• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 22 ஜூன், 2019

    தவறு செய்யாத மனிதர்கள் எவருமே இல்லை

           


    உலக வரலாற்றில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. சமணர்கள் ஒரு புழு பூச்சியைக் கூட தம் காலில் மிதித்துக் கொன்று விடக் கூடாது என்பதற்காக கையில் ஒரு மெல்லிய இழையிலான விசிறி கொண்டு நிலத்தில் விசிறி நடப்பார்களாம். ஆனால், அவ்விசிறியின் காற்றினால், எத்தனை சிறிய பூச்சிகள் இறந்தன என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். மனிதர்கள் தம்மை அறியாமல் ஏதோ ஒரு இடத்தில் தவறு செய்தே இருப்பார்கள். உணவுக்காகவோ, தொழிலுக்காகவோ, தேவைக்காகவோ தவறுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இது தவிர்க்க முடியாமலும் போகின்றன. 

    1972 ஆம் ஆண்டு ஒரு விமானம் திடீரெனக் காணாமல் போனது. இவ்விமானத்தை யாராலும் தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் போனது. 90 நாட்களின் பின்பு சில மனிதர்களுடன் ஒரு பனி படர்ந்த, எந்தவித வெளித் தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாத ஒரு மலைப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்விமானத்தில் பிரயாணம் செய்தவர்கள் பலர் இறந்துவிட மீதமுள்ளவர்கள் சிலரே உயிரோடு இருந்தார்கள். சூழவுள்ள பகுதிகளில் பனி படர்ந்த மலைப்பிரதேசங்களே இருந்த காரணத்தினால், உயிர் தப்பியவர்கள் வாழ்வதற்கு உணவை எங்கேயிருந்து பெற்றார்கள் என்று கேட்டபோது, இருந்த உணவெல்லாம் தீர்ந்து போக பசியால் ஒருவரை ஒருவர் கொன்று தின்றே வாழ்ந்திருக்கின்றார்கள். விமானத்தில் பயணம் செய்தவர்கள் அக்காலத்தில் படித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆளுக்காள் சண்டை செய்து கொல்வதை விட்டு எல்லோருடைய பெயரையும் சீட்டில் எழுதி, அதில் 3 சீட்டுகளை எடுத்து அச்சீட்டில் பெயர் உள்ளவர்களை கொன்று உண்டிருக்கின்றார்கள். மனிதன் தன் தேவைக்காக எந்தளவு கேவலமான நிலைக்கும் போவான் என்பதற்கு இது சான்றாக அமைகின்றது. இவ்வாறான மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் கேவலமானவர்கள் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலையானது மனிதனை இவ்வாறான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதே உண்மை. 



    ஒரு அறையில் நல்ல கல்வி கற்ற, பண்பாளர்கள் மூவரை அடைத்து வைத்து அவர்களுக்கு 3 வேளை 3 சிறிய தட்டில் ஒரு வாரம் உணவு வழங்கப்பட்டது. அடுத்த வாரம் 2 தட்டாக மாற்றப்பட்டது. அதன் அடுத்த வாரம் 1 தட்டாக மாற்றப்பட்டது. ஒரு வேளை உணவே ஒரு தட்டில் வழங்கப்பட்டது. சிறிது சிறிதாக உணவு குறைக்கப்பட அந்த அறையில் ஒரு பிரளயமே ஏற்பட்டது. ஒவ்வொருவரும் பசி தாங்கமுடியாது ஆளையாள் உணவுக்காகச் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் தாறுமாறாக தாக்கத் தொடங்கினர். பசி வந்தால் பத்தும் பறந்து போம் என்பார்கள். அந்த பத்தில் பண்பு கூட பறந்து போய்விடும். சந்தர்ப்பம் சூழ்நிலை மனிதர்களை பண்பற்றவர்களாக மாற்றிவிடும். ஆனால், இதையும் மீறி மனவஞ்சம் கொண்டவர்களும் இருக்கின்றார்கள். எனது பாட்டி எனது தாயார் இறந்தபின் நான் உயிர் வாழ மாட்டேன்  என்று பிடிவாதமாக இருந்து வாயில் ஒரு பிடிச் சோறு கூட உண்ணாது, அடுத்த 3 வாரங்களில் உயிர்நீத்தார். எனவே சந்தர்ப்பம் சூழ்நிலையே மனிதனை பக்குவத்திற்கும் கொண்டு செல்லுகின்றது. படுகுழியிலும் கொண்டு விழுத்துகின்றது. 

          இதற்கு மனிதனுடைய மனதை ஓரளவிற்கு பக்குவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், அவன் பட்டுத் திருந்த வேண்டும். அல்லது பண்பட்டுத் திருந்த வேண்டும். தனக்குத்தானே பல கேள்விகளை கேட்க வேண்டும். தன்னுடைய தவறுகளை உணர வேண்டும். வாசிப்பு மனிதனை சிந்திக்க வைக்கும். இதற்கு ஒரு உதாரணம் ஆனி மாத வெற்றிமணி பத்திரிகையில் ஊடகவியலாளர் செல்வராஜா அவர்களுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். அமெரிக்காவின்  Northern Verginia     என்னும் மாநிலத்தின் ஆஷ்பேர்ண் என்னும் கிராமத்திலே இருந்த கறுப்பு இனத்தவர்களின் ஒரு சிறிய பள்ளியில், கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான வார்த்தைகளை 16 -17 வயதுடைய 5 வெள்ளை இனச் சிறுவர்கள் செப்ரெம்பர் 2016 இல் பள்ளிச் சுவர்களில் இரவோடிரவாக எழுதியிருந்தனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை விசாரித்த பெண் நீதிபதி Alejandra Rueda என்பவர் வழங்கிய வித்தியாசமான தீர்ப்பானது வாசிப்பின் மகத்துவத்தை உலகத்திற்கு உணர்த்துவதாக இருந்தது. 


