடன் வெளியீடு  16.06.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.30 மணியளவில் திரு.திருமதி.சிவராஜா தம்பதிகளின் உயிரினில் பாதி(கவிதை), மனிதரில் எத்தனை நிறங்கள் (சொல்லோவியம்) என்னும் இரண்டு நூல்கள் Internationales Zentrum, Flachsmarkt – 15, 47051 Duisburg என்னும் இடத்தில் மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான வெளியீட்டு அனுசரணையை ஜேர்மனி தமிழ் எழுத்தாளர்  சங்கம் வழங்கியிருந்தது. 


            எழுத்தாளரும், மண்சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.வ.சிவராஜா மனிதரில் எத்தனை நிறங்கள் என்னும் சொல்லோவியத்தையும், திருமதி. இராஜேஸ்வரி சிவராஜா உயிரினில் பாதி என்னும் கவிதை நூலையும் எழுதியிருந்தார்கள். இந்நிகழ்ச்சி அனைத்தையும் அறிவிப்பாளரும், நடன ஆசிரியையும், ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினருமான திருமதி. சாந்தினி துரைரங்கம் தொகுத்து வழங்கியிருந்தார். 


          மங்கள விளக்கேற்றல், மௌனஅஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தமிழ்மொழி வாழ்த்துப்பாடலை சங்கீத ஆசிரியை கலைவாணி ஏகானந்தராஜாவும் அவர் மாணவியும் பாடினார்கள். வரவேற்பு நடனம் திருமதி.சாந்தினி துரைரங்கத்தின் மாணவிகள் வழங்கினார்கள். வரவேற்புரை திரு.திருமதி.சிவராசா தம்பதிகளின் மகளான திருமதி. சிவதர்சனி பிரங்ளினால் வழங்கப்பட்டது. 


          அதனைத் தொடர்ந்து எசன் தமிழ்மொழிச்சேவை கலாசார மன்ற மாணவிகள் வரவேற்பு நடனத்தை வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்.   அதன்பின் நூல் வெளியீடு இடம்பெற்றது. திருமதி.இராஜேஸ்வரி சிவராசா எழுதிய உயிரினில் பாதி என்னும் கவிதை நூல் செல்வன் பிரணவன் யோகராசாவினால் வெளியீடு செய்து வைக்கப்பட அதன் முதல் பிரதியினை எசன் தமிழ்மொழிச் சேவை கலாசார மன்ற தலைவரும், தமிழார்வலரும், தொழிலதிபருமான திரு. சிவஅருள் பெற்றுக் கொண்டார். 

  வ.சிவராசா அவர்களால் எழுதப்பட்ட மனிதரில் எத்தனை நிறங்கள் என்னும் நூலை செல்வன் பிரணவன் யோகராசா வெளியீடு செய்து வைக்க முதல் பிரதியை மொழிபெயர்ப்பாளரும் கௌரவ விருந்தினருமாகக் கலந்து கொண்ட திரு.ஐ.இரகுநாதன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரின்கௌரவ விருந்தினர் உரை இடம்பெற்றது. 


            உயிரினில் பாதி என்னும் கவிதை நூலைத் தமிழாசிரியர், கவிதாயினி நகுலா சிவநாதன் விமர்சனம் செய்தார். அடுத்த நிகழ்வாக எசன் தமிழ் கலாசார மன்ற மாணவியின் தனிநடனம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மனிதரில் எத்தனை நிறங்கள் என்னும் நூலை எழுத்தாளரும், தமிழார்வலருமான செல்வன் சி.சிவவிநோபன் விமர்சனம் செய்தார்.  விமர்சன உரைகளை அடுத்து நூல்களைப் பார்வையாளர்கள் பெற்றுக் கொண்டனர். அதனை அடுத்து ஜேர்மனி தமிழ் கல்விச்சேவை தலைவர் திரு.பொ.சிறிஜீவகன் சிறப்புரையாற்றினார். ஜேர்மனி தமிழ்கல்விச் சேவையினால், திருமதி. இராஜேஸ்வரி சிவராசா பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். 
  இந்நிகழ்வைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்த வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் கலாநிதி.மு.க.சு. சிவகுமாரன் அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து திருமதி. கலைநிதி சபேசனுடைய மாணவிகளின் நடனம் இடம்பெற்றது. 

  அதன்பின் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பிக்க சுவிஸில் இருந்து வருகை தந்திருந்த கல்வியியல் முதுமாணிப்பட்டதாரியும், ஜெனீவா கலை இலக்கியப் பேரவைத் தலைவருமான க. அருந்தவராசா அவர்கள் பிரதம விருந்தினர் உரையை வழங்கினார்.  அதனை அடுத்து ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளரும், எழுத்தாளருமான திருமதி.சந்திரகௌரி சிவபாலன்(கௌசி), தமிழ் ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான திரு.இ.இரமேஸ்வரன், ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.குகதாசன், சங்கீத ஆசிரியை திருமதி.கலைவாணி ஏகானந்தராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.                


  அதனை அடுத்து திருமதி.இராஜேஸ்வரி சிவராசா, திரு.வ.சிவராசா ஆகியோரின் ஏற்புரை இடம்பெற்றது. 

   


  பிற்பகல் 18.00 மணியளவில் நூல்வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்பாக முடிவுற்றது. வருகை தந்திருந்த அனைவருக்கும் திரு.திருமதி.சிவராசா தம்பதிகளினால் இராப்போசனம் அன்புடன் பகிர்ந்தளிக்கப்பட மனநிறைவுடன் அனைவரும் விடைபெற்றனர். 

  வெள்ளி, 14 ஜூன், 2019

  பல முதல்களின் முதல்வர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் வெற்றிமணிக்கு 25 வயது  பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் B.F.A அவர்களின் வாழ்நாள் சேவைகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கும் நாள். 

  செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால், செய்பவர் திறமை திறம்பட இருக்க வேண்டியது அவசியம். கருவி அற்புதமானால், கருத்தா கருவிக்கு ஆற்றிய அர்ப்பணிப்பும் போற்றப்படவேண்டியதும் புரியப்பட வேண்டியதுமாகும். படைப்பாளியின் திறமை அறியப்பட்டாலேயே அந்தப் படைப்பின் வெற்றி புரியப்படும் வெற்றிமணியான விபரமும் புரியும். 

                     வெற்றிமணி பத்திரிகை தாயகத்தில் ஆரம்பித்து 69 வருடங்கள் ஆகின்றன. அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1950 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்த வெற்றிமணி அவர் மறைவின் பின் நின்று போக அவருடைய மகன் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் மீண்டும் தாயகத்தில் வெற்றிமணி மாணவர் காலாண்டு இதழாக இன்றும் வெளியீடு செய்து கொண்டு வருகின்றார். தாயகத்தில் ஏற்பட்ட சில பல  சூழ்நிலைகள் காரணமாக தாமதங்கள் அங்கு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

  ஆனால், ஐரோப்பாவில் இவர் புலம்பெயர்ந்து தன்னுடைய வாழ்க்கையைத் தளம் அமைத்த பின்  மீண்டும் வெற்றிமணி பத்திரிகையை யேர்மனியில் ஆரம்பித்து இம்மாதம் (ஆனிமாதம் 1994 - ஆனிமாதம் 2019) 25 வருட வெற்றி காண்கின்றார். தற்போது இலண்டன், சுவிஸ், யேர்மனி ஆகிய நாடுகளில் பலரும் தேடும் சிறப்புப் பெற்ற இலவச வண்ணப் பத்திரிகையாக இப்பத்திரிகை வெளிவருகின்றது. இப்பத்திரிகை எவ்வாறு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டது என்னும் வரலாற்றை இத்தருணத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம். 