               இந்த ஐவருக்கும் 35 ஆங்கில நூல்களைக் கொடுத்து அவற்றில் ஒவ்வொருவரும் 12 நூல்களைத் தெரிவுசெய்து ஆழமாக வாசித்து, அவ் ஒவ்வொரு நூலின் சாராம்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு வருடத்தில் 12 ஆய்வுகளைச் செய்து அந்நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தீவிர தண்டனையை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று தீர்ப்பளித்தார். இது இளயோர் குற்றவியல் கோர்வையில் இயற்பண்பு சார்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


    இங்கு நாம் ஒரு முக்கியமான கருதுகோளை மனதில் கொள்ள வேண்டும். தண்டனைகள் மனிதன் தன்னுடைய தவறுகளை உணர்ந்து திருந்துவதற்காகவே வழங்கப்படுகின்றன. தண்டிக்கப்படல் ஒரு பழிவாங்களாக இருக்கக் கூடாது. ஆதாம் ஏவாள் அப்பிள் அருந்தியது தவறுகள் செய்யத் தூண்டியது எனனும் போது, அந்தத் தவறை நடக்கத் தூண்டும் சந்தர்ப்பததை வழங்கியதுடன் ஆதாம் ஏவாள் மனதை மாற்ற முனையாத கடவுளையே நான் கேள்வி கேட்பேன். இது வாதத்துக்குரிய விடயமானாலும், தவறுகள் செய்பவர்களே மனிதர்கள். 

    Alejandra Rueda வழங்கிய தீர்ப்பை பலர் எதிர்த்தாலும் கறுப்பினத்தவர்களுக்கு இவர் எதிரானவர். வெள்ளை இனப் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காகவே இவ்வாறான தீர்ப்பை வழங்கியிருக்கின்றார் என்று கறுப்பினத்தவர்கள் கொதித்தெழுந்தாலும், அப்பெண்மணியே உண்மையில் நீதிக்கு அரசி என்பதை அவருடைய தீர்ப்பானது வெளிக்கொண்டுவந்திருந்தது. ஓராண்டின் பின் இவ் ஐவரையும் அழைத்து அவர்களுடைய ஆய்வுகளை நீதிமன்றம் பெற்றுக் கொண்டது. அவற்றைப் பரீசீலனை செய்வதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. 

    இந்த ஐவரையும் பீ.பீ.சி தொலைக்காட்சி பேட்டி கண்டபோது ஒவ்வொருவரும் தமது அனுபவங்களைக் கூறியிருந்தார்கள். அவர்களின் பதில்களிலிருந்து தெரிய வந்தது. இந்நிகழ்ச்சியின் பின் 2 ஆண்டுகள் தாம் எந்தவித குற்றச் செயல்களுக்கும் உட்படவில்லை. அவர்கள் வாசித்த நூல்கள் அடிப்படைவாதம், இனவாதம், என்றால் என்ன? என்பதை அறிந்திருந்தார்கள். ஜேர்மனியில் நாஜிகள் யூதர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகள் பற்றிய தன்மைகள், பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெற்றிருந்தார்கள். தென்ஆபிரிக்காவின் இனவாதம் பற்றி  எதுவுமே தெரியாது. ஆனால், அலன்பட்டன் அவர்களின் நூல்களே அதுபற்றிய தெளிவை ஏற்படுத்தின. கறுப்பு, வெள்ளை இனம் என்ற பாகுபாட்டிற்கு மேலாக மனித இனம் என்ற ஒன்று உள்ளது என்பதைப் புரிந்து கொண்டோம். நாம் கற்ற கல்வி இது பற்றிய விளக்கத்தை எமக்குத் தரவில்லை. எப்படி எம்மால், நிறத்தையும் இனத்தையும் வைத்து சக மாணவர்களை ஒதுக்கி வைக்க முடிந்தது. லியோன் ஊரிஸ் எழுதிய எக்சோடஸ் என்னும் நூலை வாசிக்கும் வரை இஸ்ரேல் என்ற நாடு பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. இவ்வாறு ஒவ்வொருவரும் தாம் வாசித்த 12 புத்கங்களின் மூலம் தாம் பெற்ற அறிவை விளக்கியிருந்தார்கள். 

    நீதியரசர்  Alejandra Rueda வழங்கிய தீர்ப்பானது குற்றவாளிகளை நல்ல மனிதர்களாக மாற்றியது. தரமான படைப்புக்கள் மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் படைப்புக்களின் முக்கியத்துவமும், படைப்பாளிகளின் அவசியமும் அறியப்படும். வாசிப்பது மட்டுமல்லாமல் ஆழமாக அவற்றை உள்வாங்கி எம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வோம். 

    நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டில் நன்மரம் என்றார் ஒளவைப்பிராட்டி.






    3 கருத்துகள்:

    1. நீதிக்கு அரசி என்பதை நிரூபித்துவிட்டார்.

      பதிலளிநீக்கு
    2. தரமான படைப்புக்கள் மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் படைப்புக்களின் முக்கியத்துவமும், படைப்பாளிகளின் அவசியமும் அறியப்படும். வாசிப்பது மட்டுமல்லாமல் ஆழமாக அவற்றை உள்வாங்கி எம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வோம்

      உண்மை
      அருமை

      பதிலளிநீக்கு
    3. நல்ல கட்டுரை. தேடல் , தொகுப்பு சிறப்பு

      து. சாந்தி

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...