  கணனியுகம் பிரபலமடையாத காலத்தில் வெற்றிமணி பத்திரிகைக்கு படைப்புக்கள் ஆசிரியரிடம் கையெழுத்துப் பிரதியாக வந்தடையும்.  அப்போது அத்தனை கட்டுரைகளையும் வாசித்து தமிழில் அச்சடித்து (அக்காலத்தில் venus fonts மாத்திரமே இருந்தது) அக்கட்டுரையை அளவாக வெட்டி வெட்டி ஒட்டி, அவற்றிற்குரிய படங்களுக்குரிய இடத்தை மட்டையில் நீல மையால் கோடு போட்டு நேராக ஒட்டி விளம்பரத்துக்கு சதுரப்பெட்டி போலப் போடுகின்ற வசதிகள் அக்காலத்தில் கணனியில் இல்லாத காரணத்தினால், சதுரம் கீறியே அச்சகத்திற்குக் கொடுக்க வேண்டும்.  படங்களை வெட்டி ஒட்டிப் பின் கழட்டியே அச்சகத்திற்குக் கொடுக்க வேண்டியது அவசியம். தனியே நம்பரிட்டுக் கொடுக்கப்பட்ட படங்களை அவ்வவ் இடங்களில் அச்சகத்தினர் சேர்ப்பார்கள். இவ்வாறு பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஆரம்பத்தில் ஒரு வருடகாலமாக கறுப்பு வெள்ளை வண்ணத்தில் வெற்றிமணி வெளிவந்தது. பின்னரே வெற்றிமணி வண்ணக்கலவையில் பிரகாசிக்கத் தொடங்கியது. 

  இத்தனை கடினத்தின் மத்தியில் ஆரம்ப காலத்தில் வெளியான வெற்றிமணியை வளர்த்தெடுத்து இன்றைய நவீன காலத்திற்குத் தன்னை இசைவாக்கம் அடைய வைத்து கண்ணையும் கருத்தையும் கவர வைக்கும் வெற்றிமணியாகத் திகழ்வதற்கு வழி செய்த வெற்றிமணியின் ஆசிரியர் கலாநிதி. மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் Number One சாதனைகளை சற்று சீர்தூக்கிப் பார்ப்போம்.

  1. நுண்கலை பட்டம் B.F.A

  இலங்கையில் முதன் முதலாக நுண்கலையில் கலைமாணி பட்டத்தை (Bachelor of Fine Arts) களனிப் பல்கலைக்கழகத்தில் 1979 ஆம் ஆண்டு பெற்ற முதல் மூன்று தமிழர்களில் மு.க.சு.சிவகுமாரன் அவர்களும் உள்ளார்.(சிவகுமாரன், கே.கே.ராஜா. பவானி) 

  2. சுதந்திரச்சிலை 

  யேர்மனியில் முதன் முதலாக நாம் ஒன்றும் பணத்திற்காகக் கைநீட்டி யேர்மனியில் தஞ்சம் புகுந்தவர்கள் இல்லை. எம் இனத்தின் சுதந்திரத்தை விரும்பிப் போராடி உயிர் பிழைக்கத் தஞ்சம் புகுந்தவர்களே நாம் என்பதை யேர்மனியர்களுக்குப் புரிய வைப்பதற்காகத் தமிழ் சுதந்திரச் சிலையை Ludwig Stadt என்னும் இடத்தில், தாம் வாழ்ந்த அகதிகள் விடுதியில் அமைத்துக் காட்டி மார்பு தட்டிக் கொண்ட முதல் தமிழன்.

  3.  Stadt  சிற்பம் 

  யேர்மனி Ludwigstadte என்னும் நகரத்தில் அந்த நகரத்துக்குரிய சின்னத்தை சிற்பமாக வடிவமைத்துக் கொடுத்து தமிழருக்குப் பெரும் புகழைச் சம்பாதித்துக் கொடுத்த முதல் தமிழன்.

  4. யேர்மனி ஓவிய சிற்பக் கண்காட்சி   (Art and Sclputure  Exibition )

  யேர்மனியிலுள்ள Dortmund என்னும் நகரத்தில் 1990 இல் முதன் முதலாக வண்ணக் கலவைகளுடன் சித்திர சிற்பக் கண்காட்சியை நடத்திய முதல் தமிழன்

  5. இளையவர் இசையில் வெளிவந்த மெல்லிசை இறுவெட்டு வெளியீடு

  யேர்மனியிலுள்ள Lüdenscheid  நகரத்தில் 2000 ஆம் ஆண்டு    முதன்முதலாக இளைஞனின் (20 வயது நிரம்பிய சஞ்ஜீவன் சிவகுமாரன்) இசையமைப்பில் (முறைப்படி சட்டவிதிகளுக்கு அமைந்தது) சிறந்த தொழில்நுட்பத்துடன் தமிழில் மெல்லிசை இறுவெட்டு தயாரித்து வெளியீடு செய்ததுடன், பால்குடி மறந்த கையோடு, கெட்டபையன், பைரவன், மாயவன், சிவமயம் போன்ற   10 க்கும் மேற்பட்ட இசை இறுவெட்டுக்கள் யேர்மனியில் வெளியீடு செய்த முதல் தமிழன்.  

  6.ஆன்மீக சஞ்சிகை

  யேர்மனியில் முதன்முதலாக சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் பெயர் சூட்டிய  சிவத்தமிழ் என்னும் ஆன்மீக சஞ்சிகையை 2004 ஆம் ஆண்டு Dielenberg  என்னும் இடத்தில் வெளியீடு செய்து வைத்தது மட்டுமல்லாமல் 15 ஆவது ஆண்டு சிறப்பு மலரையும் ஸ்வெற்றா நகரத்தில் வெளியீடு செய்து வைத்த முதல் தமிழன் 

  7. கனடிய தமிழர் தகவல் ஐரோப்பிய விருது.

  கனடா தமிழர் தகவல் நிறுவனத்தினரால் 1999 ம் ஆண்டு கனடிய தமிழர் தகவல் ஐரோப்பிய விருதை ஜேர்மனியிலிருந்து சென்று பெற்றுக்கொண்ட முதல் தமிழன். கனடாவிலே வெற்றிமணி பத்திரிகை 1995 முதல் 2000 ஆண்டுவரை வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  8. பரதக்கலை சஞ்சிகை

  இலங்கையிலே பரதக்கலையை முன்னிறுத்தி வந்த முதல் சஞ்சிகையாகிய அபிநயா என்னும் சஞ்சிகையை வெளியீடு செய்த முதல் தமிழன்.

  9. கோடைவிடுமுறை இதழ் ஓவியா 

  யேர்மனியில் 1995 ஆம் ஆண்டு வெற்றிமணியின் கோடைவிடுமுறை கால இதழாக ஓவியா என்னும் சஞ்சிகையை முதன் முதலாக தமிழில் வண்ணப் புத்தகமாக வெளியீடு செய்து வைத்த முதல் தமிழன்.

  10. யேர்மனியில் தமிழ் வெளியீட்டகம் 

  யேர்மனியிலே தன்னுடையதும் பிறருடையதுமான 30க்கும் மேற்பட்ட  புத்தகங்களை தானே வடிவமைத்து தன்னுடைய செலவில் அச்சடித்து வெற்றிமணி வெளியீடாக வெளியீடும் செய்து வைத்தும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்த முதல் தமிழன்.

  இந்நூல்களில் நான் தேடிப்பெற்ற சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன். அவ் அனைத்து புத்தகங்களும் 1000 பிரதிகள் வெளிவந்ததுடன் அத்தனையும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.  

  1. புதிய வடிவங்கள் - கண்ணா
  2. எழுத்தாளன் கவிஞர் வி.கந்தவனம்
  3. ஓவியா - வெற்றிமணி வெளியீடு
  4. இடைவெளி - மாதவி  
  5. காதல் கிராமத்தின் சாரளம் - மாதவி
  6. அது என்பது இதுவா – மாதவி
  7. மாறன் மணிக்கதைகள் - கனக்ஸ்
  8. யேர்மனியில் கவிஞர் வி.கந்தவனம்
  9. பல்கலைச் செல்வர்   சிவகுமாரன் சிறப்புமலர்
  10. வெற்றிமணிகள் கவிச்சித்திரா, சுகந்தினி, சுதர்சன்
  11. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி - இந்துமகேஷ்
  12. பரதமாதேவி வானதி சிறப்புமலர்
  13. சிவத்தமிழ் முத்துவிழா – தங்கம்மா அப்பாக்குட்டி சிறப்புமலர்
  14. தமிழே காதல் - நிலாமகள் (வர்ணச்சித்திரங்களுடன் கவிதையும் 
         இணைந்து யேர்மனியில் வந்த முதல் நூல்)
  15. அதிசய உலா – சிவகுமாரன்
  16. காதோடு காதாக – கதிர் துரைசிங்கம் (நகைச்சுவைத் துணுக்குகள் 
          முதல் புத்தகவடிவம் பெற்றது) 
  17. திறவுகோல் - கனக்ஸ்- 
  18. யாழ்ப்பாணத்து நாட்டிய மரபு – வலன்ரீனா
  19. பொன்னும் மணியும் - சிவக்குமாரன்
  20. அபிநயா – வலன்ரீனா
  21. பிஞ்சுமனங்களின் தேடல் - பேராசிரியர் மனோன்மணி 
          சண்முகதாஸ்
  22. சிறுவர் பாடல்கள் - சி.நடராஜா
  23. கலைமகன் மணிவிழா – சிவகுமாரன் - மணிவிழா)
  24. யாழ் வெற்றிமணி – வலன்ரீனா

  இதில் இவர் தந்தை வெற்றிமணி வெளியீடாக வெளியீடு செய்த புத்தகங்களாகக் குறிப்பிடத்த தக்கவை

  1. தம்பிக்கு - டாக்டர்.நந்தி
  2. நாடகம் - கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை
  3. கீரிமலையினிலே நூல்நயம் (கவிஞர்.வி.கந்தவனம்) இரசிகமணி  
         கனகசெந்திநாதன்
  4. கணக்கியலுக்கோர் அறிமுகம் - வை.சிவஞானசுந்தரம்
  5. பரீட்சையில் சித்தியடைவது எப்படி - கவிஞர்.வி.கந்தவனம்
  6. ஒரே ஒருதெய்வம் குறுநாவல் - சிவகுமாரன்

  இவ்வாறு பல சாதனைகளை யேர்மனியில் செய்த இவர் பல முதல்களின் முதல்வராகினார். பல திறமைகளையும் அர்ப்பணிப்புக்களையும் செய்து பிறருக்காகத் தன் வாழ்நாள்களை செலவிட்டு தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவையாற்றும் வெற்றிமணி ஆசிரியரின் தியாக மனப்பான்மையின்றி இந்த வெற்றிமணி 25 ஆண்டுகளை ஐரோப்பாவிலே கடந்திருக்காது என்பதை உறுதியாக இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவது அவசியமாகும். இதேவேளை அவரின் இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குகின்ற எழுத்தாளர்களும் வர்த்தக நிறுவனங்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

  பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
  நூலெல்லாம் வள்ளுவன் செய்நூலாமோ – பாரில் 
  தோன்றிய பத்திரிகையெல்லாம் வெற்றிமணி போலாமோ
  போற்றத் தகுதியெனத் தெளி 

  கை வந்தமரும் எதுவும் கருத்தைக் கவர வேண்டும் 
  கண் தோன்றும் எதுவும் மனத்தைக் கவர வேண்டும் 
  சொல் பெற்று உயரும் வடிவம் சொந்தமாக வேண்டும் 
  அதுவே விண்முட்டும் புகழை உவந்தளிக்கும்

  25 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் வெற்றிமணிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
  அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்

  "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்   எவரும...